குப்தர்கள்
May 21, 2025 2025-05-27 7:55குப்தர்கள்
குப்தப் பேரரசு
குஷானப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு மகதத்தில் பாடாலிபுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு உருவான பேரரசு குப்தப் பேரரசு ஆகும்.
குப்தவம்சத்தின் முதலாவது முக்கிய மன்னராக முதலாம் சந்திரகுப்தர் (கி.பி.319-335) குறிப்பிடப்படுகிறார். இவரது ஆட்சியின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் குப்தயுகம் என்ற காலக் கணக்கீடு புகுத்தப்பட்டது.
முதலாம் சந்திரகுப்தருக்குப்பின் பட்டத்திற்கு வந்த சமுத்திர குப்தரது (கி.பி. 335-375) படையெடுப்பு வெற்றிகளைப்பற்றி அலகாபாத் கல்வெட்டு விரிவாகக் குறிப்பிடுகிறது. வங்காளத்திலிருந்து சிந்துநதி வரையிலும் இமயமலையிலிருந்து விந்தியமலை வரையிலும் இப்பேரரசு விரிவாக்கப்பட்டது. ஒன்பது வடஇந்திய அரசர்களையும், பதினோரு குடியரசுக் குழுக்களையும், பன்னிரண்டு தென்னிந்திய அரசர்களையும் போர்களில் இவர் வென்றதாக அலகாபாத் கல்வெட்டு குறிப்பிடுகிறது. அலகாபாத் கல்வெட்டைப் பொறித்தவர் இவரது அமைச்சர் அரிசேனர் ஆவார். சமுத்திரகுப்தருக்குப் பின்வந்த இரண்டாம் சந்திரகுப்தர் (கி.பி. 380 – 414 ) புகழ் பெற்ற அரசராகப் போற்றப்படுகிறார். இவர்
படையெடுத்து வந்த வேற்று நாட்டவரான சாகர்களை வென்று, உஜ்ஜயினி நகரைக் கைப்பற்றிக் கொண்டார்.
இராமாயணம், மகாபாரதம் போன்றவையும் 18 புராணங்களும் தொகுக்கப்பட்டன; பஞ்சதந்திரக் கதைகள் இயற்றப்பட்டன. காளிதாசர், பாசர், விசாகதத்தர் போன்ற புகழ்பெற்ற வடமொழிப் புலவர்கள் பலர் குப்தர்களால் போற்றப்பட்டனர்.
சமஸ்கிருதமொழி ஆட்சி மொழி ஆயிற்று. விஷ்ணு, சிவன், துர்க்கை போன்ற இந்துக் கடவுளருக்குச் சிறுசிறு கோயில்கள் கட்டப்பட்டன. அஜந்தாவிலுள்ள சில பௌத்த குகைச்சிற்பங்களும், ஓவியங்களும் குப்தர் காலத்தவை.
ஆர்யபட்டர், வராகமிகிரர் போன்ற புகழ் பெற்ற வானியல், கணித அறிஞர்களும், சரகர், சுசுருதர், தன் வந்திரி முதலிய மருத்துவ அறிஞர்களும் குப்தர் காலத்தவர்களே. 1500 ஆண்டுகளாய்த் துருப்பிடிக்காமல் இன்றும் பொலிவுடன் இருக்கும் மெகரெலி இரும்புத்தூண் குப்தர் காலத்ததாகும்.
குமாரகுப்தர் காலத்தில், பௌத்தர்களது புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. ஆனால், சமூகஅமைப்பில் சாதிமுறை மிகக் கடுமையாயிற்று. அசோகர் காலத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டிருந்த உயிர்ப்பலி, வேள்விகளுக்குப் புத்துயிர் அளிக்கப் பட்டது. சிவன் – சக்தி – விஷ்ணு – குமரன் (முருகன்) வழிபாடுகள் பெருகின. இந்துக்
கடவுள்களுக்குக் கோயில்கள் அமைக்கப்பட்டன.
குப்தர்களின் காலம் பொற்காலம் எனக் கருதப்படுகிறது. புஷ்யமித்திரர், ஹுணர் போன்ற அந்நியர் படை யெடுப்புகளால் குப்தப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. புகழ்பெற்ற சீனப் பயணி பாகியான், இரண்டாம் சந்திரகுப்தர் (விக்கிரமாதித்யன்) காலத்தில் இந்தியாவின் பௌத்தத் தலங்களைக் காணவந்தார்.
தொல்லியல் சான்றுகள்
குப்த அரசர்களால் வெளியிடப்பட்ட தங்க, வெள்ளி, செப்பு நாணயங்கள்சமுத்திரகுப்தரின் அலகாபாத் தூண் கல்வெட்டு
மெக்ராலி இரும்புத்தூண் கல்வெட்டு
இரண்டாம் சந்திரகுப்தரின் உதயகிரி குகைக் கல்வெட்டு, மதுரா பாறைக் கல்வெட்டு, சாஞ்சி பாறைக் கல்வெட்டு.
ஸ்கந்த குப்தரின் பிதாரி தூண் கல்வெட்டு
கத்வா பாறைக் கல்வெட்டு
மதுபான் செப்புப் பட்டயம் (பஞ்சாப்)
சோனாபட் செப்புப் பட்டயம்
நாளந்தா களிமண் முத்திரைப் பொறிப்பு
இலக்கியச் சான்றுகள்
விஷ்ணு, மத்சய, வாயு, பாகவத புராணங்கள், நாரதரின் நீதி சாஸ்திரம்.
விசாகதத்தரின் தேவிச்சந்திர குப்தம், முத்ரா ராக்ஸம், பாணரின் ஹர்ஷ சரிதம்.
காளிதாசரின் நாடகங்கள்
இரண்டாம் சந்திரகுப்தரின் காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்த சீன பௌத்தத்துறவி பாகியானின் பயணக்குறிப்புகள்
ஹர்ஷரின் ரத்னாவளி, நாகநந்தா, பிரியதர்ஷிகா
யுவான் சுவாங்கின் சி- யூ-கி
குப்த அரச வம்சம் நிறுவப்படல்
குப்த அரச வம்சத்தை நிறுவியவர் ஸ்ரீகுப்தர் எனக் கருதப்படுகிறார். அவர் தற்போதைய வங்காளம், பீகார் பகுதிகளை ஆண்டதாகக் கருதப்படுகிறது. நாணயங்களில் முதன்முதலாக இடம் பெற்ற குப்த அரசரின் வடிவம் இவருடையதே. இவருக்குப்பின்னர் இவருடைய மகன் கடோத்கஜர் அரசப் பதவியேற்றார். கல்வெட்டுகளில் இவர்கள் இருவருமே
மகாராஜா என்றே குறிப்பிடப்பட்டுள்ளனர்.
முதலாம் சந்திரகுப்தர் (கி.பி. (பொ.ஆ)319 – 335)
முதலாம் சந்திரகுப்தர், புகழ்பெற்ற, வலிமை மிகுந்த ‘லிச்சாவி’ அரச குடும்பத்தைச் சேர்ந்த குமாரதேவியை மணந்தார். இக்குடும்பத்தின் ஆதரவோடு, வட இந்தியச் சிற்றரசுகள் பலவற்றை இவர் வெற்றிகொண்டு, ஒரு பேரரசின் முடியரசராகத் தன்னை முடி சூட்டிக்கொண்டார். சந்திரகுப்தரால் வெளியிடப்பட்டவை எனக் கருதப்படும் தங்க நாணயங்களில் சந்திரகுப்தர், குமாரதேவி ஆகிய இருவரின் உருவங்கள் இடம்பெற்றுள்ளன. ‘லிச்சாவையா’ என்ற வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளது. லிச்சாவி பழமையான கன சங்கங்களில்
ஒன்றாகும். அதனுடைய ஆட்சிப் பகுதி கங்கை நதிக்கும் நேபாள நாட்டிற்கும் இடைப்பட்டதாக இருந்தது.
சமுத்திரகுப்தர் (கி.பி. (பொ.ஆ) 335 – 380)
முதலாம் சந்திரகுப்தரின் மகனான சமுத்திரகுப்தர் குப்த அரச வம்சத்தின் தலைசிறந்த அரசர் ஆவார். சமுத்திரகுப்தரின் அவைக்களப் புலவரான ஹரிசேனர் இயற்றிய பிரயாகை மெய்க்கீர்த்தி (பிரசஸ்தி) அலகாபாத் தூணில் பொறிக்கப்பட்டுள்ளது. சமுத்திரகுப்தரின் ஆட்சிக்கான மிக முக்கியச் சான்று அலகாபாத் தூண் கல்வெட்டாகும்.
குப்த அரச வம்சம் ஒருங்கிணைக்கப்படல்
சமுத்திரகுப்தர் மகத்தான போர்த்தளபதியாவார். அவர் பேரரசர் ஆனவுடன் நாடு முழுவதும் படையெடுத்துச் சென்றார். தென்னிந்தியாவின் மீதும் படையெடுத்தார். பல்லவநாட்டு அரசர் விஷ்ணுகோபனை சமுத்திரகுப்தர் தோற்கடித்தார். சமுத்திரகுப்தர் வட இந்தியாவில் ஒன்பது அரசுகளைக் கைப்பற்றினார். தென்னிந்தியாவைச் சேர்ந்த 12 அரசர்களைத் தனக்குக் கட்டுப்பட்ட சிற்றரசர்களாக்கி அவர்களைக் கப்பம் கட்டச் செய்தார். கிழக்கு வங்காளம், அஸ்ஸாம், நேபாளம், பஞ்சாபின் கிழக்குப் பகுதி, ஆகியவற்றின் அரசர்களும் ராஜஸ்தானத்தைச் சேர்ந்த பல்வேறு பழங்குடியினரும் சமுத்திரகுப்தரின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டனர்.
சமுத்திரகுப்தர் ஒரு விஷ்ணு பக்தராவார். தனது மேலாதிக்கத்தை நிலை நாட்டும் அரசரால் நடத்தப்படும் வேதகாலச் சடங்கான குதிரைகளைப் பலியிடும் வேள்வியைச் சமுத்திரகுப்தர் மீண்டும் நடைமுறைப்படுத்தினார். அவர் தங்க நாணயங்களை வெளியிட்டார். அவற்றுள் ஒன்றில் அவர் வீணை வாசிப்பது போன்ற உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அவர் மிகச் சிறந்த படையெடுப்பாளர் மட்டுமல்ல; கவிதைப் பிரியரும் இசைப் பிரியருமாவார். அதனால் ‘கவிராஜா’ எனும் பட்டம் பெற்றார். இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீ மேகவர்மன் எனும் பௌத்த அரசன் சமுத்திரகுப்தரின் சமகாலத்தவராவார்.
இரண்டாம் சந்திரகுப்தர் (கி.பி. (பொ.ஆ) 380 – 415)
இரண்டாம் சந்திரகுப்தர் சமுத்திரகுப்தரின் மகனாவார். அவர் விக்கிரமாதித்யர் என்றும் அறியப்பட்டார். அவர் சாக அரசர்களைத் தோற்கடித்து மேற்கு மாளவத்தையும் குஜராத்தையும் கைப்பற்றினார்.தோற்கடித்து மேற்கு மாளவத்தையும் குஜராத்தையும் கைப்பற்றினார். தென்னிந்திய அரசுகளோடு அவர் நட்புறவைப் பேணினார். குதுப்மினாருக்கு அருகேயுள்ள இரும்புத் தூண் விக்கிரமாதித்யரால் உருவாக்கப்பட்டது என நம்பப்படுகிறது. இவருடைய ஆட்சியின்போது பாகியான் எனும் சீன பௌத்த அறிஞர் இந்தியா வந்தார். மிகச் சிறந்த அறிஞர்களும் புலவர்களும் எழுத்தாளர்களும் (நவரத்தினங்கள்) கலைஞர்களும் இவருடைய அவையை அலங்கரித்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் காளிதாசர் எனக் கூறப்படுகிறது.
விக்கிரமாதித்யரின் அவையிலிருந்த நவரத்தினங்கள்
காளிதாசர் – சமஸ்கிருதப் புலவர்
ஹரிசேனர் – சமஸ்கிருதப் புலவர்
அமர சிம்ஹர் – அகராதியியல் ஆசிரியர்
தன்வந்திரி – மருத்துவர்
காகபானகர் – சோதிடர்
சன்கு – கட்டடக் கலை நிபுணர்
வராகமிகிரர் – வானியல் அறிஞர்வராச்சி – இலக்கண ஆசிரியர், சமஸ்கிருதப் புலவர் வானியல் அறிஞர்
விட்டல்பட்டர் – மாயவித்தைக்காரர் (Magician)
இரண்டாம் சந்திரகுப்தரின் பட்டப் பெயர்கள்:
விக்கிரமாதித்யர், நரேந்திர சந்திரர், சிம்ம சந்திரர், நரேந்திர சிம்மர், விக்கிரம தேவராஜர், தேவ குப்தர், தேவஸ்ரீ
இரண்டாம் சந்திரகுப்தரைத் தொடர்ந்து அவருடைய மகன் முதலாம் குமாரகுப்தர் அரியணை ஏறினார். அவரே நாளந்தா பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர்.
குமாரகுப்தரைத் தொடர்ந்து அரசப் பதவியேற்ற ஸ்கந்தகுப்தர் ஹூணர்களின் படையெடுப்பைச் சந்திக்க நேரிட்டது. அவர், அவர்களைத் தோற்கடித்து விரட்டி அடித்தார்.
ஆனால் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் படையெடுத்து வந்த ஹூணர்கள் குப்தப் பேரரசைத் தோற்கடித்தனர். மிகச் சிறந்த குப்தப் பேரரசர்களில் கடைசிப் பேரரசரான பாலாதித்யர் முதலாம் நரசிம்மகுப்தர் என்ற பெயரில் அரியணை ஏறினார். இவர் பௌத்த மதத்தால் ஈர்க்கப்பட்டவராவார். இவர் மிகிரகுலருக்கு கப்பம் கட்டிவந்தார். ஆனால் மிகிரகுலர் பௌத்தத்தைப் பகைமையோடு பார்த்ததால் மனவேதனை அடைந்து கப்பம் கட்டுவதை நிறுத்தினார். மிகிரகுலரைக் கைது செய்து சிறையில் அடைப்பதில் பாலாதித்யா வெற்றி பெற்றாலும் மிகிரகுலர் வஞ்சகமாகப் பாலாதித்யரை மகதத்திலிருந்து வெளியேற்றினார். பாலாதித்யருக்குப் பின்னர் மாபெரும் குப்தப் பேரரசு தேய்ந்து காணாமற்போனது. குப்தப் பேரரசின் அங்கீகரிக்கப்பட்ட கடைசி அரசர் விஷ்ணுகுப்தர் ஆவார்.
பாகியான் இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சிக் காலத்தில், சீனாவைச் சேர்ந்த பௌத்தத் துறவி பாகியான் இந்தியாவிற்கு வந்தார். அவருடைய பயணக் குறிப்புகள் குப்தர் காலத்து
மக்களின் சமூக-பொருளாதார,மத,ஒழுக்க நிலைகள் பற்றிய செய்திகளை நமக்கு வழங்குகின்றன. பாகியான் கூற்றுப்படி மகதத்து மக்கள் செழிப்போடும் வாழ்ந்தனர்.
குப்தர்களின் ஆட்சி அமைப்பு
- குப்த அரசர்கள் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினை நடைமுறைப்படுத்தினர்.
- அரசர் கடவுளின் பிரதிநிதியாக கருதப்பட்டார்.
- எனவே அரசர் கடவுளுக்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப்பட்டவராவார். மற்றவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டியதில்லை எனும் கோட்பாடு
- குப்த அரசர்கள் அரசியல், நிர்வாகம், இராணுவம், நீதிவழங்கல் ஆகிய துறைகளில் பெருமளவிலான அதிகாரம் பெற்றுத் திகழ்ந்தனர். குப்த அரசர்களுக்கு அமைச்சர்கள் குழுவொன்று நிர்வாகத்தில். உதவி செய்தது. அக்குழு இளவரசர்களையும், உயர் அதிகாரிகளையும், கப்பம் கட்டும் சிற்றரசர்களையும் கொண்டிருந்தது.
- நாட்டின் அன்றாட நிர்வாகத்தைத் திறம்பட நடத்த, பெருமளவிலான அதிகாரிகள் குப்த அரசர்களால் பணியமர்த்தப்பட்டனர். உயர் பதவிகளில் அமர்த்தப்பட்ட அதிகாரிகள் ‘தண்ட நாயகர்’ மற்றும் ‘மகாதண்ட நாயகர்’ என அழைக்கப்பட்டனர். குப்தப் பேரரசு ‘தேசம்’ அல்லது ‘புக்தி’ எனும்
பெயரில் பல பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டன. அவற்றை ‘உபாரிகா’ எனும் ஆளுநர்கள் நிர்வகித்தனர். பிராந்தியங்கள் ‘விஷ்யா’ எனும் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. விஷ்யாபதிகள் எனும் அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்தை மேற்கொண்டனர். கிராம அளவில் கிராமிகா, கிராமதியாகஷா எனும் அதிகாரிகள் செயல்பட்டனர். - விரிந்து பரந்த குப்தப் பேரரசு, இராணுவ அமைப்பின் முக்கியப் பங்கினை உணர்த்துகிறது. முத்திரைகளிலும் கல்வெட்டுக்களிலும் இராணுவப் பதவிகளின் பெயர்கள் பாலாதிகிரிதா, (காலாட்படையின் தளபதி) மஹாபாலாதிகிரிதா (குதிரைப் படையின் தளபதி) எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.
‘தூதகா’ எனும் ஒற்றர்களை உள்ளடக்கிய உளவு பார்க்கும் அமைப்பும் செயல்பட்டது.
சமூகமும் பொருளாதாரமும்
நிலம் மற்றும் விவசாயிகள்
காமாந்தகரால் எழுதப்பட்ட நிதிசாரம் எனும் நூல் அரசுக் கருவூலத்தின் முக்கியத்துவத்தையும் வருமானத்திற்கான பல வழிகளையும் குறிப்பிடுகின்றது.
சமுத்திரகுப்தரைப் போன்ற அரசர்களின் படையெடுப்பு நடவடிக்கைகளில், வருவாயின் உபரியே முதலீடு செய்யப்பட்டது. நிலவரியே அரசின் முக்கிய வருவாயாக இருந்தது. விவசாயிகளின் நிலைமை பரிதாபகரமாக இருந்தது. அவர்கள் பலவேறு வரிகளைச் செலுத்த வேண்டிய நிலையில் இருந்தனர். அவர்கள் கொத்தடிமை நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
- சேத்ரா – வேளாண்மைக்கு உகந்த நிலங்கள்
- கிலா – தரிசு நிலங்கள்
- அப்ரகதா – வனம் அல்லது காட்டு நிலங்கள்
- வஸ்தி – குடியிருப்பதற்கு உகந்த நிலங்கள்
- கபத சரகா – மேய்ச்சல் நிலங்கள்
வணிகமும், வர்த்தகமும்
குப்தர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு மிகவும் போற்றத்தக்கதாக இருந்தது. வணிகர்களில் இரண்டு வகையினர் இருந்தனர். ‘சிரேஸ்தி’
மற்றும் ‘சார்த்தவாகா’ என அவர்கள் அழைக்கப்பட்டனர்.
சிரேஸ்தி – சிரேஸ்தி பிரிவைச் சார்ந்த வணிகர்கள் ஓரிடத்தில் நிலையாக இருந்து வணிகம் செய்தவர்கள்.
சார்த்தவாகா – வணிகர்கள் எருது பூட்டிய வண்டிகளில் பொருட்களை ஏற்றி பல்வேறு இடங்களுக்குச் சென்று வணிகம் செய்தவர்கள்.
மிளகு, தங்கம், செம்பு, இரும்பு, குதிரைகள், யானைகள் ஆகியவை முக்கிய வணிகப் பொருட்களாகும். குப்தர்காலத்தில் அதிக வட்டிக்குக் கடன் கொடுக்கும் முறை நடைமுறையில் இருந்தது.
நாளந்தா பல்கலைக்கழகம்
- ” நாளந்தா பல்கலைக்கழகம் ஐந்தாம் மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளில் குப்தப் பேரரசின் ஆதரவில் தழைத்தோங்கியது. பின்னர் கன்னோசியைச் சேர்ந்த பேரரசர் ஹர்ஷரின் ஆதரவில் சிறப்புற்றது.
- நாளந்தாவில் பௌத்தத் தத்துவமே முக்கியப் பாடப்பிரிவாக இருந்தது. யோகா, வேத இலக்கியங்கள், மருத்துவம் ஆகியவையும் கற்பிக்கப்பட்டன.
- அப்பல்கலைக்கழகத்தில் யுவான் சுவாங் நாளந்தா பல்கலைக்கழகம் பௌத்த தத்துவத்தைப் பற்றிப் படிப்பதில் பல ஆண்டுகள் செலவழித்தார்.
- அந்த வளாகத்தில் எட்டு மகாபாடசாலைகளும் மூன்று மிகப்பெரிய நூலகங்களும் இருந்தன.
- நாளந்தா பல்கலைக்கழகம் பக்தியார்கில்ஜி என்பாரின் தலைமையில் வந்த மம்லுக்குகள் என அழைக்கப்பட்ட துருக்கிய இஸ்லாமிய அடிமை வீரர்களால் அழித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டது.
- நாளந்தா யுனெஸ்கோவின் உலகப்பாரம்பரியச் சின்னமாகும்.
குப்தர்களின் நாணய அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் சமுத்திரகுப்தர் ஆவார். குஷாணர்களின் நாணயங்கள் சமுத்திர குப்தருக்கு உந்துதலை வழங்கின. குப்தர்களின் பொற்காசுகள் தினாரா என்றழைக்கப்பட்டன. குப்தர்கள் வெளியிட்ட பொற்காசுகளை விட வெள்ளி, செப்புக் காசுகள் குறைவாகவே வெளியிடப்பட்டன. குப்தர்களுக்கு அடுத்து வந்த காலத்தில் பொற்காசுகளின் சுழற்சியில் வீழ்ச்சி ஏற்பட்டது. அது பேரரசினுடைய வளங்களின் வீழ்ச்சியைச்
சுட்டிக் காட்டுவதாய் உள்ளது.
குப்தர்களால் பயன்படுத்தப்பட்ட உலோகங்கள்:
இரும்பு, தங்கம், தாமிரம், தகரம், ஈயம், பித்தளை, செம்பு, மணி வெண்கலம், மைக்கா,மாங்கனீசு, சிகப்புச் சுண்ணம் ஆகியவையாகும்.
உலோகவியல்
குப்தர்கள் காலத்தில் சுரங்கத் தொழிலும் உலோகத் தொழிலும் செழிப்புற்று விளங்கின.
உலோகத் தொழில் வளர்ச்சி பெற்றிருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டு சந்திரகுப்தரால் நிறுவப்பட்ட மெக்ராலி இரும்புத் தூணாகும். டெல்லியிலுள்ள
இவ்வொற்றை இரும்புத்தூண் இன்றளவும் துருப் பிடிக்காமல் உள்ளது.
குப்தர்களின் உலோகச் சிற்பத்திற்கு இரு சிறந்த எடுத்துக்காட்டுகள்: நாளந்தாவிலுள்ள 18 அடி உயரமுள்ள புத்தரின் செப்புச் சிலை. சுல்தான் கஞ்ச் என்னும் இடத்திலுள்ள ஏழரை அடி உயரமுள்ள புத்தரின் உலோகச் சிற்பம். குப்தர்களின் ஓவியக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்பவை அஜந்தா
குகை ஓவியங்களும், குவாலியர் பாக் குகையில் காணப்படும் ஓவியங்களும் ஆகும்.
இலக்கியம்
பிராகிருதம் மக்களால் பேசப்படும் மொழியாக இருந்தபோதிலும் குப்தர்கள் சமஸ்கிருதத்தை அலுவலகமொழியாகக் கொண்டிருந்தனர். அவர்களின் கல்வெட்டுகள், அனைத்தும் சமஸ்கிருத மொழியிலேயே உள்ளன. குப்தர்கள் காலத்தில் சமஸ்கிருத இலக்கணமும் வளர்ச்சி பெற்றது. அது பாணினி எழுதிய ‘அஷ்டதியாயி’, பதஞ்சலி எழுதிய ‘மகாபாஷ்யம்’ எனும் நூல்களை அடிப்படையாகக் கொண்டது. வங்காளத்தைச் சேர்ந்த சந்திரோகோமியா எனும் பௌத்த அறிஞர் ‘சந்திர வியாகரணம்’ என்ற இலக்கண நூலை எழுதினார். காளிதாசர் இயற்றிய நாடக நூல்கள், சாகுந்தலம், மாளவிகாக்னிமித்ரம், விக்கிரம ஊர்வசியம் என்பனவாகும். அவருடைய சிறப்புமிக்க நூல்கள் மேகதூதம், ரகுவம்சம், குமாரசம்பவம், ரிதுசம்காரம் ஆகியனவாகும்.