தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்
November 29, 2024 2025-01-11 13:56தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்
தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்
திருவள்ளுவ மாலை
தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட
பனையளவு காட்டும் படித்தால் – மளையளகு
வள்ளைக்(கு) உறங்கும் வளநாட! வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி. – கபிலர்
பொருள் : உலக்கைப் பாட்டின் இன்னிசை கேட்டுக் கண்ணுறங்கும் கோழிகளை உடைய வளநாட்டு மன்னனே! சிறுபுல்லின் தலையில் உள்ள தினையளவினும் சிறுபனிநீர், நெடிதுயர்ந்த பனைமரத்தின் உருவத்தைத் தன்னுள் தெளிவாகக் காட்டும். அதுபோல, வள்ளுவரின் குறள்வெண்பாக்கள் அரிய பொருள்களைத் தம்மகத்தே அடக்கி மிகத் தெளிவாகக் காட்டுகின்றன.
சொற்பொருள் : வள்ளை – நெல் குத்தும்போது பெண்களால் பாடப்படும் உலக்கைப் பாட்டு; அளகு-கோழி.
ஆசிரியர் குறிப்பு
பெயர் : கபிலர்,
காலம் : கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவரென்றும், சங்க காலத்துக்குப்பின் வாழ்ந்தவரென்றும் குறிப்பிடுவர்.
நூல் குறிப்பு : திருக்குறளின் சிறப்பினை உணர்த்த திருவள்ளுவமாலை என்னும் தனிநூல் ஒன்று இயற்றப்பட்டது. இந்நூலில் ஐம்பத்தைந்து பாடல்கள் உள்ளன. இதனை ஐம்பத்து மூன்று புலவர்கள் பாடியுள்ளார்கள். நம் பாடப்பகுதி திருவள்ளுவமாலையில் உள்ள மூன்றாவது பாடலாகும். இப்பாடல் அறிவியல் அணுகுமுறையைச் சார்ந்தது.
உவமை : சிறுபுல்லின் தலையில் தினையளவினும் சிறுபனிநீர் நெடிதுயர்ந்த பனைமரத்தின் உருவத்தைத் தன்னுள் தெளிவாகக் காட்டும்.
உவமிக்கப்படும் பொருள் : வள்ளுவரின் குறள்வெண்பாக்கள், அரும்பெரும் கருத்துகளைத் தம்மகத்தே அடக்கிக் காட்டும்.
அறிவியல் கருத்து : ஒளியைக் கோட்டம் அடையச் செய்வதனால் தொலைவிலுள்ள பொருளின் உருவத்தை அண்மையில் தோன்றும்படி செய்யலாம் என்று கண்டவர் கலீலியோகவிலி.
“நெடுந்தொலைவிலுள்ள பெரிய பனைமரத்தின் உருவத்தைப் புல் நுனியில் தேங்கிய சிறுபனித்துளி மிகத்தெளிவாகக் காட்டும்” என்ற கபிலரின் சிந்தனை, அன்றைய தமிழரின் அறிவியல் கருத்தை வெளிப்படுத்துகிறது.
உலகம் ஐம்பூதங்களாகிய நிலம், நீர், வெப்பம், காற்று, வானம் ஆகிய ஐந்தும் உள்ளடக்கியது எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
“நிலம் நீர் தீ வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் ஆதலின்…” (தொல்காப்பியம், பொருள். 635)
இதுபோன்றதொரு குறிப்பைப் பின்வரும் புறநானூற்றுப் பாடல் உணர்த்தும்.
“மண்திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலை இய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும்பூதத்து இயற்கை போல்” – (புறம், 2)
பதினைந்தாம் நூற்றாண்டில்தான் போலந்து நாட்டைச் சார்ந்த நிக்கோலஸ்கிராப்ஸ் என்பவர் உலகம் தட்டை இல்லை, உருண்டையானது என முறையாகக் கணித்துக் கூறினார் ஆனால், அதனை எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கலீலியோ, உலகம் உருண்டையானது என்பதனைத் தம் தொலைநோக்கியால் கண்டுபிடித்துச் சொன்ன பிறகுதான் மக்கள் ஏற்றுக்கொண்டனர்.
மேலை நாட்டினர் கண்டறிந்ததற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சொல்லியது ஒரு தமிழ்க்குரல்.
“ சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை” – குறள், 1031
என்னும் குறட்பாவில் உலகம் சுழல்கிறது எனக் கூறுகின்றார்.
ஞாயிற்றுக்காட்சி
சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள், ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் என ஞாயிற்றைப் போற்றியுள்ளமையைக் காணலாம்.
ஞாயிற்றைச் சுற்றியுள்ள பாதையை ஞாயிற்று வட்டம் என்றனர் பழந்தமிழர் எனப் புறநானூறு குறிப்பிடுகின்றது.
“செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்” – புறம், 30
இப்பாடலின் வாயிலாக ஞாயிற்று வட்டம், அதன் இயக்கம், அந்தரமாய் நிற்கும் வான்வெளி மண்டலம் என்பனபற்றிய வானியல் அறிவை உணரமுடிகின்றது.
திங்கள் தோற்றம்
தானே ஒளிவிடக்கூடிய ஞாயிற்றை நாள்மீன் எனவும், ஞாயிற்றிடமிருந்து ஒளிபெற்று ஒளிவிடக்கூடியவற்றைக் கோள்மீன் எனவும்.
“மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி”. – குறள், 1118
இக்குறளில் திங்களுக்குத் தானாக ஒளிவிடும் தன்மை இல்லை என்னும் வானியல் உண்மையை அறியலாம். திங்களைப் பாம்பு கொண்டற்று (குறள், 1146) என்னும் குறள் தொடர், திங்கள் மறைப்புப் (சந்திரகிரகணம்) பற்றியதாகும். திங்களின் நிலையைக் கருதித் தேய்பிறை, வளர்பிறை எனவும் குறித்துள்ளனர்.
கோள்கள் பற்றிய தமிழரின் கருத்து
செந்நிறமாய் இருந்த கோளைச் செவ்வாய் என அழைத்தனர். இன்றைய அறிவியல் வல்லுநர்கள் செவ்வாய்க்கோளில், மண் சிவப்பு நிறமாய் இருப்பதனை அங்குச் சென்றுள்ள செயற்கைக்கோள் அனுப்பும் ஒளிப்படங்கள் வாயிலாய் வெளிப்படுத்தியுள்ளனர்.
வெண்மை நிறமுடைய கோளை வெள்ளி என அழைத்தனர். வெள்ளிக்கோளில் வெள்ளித்தாது இருப்பதனை இன்று அறிவியல் ஆய்வு புலப்படுத்தியுள்ளது. ஞாயிறு உதயத்திற்கு முன்பே வெள்ளி எழுந்து விடியலை உணர்த்துவதனால் இதனை விடிவெள்ளி என்றனர்.
புதிதாகக் கண்டறிந்த கோளைப் புதன் என அழைத்தனர். புதிதாக அறிந்ததனால் அதற்கு, “அறிவன்” எனவும் பெயருண்டு.
வியா என்றால் பெரிய, நிறைந்த எனப் பொருள்படும். வானில் பெரிய கோளாக வலம் வருவதனையே வியாழன் என்றனர்.
சனிக்கோளைக் காரிக்கோள் என அழைத்தனர். இக்கோளில் கந்தகம் இருப்பதாக இன்றைய அறிவியல் ஆய்வு கூறுகிறது.
“வலவன் ஏவா வானவூர்தி” (புறம், 27:8) என்னும் புறப்பாடல் வரி, சங்க காலத்திலேயே ஒட்டுநர் இல்லா வானவூர்தி இருந்தது என்னும் வியக்கத்தக்க செய்தியைத் தருகிறது. வானூர்தி ஒட்டுகிறவனைத் தமிழில் வலவன் என அழைக்கிறனர்.