மண், கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள்
June 20, 2025 2025-07-01 7:32மண், கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள்
மண்ணின் வகைகள்
1953ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் இந்தியாவில் காணப்படும் மண்வகைகளை 8 பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளது. அவை
- வண்டல் மண்
- கரிசல் மண்
- செம்மண்
- சரளை மண்
- காடு மற்றும் மலை மண்
- வறண்ட பாலை மண்
- உப்பு மற்றும் காரமண்
- களிமண் மற்றும் சதுப்பு நில மண்
வண்டல் மண்
காதர்: வெளிர் நிறமுடைய மணற்பாங்கான மண். பாங்கர்: சுண்ணாம்பு மற்றும் களிமண் பாங்கானபழைய வண்டல் படிவுகள், அடர் நிறம் உடையது.
உருவாக்கம்: சிற்றோடைகள் மற்றும் ஆறுகளின் வேகம் குறையும் பொழுது படிய வைப்பதினால் உருவாகின்றன.
வேதியியல் பண்புகள்: பொட்டாசியம், பாஸ்போரிக் அமிலம், சுண்ணாம்பு மற்றும் கார்பன் கலவைகள் அதிகமாக காணப்படுகின்றன. நைட்ரஜன் குறைவாக உள்ளது.
மண்ணின் தன்மைகள்: வண்டல், மண்மண்டி (Silt) களிமண் போன்ற கலவைகளுடன் மண்ணடுக்கு காணப்படுகிறது
பரவல்: கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆற்றுப் பள்ளத்தாக்குள், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, மேற்கு வங்காளம் மற்றும் பீகார் மாநிலங்களில் உள்ள சமவெளிப் பகுதிகள், கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஆற்று முகத்துவாரப் பகுதி
வளரும் பயிர்கள்: நெல், கோதுமை, கரும்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள்
கரிசல் மண்
உருவாக்கம்: தக்காணப் பகுதியில் உள்ள பசால்ட் பாறைகளில் இருந்து உருவானது.
நிறம்: டைட்டானியம் மற்றும் இரும்பு தாதுக்களால் கருப்பு நிறமாக உள்ளது.
வேதியியல் பண்புகள்: கால்சியம், மக்னீசியம், கார்போனேட்டுகள், அதிக அளவிலான இரும்பு, அலுமினியம், சுண்ணாம்பு மற்றும் மாங்கனீசு ஆகியன காணப்படுகின்றன. நைட்ரஜன்,பாஸ்போரிக் அமிலம், மற்றும், இலை மக்குகள் குறைவாக உள்ளன.
மண்ணின் தன்மைகள்: ஈரமாக இருக்கும் போது சேறாகவும், ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ளும் தன்மையும் உடையது.
பரவல்: மகாராஷ்டிரா மற்றும் மாளவப் பீடபூமி, கத்தியவார் தீபகற்பம், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராயல்சீமா மற்றும் கர்நாடக மாநிலத்தின் வடபகுதி.
வளரும் பயிர்கள்: பருத்தி, தினை வகைகள், புகையிலை மற்றும் கரும்பு.
செம்மண்
உருவாக்கம்: பழமையான படிக பாறைகளான கிரானைட், நைஸ் போன்ற பாறைகள் சிதைவடைவதால் உருவாகின்றன.
வேதியியல் பண்புகள்: இரும்பு மற்றும் மக்னீசியம் அதிகமாக காணப்படுகிறது. நைட்ரஜன், இலைமட்குகள், பாஸ்போரிக் அமிலம் மற்றும் சுண்ணாம்பு சத்துக்கள் குறைவாக காணப்படுகின்றன.
மண்ணின் தன்மைகள்: மென்துகள்கள் குறிப்பிடப்பட்டுள்ள உப்புக்கரைசல், வெண்களிப் பாறைத்தாதுக்கள், சிறு வெடிப்புகளுடன் கூடிய செம்மண் படிவு.
பரவல்: தக்காண பீடபூமியின் கிழக்குப் பகுதி, தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் சோட்டா நாகபுரி பீடபூமி, ஜார்க்கண்ட்
வளரும் பயிர்கள்: கோதுமை, நெல், பருத்தி, கரும்பு மற்றும் பருப்பு வகைகள்.
சரளை மண்
உருவாக்கம்: வெப்பம் மற்றும் குளிர் அடுத்தடுத்து நிகழும் போது மண்சுவரல் (leaching ) காரணமாக உருவாகிறது.
வேதியியல் பண்புகள் : இரும்பு மற்றும் அலுமினியத்தின் நீரேற்ற ஆக்சைடுகளால் உருவானது.
மண்ணின் தன்மை: உயரமான மலைப் பகுதிகளில் அதிகமான அமிலத்தன்மையுடனும் தாழ்வான பகுதிகளில் குறைந்த அளவும் உள்ளது.பொதுவாக இது ஈரப்பதத்தை தக்கவைத்துக் கொள்வதில்லை. ஆனால் களிமண் கலந்த வண்டல் படிவுகளைக் கொண்ட சமவெளிப் பகுதிகளில் ஈரப்பதத்தை தக்கவைத்துக் கொள்கிறது.
பரவல்: அசாம் குன்றுகள், கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதிகள், ஒடிசா மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள்
வளரும் பயிர்கள்: காபி, இரப்பர், முந்திரி மற்றும் மரவள்ளிக் கிழங்கு
காடு மற்றும் மலை மண்
உருவாக்கம்: பனிமழை வெப்பநிலை வேறுபாடுகளால் பௌதீக சிதைவின் காரணமாக உருவாகின்றது. காலநிலைக்கு ஏற்ப இடத்திற்கு இடம் மாறுபடுகிறது.
வேதியியல் பண்புகள்: பொட்டாஷ், பாஸ்பரஸ் மற்றும் சுண்ணாம்புச் சத்துக்கள் குறைவாகக் காணப்படுகிறது.
தன்மை: மென்மையான மணல் மற்றும் பாறை துகள்கள் கலந்து காணப்படுகிறது. இம் மண்ணின் தன்மை தாய்பாறைக் கேற்ப மாறுபடுகிறது. அதிக இலை மட்குச் சத்துகள் உடையது மெதுவாக மட்குகளால் சிதைவுறுவதால் காரத்தன்மை கொண்டதாக உள்ளது.
பரவல்: ஜம்மு-காஷ்மீர், லடாக் பகுதிகள் இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம் போன்ற மாநிலங்களில் உள்ள ஊசியிலைக் காடுகளின் பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள்.
வளரும் பயிர்கள் : காபி, தேயிலை, நெல், மக்காச் சோளம், உருளைக் கிழங்கு, பார்லி, வெப்ப மண்டல பழவகைகள் மற்றும், பல்வேறு வகையான வாசனைப் பொருள்கள்
வறண்ட பாலை மண்
உருவாக்கம்: வறண்ட கால நிலை, அதிக வெப்பம் காரணமாக ஆவியாதல் அதிகமாக இருப்பதால் மேல் மண் வறண்டு காணப்படுகிறது. தாவரங்கள் இல்லாமையால் இலை மட்குச் சத்து குறைவாகக் காணப்படுகிறது.
வேதியியல் பண்புகள்: அதிக அளவிலான உப்பு, அமிலத்தன்மை, பாஸ்பேட், பல்வேறு அளவுகளில் உள்ள கால்சியம் கார்பனேட், உயிர்சத்துக்கள் மற்றும் நைட்ரஜன் குறைவாகவும் காணப்படுகிறது.
தன்மை: வெளிர்நிறம் குறைந்த இலை மட்கு சத்து புரைத்தன்மையுடையது, குறைந்த ஈரப்பதம் உடையது.
பரவல்: இராஜஸ்தான், குஜராத்தின் வட பகுதி, பஞ்சாப் மாநிலத்தின் தென் பகுதி
வளரும் பயிர்கள் : நீர் பாசன வசதியுடன் தினை வகைகள், பார்லி, பருத்தி, சோளம், பருப்பு வகைகள் பயிரிடப் படுகின்றன.
உப்பு மற்றும் காரமண்
உருவாக்கம்: வடிகாலமைப்பு இல்லாமையால் மற்றும் கார நீர்பிடிப்புக் காரணமாக தீங்கு விளைவிக்கக் கூடிய உப்புகள் நுண்புழை நுழைவு காரணமாக மண்ணின் கீழ் அடுக்கிலிருந்து மேற்பரப்பிற்கு கடத்தப்படுகிறது. இதனால் இம்மண், உப்பு மற்றும் காரத் தன்மையுடன் காணப்படுகிறது.
வேதியியல் பண்புகள்: சோடியம், மக்னீசியம், கால்சியம் மற்றும் சல்பூரிக் அமிலம் காணப்படுகிறது.
தன்மை: சிதைக்கப்படாத பாறைகள் மற்றும் சிதைவுற்ற கனிமங்களை உடையது.
பரவல்: ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், பீகார், உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், இராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் வறண்ட பகுதிகள்
வளரும் பயிர்கள் : அதிக காரத்தன்மை காரணமாக இங்கு பயிர்கள் வளர்வதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லை.
களிமண் மற்றும் சதுப்பு நில மண்
உருவாக்கம்: உயிரினப் பொருட்களிலிருந்து ஈர காலநிலை உள்ள பகுதிகளில் இம்மண் காணப்படுகிறது. இவ்வகை மண் கருமை நிறம் மற்றும் அதிககாரத் தன்மையுடையது.அதிக மழையளவு, அதிக ஈரப்பதம் கொண்ட பகுதிகளில் காணப்படுகிறது.
வேதியியல் பண்புகள்: பொட்டாஷ் மற்றும் பாஸ்பேட், சத்துகள் குறைவாகவும், காணப்படுகிறது.
தன்மை: ஈரத்தன்மையுடன் இலை மட்கைக் கொண்டும் கருமை நிறத்திலும் உள்ளது.
பரவல்: கேரளாவில் கோட்டயம் மற்றும் ஆலப்புழை மாவட்டங்கள், ஒடிசா தமிழ்நாடு கடற்கரைப் பகுதிகள், மேற்கு வங்கத்தில் உள்ள சுந்தரவனப் பகுதிகள், பீகார், உத்தரகாண்ட் மாநிலத்தில் அல்மோரா மாவட்டம்.
வளரும் பயிர்கள் : நெல், சணல்
மண் சீரழிவு: இந்தியாவில் மண் சீரழிவு என்பது ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. இந்திய தொலை நுண்ணுணர்வு (IIRS), 2015ஆம் ஆண்டு ஆய்வறிக்கையின் படி 147 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு மண் அரிப்பால் பாதிப்படைந்துள்ளது.
இந்திய மண் வகைகள் எதிர்கொள்ளும் சவால்கள்:
1. மண் அரிப்பு (தாள் அரிப்பு, நீரோட்ட மண்ணரிப்பு, நீர் பள்ள மண்ணரிப்பு, பள்ளத்தாக்கு மண்ணரிப்பு).
2. மண் சீரழிவு 3. நீர் தேங்குதல் 4. உவர்ப்பு மற்றும் காரத்தன்மை 5. உப்பு படிவுகள் ஆகியனவாகும்.
மண் வளப்பாதுகாப்பும் மண்வள மேலாண்மையும்:
1. காடுகள் உருவாக்கம்
2. அணைகள் மற்றும் குறுக்கணைகள் கட்டுதல்.
3. அதிக மேய்ச்சலைத் தடுத்தல்
4. மேம்பட்ட பயிர்ச்சாகுபடி முறைகளைப் பின்பற்றல்
சம உயரம் உழுதல், பயிற்சுழற்சி முறை, கரைகள் கட்டுதல், படிக்கட்டு வேளாண்மை, பட்டை பயிரிடல், காற்றெதிர் திசையில் மரங்கள் நடல், நிலைத்த வேளாண் நுட்பத்தையும் மண் மேலாண்மைக்கு உகந்த பாதுகாப்பு முறைகளையும் பின்பற்றுதல்.
தமிழ்நாட்டின் மண் வகைகள்
1. வண்டல் மண் 2. கரிசல் மண் 3. செம்மண் 4. சரளை மண் மற்றும் 5.உவர் மண்.
வண்டல் மண்
வண்டல் மண் ஆறுகளால் படிய வைக்கப்படும் நுண் படிவுகளால் உருவாகின்றன. தமிழ்நாட்டின் ஆற்றுப் பள்ளத்தாக்குகள் மற்றும் கடற்கரையோரப் பகுதிகளில் இம்மண் காணப்படுகிறது. தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுரை, நாகப்பட்டினம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இவ்வகை மண் அதிகம் காணப்படுகிறது. சில உள் மாவட்டங்களின் ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் சிறிய அளவில் இவை காணப்படுகிறது.
கரிசல் மண்
தீப்பாறைகள் சிதைவடைவதன் மூலம் கரிசல் மண் உருவாகிறது. இது ரீகர் மண் (Regur soil) என்றும் அழைக்கப்படுகிறது. இம்மண்ணில் பருத்தி நன்கு வளர்வதால் பருத்தி மண் என்றும் அழைக்கப்படுகிறது. கோயம்புத்தூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கரிசல் மண் பெருமளவில் காணப்படுகிறது.
செம்மண்
தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு செம்மண் பரவியுள்ளது. இவை குறிப்பாக மாநிலத்தின் மத்திய மாவட்டங்களில் காணப்படுகின்றன. இம்மண் சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் அதிகம் காணப்படுகின்றது.
சரளை மண்
சரளை மண்ணானது அதில் கரைந்துள்ள சத்துக்கள் நீரினால் அடித்து செல்லப்படுவதால் உருவாகிறது. இவை ஒரு வளமற்ற மண்ணாகும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் சில பகுதிகளிலும், நீலகிரி மலையின் சில பகுதிகளிலும் இம்மண் காணப்படுகின்றது.
உவர் மண்
தமிழ்நாட்டின் சோழமண்டலக் கடற்கரை பகுதிகளில் மட்டுமே இம்மண் காணப்படுகிறது. வேதாரண்யப் பகுதியில் குறிப்பிடத்தக்க அளவில் உவர் மண் காணப்படுகிறது. டிசம்பர் 26, 2004 இல் ஏற்பட்ட சுனாமி அலைகள் அதிக அளவு மணல் படிவுகளை தமிழக கடற்கரைப் பகுதிகளில் படிய வைத்துள்ளன. இதனால் கடற்கரையில் சிலபகுதிகள் பயிரிட உகந்ததாக இல்லை.
மண் அரிப்பு
மண் ஒரு புதுப்பிக்க இயலாத வளமாகும். மண் அரிப்பு ஒரு முறை ஏற்படின் அவற்றை புதுப்பிப்பது எளிதான செயல் அல்ல. காடுகள் அழிப்பு, அதிக மேய்ப்பு, நகரமயமாக்கம், அதிக மழைப்பொழிவு ஆகியன மண் அரிப்பின் முக்கிய காரணங்களாகும். மண் அரிப்பு மண்வளத்தை குறைத்து, விளைச்சலைக் குறைக்கிறது. எனவே மண்வளத்தை பாதுகாக்க அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும்.
கனிம வளங்கள்
கனிமங்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய அமைப்புகள்:
- இந்திய நிலவியல் களஆய்வு நிறுவனத்தின் தலைமையிடம் – கொல்கத்தா
- இந்தியச் சுரங்கப் பணியகம் – நாக்பூர்
- இரும்பு சாரா தொழில் நுட்ப மேம்பாட்டு மையம் – ஹைதராபாத்
- இந்தியாவில் உள்ள சுரங்கங்கள் மற்றும் கனிமங்களின் நிர்வாகத்திற்கான பொறுப்பு சுரங்கப்பணி அமைச்சகத்திடம் உள்ளது. (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம், 1957)
கனிமங்களின் வகைகள்
வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகளின் அடிப்படையில் கனிமங்கள் இரண்டு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. அவை
அ.உலோகக் கனிமங்கள் ஆ. அலோகக் கனிமங்கள்
அ. உலோகக் கனிமங்கள்
உலோகக் கனிமங்கள் என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உலோகங்களைக் கொண்டிருக்கும். உலோகக் கனிமங்கள் அரிதாகவும் இயற்கையான அடர்ந்த தாது படிவங்களாகவும் காணப்படுகின்றன. உலோகப் படிவுகளில் இரும்பு, மாங்கனீசு, தாமிரம், பாக்சைட், நிக்கல், துத்தநாகம், காரியம், தங்கம் போன்ற மதிப்பு மிக்க உலோகங்கள் காணப்படுகின்றன.
இரும்புத்தாது
இந்தியாவில் காணப்படும் இரும்புத்தாது வளங்கள் ஹேமடைட் வகையையும், மேக்னடைட் வகையையும் சார்ந்தவை.
இரும்புத் தாது படிவு இரும்பின் அளவு
மேக்னடைட் 72.4%
ஹேமடைட் 69.9%
கோதைட் 62.9%
லைமனைட் 55%
சிடரைட் 48.2%
நாட்டின் மொத்த இரும்புத்தாது உற்பத்தியில் ஜார்கண்ட் மாநிலம் 25% உற்பத்தி செய்து முதன்மையான உற்பத்தியாளராகத் திகழ்கிறது. சிங்பம், தன்பாத், ஹசாரிபாக் மற்றும் ராஞ்சி மாவட்டங்கள் இம்மாநிலத்தின் முக்கிய உற்பத்தியாளர்களாகும். ஒடிசா மாநிலம் 21 சதவிகித உற்பத்தியுடன் இரண்டாம் நிலையில் உள்ளது. சுந்தர்கார், மயூர்பஞ்ச், சம்பல்பூர் மற்றும் கீயோஞ்சர் மாவட்டங்கள் இதன் முக்கிய உற்பத்தி மாவட்டங்களாகும்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் மேக்னடைட் உற்பத்தி 18 சதவிகிதமாகும். ராஜ்கார் மற்றும் பிலாஸ்பூர் மாவட்டங்கள் இதன் முக்கிய உற்பத்தியாளராகும். கர்நாடக மாநிலத்தின் 20 சதவிகித மேக்னடைட் உற்பத்தி சித்திரதுர்கா, சிக்மங்களூர், சிமோகா மற்றும் தார்வார் மாவட்டங்கள் உற்பத்தி செய்கின்றன. ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஒவ்வொன்றும் சுமார் 5 சதவிகித உற்பத்தியைச் செய்கின்றன. ஆந்திரப்பிரதேசத்தில் கர்னூல், குண்டூர், கடப்பா மற்றும் அனந்தபூர் மாவட்டங்களும் தமிழ்நாட்டில் சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களும் குறிப்பிடத்தக்க அளவு இரும்புத்தாது உற்பத்தி செய்கின்றன.
இந்திய இரும்பு எஃகு ஆணையம் (SAIL) – இந்தியாவில் இரும்பு எஃகு தொழிற்சாலைகள் திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்கு இது முக்கிய பங்காற்றுகிறது.
மாங்கனீசு
மாங்கனீசு ஒரு வெளிர் சாம்பல் நிறமுடைய மிகவும் கடினமான ஆனால் எளிதில் உடையும் தன்மையுடையதாகும். மாங்கனீசு எப்பொழுதும் இரும்பு, லேட்ரைட் மற்றும் பிறதாதுக்களுடன் கலந்து காணப்படும். இது இரும்பு எஃகு மற்றும் உலோகக் கலவை உற்பத்திக்கு அடிப்படையான மூலப்பொருள் ஆகும். ஒரு டன் இரும்பு எஃகு உற்பத்தி செய்வதற்கு 10 கிலோ மாங்கனீசு தேவைப்படுகிறது. வெளுக்கும் தூள், பூச்சிக்கொல்லிகள், வண்ணப்பூச்சிகள், மின்கலன்கள் போன்றவைத் தயாரிப்பதற்கு மாங்கனீசு பயன்படுகின்றது.
நாக்பூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இந்திய மாங்கனீசு தாது நிறுவனம் (Manganese ore India Ltd) 50 சதவிகித மாங்கனீசை உற்பத்திச் செய்து, உலகச் சந்தை மதிப்பீட்டில் முதன்மையானதாக திகழ்கிறது.
தாமிரம்
தாமிரம் வரலாற்றிற்கு முந்தைய காலத்திலேயே மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் உலோகமாகும். இதை மனிதர்கள் பல்வேறு வகைகளில் பயன்படுத்துகின்றனர். இவை நெகிழும் தன்மையுடையதால் இவற்றை பல்வேறு வடிவமுடைய பொருள்களாக உருவாக்க முடியும். தாமிரத்தை துத்தநாகத்துடன் கலந்து பித்தளையையும், தகரத்துடன் சேர்த்து வெண்கலமும் உருவாக்கப்படுகின்றது. தாமிரமானது, சமையல் பாத்திரங்கள் மற்றும் பொதுப் பயன்பாட்டிற்கான பல பொருள்களின் உற்பத்திக்கும் பயன்படுத்தப்படுகிறது. தற்காலத்தில் தாமிரமானது பல்வேறு வகைப்பட்ட மின்சாரக்கம்பிகள், மின்சாதனங்கள், கம்பி வடங்கள் போன்றவற்றின் உற்பத்திக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
இந்துஸ்தான் தாமிர நிறுவனம் இந்திய அரசால் நிர்வகிக்கப்படும் இந்திய சுரங்கத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கக்கூடிய பொதுத்துறை நிறுவனமாகும்.
பாக்சைட்
அலுமினியம் பாக்சைட் தாதுவிலிருந்து பெறப்படுகிறது. புவியின் மேற்பரப்பில் படிவுகளாக பாக்சைட் தாது பரவிக் காணப்படுகிறது. குறைந்த எடை மற்றும் கடினத்தன்மைக் கொண்ட பண்புகளால் அலுமினியமானது விமானக் கட்டுமானங்களிலும் தானியங்கி இயந்திரங்களிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சிமெண்ட்மற்றும் இரசாயனத் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
NALCO என்று அழைக்கப்படும் தேசிய அலுமினிய நிறுவனம் 1981இல் தொடங்கப்பட்டது. இதன் மையங்கள் ஒடிசா மாநிலத்தில் அஞ்சுல், டாமன், சோடி போன்ற இடங்களில் உள்ளன. இது இந்திய சுரங்கத்துறை அமைச்சகத்தின் கீழ் 1981ஆம் ஆண்டு பொதுத்துறை நிறுவனமாக உருவாக்கப்பட்டது.
அலோகக் கனிமங்கள்
இவ்வகைக் கனிமங்களில் உலோகத் தன்மை இருப்பதில்லை. மைக்கா, சுண்ணாம்பு, ஜிப்சம், நைட்ரேட், பொட்டாஷ் டோலமைட், நிலக்கரி, பெட்ரோலியம் முதலியன அலோகக் கனிமங்களாகும்.
மைக்கா
மைக்கா ஒளி புகும் தன்மையுடையது, எளிதில் மிக மெல்லிய பட்டைகளாக பிரித்தெடுக்கக்கூடியவை, நிறமற்றவை, நெகிழும் தன்மையுடையவை. மேலும் குறைந்த மின் இழப்பையும், அதிகமின் அழுத்தத்தை தாங்கக்கூடிய திறன் பெற்றதால் மின் காப்பான்கள் (Insulators) தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இவை மின் கடத்தாதன்மையுடயவை ஆதலால்மின்சாதனங்கள் தயாரிப்பில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் மசகு எண்ணெய், மருந்துகள், வர்ணப்பூச்சுதல் மற்றும் மெருகு எண்ணெய் போன்ற தயாரிப்புகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.
சுண்ணாம்புக்கல்
கால்சியம் கார்போனேட் கொண்ட பாறைகளிலோ அல்லது கால்சியம் மற்றும் மெக்னீசியம் அல்லது இரண்டும் கலந்த பாறைகளிலோ சுண்ணாம்புக்கல் காணப்படுகிறது. சுண்ணாம்புக்கல், சிறிய அளவிலான சிலிக்கா, அலுமினா, இரும்பு ஆக்ஸைடு, பாஸ்பரஸ் மற்றும் கந்தகம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
சோடா சாம்பல், எரிசோடா, வெளுக்கும் தூள் (bleaching powder), காகிதம், சிமெண்ட், இரும்பு எஃகு உற்பத்தி, கண்ணாடி மற்றும் உரங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகளில் சுண்ணம்புக்கல் பயன்படுகிறது. இதன் முக்கிய உற்பத்தியாளர்கள் கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, இராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், தமிழ்நாடு, மேகாலயா, குஜராத், சத்தீஸ்கர் மற்றும் ஆகிய மாநிலங்கள் ஆகும்.
ஜிப்சம்
ஜிப்சம் என்பது கால்சியம் சல்ஃபேட்டின் நீர்மக் கனிமமாகும். இது சுண்ணாம்புப்பாறை, மணற்பாறை, மாக்கல் போன்ற படிவுப்பாறைகளில் ஒளிப்புகும், வெண்ணிறமான தாதுவாக காணப்படுகிறது. இது சிமெண்ட், உரங்கள், சுவர்ப்பட்டிகள், பாரிஸ் சாந்து (plaster of paris) போன்றவற்றின் உற்பத்திற்கு மூலப்பொருளாகவும், மண் வளமூட்டியாகவும் பயன்படுகிறது. இராஜஸ்தான், தமிழ்நாடு, குஜராத், இமாச்சலப்பிரதேசம், கர்நாடகம், உத்தரகாண்ட், ஆந்திரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஜிப்சம் உற்பத்தியாளர்களாகும்.
ஆற்றல் வளங்கள்
ஆற்றல் வளங்கள் புதுப்பிக்கக்கூடிய வளம் மற்றும் புதுப்பிக்க இயலாத வளங்கள் என வகைப்படுத்தப்படுள்ளன. நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் அணுசக்தி கனிமங்கள் ஆகியன புதுபிக்கஇயலா வளங்கள் ஆகும். நீர், சூரிய ஒளி, காற்று, உயிரின கழிவு மற்றும் ஓதங்கள் ஆகியன புதுப்பிக்கக்கூடிய வளங்கள் ஆகும்.
புதுபிக்க இயலா வளங்கள்:
- நிலக்கரி
நிலக்கரி என்பது எளிதில் எரியக்கூடிய உயிரின படிமங்கள் கொண்ட ஒரு நீரக கனிமம் ஆகும். இது படிவுப் பாறைகளில் கிடைக்கிறது. ஒரு நாட்டின் தொழிற்சாலை வளர்ச்சிக்கு மிக இன்றியமையாததாக இருப்பதால் கரிம அளவின் அடிப்படையில் நிலக்கரி கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்படுகிறது.
ஆந்தரசைட் : 80 முதல் 90%
பிட்டுமினஸ் : 60 முதல் 80%
பழுப்பு நிலக்கரி : 40 முதல் 60%
மரக்கரி : 40 %த்திற்கும் குறைவு.
நிலக்கரி இந்தியாவின் மிக முக்கியமான ஆற்றல் மூலமாக விளங்குகிறது. இதை வாயுவாகவும், எண்ணெயாகவும் மற்றும் அனல் மின்சக்தியாகவும் மாற்ற இயலும். மேலும் இரசாயனங்கள், சாயங்கள், உரங்கள், வர்ணப்பூசுதல் மற்றும் வெடிமருந்துகள் போன்ற பொருள்கள் தயாரிப்பிற்கும் மூலப் பொருளாக பயன்படுகின்றன.
ஜார்கண்ட் மாநிலம் இந்தியாவில் அதிக நிலக்கரி உற்பத்தியைச் செய்கிறது. சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மத்தியப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம் மற்றும் மகராஷ்டிரா மாநிலங்கள் நிலக்கரி உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தென் மற்றும் மேற்கு தீபகற்ப இந்தியப் பகுதிகளில் குறிப்பாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்களில் பழுப்பு நிலக்கரி படிவுகள் காணப்படுகின்றன.
இந்திய நிலக்கரி அமைச்சகமானது, நிலக்கரி அகழாய்வு மற்றும் உற்பத்தி மேம்பாட்டு கொள்கைகளை முடிவு செய்கிறது. இந்திய நிலக்கரி நிறுவனம் (CIL), இந்திய தேசிய பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLCIL) மற்றும் சிங்கரேனி கோலாரிஸ் நிலக்கரி நிறுவனம் (SCCL) ஆகியன இவ்வமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனங்களாகும்.
இந்திய அரசால் நிர்வகிக்கப்படும் இந்திய நிலக்கரி நிறுவனம் மேற்கு வங்காளத்திலுள்ள கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.
- பெட்ரோலியம் / கச்சா எண்ணெய்
பெட்ரோலியம் என்ற சொல் “பெட்ரோ” (பாறை) மற்றும் ஒலியம் (எண்ணெய்) என்ற இரு இலத்தின் சொற்களிலிருந்து பெறப்பட்டது. எனவே பெட்ரோலியம் என்பது புவியிலுள்ள பாறைப்படிவுகளில் பெறப்படும் எண்ணெய் ஆகும். இது தாது எண்ணெய் என்றும் அழைக்கப்படுகிறது. 90-95 சதவிகிதம் நீரக கரிமமும், மீதமுள்ள 5-10 சதவிகிதம் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன், கந்தகம் மற்றும் கரிம உலோகங்களையும் கொண்ட எளிதில் எரியக்கூடிய ஒரு திரவமாகும்.
பெட்ரோலியமானது எரிசக்தி உற்பத்திக்கும், வாகனங்கள், வானூர்திகள், கப்பல்கள் மற்றும் இரயில்களுக்கு எரிபொருளாகவும் பயன்படுகிறது. மசகு எண்ணெய், மண்ணெண்ணெய், களிம்புகள், தார், சோப்பு, டெர்லின், மெழுகு ஆகியன இதன் உப உற்பத்தி பொருள்கள் ஆகும். இந்தியாவில் கச்சா எண்ணெயானது கடற்கரைப் பகுதிகளிலும், உள்நாட்டுப் பகுதிகளிலும் கிடைக்கின்றது.
கடற்கரையில் அமைந்துள்ள எண்ணெய் வயல்கள்
- மும்பை ஹை எண்ணெய் வயல் (65% மிகப்பெரியது)
- குஜராத் கடற்கரை ( 2வது பெரியது )
- பேஸ்ஸைம் எண்ணெய் வயல் மும்பை ஹையின் தென்பகுதி
- அலியாபெத்-எண்ணெய் வயல் (பவ் நகரின் தென்பகுதி)
- அந்தமான் நிகோபாரின் உட்பகுதிகள், மன்னார் வளைகுடா
- காம்பே- லூனி பகுதிகள்
நிலப்பகுதியில் அமைந்துள்ள எண்ணெய் வயல்கள்
- பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு, (திப்ருகார், சில்சாகர், மாவட்டங்கள் அசாம்)
- திக்பாய் எண்ணெய் வயல் (நாட்டின் மிகப் பழமையான எண்ணெய் வயல்)
- நாகர்காட்டியா எண்ணெய் வயல் (திக்பாய்க்கு தென்மேற்கு பகுதி)
- மோரான் ஹக்ரிஜன் – எண்ணெய் வயல் (நாகர்காட்டியாவின் தென்மேற்கு பகுதி)
- ருத்ரசாகர்-லாவா எண்ணெய் வயல்கள் (அசாம் மாநிலத்தில் சிப்சாகர் மாவட்டம்)
- சர்மா பள்ளத்தாக்கு- (மணிப்பூர்)
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் (MOP & NG) இது இந்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் ஒரு அமைச்சகமாகும். இவ்வமைச்சகம் ஆய்வு செய்தல், உற்பத்தி, சுத்திகரித்தல், விநியோகம், ஏற்றுமதி, இறக்குமதி, எண்ணெய் பாதுகப்பு, இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலிய உற்பத்திப் பொருள் போன்றவற்றிற்கு பொறுப்பு ஏற்கிறது.
இயற்கை எரிவாயு
இயற்கை எரிவாயு பொதுவாக பெட்ரோலிய பகுதிகளுடன் இணைந்து காணப்படுகிறது. இது இயற்கையாக உருவாகும் ஒரு நீர்ம கரிம வாயுவாகும். இவற்றின் பெரும்பகுதி மீத்தேன் வாயுவும் பல்வேறு அளவுகளில் உள்ள மதுக்கரியம் (alkaline) சிறிய சதவிகிதத்திலான கார்பன்- டை- ஆக்ஸைடு, நைட்ரஜன் மற்றும் நைட்ரஜன் சல்பைடு கலந்த கலவைகளால் ஆனது. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அழிந்து புதையுண்ட தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் அதிக வெப்பம் மற்றும் அழுத்தம் காரணமாக மட்குவதன் மூலம் உண்டாக்கூடிய ஒரு வாயு. இது வெப்பப்படுத்தலுக்கும், சமையலுக்கும் மின் உற்பத்திக்கும் ஆதாரமாக விளங்குகிறது. மேலும் வாகனங்களுக்கு எரிபொருளாகவும், நெகிழிகள் உற்பத்தி, வியாபார முக்கியத்துவம் வாய்ந்த கரிம இரசாயனப் பொருள்கள் தயாரிப்பதற்கும் பயன்படுகிறது.
வட இந்தியப் பகுதிகள் அதிக அளவிலான மூன்றாம் நிலைப் பாறைகள் மற்றும் வண்டல் படிவுகளைக் கொண்டுள்ளது. ஒரு காலத்தில் ஆழம் குறைந்த,கடலுக்கு அடியில் இருந்தபடிவுப்பாறைகள், எண்ணெய் மற்றும் இயற்கை வாயுப் படிவுகளாக உருவாகின. அதிக அளவிலான இயற்கை எரிவாயு மும்பை ஹை மற்றும் பேஸ்ஸைம் எண்ணெய் வயல் பகுதிகளில் காணப்படுகிறது.
குஜராத், அசாம், தமிழ்நாடு (நெய்பள்ளத்தூர் மற்றும் மங்கமடம் (தஞ்சாவூர்), திரிபுரா, இராஜஸ்தான், அருணாச்சலப் பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இயற்கை எரிவாயு கண்டறியப்பட்டுள்ளது.
கெயில் நிறுவனம் (GAIL): இந்திய இயற்கை எரிவாயு நிறுவனமானது மத்திய அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு நிறுவனமாகும். இது இயற்கை எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோகம் செய்யும் நிறுவனங்களுள் ஒரு மிகப்பெரிய நிறுவனமாகும். இதன் தலைமையகம் புதுடெல்லியில் உள்ளது.
அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) (அதிக அழுத்தத்துடன் அடைக்கப்பட்ட மீத்தேன்) என்பது பெட்ரோல், டீசல் மற்றும் திரவ பெட்ரோலிய எரிவாயு ஆகியவற்றிற்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய ஒரு எரிபொருளாகும். இது காற்றை விட இலகுவானதாகவும், அதிகவேகமாக பரவும் தன்மைக் கொண்டதால் விரைவில் மறைந்து விடுகிறது. இதனால் மற்ற எரிபொருள்களை விட ஆபத்து குறைவானதாகும். விவசாயக் கழிவுகளிலிருந்து எடுக்கப்படும் உயிரிவாயு, புதுடெல்லி, அகமதாபாத், மும்பை, பூனா, கொல்கத்தா, லக்னோ, கான்பூர், வாராணாசி போன்ற நகரங்களில் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது.
மரபுசார் ஆற்றல் வளங்கள்
அ) அனல் மின்சக்தி
உயிரினப் படிமங்களான நிலக்கரி, பெட்ரோலியம், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு போன்றவற்றிலிருந்து அனல் மின்சக்தி தயாரிக்கப்படுகிறது. தேசிய அனல்மின் நிறுவனம் (NTPC)1975ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்சமயம் தேசிய அனல்மின் நிறுவனத்தின் கீழ் 13 நிலக்கரி சார் அனல்மின் திட்டங்களும் 7 இயற்கை எரிவாயு திரவ எரிப்பொருள் சார்ந்த அனல்மின் திட்டங்களும் அசாம், பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. நெய்வேலி, மேட்டூர், தூத்துக்குடி மற்றும் எண்ணூர் ஆகியன தமிழ்நாட்டின் முக்கிய அனல்மின் நிலையங்களாகும்.
ஆ) அணுசக்தி
அணுக்கரு பிளவு அல்லது இணையும் போது வெளிப்படும் ஆற்றலைப் பயன்படுத்தி அணுமின்சாரம் தயாரிக்கப்படுகிறது. யுரேனியம் மற்றும் தோரியம் தாதுக்களிலிருந்து அணுசக்தி பெறப்படுகிறது. இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் 1969ஆம் அண்டு மும்பைக்கு அருகில் உள்ள தாராப்பூரில் நிறுவப்பட்டது. பின்னர் இராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டாவிற்கு அருகில் உள்ள (100 மெகாவாட்) இரவத் பட்டா (335 மெகாவாட்) என்னுமிடத்தில் அணுமின்நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன.
தமிழ்நாட்டில் கல்பாக்கம் (440 மெகாவாட்) மற்றும் கூடங்குளம் (2,000 மெகாவாட்), உத்தரப்பிரதேசத்தில் நரோரா (235 மெகாவாட்), கர்நாடகாவில் கைகா (235 மெகாவாட்), குஜராத்தில் காக்கரபாரா (235 மெகாவாட்) ஆகிய இடங்களில் அணுமின் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இந்திய அணு மின்சக்தி நிறுவனம் (NPCIL) இந்தியாவின் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இது மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அரசு நிறுவனமாகும். இந்நிறுவனம் அணு மின்சக்தி உற்பத்திக்கான பொறுப்பை வகிக்கிறது.
புதுப்பிக்கக்கூடிய வளங்கள்
அ) நீர்மின்சக்தி
நீர்மின்சக்தி ஓடும் நீரிலிருந்து பெறப்படுகிறது. இம்மின்சக்தி மாசற்ற மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மின் ஆற்றலாக கருதப்படுகிறது. நீர் மின்சக்தி உலக மின்தேவையில் 7 சதவிகிதத்தைப் பூர்த்தி செய்கிறது. புதுப்பிக்கக்கூடிய வளத்திலிருந்து பெறப்படுவதால் மற்ற மின்சார ஆற்றல்களோடு ஒப்பிடுகையில் குறைந்த உற்பத்திச் செலவை உடையதாகவுள்ளது. இது தேவைக்கு ஏற்ப உற்பத்தியை உடனடியாக அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ கூடிய தன்மையுடையது.
இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் 1897ஆம் ஆண்டு டார்ஜிலிங்கில் நிறுவப்பட்டது. இந்திய தேசிய நீர் மின்சக்தி நிறுவனம் ஃபரிதாபாத்தில் அமைந்துள்ளது.
ஆ) சூரியஆற்றல்/சக்தி
சூரிய ஆற்றல் என்பது சூரிய ஒளியை ஒளி மின்னழுத்தக்கலன் மூலமாகவோ அல்லது செறிவூட்டப்பட்ட சூரிய சக்தி மூலமாகவோ மின்னாற்றலாக மாற்றப்படுவதன் மூலம் பெறப்படும் மரபுசாரா ஆற்றலாகும் செறிவூட்டல் முறையில் பெரிய பரப்பளவில் உண்டாகும் சூரிய ஒளிக்கற்றைகள் வில்லைகள் அல்லது கண்ணாடிகள் கொண்டு சிறிய ஒளிக்கற்றையாக ஒரு கலத்தின் மீது குவிக்கப்படுகிறது. மின்அழுத்திகள், ஒளிமின் அழுத்த விளைவு செயல்பாட்டின் மூலம் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றுகின்றன.
இந்தியாவின் சூரிய சக்தி நிறுவனம் புதுடெல்லியை தலைமையிடமாக கொண்டு உள்ளது.
மின்விநியோகம், சந்தைப்படுத்துதல், வீடுகள், நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான பல்வேறு வகையான வெப்ப ஆற்றலை வழங்குதல் போன்றவை சூரிய வெப்ப ஆற்றல் திட்டத்தின் முக்கிய பல்நோக்கங்கள் ஆகும். இதனை மரபுசாரா எரிசக்தி வள அமைச்சகம் (MNES) செயல்படுத்தி வருகிறது.
இ) காற்று சக்தி
காற்று வீச்சு அல்லது உந்துதலால் ஏற்படும் ஆற்றலை காற்று விசைச்சுற்று கலன்களின் உதவியோடு மின்னாற்றலாக மாற்றப்பட்டு காற்றாலை மின்சாரம் பெறப்படுகிறது. இது ஒரு மலிவான மற்றும் மாசற்ற ஆற்றல் வளமாகும். காற்றாலை மின்சாரமானது நீர் ஏற்றுவதற்கும், கப்பல்களை இயக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. காற்று சக்தியானது மிக அதிகமாக கிடைக்கக்கூடிய, புதுப்பிக்கத்தக்க, அனைத்துப் பகுதிகளிலும் பரவி இருக்கின்ற, சுத்தமான, மாசற்ற புவிமண்டலத்தை வெப்பமயமாக்கும் வாயுக்களை வெளிப்படுத்தாத ஒரு வளமாகும். காற்றாலை நிறுவுவதற்கு குறைவான இடமே போதுமானது.
இந்தியாவிலேயே அதிக அளவு காற்றாலைகளைக் கொண்டுள்ள மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முப்பந்தல் – பெருங்குடிப்பகுதி உலகிலேயே அதிக காற்றாலைகளைக் கொண்ட பெரிய காற்றாலை பண்ணை ஆகும்.
இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தி 1986ஆம் ஆண்டு முதன் முதலில் குஜராத்தில் உள்ள கடற்கரைப்பகுதியான ஓகா, மகாராஷ்டிரா இரத்தினகிரி, தமிழ்நாட்டிலுள்ள கடற்கரைப்பகுதியான தூத்துக்குடியில் 55 கிலோவாட் உற்பத்தி திறனுடன் நிறுவப்பட்ட காற்றாலைகள் மூலம் வளர்ச்சியடைய ஆரம்பித்தது. கடந்த சில வருடங்களாக இதன் உற்பத்தி திறன் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. இந்தியா உலக அளவில் அதிக காற்றாலைத் திறன் கொண்ட நாடுகளில் நான்காவது இடத்தில் உள்ளது.
தேசிய காற்றாற்றல் நிறுவனம் (NIEW) சென்னையிலுள்ள இந்நிறுவனம் 1998இல் ஒரு தன்னாட்சி நிறுவனமாக புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வளங்கள் அமைச்சக நிர்வாகத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டது. இதன் பணிகளானது காற்று வள மதிப்பிடு ஆய்வு மற்றும் சான்றளித்தல் ஆகும்.
ஈ) உயிரி சக்தி:
விலங்குகளின் கழிவுகள், சமையல் கழிவுகள், ஆகாய தாமரை கழிவுகள், வேளாண்கழிவுகள் மற்றும் நகரக் கழிவுகள் போன்ற உயிரின கழிவுகளிலிருந்து உயிரி சக்தி பெறப்படுகிறது. இது மாசற்ற மற்றும் மலிவான ஒரு எரிசக்தி வளமாகும். உயிரி எரிசக்தி பெரும்பாலும் வீட்டு உபயோகங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
உ) ஓத மற்றும் அலை சக்தி
கடல் ஓதங்கள் மற்றும் கடல் அலைகள் என இரண்டு வள ஆதாரங்களிலிருந்து மின்ஆற்றல் பெறப்படுகிறது. காம்பே வளைகுடா ஓத சக்தி உற்பத்திக்கு மிக உகந்த இடமாக உள்ளது. இவற்றிற்கு அடுத்தாற்போல் கட்ச் வளைகுடா பகுதி (1000 MW), சுந்தரவனப்பகுதி (100 MW) ஆகியன இதர குறிப்பிடதக்க திறன் பெற்ற பகுதிகளாகும். 150 KW உற்பத்தி திறன் கொண்ட அலை சக்தி ஆலை, திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள விழிஞ்சம் என்ற பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. இதே போன்று மற்றொரு ஆலை அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் நிறுவப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் கனிம வளங்கள்
நெய்வேலி, மிகப்பெரிய பழுப்பு நிலக்கரி வளங்களைக் கொண்டுள்ளது. இராமநாதபுரம் பகுதிகளில் நிலக்கரி படிமங்கள் காணப்படுகின்றன. காவிரி வடிநிலப் பகுதியில் எண்ணெய் மற்றும் இயற்கைவாயு படிவுகள் காணப்படுகின்றன.
சேலம் மாவட்டத்தில் உள்ள கஞ்சமலையிலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கவுதி மற்றும் வேடியப்பன் மலையிலும் இரும்புத்தாது படிவுகள் காணப்படுகின்றன.
சேர்வராயன் குன்றுகள், கோத்தகிரி, உதகமண்டலம், பழனிமலை மற்றும் கொல்லிமலைப் பகுதிகளில் பாக்சைட் தாதுகள் காணப்படுகின்றன.
திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஜிப்சம் கிடைக்கிறது.
கன்னியாகுமரி கடற்கரை மணல் பரப்புகளில் இல்மனைட் மற்றும் ரூட்டைல் காணப்படுகிறது.
கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், இராமநாதபுரம், சேலம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சுண்ணாம்புக்கல் கிடைக்கிறது.
கோயம்புத்தூர், தர்மபுரி, கரூர், நாமக்கல், நீலகிரி, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தென்காசி, திருப்பத்துர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் மேக்னசைட் கிடைக்கிறது.
பெல்ட்ஸ்பார்க், படிகக்கல், தாமிரம் மற்றும் காரீயம் ஆகியவை மாநிலத்தின் சில பகுதிகளில் காணப்படுகின்றன.