Blog

உள்ளாட்சி

Class 64 இந்திய ஆட்சியியல்

உள்ளாட்சி

நமது இந்தியநாடு மிகப்பெரிய நிலப் பரப்பைக் கொண்டது. இங்கு மக்கள்தொகை மிக அதிகம். இங்கு வாழும் மக்கள் கிராமங்களிலும், பேரூர்களிலும், நகரங்களிலும் வாழ்கிறார்கள். இவ்வாறு பரந்து விரிந்த நிலப் பரப்பில் வாழ்கின்ற கோடிக்கணக் கானவர்களின் தேவைகள், பிரச்சனைகள் அனைத்தையும், மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள அரசுகளினால் மட்டுமே தீர்த்து வைக்க இயலுவதில்லை. நாட்டின் தொலைதூரத்தில் உள்ள மக்களுக்குச் சேவை செய்வதற்கே உள்ளாட்சி நிருவாக அமைப்புகள் இந்தியாவில்
அமைக்கப்பட்டுள்ளன.

ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி, மாவட்ட ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய அமைப்புகளும் மக்கள் பிரதிநிதிகளுடன் செயல்படுகின்றன. இந்த அமைப்பிற்கு ‘உள்ளாட்சி நிருவாகம்’ என்று பெயர். ஆங்கிலேய ஆட்சியாளர் ‘ரிப்பன் பிரபு’ என்பவர் உள்ளாட்சி அமைப்புமுறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்தினார்.

கிராம ஊராட்சி
கிராமங்களில் செயல்படும் உள்ளாட்சி அமைப்பு கிராம ஊராட்சி ஆகும். இதன் தலைவர், பகுதி (வார்டு) உறுப்பினர்கள், மன்ற உறுப்பினர்கள் (கவுன்சிலர்) ஆகியோர் மக்களால் நேரடியாகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி உறுப்பினர்களுள் ஒருவரே துணைத்தலைவராக அவர்களாலேயே தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவர்களது பதவிக்காலம் 5 ஆண்டுகள்.

ஊராட்சி மன்றத்தின் நிறைவேற்றப்படும் பணிகள்
• தெரு விளக்குகள் அமைத்தல்.
• ஊர்ச் சாலைகள் அமைத்தல்
• குடிநீர் வழங்குதல்
• கழிவு நீர்க்கால்வாய் அமைத்தல்.
• சிறிய பாலங்கள் கட்டுதல்.
• வீட்டுமனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குதல்.
• கிராம நூலகங்களைப் பராமரித்தல்.
• தொகுப்பு வீடுகள் கட்டுதல்.
• இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு மைதானங்களை நிறுவுதல், பராமரித்தல் ஆகியன ஆகும்.

வருவாய்
• வீட்டு வரி, தொழில் வரி, கடைகள் மீது விதிக்கப்படும் வரி.
• குடிநீர் குழாய் இணைப்புக் கட்டணம்.
• நில வரியிலிருந்து குறிப்பிட்ட பங்கு.
• சொத்துரிமை மாற்றத்தின் மீதான வரியிலிருந்து ஒரு பங்கு.
ஆகியவை கிராம வளர்ச்சிக்கு செலவிடப்படுகின்றன. இவற்றால் வரும் வருவாய் மட்டுமே போதாது. எனவே, மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்ட நிதிகளையும், மானியங்களையும், உதவித் தொகைகளையும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமாக ஊராட்சிகளுக்கு வழங்குகின்றன.

ஊர்மன்றக் கூட்டம்
ஒவ்வொரு கிராமத்திலும் ‘ஊர் மன்றக் கூட்டம்’ (கிராம சபை) அமைக்கப் பட்டுள்ளது. ஊராட்சி எல்லைக்குட்பட்ட மக்கள் அனைவரும் அதன் உறுப்பினர்கள். கிராமத்தின் வளர்ச்சிக்குரிய திட்டங்கள், ஆண்டு வரவு, செலவுத் திட்டங்கள், திட்டங்களின் பயனாளிகள் யார்? என்பது போன்ற அனைத்தும் ஊர்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பிறகுதான்
நடைமுறைப்படுத்தப்படும். ஊர் மன்றக் கூட்டங்கள் ஆண்டுக்கு நான்கு முறை கூடுகின்றன:
ஜனவரி 26               – குடியரசு நாள்.
மே 1                          – தொழிலாளர் நாள்.
ஆகஸ்ட் 15             – விடுதலை நாள்.
அக்டோபர் 2         – மகாத்மா காந்தி பிறந்த நாள்.   அனைவரும் கலந்து கொள்ள வசதியாக விடுமுறை நாட்களில் ஊர்மன்றக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. மிகவும் அவசரமாக ஏதேனும் திட்டங்களுக்கு ஒப்புதல் பெற வேண்டுமானால் சிறப்பு ஊர்மன்றக் கூட்டங்கள் கூட்டப்படும்.

ஊராட்சி ஒன்றியம்
பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு அமைக்கப்படுவது “ஊராட்சி ஒன்றியம்” ஆகும். தேர்தல் மூலம் ஐந்தாயிரம் மக்கள் தொகைக்கு ஒரு பிரதிநிதி வீதம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். இவர்களில் ஒருவர் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவராக உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுகிறார்.

ஊராட்சி ஒன்றியங்கள் செய்யும் பணிகள்
• ஊராட்சி ஒன்றியச் சாலைகளைப் பராமரித்தல்.
• குடிநீர் வழங்குதல்.
• ஊரக மருத்துவமனைகளை ஏற்படுத்துதல்.
• தொடக்கப் பள்ளிக் கட்டடங்களைப் பழுது பார்த்தல்.
• தாய் – சேய் நல விடுதிகளை நடத்துதல்.
• பொதுச் சந்தைகளை ஏற்படுத்துதல்.
• கால்நடை மருந்தகங்களை ஏற்படுத்துதல்.
• வேளாண்மைக் கருவிகள், உரங்கள் போன்றவற்றை வழங்குதல்.
• சமூகக் காடுகளை வளர்த்தல் விரிவாக்குதல்.

ஊராட்சி ஒன்றியத்தின் பணிகளை மேற்பார்வை செய்யவும், கண்காணிக்கவும் மாவட்ட நிருவாகத்தின்கீழ் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உள்ளது. மாவட்ட ஆட்சியர், திட்ட அலுவலர், அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் இந்த முகமை மூலமாகப் பணிகளை விரைந்து நிறைவேற்றுவர்.

மாவட்ட ஊராட்சி
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மாவட்ட ஊராட்சி அமைக்கப்பட்டுள்ளது. 50,000 மக்கள் தொகைக்கு ஒருவர் என்ற அடிப்படையில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். அவர்களுள் ஒருவரை மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவராக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். இவர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள்.

மாவட்ட ஊராட்சியின் கடமைகள்
மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களின் வளர்ச்சித் திட்டங்கள், மாவட்டச் சாலைகளின் மேம்பாடு குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்குதல், வளர்ச்சித் திட்டங்களைக் கண்காணித்தல் ஆகியன.

மாவட்டத் திட்டக்குழு
மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவரே இதன் தலைவராகவும் செயல்படுவார். இதன் உறுப்பினர்களை உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தேர்தல்மூலம் தேர்ந்தெடுக்கின்றனர். அந்தந்த மாவட்ட, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் இக்குழுவின் உறுப்பினர்கள். மாவட்டம் முழுமைக்குமான வளர்ச்சித் திட்டம் தயாரித்து, மாநிலத் திட்டக் குழுவிற்கு அனுப்பி வைப்பது மாவட்டத் திட்டக் குழுவின் கடமை ஆகும்.

கிராமப்புற உள்ளாட்சி நகர்ப்புற உள்ளாட்சி
ஊராட்சி பேரூராட்சி
ஊராட்சி ஒன்றியம் உள்ளாட்சி நகராட்சி
மாவட்ட ஊராட்சி மாநகராட்சி

பேரூராட்சி

பத்தாயிரம் மக்கள் தொகைக்கும் மேலுள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படுகின்றன. இதன் தலைவரும் உறுப்பினர்களும் மக்களால் நேரடியாகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பேரூராட்சி நிருவாகத்தைச் செயல் அலுவலர் கவனித்துக் கொள்கின்றார்.

நகராட்சி
ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையுள்ள பேரூர்கள் ‘நகராட்சிகள்’ ஆகச் செயல்படுகின்றன. இவற்றின் தலைவரும், உறுப்பினர்களும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்களின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள். நகராட்சி ஆணையர் இதன் நிருவாக அலுவலர் ஆவார்.

மாநகராட்சி
பல இலட்சம் மக்கள் தொகையும், பல்வேறு அலுவலகங்களும் அமைந்துள்ள பகுதிகளை மாநகராட்சிகள் எனச் சொல்கிறோம். மாநகராட்சித் தலைவர் ‘மேயர்’ எனப்படுகிறார். மாநகராட்சியின் நிருவாக அலுவலர் ஆணையர் எனப்படுகிறார். மாநகராட்சித் தலைவர், உறுப்பினர் ஆகியவர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories