இந்திய அரசியலமைப்பு – அரசியலமைப்பின் முகவுரை – அரசியலமைப்பின் முக்கிய கூறுகள்
July 4, 2025 2025-08-04 6:28இந்திய அரசியலமைப்பு – அரசியலமைப்பின் முகவுரை – அரசியலமைப்பின் முக்கிய கூறுகள்
இந்திய அரசியலமைப்பு – அரசியலமைப்பின் முகவுரை – அரசியலமைப்பின் முக்கிய கூறுகள்
அரசியலமைப்பு என்ற கொள்கை முதன்முதலில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் (U.S.A.) தோன்றியது.
அரசியலமைப்பின் அவசியம் :
அனைத்து மக்களாட்சி நாடுகளும் தங்களை நிர்வகித்துக் கொள்ள ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை பெற்றுள்ளன.
ஒரு நாட்டின் குடிமக்கள் வாழவிரும்பும் வகையில் சில அடிப்படைக் கொள்கைகளை அரசியலமைப்பு வகுத்துக் கொடுக்கிறது.
இந்திய அரசியலமைப்பு உருவாக்கம்
1946ஆம் ஆண்டு, அமைச்சரவை தூதுக்குழு திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட, இந்திய அரசியல் நிர்ணய சபையால் இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.
இச்சபையில் 292 மாகாணப் பிரதிநிதிகள், 93 சுதேச அரசுகளின் நியமன உறுப்பினர்கள், மாகாண முதன்மை ஆணையர்கள் சார்பில் மூவர் (3) மற்றும் பலுச்சிஸ்தானின் சார்பில் ஒருவர் (1) என மொத்தம் 389 உறுப்பினர்கள் இருந்தனர்.
அரசமைப்பு நிர்ணயசபை உறுப்பினர்கள் அரசமைப்பினை எழுதினர். அரசமைப்பு நிர்ணயச் சபையின் முதல் கூட்டம் 9 டிசம்பர் 1946 அன்று கூடியது. பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் மீதமுள்ள இந்தியாவுக்கான அரசமைப்பு நிர்ணயச் சபை 14 ஆகஸ்ட் 1947 அன்று மீண்டும் கூடியது. அன்றைய மாகாணச் சட்டமன்றங்களின் உறுப்பினர்களே அரசமைப்பு நிர்ணயச் சபை உறுப்பினர்களை மறைமுக வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுத்தனர்.
இந்திய அரசமைப்பு நிர்ணயசபையின் வரைவு குழு உறுப்பினர்கள் – என். மாதவ ராவ், சையத் முஹமது சாதுல்லா, டாக்டர். பி. ஆர். அம்பேத்கர், சர் அல்லாடி கிருஷ்ணசாமி, சர் பி. என். ராவ், எஸ். என். முகர்ஜி, ஜூகல் கிஷோர் கண்ணா, கேவல் கிருஷ்ணா.
284 உறுப்பினர்கள் 26.11.1949 அன்று அரசமைப்பினை ஏற்று கையொப்பமிட்டு அரசமைப்பை நிறைவேற்றினர்.
அரசமைப்பு நிர்ணயசபையின் முதல் கூட்டம் 1946 டிசம்பர் 9 அன்று 11 மணி அளவில் புதுதில்லி, அரசமைப்பு அரங்கில் கூடியது. அன்றைய கூட்டத்தின் முதல் கூட்டப்பொருள்: “தற்காலிகத் தலைவர் தேர்வு” ஆகும். ஆச்சார்ய ஜே. பி. கிருபாளினி (ஐக்கிய மாகாணம் : பொது) அவர்கள் டாக்டர் சச்சிதானந்த சின்ஹாவை தற்காலிகத் தலைவராகத் தலைமையேற்று நடத்தும்படி கேட்டுக்கொண்டார்.
இச்சபையின் தற்காலிக தலைவராக மூத்த உறுப்பினர் டாக்டர். சச்சிதானந்த சின்கா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அரசியலமைப்பை உருவாக்க கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும் போதே அவர் இறந்ததைத் தொடர்ந்து, டாக்டர். இராஜேந்திர பிரசாத் இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவராகவும், H.C. முகர்ஜி மற்றும் V.T. கிருஷ்ணமாச்சாரி இருவரும் துணைத் தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அரசமைப்புற்கு ஒப்புதல் தருவதற்காக சபை 24.01.1950 அன்று கூடிய கூட்டத்திற்கு டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையேற்றார்.
9 டிசம்பர் 1946 முதல் 24 ஜனவரி, 1950 வரை அரசமைப்பு நிர்ணயச்சபையின் விவாதங்களின் தொகுப்பு 12 தொகுதிகளைக் கொண்டதாகும்.
இக்கூட்டத் தொடர் 11 அமர்வுகளாக 166 நாட்கள் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது 2473 திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. அவற்றுள் சில ஏற்கப்பட்டன.
அரசியல் நிர்ணய சபை பல்வேறு குழுக்களின் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும் பணியை மேற்கொண்டது.
இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழுத் தலைவர் டாக்டர், BR அம்பேத்கர் தலைமையின் கீழ் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. எனவே அவர் “இந்திய அரசியலமைப்பின் தந்தை” என அறியப்படுகிறார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்ட பின்னர், பொதுமக்கள், பத்திரிக்கைகள், மாகாண சட்டமன்றங்கள்மற்றும் பலரால் விவாதிக்கப்பட்டது. இறுதியாக முகவுரை, 22 பாகங்கள், 395 சட்டப்பிரிவுகள் மற்றும் 8 அட்டவணைகளைக் கொண்ட இந்திய அரசியலமைப்பு, 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த நாளே ஒவ்வொரு ஆண்டும் இந்திய குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
பிரேம் பெஹாரி நரேன் ரைஜடா என்பவரால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இத்தாலிய பாணியில், அவரது கைப்பட எழுதப்பட்டது.
இந்திய அரசமைப்பின் மூல ஆதாரங்கள்
இந்திய அரசாங்கச் சட்டம், 1935
கூட்டாட்சி விதிகள், ஆளுநர் பதவி, நீதித்துறை, பொதுத் தேர்வாணையங்கள், நெருக்கடிகால விதிகள், நிர்வாக விவரங்கள் ஆகியன இந்திய அரசாங்கச் சட்டம், 1935-லிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டன.
நாடு அரசமைப்பு அரசமைப்பின் மூல ஆதாரங்கள்
பிரிட்டன் நாடாளுமன்ற அரசு, ஒற்றைக் குடியுரிமை, சட்டத்தின் ஆட்சி, நாடாளுமன்ற செயல்முறைகள். இடைக்கால தடையாணைகள்
அமெரிக்க அடிப்படை உரிமைகள், நீதி சீராய்வு, குடியரசுத்தலைவர் மீதான பதவிநீக்க தீர்மானம், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், குடியரசுத் துணைத்தலைவர் போன்றோரை பதவி நீக்கம் செய்யும் முறை
அயர்லாந்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்
கனடா ஒரு வலுவான மத்திய அரசுடன் கூடிய கூட்டாட்சி, மத்திய அரசிடம் பொதுப் பட்டியல், மத்திய அரசால் மாநில ஆளுநர் நியமனம், உச்சநீதிமன்றத்தின் அறிவுரை அதிகார வரம்பு
ஆஸ்திரேலியா வணிகம், வர்த்தக சுதந்திரம், நாடாளுமன்றத்தின் ஈரவைகளின் கூட்டுக்கூட்டம்
ஜெர்மனி வெய்மர் நெருக்கடிநிலை காலத்தில் அடிப்படை உரிமைகள் பறிப்பு
சோவியத் யூனியன் அடிப்படைக் கடமைகள், முகப்புரையில் (சமூக, பொருளாதார, அரசியல்) நீதியின் மாண்புகள், அடிப்படைக் கடமைகள். (42வதுதிருத்தத்தில் உறுதிபடுத்தப்பட்டது.)
பிரான்சு குடியரசு, முகப்புரையில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்
தென் ஆப்பிரிக்கா அரசமைப்புத் திருத்தமுறை, மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு
(இறுதிபடுத்தப்பட்ட, திருத்தப்பட்ட வரைவு 1950 ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது).
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிறப்புக் கூறுகள்
- உலகிலுள்ள எழுதப்பட்ட, அனைத்து அரசியலமைப்புகளை விடவும் மிகவும் நீளமானது.
- இதன் பெரும்பாலான கருத்துகள் பல்வேறு நாடுகளின் அரசியலமைப்புகளிலிருந்து பெறப்பட்டவை.
- இது நெகிழாத்தன்மை கொண்டதாகவும், நெகிழும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.
- கூட்டாட்சி முறை அரசாங்கத்தை (நடுவண், மாநில அரசுகள்) ஏற்படுத்துகிறது.
- இந்தியாவைச் சமயச்சார்பற்ற நாடாக்குகிறது.
- சுதந்திரமான நீதித்துறையை வழங்குகிறது.
- உலகளாவிய வயது வந்தோர் வாக்குரிமையை அறிமுகப்படுத்தியதோடு 18 வயது நிரம்பிய குடிமக்கள் அனைவருக்கும் எந்த வித பாகுபாடுமின்றி வாக்குரிமையை வழங்குகிறது.
- இந்திய அரசமைப்பில் சமதர்மம் என்ற சொல் 42-வது திருத்தச்சட்டம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
முகவுரை
முகவுரை “அரசியலமைப்பின் திறவுகோல்” என குறிப்பிடப்படுகிறது.
1947ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் நாள் இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜவகர்லால் நேருவின் ‘குறிக்கோள் தீர்மானத்தின்’
இந்திய அரசியலமைப்பின் அடிப்படையில் முகவுரை அமைந்துள்ளது.
முகவுரையானது 1976ஆம் ஆண்டு 42வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்படி ஒருமுறை திருத்தப்பட்டது. அதன்படி, சமதர்மம், சமயச்சார்பின்மை, ஒருமைப்பாடு போன்ற மூன்று புதிய சொற்கள் சேர்க்கப்பட்டன.
‘இந்திய மக்களாகிய நாம்’ என்ற சொற்களுடன் இந்திய அரசியலமைப்பின் முகவுரை தொடங்குகிறது.
நடுவண்-மாநில உறவுகள்
சட்டமன்ற உறவுகள்
நடுவண் நாடாளுமன்றம், இந்தியா முழுவதற்கும் அல்லது இந்தியாவின் எந்த பகுதிக்கும் சட்டமியற்றும் அதிகாரம் பெற்றுள்ளது. இது இந்தியாவின் மாநிலங்களுக்கு மட்டுமின்றி யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தும்.
இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணை, நடுவண்-மாநில அரசுகளுக்கிடையேயான அதிகாரப் பகிர்வினைப் பற்றி கூறுகிறது. அவை நடுவண் பட்டியல், மாநில பட்டியல், பொதுப்பட்டியல் என மூன்று பட்டியல்கள் முறையே 97, 66, 47 என்று அதிகாரத்தை வழங்கியுள்ளது.
நடுவண் அரசுக்கு சொந்தமான பட்டியலில், சட்டமியற்றும் பிரத்யேக அதிகாரத்தை நாடாளுமன்றம் பெற்றுள்ளது.
மாநில அரசுக்குச் சொந்தமான பட்டியலில் சட்டமியற்றும் பிரத்யேக அதிகாரத்தை மாநில சட்டமன்றம் பெற்றுள்ளது.
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்கள் பொதுப்பட்டியலில் உள்ள துறைகளின் மீது சட்டமியற்ற அதிகாரம் கொண்டுள்ளன. ஆனால், நடுவண் அரசுக்கும், மாநில அரசுக்குமிடையே பொதுப்பட்டியலில் உள்ள துறைகள் குறித்து சட்டமியற்றும் பொழுது முரண்பாடு ஏற்பட்டால், நடுவண் அரசு இயற்றும் சட்டமே இறுதியானது.
தற்போது அதிகாரப் பகிர்வு என்பது நடுவண் அரசு பட்டியலில் 100 துறைகள், மாநில அரசு பட்டியலில் 61 துறைகள், மற்றும் இரண்டுக்கும் பொதுவான பொதுப்பட்டியலில் 52 துறைகள் என்றும் மாற்றப்பட்டுள்ளது.
1976ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 42 வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் மாநிலப்பட்டியலில் இருந்து 5 துறைகளை, பொதுப் பட்டியலுக்கு மாற்றியது. அவை,கல்வி,காடுகள்,எடைகள்மற்றும்அளவுகள், பறவைகள் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு, மற்றும் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற அமைப்புகளைத் தவிர பிற நீதிமன்றங்களின் நீதி நிர்வாகம் ஆகியனவாகும்.
நிர்வாக உறவுகள்
ஒரு மாநில அரசின் நிர்வாக அதிகாரம் அதன் சொந்த மாநிலத்தில் மட்டுமே உள்ளது மற்றும் அம்மாநிலத்தில் மட்டுமே தனக்கான சட்டமியற்றும் தகுதியையும் பெற்றுள்ளது. அதே வேளையில், நடுவண் அரசும், பிரத்தியோக நிர்வாக அதிகாரம் பெற்றுள்ளது. அவை,
அ) நாடாளுமன்றம் தொடர்பான விஷயங்களில் சட்டங்களை இயற்ற சிறப்பு அதிகாரம்,
ஆ) மாநில அரசுகள் செய்து கொள்ளும் உடன்படிக்கை (அ) ஒப்பந்தங்களை அங்கீகரிப்பது ஆகியனவாகும்.
நிதி உறவுகள்
இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதி XII சட்டப்பிரிவு 268ல் இருந்து 293 வரை உள்ள பிரிவுகள் நடுவண்-மாநில அரசுகளின் நிதிசார்ந்த உறவுகளைப் பற்றி விளக்குகிறது.
நடுவண்-மாநில அரசுகள், அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம், பலவகையான வரிகளை விதிக்கும் அதிகாரங்களைப் பெற்றுள்ளன. இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 280ன் கீழ் குடியரசுத்தலைவரால் நியமனம் செய்யப்பட்ட நிதிக்குழு பரிந்துரையின் அடிப்படையில், நடுவண் அரசால் சில வரிகள் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு, நடுவண் அரசாலும், மாநில அரசாலும் பிரித்துக்கொள்ளப்படுகின்றன.
நடுவண் – மாநில அரசுகளின் உறவினை விசாரிக்க மறைந்த முன்னாள் பிரதமர் திருமதி. இந்திராகாந்தி அவர்கள் 1983ஆம் ஆண்டு சர்க்காரியா குழுவினை நியமித்தார். அக்குழுவின் 247 பரிந்துரைகளில் 180 பரிந்துரைகளை நடுவண் அரசு செயல்படுத்தியது.
1969 நடுவண்-மாநில அரசுகளின் உறவுகள் குறித்து முழுவதும் ஆராய தமிழக அரசு டாக்டர்.P.V.இராஜமன்னார் தலைமையின் கீழ் மூவர் குழு ஒன்றை நியமித்தது.
அலுவலக மொழிகள்
அரசியலமைப்பு சட்டப் பகுதி XVIIஇல் 343 லிருந்து 351 வரையுள்ள சட்டப்பிரிவுகள் அலுவலக மொழிகள் பற்றி விவரிக்கின்றன. தொடக்கத்தில் 14 மொழிகள் அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டிருந்தன. தற்போது 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
2004ஆம் ஆண்டு இந்திய அரசு “செம்மொழிகள்” எனும் புதிய வகைப்பாட்டினை ஏற்படுத்த தீர்மானித்தது. அதன்படி இதுவரை 6 மொழிகள் செம்மொழி தகுதியை பெற்றுள்ளன. அவை, தமிழ்(2004), சமஸ்கிருதம் (2005), தெலுங்கு(2008), கன்னடம்(2008), மலையாளம் (2013) மற்றும் ஒடியா(2014).
அவசரகால ஏற்பாடுகள்
தேசிய அவசரநிலை (சட்டப்பிரிவு 352)
போர், வெளிநாட்டினர் ஆக்கிரமிப்பு, அல்லது ஆயுதமேந்திய கிளர்ச்சி அல்லது உடனடி ஆபத்து அல்லது அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், குடியரசுத்தலைவர், அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 352ன் கீழ் அவசரநிலையை அறிவிக்கலாம்.
போர் அல்லது வெளிநாட்டினர் ஆக்கிரமிப்பின் காரணமாக அவசரநிலை அறிவிக்கப்படும் பொழுது அது ‘வெளிப்புற அவசரநிலை’ எனப்படுகிறது.
ஆயுதமேந்திய கிளர்ச்சிக் காரணமாக அவசர நிலை அறிவிக்கப்படும்பொழுது அது ‘உள்நாட்டு அவசர நிலை‘ எனப்படுகிறது. இந்த வகையான அவசரநிலைகள் 1962, 1971, 1975 ஆகிய ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டன.
மாநில அவசரநிலை (சட்டப்பிரிவு 356)
ஒரு மாநிலத்தில், மாநில அரசால் கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்படும்பொழுது அரசியலமைப்பின் விதிகளுக்கேற்ப ஆளுநர் அறிக்கை அளிக்கும் பொழுது, குடியரசுத்தலைவர் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 356 கீழ் அவசரநிலையை அறிவிக்கலாம்.
இந்தஅவசரநிலை, சட்டப்பிரிவு 352ன் படி நடைமுறையில் இருந்தாலும் அல்லது தேர்தல் ஆணையம் சட்டமன்றத் தேர்தலை நடத்த உகந்த சூழல் இல்லை என்று சான்றளித்தாலும் மட்டுமே ஓராண்டைத் தாண்டியும் தொடரமுடியும். அதிகபட்சம் அவசரநிலையின் காலம் 3 ஆண்டுகள் இருக்கமுடியும். மாநிலமானது, குடியரசுத்தலைவர் சார்பாக ஆளுநரால் நிர்வகிக்கப்படுகிறது.
இந்தியாவில் முதன்முறையாக 1951இல் பஞ்சாப் மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி நடைமுறைப் படுத்தப்பட்டது.
நிதி சார்ந்த அவசரநிலை (சட்டப்பிரிவு 360)
நிதிநிலைத் தன்மை, இந்தியாவின் கடன் தன்மை மற்றும் இந்தியாவின் பகுதிகள் ஆபத்தில் இருந்தால் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 360ன் கீழ் குடியரசுத்தலைவர் நிதிசார்ந்த அவசரநிலையைப் பிறப்பிக்கலாம். இந்த வகையான அவசர நிலையில் நடுவண்-மாநில அரசு ஊழியர் எந்த வகுப்பினராயினும் அவர்களது ஊதியம், படிகள் மற்றும் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் உட்பட அனைவரது ஊதியமும் குடியரசுத்தலைவரின் ஓர் ஆணையின் மூலம் குறைக்கப்படும். இந்த வகையான அவசரநிலை இந்தியாவில் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்
அரசியலமைப்பின் சட்டம் பகுதி XXல் 368வது சட்டப்பிரிவு, அரசியலமைப்பினை சட்ட திருத்தம் செய்வதில் பின்பற்றப்படும் முறைகள் மற்றும் திருத்தம் செய்வதில் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் பற்றி தெரிவிக்கிறது.
அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் செய்வதில் பின்பற்றப்படும் வழிமுறைகள்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், அரசியலமைப்புச் சட்டத்திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட வேண்டும். நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அவையிலும், அவையின் ஒட்டுமொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் மற்றும் அவைக்கு வந்து, வாக்களித்தவர்களில் 3 ல் 2 பங்குக்கு குறையாமல் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தால் மட்டுமே, குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட வேண்டும். குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்தபின் மசோதா திருத்தப்பட்டச் சொற்களுடன் அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்படும்.
நாடாளுமன்றத்தால் மட்டுமே அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவரமுடியும். மாநில சட்ட மன்றத்தால் அரசியலமைப்பில் எந்தவொரு சட்டத்திருத்தத்தையும் கொண்டுவர முடியாது.
அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் வகைகள்
மூன்று வகைகளில் அரசியலமைப்பின் 368வது சட்டப்பிரிவு அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்களைச் செய்ய வழிவகுக்கிறது.
1. நாடாளுமன்றத்தின் சாதாரண அறுதிப் பெரும்பான்மை மூலம் திருத்தப்படுதல்.
2. நாடாளுமன்றத்தின் சிறப்பு அறுதிப் பெரும்பான்மை மூலம் திருத்தப்படுதல்.
3. நாடாளுமன்றத்தின் சிறப்பு அறுதிப் பெரும்பான்மையுடன் பாதிக்கும் மேற்பட்ட மாநில சட்டமன்றங்களின் ஒப்புதலைப் பெறுவதன் மூலம் திருத்தப்படுதல்.
அரசியலமைப்பின் 42வது சட்டத்திருத்தம் ‘சிறு அரசியலமைப்பு’ என அறியப்படுகிறது.
மதச்சார்பின்மை
மதச்சார்பின்மை கோட்பாட்டினை பின்பற்றாத அரசு மதச்சார்பு அரசு எனப்படும். மத சார்பு அரசு என்பது ஒரு மதத்தினை அரசு மதமாகக் கொண்டிருக்கும். அந்த அரசின் உயர் பதவிகள் அனைத்தும் அரசு மதத்தை பின்பற்றுவோருக்கு மட்டும் ஒதுக்கப்பட்டிருக்கும். மதச்சார்பு அரசு உதாரணங்கள் பாகிஸ்தான், வாடிகன் நகரம் போன்றவை ஆகும்.
பொதுவாக்கெடுப்பு
சட்டமன்றங்களில் மக்கள் பிரதிநிதிகளால் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படுவதற்கு மாறாக ஒன்று அல்லது பல கேள்விகளின் தொகுப்பின் மீது வாக்காளர்களின் ஒப்புதல்பெற நேரடி வாக்கெடுப்பு நடத்துவது பொதுவாக்கெடுப்பு ஆகும்.
பொதுவாக்கெடுப்பு முறை ஒரு சட்டப்பூர்வ ஏற்பாடகவும், தனிநபருக்கும், பொதுமக்களுக்கும் அளிக்கும் அங்கீகாரமாகவும், ஒப்புதலாகவும் பார்க்கப்படுகிறது.
இந்திய அரசமைப்பு திருத்தங்களில் ஒன்றிற்குக்கூட இதுவரை பொதுவாக்கெடுப்பு விடப்பட்டதில்லை. இந்திய மக்களாட்சி முறையில் இது ஒரு பின்னடைவாகும். இதன் பொருத்தப்பாட்டினை அறிய சுவிட்சர்லாந்து நாட்டின் பொது வாக்கெடுப்புமுறையை அறிந்துகொள்வது பயனுள்ளதாக அமையும்.
இந்தியாவில் மதச்சார்பின்மை
இந்திய அரசமைப்பின் 42வது திருத்தச்சட்டம், அரசமைப்பின் முகப்புரையில் கூறப்பட்டுள்ள ‘இறையாண்மை கொண்ட குடியரசு என்பதை ‘இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பற்ற மக்களாட்சி குடியரசு என்றும் ‘நாட்டின் ஒற்றுமை’ என்ற சொற்றொடரை ‘நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு‘ என்றும் முந்நாள் பிரதமர் இந்திராகாந்தி 1976இல் தேசிய அவசரநிலைக் காலத்தில் இந்த 42-வது திருத்தத்தைக் கொண்டு வந்தார்.