இலக்கண குறிப்பு
December 8, 2023 2025-01-11 13:57இலக்கண குறிப்பு
இலக்கண குறிப்பு
படித்தான், படித்த, படித்து – ஆகிய சொற்களைக் கவனியுங்கள்.
படித்தான் என்னும் சொல்லில் பொருள் முற்றுப் பெறுகிறது. எனவே, இது வினைமுற்று ஆகும்.
எச்சம்
படித்த, படித்து ஆகிய சொற்களில் பொருள் முற்றுப்பெறவில்லை. இவ்வாறு பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும். எச்சம் இருவகைப்படும்
-
பெயரெச்சம்,
-
வினையெச்சம்
பெயரெச்சம்
படித்த என்னும் சொல் மாணவன், மாணவி, பள்ளி, புத்தகம், ஆண்டு போன்ற பெயர்ச்சொற்களுள் ஒன்றைக் கொண்டு முடியும்.
(எ.கா.) படித்த மாணவன்.
படித்த பள்ளி.
இவ்வாறு பெயரைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் ஆகும். பெயரெச்சம் மூன்று காலத்திலும் வரும்.
(எ.கா.) பாடிய பாடல் – இறந்தகாலப் பெயரெச்சம்
பாடுகின்ற பாடல் – நிகழ்காலப் பெயரெச்சம்
பாடும் பாடல் – எதிர்காலப் பெயரெச்சம்
தெரிநிலை, குறிப்புப் பெயரச்சங்கள்
எழுதிய கடிதம் – இத்தொடரில் உள்ள எழுதிய என்னும் சொல் எழுதுதல் என்னும் செயலையும் இறந்தகாலத்தையும் தெளிவாகக் காட்டுகிறது. இவ்வாறு செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் தெரிநிலைப் பெயரெச்சம் எனப்படும்.
சிறிய கடிதம் – இத்தொடரில் உள்ள சிறிய என்னும் சொல்லின் செயலையோ, காலத்தையோ அறிய முடியவில்லை. பண்பினை மட்டும் குறிப்பாக அறியமுடிகிறது. இவ்வாறு செயலையோ, காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.
வினையெச்சம்
படித்து என்னும் சொல் முடித்தான், வியந்தாள், மகிழ்ந்தார் போன்ற வினைச் சொற்களுள் ஒன்றைக் கொண்டு முடியும்.
(எ.கா.) படித்து முடித்தான்.
படித்து வியந்தான்.
இவ்வாறு வினையைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம் எனப்படும்.
தெரிநிலை, குறிப்பு வினையெச்சங்கள்
எழுதி வந்தான் – இத்தொடரில் உள்ள எழுதி என்னும் சொல் எழுதுதல் என்னும் செயலையும் இறந்த காலத்தையும் தெளிவாகக் காட்டுகிறது. இவ்வாறு செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.
மெல்ல வந்தான் – இத்தொடரில் உள்ள மெல்ல என்னும் சொல் காலத்தை வெளிப்படையாகக் காட்டவில்லை. மெதுவாக என்னும் பண்பை மட்டும் உணர்த்துகிறது. இவ்வாறு காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்திவரும் வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் எனப்படும்.
பெயரெச்சம் |
வினையெச்சம் |
நல்ல |
படுத்து |
எறிந்த |
பாய்ந்து |
வீழ்ந்த |
கடந்து |
மாட்டிய |
பிடித்து |
அழைத்த |
பார்த்து |
முற்றறச்சம்
வள்ளி படித்தனள்
இத்தொடரில் படித்தனள் என்னும் சொல் படித்தாள் என்னும் வினைமுற்றுப் பொருளைத் தருகிறது.
வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள்.
இத்தொடரில் படித்தனள் என்னும் சொல் படித்து என்னும் வினையெச்சப் பொருளைத் தருகிறது. இவ்வாறு ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம் எனப்படும்.
நடந்து |
வினையெச்சம் |
பேசிய |
பெயரெச்சம் |
எடுத்தனன் உண்டான் |
முற்றெச்சம் |
பெரிய |
குறிப்புப் பெயரெச்சம் |
‘அழகிய மரம்’ – இத்தொடரில் உள்ள அழகிய என்னும் சொல்லின் செயலையோ காலத்தையோ அறிய முடியவில்லை. பண்பினை மட்டும் குறிப்பாக அறியமுடிகிறது. இவ்வாறு செயலையோ காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.
வேற்றுமை:
பாவை அண்ணன் பார்த்து, “அண்ணன் எனக்கு ஓர் உதவி செய்வாயா?” என்று கேட்டாள். “இந்த அண்ணன் செய்ய முடிந்த உதவி என்றால் உறுதியாகச் செய்வேன்” என்றான் அண்ணன். “என் அண்ணன் உள்ளம் எனக்குத் தெரியும். என் அண்ணன் என் மீது மிகுந்த அன்பு உண்டு” என்றாள் பாவை.
மேலே உள்ள பகுதியைப் படித்துப் பாருங்கள். இதில் கூறப்பட்டுள்ள செய்தியைப் புரிந்துகொள்ள இயலாதவாறு ஒரு குழப்பம் உள்ளது அல்லவா?
இதே பகுதியைக் கீழே உள்ளவாறு படித்துப் பாருங்கள்.
பாவை அண்ணனைப் பார்த்து, “அண்ணா எனக்கு ஓர் உதவி செய்வாயா?” என்று கேட்டாள். “இந்த அண்ணனால் செய்ய முடிந்த உதவி என்றால் உறுதியாகச் செய்வேன்” என்றான் அண்ணன். “என் அண்ணனது உள்ளம் எனக்குத் தெரியும். என் அண்ணனுக்கு என் மீது மிகுந்த அன்பு உண்டு” என்றாள் பாவை.
இப்போது எளிதாகப் பொருள் புரிகிறது அல்லவா?
இரண்டாம் பகுதியில் அண்ணன் என்னும் பெயர்ச்சொல் அண்ணனை, அண்ணா, அண்ணனால், அண்ணனுக்கு, என்றெல்லாம் மாற்றப்பட்டிருப்பதால் பொருள் தெளிவாக விளங்குகிறது. அண்ணன் என்னும் பெயர்ச்சொல்லுடன் ஐ, ஆல், கு, இன், அது போன்ற அசைகள் இணைந்து அச்சொல்லின் பொருளைப் பல்வேறு வகையாக வேறுபடுத்துகின்றன. இவ்வாறு பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறையை வேற்றுமை என்பர். இதற்காகப் பெயர்ச்சொல்லுடன் இணைக்கப்படும் அசைகளை வேற்றுமை உருபுகள் என்று கூறுவர்.
சில இடங்களில் உருபுகளுக்குப் பதிலாக முழுச்சொற்களே வேற்றுமை உருபாக வருவதும் உண்டு. அவற்றைச் சொல்லுருபுகள் என்பர்.
ஓவியர் தூரிகையால் ஓவியம் தீட்டினார். இதில் ஆல் என்பது வேற்றுமை உருபாக வந்துள்ளது.
ஓவியர் தூரிகை கொண்டு ஓவியம் தீட்டினார். இதில் கொண்டு என்பது சொல்லுருபாக வந்துள்ளது.
வேற்றுமை உருபுகள் இடம் பெற்றுள்ள தொடர்களை வேற்றுமைத் தொடர்கள் என்பர். வேற்றுமை உருபுகள் இடம் பெற வேண்டிய இடத்தில் அஃது இடம்பெறாமல் மறைந்திருந்து பொருள் தந்தால் அதனை வேற்றுமைத்தொகை என்பர்.
வேற்றுமை எட்டு வகைப்படும். முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபுகள் இல்லை. இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை முடிய உள்ள ஆறு வேற்றுமைகளுக்கும் உருபுகள் உண்டு.
- கண்ணன் பரிசு பெற்றான்.
- தலைமையாசிரியர், கண்ணனைப் பாராட்டிப் பரிசு வழங்கினார்.
முதல் தொடரில் கண்ணன் என்னும் பெயர்ச்சொல் அமைந்துள்ளது. இரண்டாம் தொடரில் அதே பெயர்ச்சொல் கண்ணனை மற்றவர் பாராட்டியதனைக் குறிக்கிறது. இத்தொடரில், கண்ணன் என்னும் பெயர்ச்சொல்லின் பொருள் வேறுபடுகிறது. இவ்வேறுபாட்டுக்குக் காரணம், கண்ணன் என்னும் பெயரோடு சேர்ந்துள்ள “ஐ” என்னும் உருபு. இவ்வாறு பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது, வேற்றுமை எனப்படும். பெயர்ச்சொல்லின் இறுதியில் அமைந்து பொருள் வேறுபாட்டைச் செய்யும் உருபுகளை வேற்றுமை உருபுகள் என்பர்.
இராமன் கண்டான் – இராமனைக் கண்டான் என வரும்பொழுது,
முதல் தொடரானது இராமன் வேறொருவனைப் பார்த்தான் எனவும், இரண்டாம் தொடரானது வேறொருவன் இராமனைப் பார்த்தான் எனவும் பொருள் வேறுபடுகிறது, இச்சிறுமாற்றத்திற்குக் காரணம் “ஐ” என்னும் எழுத்து,
முதல் வேற்றுமை
பெரும்பாலான சொற்றொடர்களில் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை ஆகிய மூன்று உறுப்புகள் இடம் பெற்றிருக்கும். எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல் எழுவாய் தனித்து நின்று இயல்பான பொருளைத் தருவது முதல் வேற்றுமை ஆகும். முதல் வேற்றுமையை எழுவாய் வேற்றுமை என்றும் குறிப்பிடுவர்.
முகிலன் வந்தான் – என்பது ஒரு தொடர். இத்தொடரில் முகிலன் என்பது எழுவாய். இந்த எழுவாய், வந்தான் என்னும் பயனிலையை ஏற்று இயல்பாக வருகிறது. இந்த எழுவாய் வினைமுற்று, பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றுள் ஒன்றனைப் பயனிலையாகக்கொண்டு முடியும். இவ்வாறு வருவது எழுவாய் வேற்றுமை அல்லது முதல் வேற்றுமை எனப்படும். இதற்கு உருபு இல்லை.
(எ.கா.) பாவை வந்தாள்.
இயல்பான பெயர், (எழுவாய்) பயனிலையைக் கொண்டு முடிவது முதல் வேற்றுமை எனவும், எழுவாய் வேற்றுமை எனவும் வழங்கப்படும்.
(இது வினையையும் பெயரையும் வினாவையும் பயனிலையாகக் கொண்டு முடியும்)
கண்ணன் வந்தான் – வினைப் பயனிலை
அவன் கண்ணன் – பெயர்ப் பயனிலை
அவன் யார்? – வினாப் பயனிலை
எழுவாய் வேற்றுமைக்கு எனத் தனி உருபு இல்லை.
மாடு வந்தது – வினைமுற்றைக்கொண்டு முடிந்தது.
வளவன் என் தம்பி – பெயர்ப்பயனிலையைக் கொண்டு முடிந்தது.
வளர்மதி யார்? – வினாப்பெயர்ப் பயனிலையைக்கொண்டு முடிந்தது.
இரண்டாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை உருபு ஐ என்பதாகும்.
கபிலர் பரணரைப் புகழ்ந்தார். கபிலரைப் பரணர் புகழ்ந்தார்.
இவ்விரு தொடர்களையும் கவனியுங்கள். இரண்டாம் வேற்றுமை உருபு ( ஐ ) எந்தப் பெயருடன் இணைகிறதோ அப்பெயர் செயப்படுபொருளாக மாறிவிடுகிறது. இவ்வாறு ஒரு பெயரைச் செயப்படுபொருளாக வேறுபடுத்திக் காட்டுவதால் இரண்டாம் வேற்றுமையைச் செயப்படுபொருள் வேற்றுமை என்றும் கூறுவர்.
இரண்டாம் வேற்றுமை ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை ஆகிய ஆறு வகையான பொருள்களில் வரும்
ஆக்கல் – கரிகாலன் கல்லணையைக் கட்டினான்
அழித்தல் – பெரியார் மூடநம்பிக்கைகளை ஒழித்தார்
அடைதல் – கோவலன் மதுரையை அடைந்தான்
நீத்தல் – காமராசர் பதவியைத் துறந்தார்
ஒத்தல் – தமிழ் நமக்கு உயிரைப் போன்றது
உடைமை – வள்ளுவர் பெரும் புகழை உடையவர்
மூன்றாம் வேற்றுமை
ஆல், ஆன், ஒடு, ஓடு ஆகிய நான்கும் மூன்றாம் வேற்றுமைக்கு உரிய உருபுகள் ஆகும். இவற்றுள் ஆல், ஆன் ஆகியவை கருவிப்பொருள், கருத்தாப் பொருள் ஆகிய இரண்டு வகையான பொருள்களில் வரும். கருவிப் பொருள் முதற்கருவி, துணைக்கருவி என இருவகைப்படும்.
கருவியே செய்யப்படும் பொருளாக மாறுவது முதற்கருவி – மரத்தால் சிலை செய்தான்.
ஒன்றைச் செய்வதற்குத் துணையாக இருப்பது துணைக்கருவி – உளியால் சிலை செய்தான்.
கருத்தாப்பொருள் ஏவுதல் கருத்தா, இயற்றுதல் கருத்தா என இருவகைப்படும். பிறரைச் செய்யவைப்பது ஏவுதல் கருத்தா – கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டது. தானே செய்வது இயற்றுதல் கருத்தா – சேக்கிழாரால் பெரியபுராணம் இயற்றப்பட்டது. ஆன் என்னும் உருபு பெரும்பாலும் செய்யுள் வழக்கில் இடம்பெறும். (எ.கா.) புறந்தூய்மை நீரான் அமையும்.
ஒடு, ஓடு ஆகிய மூன்றாம் வேற்றுமை உருபுகள் உடனிகழ்ச்சிப் பொருளில் வரும்.
(எ.கா.) தாயொடு குழந்தை சென்றது. அமைச்சரோடு அலுவலர்கள் சென்றனர்.
நாற்காலி தச்சனால் செய்யப்பட்டது. – ஆல்
தூங்குகையான் ஒங்குநடை. – ஆன்
தாயொடு மகள் வந்தாள். – ஒடு
தந்தையோடு தாய் வந்தாள். – ஓடு
தந்தையுடன் தம்பியும் வந்தான். – உடன்
நான்காம் வேற்றுமை
நான்காம் வேற்றுமைக்கு உரிய உருபு “கு” என்பதாகும். இது கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை எனப் பல பொருள்களில் வரும்.
கொடை – முல்லைக்குத் தேர் கொடுத்தான்.
பகை – புகை மனிதனுக்குப் பகை.
நட்பு – கபிலருக்கு நண்பர் பரணர்.
தகுதி – கவிதைக்கு அழகு கற்பனை.
அதுவாதல் – தயிருக்குப் பால் வாங்கினான்.
பொருட்டு – தமிழ்வளர்ச்சிக்குப் பாடுபட்டார்.
முறை – செங்குட்டுவனுக்குத் தம்பி இளங்கோ.
எல்லை – தமிழ்நாட்டுக்குக் கிழக்கு வங்கக்கடல்.
நான்காம் வேற்றுமை உருபுடன் கூடுதலாக “ஆக” என்னும் அசை சேர்ந்து வருவதும் உண்டு.
நான்காம் வேற்றுமைக்கு, ‘பொருட்டு’, ‘நிமித்தம்’, ‘ஆக‘ என்னும் சொல் உருபுகளும் உண்டு. ‘ஆக‘ என்ற சொல் உருபு மட்டும் ‘கு’ உருபோடு சேர்ந்துதான் வரும். ஆக என்ற சொல்லுருபு மட்டும் கூலிக்கு + ஆக, ஊருக்கு + ஆக என, ‘கு’ உருபை ஒட்டியே வந்ததை அறியலாம். (எ.கா – கூலிக்காக வேலை)
ஐந்தாம் வேற்றுமை
இன், இல் ஆகியவை ஐந்தாம் வேற்றுமை உருபுகள் ஆகும். இவை நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது போன்ற பொருள்களில் வரும்.
கொடையில் சிறந்தவர் பாரி.
இந்தியாவின் தெற்கு எல்லை குமரி.
நீங்கல் – தலையின் இழிந்த மயிர்.
ஒப்பு – பாம்பின் நிறம் ஒரு குட்டி.
எல்லை – தமிழ்நாட்டின் கிழக்கு வங்கக்கடல்.
ஏது – சிலேடை பாடுவதில் வல்லவர் காளமேகம்.
ஆறாம் வேற்றுமை
அது, ஆது, அ ஆகியவை ஆறாம் வேற்றுமை உருபுகள் ஆகும்.
இவ்வேற்றுமை, உரிமைப் பொருளில் வரும். உரிமைப் பொருளைக் கிழமைப் பொருள் என்றும் கூறுவர்.
(எ.கா.) இராமனது வில். நண்பனது கை.
ஆது, அ ஆகிய உருபுகளை இக்காலத்தில் பயன்படுத்துவது இல்லை.
ஏழாம் வேற்றுமை
ஏழாம் வேற்றுமைக்கு உரிய உருபு கண். மேல், கீழ், கால், இல், இடம் போன்ற உருபுகளும் உண்டு. இடம், காலம் ஆகியவற்றைக் குறிக்கும் சொற்களில் ஏழாம் வேற்றுமை உருபு இடம்பெறும்.
(எ.கா.) எங்கள் ஊரின்௧கண் மழை பெய்தது. இரவின்கண் மழை பெய்தது.
வீட்டின்கண் குழந்தை விளையாடுகிறது.
பெட்டிக்குள் பணம் இருக்கிறது.
கூரையின்மேல் சேவல் உள்ளது.
கட்டிலின்கீழ் நாய் படுத்துள்ளது.
இல் என்னும் உருபு ஐந்தாம்மேவற்றுமையிலும் ஏழாம் வேற்றுமையிலும் உண்டு. நீங்கல் பொருளில் வந்தால் ஐந்தாம் வேற்றுமை என்றும் இடப் பொருளில் வந்தால் எழாம் வேற்றுமை என்றும் கொள்ள வேண்டும்.
எட்டாம் வேற்றுமை
இது விளிப்பொருளில் வரும். படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக மாற்றி அழைப்பதையே விளி வேற்றுமை என்கிறோம். இவ்வேற்றுமைக்கு என்று தனியே உருபு கிடையாது. பெயர்கள் திரிந்து வழங்குவது உண்டு. அண்ணன் என்பதை அண்ணா என்றும் புலவர் என்பதைப் புலவரே என்றும் மாற்றி வழங்குவது எட்டாம் வேற்றுமை ஆகும்.
அதற்கு உருபு இல்லை. இதனை “விளி வேற்றுமை” என அழைப்பர்.
(எ.கா) கந்தா வா!
இத்தொடரில் கந்தன் என்னும் சொல்லில் இறுதி (ன்) எழுத்தானது கெட்டு, அதன் அயல் எழுத்து (த – தா என) நீண்டு அழைத்தற் பொருளைத் தருகிறது. இவ்வாறு பெயர்ச்சொல் சில மாற்றங்களுடன் அழைத்தற் பொருளில் வருவதனை “விளி வேற்றுமை” என்பர்.
வ.எண்
|
வேற்றுமை
|
உருபு
|
சொல்லுருபு
|
பொருள்
|
1
|
முதல் (எழுவாய்) | இல்லை | ஆனவன், ஆவான், ஆகின்றவன் | பயனிலை ஏற்றல் |
2
|
இரண்டாம் | ஐ | இல்லை | செயப்படுபொருள் |
3
|
மூன்றாம் | ஆல், ஆன், ஓடு, ஒடு | கொண்டு,வைத்து, உடன், கூட | கருவி, கருத்தா, உடனிகழ்ச்சி |
4
|
நான்காம் | கு | ஆக, பொருட்டு, நிமித்தம் | கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை |
5
|
ஐந்தாம் | இல், இன் | இலிருந்து, நின்று, காட்டிலும், பார்க்கிலும் | நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது |
6
|
ஆறாம் | அது, ஆது, அ | உடைய | கிழமை |
7
|
ஏழாம் | கண் | — | இடம், காலம் |
8
|
எட்டாம்(விளி) | இல்லை | இல்லை | விளி (அழைத்தல்) |
1. மூன்றாம் வேற்றுமை | மண்ணால் குதிரை செய்தான். |
2. நான்காம் வேற்றுமை | இராமனுக்குத் தம்பி இலக்குவன். |
3. ஐந்தாம் வேற்றுமை | ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன். |
4. ஆறாம் வேற்றுமை | பாரியினது தேர் |
யாப்பு இலக்கணம்
மரபுக்கவிதைகள் எழுதுவதற்கான இலக்கணம் யாப்பு இலக்கணம்.
யாப்பு இலக்கணத்தின்படி செய்யுளுக்கு உரிய உறுப்புகள் ஆறு. அவை
- எழுத்து
- அசை
- சீர்
- தளை
- அடி
- தொடை
எழுத்து
யாப்பிலக்கணத்தின்படி எழுத்துகளை மூன்றாகப் பிரிப்பர். அவையாவன:
குறில் – உயிர்க்குறில், உயிர்மெய்க்குறில்
நெடில் – உயிர்நெடில், உயிர்மெய் நெடில்
ஒற்று – மெய்யெழுத்து, ஆய்த எழுத்து
அசை
எழுத்துகள் ஒன்றோ சிலவோ சேர்ந்து அமைவது அசை. அது நேரசை, நிரையசை என இருவகைப்படும்.
குறில் அல்லது நெடில் எழுத்து, தனித்து வந்தாலும் ஒற்றுடன் சேர்ந்து வந்தாலும் நேரசையாகும்.
(எ.கா.) ந, நம், நா, நாம்.
இரண்டு குறில்எழுத்துகள் அல்லது குறில், நெடில் எழுத்துகள் இணைந்து வந்தாலும் அவற்றுடன் ஒற்றெழுத்து சேர்ந்து வந்தாலும் நிரையசையாகும்.
(எ.தா.) கட, கடல், கடா, கடாம்.
சீர்
ஓர் அசையோ ஒன்றுக்கு மேற்பட்ட அசைகளோ சேர்ந்து அமைவது சீர். சீர்களை ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர் என வகைப்படுத்துவர்.
தளை
சீர்கள் ஒன்றோடு ஒன்று பொருந்துவதைத் தளை என்பர். முதல் சீரின் இறுதியிலும் வரும்சீரின் முதலிலும் உள்ள அசைகள் எவ்வகை அசைகள் என்பதன் அடிப்படையில், தளைகள் ஏழு வகைப்படும்.
அடி
இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டு அமைவது அடி ஆகும். அடி ஐந்து வகைப்படும்.
தொடை
செய்யுளில் ஓசைஇன்பமும் பொருள்இன்பமும் தோன்றும் வகையில் சீர்களுக்கு இடையிலோ, அடிகளுக்கு இடையிலோ அமையும் ஒற்றுமையே தொடை ஆகும். தொடை எட்டு வகைப்படும். முதன்மையான தொடைகள் வருமாறு:
- முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை.
- இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை.
- இறுதி எழுத்து அல்லது இறுதி ஓசை ஒன்றிவரத் தொடுப்பது இயைபு.
- ஒரு பாடலின் இறுதிச்சீர் அல்லது அடியின் இறுதிப்பகுதி அடுத்த பாடலின் முதல்சீர் அல்லது அடியின் முதலில் வருமாறு பாடப்படுவது அந்தாதித் தொடை.
பாவகைகள்
பா நான்கு வகைப்படும். அவை வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா.
* வெண்பா செப்பல் ஓசை உடையது. அறநூல்கள் பலவும் வெண்பாவால் அமைந்தவை.
* ஆசிரியப்பா அகவல் ஓசை உடையது. சங்க இலக்கியங்கள் பலவும் ஆசிரியப்பாவால் அமைந்தவை.
* கலிப்பா துள்ளல் ஓசை உடையது. கலித்தொகை கலிப்பாவால் ஆனது.
* வஞ்சிப்பா தூங்கல் ஓசை உடையது.
இலக்கணக்குறிப்பு
- எத்தனை எத்தனை – அடுக்குத்தொடர்
- விட்டு விட்டு – அடுக்குத்தொடர்
- ஏந்தி – வினையெச்சம்
- காலமும் – முற்றுமரம்
அணி இலக்கணம்
செய்யுளுக்கு அழகு தருவனவாகிய அணிகள்.
பிறிதுமொழிதல் அணி
உவமையை மட்டும் கூறி, அதன் மூலம் கூறவந்த கருத்தை உணரவைப்பது பிறிதுமொழிதல் அணி எனப்படும்.
(எ.கா.) கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து
“நிலத்தில் ஓடும் தேர் கடலில் ஓடாது. கடலில் ஓடும் கப்பல் நிலத்தில் ஓடாது” என்று உவமையை மட்டும் கூறுகிறது. இதன்மூலம் ஒவ்வொருவரும் தமக்கு உரிய இடத்தில் வெற்றி பெறமுடியும்: தமக்குப் பொருத்தமில்லாத இடத்தில் வெற்றிபெறுதல் இயலாது எனவே இக்குறட்பாவில் பிறிதுமொழிதல் அணி இடம்பெற்றுள்ளது.
வேற்றுமை அணி
இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி, பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமையணி எனப்படும்.
(எ.கா.) தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
முதலில் நெருப்பு, கொடுஞ்சொல் ஆகிய இரண்டும் சுடும்தன்மை உடையவை என்று கூறப்படுகிறது. பின்னர், நெருப்பினால் சுட்ட காயம் ஆறிவிடும்;
உள்ளத்தில் ஏற்பட்ட வடு ஆறாது என்று இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு கூறப்படுகிறது. எனவே இது வேற்றுமை அணி ஆகும்.
இரட்டுறமொழிதல்அணி
ஒரு சொல் அல்லது தொடர் இருபொருள் தருமாறு அமைவது இரட்டுற மொழிதல் ஆகும். இதனைச் சிலேடை என்றும் கூறுவர்.
(எ.கா.) ஓடும் இருக்கும் அதனுள்வாய் வெளுத்திருக்கும்.
நாடுங் குலைதனக்கு நாணாது – சேடியே
தீங்காயது இல்லா திருமலைரா யன்வரையில்
தேங்காயும் நாயும்நேர் செப்பு
நாய் சில நேரம் ஓடும்; பின் சில நேரம் நின்று இருக்கும், தேங்காய்க்கு ஓடு இருக்கும். நாயின் உள் நாக்கு வெள்ளையாய் இருக்கும். தேங்காயின் உள்புறம் வெள்ளையாய் இருக்கும். நாய் குலைப்பதற்கு வெட்கப்படுவதேயில்லை (நாணம்). தேங்காய் குலையில் தொங்குவதால் வளைவதில்லை (நாணாது).தோழி..! தீமை இல்லாத திருமலைராயன் வாழும் மலைப்பகுதியில், தேங்காயும், நாயும் ஒன்று.
பதம் என்றாலும் சொல் என்றாலும் ஒன்றே மொழி, தனித்து நின்று பொருள் தந்தால், அஃது ஓரெழுத்து ஒருமொழி எனப்படும். இவை நாற்பத்திரண்டு உள்ளன
பகுக்க இயலும் சொற்களைப் பகுபதம் என்பர். அவ்வாறு பகுக்கும்போது இரண்டுமுதல் ஆறு உறுப்புகளாக அச்சொல்லைப் பிரிக்கலாம். அவ்வுறுப்புகளின் பெயர்களாவன: பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்.
தமிழ் இலக்கணத்தில் பகாப்பதம் என்பது மேலும் பொருள்தரக்கூடிய சொற்களாகப் பிரிக்கமுடியாத சொல் பகாப்பதம் எனப்படும். பகா என்பது பிரிக்கமுடியாது என்றும், பதம் என்பது சொல் என்றும் இங்கு பொருள் தருகின்றன.
வழக்கு
நம் முன்னோர் எந்தப்பொருளை எந்தச்சொல்லால் வழங்கி வந்தனரோ, அதனை அப்படியே நாமும் வழங்கி வருவதற்கு வழக்கு என்று பெயர். இஃது இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என இருவகைப்படும்.
இயல்புவழக்கு
ஒரு பொருளைச் சுட்டுவதற்கு, எந்தச் சொல் இயல்பாக வருகிறதோ, அந்தச் சொல்லாலேயே வழங்குவதை இயல்பு வழக்கு என்பர். இதனை இலக்கணமுடையது, இலக்கணப்போலி, மரூஉ என மூவகையாகக் கூறுவர்.
இலக்கணமுடையது என்றால் இலக்கணப்பிழை இல்லாமல் வழங்கி வருவதனை இலக்கணமுடையது என்பர். சான்றாக, யாழினி பாடம் படித்தாள்
இலக்கணப்போலி என்றால் நகர்ப்புறம், கால்வாய், கொம்பு நுனி போன்ற இலக்கணமுடைய சொற்களைப் புறநகர், வாய்க்கால், நுனிக்கொம்பு என மாற்றி, இலக்கணமுடையதுபோல வழங்கி வருவதனை “இலக்கணப்போலி” என்கிறோம்.
மரூஉ என்றால் ஒரு சொல் காலவோட்டத்தில் ஒரு மெலிய மாற்றம் பெறுதல் மரூஉ எனப்படும். சான்றாக, தஞ்சை, கோவை இவற்றை மரூஉ என அழைக்கிறோம்.
தகுதி வழக்கு
பொருள்களுக்கு அல்லது செயல்களுக்கு இயல்பாய் அமைந்த சொற்களை வழங்குவது தகுதியன்று எனக்கருதி, அவற்றை ஒழித்து (மறைத்து) தகுதியான வேறு சொற்களால் அப்பொருள்களை அல்லது செயல்களை வழங்குதல் தகுதி வழக்கு எனப்படும். அனைவரின் முன்னும் பேசத்தாகாத சொற்களுக்குப் பதிலியாக தகுதியான சொற்களைப் பேசுதலாகும். இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி என மூவகையாகக் கூறுவர்.
இடக்கரடக்கல்
பலர் முன்னே கூறுவதற்கு இடர்ப்பாடாகத் தோன்றும் சொற்களை நீக்கித் தகுந்த சொற்களால், அப்பொருளைத் தெரிவிப்பது இடக்கரடக்கல் என்பர். சான்றாக, “வாய் கழுவி வந்தேன்” என்னும் இத்தொடரை நீக்கி, “வாய்பூசி வந்தேன்” எனக் கூறுவர்.
மங்கலம்
அமங்கலமான சொல்லை நீக்கி மங்கலமான சொல்லால் அப்பொருளை வழங்குவது “மங்கலம்’ என்பர். சான்றாக, இறந்தாரை இறைவனடி சேர்ந்தார் எனக் கூறுவர்
குழூஉக்குறி
ஒரு குழுவினர் தமக்கு மட்டும் புரியும்வகையில், ஒரு பொருளுக்குக் குறிப்பாக வழங்கும் பெயரைக் குழூஉக்குறி என்பர். சான்றாகப் பொற்கொல்லர் பொன்னைப் ‘பறி’ என்பர்.
தொகை நிலைத்தொடர்
தொகை நிலைத்தொடர் அறுவகைப்படும். 1. வேற்றுமைத்தொகை, 2. வினைத்தொகை, 3. பண்புத்தொகை, 4. உவமைத்தொகை, 5. உம்மைத்தொகை, 6. அன்மொழித்தொகை.
1. வேற்றுமைத்தொகை
கண்ணனை இராமன் பார்த்தான் – என்னும் இத்தொடரில் ஐ என்னும் உருபு யார், யாரைப் பார்த்தான் எனப் பெயரை வேறுபடுத்திக் காட்டுவதனால், வேற்றுமை என்கிறோம். பெயரின் பொருளை வேறுபடுத்திக் காட்டும் உருபுக்கு வேற்றுமை உருபு என்பது பெயர். இவ்வேற்றுமைகள் எண்வகைப்படும். இவற்றுள் முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபு இல்லை. மற்ற வேற்றுமைகளுக்கு உருபுகள் உண்டு. அவை ஐ, ஆல், கு, இன், அது, கண் என்பன. இரண்டாம் வேற்றுமை உருபுமுதல் ஏழாம் வேற்றுமை உருபுவரை உள்ளனவற்றுள் ஏதேனும் ஒன்று வேற்றுமை உருபாய் வரும். இருசொற்களுக்கிடையே இவ்வேற்றுமை உருபு மறைந்து வருவதனை வேற்றுமைத்தொகை என்கிறோம்.
- பால் பருகினான் – இரண்டாம் வேற்றுமைத்தொகை (பால்+ஐ+பருகினான்- இங்கு ஐ என்னும் உருபு மறைந்துள்ளது)
- தலை வணங்கினான் – மூன்றாம் வேற்றுமைத்தொகை (தலை + ஆல் + வணங்கினான்)
- வேலன் மகன் – நான்காம் வேற்றுமைத்தொகை (வேலன் + கு + மகன்)
- ஊர் நீங்கினான் – ஐந்தாம் வேற்றுமைத்தொகை (ஊர் + இன் + நீங்கினான்)
- செங்குட்டுவன் சட்டை – ஆறாம் வேற்றுமைத்தொகை (செங்குட்டுவன் + அது + சட்டை)
- குகைப்புலி – ஏழாம் வேற்றுமைத்தொகை (குகை + கண் + புலி)
2. வினைத்தொகை
உண்கலம் இத்தொடரை உண்டகலம் உண்கின்ற கலம், உண்ணும் கலம் என முக்காலத்திற்கும் ஏற்பப் பொருள் கொள்ளலாம். ஆடுகொடி, பாய்புலி, அலைகடல் ஆகிய தொடர்கள் வினைத்தொகை பயின்று வந்த தொடர்கள். இவ்வாறு காலங்காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சம், வினைத்தொகை எனப்படும். காலங்கரந்த பெயரெச்சம் வினைத்தொகை – நன்னூல், 364
3. பண்புத்தொகை
வெண்ணிலவு, சதுரக்கல், இன்சுவை இச்சொற்றொடர்கள் பெயர்ச்சொற்களோடு சேர்ந்து வரும்போது இரண்டிற்கும் இடையில் “ஆகிய, ஆன” என்னும் பண்பு உருபுகளும் “மை’ விகுதியும் தொக்கி (மறைந்து) வந்துள்ளன. எனவே, இவை பண்புத்தொகை பயின்று வந்த தொடர்கள். (எ.கா) வெண்மை – நிலவு – வெண்ணிலவு. இருபெயரொட்டுப் பண்புத்தொகை. எடுத்துக் காட்டாக, மல்லிகைப்பூ என்னும் சொல் மல்லிகை என்பது சிறப்புப்பெயர். பூ என்பது பொதுப்பெயர். இரண்டுக்கும் இடையில் ஆகிய என்னும் பண்பு உருபு மறைந்து வந்துள்ளது. எனவே, இஃது இருபெயரொட்டுப் பண்புத்தொகை எனப்படும்.
4. உவமைத்தொகை
“கயல்விழி”. இச்சொல்லில் கயல், விழி என இரண்டு சொற்கள் உள்ளன. இவ்விரு சொற்களுக்கு இடையே போன்ற என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது. இதனை உவமைத்தொகை
5. உம்மைத்தொகை
கபிலபரணார், உற்றார் உறவினர் இத்தொடர்கள் கபிலரும் பரணரும், உற்றாரும் உறவினரும் என விரிந்து பொருளை உணர்த்துகின்றன. இடையிலும் இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து வந்து பொருள்தருவதனால், உம்மைத் தொகை எனப்பட்டது.
6. அன்மொழித்தொகை
“கயல்விழி வந்தாள்”. இத்தொடரில் முதலில் உள்ள “கயல்போன்ற விழியை உடைய பெண் வந்தாள்” எனப் பொருள் இதில் “உடைய’, “பெண்” என்னும் சொற்கள் தொடரில் இல்லாதவை. இவ்வாறு உவமைத்தொகையை அடுத்து அல்லாதமொழி தொக்கி வருவதனால் இத்தொடரை உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை என்கிறோம். இதனைப்போன்று வேற்றுமை, வினை, பண்பு, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களுக்குப் புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கி நின்று பொருள் தருவது அன்மொழித்தொகை ஆகும்.
தொகாநிலைத்தொடர்
“இளமுருகன் படிக்கிறான்” இளமுருகன் என்னும் எழுவாயும், “படிக்கிறான்” என்னும் பயனிலையும் தொடர்ந்து நின்று பொருளைத் தருகின்றன. இவ்வாறு ஒரு தொடரில் இருசொற்கள் அமைந்து, இரண்டிற்கும் இடையில் சொல்லோ உருபோ மறையாது பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் எனப்படும்.
1. கபிலன் வந்தான் – இச்சொற்றொடரில் “கபிலன்”என்னும் எழுவாயைத் தொடர்ந்து “வந்தான்” என்னும் பயனிலை வந்துள்ளதனால், இஃது எழுவாய்த்தொடர்.
2. கதிரவா வா! – இது விளித்தொடர்.
3. கண்டேன் சீதையை – வினைழுற்று முதலில்வந்து பெயரைத் தொடர்கிறது. அதனால், இது வினைமுற்றுத்தொடர்.
4. விழுந்த மரம் – “விழுந்த” என்னும் எச்சவினை “மரம்” என்னும் பெயர்ச்சொல்லோடு முடிவதனால், இது பெயரெச்சத்தொடர்.
5. வந்துபோனான் – “வந்து” என்னும் எச்சவினை “போனான்” என்னும் வினைமுற்றைக்கொண்டு முடிந்துள்ளதனால், இது வினையெச்சத்தொடர்.
6. வீட்டைக் கட்டினான் – இத்தொடரில் “ஐ” என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்துள்ளதனால், இது வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்.
7. மற்றொன்று – மற்று + ஒன்று. “மற்று” என்னும் இடைச்சொல்லை அடுத்து “ஒன்று” என்னும் சொல் தொடர்ந்து வந்ததனால் இஃது இடைச்சொற்றொடர்.
8. மாமுனிவர் – இத்தொடரில் “மா” என்பது உரிச்சொல். இதனைத் தொடர்ந்து, “முனிவர்” என்னும் சொல் வந்துள்ளதனால், இஃது உரிச்சொற்றொடர்.
9. வாழ்க வாழ்க வாழ்க – ஒரே சொல் இங்குப் பலமுறை அடுக்கி வந்துள்ளதனால், இஃது அடுக்குத்தொடர்.
இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர்
“பாம்புபாம்பு” என்பது அடுக்குத்தொடர். பிரித்தால் பொருள்தரும். இஃது இரண்டு, மூன்று, நான்கு முறையும்கூட அடுக்கிவரும். அடுக்குத்தொடர் விரைவு, வெகுளி, உவகை, அச்சம், அவலம் ஆகிய பொருள் காரணமாக வரும்.
“கலகல” என்பது இரட்டைக்கிளவி. இஃது இரட்டைச்சொல்லாகவே வரும்; பிரித்தால் பொருள் தராது. இரட்டைக்கிளவி அடைமொழியாய்க் குறிப்புப்பொருளில் வரும்.
ஆகுபெயர்
ஒன்றன் இயற்பெயர் தன்னைக் குறிக்காமல், தன்னோடு தொடர்புடைய வேறொரு பொருளுக்கு ஆகி வந்துள்ளது. இவ்வாறு வருவதற்கு ஆகுபெயர் என்பது பெயர். ஆகுபெயர் பலவகைப்படும். முதலில், முதல் ஆறுவகை ஆகுபெயர்கள் 1.முதலாகு பெயர், 2. இடவாகு பெயர், 3. காலவாகு பெயர், 4. சினையாகு பெயர், 5. குணவாகு பெயர், 6. தொழிலாகு பெயர்.
1.முதலாகு பெயர்
“மல்லிகை சூடினாள்” – மல்லிகை என்பது கொடியாகிய முதற்பொருளைக் குறிக்காமல் பூ, என்னும் சினையைக் குறிக்கிறது. இவ்வாறு முதற்பொருள் சினைக்கு (உறுப்புக்கு) ஆகி வருவது, முதலாகு பெயர் எனப்படும். இதனைப் பொருளாகுபெயர் எனவும் கூறுவர்.
2. இடவாகு பெயர்
“நேற்றுப் பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெற்ற பள்ளி, பூண்டிப் பள்ளி” – பள்ளி என்னும் இடப்பெயர், அப்பள்ளியில் பயிலும் மாணவிக்கு ஆகி வந்தது. அதனால், இஃது இடவாகு பெயர்.
3. காலவாகு பெயர்
“திசம்பர் பூ” – திசம்பர் என்னும் மாதப்பெயர், அம்மாதத்தில் பூக்கும் பூவிற்கு ஆகி வந்தது. அதனால், இது காலவாகுபெயர்.
4. சினையாகு பெயர்
“வெற்றிலை நட்டான்”- இத்தொடரில் உள்ள வெற்றிலை என்பது சினையாகிய இலையைக் குறிக்காமல், அதன் முதல் பொருளாகிய கொடிக்கு ஆகி வந்தது. அதனால், இது சினையாகு பெயர்.
5. குணவாகு பெயர்
“பொங்கலுக்கு முன் வீட்டுச் சுவர்களுக்கு வெள்ளை அடிப்போம்” – வெள்ளை நிறத்தைக் குறிக்காமல், சுண்ணாம்பைக் குறித்து வந்தது. அதனால், இது பண்பாகு பெயர். இதனைக் குணவாகுபெயர் எனவும் கூறுவர்.
6. தொழிலாகு பெயர்
“பொங்கல்” – இங்குப் பொங்கல் என்பது பொங்குதலாகிய தொழிற்பெயர். இத்தொழிற் பெயர் தொழிலைக் குறிக்காமல், அத்தொழிலால் ஆகும் உணவைக் குறித்தது. அதனால், இது தொழிலாகு பெயர்.