தென் இந்திய வரலாறு
May 29, 2025 2025-05-29 7:45தென் இந்திய வரலாறு
தென் இந்திய வரலாறு
பல்லவர்கள்
பல்லவ அரசர்கள் தென்கிழக்குக் கடற்கரைப் பகுதியில் முக்கிய வணிகமையமாகத் திகழ்ந்த காஞ்சிபுரத்தையும், அதன் வளம் நிறைந்த வேளாண் பகுதிகளையும் ஆண்டனர். காஞ்சிபுரத்திலிருந்து பிற்காலப் பல்லவர்கள் தங்கள் அரசாட்சியை ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் தமிழகம் முழுவதும்
விரிவடையச் செய்தனர். ஆனாலும் தொண்டை மண்டலமே பல்லவ அரசின் மையப்பகுதியாக இருந்தது. இப்பெரிய அரசியல் பிராந்தியம் (வட்டாரம்) தமிழ்நாட்டின் வட பகுதிகளையும், அருகே அமைந்திருந்த ஆந்திர மாவட்டங்களையும் கொண்டிருந்தது.
பல்லவ வம்சாவளி (முக்கிய அரசர்கள்):
தொடக்ககாலப் பல்லவ அரசர்கள் சாதவாகனர்களின் கீழ் சிற்றசர்களாக இருந்தனர். இரண்டாம் சிம்மவர்மனின் மகனான சிம்மவிஷ்ணு (கி.பி. (பொ.ஆ.மு)
550 வாக்கில்) களப்பிரர்களை அழித்து ஒரு வலுவான பல்லவ அரசை உருவாக்கினார். சோழர்கள், பாண்டியர்கள் உள்ளிட்ட பல தென்னக அரசர்களை அவர் வெற்றி கொண்டார். அவருடைய மகன் முதலாம் மகேந்திரவர்மன் மிகத் திறமை வாய்ந்த அரசராக விளங்கினார். அவருக்குப் பின் அவருடைய மகன் முதலாம் நரசிம்மவர்மன் ஆட்சிப் பொறுப்பேற்றார். இரண்டாம் நரசிம்மவர்மன் அதாவது ராஜசிம்மன், இரண்டாம் நந்திவர்மன் ஆகியோர் ஏனைய முக்கிய அரசர்கள் ஆவர். கடைசிப் பல்லவ மன்னர் அபராஜிதன் ஆவார்.
முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதி பரஞ்சோதி, சிறுத்தொண்டர் (63 நாயன்மார்களில் ஒருவர்) எனப் பிரபலமாக அறியப்பட்டார். பரஞ்சோதி வாதாபிப் படையெடுப்பில் பல்லவர் படைக்குத் தலைமை ஏற்று நடத்தினார். அதன் வெற்றிக்குப் பின்னர் மனமாற்றம் பெற்ற அவர் சிவ பக்தராக மாறினார்.
– பெரியபுராணம்.
மகேந்திரவர்மன் (ஏறத்தாழ கி.பி. 600 630) பல்லவ ஆட்சியின் சிறப்புக்குப் பங்களிப்புச் செய்தார். தொடக்ககாலத்தில் அவர் சமண சமயத்தைப் பின்பற்றினார். பின்னர் சைவத் துறவி அப்பரால் (திருநாவுக்கரசர்) சைவத்தைத் தழுவினார். கலை மற்றும் கட்டடக்கலைக்கு அவர் பேராதரவு அளித்தார். திராவிடக் கட்டடக்கலைக்கு ஒரு புதிய பாணியை அறிமுகம் செய்தார். அது ‘மகேந்திரபாணி’ எனக் குறிப்பிடப்படுகின்றது. மத்தவிலாசப்பிரகசனம்
(குடிகாரர்களின் மகிழ்ச்சி) உட்பட சில நாடகங்களைச் சமஸ்கிருத மொழியில் எழுதியுள்ளார்.
மகேந்திரவர்மனின் ஆட்சிக்காலத்தில் வாதாபியைச்தலைநகராகக் கொண்ட மேலைச் சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசியோடு தொடர்ந்து போர்கள் மேற்கொள்ளப்பட்டன. இப்போர்களுள் ஒன்றில் இரண்டாம் புலிகேசி மகேந்திரவர்மனை வெற்றி கொண்டு நாட்டின் வடக்கில் பெரும் பகுதியை (வெங்கி)
கைப்பற்றியதாகத் தெரிகிறது. அவருடைய மகன் முதலாம் நரசிம்மவர்மன் (ஏறத்தாழ 630-668) இத்தோல்விக்குப் பழிவாங்கும் வகையில் சாளுக்கியரின் தலைநகரான வாதாபியைக் கைப்பற்றினார். வாதாபி தீக்கிரையாக்கப்பட்டது. இரண்டாம் புலிகேசியும் கொல்லப்பட்டார்.
இரண்டாம் நரசிம்மவர்மன் (ஏறத்தாழ 695-722) ராஜசிம்மன் எனவும் அழைக்கப்பட்டார். அவர் மாபெரும் வீரர் ஆவார். சீன அரசுக்கு தூதுக்குழுக்களை அனுப்பினார். சீனநாட்டின் தூதுக் குழுக்களை வரவேற்றார். ஒப்பீட்டளவில் அவரது காலத்தில் அரசியல் பிரச்சனைகள் அதிகம் இல்லாததால் அவரால் கோவில்களைக் கட்டுவதில் கவனம் செலுத்த முடிந்தது. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலைக் கட்டியது அவரே.
அரசர்களின் பெயர்கள் – பட்டங்கள்
சிம்ம விஷ்ணு – அவனிசிம்மர்
முதலாம் மகேந்திரவர்மன் – சங்கீரணஜதி, மத்தவிலாசன், குணபாரன், சித்திரகாரப் புலி, விசித்திர சித்தன்
முதலாம் நரசிம்மவர்மன் – மாமல்லன், வாதாபி கொண்டான்
1984ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்கள் அட்டவணையில் மாமல்லபுரம் சேர்க்கப்பட்டது. பல்லவர் கட்டடக் கலையை கீழ்க்காணுமாறு வகைப்படுத்தலாம்:
1. பாறைக் குடைவரைக் கோவில்கள், மண்டகப்பட்டு, மகேந்திரவாடி, மாமண்டூர், தளவானூர், திருச்சிராப்பள்ளி, வல்லம், திருக்கழுக்குன்றம், சியாமங்கலம் ஆகிய இடங்களிலுள்ள குகைக் கோவில்கள் – மகேந்திரவர்மன் பாணி
2. மாமல்லபுரத்திலுள்ள பஞ்சபாண்டவர் ரதங்கள் எனப் பிரபலமாக அழைக்கப்படும் ஐந்து ரதங்கள் ஐந்து வகையான கோவில்கட்டடம் – மாமல்லன் பாணி
3. காஞ்சிபுரத்திலுள்ள கைலாசநாதர் கோவில் கட்டுமானக் கோவில் – ராஜசிம்மன் பாணி, நந்திவர்மன் பாணி
காஞ்சியிலிருந்த கடிகை (மடாலயம் அல்லது கல்வி மையம்) பல்லவர் காலத்தில் புகழ்பெற்று விளங்கியது. அது இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் மாணவர்களைத் தன்பால் ஈர்த்தது. நியாய பாஷ்யா எனும் நூலை எழுதிய வாத்ஸ்யாயர் காஞ்சிக் கடிகையில் ஆசிரியராக இருந்தார்.
தென்னிந்திய ஒவியங்கள் குறித்த ஆய்வேடான தட்சிண சித்திரம் முதலாம் மகேந்திரவர்மனின் ஆட்சிக் காலத்தில் தொகுக்கப்பட்டது.
மாபெரும் சமஸ்கிருத அறிஞரான தண்டின் முதலாம் நரமிம்மவர்மனின் அவையை அலங்கரித்தார். அவர் தசகுமார சரிதம் எனும் நூலை எழுதினார்.
மற்றொரு சமஸ்கிருத அறிஞரான பாரவி சிம்மவிஷ்ணுவின் காலத்தில் வாழ்ந்தார். அவர் கிராதார்ஜுனியம் என்னும் வடமொழிக் காப்பியத்தை வடித்தார்.
தமிழ் இலக்கியமும் வளர்ச்சி பெற்றிருந்தது. நாயன்மார்களால் இயற்றப்பட்ட தேவாரமும் ஆழ்வார்களால் படைக்கப்பட்ட நாலாயிரதிவ்விய பிரபந்தமும் பல்லவர் காலத்தில் எழுதப்பட்ட சமய இலக்கியங்களாகும். இரண்டாம் நந்திவர்மனால் ஆதரிக்கப்பட்ட பெருந்தேவனார் மகாபாரதத்தை, பாரதவெண்பா எனும் பெயரில் தமிழில் மொழிபெயர்த்தார்.