Blog

தேசிய மறுமலர்ச்சி

Class 59 இந்தியாவின்‌ வரலாறு, பண்பாடு மற்றும்‌ இந்திய தேசிய இயக்கம்‌

தேசிய மறுமலர்ச்சி

இராஜா ராம்மோகன் ராயும், பிரம்ம சமாஜமும் (1772-1833)

இராஜா ராம்மோகன் ராய் பொருளற்ற சமயச்சடங்குகளையும்,  கேடுகளை விளைவிக்கும் சமூக மரபுகளையும் எதிர்த்தார்.

சமய, தத்துவ சமூகப்பார்வையில் அவர் ஒருகடவுள் கோட்பாடு, உருவவழிபாடு எதிர்ப்பு போன்ற கருத்துக்களின் தாக்கத்தைப் பெற்றிருந்தார்.

சமூகத்தில் நிலவிவரும் உடன்கட்டை ஏறுதல் (சதி), குழந்தைத் திருமணம், பலதார மணம் போன்ற மரபு சார்ந்த சமூகக் கொடுமைகள் குறித்து பெரிதும் கவலை கொண்ட அவர் சிற்றேடுகளை வெளியிட்டார். மேலும் அவற்றிற்கு எதிராகச் சட்டங்கள் இயற்றும்படி ஆங்கில அரசாங்கத்திற்கு விண்ணப்பித்தார்.

விதவைப்பெண்கள் மறுமணம் செய்துகொள்ள உரிமை உடையவர்கள் எனும் கருத்தை முன்வைத்தார். பலதார மணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமென்றார். மக்களைப் பகுத்தறிவோடும், பரிவோடும், மனிதப் பண்போடும் இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.

1829 இல் தலைமை ஆளுநர் வில்லியம் பெண்டிங் ‘சதி’ எனும் உடன்கட்டையேறும் பழக்கத்தை ஒழித்துச் சட்டம் இயற்றியதில் இராஜா ராம்மோகன் ராய் முக்கிய பங்கு வகித்தார்.

ராம்மோகன் ராய் பெண்ணடிமைத்தனத்தைக் கண்டனம் செய்தார். ஆண்கள் பெண்களை கீழானவர்களாக நடத்தும் அன்றைய நடைமுறையை எதிர்த்தார். பெண்களுக்குக் கல்வி வழங்கப்படவேண்டும் எனும் கருத்தை வலுவாக முன்வைத்தார். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆங்கிலக்கல்வியும் மேலை நாட்டு அறிவியலும் அறிமுகம் செய்யப்படுவதை முழுமையாக ஆதரித்தார்.

இராஜா ராம்மோகன் ராய் 1828இல் பிரம்ம சமாஜத்தை நிறுவி ஆகஸ்டு 20ஆம் நாள் கல்கத்தாவில் ஒரு கோவிலை நிறுவினார். அக்கோவிலில் திருவுருவச் சிலைகள் எதுவும் வைக்கப்படவில்லை. இங்கு எந்த ஒரு மதத்தையும் ஏளனமாகவோ, அவமானமாகவோ பேசக்கூடாது அல்லது மறைமுகமாகக் குறிப்பிடப்படலாகாது என எழுதிவைத்தார்.

பிரம்ம சமாஜம் உருவவழிபாட்டை தவிர்த்ததோடு பொருளற்ற சமயச் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் எதிர்த்தது. இருந்தபோதிலும் தொடக்கம் முதலாக பிரம்ம சமாஜத்தின் கருத்துக்கள் கற்றறிந்த மேதைகள், கல்வியறிவு பெற்ற வங்காளிகள் என்ற அளவில் மட்டுமே செயல்பட்டது.

இராஜா ராம்மோகன் ராய்க்குப்பின் 1857 முதல் கேசவ் சந்திர சென் இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றார். இவ்வமைப்பின் வலுவை 1865இல் அது பெற்றிருந்த 54 கிளைகளின் எண்ணிக்கையிலிருந்து  (வங்காளத்தில் 50 கிளைகள், வடமேற்கு மாகாணத்தில் 2, பஞ்சாப்பில் 1, தமிழ்நாட்டில் 1 என மொத்தம் 54 கிளைகள்).

காலப்போக்கில் பிரம்ம சமாஜம் இரண்டாகப் பிரிந்தது. அவை தேவேந்திரநாத் தாகூரின் தலைமையில் இயங்கிய ‘இந்திய பிரம்ம சமாஜம்’, கேசவ் சந்திர சென்னுடைய ‘சதாரன் பிரம்ம சமாஜ் என்பனவாகும்.

தமிழ்நாட்டில் பிரம்ம சமாஜத்தின் ஆதரவாளரான சைதை காசி விஸ்வநாத முதலியார் சமாஜத்தின் கருத்துகளை விளக்க பிரம்ம சமாஜ நாடகம்’ எனும் தலைப்பில் ஒரு நாடகத்தை எழுதினார். கைம்பெண் மறுமணத்திற்கு ஆதரவாக ஒரு ஆய்வுக் கட்டுரையையும் எழுதினார். 1864இல் இதே நோக்கத்திற்காகத் ‘தத்துவபோதினி’ எனும் தமிழ் இதழ் தொடங்கப்பட்டது.

பிரம்ம சமாஜம் வங்காள சமூகத்தின் வைதீகப் பிரிவினரிடமிருந்தும், இந்து தர்மசபை போன்ற அமைப்புகளிடமிருந்தும் பெரும் எதிர்ப்பைச் சந்தித்தது. இருந்தபோதிலும் ஈஸ்வரசந்திர வித்யாசாகர் போன்ற சீர்திருத்தவாதிகளும் இருந்தனர்; ஆனால் அவர் இந்து நூல்களைத் தமக்கு ஆதாரமாக கொண்டார். பிரம்ம சமாஜம் பெருமளவிலான மக்களை ஈர்க்கவில்லை எனினும், அது அறிவு ஜீவிகளின் மேல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

மகரிஷி தேவேந்திரநாத் தாகூர்

இராஜா ராம்மோகன் ராய் 1833இல் இயற்கையெய்திய பின்னர் அவர் விட்டுச்சென்றப் பணிகளை, கவிஞர் இரவீந்திரநாத் தாகூரின் தந்தையரான தேவேந்திரநாத் தாகூர் (1817-1905) தொடர்ந்தார். அவர் நம்பிக்கை பற்றிய தேவேந்திரநாத் நான்கு கொள்கைக்கூறுகளை முன்வைத்தார்.

  1. தொடக்கத்தில் எதுவுமில்லை, எல்லாம் வல்ல ஒரு கடவுள் மட்டுமே உள்ளார். அவரே இவ்வுலகத்தைப் படைத்தார்.
  2. அவர் ஒருவரே உண்மையின், எல்லையற்ற ஞானத்தின், நற்பண்பின், சக்தியின் கடவுளாவார். அவரே நிலையானவர், எங்கும் நிறைந்திருப்பவர், அவருக்கிணையாருமில்லை.
  3. நம்முடைய வீடுபேறு, இப்பிறவியிலும் அடுத்தபிறவியிலும் அவரை நம்புபவரையும் அவரை வணங்குவதையும் சார்ந்துள்ளது.
  4. அவரை நம்புவதென்பது, அவரை நேசிப்பதிலும் அவர் விருப்பத்தைச் செயல்படுத்துவதிலும் அடங்கியுள்ளது.

கேசவ் சந்திர சென்னும் இந்தியாவின் பிரம்ம சமாஜமும்

தேவேந்திரநாத் மிதவாதச் சீர்திருத்தவாதியாவார். ஆனால் சமாஜத்தில் அவருடன் பணியாற்றிய இளையவர்கள் விரைவான மாற்றங்களையே விரும்பினர். அவர்களுள் மிக முக்கியமானவரான கேசவ் சந்திரசென்(1838-84), 1857இல் சபையில் இணைந்தார்.

1866இல் பிரம்மசமாஜத்தின் உறுப்பினர்களிடையே பிளவு ஏற்பட்டதால் கேசவ் சந்திர சென் சமாஜத்திலிருந்து விலகி புதிய அமைப்பான  “இந்திய பிரம்ம சமாஜத்தை” உருவாக்கினார்.

இதன்பின்னர் தேவேந்திரநாத் தாகூரின் அமைப்பு ‘ஆதி பிரம்ம சமாஜம்’ என அழைக்கப்படலாயிற்று. குழந்தைத் திருமணத்தை சமாஜம் கண்டனம் செய்திருந்தபோதும் அதற்குமாறாக கேசவ் சந்திர சென் தனது பதினான்குவயது மகளை இந்திய இளவரசன் ஒருவருக்குத் திருமணம் செய்து கொடுத்தபோது, குழந்தைத் திருமணத்தை எதிர்த்தோர் இந்திய பிரம்ம சமாஜத்திலிருந்து விலகி ‘சாதாரண சமாஜ்’ எனும் அமைப்பை நிறுவினர்.

ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்

வங்காளத்தைச் சேர்ந்த மற்றொரு முதன்மையான சீர்திருத்தவாதி ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் (1820-1891) ஆவார். இராஜா  ராம்மோகன் ராயும் மற்றவர்களும் சமூகத்தைத் திருத்துவதற்கு மேலைநாட்டுப் பகுத்தறிவுச் சிந்தனைகளின் துணையை நாடியபோது வித்யாசாகர் இந்து மறை நூல்களே முற்போக்கானவை என வாதிட்டார். விதவைகளை எரிப்பதும் விதவை மறுமணத்தைத் தடைசெய்வதும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதற்கு மறை நூல்களிலிருந்தே சான்றுகளை முன்வைத்தார். அவர் தனது கருத்துக்களுக்கு ஆதரவான வாதங்களைக் கொண்ட சிறுநூல்களை வெளியிட்டார். அவர் நவீன வங்காள உரைநடையின் முன்னோடியாவார்.

அவர் பெண்களுக்கான பள்ளிகள் நிறுவப்பட உதவிகள் செய்தார். இந்து சமூகத்தில் குழந்தைப் பருவத்திலேயே விதவைகளான சிறுமிகளின் வாழ்வை மேம்படுத்துவதற்காகவே தனது முழுவாழ்வையும் அர்ப்பணித்தார்.

பண்டித ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் தலைமையேற்ற இயக்கத்தின் விளைவாய் 1856இல் மறுமண சீர்திருத்தச் சட்டம் (விதவைகள் மறுமணச் சட்டம்) இயற்றப்பட்டது.

1860இல் முதன்முறையாக திருமண வயதுச் சட்டம் இயற்றப்பட்டது. திருமணத்திற்கான வயது பத்து என்று நிர்ணயம் செய்யப்பட்டது.

அது 1891இல் பன்னிரெண்டாகவும், 1925இல் பதிமூன்றாகவும் உயர்த்தப்பட்டது.

ஆனால் கவலைக்குரிய விதத்தில் திருமண வயது ஒப்புதல் கமிட்டி (1929) கூறியபடி இச்சட்டம் காகிதத்தில் மட்டுமேயிருந்தது. நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் ஒருசில படித்த மனிதர்களுமே அதனைப்பற்றிய அறிவைப் பெற்றிருந்தனர்.

பிரார்த்தனை சமாஜம்

மகாராஷ்டிரப் பகுதியானது சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவு கிடைக்கப்பெற்ற மற்றொரு பகுதியாகும். பிரம்ம சமாஜத்துக்கிணையாக பம்பாயில் 1867 நிறுவப்பட்ட அமைப்பே பிரார்த்தனை சமாஜம். இதனை நிறுவியவர் ஆத்மராம் பாண்டுரங் (1825–1898) ஆவார்.

இந்த சமாஜத்தின் இரண்டு மேன்மைமிக்க உறுப்பினர்கள் R.C. பண்டர்கர், நீதிபதி மகாதேவ் கோவிந்த் ரானடே ஆகிய இருவருமாவர்.

இவ்விருவரும் சாதிமறுப்பு, சமபந்தி, சாதிமறுப்புத் திருமணம், விதவை மறுமணம், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் போன்ற நடவடிக்கைகளுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களாவர்.

 

விதவை மறுமணச் சங்கம் (1861),

புனே சர்வஜனிக் சபா (1870),

தக்காணக் கல்விக்கழகம் (1884)

ஆகிய அமைப்புகளை மகாதேவ் கோவிந்த் ரானடே (1842-1901) நிறுவினார்.

சுவாமி தயானந்த சரஸ்வதி மற்றும் ஆரியசமாஜம்

பஞ்சாபில், ஆரியசமாஜம் சீர்திருத்த இயக்கங்களுக்குத் தலைமையேற்றது. இது 1875  நிறுவப்பட்டது, இவ்வமைப்பை நிறுவியவர் சுவாமி தயானந்த சரஸ்வதி (1824-83) ஆவார்.

அவருடைய நூலான ‘சத்யார்த்தபிரகாஷ்’ பெரும்பாலோரால் படிக்கப்பட்டது. குழந்தைத் திருமணம், விதவை மறுமணத்திற்கு மறுப்பு போன்ற பழக்கங்களும் அயல்நாடு சென்றால் தீட்டு என்று சொல்லப்படுதலும் மறைநூல்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என அறிவித்தார்.

ஆரியசமாஜம் இந்துமதத்திலிருந்த மூடநம்பிக்கைகளை மறுத்தது. அதனுடைய முழக்கம் ‘வேதங்களுக்குத் திரும்புவோம்’ என்பதாகும்.

ஆரியசமாஜம் பிரிட்டிஷ் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த மதமாற்ற நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.அதன் முக்கியக் குறிக்கோள் எதிர்மத மாற்றம் என்பதாகும். ஏற்கனவே இஸ்லாமுக்கும் கிறித்தவ மதத்திற்கும் மாறிய இந்துக்களை மீண்டும் இந்துக்களாக மாற்ற சுத்தி (Suddhi) எனும் சுத்திகரிப்புச் சடங்கை சமாஜம் வகுத்துக்கொடுத்தது.

ஆரியசமாஜம் சமூக சீர்திருத்தக்களத்திலும் கல்வியைப்பரப்பும் பணியிலும் முக்கிய சாதனைகள் புரிந்தது. சமாஜம் பல தயானந்தா ஆங்கில-வேதப் பள்ளிகளையும் கல்லூரிகளையும் உருவாக்கியது.

இராமகிருஷ்ண பரமஹம்சர்

கல்கத்தாவுக்கு அருகேயிருந்த தட்சிணேசுவரம் என்னும் ஊரைச்சார்ந்த எளிய அர்ச்சகரான இராமகிருஷ்ண பரமஹம்சர் (1836-1886) பஜனைப்பாடல்களை மனமுருகிப் பாடுவதைப்போன்ற வழிமுறைகள் மூலம் பேரின்ப நிலையை அடைந்து அந்நிலையில் ஆன்மரீதியாக கடவுளோடு ஒன்றிணைவதற்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

புனிதத்தாயான கடவுள் காளியின் தீவிர பக்தரான அவர் அக்கடவுளின் திருவிளையாடல்கள் முடிவற்றவை என அறிவித்தார்.

அவருடைய கருத்தின்படி அனைத்து மதங்களும் உலகளாவிய, எல்லோருக்குமான மூலக்கூறுகளைக் கொண்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் அவை வீடுபேற்றுக்கு இட்டுச்செல்லும். ‘ஜீவன்’ என்பதே ‘சிவன்’ எனவும் அவர் கூறினார் (வாழ்கின்றஅனைத்து உயிர்களும் இறைவனே). ‘ மனிதர்களுக்குச் செய்யப்படும் சேவையே கடவுளுக்குச் செய்யப்படும் சேவையாகும் என்றார்.

இராமகிருஷ்ணா மிஷன்

இராமகிருஷ்ணருடைய முதன்மையான சாதனையே, பிரம்மசமாஜம் போன்ற சீர்திருத்த அமைப்புகள் முன்வைத்தப் பகுத்தறிவுக் கருத்துகளின்பால் அதிருப்தியுற்ற கல்வியறிவு பெற்ற இளைஞர்களைத் தன்பால் ஈர்த்ததுதான்.

1886இல் அவர் இயற்கை எய்திய பின்னர் அவருடைய சீடர்கள் தங்களை ஒரு மதம்சார்ந்த சமூகமாக அமைத்துக்கொண்டு இராமகிருஷ்ணரையும் அவரின்
போதனைகளையும் இந்தியாவிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் பரப்பும் பெரும்பணியை மேற்கொண்டனர். இப்பெரும்பணியின் பின்புலமாய் இருந்தவர் சுவாமி விவேகானந்தர். கிறித்தவசமயப் பரப்பு நிறுவனங்களின் நிர்வாகக் கட்டமைப்பைப் பின்பற்றி விவேகானந்தர் இராமகிருஷ்ணா
மிஷனை நிறுவினார்.

இராமகிருஷ்ணா மிஷன் சமயச் செயல்பாடுகளோடு மட்டும் தனதுப்பணிகளை நிறுத்திக்கொள்ளவில்லை. மக்களுக்குக் கல்வியறிவு வழங்குவது, மருத்துவ உதவி, இயற்கைச் சீற்றங்களின்போது நிவாரணப்பணிகளை மேற்கொள்வது போன்ற சமூகப்பணிகளிலும் செயலூக்கத்துடன் ஈடுபட்டது.

சுவாமி விவேகானந்தர்

பின்னாளில் சுவாமி விவேகானந்தர் என்றழைக்கப்பட்ட நரேந்திரநாத் தத்தா (1863-1902) இராமகிருஷ்ண பரமஹம்சருடைய முதன்மைச்சீடராவார். படித்த இளைஞரான அவர் இராமகிருஷ்ணரின் கருத்துகளால் கவரப்பட்டார்.

1893இல் சிக்காகோவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் இந்து சமயம் பற்றியும் பக்திமார்க்கத் தத்துவம் குறித்தும் அவராற்றிய சொற்பொழிவுகள் அவருக்குப் பெரும்புகழ் சேர்த்தது. இந்து சமயச்சடங்குகளில் கலந்துகொள்ளக்கூடாதென ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒடுக்கப்பட்ட மக்களும் அதுபோன்ற சடங்குகளில் கலந்துகொள்ளக் கட்டாயம் அனுமதிக்கப்படவேண்டும் என்றார். விவேகானந்தரின் செயலாக்கமிக்க கருத்துகள் மேற்கத்தியக் கல்வி பயின்ற வங்காள இளைஞர்களிடையே அரசியல் மாற்றங்களுக்கான நாட்டத்தை ஏற்படுத்தியது. வங்கப்பிரிவினையைத் தொடர்ந்து நடைபெற்ற சுதேசி இயக்கத்தின் போது இளைஞர்களில் பலர் விவேகானந்தரால் ஊக்கம் பெற்றனர்.

பிரம்மஞான சபை

மேடம் H.P. பிளாவட்ஸ்கி (1831-1891) மற்றும் கர்னல் H.S. ஆல்காட் (1832-1907) ஆகியோரால் பிரம்மஞானசபை 1875 அமெரிக்காவில் நிறுவப்பட்டது. இவ்வமைப்புப் பின்னர் 1886இல் இந்தியாவில் சென்னை அடையாறுக்கு மாற்றப்பட்டது.

பிரம்மஞானசபை இந்து செவ்வியல் நூல்களைக் குறிப்பாக உபநிடதங்கள், பகவத்கீதை ஆகியவற்றைப் படிப்பதற்கு உற்சாகமூட்டியது. இந்தியாவில் பௌத்தம் புத்துயிர் பெறுவதில் பிரம்மஞானசபை முக்கியப் பங்காற்றியது. இந்து மறைநூல்களின் மீது மேலைநாட்டவர் காட்டிய ஆர்வம், படித்த இந்தியர்களிடையே தங்கள் பாரம்பரியம், பண்பாடு குறித்த அளப்பரியப் பெருமிதத்தை ஏற்படுத்தியது.

அன்னிபெசன்ட்டின் பங்களிப்பு

ஆல்காட்டின் மறைவுக்குப் பின்னர் இவ்வமைப்பின் தலைவராக அன்னிபெசன்ட் (1847-1933) தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்வியக்கம் மேலும் செல்வாக்குப் பெற்றது. இந்திய தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்ற அவர் தன்னாட்சி இயக்கச் சங்கத்தை அமைத்து அயர்லாந்திற்கு வழங்கப்பட்டதைப் போல இந்தியாவிற்கும் தன்னாட்சி வழங்கப்பட வேண்டுமென்று கோரிக்கை வைத்தார். அன்னிபெசன்ட்

பிரம்மஞானக் கருத்துக்களைத் தன்னுடைய நியூ இந்தியா (New India), (Commonweal) எனும் செய்தித்தாள்களின் மூலம் பரப்பினார்.

ஜோதிபா புலே

ஜோதிபா கோவிந்தராவ் புலே 1827இல் மகாராஷ்டிராவில் பிறந்தார். அவர் 1852ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளியை புனேயில் திறந்தார். சத்தியசோதக் சமாஜ் (உண்மையை நாடுவோர் சங்கம், Truth Seekers Society) எனும் அமைப்பை, பிராமணரல்லாத மக்களும் சுயமரியாதையோடும், குறிக்கோளோடும் வாழத் தூண்டுவதற்காய் நிறுவினார். புலே குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். விதவை மறுமணத்தை ஆதரித்தார். ஜோதிபாவும் அவருடைய மனைவி சாவித்திரிபாயும் ஒடுக்கப்பட்ட மக்களின், பெண்களின் முன்னேற்றத்திற்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். ஜோதிபா பெற்றோரில்லா குழந்தைகளுக்கென்று விடுதிகளையும் விதவைகளுக்கென காப்பகங்களையும் உருவாக்கினார். அவர் எழுதிய நூலான ‘குலாம்கிரி’ (அடிமைத்தனம்) அவருடையப் பெரும்பாலான தீவிரக்கருத்துக்களைச் சுருக்கிக் கூறுகிறது.

நாராயண குரு

கேரளாவில் ஏழைப்பெற்றோர்க்கு மகனாகப் பிறந்த நாராயண குரு (1854-1928) மலையாளம், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளில் அறிஞராகவும் கவிஞராகவும் திகழ்ந்தார். பயங்கரமான சாதிக் கொடுமைகளையும், ஒடுக்கப்பட்ட மக்கள்படும் துயரங்களையும் கண்டு மனம்வெதும்பினார். அவர்களின் மேம்பாட்டிற்குப் பணியாற்றுவதற்காக ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் எனும் அமைப்பை உருவாக்கினார். அருவிபுரம் எனும் ஊரில் ஒரு பெரிய கோவிலைக்கட்டிய அவர் அதை அனைவருக்கும் அர்ப்பணித்தார். குமாரன் ஆசான், டாக்டர் பால்பு போன்ற சிந்தனையாளர்களும் எழுத்தாளார்களும் இவருடைய சிந்தனைகளால் தூண்டப்பெற்று இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றனர்.

அய்யன்காளி

1863இல் திருவனந்தபுரத்தல் உள்ள வெங்கனூரில் பிறந்தார். அப்போது அப்பகுதி திருவிதாங்கூர் அரசரின் ஆட்சிப்பகுதியாகும். குழந்தையாய் இருக்கும்போதே அவர் சந்தித்த சாதியப்பாகுபாடு சாதி தலைவராக அவரை எதிர்ப்பியக்கத்தின் மாற்றியது. பின்னர் அவர் பொது இடங்களுக்குச் செல்லுதல், பள்ளிகளில் கல்வி கற்க இடம்பெறுதல் போன்ற அடிப்படை  உரிமைகளுக்காகப்  போராடினார். ஸ்ரீநாராயணகுருவால் ஊக்கம்பெற்ற அய்யன்காளி 1907இல் சாது ஜன பரிபாலன சங்கம் (ஏழை மக்கள் பாதுகாப்புச் சங்கம் Association for the protection of the Poor) எனும் அமைப்பை நிறுவினார்.

இஸ்லாமிய சீர்திருத்தங்கள்

சர் சையத் அகமத்கான்

டெல்லியில் உயர்குடி முஸ்லீம் குடும்பத்தில் பிறந்த சையத் அகமத்கான் படிப்பறிவின்மையே நவீன குறிப்பாக, கல்வியறிவின்மையே இஸ்லாமியர்களுக்குப் பெருந்தீங்கு விளைவித்து, அவர்களைக் கீழ்நிலையில் வைத்துவிட்டது எனக்கருதினார். மேலைநாட்டு அறிவியலையும், அரசுப்பணிகளையும் ஏற்றுக்கொள்ளும்படி அவர் இஸ்லாமியர்களை வற்புறுத்தினார். அறிவியல்கழகமொன்றை நிறுவிய அவர் ஆங்கிலநூல்களைக் குறிப்பாக அறிவியல் நூல்களை உருதுமொழியில் மொழியாக்கம் செய்தார். மேலெழுந்துவரும் தேசியஇயக்கத்தில் இணைவதைக் காட்டிலும் ஆங்கிலஅரசுடன் நல்லுறவு மேற்கொண்டால் இஸ்லாமியர் நலன்கள் பேணப்படும் என அவர் நம்பினார். எனவே அவர் இஸ்லாமியருக்கு ஆங்கிலக்கல்வியைப் பயிலும்படியும் அதில் கவனம் செலுத்தும்படியும் அறிவுரை கூறினார்.

அலிகார் இயக்கம்

சர் சையத் அகமத்கான் 1875ஆம் ஆண்டு அலிகார் நகரில் அலிகார் முகமதிய ஆங்கிலோ- ஓரியண்டல் கல்லூரியை (Aligarh Mohammedan Anglo-Oriental College) நிறுவினார். ‘அலிகார் இயக்கம்’ எனப்பட்ட அவரது இயக்கம் இக்கல்லூரியை மையப்படுத்தி நடைபெற்றதால் அப்பெயரைப் பெற்றது. இந்தியமுஸ்லீம்களின் கல்விவரலாற்றில் இக்கல்லூரி ஒரு மைல் கல்லாகும். 1920இல் இக்கல்லூரி தரம் உயர்த்தப்பட்டு பல்கலைக்கழகமானது.

தியோபந்த் இயக்கம்

தியோபந்த் இயக்கம் ஒரு மீட்பியக்கமாகும். இவ்வியக்கம் பழமைவாத முஸ்லீம் உலேமாக்களால்,  தொடங்கப்பெற்றது.

இவ்வுலேமாக்கள் முகமது குவாசிம் நானோதவி (1832-1880), ரஷித் அகமத் கங்கோத்ரி (1826- 1905) ஆகியோரின் தலைமையில் 1866இல் உத்தரப்பிரதேசத்தில் சகரன்பூரில் ஒரு பள்ளியை நிறுவினர். இப்பள்ளியின் பாடத்திட்டம் மேலைநாட்டுப் ஆங்கிலக்கல்வியையும் பண்பாட்டையும் புறக்கணித்தது. இப்பள்ளியில் உண்மையான இஸ்லாமியமதம் கற்றுத்தரப்பட்டது. இதன் நோக்கம் இஸ்லாமிய சமூகத்தின் ஒழுக்கத்தையும் மதத்தையும் மீட்டெடுப்பதாய் அமைந்தது.

மெளலானா முகமத்-உல்-ஹசன் தியோபந்தின் புதிய தலைவரானார். அவரின் தலைமையில் இயங்கிய ஜமைத்-உல்-உலேமா (இறையியலாளர்களின் அவை) ஹசனுடைய கருத்துக்களான, இந்திய ஒற்றுமை எனும் ஒட்டுமொத்தச் சூழலில் முஸ்லீம்களின் அரசியல், சமய உரிமைகளின் பாதுகாப்பு என்பது குறித்த உறுதியான வடிவத்தை முன்வைத்தது.

பார்சி சீர்திருத்த இயக்கம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் பார்சி சீர்திருத்த இயக்கம் பம்பாயில் தொடங்கப்பட்டது. 1851இல் பர்துன்ஜி நௌரோஜி என்பார் “ரஹ்னுமாய் மஜ்தயாஸ்னன் சபா” (பார்சிகளின் சீர்திருத்தச் சங்கம்) எனும் அமைப்பை ஏற்படுத்தினார். ராஸ்ட் கோப்தார் (உண்மை விளம்பி) என்பதே அதன் தாரகமந்திரமாக இருந்தது. பெர்ரம்ஜி மல்பாரி என்பார் குழந்தைத் திருமணப் பழக்கத்திற்கு எதிரான சட்டம் இயற்றப்பட வேண்டுமென இயக்கம் நடத்தினார். இச்சமூகம் பெரோசா மேத்தா, தீன்சா வாச்சா போன்ற சிறந்த தலைவர்களை உருவாக்கியது. அவர்கள் தொடக்ககால காங்கிரசில் முக்கியப் பங்குபணியாற்றினர்.

சீக்கியர் சீர்திருத்த இயக்கம் (நிரங்கரிகள், நாம்தாரிகள்)

நிரங்கரி இயக்கத்தின் நிறுவனரான பாபா தயாள்தாஸ் நிரங்கரி (உருவமற்ற) இறைவனை வழிபட வேண்டுமென வலியுறுத்தினார். குருநானக்கின் தலைமையையும் ஆதிகிரந்தத்தையும் மதித்தல் ஆகியன அவருடைய போதனைகளின் சாரமாக விளங்கின. மது அருந்துவதையும், மாமிசம் உண்பதையும் கைவிடும்படி வலியுறுத்திக் கூறினார்.

பாபாராம் சிங் என்பவரால் தொடங்கப் பெற்ற நாம்தாரி இயக்கம் சீக்கியரிடையே நடைபெற்ற மற்றுமொரு சமூக, சமயச் சீர்திருத்த இயக்கமாகும். நாம்தாரி இயக்கம் சீக்கியர்களின் அடையாளங்களை (கிர்பான் வாளைத் தவிர) அணிய வற்புறுத்தியது. வாளுக்குப் பதிலாகத் தனது சீடர்களை லத்தியை வைத்துக் கொள்ளும்படி ராம்சிங் கூறினார். இவ்வியக்கம் ஆணும் பெண்ணும் சமம் எனக் கருதியது. விதவை மறுமணத்தை ஆதரித்தது. வரதட்சணை முறையையும் குழந்தைத் திருமணத்தையும் தடைசெய்தது.

ஆரியசமாஜம், கிறித்தவ சமயப்பரப்பு நிறுவனங்கள் ஆகியவற்றின் செல்வாக்கு வளர்ந்து கொண்டிருந்த ஒரு சூழலில் சிங்சபா எனும் அமைப்பு அமிர்தசரசில் நிறுவப்பட்டது. சீக்கியமதத்தின் புனிதத்தை மீட்டெடுப்பதே சபாவின் முக்கியக் குறிக்கோளாக அமைந்தது. ஆங்கிலேயரின் ஆதரவுடன் அமிர்தசரசில் சீக்கியர்களுக்கென கால்சா கல்லூரி உருவாக்கப்பட்டது. சிங்சபாவே அகாலி இயக்கத்தின் முன்னோடி அமைப்பாகும்.

 

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories