Blog

இந்திய தேசிய காங்கிரஸ்‌

Class 59 இந்தியாவின்‌ வரலாறு, பண்பாடு மற்றும்‌ இந்திய தேசிய இயக்கம்‌

இந்திய தேசிய காங்கிரஸ்‌

இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவப்படுதல் (1870–1885)

தேசியத்தின் எழுச்சி 19ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் ஆங்கிலக் கல்வி பெற்ற இந்தியர்களின் புதிய சமூக வகுப்பினர் மத்தியில் தேசிய அரசியல் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது. பல்வேறு பிரச்சாரங்கள் மூலமாக தேசம், தேசியம் மற்றும் பல்வேறு மக்களாட்சியின் உயர்ந்த இலட்சியங்கள் பற்றிய கருத்துக்களை அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முக்கிய பணியை இந்திய அறிவாளர்கள் மேற்கொண்டனர். வட்டார மொழி மற்றும் ஆங்கில அச்சு ஊடகங்களின் வளர்ச்சி இது போன்ற கருத்துகளைப் பரப்புவதில் முக்கியப் பங்காற்றியது. எண்ணிக்கையில் அவர்கள் குறைவாக இருந்தாலும் தேசிய அளவிலான வீச்சைக் கொண்டு அகில இந்தியா முழுதும் தொடர்புகளை உருவாக்கும் திறன் பெற்றிருந்தனர். அவர்கள் வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அல்லது மருத்துவர்களாக பணியாற்றினார்கள். சென்னைவாசிகள் சங்கம் (1852), கிழக்கிந்திய அமைப்பு (1866), சென்னை மகாஜன சபை (1884), பூனா சர்வஜனிக் சபை (1870), பம்பாய் மாகாண சங்கம் (1885) மற்றும் பல அரசியல் அமைப்புகளைத் தொடங்குவதில் அவர்கள் முனைப்பு காட்டினார்கள்.

காலனி ஆட்சிபற்றிய பொருளாதார விமர்சனம்

காலனி ஆட்சி பற்றிய பொருளாதார விமர்சனத்தை உருவாக்குவதே தொடக்ககால இந்திய தேசியவாதிகளின் பங்களிப்புகளில் முக்கியமான ஒன்றாக இருந்தது. தாதாபாய் நௌரோஜி, நீதிபதி ரானடே மற்றும் ரொமேஷ் சந்திர தத் ஆகியோர் காலனி ஆட்சியின் பொருளாதாரம் பற்றிய இந்த விமர்சனத்தைச்செய்வதில் முக்கியப் பங்காற்றினார்கள்.

காலனிய ஆட்சிக்கு எதிராகக் குறைகளையும் பிரச்சனைகளையும் எழுப்பும் ஒரு அரசியல்சார் அமைப்பை நிறுவும் சிந்தனை வெற்றிடத்திலிருந்து உருவானதல்ல.

1875க்கும் 1885க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் ஆங்கிலேயரின் கொள்கைகளுக்கு எதிராகப் பல போராட்டங்கள் நடைபெற்றன.

1875இல் இறக்குமதியாகும் பருத்தி இழைத்துணிகளின் மீது இறக்குமதிவரிவிதிக்கப்பட வேண்டுமென ஜவுளி ஆலை உரிமையாளர்கள் இயக்கம் நடத்தினர். 1877இல் அரசுப் பணிகள் இந்திய மயமாக்கப்பட வேண்டுமென்றக் கோரிக்கை ஓங்கி ஒலித்தது.

1878ஆம் ஆண்டு வட்டார மொழிப் பத்திரிகைச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன.

இல்பர்ட் மசோதாவிற்கு ஆதரவாக 1883இல் கிளர்ச்சிகள் நடைபெற்றன.

ஆனால் இப்போராட்டங்களும் கிளர்ச்சிகளும் ஒருங்கிணைக்கப்படாமல் அங்கொன்றும் இங்கென்றுமாகவே நடைபெற்றன. தேசிய அளவிலான ஒரு அரசியல்சார் அமைப்பு உருவாக்கப்படாத நிலையில் இத்தகையப் போராட்டங்கள், கொள்கைகளை வடிவமைப்போர் மீது தாக்கத்தை ஏற்படுத்தாது என்பது ஆழமாக உணரப்பட்டது. இவ்வுணர்தலில் இருந்து உதயமானதே இந்திய தேசிய காங்கிரஸ். இந்தியா ஒரே நாடு எனும் கருத்து அவ்வமைப்பின் பெயரில் பிரதிபலித்தது. இவ்வமைப்பு தேசியவாதம் எனும் கருத்தையும் அறிமுகம் செய்தது.

குறிக்கோள்கள் மற்றும் வழிமுறைகள்

ஆலன் ஆக்டேவியன் ஹியூம் (A.O. Hume) எனும் பணி நிறைவு பெற்ற இந்தியக் குடிமைப் பணி (Indian Civil Service -ICS) அதிகாரி டிசம்பர் 1884இல், சென்னையில் பிரம்ம ஞான சபையின் கூட்டமொன்றிற்குத் தலைமை ஏற்றிருந்தார். இக்கூட்டத்தில் அகில இந்திய அளவில் செயல்படும் ஒரு அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பாக விவாதிக்கப்படுகையில் இந்திய தேசிய காங்கிரசை உருவாக்குவது எனும் கருத்து உருவானது.

இந்திய தேசிய காங்கிரஸ் 1885 டிசம்பர் 28இல் பம்பாயில் உருவாக்கப்பட்டது. A.O. ஹூயூம் தவிர இவ்வமைப்பை உருவாக்கிய முக்கிய உறுப்பினரான W.C. பானர்ஜி இவ்வமைப்பின் முதல் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

கோரிக்கைமனுகொடுப்பது, விண்ணப்பங்கள் அனுப்புவது போன்ற செயல்பாடுகளை மட்டுமே காங்கிரஸ் மேற்கொண்ட போதும், தொடக்கத்திலிருந்தே சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் தனது வரம்புக்குள் கொண்டுவரும் பணிகளை மேற்கொண்டது. இந்தியாவை ஒரே நாடாக ஒருங்கிணைப்பதே இந்திய தேசிய காங்கிரசின் இன்றியமையா நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. இந்தியர்கள் தாங்கள் அனைவரும் ஒரு நாட்டின் குடிமக்கள் என உணர்ந்தால் மட்டுமே காலனியாட்சிக்கு எதிரானப் போராட்டங்கள் வெற்றி பெறுமென்பதை அவர்கள் நன்குணர்ந்தனர். இம்முயற்சியில் வெற்றி பெறும் பொருட்டு நாட்டின் பல பகுதிகளிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இயக்கங்களின் பொது அரசியல் மேடையாகக் காங்கிரஸ் செயல்பட்டது.

இவ்வமைப்பு நூற்றுக்கும் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட சிறிய அமைப்பாக இருந்தபோதிலும் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளின் பிரதிநிதித்துவத்துடன் அகில இந்தியப் பண்பைப் பெற்றிருந்தது. இதுவே அகில இந்திய அளவில் மக்களைத் திரட்டும் தொடக்கமாய் ஆனது.

இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய நோக்கங்களும் கோரிக்கைகளும்:

அரசியல் அமைப்பு

அரசாங்கத்தில் பங்கேற்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென்பது இந்திய தேசிய காங்கிரசின் முக்கியக் கோரிக்கையாகும். அரசில் இந்தியப் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டுமெனக் காங்கிரஸ் கோரியது.

பொருளாதாரம்

விவசாயிகளின் துன்பநிலைக்கான முக்கியக் காரணங்களில் ஒன்று அதிக நிலவரியாகும். நிலவரி குறைக்கப்பட வேண்டுமெனவும் ஜமீன்தார்களின் சுரண்டலிலிருந்து விவசாயிகள் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் காங்கிரஸ் கோரியது. சுதேசிப் பொருட்களுக்கு நன்மை அளிக்கும் விதத்தில் இறக்குமதி செய்யப்படும் பண்டங்களின் மீது அதிகவரி விதிக்கும்படி காங்கிரஸ் பரிந்துரை செய்தது.

நிர்வாகம்

இந்திய நிர்வாகத்திற்குப் பொறுப்பு வகிக்கும் உயர்நிலை அதிகாரிகள் இங்கிலாந்தில் நடத்தப்படும் குடிமைப்பணித் தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இதன் பொருள் தகுதியுடைய கற்றறிந்த இந்தியர்கள் லண்டனுக்குச் செல்லும் வசதியில்லாவிட்டால் நிர்வாகப்பதவிகளில் அமரும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லை என்பதுதான். எனவே, இந்தியக் குடிமைப்பணித் தேர்வுகளை இங்கிலாந்திலும் இந்தியாவிலும் ஒரே நேரத்தில் நடத்துவதன் மூலம் நிர்வாகப் பணிகளை இந்தியமயமாக்குவது காங்கிரசின் முக்கியக் கோரிக்கையாகும்.

நீதித்துறை

ஆங்கிலேய நீதிபதிகள் இந்திய அரசியல் செயல்பாட்டாளர்களிடம் ஒரு தலைபட்சமாக நடந்து கொள்வதால் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் நிர்வாகமும் நீதி நிர்வாகமும் தனித்தனியே முற்றிலுமாகப் பிரிக்கப்பட வேண்டுமெனக் காங்கிரஸ் கோரிக்கை வைத்தது.

  • மாகாண மற்றும் மத்தியஅளவில் சட்டமேலவைகளை உருவாக்குவது.
  • சட்டமேலவைகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது.
  • நிர்வாகத்துறையிலிருந்து நீதித்துறையைப் பிரிப்பது.
  • இராணுவச்செலவுகளைக் குறைப்பது.
  • உள்நாட்டு வரிகளைக் குறைப்பது.
  • நீதிபதி மூலமாக விசாரணையை விரிவுசெய்வது.
  • ஒரே நேரத்தில் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் ஆட்சிப்பணித் தேர்வுகளை நடத்துவது.
  • காவல்துறை சீர்திருத்தங்கள்.
  • வனச்சட்டத்தை மறுபரிசீலனை செய்தல்.
  • இந்தியத் தொழிற்சாலைகளின் மேம்பாடு மற்றும் முறையற்ற கட்டணங்கள் மற்றும் கலால் வரிகளை முடிவுக்குக் கொண்டுவருவது.

 

தொடக்ககால தேசியவாதிகளின் பங்களிப்பு (1885-1915)

இந்திய தேசிய காங்கிரசை சேர்ந்த தொடக்க காலத் தலைவர்கள் சமூகத்தின் உயர்குடிப் பிரிவைச் சேர்ந்தோர் ஆவர். வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், கல்லூரி, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் போன்றோர் காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்தினர்.

காங்கிரசின் இத்தலைவர்கள் அரசியல் சட்டம் அனுமதித்த வழிகளான மனுகொடுப்பது, மன்றாடுவது, விண்ணப்பம் செய்வது போன்ற முறைகளை மேற்கொண்டதால் “மிதவாத தேசியவாதிகள்” என்னும் புனைப் பெயரைப் பெற்றனர்.

1890களின் பிற்பகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசுக்குள்ளே கருத்து வேற்றுமைகள் வளர்ந்தன.

பிபின் சந்திரபால், பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்ற தலைவர்கள் வெறுமனே மனுக்கள் எழுதுவது, மன்றாடிக் கேட்டுக் கொள்வது, விண்ணப்பம் செய்வது போன்ற அணுகுமுறைகளுக்கு மாற்றாகத் தீவிரமான அணுகுமுறைகளைப் பரிந்துரைத்தனர்.

இத்தன்மையுடையோர் மிதவாத தேசியவாதிகளுக்கு நேரெதிராக “தீவிர தேசியவாதிகள்” என்றழைக்கப்பட்டனர்.

1897இல் திலகர் “சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்” என முழங்கிய போது அவர்களின் நோக்கம் தெளிவாகத் தெரிந்தது.

திலகரும் தீவிரப்போக்குடைய அவருடையத் தொண்டர்களும் சுயராஜ்ஜியத்தைக் கோரினர்.

1905இல் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கம் ஆங்கிலேய ஆட்சியை நேரடியாக எதிர்த்ததோடு, சுதேசித் தொழில்கள், தேசியக்கல்வி, சுயஉதவி இந்திய மொழிகளைப் பயன்படுத்துதல் ஆகிய கருத்துகளை ஊக்குவித்தது.

தீவிர தேசியவாதிகள் முன்வைத்த பெருமளவிலான மக்களைத் திரட்டுவது, ஆங்கிலப் பொருட்களையும் நிறுவனங்களையும் புறக்கணிப்பது ஆகிய போராட்ட முறைகள் மிதவாத தேசியவாதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மிதவாத தேசியவாதிகள், தீவிர தேசியவாதிகள் ஆகிய இருதரப்பினரும் அவர்கள் வழிகாட்டிகளாகப் பொறுப்பு வகித்து, அப்பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியத் தேவையுள்ளது எனும் உண்மையை ஏற்றுக் கொள்வதில் ஒரே கருத்தையேக் கொண்டிருந்தனர்.

பத்திரிகைகள் முதலானப் பல்வேறு வழிகளில் தேசிய உணர்வைப் புகட்டும் முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டனர். 1885இல் இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டபோது அதன் உறுப்பினர்களின் மூன்றில் ஒரு பகுதியினர் பத்திரிகையாளர்களாக இருந்தனர்.

விடுதலை தொடக்ககால இயக்கத்தின் வல்லமைமிக்கத் தலைவர்களில் பெரும்பாலோர் பத்திரிகைகளில் எழுதுவதில் ஈடுபட்டிருந்தனர்.

தாதாபாய் நௌரோஜி இந்தியாவின் குரல் சுரேந்திரநாத் பானர்ஜி (Voice of India), ராஸ்த் கோப்தார் (Rast Goftar) எனும் இரு பத்திரிகைகளைத் தொடங்கி அவற்றின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

சுரேந்திரநாத் பானர்ஜி பெங்காலி (Bengalee) என்னும் செய்திப்பத்திரிகையின் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

பாலகங்காதர திலகர் கேசரி, மராட்டா ஆகியப் பத்திரிகைகளின் ஆசிரியராகத் திகழ்ந்தார்.

இவ்வழி முறைகளைப் பயன்படுத்தியே அவர்கள் காலனிய அடக்குமுறை குறித்து மக்களுக்கு கற்பித்துத் தேசியக் கருத்துகளையும் பரப்பினர்.

இந்திய தேசிய காங்கிரஸ் மேற்கொண்ட முயற்சிகள் பற்றிய செய்திகளை இப்பத்திரிகைகளே மக்களுக்கு எடுத்துச் சென்றன.

இந்திய வரலாற்றில் முதன் முறையாக காலனிய அரசின் அடக்குமுறை கொள்கைகளுக்கும் சட்டங்களுக்கும் எதிராகப் பொதுமக்கள் கருத்தை உருவாக்குவதில் பத்திரிகைகள் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டன.

தேசிய இயக்கத்தில் மத்தியதர வகுப்பினரும் விவசாயிகளும், கைவினைஞர்களும் தொழிலாளர்களும் மிக முக்கியமான பங்கினை வகிக்க முடியுமென பால கங்காதர திலகர் உறுதியாக நம்பினார். காலனிய அரசின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக இம்மக்கள் பிரிவினரிடையே மன நிறைவின்மையைப் பரப்புவதற்கு அவர் பத்திரிகைகளைப் பயன்படுத்தினார். இந்தியாவில் ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக நாடுதழுவிய எதிர்ப்புக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

1897 ஜூலை 27இல் திலகர் கைது செய்யப்பட்டு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124A யின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார். திலகர் காங்கிரசில் தீவிர தேசியவாதிகள் பிரிவைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும் மிதவாத தேசியவாதிகள், தீவிர தேசியவாதிகள் ஆகிய இரு பிரிவினரும் ஒருங்கிணைந்து அவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்தனர். கருத்துச் சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம் ஆகிய இரு உரிமைகளும் இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கியக் கூறுகளாய் விளங்கின.

நௌரோஜியும் அவர் முன்வைத்த சுரண்டல் கோட்பாடும்

‘இந்திய தேசியத்தின் முதுபெரும் மனிதர்’ என அறியப்படும் தாதாபாய் நௌரோஜி தொடக்ககால தேசிய இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவராவார். 1870களில் பம்பாய் மாநகராட்சிக் கழகத்திற்கும், நகரசபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1892இல் இங்கிலாந்துப் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவர் லண்டனில் இந்திய சங்கம் (Indian Society – 1865), கிழக்கிந்தியக் கழகம் (East Indian Association 1866) எனும் அமைப்புகளை உருவாக்கினார். அவர் மூன்று முறை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் எழுதிய ‘இந்தியாவில் வறுமையும் பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும்’ (Poverty and Un- British Rule in India – 1901) எனும் புத்தகமே இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அவர் செய்த முக்கியப் பங்களிப்பாகும். இந்நூலில் அவர் செல்வச் சுரண்டல்” எனும் கோட்பாட்டை முன் வைத்தார்.

எந்த நாடாக இருந்தாலும் வசூலிக்கப்பட்ட வரியை அந்நாட்டு மக்களின் நல்வாழ்விற்காகவே செலவழிக்க வேண்டும். ஆனால் பிரிட்டிஷ் இந்தியாவில் ஆங்கிலேயர் வசூலிக்கும் வரி இங்கிலாந்தின் நலனுக்காகச் செலவு செய்யப்படுகிறது எனக் கூறினார்.

1835 முதல் 1872 முடிய ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 13 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடையப் பொருட்கள் இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் ஆனால் அந்த அளவிற்கானப் பணம் இந்தியா வந்து சேரவில்லை எனவும் கூறினார்.

லண்டனில் வாழும் கம்பெனியின் பங்குதாரர்களுக்கு லாபத்தில் வழங்கப்பட வேண்டிய பங்கு, இருப்புப்பாதைத் துறையில் (Railways) முதலீடு செய்தவர்களுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டவாறு தரப்பட வேண்டிய வட்டி, பணி நிறைவு பெற்றுவிட்ட அதிகாரிகளுக்கும் தளபதிகளுக்கும் வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியம் இந்தியாவிலும் இந்தியாவிற்கு வெளியிலும் நாடுகளைக் கைப்பற்ற மேற்கொள்ளப்பட்டப் போர்களுக்காக இங்கிலாந்திடமிருந்து பெற்ற கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டி ஆகிய இவையனைத்துக்கும் பதிலாகவே அப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாக அவர் வாதாடினார். இவையனைத்தும் தாயகக் கட்டணம் (Home Charges) எனும் பெயரில் ஆண்டொன்றுக்கு 30 மில்லியன் பவுண்டுகள் நஷ்டம் ஏற்படுத்துவதாக நௌரோஜி உறுதிபடக் கூறினார்.

சுதேசி இயக்கம் மக்களிடையே பெரும் ஆதரவைப்பெற்ற நிலையில், தேசிய இயக்க நடவடிக்கைகளை, அவை  எத்தகையதாக இருந்தாலும் அவற்றை நசுக்கும் பொருட்டு ஆங்கில அரசு, பொதுக்கூட்டங்கள் சட்டம் (1907), வெடி மருந்துச் சட்டம் (1908), செய்தித்தாள் சட்டம், தூண்டுதல் குற்றச் சட்டம்(1908),இந்தியப்பத்திரிகைச்சட்டம்(1910)எனபல அடக்குமுறைச் சட்டங்களை வரிசையாய் இயற்றியது. பொதுக்கூட்டங்களைக் கண்காணிப்பதும், பதிவு செய்வதும் அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாகும். (பேச்சுகளைப் பதிவு செய்வதற்காக முதன்முறையாக காவல் துறையினர் சுருக்கெழுத்து முறையைப் பயன்படுத்தினர்).

வங்கப் பிரிவினை(1905)

1899 ஜனவரி 6இல் புதிய தலைமை ஆளுநராகவும் இந்தியாவின் அரசப் பிரதிநிதியாகவும் கர்சன் பிரபு பணி நியமனம் செய்யப்பட்டார்.

தொடர்ந்து ஏற்பட்டப் பஞ்சங்கள், பிளேக் நோய் ஆகியவை ஏற்படுத்தியத் தாக்கத்தின் விளைவாய் ஆங்கிலேயரின் செல்வாக்கு குறைந்து கொண்டிருந்த காலமது. கற்றறிந்த இந்திய மக்கள் பிரிவினரின் கருத்துகளை மாற்றுவதற்கு கர்சன் சிறியளவிலான முயற்சிகளை மேற்கொண்டார்.

கற்றறிந்த தேசியவாத அறிஞர்களோடு ஈடுபாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்கு மாறாக அவர் வரிசையாகப் பல அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

எடுத்துக்காட்டாக கல்கத்தா மாநகராட்சிக் குழுவில் அங்கம் வகித்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்தார் (1899).

1904இல் இயற்றப்பட்டப் பல்கலைக்கழகச் சட்டத்தின்படி கல்கத்தா பல்கலைக்கழகம் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் வைக்கப்பட்டது.

இந்தியச் செய்திப் பத்திரிகைகளின் தேசியவாதத் தன்மையைக் குறைப்பதற்காக அலுவலக ரகசியச் சட்டத்தில் (1904) திருத்தம் கொண்டுவரப்பட்டது.

இறுதியாக வங்காளத்தைப் பிரிக்க 1905இல் ஆணை பிறப்பித்தார். இப்பிரிவினை இந்தியா முழுவதும் பரவலான எதிர்ப்புக்கு இட்டுச் சென்று இந்திய தேசிய இயக்கத்தில் ஒரு புதிய கட்டத்தைத் தொடங்கி வைத்தது.

ஒரு நிர்வாகப் பிரிவு எனும் பொருளில் வங்காள மாகாணம் உண்மையிலேயே மேலாண்மை செய்ய இயலாத வகையில் வடிவத்தில் பெரிதாக இருந்தது. பிரிக்கப்பட வேண்டியதின் அவசியம் தொடர்பாக 1860ஆம் ஆண்டு முதலாக விவாதங்கள் நடைபெற்று வந்தன. மார்ச் 1890இல் பிரிவினைக்கானத் திட்டத்திற்குப் புத்துயிர் அளிக்கப்பட்டது.

கர்சன் அசாம் சென்றிருந்த போது ஐரோப்பியப் பெரும் பண்ணையார்கள் அவரிடம் ஒரு வேண்டுகோள் வைத்தனர். கல்கத்தாவிற்கு அருகே தங்களுக்கு ஒரு கடல் வழியை ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்கள் அசாம் பெங்கால் இருப்புப்பாதையைச் சார்ந்திருப்பதை ஓரளவு தவிர்த்துக் கொள்ள முடியும் என வேண்டினர்.

இதனைத் தொடர்ந்து டிசம்பர் 1903இல் தன்னுடைய இந்தியாவின் பிரதேச மறுவிநியோகம் தொடர்பான குறிப்புகளில் ஒரு திட்டத்தை கர்சன் தீட்டியிருந்தார். அதுவே பின்னர் திருத்தம் செய்யப்பட்டு ரிஸ்லி அறிக்கை (Risely Papers) என்ற பெயரில் வெளியிடப்பட்டது.

இவ்வறிக்கை பிரிவினைக்கு ஆதரவாக இரண்டு காரணங்களை முன்வைத்தது. அவை: வங்காளத்திற்கு சுமை குறைவு, அசாமின் முன்னேற்றம் ஆகியனவாகும். எப்படியிருந்தபோதிலும் இத்திட்டம் எவ்வாறு ஆங்கிலேய அதிகாரிகளின், ஐரோப்பிய வணிகர்களின் வசதிக்கேற்றவாறு உண்மையிலே தீட்டப்பட்டது என்பது பற்றிய செய்திகள் மறைக்கப்பட்டன.

தொடக்கத்தில் வங்காளத்தின் சில பகுதிகளை மாற்றுவது அல்லது ஏனைய பகுதிகளை மாற்றியமைப்பது என்றிருந்த எண்ணம் டிசம்பர் 1903 முதல் 1905க்குள் பிரிவினைக்கான முழுத்திட்டமாக மாற்றப்பட்டது. வங்காளம் இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட வேண்டும். புதிய கிழக்கு வங்காளமும் அசாமும் சிட்டகாங், டாக்கா, திப்பேராவிலுள்ள ராஜஷாகி மலையின் சில பகுதிகள், அசாம் மாகாணம் மற்றும் மால்டா ஆகியவற்றை உள்ளடக்கியதாய் இருக்கும்.

1905ஆம் ஆண்டின் வங்கப் பிரிவினை மிகவும் அதிருப்தியை ஏற்படுத்திய நிகழ்வாகும். இந்தியா முழுவதும் விரிவான போராட்டங்கள் பரவ இந்தப் பிரிவினை வழிவகுத்ததன் மூலம் இந்திய தேசிய இயக்கத்துக்கு புதிய அத்தியாயத்தை உருவாக்கியது.

இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே பிளவை உருவாக்கி வங்காளத்தில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடந்த அரசியல் அடக்க நடவடிக்கைகளை வங்கப்பிரிவினை வகுக்கப்பட்டது.

இந்து-முஸ்லிம் பிரிவினை

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வங்காளத்தில் நடைபெறும் அரசியல் நடவடிக்கைகளை அடக்கி இந்து – முஸ்லிம் மக்களிடையே பிரிவினையை உருவாக்குவது என்பதே கர்சனுடைய நோக்கமாகும். குடிமைப் பணியாளர்கள் முன்வைத்த மாற்றுத் திட்டங்களைக் குறிப்பாக, வங்காளத்தை மொழி அடிப்படையில் பிரிப்பது எனும் கருத்து வேண்டுமென்றே புறந்தள்ளப்பட்டது. இத்திட்டம் வங்காள அரசியல்வாதிகளை மேன்மேலும் ஒருங்கிணைத்துவிடும் என்பதால் கர்சன் இத்திட்டத்தை ஏற்க மறுத்தார். கர்சன் பிடிவாதமாக, பிரிக்கப்பட்ட வங்காளம் தெளிவாகத் தனித்தனியாய் பிரிக்கப்பட்ட இந்து முஸ்லிம் மக்களைக் கொண்டிருக்க வேண்டுமென விரும்பினார்.

புவியியல் அடிப்படையில் பாகீரதி ஆறு இயற்கையாகவே வங்காளத்தைப் பிரிப்பதாக அமைந்திருந்தது. தனக்கு முன்னர் பணியாற்றியவர்களைப் போலவே கர்சனும் இதனை அறிந்திருந்தார். கிழக்கு வங்காளத்தில் முஸ்லிம்கள் அதிகம் இருந்தனர். மேற்கு வங்காளத்தில் இந்துக்கள் பெரும்பான்மையினராக இருந்தனர். மத்திய வங்கத்தில் இரு சமூகத்தினரும் சமஅளவில் வாழ்ந்து வந்தனர். முஸ்லிம் மக்களின் நன்மதிப்பைப்பெறும் உள்நோக்கத்தோடுஅவர்களை நயந்து செல்லும் போக்கை ஆங்கில நிர்வாகம் கடைபிடித்தது. முந்தைய முஸ்லிம் ஆட்சி முதலாக முஸ்லிம் மக்கள் ஒருபோதும் அனுபவித்திராத ஓர் ஒற்றுமையைப் புதிய மாகாணமான கிழக்கு வங்காளத்தில் அனுபவிப்பார்கள் என பிப்ரவரி 1904இல் டாக்காவில் கர்சன், முஸ்லிம்களுக்கு உறுதியளித்தார்.

வங்கப் பிரிவினை வங்காள மக்களை மதத்தின் அடிப்படையில் பிரிப்பதற்குப் பதிலாக அவர்களை ஒன்றுபடுத்தியது. இனம், வர்க்கம், சமயம், வட்டாரம் ஆகியத் தடைகளைத் தாண்டி மக்களிடையே வளர்ந்து கொண்டிருந்த வங்காளிகள் எனும் அடையாளத்தை ஆங்கில நிர்வாகம் ஒருவேளை குறைத்து மதிப்பிட்டிருக்கலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சமூகத்தின் பெரும்பகுதியினரிடையே வங்காள ஒற்றுமை எனும் வலுவான எண்ணம் வளர்ந்துவிட்டது.

ரவீந்திரநாத்தாகூரை மையமாகக் கொண்டு வங்க மொழி இலக்கிய மதிப்பைப் பெற்றுவிட்டது. வட்டாரமொழிப் பத்திரிகைகளின் வளர்ச்சி ஒற்றுமை தொடர்பான கதை வடிவிலான விவரிப்புகளைக் கட்டமைப்பதில் பங்காற்றியது. இதைப்போலவே மீண்டும் மீண்டும் தோன்றிய பஞ்சங்கள், வேலையின்மை, பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட சறுக்கல் ஆகியவை காலனிய எதிர்ப்பு உணர்வுகளைத் தோற்றுவித்தன.

வங்காளிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி இயக்கத்தை தேசியவாத வலுவிழக்கச் செய்வதே வங்கப் பிரிவினைக்கான நோக்கம் என்று வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டது. வங்காளத்தைப் இரண்டு நிர்வாகப் பிரிவுகளின் கீழ் பிரித்து வைத்ததன் மூலம் வங்காள மொழி பேசும் மக்களை ஒரு மொழிசிறுபான்மையினர் என்ற தகுதிக்கு கர்சன் பிரபு குறைத்துவிட்டார்.

பிரிவினைக்கு எதிரான இயக்கம்

டிசம்பர் 1903இல் வங்கப்பிரிவினை அறிவிக்கப்பட்டதில் இருந்தே தீவிர தேசியவாதிகள், மிதவாத தேசியவாதிகள் ஆகிய இருதரப்பினரும் விமர்சனம் செய்தனர். ஆனால் சுரேந்திரநாத் பானர்ஜி, K.K.மித்ரா, பிரித்விஸ் சந்திர ரே போன்றவர்களின் எதிர்வினையானது வேண்டுகோள் விடுப்பது மனுச்செய்வது என்ற அளவோடு சுருங்கிப் போனது. எப்படியிருந்தபோதிலும், பரவலான எதிர்ப்புகளுக்கிடையே 1905 ஜூலை 19இல் வங்கப் பிரிவினை அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

வங்கப் பிரிவினையைத் தடுப்பதில் ஏற்பட்ட தோல்வி, பிபின் சந்திர பால், அஸ்வினி குமார் தத்தா, அரவிந்தகோஷ் போன்ற தலைவர்கள் கொடுத்த அழுத்தம் ஆகியவற்றால் மிதவாத தேசியவாதிகள் தங்கள் உத்திகள் குறித்து மறுபரிசீலனை செய்து புதிய எதிர்ப்பு முறைகளைக் கண்டறிய வற்புறுத்தப்பட்டனர். அவைகளுள் ஒன்றுதான் ஆங்கிலப் பொருட்களைப் புறக்கணிப்பது.

நீண்ட விவாதத்திற்குப் பின்னர் இந்திய தேசிய காங்கிரசின் மிதவாத தேசியத் தலைமை இதனை ஏற்றுக் கொண்டது. முதன்முறையாக மிதவாத தேசியவாதிகள் தங்களின் மரபு சார்ந்த அரசியல் முறைகளை மீறினர். 1905 ஜூலை 17இல் கல்கத்தாவில் நடைபெற்ற கூட்டமொன்றில் எதிர்ப்பை மக்களிடையே விரிவுபடுத்துவது என்று முடிவுசெய்யப்பட்டது. அதே கூட்டத்தில் ஆங்கிலப்பொருட்களையும் நிறுவனங்களையும் புறக்கணிக்க சுரேந்திரநாத் அரவிந்த கோஷ் பானர்ஜி அறைகூவல் விடுத்தார். ஆகஸ்டு 7இல் கல்கத்தா நகர அரங்கில் (Town Hall) நடைபெற்ற மற்றொரு கூட்டத்தில் சுதேசி இயக்கம் முறையாகப் பிரகடனம் செய்யப்பட்டது.

இருந்தபோதிலும் சுதேசி இயக்கத்தின் நிகழ்ச்சி நிரலானது வங்கப்பிரிவினையை ரத்து செய்யப் போதுமானஅளவிற்கு கட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தது. மேலும் மிதவாத தேசியவாதிகள், இவ்வியக்கத்தைப் பயன்படுத்தி முழு அளவிலான அமைதி வழியில் எதிர்ப்பைத் தொடங்குவதற்கு முற்றிலும் எதிராக இருந்தனர். ஆனால் தீவிர தேசியவாதிகள் இவ்வியக்கம் ஏனைய மாகாணங்களுக்கு விரிவுபடுத்தப்படவும் முழு அளவிலான வெகுஜன இயக்கத்தைத் துவங்குவதற்கும் ஆதரவாக இருந்தனர்.

இயக்கத்தின் பரவல்

திட்டமிடப்பட்ட தலைவர்களின் முயற்சிகளுக்கும் மேலாக வங்கப்பிரிவினைக்கு எதிராகத் தன்னெழுச்சியான எதிர்ப்புகள் ஏற்பட்டன. குறிப்பாக மாணவர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

பிரிவினைக்கு எதிரானப் போராட்டத்தில் மாணவர்களின் பங்கேற்பு அதிகம். இதன் எதிர்வினையாக ஆங்கில அதிகாரிகள் நேரடி நடவடிக்கை நிகழ்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் மானியங்களும் நிறுத்தப்படும் எனப் பயமுறுத்தினர். இதற்கு எதிர்வினையாக தேசிய கல்வி நிறுவனங்களை, பள்ளிகளை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதெனவும் முடிவு செய்யப்பட்டது. வங்காளம் முழுமையிலும் நகரங்களிலும் கிராமங்களிலும் ஆயிரக்கணக்கில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பெற்றன.

மத விழாக்களான துர்காபூஜை போன்றவற்றை புறக்கணிப்புப் பற்றிய வேண்டுகோள் விடுப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டன. அதிகாரபூர்வமாக வங்காளம் பிரிக்கப்பட்ட நாளான 1905 அக்டோபர் 16 துக்கதினமாக கடைபிடிக்கப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கில் மக்கள் கங்கையில் நீராடி வந்தே மாதரம் பாடலைப் பாடிக்கொண்டு வீதிகளில் ஊர்வலமாகச் சென்றனர்.

புறக்கணித்தலும், வங்காளத்தில் சுதேசி இயக்கம் (1905-1911)

திட்டமிடப்பட்ட, தன்னெழுச்சியான போராட்ட முயற்சிகள், ஆங்கிலேயருக்கு எதிரான ஒரு நீண்டகாலப் போராட்டத்திற்கு அடித்தளம் அமைத்தன. புறக்கணிப்பும் சுதேசியமும் எப்போதும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டதாகவும் இந்தியாவைத் தன்னிறைவு பெற்ற நாடாக ஆக்குவதும் இவ்விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

சென்னையைச் சேர்ந்த தேசியவாதியான G. சுப்பிரமணியம் சுதேசி இயக்கத்தின் குறிக்கோள் குறித்து “தேசிய வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் தங்களின் சார்பு நிலைக்கு எதிரான புரட்சி” எனச் சுருக்கமாக விளக்கினார்.

கோபால கிருஷ்ண கோகலேயின் வார்த்தைகளில் சுதேசி இயக்கமானது நம்முடையத் தொழில்களின் முனனேற்றத்திற்கானது மட்டுமல்ல; நமது தேசிய வாழ்க்கை சார்ந்த அனைத்துத் துறைகளின் மேம்பாட்டிற்குமானது.

இயக்கத்தின் வளர்ச்சியோடு சுதேசி இயக்கம் குறித்த பல விளக்கங்கள் முன்வைக்கப்பட்டன. எப்படியிருந்த போதிலும் சுதேசி இயக்கமும் புறக்கணிப்புப் போராட்டங்களும் வாழ்வில் சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் பெறுவதற்கான சாத்தியமான வழிமுறையாக அல்லாமல் காலனிய எதிர்ப்புப் போராட்டமாகவே நடத்தப் பெற்றது. இவ்விளக்கம் பின்னர் மகாத்மா காந்தியடிகளின் வருகையோடு உட்புகுத்தப்பட்டது.

வங்காளத்தில் சுதேசி இயக்கத்தின் போது நான்கு முக்கியப் போக்குகள் காணப்பட்டன:

  1. மிதவாதப் போக்கு
  2. ஆக்கபூர்வ சுதேசி
  3. தீவிர தேசியவாதம்
  4. புரட்சிகர தேசியவாதம்

சுதேசி சிந்தனையின் பரிணாம வளர்ச்சி

விடுதலைப் போராட்டத்தின்போது சுதேசி இயக்கம் என்ற எண்ணம் முதன்முதலாக 1905இல் ஒரு சில காங்கிரஸ் தலைவர்களாலும், பின்னர் 1920களில் மகாத்மா காந்தியடிகளின் தலைமையிலும் ஒரு தத்துவமானது

‘சுதேசி’ என்பதன் பொருள் ‘ஒருவரது சொந்தநாடு’ என்பதாகும். இத்தத்துவத்தின் தோற்றமானது 1872இல் பூனாவில் மகாதேவ் கோவிந்த் ரானடே தனது தொடர் சொற்பொழிவுகளின் மூலம் இச்சிந்தனையைப்பிரபலப்படுத்தியதிலிருந்துத் தொடங்குகிறது.

ரானடேயின் கருத்துப்படி ஒருவரது சொந்த நாட்டில் உற்பத்திசெய்யப்படும் பொருட்களுக்கு அப்பொருட்களின் பயன்பாடு குறைவான மனநிறைவைக் கொடுத்த போதிலும் முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்.

1920களில் காந்தியடிகள் இதை அனைத்து இந்தியர்களும் தாங்கள் பிறந்த நாட்டிற்குச் செய்யவேண்டிய கடமைகளோடு இணைத்துச் சுதேசி சிந்தனைக்குப் புதிய பொருளைக் கொடுத்தார்.

ஆக்கபூர்வமான சுதேசி

ஆக்கபூர்வமான சுதேசி திட்டம் பெருமளவு சுய உதவிக்கு முக்கியத்துவம் கொடுத்தது. அது ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டிலிருந்து முழுவதுமாக விடுதலை பெற்ற, சுயாட்சிக்கான மாற்று நிறுவனங்களைக் கட்டமைப்பதில் கவனம் செலுத்தியது.

மக்கள் தங்களைச் சுயவலிமை உள்ளவர்களாக ஆக்கிக் கொள்ளவேண்டிய தேவைக்கு முக்கியத்துவம் வழங்கியது. அதுவே அரசியல் போராட்டங்களை நடத்துவதற்கு முன்பாக அதற்குத் தகுதியான குடிமக்களை உருவாக்கும்.

தாகூர் சுய பொருளாதார வளர்ச்சிக்கு அழைப்பு விடுத்தார். கல்வியானது தாய்மொழியில் வழங்கப்பட வேண்டுமென வற்புறுத்தினார். சுயஉதவி (ஆத்ம சக்தி) ஒட்டு மொத்த வங்காளத்தின் தாரக மந்திரமாகி அதன் விளைவாக அனைத்து இடங்களிலும் ஜவுளி, கைத்தறித் துணிகள், சோப்புகள், மட்பாண்டங்கள், தீப்பெட்டி, தோல் பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்யும் சுதேசி விற்பனை நிலையங்கள் பெருகின.

வட்டார மொழியில் கல்வி, எனும் கருத்து சுதேசி இயக்கத்திற்கு வெகு முன்னரே சதீஷ் சந்திர முகர்ஜியால் விடிவெள்ளிக் கழகம் (Dawn Society) நிறுவப்பட்ட போதே உருவாகி விட்டது.

1905 நவம்பர் 5இல் விடிவெள்ளிக் கழகத்தின் முன்னெடுப்பில் கல்விக்கான தேசிய கழகம் உருவாக்கப்பட்டது. ஆகஸ்ட் 1906இல் வங்காள தேசியக் கல்லூரியும் பள்ளியும் நிறுவப்பட்டன.

சமிதிகள்

பெருவாரியான மக்களை ஒன்று திரட்ட மேற்கொள்ளப்பட்ட மற்றொரு வெற்றிகரமான முறை சமிதிகள் (தொண்டர் படைகள்) எனும் அமைப்பு. உறுப்பினர்களுக்கு உடற்பயிற்சி அளித்தல், அறநெறிகளைக் கற்றுக் கொடுத்தல், பஞ்சங்களின்போதும் நோய்களின் தாக்கத்தின்போதும் சேவையாற்றுதல், விழாக்காலங்களில் சுதேசி செய்தியைப் பரப்புரை செய்தல், உள்ளூரளவில் பள்ளிகளையும் நடுவர் நீதிமன்றங்களையும் உருவாக்குதல் போன்ற பல பணிகளில் இச்சமிதிகள் ஈடுபடுத்தப்பட்டன.

தனது இயல்பான அமைதிவழிப் போராட்டத்தின் மூலம் ஆங்கில அரசு நிர்வாகத்திற்கு ஒத்துழைப்புத் தராமல் இருப்பதே அதன் நோக்கம்.

முஸ்லிம் விவசாயிகள், ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகியோரிடையே தனது தளத்தை விரிவுபடுத்த இயலாமல் போனதால் சமிதிகளின் செழித்தோங்க இயலவில்லை.

 சாத்வீக செயலற்ற எதிர்ப்பு

வங்கப்பிரிவினையை ரத்து செய்வதற்கான அறிகுறிகள் தென்படாத நிலையில் 1906-லிருந்து சுதேசி இயக்கம் முக்கிய மாற்றம் பெற்றது.

பெரும்பாலான தலைவர்கள் இவ்வியக்கத்தைப் பயன்படுத்தி நாடு முழுவதும் அரசியல் சுதந்திரம் அல்லது சுயராஜ்ஜியம் எனும் கருத்தைப் பரப்ப வேண்டுமெனக் கருதினர்.

சுதேசிச் செயல்பாடுகள் அரவிந்தகோஷ், பிபின் சந்திரபால் போன்ற தலைவர்களாலும் ஏனைய தீவிர தேசியவாதத் தலைவர்களாலும் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டன.

அந்நியப் பொருட்களைப் புறக்கணிப்பது, அரசுப் பள்ளிகளையும் கல்லூரிகளையும் புறக்கணிப்பது, நீதிமன்றங்களைப் புறக்கணித்தல், பட்டங்களைத் துறந்து விடுதல், அரசுப் பணிகளைக் கைவிடுதல், ஆங்கிலேயரின் அடக்குமுறை தாங்க இயலாத அளவிற்குச் சென்றால் ஆயுதப் போராட்டத்தைக் கைக்கொள்வது.

இத்தகைய இயல்புகளைக் கொண்ட போராட்டங்களுக்கு மிகப்பெருமளவிலான மக்களைத் திரட்டுவது அவசியமாயிற்று, மதத்தோடு பண்டைய பாரம்பரியப் பெருமைகளையும் இணைத்துக் கொள்வது இவ்வியக்கங்களின் மிக முக்கியக் கூறுகளானது.

தீவிர தேசியவாதம் 

பஞ்சாபின் லாலா லஜபதி ராய், மகாராஷ்டிராவின் பால கங்காதர திலகர், வங்காளத்தின் பிபின் சந்திர பால், ஆகிய மூன்று முக்கிய தலைவர்களும் சுதேசி காலத்தில் எப்போதும் லால்-பால்-பால் (Lal-Bal-Pal) மூவர் என்று குறிக்கப்பட்டனர்.

சுதேசி இயக்கத்தின்போது தீவிர தேசியவாதத்தின் இயங்கு தளமாக பஞ்சாப், மகாராஷ்டிரா, வங்காளம் ஆகியன உருவெடுத்தன.

தீவிர தேசியவாதத் தலைவர்களில் மற்றுமொரு செல்வாக்குப் பெற்ற ஆளுமையாக இருந்தவர் அரவிந்த கோஷ் ஆவார்.

தென்னிந்தியாவில் வ.உ. சிதம்பரனார் சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கியதை அடுத்து தூத்துக்குடி சுதேசி இயக்கத்தின் மிகமுக்கியத் தளமாக விளங்கியது.

சுயராஜ்ஜியம் அல்லது அரசியல் சுதந்திரம்

தீவிர தேசியவாதத்தலைவர்களின் பொதுவான குறிக்கோள்களில் ஒன்று சுயராஜ்ஜியம் அல்லது சுயாட்சி என்பதாகும். ஆனால் சுயராஜ்ஜியத்தின் பொருள் குறித்து தலைவர்கள் வேறுபட்டனர்.

திலகருக்கு சுயராஜ்ஜியம் என்பது நிர்வாகத்தின் மீதான இந்தியர்களின் கட்டுப்பாடு அல்லது சொந்த மக்களின் நிர்வாகம் என்பது மட்டுமே தவிர இங்கிலாந்துடனான உறவுகள் அனைத்தையும் துண்டித்துக் கொள்வதல்ல.

பிபின் சந்திரபாலின் கருத்துப்படி சுயராஜ்ஜியம் என்பது அந்நியர் ஆட்சியிலிருந்து முற்றிலுமாக விடுதலையடைதல் என்பதாகும்.

அரசியல் படுகொலைகளையும் தனிநபர் பயங்கரவாதத்தையும் தீவிர தேசியவாதிகள் அங்கீகரிக்கவில்லை.

சூரத் பிளவு

1906இல் மிண்டோ பிரபு இந்திய அரசப்பிரதிநிதியாகப் பணியமர்த்தப்பட்டதிலிருந்து மிதவாத தேசியவாதிகளுக்கும் தீவிர தேசியவாதிகளுக்கும் இடையில் நிலவிய கருத்து வேற்றுமை மேலும் தீவிரமடைந்தது.

1906இல் கல்கத்தா மாநாட்டில் மிதவாத தேசியவாதிகளின் கோரிக்கையை ஏற்று தாதாபாய் நௌரோஜி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் பிளவு தவிர்க்கப்பட்டது. பெரோஸ்ஷா மேத்தாவின் தலைமையிலான பல மிதவாத தேசியவாதிகள் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டனர். சுதேசி, புறக்கணிப்பு, தேசியக் கல்வி, சுயாட்சி ஆகியவை தொடர்பான நான்கு தீர்மானங்களைத் தீவிர தேசியவாதிகள் நிறைவேற்றினர்.

காங்கிரசின் அடுத்த மாநாடு தீவிர தேசியவாதிகளின் கோட்டை எனக் கருதப்பட்ட பூனாவில் நடைபெறத் திட்டமிடப்பட்டது. கல்கத்தா மாநாட்டு முடிவுகளால் அச்சம் கொண்டிருந்த மிதவாத தேசியவாதிகள் நடைபெறுமிடத்தைச் சூரத் நகருக்கு மாற்றினர்.

காங்கிரசின் அடுத்த தலைவர் பொறுப்புக்கு மிதவாத தேசியவாதிகளின் வேட்பாளரான ராஷ்பிகாரி கோஷ் என்பாருக்கு எதிராகத் தீவிர தேசியவாதிகள் லாலா லஜபதி ராயின் பெயரை முன்மொழிந்தனர். இயக்கத்தில் பிளவு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக லாலா லஜபதி ராய் போட்டியிட மறுத்தார்.

1906இல் கல்கத்தா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங்களைப் பின்பற்றுவதா? இல்லையா என்ற கேள்வியை ஒட்டி நிலைமை கொதி நிலையை எட்டியது.

பெரோஸ்ஷா மேத்தாவின் குழு இந்த தீர்மானங்களை நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்கப்பட வேண்டுமெனக் கோரியது.

பெரோஸ்ஷாவின் இத்தகைய திட்டத்தை எதிர்கொள்ளத் தீவிர தேசியவாதிகள் ராஷ் பிகாரி கோஷ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதை எதிர்க்க முடிவு செய்தனர் மாநாடு குழப்பத்தில்  முடிந்தது.

டிசம்பர் 1885இல் உருவான காங்கிரஸ் இப்போது மிதவாத தேசியவாதிகள், தீவிர தேசியவாதிகளென இரு குழுக்களாகப் பிரிந்தது. சூரத் பிளவுக்குப் பின் உருவான காங்கிரஸ் முன்பிருந்ததைக் காட்டிலும் ஆங்கிலேயரிடம் அதிக விசுவாசத்துடன் நடந்துகொண்டது.

தீவிர தேசியவாதிகள் இல்லாத புதிய காங்கிரஸ் “மேத்தா காங்கிரஸ்” என அழைக்கப்பட்டது.

1908இல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மிதவாத தேசியவாதிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.

முக்கியத் தலைவர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்த அரசின் அடக்கு முறையே அதற்கான முக்கியக் காரணமாகும்.

புரட்சிகர தேசியவாதம்

1908இல் தீவிர தேசியவாதம் சரிவுற்று புரட்சிகரச் செயல்பாடுகள் மேலெழுந்தன. வன்முறை சாராத நடவடிக்கைகளிலிருந்து வன்முறையை நோக்கி, எனும் மாற்றத்தை அது சுட்டிக்காட்டியது. மேலும் ஆங்கில ஆட்சிக்கு வெகுஜனங்களின் எதிர்ப்பு என்பதற்குப் பதிலாக சமூகத்தின் உயர்மட்டத்தைச் சார்ந்தோரின் எதிர்ப்பு என்ற மாற்றத்தையும் அது உணர்த்தியது.

வங்காளத்தில் புரட்சிகர பயங்கரவாதமானது முன்னதாகவே வளர்ந்துவிட்டது. 1870களில் விவேகானந்தர் விளக்கியவாறு எஃகினாலான உடலையம் நரம்புகளையும் வளர்ப்பதற்காக பல்வேறு இடங்களில் அக்காரா எனப்படும் உடற்பயிற்சி நிலையங்கள் நிறுவப்பட்டன.

பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் ஆனந்மத் (ஆனந்த மடம்) எனும் நாவலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்நாவல் வங்காளத்துப் புரட்சிகர தேசியவாதிகளால் பரவலாகப் படிக்கப் பெற்றது. அந்நாவலின் ஒருபகுதியான வந்தே மாதரம் பாடல் சுதேசி இயக்கத்தின் கீதமாயிற்று.

அந்நிய அடக்குமுறை ஆட்சியின் கீழ் வெகுவாகப் பொறுமை இழந்து கொண்டிருந்த இளைஞர்கள் அரசியலற்ற ஆக்கசார் செயல்பாடுகளை ஓரளவே ஏற்றுக் கொண்டனர்.

இளம் வயது மக்களுக்குத் தலைமையேற்று அவர்களை ஒரு நீண்டகால வெகுஜனப் போராட்டத்தில் ஈடுபடுத்துவதில் தீவிர தேசியவாதிகள் தோல்வியடைந்தது தனிநபர் செயல்பாடுகள் வளர்வதற்குக் காரணமாயிற்று.

புரட்சிகர செயல்பாடானது இந்திய வீரத்தை மீட்டெடுக்கும் குறியீட்டு முயற்சியின் ஒரு பகுதியாகவும் கருதப்பட்டது. அத்தன்மையை ஆங்கிலேயர் அடிக்கடி எதிர்ப்பதாயும் இகழ்வதாயும் புரட்சிகர தேசியவாதிகள் நம்பினர்.

ஆங்கிலேயரின் அடக்குமுறை

டிசம்பர் 1908இல் மிண்டோ-மார்லி அரசியல் அமைப்புச் சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டன. சீர்திருத்தங்களை மிதவாத தேசியவாதிகள் வரவேற்றனர். ஆனால் அதிகாரங்கள் எதுவும் மாற்றப்படவில்லை என்பதை அவர்கள் விரைவில் உணர்ந்தனர். ஆனால் மிண்டோ மேற்கொண்ட நடவடிக்கைகள் பிரிவினைகளை ஏற்படுத்துவதாக அமைந்தன. அது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை நிறுவனப்படுத்தி இந்து, முஸ்லிம்களைப் பிரித்தது. மேலும் சில அடக்கு முறைச் சட்டங்களையும் காலனிய அரசு அறிமுகம் செய்தது.

1908 செய்தித்தாள் சட்டம் (குற்றம் செய்யத் தூண்டுதல்). இச்சட்டம் ஆட்சேபனைக்குரிய வகையிலான செய்திகளை வெளியிடும் அச்சகங்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்யும் அதிகாரத்தை நீதிபதிகளுக்கு வழங்கியது. இதனால் ஆங்கிலேயே ஆட்சியை விமர்சிக்கும் எதையும் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது.

1910 இந்தியப் பத்திரிக்கைச் சட்டம் அச்சக உரிமையாளர்களும் வெளியீட்டாளர்களும் பிணைத்தொகை கட்டுவதைக் கட்டாய மாக்கியது. விரும்பத்தகாத தீங்கு விளைவிக்கக்கூடிய செய்திகளை அவர்கள் வெளியிட்டால் அத்தொகை எடுத்துக் கொள்ளப்படும்.

இந்தியக் குற்றவியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தம் விசாரணையின்றி முடிவுகளை மேற்கொள்ள அனுமதித்தது. மேலும் பொது அமைதிக்கு ஆபத்தான அமைப்புகளைத் தடை செய்தது.

தன்னாட்சி (ஹோம் ரூல்) இயக்கம் (1916–18)

லோகமான்ய பாலகங்காதர திலகர், அன்னிபெசன்ட் அம்மையார் ஆகியோர் தலைமையிலான தன்னாட்சி (1916-1918) இயக்கத்தின் போது இந்திய தேசிய இயக்கம் புத்துயிரூட்டப்பட்டு தீவிரப்படுத்தப்பட்டது. முதல் உலகப் போரும், இந்தியா அந்தப் போரில் பங்கேற்றதும் தான் தன்னாட்சி  இயக்கத்துக்கான பின்னணியாகும். 1914ஆம் ஆண்டில் ஜெர்மனிக்கு எதிராக பிரிட்டன் போர் அறிவித்த நிலையில் மித தேசியவாத மற்றும் தாராளமய தலைமை பிரிட்டிஷாருக்காக ஆதரவைத் தந்தது. அதற்குப் பதில் பிரிட்டிஷ் அரசு போருக்குப் பிறகு தன்னாட்சியை இந்தியாவிற்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. உலகப் போரின் பல அரங்குகளுக்கு இந்தியத் துருப்புகள் அனுப்பப்பட்டன. ஆனால் இந்தக் குறிக்கோள்கள் குறித்து பிரிட்டிஷ் அரசுக்கு எந்தவித உறுதிப்பாடும் இல்லை. இந்தியாவின் தன்னாட்சிக்கு வழிவகுக்கும் காரணத்துக்கு உதவாமல் ஆங்கிலேய அரசு ஏமாற்றியதால் ஆங்கிலேய அரசுக்கு நெருக்கடி தரும் புதிய மக்கள் இயக்கத்துக்கான அழைப்பாக இது உருவெடுத்தது.

தன்னாட்சி இயக்கத்தின் குறிக்கோள்கள்

அரசியலமைப்பு வழிகளைப் பயன்படுத்தி பிரிட்டிஷ் பேரரசிற்குள் தன்னாட்சியை அடைவது. தன்னாட்சிப் பகுதி (டொமினியன்) என்ற தகுதியை அடைவது. ஆஸ்திரேலியா, கனடா, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகியவற்றுக்குப் பின்னர் இந்த அரசாட்சி சாராத நிலை வழங்கப்பட்டது. அவர்களின் இலக்குகளை அடைய வன்முறையல்லாத அரசியல்சாசன வழிமுறைகளைக் கையாள்வது.

லக்னோ ஒப்பந்தம் (1916)

தன்னாட்சி இயக்கமும் அதனையடுத்து மித தேசியவாதிகள் மற்றும் தீவிர தேசியவாதிகளின் மறு இணைப்பு காரணமாக முஸ்லிம்களுடன் புதிய பேச்சுகளுக்கான சாத்தியக்கூறு  லக்னோ ஒப்பந்தத்தின்போது ஏற்பட்டது. லக்னோ ஒப்பந்தத்தின் (1916) போது காங்கிரஸ் கட்சியும் முஸ்லிம் லீக்கும் இந்தியாவில் விரைவில் தன்னாட்சி வேண்டுமென்பதை ஏற்றுக்கொண்டது. இதற்கு பதிலாக முஸ்லிம்களுக்கு தனித் தொகுதிகளை வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் தலைமை ஏற்றது.

பிரிட்டிஷாரின் பதில் நடவடிக்கை

சுயராஜ்ஜியத்துக்கான கோரிக்கையை திலகரும் அன்னிபெசன்ட் அம்மையாரும் எழுப்பியது பிரபலமானதைத் தொடர்ந்து தலைவர்களை தனிமைப்படுத்தி அவர்களின் செயல்பாடுகளை முடக்கும் அதே பழைய திட்டத்தை ஆங்கிலேய அரசு பயன்படுத்தியது. 1919இல் மாண்டேகு-செம்ஸ்ஃபோர்ட் சீர்திருத்தங்களை ஆங்கிலேய அரசு அறிவித்தது. இதன் மூலம் இந்தியா தன்னாட்சி நோக்கி படிப்படியாக முன்னேற உறுதி கூறப்பட்டது. இந்திய தேசியவாதிகள் இடையே இது மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் ஒரு பேரிடியாக, தன்னிச்சையான கைது மற்றும் கடும் தண்டனைகளுடன் கூடிய ரௌலட் சட்டத்தை அரசு இயற்றியது.

1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் கீழ் அமைந்த முதல் காங்கிரஸ் அமைச்சரவைகள்

சட்டமறுப்பு இயக்கத்தின் ஆக்கப்பூர்வ வெளிப்பாடுகளில் 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டமும் ஒன்றாகும். மாகாணங்களுக்கு தன்னாட்சி அதிகாரம், மத்தியில் இரட்டையாட்சி ஆகியன இந்தச்சட்டத்தின் முக்கிய அம்சங்களாகும். அகில இந்திய கூட்டமைப்பு ஏற்பட வேண்டும் என்று இந்த சட்டம் வலியுறுத்துகிறது.

காங்கிரஸ் அமைச்சரவைகளும் அவற்றின் பணியும்

1937ஆம் ஆண்டு தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதுடன் 1935ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. சட்டமறுப்பு இயக்கத்தால் காங்கிரஸ் பெரிதும் பலன்பெற்றது. சட்டப்பேரவை புறக்கணிப்பைக் கைவிட்ட காங்கிரஸ் தேர்தல்களில் போட்டியிட்டது. பதினோரு மாகாணங்களில் போட்டியிட்டு ஏழு மாகாணங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. மதராஸ், பம்பாய், மத்திய மாகாணங்கள், ஒடிசா, பீகார், ஐக்கிய மாகாணங்கள், வடமேற்கு எல்லை மாகாணம், சர் முஹம்மது சாதுல்லா தலைமையிலான அசாம் பள்ளத்தாக்கு முஸ்லீம் கட்சியுடன் இணைந்து கூட்டணி அரசு உட்பட எட்டு மாகாணங்களில் அது ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் அரசுகள் பிரபலமான அரசுகளாக செயல்பட்டன. கோயில் நுழைவுச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. கல்வி மற்றும் பொது சுகாதாரத்துக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது.

காங்கிரஸ் அமைச்சரவையின் பதவி விலகல்

1939இல் இரண்டாம் உலகபோர் மூண்டது. காங்கிரஸ் அமைச்சரவைகளை ஆலோசிக்காமல் கூட்டணிப் படைகள் சார்பாக இந்த போரில் இந்தியாவின் காலனி ஆதிக்க அரசு நுழைந்தது. எனவே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் அமைச்சரவைகள் பதவி விலகின. ஜின்னா 1940ஆம் ஆண்டு வாக்கில் முஸ்லீம்களுக்கு தனிநாடு வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இரண்டாம் உலக போரின் போது தேசிய இயக்கம், 1939-45

காந்தியடிகளின் வேட்பாளரான பட்டாபி சீதாராமய்யாவை வீழ்த்தி 1939இல் சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைவரானார். காந்தியடிகள் ஒத்துழைக்க மறுத்ததை அடுத்து, சுபாஷ் சந்திர போஸ் அப்பதவியிலிருந்து விலகி பார்வர்டு பிளாக் கட்சியைத் தொடங்கினார்.

 

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories