Blog

எதுகை

Old Syllabus

எதுகை

எதுகை

ஒரு சீரில் இரண்டாவது எழுத்து

ஒன்றி  வருவது எதுகை எனப்படும்.

எடுத்துக்காட்டாக ,

  • பஞ்சம்
  • மஞ்சம்
  • தஞ்சம்
  • வஞ்சம்

எல்லா எழுத்துக்களிலும் இரண்டாவது எழுத்து

‘ ஞ்’   வந்துள்ளது இப்படி இரண்டாவது

எழுத்து ஒன்றிவருவது எதுகையாகும்.

இப்போது நம் மனதில் இரண்டாவது

எழுத்து எல்லா சீரிலும் வந்தால் மட்டும்தான்

எதுகையா ?என்ற கேள்வி எழலாம்.

எதுகை இரண்டு வகைப்படும்

  • அடி எதுகை
  • சீர் எதுகை

அடி எதுகை :

அடிதோறும் இரண்டாம் எழுத்து

ஒன்றி வருவது அடி எதுகை எனப்படும்.

“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு”

என்ற குறளில்

முதலடியில் உள்ள முதல் சீர் ‘அகர’ என்ற சொல்

உள்ளது.

இரண்டாவது அடியில் உள்ள முதல் சீரில்

‘பகவன்’ என்ற சொல் உள்ளது. இப்போது

அகர

பகவன்

இரண்டு சொற்களிலும் இரண்டாவது

எழுத்தாக ‘க’ ஒன்று போல் வந்துள்ளது.

இது அடி எதுகை எனப்படும்.

சீர் எதுகை:

சீர்தோறும் இரண்டாவது எழுத்து ஒன்றி

வருவது சீர் எதுகை எனப்படும்.

சீர் எதுகை ஏழு வகைப்படும்.

  • இணை எதுகை
  • பொழிப்பு எதுகை
  • ஒரூஉ எதுகை
  • கூழை எதுகை
  • கீழ்க்கதுவாய் எதுகை
  • மேற்கதுவாய் எதுகை
  • முற்று எதுகை

1 .இணை எதுகை:(  1,  2 )

ஒரு அடியின் முதல் இரு சீர்களிலும் இரண்டாவது

எழுத்து ஒன்றி வருவது இணை எதுகை எனப்படும்.

எடுத்துக்காட்டாக

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

செய்யாமை செய்யாமை நன்று .

2.  பொழிப்பு எதுகை : ( 1,  3 )

ஒரு அடியின் முதல் சீரிலுள்ள இரண்டாம் எழுத்தும்

மூன்றாம் சீரிலுள்ள இரண்டாம் எழுத்தும் ஒன்றி வருவது பொழிப்பு எதுகை எனப்படும்.

எடுத்துக்காட்டு:

“தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று ”

 3. ஒரூஉ எதுகை:  ( 1 , 4  )

ஒரு அடியின் முதல் சீரில் உள்ள இரண்டாம்

எழுத்தும் நான்காவது சீரில் உள்ள இரண்டாம்

எழுத்தும் ஒன்றி வருவது ஒரூஉ எதுகை எனப்படும்.

எடுத்துக்காட்டு:

துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்

வேண்டிய எல்லாம் தரும்.

4. கூழை எதுகை : ( 1,  2 ,  3 )

ஒரு அடியின் ஒன்று , இரண்டு ,மூன்று

சீர்களிலும் உள்ள

இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது கூழை எதுகை எனப்படும்.

எடுத்துக்காட்டு :

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு.

5. கீழ்க்கதுவாய் எதுகை :  ( 1 , 2  , 4 )

ஒரு அடியின் ஒன்று, இரண்டு மற்றும்

நான்காம் சீர்களில் உள்ள இரண்டாம்

எழுத்து ஒன்றி வருவது கீழ்க்கதுவாய் எதுகை எனப்படும்.

எடுத்துக்காட்டு :

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

6. மேற்கதுவாய் எதுகை :  ( 1 , 3 ,4 )

ஓர் அடியின்  ஒன்று,மூன்று மற்றும் நான்காம்

சீரில் இரண்டாவது எழுத்து ஒன்றி வருவது மேற்கதுவாய் எதுகை எனப்படும்.

எடுத்துக்காட்டு :

“கற்க  கசடற கற்பவை கற்றபின்

நிற்க  அதற்குத் தக”

7. முற்று எதுகை : (  1  ,  2  ,  3 , 4 )

ஓர் அடியின் முதல் நான்கு சீர்களிலுமே

இரண்டாவது எழுத்து ஒன்றி வருவது முற்று எதுகை எனப்படும்.

“துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்  துப்பார்க்குத்்

துப்பாய தூஉம் மழை ”

இவற்றைத்தவிர இன எழுத்துகளும் வர்க்க எழுத்துகளும் எதுகையாக வருவதுண்டு.

ஒரே மாதிரியான ஒலி உடைய இன எழுத்துகள் எதுகையாக வருவதுண்டு.

ண , ன , ந 

  • மணம்
  • மனம்

ல , ழ , ள

  • உழைப்பு
  • களைப்பு
  • மலைப்பு

இந்த சொற்களில் வந்துள்ள இரண்டாம் எழுத்தான ழை , ளை , லை மூன்றும் இன எதுகையாகக் கருதப்படும்.

வர்க்க எதுகை 

ஒரு எழுத்தின் அனைத்து வர்க்க எழுத்துகளுமே எதுகையாக வருவது வர்க்க எதுகை எனப்படும்.

இரண்டாவது எழுத்து ஒன்றி வருவது

எதுகை என்பது நமக்குத் தெரியும்.

அதற்காக முதல் எழுத்தை முற்றிலும்

புறம் தள்ளிவிட முடியாது.

முதல் எழுத்து குறிலாக இருந்தால்

இரண்டாவது எழுத்தும் குறிலாக

இருக்க வேண்டும்.

அதாவது அளவொத்திருக்க வேண்டும்.

  • ஆக்கம்
  • அக்கம்

என்று வரும்போது அது எதுகையாக அமையாது.

ஆக்கம் என்று எழுதினால்

தாக்கம் என்றுதான் எழுத வேண்டும்.

  • ஆடல்
  • பாடல்

என்று எழுத வேண்டும்.

  • படம்
  • பாடம்

என்று எழுதக் கூடாது என்பதை நினைவில் கொள்க.

 

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories