Blog

போக்குவரத்து – தகவல்‌ தொடர்பு; தமிழ்நாடு மற்றும்‌ இந்தியாவில்‌ மக்கள்‌ தொகை அடர்த்தி மற்றும்‌ பரவல்‌;

Class 55 புவியியல்

போக்குவரத்து – தகவல்‌ தொடர்பு; தமிழ்நாடு மற்றும்‌ இந்தியாவில்‌ மக்கள்‌ தொகை அடர்த்தி மற்றும்‌ பரவல்‌;

மக்கள் தொகை

ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒரு நாட்டில் வசிக்கின்ற மொத்தமக்களின் எண்ணிக்கையே ஒரு நாட்டின் மக்கள் தொகை என்று அழைக்கப்படுகிறது. சீனாவிற்கு அடுத்தப்படியாக உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. உலகின் மொத்த நிலப்பரப்பில் இந்தியா 2.4 சதவிகிதத்தை மட்டுமே கொண்டுள்ளது. ஆனால் உலக மக்கள் தொகையில் சுமார் 17.5 சதவிகிதத்தை கொண்டுள்ளது. இந்திய மக்கள் தொகை விகிதம் அதன் பரப்பு விகிதத்தை விட மிக அதிகமாக உள்ளதை இது காட்டுகிறது. உலகில் உள்ள ஆறு நபர்களில் ஒருவர் இந்தியராக உள்ளார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஒரு நாட்டின் வரையறுக்கப்பட்ட பகுதி அல்லது முழுபகுதியில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் உள்ள மக்களின் பொருளாதார மற்றும் சமூக புள்ளி விவரங்களை சேகரித்து, தொகுத்து மற்றும் பகுப்பாய்வு செய்து மக்களியல் பற்றிய விவரங்களை அளித்தல் ஆகும். இந்த கணக்கெடுப்பு பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள், நிர்வாகம், திட்டமிடல், கொள்கைகள் உருவாக்குதல், அரசாங்கத்தின் பல்வேறு திட்ட மேலாண்மை மற்றும் மதிப்பீடு செய்தலுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1872ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. முழுமையான முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1881ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. நாட்டின் 15 வது மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011ஆம்ஆண்டு நடைபெற்றது.

மக்கள் தொகை பரவல்

‘மக்கள் தொகை பரவல்’ என்பது புவியின் மேற்பரப்பில் மக்கள் எவ்விடைவெளியில் உள்ளார்கள் என்பதைக் குறிக்கிறது. இந்திய மக்கள் தொகை பரவல் ஆனது வளங்களின் பரவலுக்கேற்ப சீரற்று காணப்படுகிறது. தொழில் மையங்கள் மற்றும் செழிப்பான வேளாண் பிரதேசங்கள் மக்கள் தொகை செறிவுமிக்கதாக காணப்படுகிறது. அதே சமயம் மலைப்பிரதேசங்கள் வறண்ட நிலப்பகுதிகள், வனப்பகுதிகள், தொலைதூரப் பகுதிகள் போன்ற பகுதிகளில் மக்கள் தொகைக் குறைவாகவும் மற்றும் சில பகுதிகள் மக்களற்றும் காணப்படுகிறது.

199.5 மில்லியன் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலம் இந்தியாவில் அதிக மக்கள்தொகை மாநிலமாகும். இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (112.3 மில்லியன்), பீகார் (103.8மில்லியன்), மேற்குவங்காளம் (91.3மில்லியன்) மற்றும் ஒருங்கிணைந்த ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலங்கானா (84.6 மில்லியன்) ஆகிய ஐந்து மாநிலங்கள் நாட்டின் மக்கள் தொகையில் பாதியைக் கொண்டுள்ளன. இந்தியாவில் மிகக்குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் சிக்கிம் (0.61 மில்லியன்) ஆகும். புதுடெல்லி (16.75 மில்லியன்) மக்கள்தொகையுடன் யூனியன் பிரதேசங்களிடையே முதலிடம் வகிக்கிறது.

மக்கள் தொகை அடர்த்தி

மக்கள் தொகை அடர்த்தி இது சராசரியாக ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வசிக்கும்மக்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடுகிறது.

2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் சராசரி மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 382 ஆகும்.

உலகின் மக்களடர்த்தி மிகுந்த பத்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

இந்தியாவில் மிக அதிக மக்களடர்த்தியைக் கொண்ட மாநிலமாக பீகாரும் மிக குறைந்த மக்கள் அடர்த்தியைக் கொண்ட மாநிலமாக அருணாச்சலப் பிரதேசமும் உள்ளது. யூனியன் பிரதேசங்களில் புதுடெல்லி 1,297/சதுர கிலோ மீட்டர் அதிக மக்களடர்த்தியைக் கொண்டதாகவும், அந்தமான் நிக்கோபார் தீவுகள் குறைந்த மக்களடர்த்தியைக் கொண்டதாகவும் உள்ளன.

போக்குவரத்து

போக்குவரத்து என்பது பயணிகள் மற்றும் சரக்குகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதாகும். போக்குவரத்து அமைப்பு ஒரு நாட்டின் உயிர் நாடியாக கருதப்படுகிறது. பண்டைய காலத்தில் மனிதன் கால்நடையாகவோ அல்லது விலங்குகளையோ போக்குவரத்திற்கு பயன்படுத்தி வந்தான். சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் போக்குவரத்து எளிமையாக்கப்பட்டது மற்றும் படிப்படியாக பல்வேறுபட்ட போக்குவரத்து முறைகள் உருவாயின.

சாலை வழி

சாலை அமைத்தல் மற்றும் பராமரிப்பு நோக்கத்திற்காக இந்திய சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் (NH), மாநில நெடுஞ்சாலைகள் (SH) மாவட்ட சாலைகள், கிராமப்புறச்சாலைகள், எல்லையோர சாலைகள் மற்றும் பன்னாட்டு நெடுஞ்சாலைகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய சாலைகளின் வகைகள்

தேசிய நெடுஞ்சாலைகள்

தேசிய நெடுஞ்சாலைகள் வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்காக நாட்டின் எல்லைகளையும், மாநிலங்களின் தலைநகரங்கள், முக்கியத் துறைமுகங்கள், இரயில் நிலையங்கள், முக்கிய சுற்றுலா மையங்கள், தொழில் மையங்கள் ஆகியவற்றை இணைக்கின்றன. இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் இந்திய அரசின் தரைவழி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் பொறுப்பாகும்.

இந்தியாவில் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை NH 44 ஆகும். இது ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி வரை 4,076 கி.மீ நீளத்தைக் கொண்டதாகும். குறைவான நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை NH 47 A ஆகும். இது எர்ணாகுளத்திலிருந்து 6 கி.மீ தொலைவைக் கொண்ட கொச்சின் துறைமுகத்தை (வில்லிங்டன் தீவு) இணைக்கிறது.

மாநில நெடுஞ்சாலைகள்

மாநில நெடுஞ்சாலைகள் பொதுவாக மாநிலத்திலுள்ள முக்கிய மாநகரங்கள், நகரங்கள் மற்றும் மாவட்ட தலைநகரங்களை, மாநில தலைநகரத்துடனும் தேசிய நெடுஞ்சாலைகளுடனும் அண்டை மாநில நெடுஞ்சாலைகளுடனும் இணைக்கின்றன. இந்தச் சாலைகள் மாநில அரசால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

மாவட்டச் சாலைகள்

மாவட்டச் சாலைகளானது மற்றும் மாநில தேசிய நெடுஞ்சாலைகள் நெடுஞ்சாலைகளுடன் மாவட்ட மற்றும் வட்டார தலைமை இடங்களை இணைக்கிறது. மாவட்ட சாலைகள் மாநிலத்தின் பொதுப் பணித்துறையால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

ஊரகப் பகுதி சாலைகள் (கிராமச் சாலைகள்)

கிராமப்புறங்களை இணைப்பதில் முக்கிய பாங்காற்றுகின்றது. இது பல்வேறு கிராமங்களை அதன் அருகில் உள்ள நகரங்களுடன் இணைக்கிறது. இவைகளை கிராம பஞ்சாயத்துகளால் பராமரிக்கப்படுகின்றன.

எல்லைப்புறச் சாலைகள்

எல்லைப்புறச் சாலைகள் நிறுவனத்தால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவ்வமைப்பு 1960 நிறுவப்பட்டது. இச்சாலைகள் வடக்கு மற்றும் வடகிழக்கு எல்லைப் பகுதிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். எல்லைப்புறச் சாலை நிறுவனம் உலகிலேயே உயரமான எல்லைப்புறச் சாலையை லடாக்கில் உள்ள லேவில் இருந்து சண்டிகர் வரை அமைக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 4,270 மீட்டர் உயரத்தில் உள்ளது.

தங்க நாற்கரச் சாலைகள்

5,846 கி.மீ நீளத்தையும் 4 முதல் 6 வழிகளைக் கொண்டதாகவும் உள்ளது. இது வடக்கு தெற்காக இந்தியாவின் நான்கு பெரு நகரங்களான புதுடெல்லி – கொல்கத்தா சென்னை – மும்பை புதுடெல்லி ஆகியவைகளை இணைக்கிறது. இத்திட்டம் 1999ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

வட – தென் மற்றும் கிழக்கு – மேற்கு பகுதிகளை இணைக்கும் சாலைகள்

வட தென் பகுதிகளை இணைக்கும் சாலைகளின் நோக்கம் ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரையும் தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரியையும் 4,076 கி.மீ நீளத்தைக் கொண்ட சாலை மூலம் இணைப்பதாகும். (கொச்சின், சேலம் உள்பட)

கிழக்கு-மேற்கு பகுதிகளை இணைக்கும் சாலைகள் அசாம் மாநிலத்தில் சில்சரையும் குஜராத்தில் உள்ள துறைமுக நகரான போர்பந்தரையும் இணைக்கும் வகையில் 3,640 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு சாலைகளும் ஜான்சியில் சந்திக்கின்றன.

விரைவுச் சாலைகள்

விரைவுச் சாலைகள் என்பன நன்கு மேம்படுத்தப்பட்ட தரமான பல்வழிப் பாதைகளைக் கொண்ட அதிவேக போக்குவரத்திற்கான சாலைகள் ஆகும். முக்கியமான சில விரைவுச் சாலைகள் 1) மும்பை  — பூனா விரைவுச் சாலை 2) கொல்கத்தா — டம்டம் விமான நிலைய விரைவுச்சாலை 3) துர்காப்பூர் — கொல்கத்தா விரைவுச்சாலை 4) புதுடெல்லி மற்றும் ஆக்ரா இடையேயான யமுனா விரைவுச்சாலை.

பன்னாட்டு நெடுஞ்சாலைகள்

இந்தியா அதன் அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவை மேம்படுத்தும் நோக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ள சாலைகள் பன்னாட்டு நெடுஞ்சாலைகள் ஆகும். இச்சாலைகள் ஆசிய மற்றும் பசிபிக் பகுதிகளுக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையம் (ESCHP) உடன்படிக்கையின் கீழ் உலக வங்கி நிதியுதவியின் மூலம் அமைக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தான், நேபாளம், பூடான், வங்கதேசம் மற்றும் மியான்மர் ஆகிய அண்டை நாடுகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைக்கின்றன.

 

இரயில் போக்குவரத்து

இந்திய இரயில்வே அமைப்பு நாட்டினுடைய உள்நாட்டு போக்குவரத்திற்கான முக்கிய உயிர் நாடியாக அமைந்துள்ளது. மிக அதிக அளவிலான பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தின் தேவையை பூர்த்தி செய்வதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கான பங்களிப்பை இரயில்வே அளித்துவருகிறது. மேலும் இந்திய தரைவழிப் போக்குவரத்து அமைப்பின் முதுகெலும்பாக கருதப்படுகிறது. இது மக்களை ஒன்றிணைப்பதன் மூலம் தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கிறது. வணிகம், சுற்றுலா, கல்வி போன்றவற்றையும் ஊக்குவிக்கிறது. வேளாண்துறையில் எளிதில் அழுகக்கூடிய பொருள்களை வர்த்தகம் செய்ய விரைவான போக்குவரத்தை அளித்து உதவி புரிகிறது. மூலப்பொருள்களைத் தொழிற்சாலைக்கும் தயாரிக்கப்பட்ட தொழிலக பொருள்களைச் சந்தைகளுக்கும் கொண்டு செல்லும் இரயில்வேயின் பணி மதிப்பிட முடியாத ஒன்று. இந்திய இரயில் போக்குவரத்து அமைப்பு ஆசியாவில் மிகப் பெரியதும் உலக அளவில் இரண்டாவது பெரியதும் ஆகும்.

இரயில்களின் இயக்கம் மற்றும் மேலாண்மைக்காக, இந்திய இரயில்வே துறை 17 இரயில்வே மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

வ. எண்.           மண்டலங்கள்                                                             தலைமையிடம்

1                           வடக்கு இரயில்வே                                                    புதுடெல்லி

2                           வடமேற்கு இரயில்வே                                             ஜெய்ப்பூர்

3                           வட மத்திய இரயில்வே                                           அலகாபாத்

4                           வடகிழக்கு இரயில்வே                                            கோரக்பூர்

5                           வடகிழக்கு எல்லை இரயில்வே                          கௌகாத்தி

6                          கிழக்கு இரயில்வே                                                    கொல்கத்தா

7                          கிழக்கு கடற்கரை இரயில்வே                             புவனேஸ்வர்

8                          கிழக்கு மத்திய இரயில்வே                                   ஹஜிப்பூர்

9                          மேற்கு மத்திய இரயில்வே                                     ஜபல்பூர்

10                       மத்திய இரயில்வே                                                     மும்பை (சத்ரபதி சிவாஜி முனையம்)

11                       மேற்கு இரயில்வே.                                                     மும்பை (சர்ச்கேட்)

12                       தெற்கு இரயில்வே                                                      சென்னை

13                       தென் மத்திய இரயில்வே                                        செகந்தராபாத்

14                       தென் கிழக்கு இரயில்வே                                       கொல்கத்தா

15                       தென்மேற்கு இரயில்வே                                          ஹுப்ளி

16                       தென் கிழக்கு மத்திய இரயில்வே                      பிலாஸ்பூர்

17                       கொங்கன் இரயில்வே                                             நவி மும்பை

இந்திய இரயில்வே துறை இருப்புப்பாதையின் அகலத்தை அடிப்படையாகக் கொண்டு நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை

  1. அகலப்பாதை (1.676 மீ அகலம்)
  2. மீட்டர் பாதை (1.00 மீ அகலம்)
  3. குறுகிய பாதை (0.762 மீ. அகலம்) மற்றும்
  4. குறுகிய தூக்குப் பாதை (0.610. அகலம்)

இந்திய மெட்ரோ இரயில் போக்குவரத்து

இந்தியாவில் 8 பெரு நகரங்களில் மெட்ரோ இரயில்சேவை வழங்கப்படுகிறது. அவைகள் கொல்கத்தா (மேற்கு வங்காளம்) சென்னை (தமிழ்நாடு) புதுடெல்லி, பெங்களூரு (கர்நாடகா) குர்கயோன் (ஹரியானா) மும்பை (மகாராஷ்டிரா) ஜெய்ப்பூர் (இராஜஸ்தான்) மற்றும் கொச்சி (கேரளா) ஆகும். இந்தியாவில் இந்த இரயில் சேவை முதன் முதலில் கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது. இது பறக்கும் தொடருந்து திட்டம் என அழைக்கப்படுகிறது. MRTS நவம்பர் 2022இன்படி இந்தியாவில் 810 கி.மீ நீள மெட்ரோ இருப்பு பாதைகள் 381 இரயில் நிலையங்களுடன் இயங்கிவருகிறது.

குழாய் வழிபோக்குவரத்து

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வயல்களையும், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களையும் அதன் சந்தை பகுதிகளோடு இணைப்பதற்கு எளிதான மற்றும் சிறந்த போக்குவரத்தாக குழாய் போக்குவரத்து செயல்பட்டு வருகிறது. முன்னதாக இவை நகரங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் வழங்குவதற்கு பயன்படுத்தப்பட்டது. பொருள்களும் குழம்பாக்குதல் மூலம் குழாய் வழியே கொண்டு செல்லப்படுகிறது. குழாய் போக்குவரத்து அமைப்பதற்கு ஆரம்பகால செலவுகள் அதிகம். ஆனால் பின்னர் இதனை பராமரிப்பதற்கான செலவு மிகவும் குறைவு. இவற்றை கடினமான நிலப்பகுதிகளிலும், நீருக்கு அடியிலும் அமைக்க இயலும். இது தடங்கலற்ற, குறைந்த செலவுடைய, காலதாமதமற்ற மற்றும் ஆவியாதல் மூலம் ஏற்படும் இழப்பின்மை போன்றவற்றை உறுதி செய்கிறது.

மேல் அசாமில் உள்ள எண்ணெய் வயலில் இருந்து கான்பூர் வரையிலும், குஜராத்தில் உள்ள சலாயா பகுதியிலிருந்து பஞ்சாபிலுள்ள ஜலந்தர் வரையிலும், குஜராத்தில் உள்ள ஹஜிராவிலிருந்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஜெகதீஷ்பூர் வரை செல்லும் குழாய் போக்குவரத்துகள் இந்தியாவின் முக்கிய குழாய் போக்குவரத்து அமைப்புகளாகும்.

நீர்வழிப் போக்குவரத்து

கனமான மற்றும் அதிக அளவிலான சரக்குகளை ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு எடுத்துச் செல்ல மிகவும் ஏற்றது நீர்வழிப் போக்குவரத்தாகும். இது சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் குறைந்த எரிபொருள் செலவின போக்குவரத்து முறையாகும். நீர்வழிப் போக்குவரத்து இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை

  1. உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து
  2. கடல் வழிப்போக்குவரத்து

உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து

இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆறுகள், கால்வாய்கள், ஏரிகள் மற்றும் காயல்களைக் கொண்ட மிகப்பெரிய வலைப்பின்னல் அமைப்புடன் நடைபெற்றுவருகிறது. நீர்வழிப் போக்குவரத்து நீரின்ஆழம், அகலம் மற்றும் தொடர் நீரோட்டத்தைப் பொறுத்து அமைகிறது. உள்நாட்டு போக்குவரத்து வளர்ச்சி, பராமரிப்பு மற்றும் ஒழுங்குபடுத்துவதற்காக 1986இல் உள்நாட்டு நீர் வழிப்போக்குவரத்து ஆணையம் தொடங்கப்பட்டது.

இந்தியாவின் முக்கிய தேசிய நீர்வழிப் போக்குவரத்துகள்

  1. தேசிய நீர்வழிப்போக்குவரத்து எண்.1

ஹால்தியா மற்றும் அலகாபாத் இடையே 1620 கி.மீ நீளத்தை கொண்டு, கங்கை-பாகிரதி ஹுக்ளி ஆறுளுடன் இணைந்து செயல்படுகிறது.

  1. தேசிய நீர்வழிப்போக்குவரத்து எண். 2

பிரம்மபுத்ரா ஆற்றில் துபிரி மற்றும் சைதியாவிற்கு இடையே சுமார் 891 கி.மீ நீளத்தைக் கொண்டுள்ளது.

  1. தேசிய நீர்வழிப்போக்குவரத்து எண். 3

கேரளா மாநிலத்தின் கொல்லம் மற்றும் கோட்டாபுரம் இடையே உள்ளது. 24 மணி நேரமும் செயல்பட்டு 205 கி.மீ தொலைவிற்கு போக்குவரத்து வசதியை அளிக்கக்கூடிய இந்தியாவின் முதல் தேசிய நீர்வழி போக்குவரத்து இதுவாகும்.

 கடல் வழிப் போக்குவரத்து

இந்தியாவின் கனரக பொருள்கள் மற்றும் அதிக அளவிலான சரக்குகளை கையாளுவதில் கப்பல் போக்குவரத்து முக்கிய பங்காற்றுகிறது. இது மிகவும் சிக்கனமான போக்குவரத்து மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலுக்கும் ஏற்ற ஒன்றாகும். கடல் மற்றும் பெருங்கடல் வழிகள் பெரும்பாலும் சர்வதேச வணிகத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில் 13 பெரிய துறைமுகங்களும், 200 நடுத்தர மற்றும் சிறிய துறைமுகங்களும் உள்ளன. பெரிய துறைமுகங்களை மத்திய அரசாங்கமும் சிறிய மற்றும் நடுத்தர துறைமுகங்களை அந்தந்த மாநில அரசுகளும் நிர்வாகம் செய்கின்றன.

கிழக்கு இந்திய கடற்கரையில் அமைந்துள்ள முக்கிய துறைமுகங்கள் கொல்கத்தா, ஹால்தியா, பாரதீப், விசாகப்பட்டினம், சென்னை, எண்ணூர் மற்றும் தூத்துக்குடி ஆகும்.

மேற்கு இந்திய கடற்கரையில் அமைந்துள்ள முக்கிய துறைமுகங்கள் காண்டலா, மும்பை, நவசேவா(ஜவகர்லால் நேரு துறைமுகம்), மர்மகோவா, நியூமங்களூரு மற்றும் கொச்சின் ஆகும்.

இந்தியாவில் நான்கு முக்கிய கப்பல் கட்டும் தளங்கள்

  1. இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம்                          – விசாகப்பட்டினம்
  1. கார்டன் ரீச் கப்பல் கட்டும் தொழிற்சாலை        – கொல்கத்தா
  1. மசாகான் கப்பல் கட்டும் தொழிற்சாலை            – மும்பை
  1. கொச்சி கப்பல் கட்டும் தளம்                                     – கொச்சி

இந்தியா கப்பல் கட்டும் தொழிலில் ஆசியாவில் இரண்டாவது இடத்தையும் உலக அளவில் 16வது இடத்தையும் பெற்றுள்ளது.

 

வான்வழி போக்குவரத்து

வான்வழிப் போக்குவரத்து விரைவான, பயணசெலவு மிகுந்த, நவீன மற்றும் வசதியான போக்குவரத்தாகும். விமான போக்குவரத்து தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலான இணைப்பு வசதியை வழங்குகிறது. உயர்ந்த மலைகள், பாலைவனங்கள் மற்றும் அடர்ந்த காடுகள் மற்றும் கடினமான நிலப்பரப்புகள் போன்ற பகுதிகளை எளிதில் இணைக்கவல்லது. இப்போக்குவரத்து பயணிகள், சரக்குகள், அஞ்சல்கள் ஆகியவற்றைக் கொண்டு செல்கின்றன. அவசரகால நேரங்கள், இயற்கை மற்றும் செயற்கை பேரிடர்களான வெள்ளம், பஞ்சம், தொற்றுநோய்கள், போர்கள் போன்ற நிகழ்வுகளின்போதும் வான்வழிப்போக்குவரத்து முக்கிய பங்காற்றுகிறது.

முதல் இந்திய விமானப் போக்குவரத்து பிப்ரவரி 1918இல் ஹென்றி பிக்யூர் என்பவரால் அலகாபாத்திலிருந்து நைனிக் என்ற இடத்திற்கு கடிதங்கள் கொண்டு செல்லப்பட்டதன் மூலம் ஆரம்பமானது. 1953ஆம் ஆண்டு நாட்டில் செயல்பட்டு வந்த 8 பல்வேறு விமான நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்பட்டு அவைகள் தேசியமயமாக்கப்பட்டன.

உள்நாட்டு வான் வழிப்போக்குவரத்து நாட்டினுடைய ஒரு எல்லைக்குள்ளும் பன்னாட்டு வான்வழிபோக்குவரத்து உலகின் முக்கிய நகரங்களையும் இணைக்கிறது. இந்திய அரசாங்கம் ஏர் இந்தியா என்ற விமான சேவையை வழங்குகிறது.

இந்தியன் ஏர்லைன்ஸ் உள்நாட்டு போக்குவரத்து சேவையையும், ஏர் இந்தியா நிறுவனம் வெளிநாட்டு போக்குவரத்து சேவையையும் வழங்குகின்றன. இந்தியாவில் தற்பொழுது 19 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன.

பவன் – ஹான்ஸ் வானுலங்கு ஊர்தி (ஹெலிகாப்டர்) நிறுவனம்

பவன் ஹான்ஸ் வானுலங்கு ஊர்தி நிறுவனம் (ஹலிகாப்டர்) பெட்ரோலிய நிறுவனங்களான ONGC எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் மற்றும் கடல்சார்ந்த பணிகளுக்கு வானுலங்கு சேவையை அளிக்கிறது. இது புதுடெல்லியை தலைமையிடமாகக் கொண்ட பொதுத்துறை நிறுவனமாகும். இது மும்பையின் மேற்கு வில்பார்லேவில் உள்ள ஜூகு விமான நிலையத்தைத் தளமாகக் கொண்டு இயங்குகிறது.

பவன் ஹான்ஸ் நிறுவனம் ஒரு மினி – ரத்னா -I பிரிவின் கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும்.

இந்நிறுவனம் பல்வேறு இந்திய மாநில அரசுகளுக்கு குறிப்பாக வட கிழக்கு இந்திய மாநிலங்கள் மற்றும் தீவுகளுக்கு இடையே சேவையை அளிக்கிறது. இது அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கும் இலட்சத்தீவுகளுக்கும் பயணப் படகுச் சேவையையும் வழங்குகிறது.

இந்திய விமான நிலைய பொறுப்பு ஆணையம் (AAI)

இந்திய விமான நிலையப்பொறுப்புஆணையம் 1995இல் ஆரம்பிக்கப்பட்டது. இது இந்திய விமான நிலையங்களுக்கு பாதுகாப்பை அளிக்கிறது. இந்திய குடிமை விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய விமான நிலைய பொறுப்பு ஆணையம், பராமரித்தல், மேம்படுத்துதல், மற்றும் நிர்வாகம் ஆகிய பணிகளை மேற்கொள்கிறது.

தகவல் தொடர்பு

தகவல்கள், எண்ணங்கள் மற்றும் தகவல் கருத்துக்களின் பரிமாற்றத்தையே தொடர்பு என்கிறோம். தகவல் தொடர்பு துறையில் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வகையில் உள்ளது. தகவல் தொடர்புகள் இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.

  1. தனிமனித தகவல் தொடர்பு
  2. பொதுத்தகவல் தொடர்பு

தனிமனித தகவல் தொடர்பு

தனி நபர்களுக்கிடையேயான தகவல் பரிமாற்றம் தனிமனித தகவல் தொடர்பு என அழைக்கப்படுகிறது. இது அஞ்சல் சேவை, தொலைப்பேசி, கைப்பேசி, குறுந்தகவல் தொலைநகல், இணையதளம் மற்றும் மின் அஞ்சல் போன்றவைகளை உள்ளடக்கியது.

உலக அளவில் மிகப்பெரிய வலைப்பின்னல் அமைப்பு கொண்ட இந்திய அஞ்சல் துறை 1,55,000 அஞ்சல் நிலையங்களைக் கொண்டுள்ளது. இவற்றில் 1,39,000ற்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் கிராமப் புறங்களில் அமைந்துள்ளன. இந்திய அஞ்சல் சேவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 1837ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்தியாவின் முதல் அஞ்சல் வில்லை 1852 ஆம் ஆண்டு கராச்சியில் வெளியிடப்பட்டது. அஞ்சல்களை சேகரித்தல் மற்றும் விநியோகம் செய்வது இந்திய அஞ்சல் துறையின் முக்கிய பணியாகும்.

இத்துறை விரைவு அஞ்சல் சேவையை 1975இல் அறிமுகம் செய்தது. 1972ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அஞ்சல் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்டு விரைவு தபால் சேவை செயல்படுகிறது. பண அஞ்சல், மின்னனு பண அஞ்சல், விரைவு தபால், விரைவு சிப்பஅஞ்சல், வணிக அஞ்சல், ஊடக அஞ்சல், செயற்கைக் கோள் வழி அஞ்சல், சில்லறை அஞ்சல், வாழ்த்து அட்டைகள், தகவல் அஞ்சல், துரித சேவை மற்றும் விரைவான கடவுச்சீட்டு சேவைகளை அஞ்சல்துறை வழங்கி வருகிறது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைதொடர்பு வலைப்பின்னல் அமைப்பை கொண்டுள்ள நாடுகளுள் இந்தியாவும் ஒன்று. நகர்ப்புற பகுதிகள் மட்டும் அல்லாமல் கிராமப்புறப் பகுதிகளிலும் STD (உள்நாட்டு சந்தாதாரர் அழைப்பு) தொலைப்பேசி வசதி செய்யப்பட்டுள்ளது. வெளி நாட்டில் உள்ளவர்களோடு தொடர்பு கொள்ள ISD முறை (சர்வதேச சந்தாதாரர் அழைப்பு) பயன்படுத்தப்படுகிறது.

கைபேசி, தொலைநகல் மற்றும் இணையதளம் போன்றவை நாட்டில் பயன்படுத்தப்படும் மற்ற தனி மனித தகவல் தொடர்பு சாதனங்களாகும்.

பொதுத் தகவல் தொடர்பு அமைப்பு

பொதுத் தகவல் தொடர்பு என்பது ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் தகவல்களை பெறுவதாகும். இது கல்வி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் சிறந்தவழியாகும்.

பொதுத் தகவல் தொடர்பு அமைப்பானது அச்சு ஊடகங்கள் மற்றும் மின்னனு ஊடகங்கள் என்னும் இரண்டு முறைகளில் மக்களுக்கு தகவல்களை வழங்குகிறது.

மின்னனு ஊடகங்கள் இந்திய வானொலி ஒளிபரப்பு சேவை, மும்பை வானொலி சங்கம் மூலமாக 1923ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

1936ஆம் ஆண்டு அகில இந்திய வானொலி என்றும் 1957ஆம் ஆண்டு முதல் “ஆகாச வாணி” எனவும் பெயர் மாற்றம் செய்து அழைக்கப்பட்டு வருகிறது. இது கல்வி, செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது. சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற கூட்டத்தொடர் நிகழ்வுகள் மற்றும் சிறப்பு விழாக்கள் தொடர்பான நிகழ்வுகளையும் சிறப்பு செய்திகளாக ஒளிபரப்புகிறது.

தொலைக்காட்சி

தகவல்களை ஒளி ஒலி காட்சி மூலமாக வழங்கும் சிறந்த ஊடகமாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் தொலைக்காட்சி வலையமைப்பு “தூர்தர்ஷன்” என அழைக்கப்படுகிறது. இது பொதுவான தேசிய திட்ட சேவைகளை வழங்க தொடங்கிய பின்பு இச்சேவை பின்தங்கிய மற்றும் தொலைதூர கிராமப்புறங்களுக்கு விரிவடைய செய்யப்பட்டது.

இணையம்

இணையம் என்பது வலையமைப்பு நெறிமுறைகளை பயன்படுத்தும் கணினி மூலம் இணைக்கப்பட்ட உலகளாவிய ஒரு தகவல் பரிமாற்ற வலையமைப்பு ஆகும். செய்தி உருவாக்கம், எண்ணங்கள், வேலைவாய்ப்பு மற்றும் இதர செய்திகளை நேரடியாக பகிர்ந்து கொள்ள பயன்படும் ஒரு சமூக ஊடகமாகவும் பயன்படுகிறது.

அச்சு ஊடகங்கள்

செய்தித்தாள் எல்லோராலும் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த அச்சு ஊடகத்தின் கீழ்வரும் ஒரு தகவல் தொடர்பு சாதனமாகும். இந்தியாவில் உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச அளவில் செய்திகளை அளிக்கக்கூடிய பல செய்திதாள்கள் உள்ளன.

செயற்கைக்கோள் தகவல் தொடர்பு

செயற்கைக்கோளானது தொடர்ச்சியாக மிகப்பெரும் பரப்பிலான பதிமம் மற்றும் தகவல்களை அளிப்பதன் மூலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தகவல் தொடர்பு சாதனமாக இந்தியாவில் விளங்குகிறது. செயற்கைக்கோள் பதிமங்களைப் பயன்படுத்தி வானிலை ஆய்வு, வானிலை முன் அறிவிப்பு, இயற்கை பேரழிவு கண்காணிப்பு, எல்லை பகுதி கண்காணிப்பு போன்ற முக்கிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

1969ஆம் ஆண்டு இந்திய வின்வெளி ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்ட பின்னர் தொலைத்தொடர்பு பரிமாற்றத்தில் செயற்கைக் கோள்கள் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்தியாவில் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்பு இரண்டு பிரிவுகளைக் கொண்டது.

  1. இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு (INSAT)
  1. இந்திய தொலையுணர்வு செயற்கைகோள் அமைப்பு (IRS)

1983இல் நிறுவப்பட்ட இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு தொலைத்தொடர்பு, வானியல் ஆய்வு மற்றும் பல்வேறு திட்டங்களை உள்ளடக்கிய ஒரு பல்நோக்கு திட்ட அமைப்பாக உள்ளது.

இன்சாட் வரிசை செயற்கைக்கோள், கைபேசி, தொலைப்பேசி, வானொலி மற்றும் தொலைக்காட்சிகளுக்கு சமிக்கைகளை அனுப்ப பயன்படுகிறது. மேலும் இது வானிலையை கண்டறியவும், இராணுவ பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது.

இன்சாட் வரிசை, ஜி-சாட் வரிசை, கல்பனா 1, ஹேம்சாட், எஜூசாட் (Edusat) போன்றவை தகவல் தொடர்பிற்காக பயன்படுத்தப்படும் முக்கிய செயற்கைக்கோள்களாகும். டிசம்பர் 19, 2018ஆம் ஆண்டு ஏவப்பட்ட ஜிசாட் 7A தகவல் தொடர்புக்காக சமீப காலத்தில் ஏவப்பட்ட ஒரு செயற்கைக்கோள் ஆகும். ஆகஸ்ட் 30, 1983ஆம் ஆண்டு ஏவப்பட்ட இன்சாட் 1B தகவல் தொடர்பிற்காக ஏவப்பட்ட முதல் இன்சாட் வரிசை செயற்கைக்கோள் ஆகும்.

 

தகவல் தொழில்நுட்பம்

தேசிய மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவன கூட்டமைப்பின்படி (NAASCOM) இந்தியாவின் மொத்த மென்பொருள் ஏற்றுமதியில் தென் மாநிலங்கள் தொடர்ந்து மேலானப் பங்களிப்பை செய்து வருகின்றன.

தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்கள் இணைந்து இந்தியாவின் மொத்த மென்பொருள் ஏற்றுமதியில் 59.6%ஐ செய்கின்றன.

நாட்டின் மென்பொருள் ஏற்றுமதியில் கர்நாடகாவுக்கு அடுத்ததாக தமிழ்நாடு இரண்டாவது பெரிய ஏற்றுமதி செய்யும் மாநிலமாக உள்ளது.

சிறப்புப் பொருளாதார மண்டலம்

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சர்வதேச அளவில் மிகச்சிறந்த பகுதிகளாகவும் ஏற்றுமதியை ஊக்குவிக்கக்கூடிய சூழலைப் பெற்றதாகவும் உள்ளது. இம்மண்டலம் பல உற்பத்திப் பெருள்களை அளிப்பதுடன் பல்வேறு சேவைகளையும் அளிக்கிறது.

நாங்குநேரி, எண்ணூர், ஓசூர் மற்றும் பெரம்பலூரில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைந்துள்ளன. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலங்களான – டைடல் பூங்கா-2, டைடல் பூங்கா-3 மற்றும் உயிரி மருந்தகம் போன்றவை சென்னையிலும் டைடல் பூங்கா-4 கோயம்புத்தூரிலும் அமைந்துள்ளன.

வாகனத் தொழிலகங்கள்

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வாகனத் தொழில்களில் 21% பயணிகள் மகிழுந்து, 33% வணிக வாகனங்கள் மற்றும் 35% வாகன உதிரிபாகங்கள் ஆகியன தமிழ்நாட்டின் அதிகமான பங்களிப்பாகும். போர்டு, ஹூண்டாய், எச் எம் மிட்சுபிவி, அசோக் லைலாண்ட் மற்றும் வேளாண் கருவிகள் நிறுவனம் (TAFE) (இழுவை இயந்திரம்) (Tractor), ஆகியவற்றின் உற்பத்திக் தளங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளன.

கைத்தறி மற்றும் விசைத்தறி

கைத்தறித் துறையானது மாநிலத்தில் மிகப்பெரிய குடிசைத் தொழிலாகும். இது கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரத்தையும் ஏற்றுமதி வருவாயையும் அளிக்கின்றன. நெசவாளர் சங்கங்கள், பள்ளிக் குழந்தைகளுக்கு விலையில்லா சீருடையும், விலையில்லா வேட்டி மற்றும் சேலை திட்டத்திற்கு தேவையான துணிகளையும் உற்பத்தி செய்கின்றன.

மக்கள் தொகை

ஒரு நாட்டின் வரையறுக்கப்பட்ட பகுதியில் வாழும் மக்களின் எண்ணிக்கையே மக்கள் தொகை எனப்படுகிறது. மக்கள்தொகைப் பண்புகள் பற்றிய புள்ளிவிவர ஆய்வுகள் ‘மக்கட்தொகையியல்’ என அழைக்கப்படுகின்றது.

நாட்டின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட பகுதிகள் 

கோவை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தர்மபுரி, சேலம், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகியவை தமிழ்நாட்டில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டங்களாகும். இம்மாவட்டங்களில் அதிக அளவிலான மக்கள் தொகை இருப்பதற்குக் காரணம் விவசாயம் மற்றும் தொழில்துறை மேம்பாடு ஆகும்.

நாட்டின் மிதமான மக்கள் தொகையைக் கொண்ட பகுதிகள்

திருவண்ணாமலை, கடலூர், திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் 30 – 35 இலட்சம் மக்கள்தொகையைப் பெற்றுள்ளன.

வேலூர், திண்டுக்கல், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் ஒவ்வொன்றும் 15 – 20 இலட்சம் மக்கள்தொகையைக் கொண்டுள்ளன.

விவசாயம், சிறியஅளவிலான தொழில்கள் தவிர கடலோரப் பகுதிகளில் மீன்பிடித்தல் ஆகியவை இம்மாவட்டங்களின் முக்கியத் தொழில்களாகும்.

நாட்டின் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட பகுதிகள்

கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகியவை 15 இலட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகையைப் பெற்றுள்ளன.

நீலகிரி மாவட்டம் 10 இலட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகையைக் கொண்டுள்ளது.

மக்களடர்த்தி

இந்தியாவின் மக்களடர்த்தியில் நமது மாநிலம் 12வது இடத்தில் உள்ளது. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தேசிய சராசரி மக்களடர்த்தி 382 ஆகும்.

சென்னை ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 26,553 மக்களடர்த்தி கொண்ட மாவட்டமாகும்.

இதையடுத்து கன்னியாகுமரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், சேலம், வேலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்கள் அதிக மக்களடர்த்தி கொண்ட மாவட்டங்களாகும்.

நீலகிரி மாவட்டத்தில் குறைந்த அளவு மக்களடர்த்தி (288ச.கி.மீ) பதிவாகியுள்ளது. மற்ற மாவட்டங்கள் மிதமான மக்களடர்த்தியைக் கொண்டுள்ளன.

பாலின விகிதம்

பாலின விகிதம் என்பது 1,000 ஆண்களுக்கு இணையாக உள்ள பெண்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.

பாலின விகிதம் அதிகம் கொண்ட மாவட்டங்களாக நீலகிரியும் (1,041) அதைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டமும் (1,031) காணப்படுகின்றன.

குறைவான பாலின விகிதம் கொண்ட மாவட்டங்களாகத் தர்மபுரியும் (946) அதனைத் தொடர்ந்து சேலமும் (954) உள்ளன.

கல்வியறிவு விகிதம்

கன்னியாகுமரி மாவட்டம் அதிக அளவில் கல்வியறிவு விகிதம் கொண்ட மாவட்டமாகவும், தர்மபுரி மாவட்டம் மிகக் குறைந்த கல்வியறிவு கொண்ட மாவட்டமாகவும் உள்ளது. மேலும் அதிக கல்வியறிவு கொண்ட மாவட்டங்களாக சென்னை, தூத்துக்குடி, நீலகிரி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் உள்ளன.

 

போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு

சாலை போக்குவரத்து

மாநிலத்தின் மொத்த சாலைகளின் நீளம் 1,67,000 கிலோமீட்டர் ஆகும். இதில் 60,628 கிலோமீட்டர் மாநில நெடுஞ்சாலை துறை மூலம் பராமரிக்கப்படுகிறது. பொதுத்துறை மற்றும் தனியார்துறை கூட்டணி இயக்கத் திட்டத்தின் கீழ் (PPP) மொத்த சாலைத் திட்டங்களில் 20% பங்களிப்புடன் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை எண் 44-ஐ உடையதாகும். இது ஓசூரிலிருந்து தர்மபுரி, சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை 627.2 கிலோமீட்டர் தூரம் செல்கிறது.

தமிழ்நாட்டின் மிகக் குறைவான நீளங்கொண்ட தேசிய நெடுஞ்சாலை எண்785-ஐக் கொண்டதாகும். இது மதுரையிலிருந்து துவரங்குறிச்சி வரை செல்கிறது.

இரயில்வே போக்குவரத்து

தெற்கு இரயில்வேயின் தலைமையகம் சென்னையில் அமைந்துள்ளது. தற்போது தெற்கு இரயில்வேயின் வலைப்பின்னல் இந்தியாவின் தென் தீபகற்பப் பகுதிகளான தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் புறநகர் இரயில் போக்குவரத்து மற்றும் பறக்கும் தொடருந்துத் திட்டம் ஆகியவை நன்கு வளர்ச்சியடைந்துள்ளன. மெட்ரோ இரயில்வே அமைப்பு, மே 2017 முதல் பாதாள இரயில் இயக்கத்துடன் இப்போக்குவரத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.

வான்வழி போக்குவரத்து

தமிழ்நாட்டில் 4 முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. சென்னை சர்வதேச விமானநிலையமானது மும்பை மற்றும் புது டெல்லிக்கு அடுத்ததாக இந்தியாவின் மூன்றாவது பெரிய விமான நிலையமாக உள்ளது.

கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகியன நாட்டில் பிற பன்னாட்டு விமானநிலையங்கள் ஆகும். தூத்துக்குடி மற்றும் சேலம் ஆகியவை உள்நாட்டு விமானநிலையங்கள் ஆகும்.

நீர்வழி போக்குவரத்து

சென்னை, எண்ணூர் மற்றும் தூத்துக்குடி ஆகியவை தமிழ்நாட்டின் மூன்று முக்கிய துறைமுகங்களாகும்.

நாகப்பட்டினத்தில் இடைநிலை துறைமுகமும் பிற பகுதிகளில் 15 சிறிய துறைமுகங்களும் இம்மாநிலத்தில் உள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறு துறைமுகங்களும் தமிழ்நாட்டின் கடல்சார் வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

சென்னை துறைமுகம் செயற்கைத் துறைமுகமாகும். இது சரக்குப் பெட்டகங்களைக் கையாளும் நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகமாகும்.

தகவல் தொடர்பு

தகவல் தொடர்பு என்பது இலத்தீன் வார்த்தையான ‘கம்யூனிகேர்’ என்பதிலிருந்து பெறப்பட்டது. இது ‘பகிர்தல்’ எனப் பொருள்படும். தகவல்கள், எண்ணங்கள் மற்றும் எண்ணங்களின் பரிமாற்றத்தை தகவல் தொடர்பு என்கிறோம்.

தகவல் தொடர்புகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை:

  1. தனிமனித தகவல் தொடர்பு
  2. பொதுத்தகவல் தொடர்பு

தமிழ்நாட்டின் அஞ்சலக மாவட்டங்கள் மற்றும் தலைமையகம்

மண்டலம் / மாவட்டங்கள்                                           தலைமையகம்

சென்னை                                                                            சென்னை

மேற்கு மண்டலம்                                                            கோயம்புத்தூர்

மத்திய மண்டலம்                                                           திருச்சிராப்பள்ளி

தெற்கு மண்டலம்                                                            மதுரை

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories