சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர்
October 4, 2023 2025-01-11 13:56சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர்
சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர்
பராபரக்கண்ணி பாடலை எழுதியவர் தாயுமானவர்.
இப்பகுதி தாயுமானவர் பாடல்கள் என்னும் நூலில் உள்ளது.
இந்நூலைத் தமிழ் மொழியின் உபநிடதம் எனப் போற்றுவர்.
இப்பாடல்கள் ‘பராபரக் கண்ணி’ என்னும் தலைப்பில் உள்ளன.
‘கண்ணி’ என்பது இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல்வகை.
பராபரக்கண்ணியில் தாயுமானவர் கூறுவன:
அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் கருணை மிகுந்த சான்றோர்க்குத் தாெண்டு செய்ய வேண்டும். அன்பர்களுக்குத் தாெண்டு செய்பவராக என்னை ஆக்கிவிட்டால் போதும் இன்பநிலை தானே வந்து சேரும். எல்லாரும் இன்பமாக வாழ வேண்டும். அதைத்தவிர, வேறு எதையும் நினைக்க மாட்டேன் என்று தாயுமானவர் வேண்டுகிறார்.
“முத்தே பவளமே மொய்த்தபசும் பொற்சுடரே
சித்தேஎன் னுள்ளத் தெளிவே பராபரமே
கண்ணே கருத்தேயென் கற்பகமே கண்ணிறைந்த
விண்ணே ஆனந்த வியப்பே பராபரமே.” – தாயுமானவர்
பொருள் : மேலான பரம்பொருளே! நீ முத்தாகவும் பவளமாகவும் பொன்னொளியாகவும் பேரறிவாகவும் என் உள்ளத் தெளிவாகவும் இருக்கின்றாய். கண்ணாகவும் என் கருத்தாகவும் கேட்டவற்றை எல்லாம் வழங்கும் கற்பக மரமாகவும் கண்ணுள் நிறைந்த விண்ணாகவும் மகிழ்ச்சியில் தோன்றும் வியப்பாகவும் காட்சியளிக்கின்றாய். உன் அருள் வேண்டி நிற்கின்றேன், அருள்வாயாக.
சொற்பொருள் : சுடர்-ஒளி; ஆனந்தம் – மகிழ்ச்சி; பராபரம் – மேலான பொருள், இறைவன்.
ஆசிரியர் குறிப்பு :
பெயர் : தாயுமானவர்.
பெற்றோர் : கேடிலியப்பர் – கெசவல்லி அம்மையார்.
மனைவி : மட்டுவார்குழலி.
ஊர் : நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருமறைக்காடு (வேதாரண்யம்).
நூல் : தாயுமானவர் திருப்பாடல் திரட்டு.
பணி : திருச்சியை ஆண்ட விசய ரகுநாத சொக்கலிங்கரிடம் கருவூலஅலுவலர்.
காலம் : கி. பி. பதினெட்டாம் நூற்றாண்டு.
நூல் குறிப்பு : வாழ்த்தாக இடம்பெற்றுள்ள பாடல், தாயுமானவர் திருப்பாடல் திரட்டு என்னும் நூலில் பராபரக்கண்ணி என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது. இந்நூல், தெய்வத் தமிழின் இனிமையும் எளிமையும் பொருந்திய செய்யுள் நடையால் ஆனது; கற்பார்க்கு மனத்தூய்மை, பத்திச்சுவை ஆகியனவற்றை ஊட்டும்.
திருச்சிராப்பள்ளி மலைமீது எழுந்தருளியுள்ள இறைவனான தாயுமானவரின் திருவருளால் பிறந்தமையால், இவருக்குத் தாயுமானவர் என்று பெயர் சூட்டப்பட்டது. தாயுமானவர் நினைவு இல்லம் இராமநாதபுரம் மாவட்டத்து இலட்சுமிபுரத்தில் உள்ளது.