Blog

ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள்

Class 64 இந்திய ஆட்சியியல்

ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள்

நடுவண் அரசு 

இந்திய நாட்டின் உயர்ந்த அரசாங்க அமைப்பு நடுவண் அரசு ஆகும். இதன் தலைமையகம் புதுதில்லியில் அமைந்துள்ளது.

இந்திய அரசியலமைப்பின் பகுதி Vஇல் 52 முதல் 78 வரையிலான சட்டப்பிரிவுகள் நடுவண் அரசின் நிர்வாகம் பற்றி குறிப்பிடுகின்றன.

நடுவண் நிர்வாகம் என்பது குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதம அமைச்சரைத் தலைவராகக் கொண்ட அமைச்சரவைக் குழு மற்றும் இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் ஆகியோரை உள்ளடக்கியது ஆகும்.

நடுவண் சட்டமன்றமானது நாடாளுமன்றம் என்றழைக்கப்படுகிறது. இது இரண்டு அவைகளைக் கொண்டது. அவை மாநிலங்களவை (ராஜ்ய சபா) மற்றும் மக்களவை (லோக் சபா) ஆகியனவாகும். நடுவண் நீதித்துறை உச்ச நீதிமன்றத்தைக் கொண்டுள்ளது.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 77ன் படி நடுவண் அரசின் ஒவ்வொரு நிர்வாக நடவடிக்கையும் குடியரசுத் தலைவரின் பெயராலேயே மேற்கொள்ளப்பட வேண்டும்.

 

குடியரசுத் தலைவரின் சட்டமன்ற அதிகாரங்கள் – இலக்கியம், அறிவியல், விளையாட்டு, கலை மற்றும் சமூகப் பணி ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் 12 நபர்களைக் குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு நியமிக்கிறார். மேலும் ஆங்கிலோ-இந்தியர் சமூகத்தைச் 2 சேர்ந்த நபர்களை மக்களவையில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என்று கருதும்பட்சத்தில் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.

நீதி அதிகாரங்கள்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 72-வது சட்டப்பிரிவு நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஒருவரின் தண்டனையைக் குறைக்கவும், ஒத்திவைக்கவும், தண்டனையிலிருந்து விடுவிக்கவும், மன்னிப்பு வழங்கவும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.

இராணுவ அதிகாரங்கள்

நடுவண் அரசின் பாதுகாப்புப் படையின் தலைமைத் தளபதி என்ற அதிகாரத்தைச் சட்டப்பிரிவு 53(2) குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ளது. அவர் சட்டத்தின்படி இராணுவத்தை வழிநடத்துகிறார்.

இராஜதந்திர அதிகாரங்கள்

வெளிநாடுகளுக்கான இந்திய தூதர்களைக் குடியரசுத் தலைவர் நியமிப்பதோடு மட்டுமல்லாமல் அவர் இந்தியாவுக்கான வெளிநாட்டுத் தூதர்களையும் வரவேற்கிறார். வெளிநாடுகளுக்கான அனைத்து உடன்படிக்கைகளும் ஒப்பந்தங்களும் குடியரசுத் தலைவரின் பெயராலேயே நடைபெறுகின்றன.

நெருக்கடி நிலை அதிகாரங்கள்

நெருக்கடி நிலையை அறிவிக்கும் அதிகாரம் 352வது சட்டப்பிரிவிலும்,

மாநில அரசை கலைக்கும் அதிகாரம் 356வது சட்டப்பிரிவிலும்,

நிதி நெருக்கடியை அறிவிக்கும் அதிகாரம் 360வது சட்டப்பிரிவிலும் உள்ளது.

கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் அதிகபட்சமாக 9 முறை குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் நீக்கம்

குடியரசுத் தலைவர் தன்னுடைய பணித்துறப்பு கடிதத்தினை துணைக் குடியரசுத் தலைவரிடம் வழங்கலாம்.

சட்டப்பிரிவு 61இன் படி அரசியலமைப்பை மீறிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுவதன் மூலம் பதவி நீக்கம் செய்யப்படலாம். இவருக்கு எதிரான இக்குற்றச்சாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானமாக கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். மேலும் அவைக்கு வருகை புரிந்தவர்களில் நான்கில் ஒரு பங்கிற்குக் குறையாமல் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

குடியரசுத் தலைவர் தனது பதவிக்காலம் முடிந்தாலும் அவருக்குப் பின் ஒருவர் பதவியேற்கும் வரை அப்பதவியில் தொடரலாம்.

துணைக் குடியரசுத் தலைவர்

அரசியலமைப்பின் 63வது சட்டப்பிரிவு இந்திய துணைக் குடியரசுத் தலைவர் பதவியை வழங்குகிறது.

தேர்தல் மற்றும் பதவிக்காலம்

சட்டப்பிரிவு 66(1)இன் படி குடியரசுத் தலைவர் போலவே துணைக் குடியரசுத் தலைவரும் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாமல் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். துணைக் குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். பதவிக்காலம் முடியும் முன்னரே பணித்துறப்பு, இறத்தல், பணிநீக்கம் ஆகிய காரணங்களால் அவரது பதவி முடிவுக்கு வரலாம். அவர் மீண்டும் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கும் தகுதி உடையவராவார். மேலும் புதிய துணைக் குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை மாநிலங்களவையின் துணைத் தலைவர் துணைக் குடியரசுத் தலைவரின் பணிகளை மேற்கொள்வார்.

குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் பதவிகள் ஒரே சமயத்தில் காலியாக இருக்கும் பட்சத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குடியரசுத் தலைவரின் பணிகளைச் செயலாற்றுவார். 1969ஆம் ஆண்டு இத்தகைய ஒரு நிகழ்வின் போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி M.ஹிதயதுல்லா குடியரசுத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

முடிவு வாக்கு (Casting vote)

மாநிலங்களவையில் சட்ட மசோதாவின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பு சமநிலையில் இருக்கும் பட்சத்தில் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 100இன் படி துணைக் குடியரசுத் தலைவர் வாக்கு அளிக்கலாம். இது சட்ட மசோதாவின் ஒப்புதலுக்கு ஒரு வாக்கு மட்டுமே தேவை என்ற நிலையைக் குறிக்கிறது. அவருடைய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க எவருக்கும் உரிமை இல்லை.

பிரதம அமைச்சர்

அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 74(1) குடியரசுத் தலைவருக்கு உதவிடவும், அறிவுரை வழங்கிடவும் பிரதம அமைச்சரைத் தலைவராகக் கொண்ட ஒரு நடுவண் அமைச்சரவைக் குழு இருக்கும் எனக் குறிப்பிடுகிறது.

இந்தியாவின் பிரதம அமைச்சர் பதவியானது வெஸ்மின்ஸ்டர் அரசியலமைப்பு ஜனநாயக முறையில் இருந்து ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்

இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 76 இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரை நியமிக்க வழிவகை செய்கிறது. இவர் நாட்டின் உயர்ந்த சட்ட அதிகாரி ஆவார்.

இவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். உச்ச நீதிமன்ற நீதிபதியாகத் தேவையான தகுதிகளை இவரும் கொண்டிருக்க வேண்டும். அவர் எந்த நேரத்திலும் குடியரசுத் தலைவரால் பதவியிலிருந்து அகற்றப்படலாம் அல்லது அவர் குடியரசுத் தலைவருக்குப் பதவி விலகல் கடிதத்தை அளித்து பதவி விலகலாம்.

இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள்

இவர் குடியரசுத் தலைவரால் குறிப்பிடப்பட்ட சட்ட விவகாரங்கள் மீது இந்திய அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவார். இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்காடும் உரிமை இவருக்கு உண்டு.

நாடாளுமன்ற இரு அவைகளின் செயல்முறைகளிலும் பேசுவதற்கும், பங்கு கொள்ளுவதற்கும் இவருக்கு உரிமை உண்டு. நாடாளுமன்றத்தின் இரு அவையின் கூட்டத்திலோ அல்லது எந்தவொரு கூட்டுக் குழு கூட்டத்திலோ வாக்கு அளிக்கும் உரிமை இன்றி உறுப்பினராக இவர் இடம் பெறுவார். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்கக்கூடிய அனைத்து சலுகைகளையும், சட்ட விலக்களிப்புகளையும் இவரும் பெறுகிறார்.

நீதித்துறை

நடுவண் அரசாங்கத்தின் மூன்றாவது அங்கம் நீதித்துறை ஆகும். குடிமக்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதில் நீதித்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.

உச்ச நீதிமன்றம்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் உச்ச நீதிமன்றம் ஆகும். நடுவண், மாநில அரசுகளின் சட்டமன்ற, நிர்வாகப் பிரிவுகளிலிருந்து நீதித்துறை தன்னாட்சி பெற்று விளங்குகிறது.

ஒருங்கிணைந்த நீதித்துறை என்பது நாடு முழுவதும் நீதித்துறையானது ஒற்றை அதிகாரப் படிநிலையைக் கொண்டுள்ளதாகும்.

குடிமக்களின் உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாப்பதில் நீதித்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.

புதுதில்லியில் அமைந்துள்ள இந்திய உச்ச நீதிமன்றம் 1950 ஜனவரி 28ஆம் நாள் துவங்கப்பட்டது. இது 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட கூட்டாட்சி நீதிமன்றத்தைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் அமைப்பு

1950ஆம் ஆண்டு அரசியலமைப்பின் தொடக்கத்தில் ஒரு தலைமை நீதிபதி உட்பட 8 நீதிபதிகளை உச்ச நீதிமன்றம் கொண்டிருந்தது.

நீதிபதிகள் நியமனம்

இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியைக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.

மற்ற நீதிபதிகளைத் தலைமை நீதிபதியைத் தலைவராகக் கொண்ட மூத்த நீதிபதிகள் குழுவின் (Collegium) ஆலோசனையுடன் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிக்கான தகுதிகள்

அவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்

அவர் ஐந்து ஆண்டுகள் உயர் நீதிமன்ற நீதிபதி பதவியை வகித்துள்ளவராக இருத்தல் வேண்டும். (அல்லது) அவர் பத்து ஆண்டுகள் உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக செயலாற்றியிருத்தல் வேண்டும்.

குடியரசுத் தலைவர் பார்வையில் சிறப்பு மிக்க சட்ட வல்லுநராய் இருத்தல் வேண்டும்.

தற்காலிக அடிப்படையில் (ad-hoc basis) உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க அரசியலமைப்புச் சட்டம் வழிவகை செய்கிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட இதர நீதிபதிகள் 65 வயது வரை பதவியில் நீடிப்பர்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாக குடியரசுத் தலைவரிடம் பதவி விலகல் கடிதத்தை அளித்து பதவி விலகலாம் அல்லது பெருங்குற்றத்தின் மூலம் உண்டான கண்டனத் தீர்மானத்தின் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரத்தினை நாடாளுமன்றம் பெற்றுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் நிரந்தர தலைமையிடம் புதுதில்லியில் உள்ளது. எனினும் இந்தியக் குடியரசுத் தலைவரின் இசைவு பெற்று இந்தியத் தலைமை நீதிபதியின் முடிவின்படி வேறு எந்த மாநிலத்திலும் அல்லது எந்த ஒரு இடத்திலும் இந்நீதிமன்ற அமர்வு அமையலாம்.

உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்களும், பணிகளும்

தனக்கேயுரிய நீதி வரையறை

உச்ச நீதிமன்றத்திற்கு நேரடியாக வரும் வழக்குகள் தனக்கேயுரிய நீதி வரையறைக்கு உட்பட்டவை ஆகும். அவைகள்

  1. இந்திய அரசிற்கும் ஒரு மாநிலம் அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல்கள்
  1. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கிடையிலான சிக்கல்கள்
  1. அடிப்படை உரிமைகளை நடைமுறைப் படுத்துவது தொடர்பாக எழும் சிக்கல்கள் ஆகியன உச்ச நீதிமன்றத்தின் தனக்கேயுரிய நீதி வரையறைக்குட்பட்டதாகும்.

அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்திட நீதிப்பேராணைகளை உச்ச நீதிமன்றம் வழங்குகிறது.

மேல்முறையீட்டு நீதிவரையறை

உச்ச நீதிமன்றமே நாட்டின் இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றமாகும்.

மாநில உயர் நீதிமன்றங்கள் உரிமையியல், குற்றவியல் (Civil and Criminal) அரசியலமைப்பு வழக்குகள் மீதான தீர்ப்புகளுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரிக்கின்றது. அப்படிப்பட்ட வழக்குகளைத் தீர்க்க அரசியலமைப்புச் சட்டப்படி மேலும் சட்டவிளக்கம் தேவையென உயர் நீதிமன்றம் சான்றிதழ் அளித்தால் மட்டுமே அவ்வழக்குகளை உச்ச நீதிமன்றத்தின் முன் கொண்டு செல்ல முடியும்.

ஆலோசனை நீதிவரையறை

பொது முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு சட்டம் அல்லது உண்மை மீதான உச்ச நீதிமன்றத்தின் கருத்தினைப் பெற அரசியலமைப்புச் சட்டம் குடியரசுத் தலைவருக்கு அதிகாரத்தினை வழங்குகிறது.

இதர நீதிவரையறை

உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை இந்தியாவின் அனைத்துப் பகுதியிலுள்ள நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும்.

குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று நீதிமன்றத்தின் பொதுவான செயல்முறைகள், வழிமுறைகளை ஒழுங்குபடுத்தும் விதிகளை உருவாக்க உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நீதிப்புனராய்வு

ஒரு சட்டத்தினை அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என அறிவிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திடம் உள்ளது இது நீதிப்புனராய்வு (நீதிமன்ற மறுஆய்வு அதிகாரம்) எனப்படும். பின்வரும் தனிப்பட்ட நீதிமன்ற மறுஆய்வு அதிகாரங்களை உச்ச நீதிமன்றம் பெற்றுள்ளது. அவை

  1. நடுவண் அரசு, மற்றும் மாநிலங்களுக்கிடையிலான பிரச்சனைகள்.
  2. அரசியலமைப்புச் சட்டத்தில் ஏற்படும் சந்தேகங்கள், கருத்து வேற்றுமைகளை விளக்கி தெளிவுபடுத்துதல்.
  3. அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல்.
  4. மாநில சட்டமன்றங்கள் இயற்றும் சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என அறிவிக்கும் அதிகாரம் போன்றவைகளை உச்ச நீதிமன்றம் பெற்றுள்ளது.

 

மாநில அரசு

இந்திய அரசியலமைப்பு நடுவண், மாநில அரசுகளுக்கான தனித்தனி நிர்வாக முறைகளைக் கொண்ட கூட்டாட்சி அரசாங்கத்தை வழங்குகிறது.

டெல்லி உட்பட 8 யூனியன் பிரதேசங்கள் மற்றும் 28 மாநிலங்கள் உள்ளன.

அரசியலமைப்பின் பகுதி VIஇல் 152 முதல் 237 வரையிலான சட்டப்பிரிவுகள் அனைத்து மாநிலங்களுக்கான சீரான அமைப்பினைப் பற்றி குறிப்பிடுகிறது.

நிர்வாகத் துறை

ஆளுநர்

மாநில நிர்வாகத்தின் அரசியலமைப்புத் தலைவர் ஆளுநர் ஆவார்.

பொதுவாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் ஆளுநர் இருக்கிறார். ஆனால் நிர்வாகச் சூழலின் காரணமாக ஒரு மாநிலத்தின் ஆளுநர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் ஆளுநராகவும் நியமிக்கப்படலாம்.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 154 மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தைப் பற்றி கூறுகிறது.

ஆளுநர் நியமனம்

மாநில ஆளுநர், குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுகிறார்.

ஆளுநர், பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆனால் குடியரசுத் தலைவரின் விருப்பத்தின் பேரில் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம்.

குடியரசுத் தலைவருக்குத் தனது பணித்துறப்பு கடிதத்தைக் கொடுப்பதன் மூலம் ஆளுநர் எந்நேரத்திலும் பதவி விலகலாம்.

மாநில சட்டமன்றமோ அல்லது உயர் நீதிமன்றமோ ஆளுநரின் பணி நீக்கத்தில் பங்கு பெற முடியாது.

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் ஆளுநராக நியமிக்கப்படலாம்.

ஒருவரை ஒரு மாநில ஆளுநராக நியமனம் செய்யப்படுவதில் இரண்டு மரபுகள் பின்பற்றப்படுகின்றன. அவை: ஆளுநராக நியமிக்கப்படும் ஒருவர் தான் எந்த மாநிலத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட உள்ளாரோ அந்த மாநிலத்தில் வசிப்பவராக இருத்தல் கூடாது. மேலும் ஆளுநராக நியமிக்கப்படும் ஒருவரை நடுவண் அரசு, மாநில அரசுடன் கலந்தாலோசித்து அவரது பெயரை முன்மொழிய வேண்டும்.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 158 (3A)இன் படி ஒருவர், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் ஆளுநராக நியமிக்கப்படும் பொழுது, குடியரசுத் தலைவர் ஓர் ஆணையின் மூலம், ஆளுநரின் ஊதியம் மற்றும் படிகளை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்து வழங்க தீர்மானிக்கலாம்.

ஆளுநராவதற்கான தகுதிகள்

இந்திய அரசியலமைப்பின் 157 மற்றும் 158வது சட்டப்பிரிவுகள் ஆளுநர் பதவிக்குத் தேவையான தகுதிகளைக் கூறுகின்றன.

அவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.

35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ இருத்தல் கூடாது. அவ்வாறு இருப்பின் அவர் ஆளுநராக பதவியேற்கும் பொழுது தாமாகவே அப்பதவி காலியாகிவிடும்.

ஆளுநர், இலாபம் தரும் எந்த தொழிலிலும் ஈடுபடக்கூடாது.

ஆளுநரின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்

சட்டப்பிரிவு 163இன் படி முதலமைச்சரின் தலைமையிலான அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி ஆளுநர் குறிப்பிட்ட சில நிகழ்வுகளைத் தவிர மற்ற அதிகாரங்களைச் செயல்படுத்துகிறார்.

நிர்வாக அதிகாரங்கள்

மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெறும் கட்சியின் தலைவரை முதலமைச்சராக ஆளுநர் நியமனம் செய்கிறார்.

முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் அமைச்சரவையின் மற்ற உறுப்பினர்களை நியமனம் செய்கிறார்.

மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்கிறார்.

மாநில தலைமை தேர்தல் அதிகாரியை நியமனம் செய்து, அவரது பணிக்காலம், பணியின் தன்மையைத் தீர்மானிக்கிறார்.

ஆளுநர், மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுவதுடன், துணை வேந்தர்களையும் நியமனம் செய்கிறார்.

குடியரசுத் தலைவரின் அவசரநிலை பிரகடனம் செய்யப்படும் பொழுது, குடியரசுத் தலைவரின் பெயரில் இவரே மாநிலத்தை நேரடியாக ஆட்சி செய்கிறார்.

சட்டமன்ற அதிகாரங்கள்

ஆளுநர் மாநில சட்டமன்றத்தின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாவார். ஆனால், அவர் சட்டமன்றத்தின் உறுப்பினராக இல்லை.

ஆளுநர் சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டவும் ஒத்திவைக்கவும் சட்டமன்றத்தைக் கலைக்கவும் உரிமைப் பெற்றுள்ளார்.

தேர்தல் முடிந்து சட்டசபை அமைந்த முதல் கூட்டத் தொடரிலும் மற்றும் ஒவ்வொரு ஆண்டு முதல் கூட்டத்திலும் உரையாற்றுகின்றார்.

நிலுவையிலுள்ள மசோதா குறித்து சட்டமன்ற அவைகளுக்கு ஆளுநர் செய்தி அனுப்பலாம்.

சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பணியிடம் காலியாக இருக்கும்பொழுது சட்டமன்றத்தை தலைமை ஏற்று நடத்த எந்த சட்டமன்ற உறுப்பினரை வேண்டுமானாலும் ஆளுநர் நியமனம் செய்யலாம்.

ஆங்கிலோ-இந்தியன் வகுப்பினரிலிருந்து ஓர் உறுப்பினரை மாநில சட்டமன்றத்திற்கு நியமனம் செய்யலாம்.

கலை, இலக்கியம், அறிவியல், கூட்டுறவு இயக்கம் மற்றும் சமூக சேவை போன்றவற்றில் சிறந்து விளங்கும் நபர்களைத் தேர்ந்தெடுத்து மாநில சட்டமேலவையின் 6இல் 1 பங்கு இடங்களுக்கு அவர்களை நியமனம் செய்கிறார்.

மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு மசோதாவும் ஆளுநர் கையொப்பமிட்ட பின்னர் மட்டுமே சட்டமாகும். ஆனால், சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் பொழுது ஆளுநர் கையொப்பமிடலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம் அல்லது மீண்டும் மறு பரிசீலனைக்காக சட்டமன்றத்திற்கே திருப்பி அனுப்பலாம்.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 213இன் கீழ் ஆளுநர் மாநில சட்டமன்றம் நடைபெறாத பொழுது அவசர சட்டத்தைப் பிறப்பிக்கலாம். ஆனால் அந்த அவசரச்சட்டம், 6 மாதத்திற்குள் மாநில சட்டமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அவசரச்சட்டத்தை எந்நேரத்திலும் ஆளுநர் திரும்பப் பெறலாம்.

மாநிலத்தின் ஆண்டு நிதிநிலை அறிக்கை, மாநில அரசுப்பணியாளர் தேர்வாணையக் குழுவின் அறிக்கை, மாநில அரசின் தணிக்கைக்குழு அறிக்கைகளை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கின்றார்.

நிதி அதிகாரங்கள்

மாநிலத்தின் ஆண்டு வரவு-செலவு திட்டத்தினை தயார் செய்து சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யும் கடமையை ஆளுநருக்கு அரசியலமைப்பு வழங்குகிறது. தேவைப்பட்டால், துணை வரவு செலவு திட்டத்தையும் அறிமுகம் செய்யலாம்.

ஆளுநரின் முன் அனுமதியுடன்தான் பண மசோதாவை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியும்.

அரசின் எதிர்பாராச் செலவினங்களுக்காக ஆளுநர் அவசர நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்ய முடியும்.

பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளின் நிதிநிலையை ஆய்வு செய்ய ஒவ்வொரு ஐந்தாண்டிற்கு ஒருமுறை நிதி ஆணையம் ஒன்றை அமைக்கிறார்.

நீதித்துறை அதிகாரங்கள்

மாநில அரசின் தலைமை வழக்குரைஞரை நியமனம் செய்கிறார்.

உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையின் பேரில் மாவட்ட நீதிபதிகளின் நியமனம் மற்றும் பதவி உயர்வு போன்ற பணிகளை மேற்கொள்கிறார்.

ஆளுநரின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர் உயர் நீதிமன்ற தலைமைநீதிபதியை நியமனம் செய்கிறார்.

குற்றவாளிகளின் கருணை மனு அடிப்படையில் குற்றவாளிகளை மன்னிக்கலாம் அல்லது குற்றவாளிகளின் தண்டனையைக் குறைக்கலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம். (மரண தண்டனையைப் பெற்ற குற்றவாளியைத் தவிர)

விருப்புரிமை அதிகாரங்கள்

குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக ஆளுநர் ஒரு மசோதாவை நிறுத்தி வைக்க முடியும்.

மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் எந்த கட்சியும் அறுதி பெரும்பான்மையைப் பெறாத போது, ஆளுநர் எந்தக் கட்சி தலைவரையும் ஆட்சி அமைக்க அழைக்கலாம்.

சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் பொழுது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனால் அமைச்சரவையை ஆளுநர் கலைக்க முடியும்.

அவசரகால அதிகாரங்கள்

மாநில அரசு அரசியலமைப்பு விதிகளுக்கேற்ப செயல்படவில்லை என்று ஆளுநர் உறுதியாக நம்பினால் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356இன் கீழ் மாநில அரசை கலைக்க குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யலாம். மாநில அரசு கலைக்கப்பட்டவுடன், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வரும். ஆளுநர் குடியரசுத் தலைவரின் பிரதிநிதியாக மாநிலத்தை நிர்வாகம் செய்கிறார்.

ஆளுநரின் சிறப்புரிமைகள்

சட்டப்பிரிவு 361 (1) ஆளுநருக்கான சிறப்புரிமைகளை வழங்குகின்றது.

தனது பணிகள் மற்றும் அதிகாரத்தைச் செய்ய வேண்டும் என எண்ணுவதிலும் செயல்படுத்துவதிலும் எந்த நீதிமன்றத்திற்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை.

ஆளுநரின் பதவி காலத்தில் அவர் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தவோ அல்லது அவரை கைது செய்யவோ எந்த நீதிமன்றமும் உத்தரவு பிறப்பிக்க முடியாது.

 

முதலமைச்சர்

ஆளுநர், மாநிலத்தின் பெயரளவு நிர்வாகியாகவும் முதலமைச்சர் உண்மையான நிர்வாகியாகவும் உள்ளனர்.

ஆளுநர் என்பவர் மாநிலத்தின் அரசின் தலைவர் முதலமைச்சர் என்பவர் அரசாங்கத்தின் தலைவர் ஆவார்.

முதலமைச்சரின் நியமனம்

முதலமைச்சர் மாநில ஆளுநரால் நியமனம் செய்யப்படுகிறார்.

முதலமைச்சரின் பதவிக்காலம் நிர்ணயிக்கப்பட்ட ஒன்றல்ல. சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு எவ்வளவு காலத்திற்கு தொடர்கிறதோ அதுவரை அவர் முதலமைச்சராக நீடிக்கலாம். சட்டமன்றத்தில் எப்பொழுது அவர் பெரும்பான்மையை இழக்கிறாரோ அப்பொழுது தனது பதவியை இராஜினாமா செய்கிறார். சட்டமன்றத்தில் மற்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் போலவே முதலமைச்சரின் பதவிக்காலமும் 5 ஆண்டுகள் ஆகும்.

முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்

அமைச்சரவை தொடர்பானவை

முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் அமைச்சர்களை நியமிக்கிறார்.

அமைச்சர்களுக்குத் துறைகளை ஒதுக்கீடு செய்கிறார்.

தனது அமைச்சரவையை மாற்றியமைக்கிறார்.

அமைச்சரவைக் கூட்டத்தைத் தலைமை ஏற்று நடத்தி முடிவுகளை எடுக்கிறார்.

அமைச்சர்கள் அனைவரையும் கட்டுப்படுத்தி, வழிநடத்தி, இயக்கி, அவர்களது நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறார்.

ஆளுநர் தொடர்பானவை

கீழ்க்காணும் அலுவலர்களின் நியமனங்கள் தொடர்பாக ஆளுநருக்கு ஆலோசனை வழங்குகிறார்.

மாநில அரசு வழக்குரைஞர்

மாநில தேர்தல் ஆணையர்

மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்

மாநில திட்டக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்

மாநில நிதிக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்

சட்டமன்றம் தொடர்பானவை

சட்டமன்ற கூட்டத்தொடரை துவக்கிவைக்கவும் ஒத்திவைக்கவும் ஆளுநருக்கு முதலமைச்சர் ஆலோசனை வழங்குகிறார்.

சட்டமன்றத்தில் அரசின் கொள்கைகளை அறிவிக்கிறார்.

சட்டமன்றத்தில் மசோதாக்களை அறிமுகப்படுத்துகிறார்.

எந்நேரத்திலும் சட்டமன்றத்தைக் கலைக்க ஆளுநருக்குப் பரிந்துரை செய்கிறார்.

அமைச்சரவை

சட்டமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவர் அமைச்சராக பதவியேற்றால் 6 மாத காலத்திற்குள் அவர் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும்.

சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டால் மாநில அமைச்சரவை இராஜினாமா செய்ய வேண்டும்.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 163 ஆளுநருக்கு ஆலோசனைகள் வழங்க அமைச்சரவையை உருவாக்க வழிவகை செய்திருக்கிறது.

சட்டப்பிரிவு 163(1)இன் படி, முதலமைச்சரை தலைவராகக் கொண்ட அமைச்சரவை ஆளுநருக்கு தேவைப்படும் பொழுது உதவி செய்யவும் ஆலோசனை வழங்கவும் வேண்டும்.

அமைச்சர்களுடனான மற்ற விதிகள்

சட்டப்பிரிவு 164(1), ஆளுநரால் முதலமைச்சர் நியமிக்கப்படுவதைக் கூறுகிறது.

முதலமைச்சர் உட்பட மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 விழுக்காட்டை தாண்டக்கூடாது என சட்டப்பிரிவு 164 (1A) கூறுகிறது.

அமைச்சரவையின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்

மாநில அரசிற்கான கொள்கைகளை உருவாக்கி அவற்றை திறம்பட நடைமுறைப்படுத்துகிறது.

சட்டமன்ற நிகழ்ச்சிகளை முடிவு செய்து அனைத்து முக்கியமான மசோதாக்களுக்கும் ஆதரவளிக்கிறது.

நிதிக்கொள்கையைக் கட்டுப்படுத்துவதுடன் மாநில பொது நலனுக்கான வரிக்கொள்கையை முடிவு செய்கிறது.

முக்கியமான துறைத் தலைவர்களின் நியமனங்களைச் செய்கிறது.

மற்ற மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி மேற்கொள்கிறது.

மாநிலத்திற்கான செலவுகளைச் சமாளிக்க திட்ட அறிக்கையை உருவாக்குகிறது.

ஒரு மசோதா சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் போது அது சாதாரண மசோதாவா அல்லது நிதி மசோதாவா என்று தீர்மானிக்கிறது.

அமைச்சரவையின் ஒவ்வொரு அமைச்சரின் பணிகளைக் கட்டுப்படுத்தி, கண்காணித்து ஒருங்கிணைக்கின்றது.

ஆண்டு வரவு-செலவு திட்டம் (Budget) அமைச்சரவையால் இறுதி செய்யப்படுகிறது.

மாநில சட்டமன்றம்

இந்திய அரசியலமைப்பு ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு சட்டமன்றம் ஏற்பட வழி வகை செய்கிறது.

பெரும்பாலான மாநிலங்கள் ஓரவையைக் கொண்ட சட்டமன்றங்களை மட்டும் பெற்றுள்ளன.

ஈரவை சட்டமன்றங்களைக் கொண்டுள்ளன மாநிலங்கள் . (எடுத்துக்காட்டு: பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா).

கீழவையானது மாநில மக்களின் பிரதிநிதிகளைக் கொண்டது. மேலவையானது ஆசிரியர்கள், பட்டதாரிகள், மற்றும் உள்ளாட்சி உறுப்பினர்கள் ஆகியோர்களைப் பிரதிநிதிகளாகக் கொண்டது.

தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையின் படி (234 உறுப்பினர்கள்) அமைச்சர்களின் எண்ணிக்கை 36 வரை இருக்கலாம். அதாவது 234இல் 15 விழுக்காடு.

சட்டமன்றப் பேரவை (கீழவை)

மாநில அதிகாரத்தின் உண்மையான அதிகார மையமாகும். இது வயது வந்தோர் வாக்குரிமையின் அடிப்படையில் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டது.

சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, மக்கள் தொகையைப் பொறுத்து மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. இருப்பினும், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 500க்கு மிகாமலும் குறைந்த பட்சம் 60க்கு குறையாமலும் இருக்க வேண்டும்.

சட்டமன்றத்தின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இருப்பினும் 5 ஆண்டுகள் முடியும் முன்னரே சட்டமன்றம் கலைக்கப்படலாம்.

சட்ட மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அம்மாநில சட்டமன்ற கீழவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 3இல் ஒரு பங்குக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆனால் மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 40க்கு குறையாமல் இருக்க வேண்டும்

சட்டமன்றத்தின் அமைப்பு

தமிழக சட்டமன்றம் 235 உறுப்பினர்களைக் கொண்டது. இவர்களில் 234 உறுப்பினர்கள் வயது வந்தோர் வாக்குரிமையின் அடிப்படையில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

ஆங்கிலோ-இந்தியன் வகுப்பினரில் ஒருவர் ஆளுநரால் நியமனம் செய்யப்படுகிறார்.

அமைச்சரவை மற்றும் அமைச்சரவைக் குழுக்கள்

அமைச்சரவை (Cabinet) என்ற சிறிய அமைப்பானது அமைச்சரவையின் உட்கரு ஆகும். இது காபினெட் அமைச்சர்களை மட்டும் உள்ளடக்கியது. இதுவே மாநில அரசின் உண்மையான அதிகார மையமாக விளங்குகிறது. இரண்டு வகைகள் உள்ளன. அவை: ஒன்று நிரந்தரமானது மற்றொன்று தற்காலிகமானது.

சபாநாயகர்

சட்டமன்ற உறுப்பினர்களிடையே சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சட்டமன்றம் ஒரு தீர்மானத்தின் மூலம் 14 நாட்கள் அறிவிப்பு கொடுத்த பிறகு சபாநாயகரைப் பதவி நீக்கம் செய்யலாம். அதற்கு முன் சபாநாயகரைப் பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்கும் நேரத்தில் அவைக்கு வந்த பெரும்பாலான உறுப்பினர்கள் வாக்களித்து தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். சட்டமன்றம் கலைக்கப்படும்பொழுது சபாநாயகர் தமது பதவியை இழக்க மாட்டார். மேலும், புதிய சட்ட மன்றத்தின் முதல் கூட்டம் வரை தனது பதவியைத் தொடர்கிறார். சபாநாயகர் இல்லாதபோது அவரது பணியைத் துணை சபாநாயகர் மேற்கொள்கிறார்.

சட்டமன்ற மேலவை (சட்ட மேலவை) (விதான் பரிஷத்)

இந்தியாவின் 28 மாநிலங்களில் 6 மாநிலங்களில் சட்டமேலவை உள்ளது அவை பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா.

ஈரவை சட்டமன்றத்தில் மறைமுகத் தேர்தலால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் சட்ட மேலவையில் செயலாற்றுகின்றனர்.

சட்ட மேலவை ஒரு நிரந்தர அவையாகும். ஏனென்றால், இதனை கலைக்க முடியாது.

சட்ட மேலவை உறுப்பினர்களின் பதவி காலம் 6 ஆண்டுகள் ஆகும். அதன் ஒவ்வொரு இரண்டாண்டிற்கும் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஓய்வு பெறுவர்.

ஒருவர் சட்ட மேலவை உறுப்பினராவதற்கு அவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும். 30 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். தெளிவான மனநிலை உடையவராக இருத்தல் வேண்டும். எந்த மாநிலத்தில் போட்டியிடுகிறாரோ அம்மாநில வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெற்றிருத்தல் வேண்டும்.

1986இல் இயற்றப்பட்ட தமிழ்நாடு சட்ட மேலவை (நீக்கம்) மசோதா மூலம் தமிழ்நாட்டில் சட்ட மேலவை நீக்கப்பட்டது. இச்சட்டம் 1986 நவம்பர் முதல் நாளன்று நடைமுறைக்கு வந்தது.

சட்ட மேலவைக்கான தேர்தல்

மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

பன்னிரெண்டில் ஒரு பங்கு (1/12) உறுப்பினர்கள் பட்டதாரிகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

பன்னிரென்டில் ஒரு பங்கு (1/12) உறுப்பினர்கள் பட்டதாரி ஆசிரியர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

மூன்றில் ஒரு பங்கு (1/3) உறுப்பினர்கள் சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

ஆறில் ஒரு பங்கு உறுப்பினர்கள் (1/6) கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவை, மற்றும் கூட்டுறவு இயக்கம் இவற்றில் சிறந்து விளங்குபவர்களை ஆளுநர் நேரடியாக நியமனம் செய்கிறார்.

தலைவர்

மேலவைத் தலைவர் (Chair person) மேலவை கூட்டத்தைத் தலைமையேற்று நடத்துகிறார். மேலவை உறுப்பினர்களிடையே தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தலைவர் இல்லாதபோது துணைத்தலைவர் கூட்டத்தைத் தலைமையேற்று நடத்துகிறார்.

சட்டமேலவை உருவாக்கம் அல்லது நீக்கம்

சட்ட மேலவை உருவாக்கம் அல்லது நீக்கம் பற்றி சட்டப்பிரிவு 169 விவரிக்கிறது. இப்பிரிவின் படி, சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் 2 பங்கு (2/3) உறுப்பினர்கள் வாக்களித்து தீர்மானத்தை நிறைவேற்றி சட்டமேலவையை உருவாக்கவோ அல்லது நீக்கவோ நாடாளுமன்றத்தைக் கேட்டுக் கொண்டால் நாடாளுமன்றம் ஒரு சட்டத்தின் மூலம் மேலவையை உருவாக்கும் அல்லது நீக்கும்.

சட்டமன்றத்தின் செயல்பாடுகள்

சட்டமன்ற அதிகாரங்கள்

அரசியலமைப்பின்படி மாநிலப் பட்டியலிலுள்ள அனைத்துத் துறைகள் மீதும் சட்டமன்றம் சட்டத்தை நிறைவேற்றலாம்.

பொதுப்பட்டியலிலும் சட்டமன்றம் சட்டம் இயற்றலாம். ஆனால் அதே சட்டத்தை நடுவண் அரசு இயற்றும்பொழுது மாநில அரசின் சட்டம் செயலற்றதாகி விடும்.

மத்திய நாடாளுமன்ற நடைமுறையைப் போன்றே மாநில சட்டமன்றத்தின் மசோதாவும் சட்டமாக நிறைவேற்றுகிறது.

நிதி அதிகாரங்கள்

சட்டமன்றம் மாநிலத்தின் நிதி நிலையைக் கட்டுப்படுத்துகிறது. சட்டமன்றக் கீழவையானது மேலவையைக் காட்டிலும் பண நடவடிக்கைகளில் அதிக அதிகாரத்தைப் பெற்றுள்ளது.

பண மசோதா கீழவையில் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும். சட்டமன்றக் கீழவையின் அனுமதியின்றி புதிய வரிகளை விதிக்க முடியாது.

நிர்வாகத் துறையின் மீது கட்டுப்பாடுகள்

அமைச்சரவையானது சட்டமன்றத்திற்குப் பொறுப்பானது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டும்.

அமைச்சரவைக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டால் அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவர்.

மாநில நீதித்துறை

உயர் நீதிமன்றங்கள்

1862இல் உயர் நீதிமன்றங்கள் கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னையில் தோற்றுவிக்கப்பட்டன.

காலப்போக்கில் பிரிட்டிஷ் இந்தியாவின் ஒவ்வோர் மாகாணமும் ஓர் உயர் நீதிமன்றத்தைக் கொண்டிருந்தது.

1950க்குப் பிறகு தோற்றுவிக்கப்பட்ட உயர் நீதிமன்றங்கள் அண்டை மாநிலங்களுக்கும் உயர் நீதிமன்றமாக விளங்கியது.

மாநில அளவில் உயர் நீதிமன்றங்களே மிக உயர்ந்த நீதிமன்றங்களாகும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் உயர் நீதிமன்றத்தைத் தோற்றுவிக்க வழிவகுக்கிறது.

1956ஆம் ஆண்டு ஏழாவது திருத்தச்சட்டம், இரண்டு மற்றும் இரண்டிற்கு மேற்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கென்று ஒரு பொதுவான உயர் நீதிமன்றத்தை நிறுவ நாடாளுமன்றத்திற்கு அங்கீகாரம் வழங்கியது.

எடுத்துக்காட்டாக பஞ்சாப், ஹரியானா மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகர் ஆகிய பகுதிகளுக்குச் சண்டிகரிலுள்ள உயர் நீதிமன்றம் பொது நீதிமன்றமாக உள்ளது.

இதேபோன்று கவுகாத்தியிலுள்ள உயர் நீதிமன்றம் நான்கு வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், நாகலாந்து, மிசோரம், அருணாச்சலப்பிரதேசம் போன்றவைகளுக்கு பொது நீதிமன்றமாக உள்ளது.

இந்த நீதிமன்றத்தின் கிளைகள் இட்டா நகர், கொஹிமா, அய்ஸ்வால் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.

டெல்லி ஒரு மாநிலமாக இல்லாத போதும் தனக்கென்று சொந்தமாக ஓர் உயர் நீதிமன்றத்தைக் கொண்டுள்ளது.

ஒவ்வொரு நீதிமன்றமும் தலைமை நீதிபதி மற்றும் பல நீதிபதிகளைக் கொண்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை குடியரசுத் தலைவரால் தீர்மானிக்கப்படுகிறது.

இந்தியாவில் 28 மாநிலங்கள் மற்றும் 9 யூனியன் பிரதேசங்களுக்கும் சேர்த்து 25 உயர் நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.

உயர் நீதிமன்ற நீதி வரையறை மற்றும் அதிகாரங்கள்

தனக்கேயுரிய நீதிவரையறை

சென்னை, மும்பை, கொல்கத்தா நீதிமன்றங்கள் தங்களுக்கான நீதிவரையறை அதிகாரங்களுடன் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரங்களையும் பெற்றுள்ளன.

1862ஆம் ஆண்டு ஜுன் 26ஆம் நாளில் விக்டோரியா மகாராணி வழங்கிய காப்புரிமை கடிதத்தின் மூலம் சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய மாகாணங்களில் உயர் நீதிமன்றங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

இவற்றில் மெட்ராஸ் உயர் நீதிமன்ற வளாகம் உலகிலேயே இலண்டனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய நீதித்துறை வளாகமாகும்.

முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள், உயில், திருமணம் சார்ந்த வழக்குகள் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் ஆகியவற்றை மட்டும் நேரடியாக விசாரிக்கும் அதிகாரங்களை இவை பெற்றுள்ளன.

மாகாண நீதிமன்றங்கள் தன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ₹2000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகை மதிப்புடைய குற்றவியல் வழக்குகளை தனக்கே உரிய நீதிவரையறையை பயன்படுத்தி மாகாண நீதிபதிகள் விசாரிக்க முடியும்.

மேல்முறையீட்டு நீதிவரையறை

உயர் நீதிமன்றங்கள் தங்களிடம் வரும் மேல்முறையீட்டு வழக்குகளையும் கீழ் நீதிமன்றங்களிலிருந்து வரும் மேல்முறையீட்டு வழக்குகளையும் (உரிமையியல், குற்றவியல்) விசாரிக்கின்றன.

நாட்டின் இராணுவ தீர்ப்பாயங்களின் கீழ்வரும் ஆயுதம் சார்ந்த வழக்குகளை விசாரிக்க இவைகளுக்கு அதிகாரம் இல்லை.

பேராணை அதிகாரங்கள்

இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 226, அடிப்படை உரிமைகளுக்காக மட்டுமின்றி மற்ற நோக்கங்களுக்காகவும் பேராணைகளை வெளியிடும் அதிகாரங்களை உயர் நீதிமன்றங்களுக்கு வழங்குகிறது.

சட்டப்பிரிவு 32இன் கீழ் உச்ச நீதிமன்றம் வழங்கும் நீதிப்பேராணைகள், ஆணைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் போன்றே உயர் நீதிமன்றமும் அவைகளை வழங்க அதிகாரம் பெற்றுள்ளது.

இந்த சட்டப்பிரிவுகளின் கீழ் நீதிப்பேராணைகளை வெளியிட உயர் நீதிமன்றங்களுக்கு வழங்கிய அதிகாரம் பெரியதாகும். அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் மட்டுமே உச்ச நீதிமன்றம் இவைகளை வெளியிடுகிறது. உயர் நீதிமன்றம் இது போன்ற வழக்குகளில் மட்டுமின்றி சாதாரண சட்டமீறலுக்கும் நீதிப்பேராணைகளை (ஆட்கொணர்வு நீதிப் பேராணை, கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை, தடையுறுத்தும் நீதிப்பேராணை, தகுதி வினவும் நீதிப்பேராணை, ஆவணக் கேட்பு பேராணை), வெளியிட முடியும்.

மேற்பார்வை அதிகாரம்

இராணுவ நீதிமன்றங்களைத் தவிர மற்ற அனைத்து சார்பு நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களின் பணிகளை மேற்பார்வையிடும் அதிகாரத்தை உயர் நீதிமன்றம் பெற்றுள்ளது.

கீழ் நீதிமன்றங்களில் கொடுக்கப்பட்ட அதிகாரங்களை திரும்ப பெறும் அதிகாரம்.

பொதுச் சட்டங்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட படிவங்கள் மூலம் பயிற்சி மற்றும் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த ஓர் ஆணையை வெளியிடச் செய்தல்.

பரிந்துரைக்கப்பட்ட முறைகளில் கீழ் நீதிமன்றங்கள் புத்தகங்கள், பதவிகள், கணக்குகளைப் பராமரித்தல்.

ஷெரிப், எழுத்தர்கள், அலுவலர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் ஆகியோருக்கான கட்டணத்தைச் செலுத்துதல் போன்றவை குறித்துத் தீர்மானித்தல்.

ஆவணங்களின் பாதுகாப்புப் பெட்டகம்

உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட அனைத்து முடிவுகள் மற்றும் தீர்ப்புகள் அச்சடிக்கப்பட்டு சான்றாதாரமாக பாதுகாக்கப்படுகின்றன. எதிர்காலத்தில் எழும் கேள்விகளுக்கு தீர்வாக கடந்த கால தீர்ப்புகள் உதவுகின்றன. இதனால் உயர் நீதிமன்றம் பதிவேடுகளின் நீதிமன்றமாக செயல்படுகிறது.

Important point

  1. மாநில நிர்வாகத்தின் அரசியலமைப்பு தலைவர் ஆளுநர் ஆவார்.
  2. ஆளுநரால் முதலமைச்சர் நியமிக்கப்படுகிறார்.
  3. மாநில சட்டமன்றத்திற்கு அமைச்சரவை கூட்டுப் பொறுப்பானது.
  4. சட்டமன்றம் மாநிலத்தின் உண்மையான அதிகார மையமாகும்.
  5. தற்போது 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களுக்கு 25 உயர் நீதிமன்றங்கள் உள்ளன.
  6. இந்திய அரசியலமைப்பின் பகுதி Vஇல் 52 முதல் 78 வரையிலான சட்டப்பிரிவுகள் நடுவண் அரசின் நிர்வாகம் பற்றி குறிப்பிடுகின்றன.
  7. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 77ன் படி நடுவண் அரசின் ஒவ்வொரு நிர்வாக நடவடிக்கையும் குடியரசுத் தலைவரின் பெயராலேயே மேற்கொள்ளப்பட வேண்டும்.
  8. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 72-வது சட்டப்பிரிவு நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஒருவரின் தண்டனையைக் குறைக்கவும், ஒத்திவைக்கவும், தண்டனையிலிருந்து விடுவிக்கவும், மன்னிப்பு வழங்கவும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.
  9. நடுவண் அரசின் பாதுகாப்புப் படையின் தலைமைத் தளபதி என்ற அதிகாரத்தைச் சட்டப்பிரிவு 53(2) குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ளது. அவர் சட்டத்தின்படி இராணுவத்தை வழிநடத்துகிறார்.
  10. நெருக்கடி நிலையை அறிவிக்கும் அதிகாரம் 352வது சட்டப்பிரிவிலும்,
  11. மாநில அரசை கலைக்கும் அதிகாரம் 356வது சட்டப்பிரிவிலும்,
  12. நிதி நெருக்கடியை அறிவிக்கும் அதிகாரம் 360வது சட்டப்பிரிவிலும் உள்ளது.
  13. சட்டப்பிரிவு 61இன் படி அரசியலமைப்பை மீறிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுவதன் மூலம் குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்யப்படலாம்.
  14. அரசியலமைப்பின் 63வது சட்டப்பிரிவு இந்திய துணைக் குடியரசுத் தலைவர் பதவியை வழங்குகிறது.
  15. சட்டப்பிரிவு 66(1)இன் படி குடியரசுத் தலைவர் போலவே துணைக் குடியரசுத் தலைவரும் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாமல் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
  16. மாநிலங்களவையில் சட்ட மசோதாவின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பு சமநிலையில் இருக்கும் பட்சத்தில் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 100இன் படி துணைக் குடியரசுத் தலைவர் வாக்கு அளிக்கலாம். முடிவு வாக்கு (Casting vote)
  17. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 74(1) குடியரசுத் தலைவருக்கு உதவிடவும், அறிவுரை வழங்கிடவும் பிரதம அமைச்சரைத் தலைவராகக் கொண்ட ஒரு நடுவண் அமைச்சரவைக் குழு இருக்கும் எனக் குறிப்பிடுகிறது.
  18. இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 76 இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரை நியமிக்க வழிவகை செய்கிறது. இவர் நாட்டின் உயர்ந்த சட்ட அதிகாரி ஆவார்.
  19. அரசியலமைப்பின் பகுதி VIஇல் 152 முதல் 237 வரையிலான சட்டப்பிரிவுகள் அனைத்து மாநிலங்களுக்கான சீரான அமைப்பினைப் பற்றி குறிப்பிடுகிறது.
  20. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 154 மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தைப் பற்றி கூறுகிறது.
  21. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 158 (3A)இன் படி ஒருவர், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் ஆளுநராக நியமிக்கப்படும் பொழுது, குடியரசுத் தலைவர் ஓர் ஆணையின் மூலம், ஆளுநரின் ஊதியம் மற்றும் படிகளை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்து வழங்க தீர்மானிக்கலாம்.
  22. இந்திய அரசியலமைப்பின் 157 மற்றும் 158வது சட்டப்பிரிவுகள் ஆளுநர் பதவிக்குத் தேவையான தகுதிகளைக் கூறுகின்றன.
  23. சட்டப்பிரிவு 163இன் படி முதலமைச்சரின் தலைமையிலான அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி ஆளுநர் குறிப்பிட்ட சில நிகழ்வுகளைத் தவிர மற்ற அதிகாரங்களைச் செயல்படுத்துகிறார்
  24. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 213இன் கீழ் ஆளுநர் மாநில சட்டமன்றம் நடைபெறாத பொழுது அவசர சட்டத்தைப் பிறப்பிக்கலாம். ஆனால் அந்த அவசரச்சட்டம், 6 மாதத்திற்குள் மாநில சட்டமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அவசரச்சட்டத்தை எந்நேரத்திலும் ஆளுநர் திரும்பப் பெறலாம்.
  25. மாநில அரசு அரசியலமைப்பு விதிகளுக்கேற்ப செயல்படவில்லை என்று ஆளுநர் உறுதியாக நம்பினால் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356இன் கீழ் மாநில அரசை கலைக்க குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யலாம்.
  26. சட்டப்பிரிவு 361 (1) ஆளுநருக்கான சிறப்புரிமைகளை வழங்குகின்றது.
  27. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 163 ஆளுநருக்கு ஆலோசனைகள் வழங்க அமைச்சரவையை உருவாக்க வழிவகை செய்திருக்கிறது.
  28. சட்டப்பிரிவு 163(1)இன் படி, முதலமைச்சரை தலைவராகக் கொண்ட அமைச்சரவை ஆளுநருக்கு தேவைப்படும் பொழுது உதவி செய்யவும் ஆலோசனை வழங்கவும் வேண்டும்.
  29. சட்டப்பிரிவு 164(1), ஆளுநரால் முதலமைச்சர் நியமிக்கப்படுவதைக் கூறுகிறது.
  30. முதலமைச்சர் உட்பட மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 விழுக்காட்டை தாண்டக்கூடாது என சட்டப்பிரிவு 164 (1A) கூறுகிறது.
  31. சட்ட மேலவை உருவாக்கம் அல்லது நீக்கம் பற்றி சட்டப்பிரிவு 169 விவரிக்கிறது.
  32. இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 226, அடிப்படை உரிமைகளுக்காக மட்டுமின்றி மற்ற நோக்கங்களுக்காகவும் பேராணைகளை வெளியிடும் அதிகாரங்களை உயர் நீதிமன்றங்களுக்கு வழங்குகிறது.
  33. சட்டப்பிரிவு 32இன் கீழ் உச்ச நீதிமன்றம் வழங்கும் நீதிப்பேராணைகள், ஆணைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் போன்றே உயர் நீதிமன்றமும் அவைகளை வழங்க அதிகாரம் பெற்றுள்ளது.
  34. 108வது சட்டத்திருத்தம் என்பது இந்திய அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்ட ஒரு திருத்தம் ஆகும், இது பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவாக கருதப்படுகிறது. குறிப்பாக, இது மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்குகிறது. இந்த மசோதா 2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் அது பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories