தமிழ் சமுதாய வரலாறு அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள்
February 5, 2024 2025-11-25 14:55தமிழ் சமுதாய வரலாறு அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள்
தமிழ் சமுதாய வரலாறு அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள்
நமது பண்பாட்டை எண்ணிப் பார்பதற்கும் கடந்த காலத்தைப் புரிந்து கொள்வதற்கும் துணை நிறபவை அகழாய்வுகள்.
அரிக்கமேடு அகழாய்வு:-அரிக்கமேடு என்னுமிடம், தென் இந்தியாவின் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் அருகிலுள்ள தொல்பொருளாய்வு சார்ந்த இடமாகும்.அகழாய்வில் பொ.ஆ. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்தன. அதனால் ரோமானியர்களுக்கும் நமக்கும் இருந்த வாணிபத் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆதிச்சநல்லூர் அகழாய்வு:-ஆதிச்சநல்லூர் அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது பழம்பெரும் பழங்கால அடையாளமாக உள்ளன.
கீழடி அகழாய்வு:-மதுரை அருகே கீழடி என்னும் இடத்தடில் நடத்தப்பட்ட அகழாய்வில் சுடுமண் பொருட்கள், உலோகப் பொருட்கள், முத்துக்கள், கிளிஞ்சல் பொருள்கள், மான் கொம்புகள், சோழிகள், கிண்ணங்கள், துளையிடப்பட்ட பாத்திரங்கள், இரத்தினக்கல் வகைகள், பழுப்பு, கறுப்பு, சிவப்பு – கறுப்புப் பானைகள், சதுரங்க்காய்கள், தானியங்களைச் சேமித்து வைக்கும் கலன்கள், செம்பு, சங்கு வளையல்கள், தமிழ்-பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், கற்கருவிகள், உறைக்கிணறுகள் போன்ற தொல்லியல் பொருள்கள் கிடைத்துள்ளன. இவை 2300 ஆண்களுக்கு முற்பட்டவை என கருதப்படுகின்றன. இதுவரை கிடைத்த அகழாய்வில் இறப்பு தொடர்பான தடயங்கள் கிடைத்துள்ளன. ஆனால் கீழடியில் வாழ்விடப்பகுதிகளே முழுமையான அளவில் கிடைத்துள்ளன. செங்கல் கட்டுமானங்கள் தமிழரின் உயரிய நாகரிகத்தைக் காட்டும் சாட்சிகளாக அமைந்துள்ளன.
1863 ஆம் ஆண்டு இராபர்ட் புரூஸ்புட் என்னும் தொல்லியல் அறிஞர் சென்னைப் பல்லாவரம் செம்மண் மேட்டுப்பகுதியில் எலும்பையும் கற்கருவியையும் கண்டுபிடித்தார். இந்தக் கற்கருவிதான் இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட முதல் கல்லாயுதம்.
தமிழ்நாட்டின் பெருங்கற்காலம் / இரும்புக்காலம்.
பெருங்கற்காலம் ஆங்கிலத்தில் Megalithic Age என்று அழைக்கப்படுகிறது. Megalith என்பது கிரேக்கச் சொல்லாகும். ‘Mega’ என்றால் பெரிய, lith என்றால் ‘கல்’ என்று பொருள். இறந்தவர்களைப் புதைத்த இடங்களைக் கற்பலகைகளைக் கொண்டு மூடியததால் இக்காலம் பெருங்கற்காலம் என அழைக்கப்படுகிறது.
தமிழகத்திலுள்ள பெருங்கற்கால/இரும்புக்கால தொல்லியல் ஆய்விடங்கள்.
ஆதிச்சநல்லூர்-தூத்துக்குடி மாவட்டம்
இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில், முதுமக்கள் தாழிகள், பல்வகைப்பட்ட மட்பாண்டங்கள் (கருப்பு, சிவப்பு) இரும்பாலான குத்துவாள், கத்திகள், ஈட்டிகள், அம்புகள், சில கல்மணிகள், ஒரு சில தங்க ஆபரணங்கள் கிடைத்துள்ளன. வீட்டு விலங்குகள் மற்றும் காட்டு விலங்குகளான புலி, யானை, மான் போன்றவற்றின் வெண்கலத்தாலான உருவங்கள் கிடைத்துள்ளன. மட்பாண்டங்கள் செய்தல், கல் மற்றும் மரங்களைப் பயன்படுத்தி பொருட்கள் செய்தல் போன்ற திறன்களை மக்கள் பெற்றிருந்தனர்.
கீழடி – சிவகங்கை மாவட்டம்
இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை திருப்புவனம் தாலுகாவிலுள்ள கீழடி கிராமத்தில் சங்க காலத்தைச் சேர்ந்த பழமையான நகரத்தை அகழ்ந்து ஆய்வு செய்துள்ளது. செங்கற்களால் கட்டப்பட்ட கட்டடங்கள் நன்கு அமைக்கப்பட்ட வடிகால் அமைப்பு போன்ற சான்றுகள் இந்த ஆய்வில் கிடைத்துள்ளன. மேலும் தமிழ்-பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ள மண்பாண்டங்கள், கண்ணாடியிலான மணிகள், செம்மணிகள், வெண்கல் படிகம், முத்துக்கள், தங்க ஆபரணங்கள், இரும்புப் பொருட்கள், சங்கு வளையல்கள், தந்தத்தால் செய்யப்பட்ட பகடை போன்றவையும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. 2017ஆம் ஆண்டில் இந்திய தொல்லியல் துறை இரு மாதிரிகளை கதிரியக்க கார்பன் வயதுக்கணிப்பு முறையில் கணிக்க அமெரிக்காவில் புளோரிடா என்னும் இடத்தில் உள்ள பீட்டா அனாலடிக் என்ற நிறுவனத்திற்கு அனுப்பியது. அச்சோதனையில் இப்பொருள்கள் கி.மு (பொ.ஆ.மு) 200ஐச் சார்ந்தது என்பது தெரியவந்துள்ளது. இங்கு ரோம் நாட்டைச் சேர்ந்த பழங்கால தொல் பொருட்கள் கிடைத்துள்ளன. இவை இந்தியாவிற்கும் ரோம்
நாட்டிற்கும் இடையே நிலவிய வணிகத் தொடர்பிற்கு மேலும் சில சான்றுகளாகும்.
பொருந்தல் – திண்டுக்கல் மாவட்டம்
பொருட்கள்: புதைகுழிப் பொருட்கள், கண்ணாடி மணிகள் (வெள்ளை, சிகப்பு, மஞ்சள், நீலம் மற்றும் பச்சை வண்ணங்களில்) இரும்பு வாள்கள், தமிழ் – பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்பாண்டங்கள், அரிசி நிரப்பப்பட்ட மட்பாண்டங்கள், ஓரளவு அரிதான கற்களான படிகக்கல், சிவப்பு நிற மணிக்கற்கள், சங்கு மற்றும் கண்ணாடி வளையல்கள்.
இரும்பினாலான கதிர் அறுக்கும் அரிவாள், ஈட்டி, கொழுமுனைகள் ஆகியவை தமிழக மக்கள் நெல் விளைவித்ததற்கு சான்றுகளாய் உள்ளன. இங்கு கிடைத்துள்ள அரிசி நிரம்பிய பானை, மக்களின் முக்கிய உணவாக அரிசி இருந்தது என்பதை மெய்ப்பிக்கிறது.
பையம்பள்ளி – வேலூர் மாவட்டம்
இங்கு மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வில் கிடைத்த பொருட்கள் – இரும்பினால் செய்யப்பட்ட தொல் பொருட்களோடு பெருங்கற்காலத்து கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன. பையம்பள்ளியில் இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. ரேடியோ கார்பன் முறையில் இப்பண்பாட்டின் காலம் கி.மு. (பொ.ஆ.மு) 1000 என கணிக்கப்பட்டுள்ளது.
கொடுமணல்-ஈரோடு மாவட்டம்
பதிற்றுப்பத்தில் இடம் பெற்றுள்ள கொடுமணல் என்னும் ஊர் இதுவே என அடையாளப்படுத்தப்படுகிறது. இங்கு தமிழ் பிராமி எழுத்துக்களைக் கொண்ட முந்நூற்றுக்கும் அதிகமான மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் நூல் சுற்றி வைக்கப்பயன்படும் சுழல் அச்சுக்கள், சுருள்கள், துணிகளின் சிறிய துண்டுகள், கருவிகள், ஆயுதங்கள், அணிகலன்கள், மணிகள் முக்கியமாக சிவப்பு நிற மணிக்கற்கள் ஆகியவற்றையும் தொல்லியல் ஆய்வு அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். புதைகுழி மேட்டிற்கு அருகே காணப்பட்ட நினைவுக் கல் (Menhir) பெருங்கற்காலத்தைச் சேர்ந்தது என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆறுமுக (யாழ்ப்பாணம்) நாவலர் தாமோதரம் பிள்ளை (யாழ்ப்பாணம்) உ.வே.சாமிநாத அய்யர் ஆகியோர் அரும்பாடுபட்டு பனையோலைகளில் எழுதப்பட்டிருந்த தமிழ் செவ்வியல்
இலக்கியங்களையும் பண்டைக்காலத் தமிழ் நூல்களையும் மீட்டு வெளியிடுவதில் பல ஆண்டுகளைச் செலவிட்டனர்.
சான்றுகள்
கல்வெட்டுகள் – கலிங்கநாட்டு அரசன் காரவேலனுடைய ஹதிகும்பா கல்வெட்டு, புகளூர் (கரூர்க்கு அருகே) கல்வெட்டு, அசோகருடைய இரண்டு மற்றும் பதிமூன்றாம் பேராணைக் கல்வெட்டுகள். மேலும் மாங்குளம், அழகர் மலை, கீழவளவு ஆகிய ஊர்களிலுள்ள (இவ்வூர்கள் அனைத்தும் மதுரைக்கு அருகேயுள்ளன) கல்வெட்டுகள்.
செப்பேடுகள் – வேள்விக்குடி மற்றும் சின்னமனூர் செப்பேடுகள்
நாணயங்கள் – சங்க காலத்தைச் சேர்ந்த சேர, சோழ, பாண்டிய அரசர்களாலும், குறுநில மன்னர்களாலும் வெளியிடப்பட்ட நாணயங்களும், ரோமானிய நாணயங்களும்.
பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள் – புதைவிடங்கள், நடுகற்கள்
அகழ்வாய்விலிருந்து பொருட்கள் கிடைத்த இடங்கள் – ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, கொடுமணல், புகார், கொற்கை, அழகன்குளம், உறையூர்.
இலக்கியச் சான்றுகள் – தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி ஆகியவை. சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்கள்.
அயல்நாட்டவர் குறிப்புகள்- எரித்திரியக் கடலின் பெரிப்ளஸ் (The Periplus of Erythrean Sea) பிளினியின் இயற்கை வரலாறு (Natural History) தாலமியின் புவியியல் (Geography), மெகஸ்தனிஸின் இண்டிகா, ராஜாவளி, மகாவம்சம், தீபவம்சம் ஆகியன.
தொல்காப்பியம் ஒரு தமிழ் இலக்கண நூலாகும். அது சங்க காலத் தமிழ் மக்களின் மொழி, பண்பாடு ஆகியவற்றின் உயர் தரத்தைச் சுட்டிக்காட்டுகிறது.
கால அளவு – கி.மு. (பொ.ஆ.மு 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. (பொ.ஆ) 3 ஆம் நூற்றாண்டு வரை
தமிழகத்தின் புவியியல் பரப்பு – வடக்கே வேங்கடம் (திருப்பதி மலைகள்) முதல் தெற்கே கன்னியாகுமரி வரை. கிழக்கிலும், மேற்கிலும் கடல்களை எல்லைகளாகக் கொண்டிருந்தது.
காலம் – இரும்புக் காலம்
பண்பாடு – பெருங்கற்காலப் பண்பாடு
அரசுமுறை – முடியாட்சி
ஆட்சி புரிந்த அரச வம்சங்கள் – சேரர், சோழர், பாண்டியர்
கீழடி (வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்)
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கீழடியில் 2018ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வின் அறிக்கையின் சிறப்பம்சங்கள்:
ஆறு கரிம மாதிரிகள், அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணம், மியாமி நகரத்தில் அமைந்துள்ள, பீட்டா பகுப்பாய்வு சோதனை ஆய்வகத்திற்கு (Beta Analytic Testing Laboratory) அனுப்பப்பட்டன. இவற்றில் அதிகபட்சமாக 353 செ.மீ. ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட கரிம மாதிரிகளின் காலம் கி.மு (பொ.ஆ.மு.) 580 என ஆய்வு முடிவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தறிவு
கி.மு.580 காலகட்டத்தைச் சேர்ந்த தமிழ்-பிராமி எழுத்துப் பொறிப்பு கொண்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து ஆறாம் நூற்றாண்டிலிருந்தே தமிழக மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்ததை அறிய முடிகிறது.
வேளாண் சமூகம் மற்றும் கால்நடை வளர்ப்பு
கீழடி அகழாய்வில் வெளிக்கொணரப்பட்ட விலங்குகளின் 70 எலும்புத் துண்டுகளின் மாதிரிகள், புனேவின் தக்காண கல்லூரி, முதுகலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பகுப்பாய்வு அறிக்கையின்படி, வகைப்படுத்தப்பட்டதில் திமிலுள்ள பசு / காளை, எருமை, செம்மறியாடு, வெள்ளாடு, கலைமான், காட்டுப்பன்றி மற்றும் மயில் ஆகிய உயிரினங்களுக்குரியவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன.
கட்டடத் தொழில்நுட்பம்
தமிழகத்தில் சங்ககாலத்தைச் சார்ந்த பிற தொல்லியல் இடங்களில் காணப்படும் செங்கற்களைப் போல் இங்கு கிடைத்துள்ள செங்கற்கள் 1:4:6 என்ற விகிதாச்சார அளவிலேயே காணப்படுவதால் அக்காலகட்டம் கட்டுமானத் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கியது தெரிகிறது.
நெசவுத் தொழில்
நூல் நூற்கப் பயன்படும் 180-க்கும் மேற்பட்ட தக்களிகள், துணிகளில் உருவ வடிவமைப்புகளை வரைவதற்கு உபயோகப்படுத்தப்படும் (வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் பயன்படுத்தப்பட்டதைப் போன்ற) எலும்பினாலான கூரிய முனைகள் கொண்ட தூரிகைகள் (20),
கருங்கல் மற்றும் சுடுமண்ணால் செய்யப்பட்ட தறியில் தொங்கவிடும் குண்டு, செம்பினாலான ஊசி போன்ற தொல்பொருள்கள் இப்பகுதியில் நிலவியிருந்த நெசவுத் தொழிலின் நூல்நூற்றல், பாவு அமைத்தல், தறியிலமைத்தல், நெசவு அதன்பின் சாயமிடல் நிலைகளை உறுதி செய்கின்றன.
வணிகம்
கீழடி அகழாய்வுப் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட அகேட், கார்னீலியன் போன்ற மணிகள் செய்வதற்கான மூலப்பொருள்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதியிலிருந்து மகாராஷ்டிரம், குஜராத் வழியாக கொண்டு வரப்பட்டிருக்கலாம். கீழடியில் சிவப்பு வண்ண பானை ஓடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வகை பானைகள் கி.மு.2ஆம் நூற்றாண்டில் ரோம் நாட்டில் புழக்கத்திலிருந்த தனித்தன்மை வாய்ந்த அரிட்டைன் வகையாகும்.
அணிகலன்கள் மற்றும் மணிகள்
தங்கத்தினாலான ஏழு ஆபரணத் துண்டுகள், செம்பு அணிகலன்களின் சிறிய துண்டுகள், மதிப்புமிக்க மணிகள், கல்மணிகள், கண்ணாடி மணிகள், சங்காலும், தந்தத்தாலும் செய்யப்பட்ட வளையல்கள், சீப்புகள் ஆகிய பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இத்தகைய மதிப்புறு அணிகலன்களும், ஏனைய அணிகலன்களும் சங்ககாலச் சமூகம் வளமையுடன் இருந்ததற்கான சான்றுகளாகும். மேலும், கண்ணாடி, படிகம், குவார்ட்ஸ், வண்ணம் தீட்டப்பட்ட மண்ணாலான மணிகள், அகேட், கார்னீலியன் மற்றும் சுடுமண் ஆகியவற்றால் செய்யப்பட்ட 4,000க்கும் மேற்பட்ட மணிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இரும்பு பொருள்கள்
அகழாய்வில் இரும்பு ஆணிகள் மற்றும் கத்திகளின் பாகங்கள் குறிப்பிடத்தக்க அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சுடுமண் உருவங்கள்
சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், 600க்கும் மேற்பட்ட விளையாட்டுப் பொருள்கள், 28 காதணிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குகள்
தமிழ்நாட்டு அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள பகடைக்காய், வட்டச்சில்லுகள் மற்றும் ஆட்டக்காய்கள் அன்றைய சமுதாயத்தின் வாழ்க்கை முறையையும், பொழுதுபோக்கு அம்சங்களையும் பிரதிபலிக்கின்றன. அகழாய்வில் கிடைக்கப்பெற்ற விளையாட்டுப் பொருட்களில் பெரும்பாலானவை சுடுமண்ணால் ஆனவை. தட்டையான வடிவில் உள்ள பானை ஓட்டின் விளிம்புகள் நன்கு தேய்க்கப்பட்டு வட்ட வடிவத்தைக் கொண்டிருக்கும் விளையாட்டுப் பொருள் ‘சில்லு’ என்றழைக்கப்படுகிறது. இவ்வகை சில்லுகள் விளையாடுவதற்கு பயன்படுத்தப்பட்டன.
வைகை நதிக்கரையிலுள்ள கீழடி அகழாய்வுகள் மூலம் நகரமயமாதல் கி.மு.6ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது என்பது தெளிவாகிறது. இதே காலக்கட்டத்தில்தான் வடஇந்தியாவின் கங்கை சமவெளிப் பகுதியிலும் நகரமயமாதல் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
பொருநை நாகரிகம் தமிழ்ப் பண்பாட்டின் தொட்டில்
பொருநை (தாமிரபரணி) தமிழ் நாட்டின் ஒரே வற்றாத ஆறாகும். இது திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் வழியே பாய்கிறது.
பொருநை ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூரில் 1876இல் ஜெர்மானிய பரப்பாய்வாளர் டாக்டர் ஜாகோர் என்பவரால் அகழாய்வு நடத்தப்பெற்றது. பின்னர் இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த அலெக்சாண்டர் ரீ 1899 முதல் 1905 வரை ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்தார். அவர் அகழாய்வு செய்து சேகரித்த தொல்பொருள்கள் சென்னை அரசு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதற்குப் பின்னர், சுமார் ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு இந்திய அரசு தொல்லியல் துறையினர் (ASI) 2004இல் ஆதிச்சநல்லூரில் தொல்லியல் அகழாய்வு செய்தனர். இதன் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் தொல்லியல் துறை ஆதிச்சநல்லூரின் ஈமக்காடுகள் மற்றும் வாழிடப்பகுதி புதைமேடுகளில் அகழாய்வுப் பணியினைத் (2019-2021) தொடங்கியது.
கொற்கை, சங்க இலக்கியங்களிலும் கிரேக்க இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பழைய துறைமுகமாகும். தமிழக அரசின் தொல்லியல் துறையினரால் 1968 இல் இங்கு அகழாய்வு நடத்தப்பட்டது. தற்சமயம் இங்கு நடைபெற்று வரும் அகழ்வாய்வானது (2020-2021) கொற்கை துறைமுகத்தை குறித்துப் பல தகவல்களை வெளிப்படுத்தி வருகின்றன.
ஆதிச்சநல்லூரிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிவகளை என்ற ஊரில் 2019இல் நடத்தப்பட்ட அகழாய்வில் ஒரு தாழியிலிருந்து கிடைத்த உமி நீங்கிய நெல்மணிகள் அமெரிக்காவின் மியாமி நகரில் உள்ள பீட்டா ஆய்வகத்தில் கரிம பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது இதனது காலம் பொது ஆண்டிற்கு முந்தைய காலத்தைச் கி.மு.(பொ.ஆ.மு.) 1155 சேர்ந்ததாகக் காலக்கணக்கீடு செய்யப்பட்டது. இது தாமிரபரணி பண்பாடு 3200 வருடப் பழமை என்று உறுதிப்படுத்துகின்றது.
ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்கள்
ஈமத் தாழிகள்: மண்- பாறை அடுக்குகளில் 3 முதல் 12 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்த ஈமத் தாழிகளில் எலும்புகள், இறந்தவர்களின் பயன்பாட்டிற்குத் தேவைப்படும் என்ற நம்பிக்கையில் வைக்கப்பட்ட பாத்திரங்கள், பொன், உயரளவு ஈயம்கொண்ட வெண்கல, இரும்புப் பொருள்கள் கிடைத்துள்ளன.
நீள்வட்ட வடிவிலான பொன்தகட்டால் ஆன நெற்றிப்பட்டங்கள் சிறிய அளவில் பொறிக்கப்பட்ட முக்கோண வடிவ அணிவேலைப்பாடுகளுடனும் நெற்றியில் கயிற்றால் இணைத்துக் கட்டுவதற்காக இரு முனைகளிலும் இடப்பட்ட துளைகளுடனும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சிறிய, பெரிய அளவிலான உயரளவு ஈயம்கொண்ட வெண்கலப் பாத்திரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கருப்பு-சிவப்பு நிற பானை வகைகள், 500க்கும் மேற்பட்ட கீறல் குறியீடுகள் மற்றும் தமிழி (தமிழ்- பிராமி) எழுத்துகள் பொறித்த பானையோடுகள் கிடைத்துள்ளன.
சிந்துவெளி அகழ்வில் கிடைத்துள்ளதைப் போன்ற சுடுமண் பெண்ணுருவங்கள் கிடைத்துள்ளன.
எறி வேல், ஈட்டி, குறுவாள் போன்ற 32 விதமான இரும்பினாலான கருவிகள் கிடைத்துள்ளன.
அணிகலன்கள் செம்பு, இரும்பாலான மோதிரங்கள், பொன், கண்ணாடி, தந்தம், எலும்பு மற்றும் சங்கினால் செய்யப்பட்ட மணிகளும் வளையல்களும் கிடைத்துள்ளன.
நீர், கழிவுநீர் மேலாண்மை
இங்கு கிடைத்த செங்கற்கட்டுமானம் 29 வரிசையில் உள்ளது. இதன் நடுவில் ஒரு பெரிய பானை கிடைத்துள்ளது. மேலும் ஒன்றன் மீது ஒன்றாக வைக்கப்பட்ட துளையிடப்பட்ட 9 சுடுமண் குழாய்கள் அக்காலத்தின் தொழில்நுட்பச் சிறப்பை உணர்த்துகின்றன.
சங்கு வளையல் தொழிற்கூடம்
முழுமையான சங்குகள், அறுக்கப்பட்ட சங்கு வளையல்கள், வளையல் துண்டுகள் இங்கு சங்கு வளையல்கள் செய்யும் தொழிற்கூடம் இருந்தமையை வெளிப்படுத்துகின்றன. சங்க இலக்கியப் பாடல்கள் பலவும் கொற்கையில் சங்கு வளையல் தொழில் செய்பவர்கள் இருந்தமையை உறுதிப்படுத்துகின்றன.
இங்கு கிடைத்திருக்கும் அயல் நாட்டு பானையோடுகள் மற்றும் கருப்பு நிற மெருகேற்றப்பட்ட மட்பாண்டங்கள், பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே தமிழகம் உலகின் பிற பகுதிகளுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்புகளை உறுதிப்படுத்துகின்றன.
