சிறுபஞ்சமூலம்
October 3, 2023 2025-04-21 5:55சிறுபஞ்சமூலம்
சிறுபஞ்சமூலம்
ஆசிரியர் குறிப்பு:
ஆசிரியர்: காரியாசான்
மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் எனச் சிறப்புப்பாயிரம் கூறுகிறது.
இவர் சமண சமயத்தை சார்ந்தவர்.
இவரும் கணிமேதவியாரும் ஒருசாலை மாணாக்கர்.
நூல் குறிப்பு:
-
இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
-
இந்நூலில் கடவுள் வாழ்த்துடன் 97 வெண்பாக்கள் உள்ளன.
-
கண்டங்கத்திரி, சிறு வழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகையின் வேர்களும் உடல் நோயைத் தீர்ப்பன.
-
இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் ஐந்து அறக்கருத்துகள் உள்ளன.
-
ஐந்து அறக்கருத்துக்களும் மக்கள் மனநோயைப் போக்குவன.
பொதுவான குறிப்புகள்:
மருந்தின் பெயரால் பெயர் பெற்ற நூல்.
பஞ்சம் = ஐந்து, மூலம் = வேர்.
ஐந்து வேர்கள் = கண்டங்கத்திரி, சிறு வழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி.
சிறுபஞ்சமூலம் போன்றே பெருபஞ்சமூலம் என்ற ஒன்றும் உண்டு. அவை
1. வில்வம்,
2. பெருங்குமிழ்,
3. பாதிரி,
4. தழுதாழை,
5. வாகை
காரியாசனும் ஏலாதியின் ஆசிரியருமான கணிமேதாவியாரும் மதுரைத் தமிழ் ஆசிரியர் மாக்காயனாரின் ஒரு சாலை மாணவர்கள்.
இந்நூல் தொல்காப்பியர் குறிப்பிடும் “அம்மை” என்ற வனப்பிற்கு உரியது.
சொற்பொருள்
கண்ணோட்டம் – இரக்கம் கொள்ளுதல்
எண்வனப்பு – ஆராய்சிக்கு அழகு
வேந்தன் – அரசன்
வனப்பு – அழகு
கிளர்வேந்தன் – புகழுக்குரிய அரசன்
வாட்டான் – வருத்தமாட்டான்
இலக்கணக்குறிப்பு:
கண்ணோட்டம், செல்லாமை, உறைதல், என்றல் – தொழிற்பெயர்கள்
கேட்டார், வாட்டான் – வினையாலணையும் பெயர்
மேற்கோள்கள்
“கண்வனப்புக் கண்ணோட்டம் கால்வனப்புச் செல்லாமை எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல் – பண்வனப்புக் கேட்டார்நன் றென்றல் கிளர்வேந்தன் தன்னோடு வட்டான்நன் றென்றால் வனப்பு”
கண்ணுக்கு அழகு கண்ணோட்டம் கொள்ளும் இரக்க உணர்வை வெளிப்படுத்துதல். காலுக்கு அழகு அடுத்தவன் மனையாளை விரும்பிச் செல்லாமை.
எண் கணக்குக்கு அழகு கூட்டியும் கழித்தும் பெருக்கியும் வகுத்தும் இத்துணை ஆகிறது என்று சொல்லுதல்.
பண்ணிசைக்கு அழகு கேட்டவர் நன்று என்று பாராட்டல்.
வேந்தனுக்கு அழகு தன் நாட்டு மக்களை வாட்டாமல் மகிழ்வுடன் வைத்திருக்கிறான் என்று பலரும் சொல்லக் கேட்டல்.
“நூற்கு இயைத்த சொல்லின் வனப்பே வனப்பு”
நூல்களின் அமைந்துள்ள சொல்லின் அழகே அழகு.
“பேதைக்கு உரைத்தாலும் செல்லாது உணர்வு”
பேதைக்கு = முட்டாளுக்கு
உரைத்தாலும் = எவ்வளவு சொன்னாலும்
செல்லாது உணர்வு = மண்டையில் ஏறாது
குளம்தொட்டுக் கோடு பதித்து வழிசீத்து
உளம்தொட்டு உழுவயல் ஆக்கி – வளம்தொட்டுப்
பாகுபடும் கிணற்றோடு என்று இவ்வைம் பாற்படுத்தான்
ஏகும் சொர்க்கத்து இனிது. – சிறுபஞ்சமூலம் 64
பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,
மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,
விதையாமை நாறுவ வித்துஉள; மேதைக்கு
உரையாமை செல்லும் உணர்வு.
பாடலின் பொருள்
பூக்காமலே சில மரங்கள் காய்ப்பதுண்டு. இதைப் போலவே நன்மை, தீமைகளை நன்குணர்ந்தவர், வயதில் இளையவராக இருந்தாலும், அவர் மூத்தவரோடு வைத்து எண்ணத் தக்கவரே ஆவார். பாத்தி அமைத்து விதை விதைக்காமலே, தானே முளைத்து வளரும் விதைகளும் உள்ளன. அதைப் போலவே மேதையரும் பிறர் உணர்த்தாமல் எதையும் தாமே உணர்ந்துகொள்வர்.
அணி: பாடலில் எடுத்துக்காட்டு உவமையணி பயின்று வந்துள்ளது.
சொல்லும் பொருளும்
மூவாது – முதுமை அடையாமல்; நாறுவ – முளைப்ப; தாவா – கெடாதிருத்தல்
நூல் வெளி
தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து நீதிநூல்கள் தோன்றின. அவை பதினெண் கீழ்க்கணக்கு எனத் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று சிறுபஞ்சமூலம். ஐந்து சிறிய வேர்கள் என்பது இதன் பொருள். அவை கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகியன. இவ்வேர்களால் ஆன மருந்து உடலின் நோயைப் போக்குகின்றது. அதுபோலச் சிறுபஞ்சமூலப் பாடல்களில் உள்ள ஐந்தைந்து கருத்துகள் மக்களின் அறியாமையைப் போக்கி நல்வழிப்படுத்துவனவாய் அமைந்துள்ளன. இப்பாடல்கள் நன்மை தருவன, தீமை தருவன, நகைப்புக்கு உரியன என்னும் வகையில் வாழ்வியல் உண்மைகளை எடுத்துக்காட்டுகின்றன. சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் காரியாசான், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர். காரி என்பது இயற்பெயர். ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் அமைந்தபெயர். மாக்காரியாசான் என்று பாயிரச் செய்யுள் இவரைச் சிறப்பிக்கிறது.