ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்ககால எழுச்சிகள்
June 5, 2025 2025-06-05 8:03ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்ககால எழுச்சிகள்
ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்ககால எழுச்சிகள்
விவசாயிகளின் கிளர்ச்சி
ஃபராசி இயக்கம்
ஹாஜி ஷரியத்துல்லா என்பவரால் 1818ஆம் ஆண்டு ஃபராசி இயக்கம் தொடங்கப்பட்டது. 1839இல் ஷரியத்துல்லா மறைந்த பிறகு இந்த கிளர்ச்சிக்கு அவரது மகன் டுடு மியான் தலைமை ஏற்றார். அவர் வரி செலுத்தவேண்டாம் என்று விவசாயிகளை கேட்டுக்கொண்டார். பொதுமக்கள் நிலத்தையும் அனைத்து வளத்தையும் சரிசமமாக அனுபவிக்கவேண்டும் என்ற எளிய கொள்கையில் இந்த அறிவிப்பு பிரபலமடைந்தது. சமத்துவ இயல்பிலான மதம் குறித்து வலியுறுத்திய டுடு மியான், ‘நிலம் கடவுளுக்குச் சொந்தமானது’ அறிவித்தார். எனவே வாடகை வசூலிப்பது அல்லது வரி விதிப்பது ஆகியன ஹாஜி ஷரியத்துல்லா இறைச்சட்டத்துக்கு எதிரானது என்றார். கிராம அமைப்புகளின் கட்டமைப்பு மூலமாக பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள் ஒன்றுதிரட்டப்பட்டனர். 1862இல் டுடு மியான் மறைந்தபிறகு 1870களில் நோவா மியான் என்பவரால் இந்த இயக்கம் மீண்டும் உயிர்பெற்றது.
பரசத்தில் வஹாபி கிளர்ச்சி
வஹாபி கிளர்ச்சி என்பது ஆங்கிலேய ஆட்சிக்கும் நிலப்பிரபுக்களுக்கும் எதிராக துவங்கப்பட்டதாகும். வங்காளத்தில் பரசத் பகுதியில் 1827 வாக்கில் தோன்றியது. வஹாபி போதனைகளால் பெரிதும் ஆழமாக ஈர்க்கப்பட்டவராக திகழ்ந்த இசுலாமிய மதபோதகர் டிடு மீர் என்பவர் இந்தக் கிளர்ச்சிக்குத் தலைமையேற்றார். ஜமீன்தாரி முறையால் குறிப்பாக ஒடுக்கப்பட்ட இசுலாமிய விவசாயிகள் மத்தியில் அவர் செல்வாக்குமிக்க நபராகத் திகழ்ந்தார்.
பழங்குடியினர் கிளர்ச்சி
கோல் கிளர்ச்சி
ஜார்க்கண்ட் மற்றும் ஒடிஷா ஆகிய பகுதிகளிலுள்ள சோட்டா நாக்பூர் மற்றும் சிங்பும் ஆகிய இடங்களில் 1831-32ஆம் ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய பழங்குடியின கிளர்ச்சி கோல் கிளர்ச்சியாகும். இது பிந்த்ராய் மற்றும் சிங்ராய் தலைமையில் நடந்தது. சோட்டா நாக்பூர் பகுதியின் அரசர் வருவாய் வசூலிக்கும் பணியை வட்டிக்குப் பணம்கொடுப்போரிடம் குத்தகைக்கு விட்டிருந்தார். அதிக வட்டிக்கு கடன்கொடுத்தல் மற்றும் பழங்குடியினரைக் கட்டாயப்படுத்தி அவர்களின் பகுதிகளிலிருந்து வெளியேற்றுதல் போன்றவை கோல் இனத்தவரிடையே கோபத்தை ஏற்படுத்தியது. வெளியாட்களின் சொத்துக்கள் மீது தாக்குதல்கள் நடத்துதல், கொள்ளையடித்தல், கலவரம் செய்தல் ஆகிய வழிகளில் கோல்களின் தொடக்ககாலப் போராட்டம் மற்றும் எதிர்ப்புகள் அமைந்தன. அதனை அடுத்து வட்டிக்குப் பணம்கொடுப்போர் மற்றும் வர்த்தகர்கள் ஆகியோர் கொல்லப்பட்டனர். மேளங்களை முழங்கியும், அம்புகளை எய்தும் வெளியாட்களை வெளியேறச் செய்யும் எச்சரிக்கைகளை செய்தும் பல வகைகளில் பழங்குடியினத் தலைவர்கள் தங்கள் கிளர்ச்சி பற்றிய செய்தியைப் பரப்பினர். ஆங்கிலேய அரசு பெரிய அளவிலான வன்முறை மூலம் இந்தக் கிளர்ச்சியை அடக்கியது.
சாந்தலர்களின் கிளர்ச்சி
இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் பரவலாக வாழ்ந்துவந்த சாந்தலர்கள் நிரந்தர குடியிருப்புகளின் கீழ் ஜமீன்களை உருவாக்குவதற்காக தங்கள் பூர்வீக இடத்தை விட்டு இடம்பெயரவேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டதால் ராஜ்மஹால் மலையைச் சுற்றிலும் இருந்த வனப்பகுதியைவிட்டு கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டனர். ரயில்வே கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த ஐரோப்பிய அதிகாரிகள் மற்றும் உள்ளூர் காவலர்களால் அவர்கள் ஒடுக்கப்பட்டனர். வெளியாட்களால் வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப்பட்ட சாந்தலர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக வட்டிக்குப்பணம் கொடுப்போரைச் சார்ந்துவாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். விரைவில் கடன் மற்றும் பணம்பறித்தல் ஆகிய தீய வலையில் அவர்கள் சிக்கத்தொடங்கினர். மேலும், ஊழல்கறைபடிந்த ஆங்கிலேய நிர்வாகத்தின் கீழ் தங்களின் நியாயமான குறைகளுக்கு நீதி கிடைக்கமுடியாத சூழலில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாக சாந்தலர்கள் உணர்ந்தனர்.
1855இல் சித்து மற்றும் கணு ஆகிய இரண்டு சாந்தலர் சகோதரர்கள் கிளர்ச்சியைத் தலைமையேற்று நடத்தவேண்டி தங்களுக்கு கடவுளிடமிருந்து தேவசெய்தி கிடைத்ததாக அறிவித்தனர். 1855ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் கிளர்ச்சியானது மகாஜன்கள், ஜமீன்தாரர்கள், ஆங்கிலேய அதிகாரிகள் ஆகியோருக்கு எதிரான வெளிப்படையான கிளர்ச்சியாக உருவெடுத்தது. வில் மற்றும் விஷம் தடவிய அம்புகளை ஏந்தியவாறும், கோடரிகள், கத்திகள் ஆகியவற்றுடனும் ராஜ்மகால் மற்றும் பாகல்பூர் நோக்கி கம்பெனி ஆட்சிக்கு முடிவு கட்டப்போவதாக முழக்கமிட்டபடி பேரணியாகச் சென்றனர். இதனையடுத்து கிராமங்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்த ஆங்கிலேயர் சொத்துக்களைச் சூறையாடினார்கள். இறுதியாக கிளர்ச்சி முழுமையாக ஒடுக்கப்பட்டது. 1855இல் சாந்தலர்கள் வசமிருந்த பகுதிகளை ஒழுங்குமுறைப்படுத்துவது பற்றிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. சாந்தல் பர்கானா மண்டலம் என்ற தனி மண்டலத்தை உருவாக்கும் வகையில் இந்தச் சட்டம் நிறைவேறியது.
ஆங்கிலேய இந்தியாவின் இணைப்புக் கொள்கை
1840 மற்றும் 1850 களில் இரண்டு முக்கியக் கொள்கைகளின் மூலம் அதிக நிலப்பகுதிகள் இணைத்துக் கொள்ளப்பட்டன.
மேலாதிக்கக் கொள்கை: ஆங்கிலேயர் தங்களை வானளாவிய அதிகாரங்கள் கொண்ட உயர் அதிகார அமைப்பாக கருதினார்கள். உள்நாட்டு ஆட்சியாளர்கள் திறனற்றவர்கள் என்ற அடிப்படையில் புதிய நிலப்பகுதிகள் இணைக்கப்பட்டன.
வாரிசு இழப்புக்கொள்கை: அரசுக்கட்டிலில் அரியணை ஏற நேரடி ஆண்வாரிசு இல்லையெனில் அந்த ஆட்சியாளரது இறப்புக்குப்பின் அந்தப்பகுதி ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்படும். சதாரா, சம்பல்பூர், பஞ்சாபின் சில பகுதிகள், ஜான்சி மற்றும் நாக்பூர் ஆகியன இந்த வாரிசு இழப்புக்கொள்கையின் அடிப்படையில் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டன.
இந்திய கலாச்சார உணர்வுகள் பற்றிய தீவிரத்தன்மை இல்லாதது: 1806ஆம் ஆண்டில் வேலூரில் சிப்பாய்கள் சமயக்குறியீடுகளை நெற்றியில் அணிவதற்கும், தாடி வைத்துக் கொள்வதற்கும், தடைவிதிக்கப்பட்டதோடு தலைப்பாகைகளுக்கு பதிலான வட்ட வடிவிலான தொப்பிகளை அணியுமாறும் பணிக்கப்பட்டனர். அதனை எதிர்த்து அவர்கள் கிளர்ச்சி செய்தனர். இத்தகைய ஆடைக் கட்டுப்பாடுகள் சிப்பாய்களை கிறித்தவ மதத்துக்கு மாறச் செய்வதற்கான ஒரு முயற்சியாக அவர்கள் அஞ்சினார்கள். அதேபோன்று 1824ஆம் ஆண்டு கல்கத்தா அருகே பாரக்பூரில் சிப்பாய்கள் கடல்வழியாக
பர்மா செல்ல மறுத்தனர். கடல் கடந்து சென்றால் தங்களது சாதியை இழக்க நேரிடும் என்று அவர்கள் நம்பினார்கள். ஊதியம் மற்றும் பதவி உயர்வில் பாரபட்சம் காட்டப்படுவது குறித்தும் சிப்பாய்கள் கவலை அடைந்தனர். ஐரோப்பிய சிப்பாய்களுடன் ஒப்பிடுகையில் இந்திய சிப்பாய்களுக்கு மிகக்குறைந்த அளவில் ஊதியம் வழங்கப்பட்டது. அவர்கள் தரக்குறைவாக நடத்தப்பட்டதோடு மூத்த படையினரால் இனக் குறியிடப்பட்டு அவமதிக்கப்பட்டார்கள்.
கலகம்
புதிய என்ஃபீல்டு துப்பாக்கிக்கு வழங்கப்பட்ட தோட்டாக்கள் பற்றிய வதந்திகள் புரட்சிக்கு வித்திட்டது. பசு மற்றும் பன்றிக் கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்ட பசை (கிரீஸ்) இத்தகைய புதிய குண்டு பொதியுறையில் (காட்ரிட்ஜ்களில்) பயன்படுத்தப்பட்டதாக சிப்பாய்கள் பெரிதும் சந்தேகம் கொண்டனர். அவற்றை நிரப்பும் முன் அதை வாயால் கடிக்கவேண்டி இருந்தது (இந்துக்களில் பெரும்பான்மையானவர்களுக்கு பசு புனிதம் வாய்ந்ததாகவும், முஸ்லிம்களுக்கு பன்றி இறைச்சி தடை செய்யப்பட்ட உணவாகவும் இருந்தது). மார்ச் 29ஆம் தேதி மங்கள் பாண்டே என்ற பெயர் கொண்ட சிப்பாய் தனது ஐரோப்பிய அதிகாரியைத் தாக்கினார். கைது செய்ய உத்தரவிட்டும் அவரது சக சிப்பாய்கள் மங்கள் பாண்டேவை கைது செய்ய மறுத்துவிட்டனர்.
மங்கள் பாண்டேயும் வேறு பலரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். இதனால் ஆத்திரம் அதிகரித்து அதனையடுத்து வந்த நாட்களில் கீழ்ப்படிய மறுத்தல் போன்ற நிகழ்வுகள் அதிகரித்தன. கலவரம், பொருட்களை தீயிட்டுக் கொளுத்துவது ஆகியன அம்பாலா, லக்னோ, மீரட் ஆகிய இராணுவக் குடியிருப்புப் பகுதிகளில் நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாயின.
கருநீலச்சாய (இண்டிகோ) கிளர்ச்சி 1859-1860
ஐரோப்பியர்கள் இண்டிகோ பயிரிட இந்திய விவசாயிகளை பணியில் அமர்த்தினார்கள். பின்னர் அது சாயமாக தொழிற்சாலைகளில் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு அந்த சாயம் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. விவசாயிகள் இந்தப் பயிரை பயிரிடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டனர். ஆங்கிலேய முகவர்கள் பயிரிடுவோருக்கு நிலத்துக்கான வாடகை மற்றும் இதர செலவுகளை சமாளிப்பதற்காக, ரொக்கப்பணத்தை முன்பணமாகக் கொடுத்து உதவினர். ஆனால் இந்த முன்பணம் வட்டியுடன் திரும்பச் செலுத்தப்படவேண்டும். உணவு தானியப் பயிர்களுக்குப் பதிலாக இண்டிகோ பயிரைப் பயிரிட விவசாயிகள் வற்புறுத்தப்பட்டனர். பருவத்தின் இறுதியில் இண்டிகோ பயிருக்கு மிகக்குறைந்த விலையையே விவசாயிகளுக்கு ஆங்கிலேய முகவர்கள் கொடுத்தனர். இந்த குறைந்த தொகையைக் கொண்டு தாங்கள் வாங்கிய முன்பணத்தைத் திரும்பச் செலுத்த முடியாது என்பதால் அவர்கள் கடனில் மூழ்கினர். எனினும், லாபம் கிடைக்காத நிலையிலும், மீண்டும் இண்டிகோ பயிரை பயிரிடும் மற்றொரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளுமாறு விவசாயிகள் மீண்டும் நிர்ப்பந்திக்கப்பட்டனர். விவசாயிகளால் தாங்கள் வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியவே இல்லை. தந்தை வாங்கிய கடன்கள் அவரது மகன் மீதும் சுமத்தப்பட்டன. இண்டிகோ கிளர்ச்சி 1859ஆம் ஆண்டு தொடங்கியது. இந்தக் கிளர்ச்சி ஒரு வேலைநிறுத்த வடிவில் தொடங்கியது. வங்காளத்தின் நடியா மாவட்டத்தின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் இனி இண்டிகோ பயிரிடப்போவதில்லை என மறுத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த இயக்கம் இண்டிகோ பயிரிடப்பட்ட வங்காளத்தின் இதர மாவட்டங்களுக்கும் பரவியது. இந்தக் கிளர்ச்சி பின்னர் வன்முறையாக வெடித்தது. இந்து மற்றும் முஸ்லிம் விவசாயிகள் இந்தக் கிளர்ச்சியில் பங்கேற்றனர். குடங்கள் மற்றும் உலோகத்தட்டுக்களை ஆயுதங்களாக ஏந்தியபடி பெண்களும் ஆடவரோடு இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். ஆங்கிலேயப் பண்ணை கொடுமைகள் குறித்து கல்கத்தாவில் வாழ்ந்த அப்போதைய இந்திய பத்திரிக்கையாளர்கள் எழுதினார்கள். நீல் தர்பன் (இண்டிகோவின் கண்ணாடி) என்ற தலைப்பில் ஒரு நாடகத்தை தீனபந்து மித்ரா எழுதினார். இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் வாழ்ந்த மக்களிடையே இண்டிகோ விவசாயிகள் குறித்த பிரச்சனைகளை கவனத்தில் கொண்டுவர இந்த நாடகம் பயன்பட்டது.
தக்காண கலவரங்கள் 1875
அதிக அளவிலான வரி விதிப்பு வேளாண்மையைப் பாதித்தது. பஞ்சத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்தன. 1875ஆம் ஆண்டு மே மாதத்தில் தக்காணத்தில் வட்டிக்குப் பணம் வழங்குவோருக்கு எதிரான கலவரங்கள் பூனா அருகே உள்ள சூபா என்ற கிராமத்தில் முதன்முதலாக வெடித்ததாகப் பதிவாகியுள்ளது. பூனா மற்றும் அகமதுநகர் ஆகிய பகுதிகளில் சுமார் 30 கிராமங்களில் இதே போன்ற கலவரங்கள் ஏற்பட்டதாகப் பதிவாகியது. குஜராத்தில் வட்டிக்குப் பணம் வழங்குவோரை குறிவைத்துதான் இந்த கலவரங்கள் பெரும்பாலும் அரங்கேறின. ஆங்கிலேய ஆட்சியின் கீழ் விவசாயிகள் நேரடியாக வருவாயைஅரசுக்கு செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டனர். மேலும் புதிய சட்டப்படி எந்த நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கப்பட்டதோ அந்த நிலத்தை எடுத்துக்கொண்டு ஏலம் விட்டு கடன் தொகையை எடுத்துக்கொள்ள கடன்வழங்கியோருக்கு அனுமதி கிடைத்திருந்தது. இதன் விளைவாக உழும் வர்க்கத்திடமிருந்து நிலம் உழாத வர்க்கத்திடம் கைமாறத் தொடங்கியது. கடன் என்னும் மாய வலையில் சிக்கிய விவசாயிகள் நிலுவைத் தொகையைச் செலுத்த இயலாமல் பயிரிடுதலையும் விவசாயத்தையும் கைவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.