Blog

பெரியாரைத்‌ துணைக்கோடல்‌

Class 44 இலக்கியம்‌ - தமிழ்‌ அறிஞர்களும்‌, தமிழ்த்தொண்டும்

பெரியாரைத்‌ துணைக்கோடல்‌

1.அறனறிந்து மூத்த அறிவுடையார்‌ கேண்மை

திறனறிந்து தேர்ந்து கொளல்‌.   *****

விளக்கம்‌: அறநெறியை அறிந்து அறிவில்‌ தெளிந்த முதிர்ச்சியுடையோர்‌ நட்பினை ஆராய்ந்தறிந்து ஏற்றுக்‌ கொள்வீராக.

சொற்பொருள்‌ : மூத்த – முதிர்ந்த;  கேண்மை – நட்பு; தேர்ந்து – ஆராய்ந்து.

இலக்கணக்குறிப்பு : அறனறிந்து (அறன் + அறிந்து); திறனறிந்து (திறன் + அறிந்து)

இரண்டாம்‌ வேற்றுமைத்தொகைகள்‌; தேர்ந்து கொளல்‌ – வினையெச்சம்‌; கொளல்‌ – அல்‌ ஈற்று வியங்கோள்‌ வினைமுற்று.

 

2.உற்றுநோய்‌ நீக்கி உறாஅமை முற்காக்கும்‌

பெற்றியார்ப்‌ பேணிக்‌ கொளல்‌.

விளக்கம்‌:

தமக்கு வந்துள்ள துன்பத்தைப்‌ போக்கி இனி, மேலும்‌ துன்பம்‌ வராதவாறு முன்னதாகவே காக்கும்‌ தன்மையுடையாரைப்‌ போற்றி நட்பாக்கிக்‌

கொள்ளுதல்‌ வேண்டும்‌.

சொற்பொருள்‌ : நோய்‌ – துன்பம்‌; உறாஅமை – துன்பம்‌ வராமல்‌; பெற்றியார்‌ – பெருமையுடையார்‌.

இலக்கணக்குறிப்பு : உற்றநோய்‌ – பெயரெச்சம்‌; உறாஅமை – செய்யுளிசை அளபெடை; பெற்றியார்‌ – வினையாலணையும்‌ பெயர்‌.

(இவ்விரு பாடலும்‌ பெரியாரது இலக்கணத்தையும்‌ அவரைத்‌ துணையாகக்‌ கொள்ளுதலின்‌ தேவையையும்‌ கூறுகின்றன. )

 

3.அரியவற்றுள்‌ எல்லாம்‌ அரிதே பெரியாரைப்‌                                                                   (10th Tamil)

பேணித்‌ தமராக்‌ கொளல்‌.    *****

விளக்கம்‌:

அறிவறிந்த பெரியோரைப்‌ போற்றி உறவாகக்‌ கொள்ளுதலே, ஒருவர்‌ பெறவேண்டிய அரிய பேறுகளுள்‌ எல்லாம்‌ அரிய பேறாகும்‌.

சொற்பொருள்‌ : பேணி – போற்றி; தமர்‌ – உறவினர்‌.

இலக்கணக்குறிப்பு : கொளல்‌ – தொழிற்பெயர்‌.

 

4.தம்மிற்‌ பெரியார்‌ தமரா ஒழுகுதல்‌

வன்மையுள்‌ எல்லாம்‌ தலை.

விளக்கம்‌:

தம்மைக்‌ காட்டிலும்‌ அறிவில்‌ சிறந்த பெரியோரை உறவினராய்‌ ஏற்று நடத்தலே வலிமைகளுளெல்லாம்‌ சிறந்ததாம்‌.

சொற்பொருள்‌ : வன்மை – வலிமை; ஒழுகுதல்‌ – ஏற்று நடத்தல்‌; தலை – சிறப்பு.

இலக்கணக்குறிப்பு : வன்மை – பண்புப்பெயர்‌; ஒழுகுதல்‌ – தொழிற்பெயர்‌.

 

5.சூழ்வார்கண்‌ ணாக ஒழுகலான்‌ மன்னவன்‌

சூழ்வாரைச்‌ சூழந்து கொளல்‌.

விளக்கம்‌:

தக்க வழிகளை ஆராய்ந்து கூறும்‌ அறிஞர்களையே உலகம்‌ கண்ணாகக்‌ கொண்டு நடத்தலால்‌, மன்னனும்‌ அத்தகையோரை ஆராய்ந்து நட்பாக்கிக்‌

கொள்ளுதல்‌ வேண்டும்‌.

சொற்பொருள்‌ : சூழ்வார்‌ – அறிவுடையார்‌ ; சூழ்ந்துகொளல்‌ – நட்பாக்கிக்‌ கொள்ளுதல்‌.

இலக்கணக்குறிப்பு : சூழ்வார்‌ – வினையாலணையும்‌ பெயர்‌.

( இம்மூன்று பாடலும்‌ பெரியாரைத்‌ துணைகொள்வதன்‌ சிறப்பைக்‌ கூறுகின்றன.)

 

6.தக்கார்‌ இனத்தனாய்த்‌ தானொழுக வல்லானைச்‌

செற்றார்‌ செயக்கிடந்த தில்‌.

விளக்கம்‌:

அறிவிற்‌ சிறந்த பெரியோரைச்‌ சார்ந்து நடக்க வல்லாருக்குப்‌ பகைவர்‌ செய்யக்கூடிய தீங்கு யாதொன்றும்‌ இல்லை.

சொற்பொருள்‌ : தக்கார்‌ – தகுதியுடைய பெரியோர்‌; செற்றார்‌ – பகைவர்‌; இல்‌ – இல்லை.

இலக்கணக்குறிப்பு : தக்கார்‌, செற்றார்‌ – வினையாலணையும்‌ பெயர்கள்‌.

 

7.இடிக்குந்‌ துணையாரை ஆள்வாரை யாரே

கெடுக்குந்‌ தகைமை யவர்‌.

விளக்கம்‌:

தீயனவற்றைக்‌ கண்டால்‌ இடித்துத்‌ திருத்தும்‌ பெரியோரைத்‌ துணையாகக்‌ கொண்டு வாழ்பவரைக்‌ கெடுக்கும்‌ வலிமையுடையவர்‌ எவருமிலர்‌.

சொற்பொருள்‌ : இடிக்கும்‌ – கடிந்துரைக்கும்‌; தகைமை – தன்மை.

இலக்கணக்குறிப்பு : துணையார்‌, ஆள்வார்‌ – வினையாலணையும்‌ பெயர்கள்‌.

(இவ்விரு பாடலும்‌ பெரியாரைத்‌ துணைக்கோடலின்‌ பயனைக்‌ கூறுகின்றன.)

 

8.இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்‌                                                                   (10th Tamil)

கெடுப்பார்‌ இலானுங்‌ கெடும்‌.  *****

விளக்கம்‌:

குற்றம்‌ கண்ட இடத்து இடித்துத்‌ திருத்தும்‌ பெரியாரின்‌ பாதுகாப்பைத்‌ தேடிக்‌ கொள்ளாத அரசன்‌, தன்னைக்‌ கெடுக்கும்‌ பகைவர்கள்‌ இல்லை

எனினும்‌, தானே கெட்டழிவான்‌.

சொற்பொருள்‌ : இடிப்பார்‌ – கடிந்து அறிவுரை கூறும்‌ பெரியார்‌; ஏமரா – பாதுகாவல்‌ இல்லாத.

 

9.முதலிலார்க்‌(கு) ஊதிய மில்லை மதலையாம்‌

சார்பிலார்க்‌ கில்லை நிலை.  *****

விளக்கம்‌:

முதலீடு இல்லாத வணிகர்க்கு அதனால்‌ வரும்‌ ஊதியம்‌ ஒன்றுமில்லை. அதுபோல்‌, தம்மைத்‌ தாங்கிக்‌ காப்பாற்றும்‌ பெரியோர்‌ துணையில்லாதவர்க்கு

நிலைத்த தன்மை இல்லை.

சொற்பொருள்‌ : மதலை – துணை.

இலக்கணக்குறிப்பு : இல்லை – குறிப்பு வினைமுற்று.

அணி : எடுத்துக்காட்டு உவமை அணி.

 

10.பல்லார்‌ பகைகொளலிற்‌ பத்தடுத்த தீமைத்தே,                                         (10th Tamil)

நல்லார்‌ தொடர்கை விடல்‌.    *****

விளக்கம்‌:

நல்லவர்‌ ஒருவரின்‌ நட்பைக்‌ கைவிடுவது, பலரைப்‌ பகைத்துக்‌ கொள்வதனை விடப்‌ பன்மடங்கு தீமை உடையதாகும்‌.

சொற்பொருள்‌ : பத்தடுத்த – பத்து மடங்கு.

இலக்கணக்குறிப்பு : பகைகொளல்‌ ( பகையைக்‌ கொளல்‌ ) – இரண்டாம்‌ வேற்றுமைத்தொகை.

(இம்மூன்று பாடலும்‌ பெரியாரைத்‌ துணைகொள்ளாததனால்‌ ஏற்படும்‌ குற்றங்களைக்‌ கூறுகின்றன. )

 

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories