Blog

ஒழுக்கமுடைமை

Class 44 இலக்கியம்‌ - தமிழ்‌ அறிஞர்களும்‌, தமிழ்த்தொண்டும்

ஒழுக்கமுடைமை

1.ஒழுக்கம்‌ விழுப்பம்‌ தரலான்‌ ஒழுக்கம்‌                                                   (10th Tamil)

உயிரினும்‌ ஓம்பப்‌ படும்‌.  *****

விளக்கம்‌: ஒருவனுக்கு அனைத்துச்‌ சிறப்புகளையும்‌ தருவது ஒழுக்கமே. அவ்வொழுக்கத்தை உயிரினும்‌ மேலானதாகக்‌ கருதிக்‌ காத்துக் கொள்ளவேண்டும்‌.

சொற்பொருள்‌ : விழுப்பம்‌ – சிறப்பு; ஓம்பப்படும்‌ – காத்தல்வேண்டும்‌.

இலக்கணக்குறிப்பு : ஒழுக்கம்‌ – தொழிற்பெயர்‌; படும்‌ – செய்யும்‌ என்னும்‌ வாய்பாட்டு வினைமுற்று.

 

2.பரிந்தோம்பிக்‌ காக்க ஒழுக்கம்‌ தெரிந்தோம்பித்‌

தேரினும்‌ அஃதே துணை.

விளக்கம்‌: எம்முறையில்‌ ஆராய்ந்து பார்த்தாலும்‌ ஒழுக்கமே நல்ல துணை ஆரும்‌. ஒழுக்கத்தைக்‌ காப்பது கடினமானாலும்‌ எப்பாடுபட்டாவது, அதனை விரும்பிக்‌ காத்தல்வேண்டும்‌.

சொற்பொருள்‌ : பரிந்து – விரும்பி; தேரினும்‌ – ஆராய்ந்து பார்த்தாலும்‌.

இலக்கணக்குறிப்பு : காக்க – வியங்கோள்‌ வினைமுற்று; பரிந்து, தெரிந்து – வினையெச்சங்கள்‌,

பிரித்தறிதல்‌ : பரிந்தோம்பி – பரிந்து + ஓம்பி; தெரிந்தோம்பி – தெரிந்து + ஓம்பி.

(இவ்விரு பாடலும்‌ ஒழுக்கத்தின்‌ உயர்வைக்‌ கூறுகின்றன.)

 

3.ஒழுக்கம்‌ முடைமை குடிமை இழுக்கம்‌

இழிந்த பிறப்பாய்‌ விடும்‌.

விளக்கம்‌: ஒழுக்கம்‌ உள்ளவரே உயர்குடியினர்‌. அவ்வொழுக்கம்‌ இல்லாதவர்‌ இழிகுடியினர்‌,

சொற்பொருள்‌ : குடிமை – உயர்குடி;  இழுக்கம்‌ – ஒழுக்கம்‌ இல்லாதவர்‌.

இலக்கணக்குறிப்பு : இழிந்த பிறப்பு – பெயரெச்சம்‌.

 

4.மறப்பினு மோத்துக்‌ கொளலாகும்‌ பார்ப்பான்‌

பிறப்பொழுக்கங்‌ குன்றக்‌ கெடும்‌.

விளக்கம்‌: ஒருவன்‌, தான்‌ கற்ற கல்வியை மறந்தாலும்‌ அதனை மீண்டும்‌ கற்றுக்கொள்ள இயலும்‌. ஆனால்‌, ஒழுக்கம்‌ குறைந்தால்‌, அவனுடைய குடிப்பிறப்பின்‌ சிறப்பு அழிந்துபோகும்‌.

இலக்கணக்குறிப்பு : கெடும்‌ – செய்யும்‌ என்னும்‌ வாய்பாட்டு வினைமுற்று; கொளல்‌ – அல்‌ ஈற்றுத்‌ தொழிற்பெயர்‌.

 

5.அழுக்கா றுடையான்கண்‌ ஆக்கம்போன்‌ றில்லை

ஒழுக்கம்‌ இலான்கண்‌ உயர்வு.  *****

விளக்கம்‌: பொறாமை உடையவனிடம்‌ செல்வம்‌ நிலைக்காது; அதுபோல, ஒழுக்கம்‌ இல்லாதவனிடம்‌ உயர்வு இருக்காது.

சொற்பொருள்‌ : அழுக்காறு – பொறாமை; ஆக்கம்‌ – செல்வம்‌.

இலக்கணக்குறிப்பு : உடையான்‌ – வினையாலணையும்‌ பெயர்‌.

அணி : உவமையணி.

 

6.ஒழுக்கத்தின்‌ ஒல்கார்‌ உரவோர்‌ இழுக்கத்தின்‌

ஏதம்‌ படுபாக்‌ கறிந்து.

விளக்கம்‌: ஒழுக்கம்‌ தவறுதலால்‌ ஏற்படும்‌ குற்றங்களை நன்குணர்ந்த மனவலிமை மிக்கோர்‌, அவ்வொழுக்க நெறியிலிருந்து சிறிதும்‌ விலகமாட்டார்‌.

சொற்பொருள்‌ : ஒல்கார்‌ – விலகமாட்டார்‌; உரவோர்‌ – மனவலிமையுடையோர்‌; ஏதம்‌ – குற்றம்‌.

இலக்கணக்குறிப்பு : உரவோர்‌ – வினையாலணையும்‌ பெயர்‌.

 

7.ஒழுக்கத்தின்‌ எய்துவர்‌ மேன்மை இழுக்கத்தின்‌                                         (10th Tamil)

எய்துவர்‌ எய்தாப்‌ பழி.    *****

விளக்கம்‌: ஒழுக்கமுடையோர்‌ மேன்மை அடைவர்‌; ஒழுக்கம்‌ இல்லாதவர்‌ அடையக்‌ கூடாத பழியை அடைவர்‌.

சொற்பொருள்‌ : எய்துவர்‌ – அடைவர்‌.

இலக்கணக்குறிப்பு : எய்தாப்‌ பழி – ஈறுகெட்ட எதிர்மறைப்‌ பெயரெச்சம்‌; எய்துவர்‌ – பலர்பால்‌ வினைமுற்று.

(இவ்வைந்து பாடலும்‌ ஒழுக்கத்தின்‌ குணமும்‌, ஒழுக்கம்‌ இன்மையால்‌ ஏற்படும்‌ குற்றமும்‌ கூறுகின்றன.)

 

8.நன்றிக்கு வித்தாகும்‌ நல்லொழுக்கம்‌ தீயொழுக்கம்‌

என்றும்‌ இடும்பை தரும்‌.  *****

விளக்கம்‌: நல்லொழுக்கம்‌ என்பது நன்மை என்னும்‌ விளைவைப்‌ பெறுவதற்கான விதையாகும்‌. தீயொழுக்கம்‌ எப்பொழுதும்‌ துன்பத்தையே விளைவாகத்‌ தரும்‌.

சொற்பொருள்‌ : இடும்பை – துன்பம்‌; வித்து – விதை.

இலக்கணக்குறிப்பு : நல்லொழுக்கம்‌, தீயொழுக்கம்‌ – பண்புத்தொகைகள்‌.

(இப்பாடல்‌ ஒழுக்கத்தின்‌ விளைவைக்‌ கூறுகின்றது.)

 

9.ஒழுக்கம்‌ உடையவர்க்‌ கொல்லாவே தீய

வழுக்கியும்‌ வாயாற்‌ சொலல்‌.

விளக்கம்‌: நல்லொழுக்கம்‌ உடையோரால்‌ தவறியும்‌ தம்‌ வாயால்‌ தீமைதரும்‌ சொற்களைச்‌ சொல்ல இயலாது.

சொற்பொருள்‌ : ஒல்லாவே – இயலாவே.

இலக்கணக்குறிப்பு : சொலல்‌ – தொழிற்பெயர்‌.

 

10.உலகத்தோ டொட்ட ஒழுகல்‌ பலகற்றும்‌                                           (10th Tamil)

கல்லார்‌ அறிவிலா தார்‌.  *****

விளக்கம்‌: உயர்ந்தாரோடு பொருந்த வாழும்‌ கல்வியைக்‌ கல்லாதவர்‌, எவ்வளவுதான்‌ கற்றிருந்தாலும்‌ அறிவில்லாதவரே ஆவார்‌.

சொற்பொருள்‌ : உலகம்‌ – உயர்ந்தோர்‌; ஒட்ட – பொருந்த; ஒழுகல்‌ – நடத்தல்‌, வாழ்தல்‌.

(இவ்விரு பாடலும்‌ சொல்லாலும்‌ செயலாலும்‌ வரும்‌ ஒழுக்கங்களைக்‌ கூறுகின்றன)

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories