தமிழகம் – ஊரும் பேரும்,
October 10, 2023 2025-03-21 13:02தமிழகம் – ஊரும் பேரும்,
தமிழகம் – ஊரும் பேரும்,
திருநெல்வேலி
திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என்று திருஞானசம்பந்தரும், தண்பொருநைப் புனல் நாடு என்று சேக்கிழாரும் திருநெல்வேலியின் சிறப்பைப் போற்றியுள்ளனர்.
முற்காலத்தில் திருநெல்வேலிக்கு வேணுவனம் என்னும் பெயரும் இருந்துள்ளது. மூங்கில் காடு என்பது அதன் பொருளாகும். மூங்கில் நெல் மிகுதியாக விளைந்தமையால் அப்பகுதிக்கு நெல்வேலி என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கருதுவர்.
சிறப்புமிக்க மலையாகிய பொதிகை மலை இலக்கியங்களில் பாராட்டப்பட்டு உள்ளது.
“பொதியி லாயினும் இமய மாயினும்
பதியெழு அறியாப் பழங்குடி” (சிலம்பு 14 -15)
என்று இளங்கோவடிகள் பொதிகை மலைக்கு முதலிடம் கொடுத்துப் பாடுகிறார்
இலக்கியங்களில் திரிகூடமலை என வழங்கப்படும் குற்றாலமலை புகழ் பெற்ற சுற்றுலா இடமாகத் திகழ்கின்றது.
“வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்”
என்று குற்றால மலைவளத்தைத் திரிகூட இராசப்பக் கவிராயர் தம் குற்றாலக் குறவஞ்சி நூலில் பாடியுள்ளார்.
திருநெல்வேலிப் பகுதியை வளம் செழிக்கச் செய்யும் ஆறு தாமிரபரணி இதனைத் தண்பொருநை நதி என்று முன்னர் அழைத்தனர். இது பச்சையாறு, மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடனாநதி என்று பல கிளை ஆறுகளாகப் பிரிந்து திருநெல்வேலியை நீர்வளம் மிக்க மாவட்டமாகச் செய்கிறது.
திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஆதிச்சநல்லூர் என்னும் இடத்தில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வில் இறந்தவர்களின் உடல்களைப் புதைக்கப் பழந்தமிழர்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழரின் தொன்மைக்கும் நாகரிகச் சிறப்புக்கும் சான்றாக விளங்கும் தொல்பொருள்கள் இங்குக் கிடைத்துள்ளன. இவ்வூர் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது.
தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தில் கொற்கை என்னும் துறைமுகம் இருந்தது. இங்கு முத்துக்குளித்தல் சிறப்பாக நடைபெற்றதாகத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. கொற்கையில் விளைந்த பாண்டி நாட்டு முத்து உலகப் புகழ் பெற்றதாக விளங்கியது.
முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை (நற்றிணை 23:6)
கொற்கையில் பெருந்துறை முத்து (அகம் 27:9)
என்று சங்க இலக்கியங்கள் கொற்கையின் முத்துகளைக் கூறுகின்றன. கிரேக்க, உரோமாபுரி நாடுகளைச் சேர்ந்தவர்களான யவனர்கள் இந்த முத்துகளை விரும்பி வாங்கிச் சென்றனர்.
இங்குத் திங்கள்தோறும் திருவிழா நடைபெறும் என்பதை,
“திங்கள் நாள்விழா மல்கு திருநெல்
வேலியுறை செல்வர் தாமே”
என்னும் திருஞானசம்பந்தர் பாடல் அடிகளால் அறியலாம்.
காவற்புரைத் தெரு என்று ஒரு தெரு உள்ளது. காவற்புரை என்றால் சிறைச்சாலை. அரசரால் தண்டிக்கப்பட்டவர்கள் இங்குச் சிறை வைக்கப்பட்டதால் இப்பெயர் பெற்றது.
மேல வீதியை அடுத்துக் கூழைக்கடைத் தெரு உள்ளது. கூலம் என்பது தானியத்தைக் குறிக்கும். கூலக்கடைத்தெரு என்பதே மருவிக் கூழைக்கடைத் தெரு என வழங்கப்படுகிறது.
அக்கசாலை என்பது அணிகலன்களும் பொற்காசுகளும் உருவாக்கும் இடம். முற்காலத்தில் பொன் நாணயங்கள் உருவாக்கும் பணியாளர்கள் வாழ்ந்த பகுதி அக்கசாலைத் தெரு என்னும் பெயரில் அமைந்துள்ளது.
தாமிரபரணி ஆற்றின் மேற்குக் கரையில் திருநெல்வேலியும் கிழக்குக் கரையில் பாளையங்கோட்டையும் அமைந்துள்ளன. இவ்விரு நகரங்களும் இரட்டை நகரங்கள் என அழைக்கப்படுகின்றன. பாளையங்கோட்டையில் அதிக அளவில் கல்வி நிலையங்கள் இருப்பதால் அந்நகரைத் தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்பர்.
அகத்தியர் பொதிகை மலையில் வாழ்ந்தார் என்பர். சங்கப் புலவரான மாறோக்கத்து நப்பசலையார், நம்மாழ்வார், பெரியாழ்வார், குமரகுருபரர், திரிகூடராசப்பக் கவிராயர், கவிராசப் பண்டிதர் ஆகியோர் திருநெல்வேலிச் சீமையில் பிறந்து தமிழுக்குச் செழுமை சேர்த்துள்ளனர். அயல்நாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், கால்டுவெல், வீரமாமுனிவர் போன்றோரையும் தமிழின்பால் ஈர்த்த பெருமைக்கு உரியது திருநெல்வேலி.
திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், கோவை, மதுரை, திருச்சி, சேலம், தூத்துக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல், தஞ்சாவூர், ஈரோடு – ஆகியன தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சிகள்.
- பின்னலாடை நகரம் – திருப்பூர்
- மலைகளின் அரசி – ஊட்டி
- தமிழகத்தின் தலைநகரம் – சென்னை
- நெற்களஞ்சியம் – தஞ்சாவூர்
- மலைக்கோட்டை நகரம் – திருச்சி
- ஏழைகளின் ஊட்டி – ஏற்காடு
- மாங்கனித் திருவிழா – காரைக்கால்
- மஞ்சள் மாநகரம் – ஈரோடு
- பூட்டு நகரம் – திண்டுக்கல்
- தேர் அழகு நகரம் – திருவாரூர்
- தெற்கு எல்லை – கன்னியாகுமரி
- புலிகள் காப்பகம் – முண்டந்துறை
- பட்டாசு நகரம் – சிவகாசி
- தூங்கா நகரம் – மதுரை
- மலைகளின் இளவரசி – கொடைக்கானல்
- கர்மவீரர் நகரம் – விருதுநகர்
நாடு
நாடுஎன்னும்சொல் ஆதியில்மக்கள் வாழும்நிலத்தைக் குறிப்பதற்கு வழங்கப்பட்டது. அந்தமுறையில் தமிழர் வாழ்ந்த நாடு தமிழ்நாடு எனப் பெயர் பெற்றது. மூவேந்தர்களின் ஆட்சிக்கு உட்பட்ட தமிழ்நாட்டின் பகுதிகள் அவரவர் பெயராலேயே சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு என்று அழைக்கப்பட்டன. இப்பெயர்கள் மிகத் தொன்மை வாய்ந்த தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. நாளடைவில் முந்நாடுகளின் உட்பிரிவுகளும் “நாடு என அழைக்கப்பட்டன. கொங்குநாடு, தொண்டைநாடு முதலியன இதற்குச் சான்றாகும். சிறுபான்மையாகச் சில தனி ஊர்களும் நாடென்று பெயர் பெற்று வழங்குதல் உண்டு. முன்னாளில் முரப்புநாடு என்பது பாண்டி மண்டலத்தைச் சேர்ந்த நாடுகளுள் ஒன்று. இப்பொழுது, அப்பெயர் பொருநையாற்றின் கரையிலுள்ள ஒரு சிற்றூரின் பெயராக நிலவுகின்றது. அதற்கு எதிரே ஆற்றின் மறுகரையில் உள்ள மற்றொரு சிற்றூர் வல்லநாடு என்னும் பெயர் உடையது. இங்ஙனம், நாடு என்னும் சொல் ஊரைக் குறிக்கும் முறையினைச் சோழ நாட்டிலும் காணலாம். மாயவரத்திற்கு அணித்தாக உள்ள ஒரூர் கொரநாடு என வழங்கப்படுகிறது. கூறைநாடு என்பதே கொரநாடு என மருவிற்று. பட்டுக்கோட்டை வட்டத்தில் கானாடும், மதுராந்தக வட்டத்தில் தொன்னாடும் உள்ளன. நாடு என்னும் சொல்லின் பொருள் வழக்காற்றில் நலிவுற்ற தன்மையை இவ்வூர்ப் பெயர்கள் உணர்த்துகின்றன.
நகரம்
சிறந்த ஊர்கள், நகரம் என்னும் பெயரால் வழங்கும். நாட்டின் தலைமைசான்ற நகரம் தலைநகரம் எனப்படும். முன்னாளில் ஊர் என்றும், பட்டி என்றும் வழங்கிய சில இடங்கள், பிற்காலத்தில் சிறப்புற்று நகரங்கள் ஆயின. ஆழ்வார்களில் சிறந்த நம்மாழ்வார் பிறந்த இடம் குருகூர் என்னும் பழம்பெயரைத் துறந்து, ஆழ்வார்திருநகரியாகத் திகழ்கின்றது. பாண்டி நாட்டிலுள்ள விருதுப்பட்டி, வாணிகத்தால் மேம்பட்டுஇன்றுவிருதுநகராக விளங்குகின்றது. இக்காலத்தில் தோன்றும் புத்தூர்களும் நகரம் என்னும் பெயரையே பெரிதும் நாடுவனவாகத் தெரிகின்றன. சென்னையின் பகுதியான தியாகராய நகரமும், காந்தி நகரமும், சிதம்பரத்திற்கு அண்மையில் அமைந்து இருக்கும் அண்ணாமலை நகரமும், தஞ்சையில் தோன்றியுள்ள கணபதி நகரமும் இதற்குச் சான்றுகள் ஆகும்.
சென்னை
இக்காலத்தில் தமிழ்நாட்டில் தலைசிறந்து விளங்கும் நகரம் சென்னை மாநகரம். முந்நூறு ஆண்டுகட்கு முன்னே சென்னை ஒரு பட்டினமாகக் காணப்படவில்லை. கடற்கரையில் துறைமுகம் இல்லை; கோட்டையும் இல்லை. பெரும்பாலும் மேடுபள்ளமாகக் கிடந்தது அவ்விடம். சென்னையின் பகுதிகளாக இன்று விளங்கும் மயிலாப்பூரும், திருவல்லிக்கேணியும் கடற்கரைச் சிற்றூர்களாக அந்நாளில் காட்சி அளித்தன.
மயிலாப்பூரில் கபாலீச்சுரம் என்னும் சிவாலயம் மிகப் பழைமை வாய்ந்தது. திருஞானசம்பந்தர் அதனைப் பாடியுள்ளார். திருமயிலைக்கு அருகே திருவல்லிக்கேணி, முதல் ஆழ்வார்களால் பாடப் பெற்றது. அவ்வூரின் பெயர் அல்லிக்கேணி என்பதாகும். அல்லிக்கேணி என்பது அல்லிக்குளம். அல்லி மலர்கள் அழகுற மலர்ந்து கண்ணினைக் கவர்ந்த கேணியின் அருகே எழுந்த ஊர் அல்லிக்கேணி எனப் பெயர் பெற்றது. அங்கே பெருமாள், கோவில் கொண்டமையால் திரு என்னும் அடைமொழி பெற்றுத் திருவல்லிக்கேணி ஆயிற்று.
திருவல்லிக்கேணிக்கு வடக்கே மேடும்பள்ளமுமாகப் பல இடங்கள் இருந்தன.அவற்றுள் ஒன்று நரிமேடு.
இன்று மண்ணடி என வழங்கும் இடம் ஒரு மேட்டின் அருகில் பெரும்பள்ளமாக அந்நாளில் காணப்பட்டது.
புரம்
“புரம்” என்னும் சொல், சிறந்த ஊர்களைக் குறிப்பதாகும். ஆதியில் காஞ்சி எனப் பெயர் பெற்ற ஊர் பின்னர், “புரம்” என்பது சேர்ந்து காஞ்சிபுரம் ஆயிற்று. பல்லவபுரம் (பல்லாவரம்), கங்கைகொண்ட சோழபுரம், தருமபுரம் முதலியவை மேலும் சில எடுத்துக்காட்டுகள் ஆகும்.
பட்டினம்
கடற்கரையில் உருவாகும் நகரங்கள் “பட்டினம் எனப் பெயர் பெறும். காவிரிப்பூம்பட்டினம், நாகப்பட்டினம், காயல்பட்டினம், குலசேகரப்பட்டினம், சதுரங்கப்பட்டினம் ஆகியவை “பட்டினம்” எனப் பெயர் பெற்ற ஊர்கள் ஆகும்.
பாக்கம்
கடற்கரைச் சிற்றூர்கள் “பாக்கம்? எனப் பெயர் பெறும். பட்டினப்பாக்கம், கோடம்பாக்கம், மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேப்பாக்கம் இப்படிப் “பாக்கம்” எனப் பெயர் பெற்ற ஊர்களைக் குறிப்பிடலாம்.
புலம்
“புலம்” என்னும் சொல் நிலத்தைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக, மாம்புலம், தாமரைப்புலம், குரவைப்புலம் முதலியவற்றைக் குறிப்பிடலாம்.
குப்பம்
நெய்தல் நிலத்தில் அமைந்த வாழ்விடங்கள், “குப்பம்” என்னும் பெயரால்வழங்கப்பெறும். காட்டுக்குப்பம், நொச்சிக்குப்பம், மஞ்சக்குப்பம், மந்தாரக்குப்பம்
முதலியவற்றைக் குறிப்பிடலாம்.
குறிஞ்சி நில ஊர்கள்
மலையின் அருகே உள்ள ஊர்களுக்கு ஆனைமலை, சிறுமலை, திருவண்ணாமலை, நாகமலை, வள்ளிமலை, விராலிமலை என ஊர்ப்பெயர்களாக்கினர். ஒங்கியுயர்ந்த நிலப்பகுதி மலை எனவும், மலையின் உயரத்தில் குறைந்ததனைக் குன்று எனவும், குன்றிலும் உயரத்தில் குறைந்ததனைக் கரடு எனவும், பாறை எனவும் பெயரிட்டு அழைத்தனர். குன்றை அடுத்துள்ள ஊர்கள் குன்றூர், குன்றத்தூர், குன்றக்குடி என வழங்கப் பெற்றன. குட்டப்பாறை, சிப்பிப்பாறை, பூம்பாறை, மட்டப்பாறை, மணப்பாறை, வால்பாறை என்னும் ஊர்ப்பெயர்களுக்கான காரணத்தையும் இதனால் அறியலாம். மலையைக் குறிக்கும் வடசொல், கிரி என்பதாகும். கிருஷ்ணகிரி, கோத்தகிரி, சிவகிரி, நீலகிரி என்பன மலையையொட்டி எழுந்த ஊர்ப்பெயர்களே. குறிஞ்சி நிலமக்கள் மலையிலிருந்து பிற இடங்களுக்குச் சென்று தங்கிய போதும் தங்கள் நிலப்பெயரை மறவாது ஆழ்வார்க்குறிச்சி, கல்லிடைக்குறிச்சி, குறிச்சி, கள்ளக்குறிச்சி, மொடக்குறிச்சி எனப் பெயர் வைத்துக் கொண்டனர்போலும். குறிஞ்சி என்னும் சொல்லே மருவிக் குறிச்சியாயிற்று எனலாம்.
முல்லை நில ஊர்கள்
மரங்கள் சூழ்ந்த பகுதிக்குக் குடிபெயர்ந்த மக்கள், மரங்களுக்குப் பெயர்சூட்டி, அம்மரப் பெயர்களோடு ஊர்ப்பெயர்களையும் வழங்கினர். அத்தி (ஆர்) மரங்கள் சூழ்ந்த ஊர் ஆர்க்காடு எனவும், ஆல மரங்கள் நிறைந்த ஊர் ஆலங்காடு எனவும், களாச்செடிகள் நிறைந்த பகுதி களாக்காடு எனவும், மாமரங்கள் செழித்திருந்த இடம் மாங்காடு எனவும், பனைமரங்கள் நிறைந்திருந்த ஊர் பனையபுரம் எனவும் பெயரிட்டுத் தம்மிடத்தைக் குறிப்பிட்டனர். காட்டின் நடுவில் வாழ்ந்த மக்கள், அங்குத் திரியும் விலங்குகளால் தமக்கும், தம் கால்நடைகளுக்கும் ஊறு நேராவண்ணம் வேலி கட்டிப் பாதுகாத்தனர். அவ்வூர்கள் பட்டி, பாடி என்றழைக்கப்பெற்றன. ஆட்டையாம்பட்டி, காளிப்பட்டி, கோவில்பட்டி, சிறுகூடல்பட்டி, சின்னகொல்லப்பட்டி, பெரியகொல்லப்பட்டி முதலிய நூற்றுக்கணக்கான பட்டிகள் தமிழ்நாட்டில் உள்ளன.
மருதநில ஊர்கள்
நிலவளமும் நீர்வளமும் பயிர்வளமும் செறிந்த மருதநிலக் குடியிருப்பும் ஊர் என வழங்கப்பட்டது. பொங்கிப் பெருகி வழிந்தோடி வளங்கூட்டிய ஆறும், அதன் கரையில் இருந்த உயர்ந்த மரங்களும் ஊர்ப்பெயர்களில் கலந்து நிலைத்தன. ஆறுகள் பாயும் இடங்களில் ஆற்றூர் என வழங்கும் ஊர்கள் தவிராமல் இடம்பெற்றிருக்கும். இதுவே காலப்போக்கில் பேச்சுவழக்கில் ஆத்தூர் என மருவி வழங்குகிறது. கடம்பமரம் சூழ்ந்த பகுதி கடம்பூர், கடம்பத்தூர்; தென்னை சூழ்ந்த பகுதி தெங்கூர்; புளியமரங்கள் அடர்ந்த பகுதி புளியங்குடி, புளியஞ்சோலை, புளியம்பட்டி என வழங்கும் ஊர்கள் மரப்பெயர்த் தொகுப்பு அடிப்படையில் பெயரிடப்பட்ட ஊர்களாகும். நம் முன்னோர் குளம், ஏரி, ஊருணி முதலிய நீர்நிலைகளை உருவாக்கி, அவற்றோடு ஊர்ப்பெயர்களையும் இணைத்தனர். சீவலப்பேரி, புளியங்குளம், பேராவூரணி, மாங்குளம், வேப்பேரி என்பன இவ்வாறு தோன்றிய ஊர்ப்பெயர்களே.
நெய்தல் நில ஊர்கள்
பழங்காலத்தில் கடற்கரையில் உருவான பேரூர்கள் பட்டினம் எனவும், சிற்றூர்கள் பாக்கம் எனவும் பெயர் பெற்றிருந்தன. நெடிய கடற்கரையை உடைய தமிழகத்தில் பரதவர் வாழ்ந்த ஊர்கள் கீழக்கரை, கோடியக்கரை, நீலாங்கரை எனப் பெயர் பெற்றிருக்கின்றன. இக்காலத்தில் மீனவர் வாழுமிடங்களின் பெயர்கள், குப்பம் என்னும் பெயரைச் சேர்த்துப் பல்கிப் பெருகி வருகின்றன.
அரசும் ஊர்களும்
பெருவேந்தரும் குறுநில மன்னரும் அரண்கள் அமைத்து மக்களைக் காத்தனர். அரண்களுள் கோட்டையும் ஒன்று. கோட்டை சூழவிருந்த ஊர்களே கந்தர்வக்கோட்டை, கோட்டை, தேவக்கோட்டை, நாட்டரசன்கோட்டை, நிலக் கோட்டை, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை என வழங்கலாயின.
திசையும் ஊர்களும்
நாற்றிசைப் பெயர்களும் ஊர்களுடன் குறிக்கப்பெற்றன. தம் ஊருக்குக் கிழக்கே எழுந்த ஊர்ப்பகுதியைக் கீழூர் எனவும், மேற்கே அமைந்த ஊர்ப்பகுதியை மேலூர் எனவும் பெயரிட்டு வழங்கினர். தெற்கே உள்ளது தென்பழஞ்சியாகவும் வடக்கே உள்ளது வடபழஞ்சியாகவும் பெயர் பெற்றன. நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எழுபத்திரண்டு பாளையங்களாகப் பிரித்துத் தம் ஆளுகைக்குட்படுத்தினார்கள். அவர்கள் ஊர்ப்பெயர்களுடன் பாளையத்தைச் சேர்த்து வழங்கினார்கள். அவ்வாறு பெயர்பெற்ற ஊர்கள் ஆரப்பாளையம், இராசபாளையம், கணக்கம்பாளையம், குமாரபாளையம், கோபிச்செட்டிப்பாளையம், கோரிப்பாளையம், மேட்டுப்பாளையம் எனப் பலவாகும். காலச்சுழற்சி, ஆட்சிமாற்றம், வேற்றினக்கலப்பு முதலிய காரணங்களால் முதனிலை ஊர்ப்பெயர்களும் தனித்தன்மைமிக்க ஊர்ப்பெயர்களும் சிதைந்து, திரிந்து, மருவி, மாறி வழங்கலாயின. கல்வெட்டுகளில் காணப்படும் மதிரை மருதையாகி இன்று மதுரையாக மாறியுள்ளது. கோவன்புத்தூர் என்னும் பெயர் கோயமுத்தூர் ஆகி, இன்று கோவையாக மருவியுள்ளது.
தூங்கா நகர்,திருவிழா நகர்,கோவில் மாநகர்,தென்னிந்தியாவின் ஏதென்ஸ் சிறப்புக்கும் உரிய நகரம் மதுரை.
மதுரை என்னும் சொல்லுக்கு இனிமை என்பது பொருள்.
“தமிழ்கெழு கூடல்” எனப் புறநானூறு போற்றியது. நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவர், தாம் பாடிய சிறுபாணாற்றுப்படையில், “தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை” என்று குறித்தார். இளங்கோவடிகள், தமது நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தில், “ஒங்குசீர் மதுரை, “மதுரை மூதூர் மாநகர்’, “தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரை”, “மாண்புடை மரபின் மதுரை”, “வானவர் உறையும் மதுரை’, “பதியெழுவறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர்? எனப் பற்பல அடைமொழிகளால் மதுரைக்குப் புகழ்மாலை சூட்டி மகிழ்ந்தார். “சேரநாடு வேழமுடைத்து, சோழநாடு சோறுடைத்து, பாண்டியநாடு முத்துடைத்து, தொண்டைநாடு சான்றோர் உடைத்து” என்பன தமிழகத்தின் சிறப்பை உணர்த்தும்.
மதுரைக்குக் “கூடல்” எனவும், “ஆலவாய்” எனவும் வேறு பெயர்கள் வழங்குகின்றன. நான்மாடக்கூடல் என்னும் பெயரே கூடல் என மருவியுள்ளது. திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர் ஆகிய நான்கு திருக்கோவில்கள் சேர்ந்தமைந்ததனால், நான்மாடக்கூடல் என்னும் பெயர்
சங்கப்புலவர்களுள் கணக்காயனார் மகனார் நக்கீரனார், குமரனார், நல்லந்துவனார், மருதனிளநாகனார், இளந்திருமாறன், சீத்தலைச் சாத்தனார், பெருங்கொல்லனார், கண்ணகனார், கதங்கண்ணாகனார், சேந்தம்பூதனார் முதலியோர் அன்றைய மதுரையில் வாழ்ந்தோராவர்.
குமரகுருபரருக்கு மீனாட்சியம்மையே சிறுமியாக வந்து முத்துமணி மாலையைப் பரிசளித்தது முதலானவை மதுரையில் நடைபெற்ற நிகழ்வுகளாகும்.
வள்ளல் பாண்டித்துரையார், மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை நிறுவித் தமிழ் வளர்த்தார்.
சிலப்பதிகாரக் காப்பியத் தலைவன் கோவலன் கொலைக்களப்பட்ட இடம் கோவலன் பொட்டல் என்னும் பெயருடன் இன்றும் அப்பகுதி மக்களால் வழங்கப்படுகிறது. கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த சிலப்பதிகாரமே மதுரை மூதூர் எனக் குறிப்பிடுவதனால் மதுரையின் பழைமை பெறப்படும்.
மீனாட்சியம்மன் கோவிலின் நான்கு கோபுரங்களுள் பழைமையானது கிழக்குக் கோபுரம்; உயரமானது தெற்குக் கோபுரம். இது 160.9 அடி உயரமும். 1511 சுதை உருவங்களும் உடையது.
மரம் பயன்படுத்தாமல் கட்டப்பட்டது நாயக்கர் மகால். இதன் ஒவ்வொரு தூணும் 82 அடி உயரமும் 19 அடி சுற்றளவும் கொண்டது.