Blog

அவையஞ்சாமை

Class 44 இலக்கியம்‌ - தமிழ்‌ அறிஞர்களும்‌, தமிழ்த்தொண்டும்

அவையஞ்சாமை

  1. வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்

தொகையறிந்த தூய்மை யவர்.

விளக்கம்:

சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவையிலிருப்போரின் வகையறியும்  ஆற்றல்  உடையவராயிருப்பின் பிழை நேருமாறு  பேச மாட்டார்கள்.

2. கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்

கற்ற செலச்சொல்லு வார்.

விளக்கம்:

கற்றவரின்  முன் தாம்  கற்றவற்றை  அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்ல   வல்லவர்,  கற்றவர் எல்லாரினும் மேலானவராக  மதித்துச் சொல்லப்படுவார்.

3. பகையகத்துச் சாவார் எளியர் அரியர்

அவையகத் தஞ்சா தவர்.

விளக்கம்:

அமர்க்களத்தில்   சாவுக்கும்   அஞ்சாமல்   போரிடுவது   பலருக்கும் எளிதான  செயல், அறிவுடையோர்  நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல்

பேசக்கூடியவர் சிலரேயாவர்.

4. கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற

மிக்காருள் மிக்க கொளல்.

விளக்கம்:

அறிஞர்களின்  அவையில்  நாம்   கற்றவைகளை   அவர்கள்  ஏற்றுக் கொள்ளும்   அளவுக்கு    எடுத்துச்   சொல்லி    நம்மைவிட   அதிகம்

கற்றவரிடமிருந்து மேலும் பலவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

5. ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா

மாற்றங் கொடுத்தற் பொருட்டு.

விளக்கம்:

அவையில்  பேசும்பொழுது  குறுக்கீடுகளுக்கு   அஞ்சாமல்  மறுமொழி சொல்வதற்கு ஏற்ற  வகையில் இலக்கணமும், தருக்கமெனப்படும் அளவைத்

திறமும் கற்றிருக்க வேண்டும்.

6. வாளொடன் வன்கண்ண ரல்லார்க்கு நூலொடென்

நுண்ணவை அஞ்சு பவர்க்கு.

விளக்கம்:

கோழைகளுக்குக்  கையில்  வாள்  இருந்தும்  பயனில்லை;  அவையில் பேசிட அஞ்சுவோர் பலநூல் கற்றும் பயனில்லை.

7. பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்

தஞ்சு மவன்கற்ற நூல்.

விளக்கம்:

அவை நடுவில் பேசப்  பயப்படுகிறவன், என்னதான் அரிய நூல்களைப் படித்திருந்தாலும்  அந்த  நூல்கள்   அனைத்தும்   போர்க்களத்தில்  ஒரு

பேடியின்  கையில்  உள்ள  கூர்மையான  வாளைப்  போலவே பயனற்றவைகளாகி விடும்.

8.பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்

நன்கு செலச்சொல்லா தார்.

விளக்கம்:

அறிவுடையோர்  நிறைந்த  அவையில்,  அவர்கள்  மனத்தில்  பதியும் அளவுக்குக் கருத்துகளைச்  சொல்ல  இயலாவிடின், என்னதான் நூல்களைக்

கற்றிருந்தாலும் பயன் இல்லை.

9. கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்தும்

நல்லா ரவையஞ்சு வார்.

விளக்கம்:

ஆன்றோர்   நிறைந்த   அவையில்  பேசுவதற்கு  அஞ்சுகின்றவர்கள், எத்தனை நூல்களைக் கற்றிருந்த போதிலும், அவர்கள் கல்லாதவர்களைவிட

இழிவானவர்களாகவே கருதப்படுவார்கள்.

10. உளரெனினும் இல்லாரொ டொப்பர் களனஞ்சிக்

கற்ற செலச்சொல்லா தார்.

விளக்கம்:

தாம் கற்றவைகளைக்  கேட்போரைக் கவரும் வண்ணம் கூற இயலாமல் அவைக்கு   அஞ்சுவோர்,   உயிரோடு  இருந்தாலும்கூட  இறந்தவருக்குச்

சமமானவராகவே கருதப்படுவார்கள்.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories