இராமலிங்க அடிகளார்
June 27, 2024 2025-01-11 13:56இராமலிங்க அடிகளார்
இராமலிங்க அடிகளார்
திருவருட்பா
கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்என்
எண்ணில் கலந்தே இருக்கின்றான் – பண்ணில்
கலந்தான்என் பாட்டில் கலந்தான் உயிரில்
கலந்தான் கருணை கலந்து. * – இராமலிங்க அடிகளார்
பாடல்பொருள்
கருணை நிறைந்த இறைவன் என் கண்ணில் இருக்கிறான்; என் சிந்தனையில் கலந்து இருக்கிறான்; என் எண்ணத்தில் கலந்து இருக்கிறான்; என் பாட்டில் கலந்து இருக்கிறான்; பாட்டின் இசையில் கலந்து இருக்கிறான்; அவன், என் உயிரில் கலந்து இருக்கிறான்.
ஆசிரியர் குறிப்பு
இராமலிங்க அடிகளார், திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர். இவர் கடலூர் மாவட்டம் மருதூரில்பிறந்தவர். பெற்றோர் இராமையா- சின்னம்மையார். ஜீவகாருண்யஒழுக்கம், மனுமுறை கண்டவாசகம் ஆகிய நூல்கள் இவர் எழுதியவை. இவர் பாடல்கள் அனைத்தும் “திருவருட்பா” என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர் இவரே. அனைத்து மதங்களின் நல்லிணக்கத்திற்காகச் சன்மார்க்க சங்கத்தையும், பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க அறச்சாலையையும் அமைத்தவர். அறிவுநெறி விளங்க ஞானசபையையும் நிறுவியவர். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் இவருடையது. வடலூர் சத்திய தருமச்சாலையில், பசியால் வாடும் மக்களுக்குச் சோறிட, இவர் அன்று மூட்டிய அடுப்பு இன்றும் அணையாமல், தொடர்ந்து பசிப்பிணி தீர்த்து வருகிறது.
வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்
நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ்
சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன். – இராமலிங்கஅடிகளார் , திருவருட்பா.
பொருள் : “ நீரின்றி வாடித் துவண்டுகிடந்த பயிர்களைக் கண்டபோது மனம் பெரிதும் வாட்டமடைந்தேன் ; வயிறார உண்ணும் வாய்ப்பின்றிப் பசித்துயரால் களைப்புற்ற, வீடுதோறும் இரந்தும் போதிய உணவின்றி உடல்மெலிந்த வறியோரைக் கண்டு உள்ளம் பதைப்புற்றேன் ; தீராத கொடிய பிணியால் துன்புற்றோரைக் கண்டு உள்ளம் துடித்தேன்; பிறரிடம் இரப்பதற்கு நாணி உடலும் உள்ளமும் நைந்த ஏழைகளைக் கண்டு உள்ளம் மெலிவுற்றேன்” என வள்ளலார், தம் மனத்துயரை வெளிப்படுத்துகிறார்.
சொற்பொருள் : பசியறாது – பசித்துயர் நீங்காது; அயர்ந்த – களைப்புற்ற; நீடிய – தீராத.
ஆசிரியர் குறிப்பு
பெயர் : இராமலிங்க அடிகளார்
பெற்றோர் : இராமையா – சின்னம்மை
ஊர் : சிதம்பரத்துக்கு அருகிலுள்ள மருதூர்
சிறப்புப் பெயர் : திருவருட்பிரகாச வள்ளலார்.
சிறப்பு : வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சங்கம், சத்திய ஞானசபை, சத்திய தருமச்சாலை ஆகியவற்றை நிறுவினார்.
இயற்றிய நூல்கள் : திருவருட்பா, சீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம் முதலியன.
காலம் : 05.10.1823 முதல் 30. 01. 1874 வரை
நூற்குறிப்பு : திரு + அருள் + பா = திருவருட்பா. இறைவன் திருவருளைப் பெறுவதற்காகப் பாடிய பாடல் என்றும், இறைவனின் திருவருளால் பாடிய பாடல் என்றும் இருவகையாகப் பொருள் கூறலாம். இஃது ஐயாயிரத்து எண்ணூற்றுப் பதினெட்டுப் பாடல் கொண்டது.