தந்தை பெரியார்
July 31, 2024 2025-06-13 7:15தந்தை பெரியார்
சாதி உயர்வுதாழ்வுகளையும் மத வேறுபாட்டையும் அகற்ற வேண்டும் என்றார்; அதற்காக ஒரு சங்கமும் அமைத்தார்; அதற்குப் “பகுத்தறிவாளர் சங்கம்” என்பது பெயர்.
பிறப்பினால் வரும் கீழ்ச்சாதி – மேல்சாதி என்னும் வேறுபாடுகளை அகற்றி, மக்கள் அனைவரும் மனிதச்சாதி என்னும் ஒரினமாக எண்ணவேண்டும் என்றார்.
கேரளாவில் வைக்கம் என்னும் ஊரில் தாழ்த்தப்பட்ட மக்கள், கோவில் சுற்றுத்தெருவில் நடப்பதற்குத் தடை இருந்தது. அதனை எதிர்த்துப் போராடி வெற்றி
பெற்றதனால், “வைக்கம் வீரர்” என்று அழைக்கப்பட்டார்.
மனிதர்களில் சரிபாதியாக உள்ள பெண்களையும் மதித்தல் வேண்டும். ஆண்கள் செய்யும் எல்லாவற்றையும் பெண்களும் செய்தல் வேண்டும்; அவர்களால் செய்யவும் இயலும். பெண்களுக்கு நகையோ அழகான உடையோ முக்கியம் இல்லை; அறிவும் சுயமரியாதையும்தான் மிக முக்கியம்.”
தாய்மார்தாம் இராமசாமிக்குப் “பெரியார்” எனப் பட்டம் வழங்கினார்கள்.
சிறப்புக் குறிப்புகள்
பெற்றோரான வெங்கடப்பருக்கும் – சின்னத்தாயம்மாளுக்கும்
ஈரோடு – வெங்கடப்பர்- இராமசாமி – ஈ.வெ.ரா
17.09.1879 இல் பிறந்து, 24.12.1973இல் மறைந்த பெரியார், தம் வாழ்நாளில் 8600 நாள், 13,12,000 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து, 10,700 கூட்டங்களில் 21,400 மணிநேரம் மக்களுக்காக உரையாற்றிச் சமுதாயத் தொண்டு ஆற்றினார்.
1970ஆம் ஆண்டு சமுதாயச் சிர்திருத்தச் செயல்பாடுகளுக்காக ஐக்கிய நாடுகள் அவையின் “யுனெஸ்கோ விருது” பெரியாருக்கு வழங்கப்பட்டது.
நடுவண் அரசு 1978ஆம் ஆண்டு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல்தலையை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.
பெரியாரின் சிறப்பு பெயர்கள்
வெண்தாடி வேந்தர்; சுயமரியாதைச் சுடர்; பகுத்தறிவுப் பகலவன்; வைக்கம் வீரர்; ஈரோட்டுச் சிங்கம்; தெற்காசியாவின் சாக்ரடீஸ்; பெண்ணினப் போர்முரசு; புத்துலகத் தொலைநோக்காளர்;
தந்தை பெரியார் எதிர்த்தவை
இந்தி திணிப்பு; குலக்கல்வித் திட்டம்; தேவதாசி முறை; எள்ளுண்ணல்; குழந்தைத் திருமணம்; மணக்கொடை;
பகுத்தறிவு
ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினாக்களை எழுப்பி, அறிவின்வழியே சிந்தித்து முடிவெடுப்பதே பகுத்தறிவாகும்.
சமூகம்
சமூகத்தில் சாதி சமயப் பிரிவுகள் மேலோங்கி இருந்தன. பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்னும் வேறுபாடுகள் இருந்தன. சாதி என்னும் பெயரால் ஒருவரை ஒருவர் இழிவு செய்யும் கொடுமை இருந்தது. இந்த இழிநிலை கண்டு தந்தை பெரியார் கொதித்தெழுந்தார். “சாதி உணர்வு ஆதிக்க உணர்வை வளர்க்கிறது. மற்றவர்களின் உரிமைகளைப் பறிக்கிறது. மனிதர்களை இழிவுபடுத்துகிறது. அந்தச் சாதி என்ற கட்டமைப்பை உடைத்தெறிய வேண்டும்” என்றார் அவர்.
மதம்
‘மதங்கள் என்பன மனித சமூகத்தின் வாழ்க்கை நலத்திற்கே ஏற்படுத்தப்பட்டன. ஆனால், இன்று மதத்தின் நிலை என்ன? நன்கு சிந்தித்துப் பாருங்கள்; மனிதர்களுக்காக மதங்களா? மதங்களுக்காக மனிதர்களா? மதம் என்பது மனிதர்களை ஒற்றுமைப்படுத்துவதற்காகவா? பிரித்து வைப்பதற்காகவா?’ எனப் பெரியார் பகுத்தறிவு வினாக்களை எழுப்பினார்; கடவுள் மறுப்புக் கொள்கையைக் கடைப்பிடித்தார்.
கல்வி
சமூக வளர்ச்சிக்குக் கல்வியை மிகச் சிறந்த கருவியாகப் பெரியார் கருதினார். சமூகத்தின் அனைத்து நிலையினருக்கும் கல்வி அளிக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே கல்வி உரிமையானது எனவும் சில பிரிவினர்க்குக் கல்வி கற்க உரிமை இல்லை எனவும் கூறப்பட்ட கருத்துகளைப் பெரியார் கடுமையாக எதிர்த்தார். அனைவருக்கும் கல்வி அளிக்கப்பட வேண்டும். குறிப்பாகப் பெண்களுக்குக் கல்வியறிவு புகட்ட முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார். பெண்களுக்கு அளிக்கப்படும் கல்வியினால் சமுதாயம் விரைவாக முன்னேறும் என்று பெரியார் நம்பினார். மனப்பாடத்திற்கு முதன்மை அளிக்கும் தேர்வு முறையையும், மதிப்பெண்களுக்கு முதன்மை அளிக்கும் முறையையும் பெரியார் கடுமையாக எதிர்த்தார்.
மொழி, இலக்கியம்
இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் தமிழில் படைக்கப்பட வேண்டும்’ என்று கூறினார்.
எழுத்துச் சீர்திருத்தம்
மொழி என்பது உலகின் போட்டி, போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும்; அக்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும்; அவ்வப்பொழுது கண்டுபிடித்துக் கைக்கொள்ள வேண்டும்” என்றார். உயிர் எழுத்துகளில் ‘ஐ’ என்பதனை ‘அய்’ எனவும், ‘ஔ’ என்பதனை ‘அவ்’ எனவும் சீரமைத்தார் (ஐயா – அய்யா, ஒளவை – அவ்வை). அதுபோலவே, மெய்யெழுத்துகளில் சில எழுத்துகளைக் குறைப்பதன் வாயிலாகத் தமிழ்மொழி கற்பதற்கும் தட்டச்சு செய்வதற்கும் எளிதாகும் எனக் கருதினார். பெரியாரின் இக்கருத்தின் சில கூறுகளை 1978ஆம் ஆண்டு தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது.
பெண்கள் நலம்
நாட்டு விடுதலையைவிட, பெண் விடுதலைதான் முதன்மையானது என்று கூறினார் பெரியார். ‘கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் ஆண்களுக்கு நிகரான உரிமை, பெண்களுக்கும் அளிக்கப்பட வேண்டும்; வேலைவாய்ப்பில் ஐம்பது விழுக்காடு இட ஒதுக்கீடு பெண்களுக்குத் தரப்பட வேண்டும்; பொருளாதாரத்தில் பெண்கள் பிறரைச் சார்ந்து வாழவேண்டிய நிலையில் இருக்கக்கூடாது; நன்கு கல்வி கற்று, சுய உழைப்பில் பொருளீட்ட வேண்டும். தெளிந்த அறிவுடனும் தன்னம்பிக்கையுடனும் திகழ வேண்டும்’ என்றார் பெரியார். இளம்வயதில் பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கக்கூடாது; கைம்பெண்களுக்கு மறுமணம் செய்ய வழிவகை காணவேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்தினார். குடும்பத்தில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கும் சம உரிமை அளிக்கப்படவேண்டும்; பெண்களின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்;
பெரியார் விதைத்த விதைகள்:
கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு
பெண்களுக்கான இடஒதுக்கீடு
பெண்களுக்கான சொத்துரிமை
குடும்ப நலத்திட்டம்
கலப்புத் திருமணம்,
சீர்திருத்தத் திருமணம் ஏற்பு
தெரிந்து தெளிவோம்
1938 நவம்பர் 13 இல் சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் ஈ.வெ.ரா.வுக்குப் ‘பெரியார்’ என்னும் பட்டம் வழங்கப்பட்டது.
- 06. 1970 இல் யுனெஸ்கோ மன்றம் என்ற அமைப்பு தந்தை பெரியாரைத் ‘தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’ எனப் பாராட்டிப் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
பெரியார் இயக்கமும் இதழ்களும்
தோற்றுவித்த இயக்கம் – சுயமரியாதை (1925)
நடத்திய இதழ்கள் – குடியரசு, விடுதலை, உண்மை, ரிவோல்ட் (ஆங்கில இதழ்)
சிந்தனைச் சிறப்புகள்
பெரியாரின் சிந்தனைகள் தொலைநோக்கு உடையவை; அறிவியல் அடிப்படையில் அமைந்தவை; மனிதநேயம் வளர்க்கப் பிறந்தவை. நடைமுறைக்கு ஒவ்வாத கருத்துகளை அவர் எப்பொழுதும் கூறியதில்லை. மேலும், தமது சீர்திருத்தக் கருத்துகளுக்கேற்ப வாழ்ந்து காட்டினார்; தம் வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவுக் கருத்துகளுக்கேற்ப வாழ்ந்து காட்டினார்; கருத்துகளைப் பரப்புரை செய்தார்; சமுதாயம் மூடப்பழக்கங்களிலிருந்து மீண்டெழ அரும்பாடுபட்டார்; அதற்காகப் பலமுறை சிறை சென்றார்; பலரின் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தார். இறுதி மூச்சுவரை சமூகச் சீர்திருத்தப் போராளியாகவே வாழ்ந்து மறைந்தார்.
‘பெரியாரின் சிந்தனைகள் அறிவுலகின் திறவுகோல்; பகுத்தறிவுப் பாதைக்கு வழிகாட்டி; மனித நேயத்தின் அழைப்பு மணி; ஆதிக்கசக்திகளுக்கு எச்சரிக்கை ஒலி; சமூகச் சீர்கேடுகளைக் களைவதற்கு மாமருந்து’ என்று அறிஞர்கள் மதிப்பிடுவர்.
தொண்டு செய்து பழுத்த பழம்
தூயதாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார் – பார்
அவர்தாம் பெரியார் – புரட்சிக்கவி பாரதிதாசன்
சுயமரியாதை இயக்கம்
சுயமரியாதை இயக்கம் (Self Respect Movement) சடங்குகளும் சம்பிரதாயங்களும் இல்லாத சாதிகளற்ற பிறப்பின் அடிப்படையிலான பாகுபாடற்ற ஒரு சமூகத்தை இவ்வியக்கம் ஆதரித்தது.பகுத்தறிவும் சுயமரியாதையும் அனைத்து மனிதர்களின் பிறப்புரிமை எனப் பிரகடனம் செய்த இவ்வியக்கம் சுயாட்சியைக் காட்டிலும் இவை முக்கியமானவை எனும் கருத்தை உயர்த்திப் பிடித்தது. பெண்களின் தாழ்வான நிலைக்கு எழுத்தறிவின்மையே காரணம் என அறிவித்த அவ்வியக்கம் அனைருக்கும் கட்டாயத் தொடக்கக் கல்வியை வழங்கும் பணிகளை மேற்கொண்டது. விடுதலை கோருதல், மூடநம்பிக்கைகளை நீக்குதல் மற்றும் பகுத்தறிவை வலியுறுத்துதல் போன்ற கோரிக்கைகளை கோரியது. மேலும் இவ்வியக்கம் சீர்திருத்தத் திருமணம் அல்லது சுயமரியாதைத் திருமணங்களை ஆதரித்தது. இவ்வியக்கம் பெண் சுயமரியாதை இயக்கம் பிராமணர் அல்லாத இந்துக்களின் நலன்களுக்காக மட்டுமல்லாமல் இஸ்லாமியர்களின் நலனுக்காகவும் போராடியது. இஸ்லாமின் மேன்மை மிகுந்த கோட்பாடுகளான சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை சுயமரியாதை இயக்கம் பாராட்டியது.
பெரியார் ஈ.வெ.ரா
பெரியார் ஈ.வெ.ராமசாமி (1879-1973) சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர் ஆவார். இவர் ஈரோட்டை சேர்ந்த செல்வந்தரும் வணிகருமான வெங்கடப்பர், சின்னத்தாயம்மாள் ஆகியோரின் மகனாவார். ஓரளவு முறையான கல்வியைக் கற்றிருந்தாலும் தன்தந்தையால் ஆதரிக்கப்பட்ட அறிஞர்களுடன் விமர்சன விவாதங்களில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இளைஞராக இருந்தபோது ஒருமுறை வீட்டைவிட்டு வெளியேறிய அவர் பல மாதங்கள் வாரணாசியிலும் ஏனைய சமயம் சார்ந்த மையங்களிலும் தங்கியிருந்தார். வைதீக இந்து சமயத்துடன் ஏற்பட்ட நேரடி அனுபவங்கள் இந்து சமயத்தின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கைகளைத் தகர்த்தன. வீடு திரும்பிய அவர் சில காலம் குடும்பத் தொழிலான வணிகத்தை கவனித்து வந்தார். அவருடைய சுயநலமற்ற பொதுச் சேவைகளும், தொலைநோக்குப் பார்வையும் அவரை புகழ்பெற்ற ஆளுமை ஆக்கின. ஈரோட்டின் நகரசபைத் தலைவர் பதவி (1918-1919) உட்பட பல பதவிகளையும் அவர் வகித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பெரியார் பதவி வகித்தபோது ஒடுக்கப்பட்ட மக்களின் கோவில் நுழைவு உரிமை குறித்த தீர்மானம் ஒன்றை
முன்மொழிந்தார். சாதி தர்மம் என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் கோவிலுக்குள்ளும் அதைச் சுற்றியுள்ள வீதிகளிளும் நுழைவது மறுக்கப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட நடைமுறையினை வைக்கம் மக்கள் எதிர்த்தனர். எதிர்ப்பின் தொடக்கக் கட்டங்களில் மதுரையைச் சேர்ந்த ஜார்ஜ் ஜோசப் பெரும்பங்கு வகித்தார். உள்ளூர் தலைவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் பெரியார் இந்த இயக்கத்திற்கு தலைமையேற்றதால் சிறையிலடைக்கப்பட்டார். மக்கள் அவரை ‘வைக்கம் வீரர்’ எனப் பாராட்டினர். இதே சமயத்தில் சேரன்மாதேவி குருகுலப் பள்ளியில், உணவு உண்ணும் அறையில் சாதி அடிப்படையிலான பாகுபாடு நிலவுவதைக் கேள்வியுற்று மனவருத்தமடைந்தார். இக்குருகுலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிதியுதவியில் வ.வே. சுப்பிரமணியம் எனும் காங்கிரஸ் தலைவரால் நடத்தப் பெற்றது. இதனைப் பெரியார் கண்டித்து எதிர்த்த பின்னரும், குருகுலத்தில் நடைபெறும் சாதிப்பாகுபாட்டை காங்கிரஸ் தொடர்ந்து ஆதரித்ததால் மனமுடைந்தார்.
பெரியார் 1925 சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். பகுத்தறிவுக் கருத்துகளை மக்களிடையே பரப்புவதில் மக்கள் தொடர்புச் சாதனங்களின் முக்கியத்துவத்தைப் பெரியார் புரிந்து கொண்டார். குடிஅரசு (1925), ரிவோல்ட் (1928), புரட்சி (1933), பகுத்தறிவு (1934), விடுதலை (1935) போன்ற பல செய்தித்தாள்களையும் இதழ்களையும் பெரியார் தொடங்கினார். சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரபூர்வ செய்தித்தாள் குடிஅரசு ஆகும். ஒவ்வொரு இதழிலும் சமூகம் பிரச்சனைகள் தொடர்பான தனது கருத்துகளைப் பெரியார் வழக்கமான கட்டுரையாக எழுதினார். அவ்வப்போது சித்திரபுத்திரன் எனும் புனைப் பெயரில் கட்டுரைகளை எழுதினார்.
பௌத்த சமய முன்னோடியும், தென்னிந்தியாவின் முதல் பொதுவுடமைவாதியுமான சிங்காரவேலருடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தார். B.R. அம்பேத்கார் எழுதிய சாதி ஒழிப்பு (Annihilation of caste) எனும் நூலை, அந்நூல் வெளிவந்தவுடன் 1936இல் தமிழில் பதிப்பித்தார். B.R. அம்பேத்கார் அவர்களின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தனித்தேர்தல் தொகுதிக் கோரிக்கையை பெரியாரும் ஆதரித்தார்.
1937இல் இராஜாஜியின் தலைமையிலான அரசின் செயல்பாட்டினை எதிர்க்கும் விதமாக, பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக அறிமுகம் செய்ததற்கு எதிராகப் பெரியார் மக்கள் செல்வாக்கு பெற்ற இயக்கத்தை நடத்தினார். இந்தி எதிர்ப்புப் போராட்டமானது (1937-39) தமிழ்நாட்டு அரசியலில் மிக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் போராட்டத்துக்காக பெரியார் சிறையில் அடைக்கப்பட்டார். பெரியார் சிறையில் இருந்தபோதே நீதிக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பின்னர் நீதிக்கட்சி சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்தது. அதற்கு 1944இல் திராவிடர் கழகம் (திக) எனப் புதுப்பெயர் சூட்டப்பெற்றது.
சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த இராஜாஜி (1952-54) பள்ளிக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்திய தொழில் கல்வி பயிற்சித்திட்டமானது, மாணவர்களுக்கு அவர்களின் தந்தையர்கள் செய்து வந்த தொழில்களில் பயிற்சியளிப்பதாக அமைந்தது. இதை குலக்கல்வித் திட்டம் (சாதியை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறை) என விமர்சித்த பெரியார் இத்திட்டத்தை முழுமையாக எதிர்த்தார். இதற்கு எதிராக பெரியார் மேற்கொண்ட போராட்டங்கள் இராஜாஜியின் பதவி விலகலுக்கு இட்டுச் சென்றது. கு. காமராஜ் சென்னை மாநிலத்தின் முதலமைச்சரானார். பெரியார் தன்னுடைய தொண்ணூற்று நான்காவது வயதில் (1973) இயற்கை எய்தினார். அவரது உடல் சென்னையில் பெரியார் திடலில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பெரியார், ஒரு பெண்ணியவாதி
பெரியார் ஆணாதிக்க சமூகத்தை விமர்சித்தார். குழந்தைத் திருமணத்தையும் தேவதாசி முறையையும் கண்டனம் செய்தார். 1929 முதல் சுயமரியாதை மாநாடுகளில், பெண்களின் மோசமான நிலை குறித்து குரல் கொடுக்கத் தொடங்கியதிலிருந்து, பெண்களுக்கு விவாகரத்து பெறுவதற்கும் சொத்தில் பங்கு பெறுவதற்கும் உரிமை உண்டு என ஆணித்தரமாக வலியுறுத்தினார். “திருமணம் செய்து கொடுப்பது” எனும் வார்த்தைகளை மறுத்த அவர். அவை பெண்களைப் பொருட்களாக நடத்துகின்றன என்றார். அவைகளுக்கு மாற்றாக திருக்குறளில் இருந்து எடுக்கப்பட்ட வாழ்க்கைத் துணை என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டினார். பெண்ணியம் குறித்து பெரியார் எழுதிய மிக முக்கியமான நூல் பெண் ஏன் அடிமையானாள்? என்பதாகும்.
பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கப்படுவது அவர்களுக்குச் சமூகத்தில் நன்மதிப்பையும், பாதுகாப்பையும் வழங்கும் என பெரியார் நம்பினார். 1989இல் தமிழக அரசு, மாற்றங்களை விரும்பிய சீர்த்திருத்தவாதிகளின் கனவை நனவாக்கும் வகையில் 1989ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து வாரிசுரிமைச் சீர்திருத்தச் சட்டத்தை அறிமுகம் செய்தது. அச்சட்டம் முன்னோர்களின் சொத்துக்களை உடைமையாகப் பெறுவதில் பெண்களுக்குச் சம உரிமை உண்டென்பதை உறுதிப்படுத்தியது. முன்மாதிரியாக அமைந்த இந்தச்சட்டம் தேசிய அளவிலும் இது போன்ற சட்டங்கள் இயற்றப்படுவதற்கு அடிப்படையாக அமைந்தது.