Blog

அயற்சொல் – தமிழ்ச்சொல்

Class 8 இலக்கணம்

அயற்சொல் – தமிழ்ச்சொல்

தமிழில் சில எழுத்துகள் தனித்து நின்று பொருள் தரும்.
ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தும் பொருள் தரும்.
இவ்வாறு பொருள் தருபவை சொல் எனப்படும்.
(எ.கா.) ஈ, பூ, மை, கல், கடல், தங்கம்.
இலக்கண அடிப்படையில் சொற்கள்
பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்கு வகைப்படும்.
பெயர்ச்சொல்
ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.
(எ.கா.) பாரதி, பள்ளி, காலை, கண், நன்மை, ஓடுதல்.
வினைச்சொல்
வினை என்னும் சொல்லுக்குச் செயல் என்பது பொருள். செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.
(எ.கா.) வா, போ, எழுது, விளையாடு.
இடைச்சொல்
பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் இடைச்சொல் ஆகும். இது தனித்து இயங்காது.
(எ.கா.) உம் – தந்தையும் தாயும் மற்று – மற்றொருவர் ஐ – திருக்குறளை
உரிச்சொல்
பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது உரிச்சொல் ஆகும்.
(எ.கா.) மா – மாநகரம் சால – சாலச்சிறந்த
நால்வகைச் சொற்களில் தனித்து இயங்குபவை பெயர்ச்சொல், வினைச்சொல்.
எடுத்துக்காட்டு :
பெயர்ச்சொல் ஆறு வகைகள்.
(i) பொருட்பெயர் – புத்தகம், இராமன்
(ii) இடப்பெயர் – சென்னை, பள்ளி
(iii) காலப் பெயர் – ஆண்டு, குளிர்காலம்
(iv) சினைப் பெயர் – கண், காது
(v) குணப்பெயர் (பண்புப்பெயர்) – பசுமை, வட்டம்
(vi) தொழிற்பெயர் – ஓடுதல், பாடுதல்
வினைச்சொல் :
(i) ஓடினான்
(ii) போ
(iii) எழுது
(iv) வந்தான்
(v) சென்றான்
இலக்கிய முறைப்படி
1. இயற்சொல்
2. திரிச்சொல்
3. திசைச்சொல்
4. வடசொல்
என சொற்கள்  நான்கு வகைப்படும்.
இலக்கண முறைப்படி
1. பெயர்ச்சொல்
2. வினைச்சொல்
3. இடைச்சொல்
4. உரிச்சொல்
எனச் சொற்கள்  நான்கு வகைப்படும்.
இலக்கிய முறைப்படிக்கான சொற்களின் வகைகளைக் காண்போம்.
இயற்சொல்

கடல், கப்பல், எழுதினான், படித்தான் ஆகிய சொற்களைக் கவனியுங்கள்.

இவற்றின், பொருள் இயல்பாகவே எளிதில் விளங்குகிறது.
இவ்வாறு, எளிதில்  பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள் இயற்சொற்கள் எனப்படும்.
இயற்சொல்  பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு வகையிலும் வரும்.
மண், பொன் –   பெயர்இயற்சொல்
நடந்தான், வந்தான் –   வினை இயற்சொல்
அவனை, அவனால்   –   இடைஇயற்சொல்
மாநகர் –   உரி  இயற்சொல்
திரிச்சொல்
வங்கூழ், அழுவம், சாற்றினான், உறுபயன் ஆகிய சொற்களைக் கவனியுங்கள்.
இச்சொற்கள் இலக்கியங்களில் பயின்று வரும்  சொற்களாகும்.
இவை முறையே
வங்கூழ் –  காற்று
அழுவம் –  கடல்
சாற்றினான்  –  சொன்னான்
உறுபயன் –  மிகுந்த பயன்
எனப் பொருள் தரும்.
இவ்வாறு கற்றோர்க்கு மட்டுமே  விளங்குவதாகவும் இலக்கியங்களில் மட்டுமே பயின்று வருபவையாகவும் அமையும் சொற்கள் திரிசொற்கள் எனப்படும்.
திரிசொல்  பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு வகையிலும் வரும்.
அழுவம், வங்கம் –   பெயர்த்  திரிசொல் 
இயம்பினான், பயின்றாள்  –   வினைத்  திரிச்சொல்
அன்ன, மான  –   இடைத்  திரிச்சொல்
கூர், கழி –  உரித்  திரிச்சொல்
திரிசொற்களை ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள் எனவும், பல பொருள் குறித்த ஒரு திரிசொல் எனவும் இரு வகைப்படுத்தலாம்.
வங்கம், அம்பி, நாவாய் – என்பன கப்பல் என்னும் ஒரே பொருளைத்  தருவதான சொல் ஒரு பொருள் குறித்த  பல திரிசொற்கள் என்பர்.
இதழ் என்னும் சொல் பூவின் இதழ், உதடு, கண்ணிமை, நாளிதழ் ஆகிய பல பொருள்களைத் தருவதான சொல் பல பலபொருள் குறித்த ஒரு திரிசொல் என்பர் .
திசைச் சொல்

சாவி, சன்னல், பண்டிகை , இரயில் முதலிய சொற்கள் தமிழில் வழக்கில் இருந்தாலும் இவை தமிழ்ச் சொற்கள் அல்ல.

பிறமொழிகளில் இருந்து வந்து தமிழில் வழங்கி வருபவை யாகும்.
இவ்வாறு வடமொழி தவிர, பிற மொழிகளில் இருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் திசைச்சொற்கள் எனப்படும்.
முற்காலத்தில், பாண்டி நாட்டைத் தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் வழங்கிய கேணி (கிணறு), பெற்றம் (பசு) போன்ற சொற்களையும் திசைச் சொற்கள் என்றே வழங்கினர்.
வட சொல்
வருடம், மாதம், கமலம், விடம், சக்கரம் முதலிய சொற்கள் தமிழில் வழக்கில் இருந்தாலும் இவை தமிழ்ச் சொற்கள் அல்ல .
இவை வடமொழி  எனப்படும் சமஸ்கிருத மொழிச்சொற்கள் ஆகும்.
இவ்வாறு வடமொழியிலிருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் வடசொற்கள் எனப்படும்.
வடசொற்கள் தற்சமம், தற்பவம் என இரு வகையாகப் பிரிப்பர் .
 
கமலம், அலங்காரம் என வடமொழியில் இருப்பது போன்றே தமிழில் எழுதுவதைத் தற்சமம் என்பர்.
லக்ஷ்மி என்பதை இலக்குமி என்றும், விஷம் என்பதை விடம் என்றும் தமிழ் எழுத்துகளால் மாற்றி எழுதுவதைத் தற்பவம் என்பர் .

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories