தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்
November 23, 2024 2025-01-11 13:56தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்
தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்
குணங்குடி மஸ்தான் சாகிபு (1788-1835)
“மாதவஞ்சேர் மேலோர் வழுத்தும் குணங்குடியான்” என்று புலவர் பெருமக்களால் புகழப்பட்டவர் குணங்குடி மஸ்தான் சாகிபு. இவரின் இயற்பெயர் சுல்தான் அப்துல் காதிர் என்பதாகும். இவர், தம் இளவயதிலேயே முற்றும் துறந்தவராய் வாழ்ந்தார். சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப்பகுதிகளுக்குச் சென்று, தனித்திருந்து ஞானம் பெற்றார். இவர், தாயுமானவரின் பாடல்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்; எனவே அவருடைய பராபரக்கண்ணியைப் போலவே ஓசைநயமிக்க இசுலாமியப் பாடல்களை இயற்றி அருளினார். பராபரக்கண்ணி, எக்காலக்கண்ணி, மனோன்மணிக் கண்ணி, நந்தீசுவரக் கண்ணி முதலியன இவர் பாடிய வேறு சில கண்ணிகள்.
இவர் குருநிலை, தவநிலை, துறவுநிலை, நியமநிலை, காட்சிநிலை, தியானநிலை, சமாதிநிலை எனப் பொருள்தரும் வகையில் பாடல்கள் பல இயற்றித் தமிழுக்குத் தொண்டாற்றினார். திருத்தணிச் சரவணப் பெருமாள், இவர்மீது கொண்ட பற்றினால் நான்மணிமாலை ஒன்றனைப் பாடியுள்ளார். அந்நூலில், “மடல் சூழ்புவியில் உளத்திருளைக் கருணை ஒளியினாற் களைந்து, விடல் சூழ்பவரின் குணங்குடியான், மிக்கோன் எனற்குஒர் தடையுளதோ ?” எனக் கேட்கின்றார். “தடை உண்டு என உரைப்பார் தமிழுலகில் இல்லை’. குணங்குடி மஸ்தான் பாடிய இசைப்பாடல்கள் இன்றும் பல இடங்களில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
ஆறுமுக நாவலர் (1822-1879)
யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர் ஆறுமுக நாவலர். இவருடைய இயற்பெயர் ஆறுமுகனார் என்பதாகும். இவர், இளமையிலேயே சைவ சித்தாந்த நூல்களையும் திருமுறைகளையும் தெளிவாகக் கற்றார். தமிழ்ப்புலமையும் ஆங்கிலப் புலமையும் ஒருசேரக் கைவரப்பெற்றார் அதனால், இருமொழி கற்பிக்கும் ஆசிரியராகவும் திகழ்ந்தார். இவருடைய சொற்பொழிவின் வாயிலாக, இவர்தம் மொழித்திறமையையும் வாக்கு வன்மையையும் பொருள் விளக்கும் தன்மையையும் கண்டு திருவாவடுதுறை ஆதீனத்தார் மகிழ்ந்தனர். அதனால், ஆதீனத்தார் இவருக்கு “நாவலர்” என்னும் பட்டத்தைச் சூட்டிச் சிறப்பித்தனர். இவர், சிறந்த பதிப்பாசிரியராகவும் தேர்ந்த உரைநடையாசிரியராகவும் விளங்கினார்.
ஆறுமுக நாவலரே முதன்முதலில் இலக்கண வழுவற்ற தூய்மையான எளிய தமிழ் உரைநடையைக் கையாண்டார். இவ்வாறு தமிழ் உரைநடை வளர்ச்சிக்குப் பெருந்தொண்டாற்றியவர் ஆறுமுக நாவலர். இவரை, “வசனநடை கைவந்த வல்லாளர்” எனப் பரிதிமாற்கலைஞர்பாராட்டினார்.
ஆறுமுக நாவலர், சென்னையில் அச்சுக்கூடம் அமைத்தார். அந்த அச்சுக் கூடத்தில் சிறந்த தமிழ் நூல்களைப் பதிப்பித்தார். பாரதம், பெரியபுராணம், கந்தபுராணம், திருக்குறள் பரிமேலழகர் உரை முதலிய இலக்கிய நூல்களையும், இலக்கண வினாவிடை, இலக்கணச் சுருக்கம், நன்னூல் விருத்தியுரை, நன்னூல் காண்டிகையுரை, இலக்கணக்கொத்து, இலக்கணச் சூறாவளி முதலிய இலக்கண நூல்களையும் தம் அச்சுக்கூடத்தின் வாயிலாகப் பதிப்பித்தார்; முதல் வகுப்புமுதல் நான்காம் வகுப்புவரைக்கான பாலபாடங்களையும் எழுதி அச்சிட்டு வெளியிட்டார்.