நூல் வெளி
August 16, 2024 2025-05-08 10:44நூல் வெளி
நூல் வெளி
இன்பத்தமிழ்
பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார். தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளைப் பாடுபொருளாகப் பாடியுள்ளார். எனவே, இவர் புரட்சிக்கவி என்று போற்றப்படுகிறார். இவர் பாவேந்தர் என்றும் சிறப்பிக்கப்படுகிறார். பாரதிதாசன் கவிதைகள் என்ற நூலில் தமிழ் என்னும் தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ளது.
தமிழ்க்கும்மி
பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் மாணிக்கம். இவர் பாவலரேறு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் முதலான நூல்களை இயற்றியுள்ளார். தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தினார். தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் இவர்.
பாரதியார் – (காணி நிலம்)
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் பாரதியார். அவரது இயற்பெயர் சுப்பிரமணியன். இளமையிலேயே சிறப்பாகக் கவிபாடும் திறன் பெற்றவர். எட்டயபுர மன்னரால் பாரதி என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர். தம் கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர். மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் பாடியவர். நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றைப் படைத்தவர். பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு முதலிய பல நூல்களை இயற்றி உள்ளார். பாரதியார் கவிதைகள் என்னும் தொகுப்பில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது.
சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள். இவர் சேர மன்னர் மரபைச் சேர்ந்தவர் என்று சிலப்பதிகாரப் பதிகம் கூறுகிறது. இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பர். ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம். இதுவே தமிழின் முதல் காப்பியம். இது முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், என்றெல்லாம் போற்றப்படுகிறது. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. திங்கள், ஞாயிறு, மழை என இயற்கையை வாழ்த்துவதாக இந்நூல் தொடங்குகிறது.
திருக்குறள்
திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர். எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறியுள்ளார். வான்புகழ் வள்ளுவர், தெய்வப்புலவர், பொய்யில் புலவர் முதலிய பல சிறப்புப் பெயர்கள் இவருக்கு உண்டு திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. திருக்குறள் 133 அதிகாரங்களில் 1330 குறள்பாக்களைக் கொண்டுள்ளது. “திருக்குறளில் இல்லாததும் இல்லை, சொல்லாததும் இல்லை” என்னும் வகையில் சிறந்து விளங்குகிறது. திருக்குறளுக்கு உலகப் பொதுமறை, வாயுறை வாழ்த்து முதலிய பல சிறப்புப் பெயர்கள் வழங்குகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
அறிவியல் ஆத்திசூடி
தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் நெல்லை சு.முத்து. இவர் அறிவியல் அறிஞர் மற்றும் கவிஞர். விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், சதீஷ்தவான் விண்வெளி மையம், இந்திய விண்வெளி மையம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அறிவியல் கவிதைகள், கட்டுரைகள் பலவற்றைப் படைத்துள்ளார். எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்.
மூதுரை
மூதுரையின் ஆசிரியர் ஒளவையார். இவர் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார். மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள். சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல் மூதுரை எனப் பெயர் பெற்றது. இந்நூலில் முப்பத்தொரு பாடல்கள் உள்ளன.
துன்பம் வெல்லும் கல்வி
எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர். மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர்.
ஆசாரக்கோவை
ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார். இவர் பிறந்த ஊர் கயத்தூர். ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது.
கண்மணியே கண்ணுறங்கு
தாலாட்டு வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று. தால் என்பதற்கு நாக்கு என்று பொருள். நாவை அசைத்துப் பாடுவதால் தாலாட்டு (தால்+ஆட்டு) என்று பெயர்பெற்றது. குழந்தையின் அழுகையை நிறுத்தவும் தூங்க வைக்கவும் இனிய ஓசையுடன் பாடும் பாடல் தாலாட்டு.
நானிலம் படைத்தவன்
முடியரசனின் இயற்பெயர் துரைராசு. பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை முதலிய நூல்களை எழுதியுள்ளார். திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர்.
கடலோடு விளையாடு
உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடலே நாட்டுப்புறப் பாடலாகும். காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் இதனை வாய்மொழி இலக்கியம் என்பர். ஏற்றப்பாட்டு, ஓடப்பாட்டு முதலான தொழில்பாடல்களும் விளையாட்டுப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள் முதலியனவும் நாட்டுப்புறப் பாடல்களுள் அடங்கும்.
பாரதம் அன்றைய நாற்றங்கால்
தாராபாரதியின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன். கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர்.
புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள் முதலானவை இவர் இயற்றிய நூல்களாகும்.
பராபரக்கண்ணி
பராபரக்கண்ணி பாடலை எழுதியவர் தாயுமானவர்.திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமைக் கணக்கராகப் பணி புரிந்தவர். இப்பகுதி தாயுமானவர் பாடல்கள் என்னும் நூலில் உள்ளது. இந்நூலைத் தமிழ் மொழியின் உபநிடதம் எனப் போற்றுவர். இப்பாடல்கள் ‘பராபரக் கண்ணி’ என்னும் தலைப்பில் உள்ளன. ‘கண்ணி’ என்பது இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல்வகை.
நீங்கள் நல்லவர்
கலீல் கிப்ரான் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர். கவிஞர், புதின ஆசிரியர், கட்டுரையாசிரியர், ஓவியர் எனப் பன்முக ஆற்றல் பெற்றவர். இப்பாடப்பகுதி கவிஞர் புவியரசு மொழிபெயர்த்த தீர்க்கதரிசி என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
பாதம்
எஸ்.ராமகிருஷ்ணன் தற்காலத் தமிழ் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைத் தொகுப்புகள், சிறுவர் இலக்கியங்கள் என இவருடைய படைப்புகள் நீள்கின்றன. உபபாண்டவம், கதாவிலாசம், தேசாந்திரி, கால் முளைத்த கதைகள் முதலிய ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். இக்கதை “தாவரங்களின் உரையாடல்” என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
ஆசியஜோதி
தேசிக விநாயகனார் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர். முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். கவிமணி என்னும் பட்டம் பெற்றவர். ஆசிய ஜோதி, ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது. இந்நூல் புத்தரின் வரலாற்றைக் கூறுகிறது.
எங்கள் தமிழ்
எங்கள் தமிழ் பாடலின் ஆசிரியரை, நாமக்கல் கவிஞர். இவர் தமிழறிஞர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் காந்தியத்தைப் பின்பற்றியதால் இவர் காந்தியக்கவிஞர் என்றும்அழைக்கப்படுகிறார். தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர். மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என்கதை, சங்கொலி உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். “நாமக்கல் கவிஞர் பாடல்கள்” என்னும் நூலிலிருந்து “எங்கள் தமிழ்” பாடல் எடுத்துத் தரப்பட்டுள்ளது.
ஒன்றல்ல இரண்டல்ல
பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர் உடுமலை நாராயணகவி. இவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராகவும் நாடக எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர். தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர். நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதைகள் எழுதியவர்.
காடு
சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன். இவர் பாரதிதாசன் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர். பாரதிதாசனின் இயற்பெயர் ‘சுப்புரத்தினம்’. எனவே தம் பெயரைச் சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார். அதன் சுருக்கமே சுரதா என்பதாகும். உவமைகளைப் பயன்படுத்திக் கவிதைகள் எழுதுவதில் வல்லவர் என்பதால் இவரை “உவமைக் கவிஞர்” என்றும் அழைப்பர். அமுதும் தேனும், தேன்மழை, துறைமுகம் உள்ளிட்ட பல நூல்களை இவர் இயற்றியுள்ளார். இப்பாடல் “தேன்மழை” என்னும் நூலில் “இயற்கை எழில்” என்னும் பகுதியிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது. இப்பாடல் கிளிக்கண்ணி என்னும் பாவகையைச் சேர்ந்தது. கிளியின் மொழி போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கிக் கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் இசைப்பாடல் வகை ‘கிளிக்கண்ணி’ ஆகும்.
அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
ராஜமார்த்தாண்டன் கவிஞர், இதழாளர், கவிதைத் திறனாய்வாளர் எனப் பன்முகத் திறன்கள் பெற்றவர். கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர். ராஜமார்த்தாண்டன் கவிதைகள் என்னும் நூலுக்காகத் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றவர். சிறந்த தமிழ்க் கவிதைகளைத் தொகுத்து “கொங்கு தேர் வாழ்க்கை” என்னும் தலைப்பில் நூலாக்கியுள்ளார். இவரது அப்படியே நிற்கட்டும் அந்த மரம் என்னும் நூலில் உள்ள கவிதை இங்குத் தரப்பட்டுள்ளது.
திருக்குறள்
திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்று கூறுவர். இவர் முதற்பாவலர், பொய்யில் புலவர், செந்நாப்போதார் போன்ற சிறப்புப் பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறார். தமிழ்நூல்களில் ‘திரு’ என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் திருக்குறள் ஆகும். திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பகுப்புகளைக் கொண்டது. இதில் அறம்- 38, பொருள்-70, இன்பம்-25 என மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. அதிகாரத்திற்கு 10 குறட்பாக்கள் வீதம் 1330 குறட்பாக்கள் உள்ளன. இதற்கு முப்பால், தெய்வநூல், பொய்யாமொழி போன்ற பிற பெயர்களும் உள்ளன.
புலி தங்கிய குகை
காவற்பெண்டு சங்ககாலப் பெண்பாற்புலவர்களுள் ஒருவர். சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர் என்பர். கல்வியில் தேர்ச்சியும் கவிபாடும் ஆற்றலும் மிக்க இவர், சங்க கால மக்களின் வீரத்தைக் கருப்பொருளாகக் கொண்டு இப்பாடலைப் பாடியுள்ளார். இவர் பாடிய ஒரே ஒரு பாடல் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது. புறநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந்நூல் பண்டைக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை, நாகரிகம், பண்பாடு, வீரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் நூலாக விளங்குகிறது. இந்நூலில் 86-ஆம் பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.
பாஞ்சை வளம்
கட்டபொம்மன் கதைப்பாடல்கள் பல வடிவங்களில் வழங்கி வருகின்றன. அவை பலரால் பதிப்பிக்கப்பட்டுள்ளன. நம் பாடப்பகுதி “நா. வானமாமலை” தொகுத்து வெளியிட்டுள்ள “வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல்” என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.
இரா.பி.சேது தமிழறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப் பேச்சாளர் எனப் பன்முகத் திறன் பெற்றவர்.
கப்பலோட்டிய தமிழர்
இரா.பி.சேது தமிழறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப் பேச்சாளர் எனப் பன்முகத் திறன் பெற்றவர். இவரைச் “சொல்லின் செல்வர்” எனப் போற்றுவர். செய்யுளுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றை உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே என்பர். இவரது “தமிழின்பம்” என்னும் நூல் இந்திய அரசின் “சாகித்திய அகாதெமி விருது” பெற்ற முதல் நூல் ஆகும். ஆற்றங்கரையினிலே, கடற்கரையினிலே, தமிழ் விருந்து, தமிழகம்- ஊரும் பேரும், மேடைப்பேச்சு உள்ளிட்ட பல நூல்களை இவர் எழுதியுள்ளார். வ.உ. சிதம்பரனார் பேசுவதாக அமைந்த நம் பாடப்பகுதி “கடற்கரையினிலே” என்னும் நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.
கவின்மிகு கப்பல்
மருதன் இளநாகனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர். கலித்தொகையின் மருதத்திணையில் உள்ள முப்பத்து ஐந்து பாடல்களையும் பாடியவர் இவரே. மருதத்திணை பாடுவதில் வல்லவர் என்பதால் மருதன் இளநாகனார் என அழைக்கப்படுகிறார். அகநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. புலவர் பலரால் பாடப்பட்ட நானூறு பாடல்களைக் கொண்டது. இந்நூலினை நெடுந்தொகை என்றும் அழைப்பர். இந்நூலின் 255 ஆம் பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.
வாழ்விக்கும் கல்வி
திருக்குறள் வகுப்புகள் நடத்தியும் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் திருக்குறளைப் பரப்பும் பணி செய்தவர் திருக்குறளார் வீ. முனிசாமி. நகைச்சுவை ததும்பும் தமது பேச்சால் மக்களைக் கவர்ந்தவர் இவர். வள்ளுவர் உள்ளம், வள்ளுவர் காட்டிய வழி, திருக்குறளில் நகைச்சுவை உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம் என்னும் இவரது நூல் பெரும் புகழ் பெற்றது. இக்கட்டுரை “சிந்தனைக் களஞ்சியம்” என்னும் இவரது நூலிலிருந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளது.
பள்ளி மறுதிறப்பு
இக்கதையை எழுதியவர் சுப்ரபாரதிமணியன். இவர் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற கருத்துகளை வலியுறுத்திச் சிறுகதை, புதினம், கட்டுரை முதலியவற்றை எழுதியுள்ளார்; “கனவு” என்னும் இலக்கிய இதழை நடத்தி வருகிறார்.பின்னல், வேட்டை, தண்ணீர் யுத்தம், புத்துமண், கதை சொல்லும் கலை உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
ஒரு வேண்டுகோள்
தேனரசன் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். இவர் வானம்பாடி, குயில், தென்றல் போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார். இவரது கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள் எள்ளல் சுவையோடு வெளிப்படும். மண்வாசல், வெள்ளை ரோஜா, பெய்து பழகிய மேகம் ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார். பாடப்பகுதியிலுள்ள கவிதை பெய்து பழகிய மேகம் என்னும் நூலிலிருந்து தரப்பட்டுள்ளது.
கீரைப்பாத்தியும் குதிரையும்
காளமேகப்புலவரின் இயற்பெயர் வரதன். மேகம் மழை பொழிவது போலக் கவிதைகளை விரைந்து பாடியதால் இவர் காளமேகப்புலவர் என அழைக்கப்பட்டார். திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, பரபிரம்ம விளக்கம், சித்திர மாடல் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவரது தனிப்பாடல்கள் “தனிப்பாடல் திரட்டு” என்னும் நூலில் இடம் பெற்றுள்ளன.
புதுமை விளக்கு
பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள திருவெஃகா என்னும் ஊரில் பிறந்தவர். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதி இவர் பாடியதாகும். அதன் முதல் பாடல் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
பூதத்தாழ்வார் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பிறந்தவர். இவர் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதியை இயற்றியுள்ளார். நம் பாடப்பகுதி இரண்டாம் திருவந்தாதியில் உள்ள முதல்பாடலாகும்.
அறம் என்னும் கதிர்
முனைப்பாடியார் திருமுனைப்பாடி என்னும் ஊரைச் சேர்ந்த சமணப்புலவர். இவரது காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டு. இவர் இயற்றிய அறநெறிச்சாரம் 225 பாடல்களைக் கொண்டது. அறநெறிகளைத் தொகுத்துக் கூறுவதால் இந்நூல் அறநெறிச்சாரம் எனப் பெயர்பெற்றது. இந்நூலின் பதினைந்தாம் பாடல் நமக்குப் பாடமாகத் தரப்பட்டுள்ளது.
உண்மை ஒளி
ஜென் என்னும் ஜப்பானிய மொழிச் சொல்லுக்கு தியானம் செய் என்பது பொருள். புத்த மதத்தைச் சார்ந்த துறவியரில் ஒரு பிரிவினரே ஜென் சிந்தனையாளர்கள். இவர்கள் பெரும்பாலும் சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தமது சிந்தனைகளைச் சிறு நிகழ்ச்சிகள், எளிய கதைகள் ஆகியவற்றின் மூலம் விளக்கினர். ஜென் கதைகளுள் ஒன்று இங்குப் படக்கதையாகத் தரப்பட்டுள்ளது.
தன்னை அறிதல்
சே. பிருந்தா புகழ்பெற்ற பெண்கவிஞர்களுள் ஒருவர். மழை பற்றிய பகிர்தல்கள், வீடு முழுக்க வானம், மகளுக்குச் சொன்ன கதை ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார். இக்கவிதை “மகளுக்குச் சொன்ன கதை” என்னும் நூலிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது.
பயணம்
பாவண்ணன் சிறுகதை, கவிதை, கட்டுரை எனப் பல்வேறு வகையான இலக்கிய வடிவங்களிலும் எழுதி வருகிறார். கன்னட மொழியிலிருந்து பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். வேர்கள் தொலைவில் இருக்கின்றன, நேற்று வாழ்ந்தவர்கள், கடலோர வீடு, பாய்மரக்கப்பல், மீசைக்கார பூனை, பிரயாணம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். பிரயாணம் என்னும் நூலில் உள்ள பயணம் என்னும் சிறுகதை இங்குத் தரப்பட்டுள்ளது.
தமிழ்மொழி வாழ்த்து
கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்த்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர் என பன்முக ஆற்றல் கொண்டவர். சி.சுப்பிரமணிய பாரதியார் இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி விடுதலை போருக்கு வித்திட்டவர் கவிதைகள் மட்டுமின்றி சந்திரிகையின் கதை, தராசு உள்ளிட்ட உரைநடை நூல்களையும், வசனக் கவிதைகளையும் உள்ளிட்ட உரைநடை நூல்களையும், வசன கவிதைகளையும், சீட்டுக் கவிகளையும் எழுதியவர். சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார். இப்பாடல் பாரதியார் கவிதைகள் என்னும் தொகுப்பில் தமிழ்மொழி வாழ்த்து என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது.
தமிழ்மொழி மரபு
தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர். தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். இந்நூல் எழுத்து, சாெல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டது.
சொற்பூங்கா
செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படும் இரா.இளங்குமரனார் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். நூலாசிரியர், இதழாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர் எனப் பன்முகத் திறன் பெற்றவர். இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். தேவநேயம் என்னும் நூலைத் தொகுத்துள்ளார். திருச்சிக்கு அருகில் அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையும், பாவாணர் நூலகமும் அமைத்துள்ளார். இவரது “தமிழின் தனிப்பெருஞ் சிறப்புகள்” என்னும் நூலிலிருந்து செய்திகள் தொகுத்து தரப்பட்டுள்ளன.
ஓடை
தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன். இவரின் இயற்பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு ஆகும். இவர் பாரதிதாசனின் மாணவர் ஆவார் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லவர் கவிஞரேறு, பாவலர்மணி முதலான சிறப்புப் பெயர்களைப் பெற்றவர். பிரெஞ்சு அரசு இவருக்கு செவாலியர் விருது வழங்கியுள்ளது. தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் என்பன இவரது நூல்களில் சிலவாகும்.
கோணக்காத்துப் பாட்டு
நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் மக்கள் பட்ட துயரங்களை அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் கும்மிப் பாடல்களாக பாடினர். பேச்சுத் தமிழில் அமைந்த இவை பஞ்சக்கும்மிகள் என்று அழைக்கப்பட்டன. புலவர் செ.இராசு தொகுத்த பஞ்சக் கும்மிகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ள வெங்கம்பூர் சாமிநாதன் இயற்றிய கோணக்காத்துப் பாட்டு என்னும் காத்து நொண்டிச் சிந்திலிருந்து சில பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.
வெட்டுக்கிளியும் சருகுமானும்
மனிஷ் சாண்டி, மாதுரி ரமேஷ் ஆகியோர் காடர்களின் கதைகள் சிலவற்றைத் தொகுத்துள்ளனர். அவற்றை யானையாடு பேசுதல் என்னும் தலைப்பில் கீதா தமிழாக்கம் செய்துள்ளார்.
நோயும் மருந்தும்
நீலகேசி ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று. இந்நூல் சமணசமயக் கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது. கடவுள் வாழ்த்து நீங்கலாக பத்துச் சருக்கங்களைக் கொண்டது. சமயத் தத்துவங்களை விவாதிக்கும் தருக்க நூலான இதன் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை. நீலகேசிக் காப்பியத்தின் தருமவுரை சருக்கத்திலிருந்து பாடல்கள் தரப்பட்டுள்ளன.
வருமுன் காப்போம்
கவிமணி எனப் போற்றப்படும் தேசிய விநாயகனார், குமரி மாவட்டம் தேரூரில் பிறந்தவர். முப்பத்தாறு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர் ஆசியஜோதி, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை உள்ளிட்ட பல கவிதை நூல்களையும் உமர்கய்யாம் பாடல்கள் என்னும் மொழிபெயர்ப்பு நூலையும் படைத்துள்ளார்.
தலைக்குள் ஓர் உலகம்
சுஜாதாவின் இயற்பெயர் ரங்கராஜன் என்பதாகும். இவர் சிறுகதைகள், புதினங்கள் நாடகங்கள், அறிவியல் புனைவுக் கதைகள், திரைப்படக்கதை வசனம் எனப் பல துறைகளில் பணியாற்றிவர். மின்னணு வாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் முக்கிய பங்கு ஆற்றியுள்ளார். என் இனிய எந்திரா, மீண்டும் ஜீனோ, ஸ்ரீரங்ககத்துத் தேவதைகள், தூண்டில் கதைகள் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
கல்வி அழகே அழகு
குமரகுருபரர் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.இவர் தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் பல சிற்றிலக்கியங்களை படைத்துள்ளார். கந்தர் கலிவெண்பா, கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் ஆகியன அவற்றுள் சிலவாகும். மக்களின் வாழ்வுக்கு தேவையான நீதிகளை சுட்டிக் காட்டுவதால் இந்நூல் நீதிநெறி விளக்கம் எனப் பெயர் பெற்றது. நீதிநெறி விளக்கத்தில் 102 வெண்பாக்கள் உள்ளது.
புத்தியைத் தீட்டு
ஆலங்குடி சோமு திரைப்படப் பாடல் ஆசிரியராக புகழ் பெற்றவர். சிவகங்கை மாவட்டத்திலுள் ஆலங்குடி என்னும் ஊரில் பிறந்தவர். தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.
பல்துறைக் கல்வி
திரு.வி.க. என்று அனைவராலும் குறிப்பிடப்படும் திருவாரூர் விருத்தாசலம் கல்யாணசுந்தரனார். அரசியல், சமுதாயம், சமயம், தொழிலாளர் நலன் எனப் பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர். சிறந்த மேடைப் பேச்சாளர். தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்படுபவர். இவர் மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, தமிழ்ச்சோலை, பொதுமை வேட்டல், முருகன் அல்லது அழகு உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். இவரது இளமை விருந்து என்னும் நூலிலிருந்து சிலபகுதிகள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
ஆன்ற குடிப்பிறத்தல்
பி.ச. குப்புசாமி சிறுகதை ஆசிரியர்களுள் ஒருவர். இவர் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஜெயகாந்தனாேடு நெருங்கிப் பழகி ஜெயகாந்தனாேடு பல்லாண்டு என்னும் நூலை எழுதியுள்ளார். இவர் எழுதிய ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் என்னும் நூலிலிருந்து ஒரு பகுதி இங்குத் தரப்பட்டுள்ளது.
திருக்கேதாரம்
சுந்தரர், தேவாரம் பாடிய மூவருள் ஒருவர். “நம்பியாரூரர், தம்பிரான் தோழர்” என்னும் சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார். இவர் அருளிய தேவாரப்பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன. இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகையை முதல் நூலாகக் கொண்டே சேக்கிழார் பெரியபுராணத்தை படைத்தளித்தார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர் ஆகிய பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம் ஆகும். இந்நூலைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார். தே + ஆரம் – இறைவனுக்குச் சூடப்படும் மாலை என்றும், தே + வாரம் – இனிய இசை பொருந்திய பாடல்கள் எனவும் பொருள் கொள்ளப்படும். பதிகம் என்பது பத்துப் பாடல்களை கொண்டது.
பாடறிந்து ஒழுகுதல்
கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இது கலிப்பா என்னும் பாவகையால் ஆன நூல். நூற்று ஐம்பது பாடல்களைக் கொண்டது. குறிஞ்சிக்கலி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தற்கலி, பாலைக்கலி என்னும் ஐந்து பிரிவுகளை உடையது. கலித்தொகையை தொகுத்தவர் நல்லந்துவனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர். நெய்தற்கலிப் பாடல்கள் இயற்றியவரும் இவரே.
வளம் பெருகுக
ஆசிரியர் பெயர் அறிய முடியாத நூல்களுள் ஒன்று தகடூர் யாத்திரை. தகடூர் இன்று தர்மபுரி என்று அழைக்கப்படுகிறது.இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நூலின் சில பாடல்கள் புறத்திரட்டு என்னும் தொகுப்பு நூலில் கிடைக்கின்றன.
மழைச்சோறு
பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலில் உள்ள கொங்கு நாட்டு மழைச்சோற்று வழிபாடு என்னும் கட்டுரையிலிருந்து இப்பாடல் எடுக்கப்பட்டுள்ளது. இந்நூலின் பதிப்பாசிரியர் அ.கெளரன்
படை வேழம்
செயங்கொண்டார் தீபங்குடி என்னும் ஊரினைச் சேர்ந்தவர். முதற்குலோத்துங்கச் சோழனுடைய அவைக்களப் புலவராக திகழந்தவர். பரணிக்கோர் செயங்கொண்டார் என்று பலபட்டடைச் சொக்கநாத புலவர் புகழ்ந்துள்ளார். 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றான பரணி வகையைச் சாரந்த நூல் இதுவே தமிழில் முதன்முதலில் எழுந்த பரணி நூல். இது முதலாம் குலோத்துங்க சோழன், அவருடைய படைத்தலைவர் கருணாகரத் தொண்டைமான் ஆகியோரின் கலிங்கப்போர் வெற்றியை பேசுகிறது. இந்நூலைத் தென்தமிழ்த் தெய்வப்பரணி என்று ஒட்டக்கூத்தர் புகழ்ந்துள்ளார். கலித்தாழிசையால் பாடப் பெற்றது. 599 தாழிசைகள் கொண்டது. போர்முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கொண்ட வீரரைப் புகழந்து பாடும் இலக்கியம் பரணி ஆகும்.
விடுதலைத் திருநாள்
மீ.இராேசேந்திரன் என்னும் இயற்பெயர் மீரா கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றினார் “அன்னம் விடு தூது” என்னும் இதழை நடத்தியவர். ஊசிகள், குக்கூ, மூன்றும் ஆறும், வா இந்தப் பக்கம், கோடையும் வசந்தமும் இவரது படைப்புகளாகும். இவர் எழுதிய “கோடையும் வசந்தமும்” என்னும் நூலிலிருந்து ஒரு கவிதை இங்குத் தரப்பட்டுள்ளது.
ஒன்றே குலம்
திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும் பதினெண் சித்தர்களில் ஒருவராகவும் கருதப்படுபவர். இவர் இயற்றிய திருமந்திரம் 3000 பாடல்களைக் கொண்டது. இந்நூலைத் தமிழ் மூவாயிரம் என்பர். இது பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.
மெய்ஞ்ஞான ஒளி
குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் சுல்தான் அப்துல்காதர். இவர் இளம் வயதிலேயே முற்றும் துறந்தவராக வாழ்ந்தார். சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப் பகுதிகளில் தவம் இயற்றி ஞானம் பெற்றார். எக்காளக் கண்ணி, மனோன்மணிக் கண்ணி, நந்தீசுவரக் கண்ணி முதலான நூல்களை இயற்றியுள்ளார்.
மனித யந்திரம்
சிறுகதை மன்னன் என்று போற்றப்படும் புதுமைபித்தனின் இயற்பெயர் சொ. விருத்தாச்சலம். சிறுகதைகளில் புதுப்புது உத்திகளைக் கையாண்டவர் என்று இவரைத் திறனாய்வாளர்கள் போற்றுகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார், சில திரைப்படங்களுக்கு கதை, உரையாடலும் எழுதியுள்ளார். கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், சாபவிமோசனம், பொன்னகரம், ஒரு நாள் கழித்து போன்றவை இவரது சிறுகதைகளுள் புகழ் பெற்றவை.மணிக்கொடி இதழில் வெளியான புதுமைபித்தனின் சிறுகதை ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.
உயிர்க்குணங்கள்
இறையரசனின் இயற்பெயர் சேசுராசா என்பதாகும். கல்லூரி ஒன்றில் தமிழப்பேராசிரியராகப் பணிபுரிந்தார் ஆண்டாள் இயற்றிய திருப்பாவையைத் தழுவி, கன்னிப்பாவை என்னும் நூலை எழுதியுள்ளார்.
இளைய தோழனுக்கு
வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர், புதுக்கவிதையைப் பரவலாக்கிய முன்னோடி ஒருவர் மு.மேத்தா. கண்ணீர்ப் பூக்கள், ஊர்வலம், சோழ நிலா, மகுட நிலா ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்னும் புக்கவிதை நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது. கல்லூரி பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
பால் மனம்
கோமகளின் இயற்பெயர் இராஜலட்சுமி; சிறுகதைகள், குறும்புதினங்கள், வானொலி, தொலைக்காட்சி நாடகங்கள் முதலியவற்றை எழுதியுள்ளார். இவரது அன்னை பூமி என்னும் புதினம் தமிழ்நாடு அரசின் விருதினைப் பெற்றது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை விருதினையும் பெற்றுள்ளார். உயிர் அழுதாய், நிலாக்கால நட்சித்திரங்கள், அன்பின் சிதறல் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். பால் மனம் எனும் இக்கதை அ.வெண்ணிலா தொகுத்த மீதமிருக்கும் சொற்கள் எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
தமிழாேவியம்
ஈரோடு தமிழன்பன் எழுதிய “தமிழோவியம்” என்னும் நூலில் இடம்பெற்றுள்ள கவிதை இது. இக்கவிதை குறித்துக் கவிஞர் முன்னுரையில் “ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்து கொளள் அகராதிகள் தேவைப்படுவதில்லை பாடலும் அப்படித்தான்! என்று குறிப்பிட்டுள்ளார். ஈரோடு தமிழன்பன் சிறுகதை, புதுக்கவிதை முதலிய படைப்புகள் வெளியிட்டுள்ளார். ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ புது வடிவங்களில் கவிதை நூல்களில் தந்துள்ளார். இவரது “வணக்கம் வள்ளுவ” கவிதை நூலுக்கு 2004-ம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. “தமிழன்பன் கவிதைகள்” தமிழக அரசின் பரிசு பெற்ற நூல். இவரது கவிதைகள் இந்தி, உருது, மலையாளம், ஆங்கில் உள்ளிட்ட மொழியில் மொழி பெயர்க்கப்ட்டுள்ளன.
தமிழ்விடு தூது
தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் “தூது” என்பதும் ஒன்று. இது “வாயில் இலக்கியம்”, “சந்து இலக்கியம்” என்னும் வேறுபெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது தலைவன் தலைவியருள் காதல் கொண்ட ஒருவர் மற்றொருவர் பால் செலுத்தும் அன்பைப் புலப்படுத்திக் தம்முடைய கருத்திற்கு உடன்பட்டமைக்கு அறிகுறியாக “மாலையை வாங்கி வருமாறு” அன்னம் முதல் வண்டு ஈறாய் பத்தையும் தூது விடுவதாகக் “கலிவெண்பா”வால் இயற்றப்படுவதாகும். தமிழ்விடு தூது மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி, தன் காதலைக் கூறிவருமாறு தமிழ்மொழியைத் தூதுவிடுவதாக அமைந்துள்ளது. இந்நூல் 268 கண்ணிகளைக் கொண்டுள்ளது. தமிழின் சிறப்புகளைக் குறிப்பிடும் சில கண்ணிகள் இப்பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ளன. 1930-ல் உ.வே.சா. தமிழ்விடு தூது நூலை முதன் முதலாக பதிப்பித்தார். இதன் ஆசிரியர் பெயர் என்று அறிய முடியவில்லை.
பெரியபுராணம்
சுந்தரின் திருத்தொண்டர் தொகை அடியவர் பெருமையை கூறுகிறது.இதைச் சிறிது விரித்து நம்பியாண்டார் நம்பியால் திருத்தொண்டர் திருவந்தாதி ஒவ்வொரு பாடலிலும் அடியார்களின் சிறப்பை கூறுவதாக அமைந்துள்ளது. இந்த இரண்டு நூல்களையும் அடிப்படையாக கொண்டு சேக்கிழாரால் ஒவ்வொரு புராணத்திலும் ஒவ்வொர் அடியராக அறுபத்து மூவரின் சிறப்புகளை விளக்கி பாடப்பட்டது திருத்தொண்டர் புராணம். இதன் பெருமை காரணம் இது பெரியபுராணம் என்று அழைக்கப்படுகிறது. கி.பி.12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சேக்கிழார், சோழ அரசன் இரண்டாம் குலோத்துங்கன் அவையில் முதலமைச்சராக இருந்தார். “பக்திசுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ” என்று மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் பாராட்டுகிறார்.
புறநானூறு
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. புறநானூறு புறப்பொருள் பற்றிய 400 பாடல்களை கொண்டது. பண்டைய வேந்தர்களின் வீரம், வெற்றி, கொடை குறித்தும் குறுநில மன்னர்கள் சான்றோர்கள் உள்ளிட்டவர்களின் பெருமைகளைப் பற்றியும் அன்றைய மக்களின் புற வாழ்க்கையைப் பற்றியும் கூறுகிறது. இந்நூல் பண்டைத் தமிழர்களின் அரிய வரலாற்று செய்திகள் அடங்கிய பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்கிறது.
தண்ணீர்
கந்தர்வனின் இயற்பெயர் நாகலிங்கம். இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தமிழ்நாடு அரசின் கருவூலக் கணக்குத்துறையில் பணியாற்றிவர்.கவிதைகளையும் எழுதியிருக்கிறார். சாசனம், ஒவ்வொரு கல்லாய், கொம்பன் முதலியவை இவரது குறிப்பிடத் தகுந்த சிறுகதைத் தொகுப்புகள்.
ஓ, என் சமகாலத் தாேழர்களே
கவிஞர் வைரமுத்து தேனி மாவட்டத்திலுள்ள மெட்டூர் என்னும் ஊரில் பிறந்தவர். இந்திய அரசின் உயர்ந்த விருதுகளுள் ஒன்றான பத்மபூஷண் விருதினைப் பெற்றவர். கள்ளிக்காட்டு இதிகாசம் புதினத்துக்காக 2003ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர். இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை ஏழு முறையும், மாநில அரசின் விருதினை ஆறு முறையும் பெற்றவர். இவருடைய கவிதைகள் இந்தி, தெலுங்கு, மலையாளம், வங்காளம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
உயிர்வகை
தமிழ்மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கணநூல் தொல்காப்பியம். இதன் இயற்றியவர் தொல்காப்பியர். தொல்காப்பியம் பிற்காலத்தில் தோன்றிய பல இலக்கண நூல்களுக்கு முதல் நூலாக அமைந்திருக்கிறது. இது எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்களை கொண்டுள்ளது 27 இயல்களை உடையது எழுத்து, சொல் அதிகாரங்கள் மொழி இலக்கணங்களை விளக்குகிறது. பொருள் அதிகாரம் தமிழர்களின் அகம், புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளையும், தமிழ் இலக்கிய கோட்பாடுகளையும் விளக்குகிறது, பல அறிவியல் கருத்துகளை கொண்டது. குறிப்பாக பிறப்பியல் எழுத்துக்கள், பிறக்கும் இடங்களை உடற்கூற்றியல் அடிப்படையில் விளக்கியிருப்பதை அறிவியல் அறிஞர்களும் வியந்து போற்றுகின்றன. தமிழர்களின் அறிவாற்றலுக்கு சிறந்த சான்றாகும்.
வீட்டிற்கோர் புத்தகசாலை
வீட்டிற்கோர் புத்தகசாலை என்னும் இப்பகுதி பேரறிஞர் அண்ணாவின் வானொலி உரைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளராக விளங்கியவர். சிறந்த எழுத்தாளாரான அண்ணாவைத் ‘தென்னகத்துப் பெர்னாட்ஷா‘ என்று அழைக்கப்பட்டார். இவர் சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் முதல் இன்ப ஒளி வரை பல படைப்புகளைத் தந்தவர். தம் திராவிடச் சீர்திருத்தக் கருத்துகளை நாடகங்கள், திரைப்படங்கள் மூலமாக முதன்முதலில் பரப்பியவர் 1935இல் சென்னை, பெத்தநாயக்கன் பேட்டை, கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஓராண்டு பணியாற்றினார். ஹோம்ரூல், ஹோம்லேண்ட், நம்நாடு, திராவிடநாடு, மாலைமணி, காஞ்சி போன்ற இதழ்களில் ஆசிரியராகவும் குடியரசு, விடுதலை ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும் இருந்தார். முதலமைச்சராகப் பொறுப்பை ஏற்றதும் இருமொழிச் சட்டத்தை உருவாக்கினார். சென்னை மாகாணத்தைத் ‘தமிழ்நாடு’ என்று மாற்றித் தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார்.
இராவண காவியம்
இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தனித்தமிழ்ப் பெருங்காப்பியம் இராவண காவியம். இந்நூல் தமிழகக் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க்காண்டம் என ஐந்து காண்டங்களையும் 3100 பாடல்களையும் கொண்டது. இந்நூல் புலவர் குழந்தை அவர்களால் இயற்றப்பட்டது. தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க 25 நாள்களில் இவர் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார். யாப்பதிகாரம், தொடையதிகாரம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இலக்கண, இலக்கிய நூல்களைப் படைத்துள்ளார். இராமாயணத்தில் எதிர்நிலை மாந்தராகப் படைக்கப்பட்ட இராவணனை முதன்மை நாயகனாகக் கொண்டு அமைக்கப்பட்டது இராவண காவியம்.
நாச்சியார் திருமொழி
திருமாலை வழிபட்டுச் சிறப்புநிலை எய்திய ஆழ்வார்கள் பன்னிருவர் ஆவர். அவருள் ஆண்டாள் மட்டுமே பெண் ஆவார். இறைவனுக்குப் பாமாலை சூட்டியதோடு தான் அணிந்து மகிழ்ந்த பூமாலையையும் சூட்டியதால், “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என அழைக்கப்பெற்றார். இவரைப் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் என்பர். ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு “நாலாயிர திவ்வியப் பிரபந்தம்” ஆகும். இத்தொகுப்பில் ஆண்டாள் பாடியதாகத் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்ற இரு தொகுதிகள் உள்ளன. நாச்சியார் திருமொழி மொத்தம் 143 பாடல்களைக் கொண்டது. நம் பாடப்பகுதியின் இரு பாடல்கள் ஆறாம் திருமொழியில் இடம்பெற்றுள்ளன.
செய்தி
தி. ஜானகிராமன் தஞ்சை மண்வாசனையுடன் கதைகளைப் படைத்தவர். உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகவும் வானொலியில் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகவும் பணியாற்றியவர். வடமொழி அறிவும் சிறந்த இசையறிவும் கொண்ட இவர்தம் கதைகள் மணிக்கொடி, கிராம ஊழியன், கணையாழி, கலைமகள், சுதேசமித்திரன், ஆனந்த விகடன், கல்கி போன்ற இதழ்களில் வெளிவந்தன. நாவல்களையும் நாடகங்களையும் இவர் படைத்துள்ளார். “அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை” என்னும் கோட்பாட்டைக் கொண்டவர் இவர். தமிழ்க் கதையுலகம் நவீனமயமானதில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. செய்தி என்னும் சிறுகதை சிவப்பு ரிக்ஷா என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. மிகவும் உயர்ந்த இசை சிறந்த கலைஞனால் கையாளப்படும்போது சொற்களின் எல்லையைத் தாண்டி இசையின் மூலமாகவே பெதருள் கொடுக்கிறது என்பதை இக்கதை உணர்த்துகிறது. தஞ்சாவூர் தமிழுக்கு அளித்த கொடை உ.வே. சாமிநாதர், மெளனி, தி.ஜானகிராமன், தஞ்சை பிரகாஷ், தஞ்சை இராமையா தாஸ், தஞ்சாவூர்க் கவிராயர் ஆகியோர்.
இந்திய தேசிய இராணுவம் – தமிழர் பங்கு
பேராசிரியர் மா.சு.அண்ணாமலை: “இந்திய தேசிய இராணுவம் – தமிழர் பங்கு” என்ற நூலுக்காகத் தமிழக அரசின் பரிசு பெற்றவர்.இவர் தலைமையில் எடுக்கபட்ட குறும்படங்கள் சர்வதேச அளவில் பரிசுகள் பெற்றன.
சீவக சிந்தாமணி
சீவக சிந்தாமணி ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. விருத்தப்பாவில் இயற்றப்பட்ட முதல் காப்பியம். மணநூல் என அழைக்கப்படுகிறது. இலம்பகம் என்ற உட்பிரிவுகளை கொண்டது. 13 இலம்பகங்களை கொண்டது. இதனை இயற்றியவர் திருத்தக்க தேவர். சமண மதத்தை சார்ந்தவர் இன்பச்சுவை மிக்க இலக்கியமும் இயற்ற முடியும் என்று நிறுவும் வகையில் இக்காப்பியத்தை இயற்றினார். இவர் கி.பி. 9-ம் நூற்றாண்டைச் சார்ந்தவர் சீவக சிந்தாமணியை பாடுவதற்கு முன்னோட்டமாக நரிவிருத்தம் என்னும் நூலை இயற்றியுள்ளார்.
முத்தொள்ளாயிரம்
வெண்பாவால் எழுதப்பட்ட நூல் முத்தொள்ளாயிரம்; மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் சேர, சோழ, பாண்டியர் என்று பொதுவாக பாடுகிறது. மூவேந்தர்களைப் பற்றிய பாடப்பட்ட 900 பாடல்களை கொண்ட நூல் என்பதால் முத்தெள்ளாயிரம் என்று பெயர் பெற்றது. நூல் முழுமையாக கிடைக்கவில்லை புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து 108 செய்யுள்கள் கிடைத்துள்ளன. அவை முத்தொள்ளாயிரம் என்னும் பெயரில பதிப்பிக்கப்பட்டுள்ளன. எழுதியவர், தொகுத்தவர் பெயர் அறிய இயலவில்லை. இவர் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார். சேர நாட்டை அச்சமில்லாத நாடாகவும், சோழ நாட்டை ஏர்களச் சிறப்பும், போர்க்களச் சிறப்பும் உடைய நாடாகவும், பாண்டிய நாட்டை முத்துடை நாடாகவும் பாடப்பகுதி காட்டுகிறது.
மதுரைக்காஞ்சி
பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மதுரைக்காஞ்சி. காஞ்சி என்றால் நிலையாமை என்பது பொருள். மதுரையின் சிறப்புகளைப் பாடுவதாலும் நிலையாமையைப் பற்றிக் கூறுவதாலும் மதுரைக்காஞ்சி எனப்பட்டது. இந்நூல் 782 அடிகளைக் கொண்டது. அவற்றுள் 354 அடிகள் மதுரையைப் பற்றி மட்டும் சிறப்பித்துக் கூறுகின்றன. இதைப் ‘பெருகுவள மதுரைக்காஞ்சி’ என்பர். இதன் பாட்டுடைத் தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன். மதுரைக்காஞ்சியைப் பாடியவர் மாங்குடி மருதனார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாங்குடி என்னும் ஊரில் பிறந்தவர். எட்டுத்தொகையில் பதின்மூன்று பாடல்களைப் பாடியுள்ளார்.
ஒளியின் அழைப்பு
புதிய படைப்புச் சூழலில் மரபுக்கவிதையின் யாப்புப் பிடியிலிருந்து விடுபட்ட கவிதைகள் புதுக்கவிதைகள் எனப்பட்டன. பாரதியாரின் வசன கவிதையைத் தொடர்ந்து படைக்கும் முயற்சியில் ந.பிச்சமூர்த்தி ஈடுபட்டார். எனவே அவர் புதுக்கவிதையின் தந்தை என போற்றப்படுகிறார். புதுக்கவிதையை “இலகு கவிதை, கட்டற்ற கவிதை, விலங்கு இலாக் கவிதை, கட்டுக்குள் அடங்காதக் கவிதை” என்று பல்வேறு புனைப்பெயர்களில் குறிப்பிடுகின்றன. ந.பிச்சமூர்த்தி தொடக்க காலத்தில் வழக்குரைஞராகவும், இந்து சமய அறநிலையப் பாதுகாப்புத்துறை அலுவலராகவும் பணியாற்றியுள்ளார். ஹனுமான், நவ இந்தியா ஆகிய இதழ்களின் துணை ஆசிரியர் புதுக்கவிதை, சிறுகதை, ஓரங்க நாடகங்கள், கட்டுரைகள் ஆகியன இவர் படைத்த இலக்கிய வகைமைகள் ஆகும் இவரின் முதல் சிறுகதை – ஸயன்ஸூக்பலி என்பதாகும் 1932-ல் கலைமகள் இதழ் வழங்கிய பரிசை பெற்றவர் பிக்ஷூ, ரேவதி என்னும் புனைப்பெயரில் படைப்புகளை வெளியிட்டவர்.
யசோதர காவியம்
ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று யசோதர காவியம்.இந்நூல் வட மொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதப் பெற்றதாகும். இதன் ஆசிரியர் பெயரை அறிய முடியவில்லை. இது சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது என்பர். யசோதரன் என்னும் அவந்தி நாட்டு மன்னனின் வரலாற்றை கூறுகிறது. இந்நூல் ஐந்து சருக்கங்களைக் கொண்டது. பாடல்களின் எண்ணிக்கை 320 எனவும் 330 எனவும் கருதுவர்.
விரிவாகும் ஆளுமை
தமிழுக்குத் தொண்டாற்றிய கிறிஸ்தவப் பெரியார்களுள் தனிநாயகம் அடிகள் குறிப்பிடத் தக்கவர். அடிகளாரின் சொற்பொழிவுகள் தமிழர் புகழைப் பரப்பும் குறிக்கோளை கொண்டவை. இலங்கையில் யாழ்ப் பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றிய பாஸ்கர் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு பாடமாக இடம் பெற்றுள்ளது. தம் சொற்பொழிவு வாயிலாக உலகம் முழுவதும் தமிழின் புகழை பரப்பினார். அகில உலகத் தமிழாய்வு மன்றம் உருவாகவும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உருவாகவும் காரணமாக இருந்தார். இவர் தொடங்கிய தமிழ்ப் பண்பாடு இன்றுவரை வெளிவந்து கொண்டிருக்கிறது.
அக்கறை
கல்யாண்ஜியன் இயற்பெயர் கல்யாணசுந்தரம். சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனத் தொடர்ந்து எழுதி வருபவர். வண்ணதாசன் என்ற பெயரில் கதை இலக்கியத்திலும் பங்களிப்பு செய்து வருகிறார் புலரி, முன்பின், ஆதி, அந்நியமற்ற நதி, மணல் உள்ள ஆறு ஆகியன இவரின் கவிதை படைப்புகள். இவர் எழுதிய கட்டுரை தொகுப்பு “அகமும் புறமும்” என்பதாகும். பல கடிதங்கள் தொகுக்கப்பட்டு “சில இறகுகள் சில பறவைகள்” என்ற பெயரில் வெளியானது. கலைக்க முடியாத ஒப்பனை. தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், உயரப் பறத்தல், ஒளியிலே தெரிவது போன்றவை இவர் எழுதிய சிறுகதை தொகுப்பு ஆகும் ஒரு சிறு இசை என்ற சிறுகதை தொகுப்பிற்காக 2016-ம் ஆண்டு சாகித்திய அகாதெமி பரிசினை பெற்றார்.
குறுந்தொகை
எட்டுதொகை நூல்களுள் ஒன்று.தமிழர் வாழ்வின் அகப்பொருள் நிகழ்வுகளை கவிதையாக்கி கூறுகிறது. கடவுள் வாழ்த்து நீங்கலாக 401 பாடல்களை கொண்டது. இதன் பாடல்கள் நான்கடிச் சிற்றெல்லையும் எட்டிப் பேரெல்லையும் கொண்டவை. 1915-ம் ஆண்டு செளரிப்பெருமாள் அரங்கனார் முதன்முதலில் இந்நூலைப் பதிப்பித்தார். நமக்கு பாடமாக வந்துள்ளது 37வது பாடல் ஆகும் இப்பாடலின் ஆசிரியர் பாலை பாடிய பெருங்கடுங்கோ. இவர் சேர மரபைச் சேர்ந்த மன்னர் கலித்தொகையில் பாலைத்திணையைப் பாடியதால் பாலை பாடிய பெருங்கடுங்கோ என அழைக்கப் பெற்றார்.
தாய்மைக்கு வறட்சி இல்லை
சு. சமுத்திரம் திருநெல்வேலி மாவட்டம், திப்பணம்பட்டியைச் சேர்ந்தவர். தமது பெயரைப் போலவே ஆழமும் விரிவும் வளமும் கொண்டவர். முந்நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். வாடாமல்லி, பாலைப்புறா, மண்சுமை, தலைப்பாகை, காகித உறவு போன்றவை இவரின் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்புகளாகும். “வேரில் பழுத்த பலா” புதினம் சாகித்திய அகாதெமி விருதையும், “குற்றம் பார்க்கில்” சிறுகதைத் தொகுதி தமிழக அரசின் பரிசையும் பெற்றுள்ளன.
இரட்டுற மொழிதல்
புலவர் பலரின் பாடல்களின் தொகுப்பான தனிப்பாடல் திரட்டு (ஐந்தாம் பகுதி – கழகப் பதிப்பு) என்னும் நூலிலிருந்து இந்தப்பாடல் எடுத்தாளப்பட்டுள்ளது. இப்பாடலைப் படைத்தவர் தமிழழகனார். சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் சண்முகசுந்தரம். இலக்கணப் புலமையும் இளம் வயதில் செய்யுள் இயற்றும் ஆற்றலும் பெற்ற இவர் பன்னிரண்டு சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார் .
உரைநடையின் அணிநலன்கள்
எழில்முதல்வன் எழுதிய ‘புதிய உரைநடை’ என்னும் நூலிலுள்ள உரைநடையின் அணிநலன்கள் என்னும் கட்டுரையின் சுருக்கம், இங்கு உரையாடல் வடிவமாக மாற்றித் தரப்பட்டுள்ளது. மா.இராமலிங்கம் (எ) எழில்முதல்வன் மாநிலக் கல்லூரியில் பயின்று அங்கேயே பேராசிரியர் பணியைத் தொடர்ந்தவர். குடந்தை அரசு ஆடவர் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிசெய்தவர். மரபுக் கவிதை , புதுக்கவிதை படைப்பதிலும் வல்லவர். இனிக்கும் நினைவுகள், எங்கெங்கு காணினும், யாதுமாகி நின்றாய் முதலிய நூல்களை இயற்றிய பெருமைக்குரியவர். ‘புதிய உரைநடை’ என்னும் நூலுக்காக சாகித்திய அகாதெமி விருதுபெற்றவர்.
காற்றே வா
மகாகவி சுப்பிரமணிய பாரதியார், ‘நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா’, ‘சிந்துக்குத் தந்தை’ என்றெல்லாம் பாராட்டப் பெற்றவர்; எட்டயபுர ஏந்தலாக அறியப்பட்டவர்; கவிஞர்; கட் டுரையாளர்; கேலிச்சித்திரம்-கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்; சிறுகதை ஆசிரியர்; இதழாளர்; சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும், பெண்ணடிமைத்தனத்தையும் தன் பாடல்க ளில் எதிர்த்து எழுதியவர்; குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய காவியங்களையும் கண்ணன் பாட்டையும் பாப்பா பாட்டு, புதிய ஆத்திசூடி என, குழந்தைகளுக்கான நீதிகளையும் பாடல்களில் தந்தவர்; இந்தியா, சுதேசமித்திரன் முதலிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியவர். பாட்டுக்கொரு புலவன் எனப் பாராட்டப்பட்டவர் பாரதியார்; இவருடைய கவிதைத் தொகுப்பிலுள்ள காற்று என்னும் தலைப்பிலான வசனகவிதையின் ஒரு பகுதியே பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது.
முல்லைப்பாட்டு
முல்லைப்பாட்டு, பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று. இது 103 அடிகளைக் கொண்டது. இப்பாடலின் 1- 17அடிகள் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளன. முல்லைப்பாட்டு ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது; முல்லை நிலத்தைப் பற்றிப் பாடப்பட்டது; பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் இது. இதைப் படைத்தவர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார்.
காசிக்காண்டம்
காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற நூல் காசிக்காண்டம். இந்நூல் துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள் ஆகியவற்றைப் பாடுவதாக அமைந்துள்ளது. ‘இல்லொழுக்கங் கூறிய’ பகுதியிலுள்ள பதினேழாவது பாடல் பாடப்பகுதியாக இடம் பெற்றுள்ளது. முத்துக் குளிக்கும் கொற்கையின் அரசர் அதிவீரராம பாண்டியர். தமிழ்ப் புலவராகவும் திகழ்ந்த இவர் இயற்றிய நூலே காசிக்காண்டம். இவரின் மற்றொரு நூலான வெற்றி வேற்கை என்றழைக்கப்படும் நறுந்தொகை சிறந்த அறக்கருத்துகளை எடுத்துரைக்கிறது. சீவலமாறன் என்ற பட்டப்பெயரும் இவருக்கு உண்டு. நைடதம், லிங்கபுராணம், வாயு சம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்ம புராணம் ஆகியனவும் இவர் இயற்றிய நூல்கள்.
மலைபடுகடாம்
ஆற்றுப்படுத்தும் கூத்தன், வள்ளலை நாடி எதிர்வரும் கூத்தனை அழைத்து, யாம் இவ்விடத்தே சென்று இன்னவெல்லாம் பெற்று வருகின்றோம், நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம்பெற்று வாழ்வாயாக என்று கூறுதல் ஆற்றுப்படை.
பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று ‘மலைபடுகடாம்‘. 583 அடிகளைக் கொண்ட இது கூத்தராற்றுப்படை எனவும் அழைக்கப்படுகிறது; மலையை யானையாக உருவகம் செய்து மலையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்குவதால் இதற்கு மலைபடுகடாம் எனக் கற்பனை நயம் வாய்ந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. நன்னன் என்னும் குறுநில மன்னனைப் பாட்டுடைத் தலைவனாக் கொண்டு இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பாடியது மலைபடுகடாம்.
கோபல்லபுரத்து மக்கள்
கோபல்ல கிராமம் என்னும் புதினத்தைத் தொடர்ந்து எழுதப்பட்ட கதையே கோபல்லபுரத்து மக்கள். ஆசிரியர் தன் சொந்த ஊரான இடைசெவல் மக்களின் வாழ்வியல் காட்சிகளுடன் கற்பனையையும் புகுத்தி இந்நூலினைப் படைத்துள்ளார். இந்திய விடுதலைப் போராட்டத்தினைப் பின்னணியாகக் கொண்டது இந்நூல். இது 1991ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றது. கோபல்லபுரத்து மக்கள் கதையின் ஆசிரியர் கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன். இருபதுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ள இவரின் கதைகள் ஒரு கதைசொல்லியின் கதைப்போக்கில் அமைந்திருக்கும். இவரின் கதைகள் அனைத்தும் கி.ராஜநாராயணன் கதைகள் என்னும் தலைப்பில் தொகுப்பாக வெளிவந்துள்ளன; இவர் கரிசல் வட்டாரச் சொல்லகராதி ஒன்றை உருவாக்கியுள்ளார். இவர் தொடங்கிய வட்டார மரபு வாய்மொழிப் புனைகதைகள் ‘கரிசல் இலக்கியம்’ என்று அழைக்கப்படுகின்றன. எழுத்துலகில் இவர் கி.ரா. என்று குறிப்பிடப்படுகிறார்.
பெருமாள் திருமொழி
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் 691ஆவது பாசுரம் பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது. இதில் 105 பாடல்கள் உள்ளன. இதனைப் பாடியவர் குலசேகராழ்வார். இவரின் காலம் எட்டாம் நூற்றாண்டு. வித்துவக்கோடு என்னும் ஊர், கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது. குலசேகர ஆழ்வார் அங்குள்ள இறைவனான உய்ய வந்த பெருமாளை அன்னையாக உருவகித்துப் பாடுகிறார்.
பரிபாடல்
பரிபாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். பாடப்பகுதியிலுள்ள பாடலை எழுதியவர் கீரந்தையார். இந்நூல் “ஓங்கு பரிபாடல்” எனும் புகழுடையது. சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல். உரையாசிரியர்கள் இதில் எழுபது பாடல்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர். இன்று 24 பாடல்களே கிடைத்துள்ளன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, சமூக உறவு அறிவாற்றல், இயற்கையைப் புரிந்துகொள்ளும் திறன் போன்றவற்றைச் சங்க இலக்கியம் மூலம் நாம் அறிந்துகொள்கிறோம்.
நீதிவெண்பா
சதாவதானம் என்ற கலையில் சிறந்து விளங்கியவர் இவர் வாழ்ந்த காலம் (1874 – 1950) ஆகும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இடலாக்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர் பதினைந்து வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர் சீறாப்புறாணத்திற்கு உரை எழுதியவர். செய்குதம்பியார் 1907-ம் ஆண்டு மார்ச் 10-ம் நாள் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர்கள் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி “சதாவதானி” என்று பாராட்டப் பெற்றார். அன்று முதல் “சதாவதானி செய்குதம்பிப் பாவலர்” என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.
‘சதம்’ என்றால் நூறு என்று பொருள். ஒருவரது புலமையையும் நினைவாற்றலையும் நுண்அறிவையும் சோதிப்பதற்காக ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தலே சதாவதானம்.
திருவிளையாடற் புராணம்
புதிய நம்பிக்கை
புத்தகம் ஒன்று ஒரு சிறு பெண்ணுடன் வாழ்க்கை நெடுகப் பேசிக்கொண்டே வருகிறது. ’’உனக்குப் படிக்கத் தெரியாது’’ என்ற கூற்றால் உள்ளத்தில் பெற்ற அடி, பிற்காலத்தில் சமையல் செய்தும் தோட்டமிட்டும் பொது இடங்களில் பாட்டுப்பாடியும் சிறுகச்சிறுகப் பணம் சேர்த்துக் குப்பை கொட்டும் இடத்தில் ஒரு பள்ளியை உருவாக்கிடக் காரணமானது. உலகெங் கும் மூலை முடுக்குகளில் உள்ள ஒடுக்கப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களின் ஒரு குரலாக இருந்தவர் அமெரிக்க கறுப்பினப் பெண்மணி மேரி மெக்லியோட் பெத்யூன். இம் மாபெரும் கல்வியாளரின் வாழ்க்கையை ’’உனக்குப் படிக்கத் தெரியாது’’ என்ற தலைப்பில் நூலாகப் படைத்துள்ளார் கமலாலயன். இவரின் இயற்பெயர் வே.குணசேகரன். வயதுவந்தோர் கல்வித் திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
பூத்தொடுத்தல்
கவிஞர் உமா மேகஸ்வரி மதுரை மாவட்டத்தில் பிறந்தவர். தற்பாேது தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வாழ்ந்து வருகிறார். நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பாெழுது, கற்பாவை உள்ளிட்ட கவிதைத் தாெகுதிகளைப் படைத்துள்ளார் கவிதை, சிறுகதை, புதினம் என்று பல தளங்களில் படைத்து வருகிறார்.
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
குமரகுருபரர் இயற்றிய முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழில் செங்கீரைப் பருவத்தின் எட்டாம் பாடல் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது. 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று பிள்ளைத்தமிழ். இதில் இறைவனையோ, தலைவரையோ, அரசனையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு, அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடுவர். பாட்டுடைத் தலைவரின் செயற்கரிய செயல்களை எடுத்தியம்புவது பிள்ளைத்தமிழ். பத்துப் பருவங்கள் அமைத்து, பருவத்திற்குப் பத்துப்பாடல் என நூறு பாடல்களால் இது பாடப்பெறும். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகையாகப் பாடப்பெறும். குமரகுருபரரின் காலம் 17ஆம் நூற்றாண்டு. இவர் தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர்; கந்தர் கலிவெண்பா, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக்கலம்பகம், சகலகலாவல்லிமாலை, நீதிநெறி விளக்கம், திருவாரூர் மும்மணிக்கோவை முதலான நூல்களை இயற்றியுள்ளார்.
கம்பராமாயணம்
கம்பர், இராமனது வரலாற்றைத் தமிழில் வழங்கி “இராமாவதாரம்” எனப் பெயரிட்டார். இது கம்பராமாயணம் என வழங்கப்பெறுகிறது. இது ஆறு காண்டங்களை உடையது. கம்பராமாயணப் பாடல்கள் சந்தநயம் மிக்கவை. அவற்றுள் அழகுணர்ச்சி மிக்க சில கவிதைகள் பாடப்பகுதியாக அமைந்துள்ளன. ”கல்வியில் பெரியவர் கம்பர்”, “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” போன்ற முதுமொழிகளுக்கு உரியவர் கம்பர்; சோழ நாட்டுத் திருவழுந்தூரைச் சார்ந்தவர்; திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்றவர்; ”விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்” என்று புகழ்பெற்றவர்; சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது, சிலைஎழுபது முதலிய நூல்களை இயற்றியவர்.
பாய்ச்சல்
‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ என்ற சிறுகதை தொகுப்பில் பாய்ச்சல் என்னும் கதை இடம்பெற்றுள்ளது. இதன் ஆசிரியர் சா.கந்தசாமி. இவர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் எழுதிய சாயாவனம் புதினத்தால் எழுத்துலகில் புகழ் பெற்றார். விசாரணைக் கமிஷன் என்னும் புதினத்திற்கு சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றுள்ளார். சுடுமண் சிலைகள் என்ற குறும்படத்திற்கு அனைத்துலக விருதையும் பெற்றுள்ளார். நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பதினொன்றுக்கும் மேற்பட்ட புதினங்களையும் எழுதியுள்ளார். தொலைந்து போனவர்கள், சூர்யவம்சம், சாந்தகுமாரி முதலியவை இவர் எழுதிய புதினங்களுள் சில.
சிற்றகல் ஒளி
ம.பொ.சிவஞானத்தின் ‘எனது போராட்டம்’ என்னும் தன்வரலாற் று நூலில் இருந்து இக்கட்டுரை தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. சிலம்புச்செல்வர் என்று போற்றப்படும் ம.பொ.சிவஞானம் (1906 – 1995) விடுதலைப் போராட்ட வீரர்; 1952 முதல் 1954 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் 1972 முதல் 1978 வரை சட்டமன்ற மேலவைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்; தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர். ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ என்னும் இவருடைய நூலுக்காக 1966ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றார். தமிழக அரசு திருத்தணியிலும் சென்னை தியாகராய நகரிலும் இவருக்குச் சிலை அமைத்துள்ளது.
ஏர் புதிதா?
‘ஏர் புதிதா?’ எனும் கவிதை கு.ப.ரா. படைப்புகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது. 1902இல் கும்பகோணத்தில் பிறந்த கு.ப.ராஜகோபாலன் மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், மறுமலர்ச்சி எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர். தமிழ்நாடு, பாரதமணி, பாரததேவி, கிராம ஊழியன் ஆகிய இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.இவரின் மறைவுக்குப் பின்னர் இவரது படைப்புகள் அகலிகை, ஆத்ம சிந்தனை ஆகியன நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
மெய்க்கீர்த்தி
கோப்பரகேசரி, திருபுவனச் சக்கரவர்த்தி என்று பட்டங்கள் கொண்ட இரண்டாம் இராசராச சோழனது மெய்க்கீர்த்தியின் ஒரு பகுதி பாடமாக உள்ளது. இம்மெய்க்கீர்த்திப் பகுதியின் இலக்கிய நயம் நாட்டின் வளத்தையும் ஆட்சிச் சிறப்பையும் ஒருசேர உணர்த்துவதாக உள்ளது. இவருடைய மெய்க்கீர்த்திகள் இரண்டு. அதில் ஒன்று 91 அடிகளைக் கொண்டது. அதில் 16-33 வரையான அடிகள் பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளன . இப்பாடப் பகுதிக்கான மூலம் தமிழ் இணையக் கல்விக் கழகத்திலிருந்து பெறப்பட்டது. முதலாம் இராசராசன் காலந்தொட்டு மெய்க்கீர்த்திகள் கல்லில் வடிக்கப்பட்டுள்ளன . மெய்க்கீர்த்திகள் கல்வெட்டின் முதல்பகுதியில் மன்னரைப் பற்றிப் புகழ்ந்து இலக்கிய நயம்பட எழுதப்படும் வரிகள். இவை புலவர்களால் எழுதப்பட்டுக் கல்தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை.
சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரம், புகார்க்காண்டத்தின் இந்திரவிழா ஊரெடுத்த காதையிலிருந்து இப்பாடப்பகுதி எடுத்தாளப்பட்டுள்ளது. ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம். இது முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றும் சிறப்பிக்கப்படுகிறது; மூவேந்தர் பற்றிய செய்திகளைக் கூறுகிறது. இது புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் உடையது; கோவலன், கண்ணகி, மாதவி வாழ்க்கையைப் பாடுவது. மணிமேகலைக் காப்பியத்துடன் கதைத் தொடர்பு கொண்டிருப்பதால் இவையிரண்டும் இரட்டைக் காப்பியங்கள் எனவும் அழைக்கப் பெறுகின்றன. சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள், சேர மரபைச் சேர்ந்தவர். மணிமேகலையின் ஆசிரியர் சீத்தலைச்சாத்தனார். கோவலன் கண்ணகி கதையைக் கூறி, ’அடிகள் நீரே அருளுக’ என்றதால் இளங்கோவடிகளும் ’நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச்செய்யுள்’ என இக்காப்பியம் படைத்தார் என்பர்.
ஞானம்
நம் பாடப்பகுதியில் கொடுக்கப்பட்ட கவிதை தி.சொ.வேணுகோபாலனின் ‘கோடை வயல்’ என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இவர் திருவையாற்றில் பிறந்தவர்; மணிப்பால் பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் பேராசிரியராகப் பணியாற்றியவர்; ‘எழுத்து’ காலப் புதுக்கவிஞர்களில் ஒருவர். இவரின் மற்றொரு கவிதைத் தொகுப்பு மீட்சி விண்ணப்பம்.
ஜெயகாந்தம் (நினைவு இதழ்)
ஜெயகாந்தன் பேசி, ‘எதற்காக எழுதுகிறேன்?’ என்ற தலைப்பில் கட்டுரையாகத் தொகுக்கப்பட்ட பகுதியும் ‘யுகசந்தி’ என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘தர்க்கத்திற்கு அப்பால்’ என்னும் சிறுகதையும் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ளன. தான் வாழ்ந்த காலத்தில் சிக்கல்கள் பலவற்றை ஆராய, எடுத்துச்சொல்ல, தன் பார்வைக்கு உட்பட்ட தீர்ப்பைச் சொல்ல அவர் மேற்கொண்ட நடவடிக்கையே படைப்பு. அவருடைய படைப்புகள் உணர்ச்சி சார்ந்த எதிர்வினைகளாக இருக்கின்றன. இதுவே அவருக்குச் ‘சிறுகதை மன்னன்’ என்ற பட்டத்தைத் தேடித்தந்தது. இவர் குறும்புதினங்களையும் புதினங்களையும் கட்டுரைகளையும் கவிதைகளையும் படைத்துள்ளார்; தன் கதைகளைத் திரைப்படமாக இயக்கியிருக்கிறார்; தலைசிறந்த உரத்த சிந்தனைப் பேச்சாளராகவும் திகழ்ந்தார்; சாகித்திய அகாதெமி விருதையும் ஞானபீட விருதையும் பெற்ற இவருடைய கதைகள் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
சித்தாளு
முகம்மதுரஃபி என்னும் இயற்பெயரைக் கொண்ட நாகூர்ரூமி தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர்; இவர் எண்பதுகளில் கணையாழி இதழில் எழுதத் தொடங்கியவர். கவிதை, குறுநாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு எனப் பலதளங்களில் இவர் தொடர்ந்து இயங்கி வருபவர். மீட்சி, சுபமங்களா, புதிய பார்வை, குங்குமம், கொல்லிப்பாவை, இலக்கிய வெளிவட்டம், குமுதம் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. இதுவரை நதியின் கால்கள், ஏழாவது சுவை, சொல்லாத சொல் ஆகிய மூன்று கவிதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. மொழிபெயர்ப்புக் கவிதைகள், சிறுகதைத்தொகுதிகள் ஆகியவற்றுடன் ‘கப்பலுக்குப் போன மச்சான்’ என்னும் நாவலையும் படைத்துள்ளார்.
ஒருவன் இருக்கிறான்
ஒருவன் இருக்கிறான் கதை “கு.அழகிரிசாமி சிறுகதைகள்” என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. கு.அழகிரிசாமி அரசுப்பணியை உதறிவிட்டு முழுதாக எழுத்துப்பணியை மேற்கொண்டவர். மென்மையான நகைச்சுவையும் சோக இழையும் ததும்பக் கதைகளைப் படைப்பதில் பெயர் பெற்றவர். கரிசல் எழுத்தாளர்கள் வரிசையில் மூத்தவர் எனலாம். கி.ரா.வுக்கு இவர் எழுதிய கடிதங்கள் இலக்கியத்தரம் வாய்ந்தவை. படைப்பின் உயிரை முமுமையாக உணர்ந்திருந்த கு.அழகிரிசாமி பல இதழ்களில் பணியாற்றியுள்ளர். மலேசியாவில் இருந்தபோதே அங்குள்ள படைப்பாளர்களுக்குப் படைப்பு தொடர்பான பயிற்சி அளித்தவர். இவர் பதிப்பு பணி, நாடகம் என பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர். தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு திறனாய்வு நூல்களையும் படைத்தவர்.