பாவலரேறு பெருஞ்சித்திரனார்
June 12, 2024 2025-04-24 10:32பாவலரேறு பெருஞ்சித்திரனார்
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
அழகார்ந்த செந்தமிழே!
அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே !
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!
கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!
தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!
மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! *
செப்பரிய நின்பெருமை
செந்தமிழே ! உள்ளுயிரே செப்பரிய நின்பெருமை
எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரைவிரிக்கும்?
முந்தைத் தனிப்புகழும் முகிழ்த்த இலக்கியமும்
விந்தை நெடுநிலை ப்பும் வேறார் புகழுரையும்
உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல்மூளச்
செந்தா மரைத்தேனைக் குடித்துச் சிறகார்ந்த
அந்தும்பி பாடும் அதுபோல யாம்பாடி
முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே!
பாடலின் பொருள்
அன்னை மொழியே! அழகு நிறைந்த செழுந்தமிழே! பழமைக்கும் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியே! கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் நிலைத்து அரசாண்ட மண்ணுலகப் பேரரசே! பாண்டிய மன்னனின் மகளே! திருக்குறளின் பெரும் பெருமைக்குரியவளே! பத்துப்பாட்டே! எட்டுத்தொகையே! பதினெண் கீழ்க்கணக்கே! நிலைத்த சிலப்பதிகாரமே! அழகான மணிமேகலையே! பொங்கியெழும் நினைவுகளால் தலைபணிந்து வாழ்த்துகின்றோம்.
செழுமை மிக்க தமிழே! எமக்குயிரே! சொல்லுதற்கரிய நின் பெருமைதனை என்னுடைய தமிழ் நாக்கு எவ்வாறுதான் விரித்துரைக்கும்? பழம்பெருமையும் தனக்கெனத் தனிச் சிறப்பும் இலக்கிய வளமும் கொண்ட தமிழே! வியக்கத்தக்க உன்னுடைய நீண்ட நிலைத்த தன்மையும் வேற்று மொழியார் உன்னைப் பற்றி உரைத்த புகழுரையும் எமக்குள் பற்றுணர்வை எழுப்புகின்றன. எம் தனித்தமிழே! வண்டானது செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடுவது போன்று நாங்கள் உன்னைச் சுவைத்து உள்ளத்தில் கனல் மூள, உன் பெருமையை எங்கும் முழங்குகின்றோம்.
நூல்வெளி:
பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் மாணிக்கம். இவர் பாவலரேறு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். உலகியல் நூறு, எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, பள்ளிப் பறவைகள் கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் முதலான நூல்களை இயற்றியுள்ளார். தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தினார். தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் இவர். இவரது நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. இவரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை, தமிழுக்குக் கருவூலமாய் அமைந்துள்ளது.
அறம் பெருகும் தமிழ் படித்தால்;
அகத்தில் ஒளி பெருகும்!
திறம் பெருகும்; உரம் பெருகும்;
தீமைக் கெதிர் நிற்கும்
மறம் பெருகும்; ஆண்மை வரும்!
மருள் விலகிப் போகும்!
புறம் பெயரும் பொய்மை யெலாம்!
புதுமை பெறும் வாழ்வே! -பாவலரேறு பெருஞ்சித்திரனார்