இனியவைகூறல்
October 2, 2023 2025-01-11 13:57இனியவைகூறல்
இனியவைகூறல்
இனியவை கூறல் (இனிமை பயக்கும் சொற்களைப் பேசுதல்)
- இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
பொருள்: அன்பு கலந்து வஞ்சனை இல்லாத மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.
சொல்பொருள்: ஈரம் – அன்பு; அளைஇ – கலந்து; படிறு – வஞ்சம்; செம்பொருள் – மெய்ப்பொருள்.
- அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
பொருள்: உள்ளம் விரும்பி ஒருவருக்குக் கொடுத்து உதவுவது நல்லது; முகம் மலர்ந்து ஒருவரைப் பார்த்து இனிய சொற்களைக் கூறுதல் அதனைவிடவும் நல்லது.
சொல்பொருள்: அகன் – அகம், உள்ளம்; அமர் – விருப்பம்; அமர்ந்து – விரும்பி; முகன் – முகம்; இன்சொல் – இனியசொல்; இன்சொலன் – இனிய சொற்களைப் பேசுபவன்.
- முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினிதே அறம். *
பொருள்: முகத்தால் விரும்பி இனிமையுடன் நோக்கி உள்ளம் கலந்த இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.
சொல்பொருள்: அமர்ந்து – விரும்பி; அகத்தான் ஆம் – உள்ளம் கலந்து; இன்சொலினிதே – இனிய சொற்களைப் பேசுதலே.
- துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
பொருள்: எல்லாரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுவோரிடம், துன்பம் தரும் வறுமை அணுகாது.
சொல்பொருள்: துன்புறூஉம் – துன்பம் தரும்; துவ்வாமை- வறுமை; யார் மாட்டும் – எல்லாரிடமும்; இன்புறூஉம் – இன்பம் தரும்.
- பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற. *
பொருள்: பணிவு உடையவனாகவும் இன்சொல் பேசுபவனாகவும் விளங்குவதே ஒருவனுக்கு உண்மையான அணிகலன் ஆகும். உடல் அழகுக்காக அணியும் பிற எல்லாம் உண்மையான அணிகலன்கள் ஆகா.
சொல்பொருள்: ஒருவற்கு – ஒருவனுக்கு; அணி – அழகுக்காக அணியும் நகைகள்.
- அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின். *
பொருள்: பிறர்க்கு நன்மையானவற்றை விரும்பி இனிமை உடைய சொற்களைச் சொன்னால், பாவங்கள் தேய்ந்து குறையும்; அறம் வளர்ந்து பெருகும்.
சொல்பொருள்: அல்லவை – பாவம்; நாடி – விரும்பி.
- நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
பொருள்: பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து, நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள், வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.
சொல்பொருள்: நயன்ஈன்று – நல்ல பயன்களைத் தந்து; நன்றி – நன்மை; பயக்கும் – கொடுக்கும்; தலைப்பிரியாச் சொல் – நீங்காத சொற்கள்.
- சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பந் தரும். *
பொருள்: பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுபிறவிக்கும் இப்பிறவிக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும்.
சொல்பொருள்: சிறுமை – துன்பம்; மறுமை – மறுபிறவி; இம்மை – இப்பிறவி.
- இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.
பொருள்: இனிய சொற்கள் இன்பம் உண்டாக்குவதனைக் கண்டபின்னும், ஒருவன் கடுஞ்சொற்களைப் பேசுவது ஏனோ ?
சொல்பொருள்: இனிதீன்றல் – இனிது + ஈன்றல்; ஈன்றல் – தருதல், உண்டாக்குதல்; வன்சொல் – கடுஞ்சொல்; எவன்கொலோ – ஏனோ?
- இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. *
பொருள்: இன்பம் தரும் இனிய சொற்கள் இருக்கும்போது, துன்பம் தரும் கடுஞ்சொற்களைப் பேசுவது, கனிகள் இருக்கும்போது காய்களை விரும்பி உண்பதனைப் போன்றது.
சொல்பொருள்: கவர்தல் – நுகர்தல்; அற்று – அதுபோன்றது.