சான்றாண்மை
October 2, 2023 2025-01-11 13:57சான்றாண்மை
சான்றாண்மை
1.கடன்என்ப நல்லவை எல்லாம் கடனறிந்து
சான்றாண்மை மேற்கோள் பவர்க்கு.
விளக்கம்: நல்ல குணம் கொண்டவர்கள் நல்ல செயல்களை எல்லாம் தமது கடமை என நினைத்து வாழ்வர்.
2.குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத் துள்ளதூஉ மன்று.
விளக்கம்: நல்ல குணங்களை கொண்டு இருந்தாலே எல்லா சிறப்பும் வந்து சேரும். வேறு எந்த நலன்களும் சிறப்பை தராது.
3.அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண்.
விளக்கம்: அன்புடைமை, நாணம்,உதவி செய்தல்,இரக்கம் கட்டுதல், உண்மை பேசுதல் போன்ற ஐந்து குணங்களை சான்றாண்மையின் தூண்களாகும்.
4.கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.
விளக்கம்: தவம் என்பது பிற உயிர்களை கொல்லாமை, பிறர் குறைகளை சொல்லாமை சான்றாண்மை எனப்படும்.
5.ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.
விளக்கம்: ஓரு செயலை வெற்றியுடன் செய்து முடிக்க ஆற்றலும் பணிவாக நடத்தலும் வேண்டும். அதுவே பகைவரை நண்பராக்க உதவும்.
6.சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.
விளக்கம்: தம்மை விட ஆற்றல் குறைந்தவரிடத்தில் தோல்வி அடைந்தால் அதை ஏற்று கொள்ள வேண்டும். அதுவே ஒருவரின் சான்றாண்மையை அறிய
உதவும் உரைகல் ஆகும்.
7.இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.
விளக்கம்: நமக்கு தீங்கு செய்தவருக்கு நன்மை செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் சான்றாண்மை பண்பு இருந்தும் எந்த பயனும் இல்லை.
8.இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்.
விளக்கம்: சான்றாண்மை என்னும் பண்பு ஒருவருக்கு இருந்தால் வறுமை அவருக்கு ஒரு குறையாக இருக்காது.
9.ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்(கு)
ஆழி எனப்படு வார்.
விளக்கம்: சான்றாண்மை பண்பு கொண்டவர்களை கடல் என்று புகழ்வர். உலகம் அழியும் காலம் வந்தாலும் தன் நிலையிலிருந்து மாற மாட்டார்கள்.
10.சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.
விளக்கம்: சான்றாண்மை பண்பில் குறைவு ஏற்பட்டவர்களின் பாரத்தை பூமி தாங்காது.