Blog

முதுமொழிக்காஞ்சி

7
Class 45 இலக்கியம்‌ - தமிழ்‌ அறிஞர்களும்‌, தமிழ்த்தொண்டும்

முதுமொழிக்காஞ்சி

பெயர்க்காரணம் :
முதுமொழி = மூத்தோர் சொல்,
காஞ்சி = மகளிர் இடையணி

மூத்தோர் சொற்கள் பலவற்றைக் கோர்த்த கோவை முதுமொழிக்காஞ்சி எனப்படுகிறது.

  • பாவகை = குறள் தாழிசை
  • ஒவ்வொன்றும் பத்து அடிகளைக் கொண்ட பத்துப் பாடல்களை மட்டுமே கொண்டுள்ளது.
  • ஒவ்வொரு பத்தும், “ஆர்கலி உலகத்து” என்று தொடங்குகிறது.
  • இதன் பாடல்கள் குறள்வெண்பா செந்துறை என்ற யாப்பால் ஆனவை.
பத்துப் பிரிவும், பிரிவுக்கு பத்து பாடலுமாக உள்ளது.
  1. சிறந்த பத்து
  2. அறிவுப் பத்து
  3. பழியாப் பத்து
  4. துவ்வாப் பத்து
  5. அல்ல பத்து
  6. இல்லைப் பத்து
  7. பொய்ப் பத்து
  8. எளிய பத்து
  9. நல்கூர்ந்த பத்து
  10. தண்டாப் பத்து

சிறந்த பத்து

(சிறந்ததெனக்‌ கூறப்படும்‌ பத்துப்‌ பொருளைத்‌ தன்னகத்தே கொண்டிருப்பது சிறந்த பத்து)

  1. ஆர்கலி உலகத்து மக்கட்‌ கெல்லாம்‌ ஓதலில்‌ சிறந்தன்(று) ஒழுக்கம்‌ உடைமை.
  2. காதலில்‌ சிறந்தன்று கண்ணஞ்சப்‌ படுதல்‌.
  3. மேதையில்‌ சிறந்தன்று கற்றது மறவாமை.
  4. வண்மையில்‌ சிறந்தன்று வாய்மை யுடைமை.
  5. இளமையில்‌ சிறந்தன்று மெய்பிணி இன்மை.
  6. நலனுடை மையின்‌ நாணுச்‌ சிறந்தன்று.
  7. குலனுடை மையின்‌ கற்புச்‌ சிறந்தன்று.
  8. கற்றலின்‌ கற்றாரை வழிபடுதல்‌ சிறந்தன்று.
  9. செற்றாரைச்‌ செறுத்தலில்‌ தற்செய்கை சிறந்தன்று.
  10. முன்பெரு கலின்பின்‌ சிறுகாமை சிறந்தன்று.                  – மதுரைக்‌ கூடலூர்கிழார்‌

பொருள்‌ :

  1. கடல்சூழ்ந்த இவ்வுலக மக்கள்‌ அனைவர்க்கும்‌ கற்றலைவிட ஒழுக்கமுடைமையே சிறந்தது.
  2. பிறர்க்கு அன்புகாட்டுவதிலும்‌ செயல்களால்‌ அவர்‌ போற்றும்படி நடத்தலே மேலானது.
  3. அறிவுநுட்பத்தினும்‌ கற்றபொருளை மறவாமை மேன்மையானது.
  4. வளமான வாழ்க்கையைக்காட்டிலும்‌ வாய்மை உடையவராக வாழ்வது உயர்ந்தது.
  5. இளமையைக்‌ காட்டிலும்‌ நோயற்ற வாழ்வே சிறந்தது.
  6. அழகுடையவராக இருப்பதினும்‌ நாணமுடையவராக இருப்பதே மேலானது.
  7. குலப்பெருமையைவிட ஒழுக்கமுடைமையே சிறந்தது.
  8. சிறந்த நூல்களைக்‌ கற்றலைவிடவும்‌ கற்றறிந்த பெரியாரைப்‌ பின்பற்றி யொழுகுதல்‌ சிறப்பானது.
  9. பகைவரைத்‌ தண்டிப்பதனைவிட, அவருக்கு நன்மைசெய்தல்‌ சிறந்தது.
  10. முற்காலத்துப்‌ பெருகிய செல்வத்தைப்‌ பின்னர்க்‌ குறைவுபடாமல்‌ காத்தலே சிறந்தது.

சொற்பொருள்‌ : ஆர்கலி – நிறைந்த ஓசையுடைய கடல்‌; காதல்‌ – அன்பு, விருப்பம்‌; மேதை – அறிவு நுட்பம்‌; வண்மை – ஈகை, கொடை; பிணி – நோய்‌; மெய்‌ – உடம்பு; நாணம்‌ – செய்யக்‌ கூடாததனைச்‌ செய்ய அச்சப்படுதல்‌; சிறந்தன்று – சிறந்தது; வழிபடுதல்‌ – போற்றி வணங்குதல்‌.

ஆசிரியர்‌ குறிப்பு

பெயர்‌ : மதுரைக்‌ கூடலூர்கிழார்‌

பிறந்த ஊர்‌ : கூடலூர்‌

சிறப்பு : இவர்தம்‌ பாடல்களை நச்சினார்க்கினியர்‌ முதலிய நல்லுரையாசிரியர்கள்‌ மேற்கோள்களாகக்‌ கையாண்டுள்ளார்கள்‌.

காலம்‌ : சங்க காலத்துக்குப்பின்‌ வாழ்ந்தவர்‌.

நூல்‌ குறிப்பு : முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சித்திணையின்‌ துறைகளுள்‌ ஒன்று. பதினெண்‌ கீழ்க்கணக்கு நூல்களுள்‌ ஒன்றான இந்நூல்‌, உலகியல்‌ உண்மைகளைத்‌ தெளிவாக எடுத்து இயம்புகிறது. இந்நூல்‌, அறவுரைக்கோவை, ஆத்திச்சூடியின் முன்னோடி எனவும்‌ வழங்கப்படுகிறது. இதில்‌ பத்து அதிகாரங்கள்‌ உள்ளன. ஒவ்வோர்‌ அதிகாரத்திலும்‌ பத்துச்‌ செய்யுள்கள்‌ உள்ளன. இந்நூல்‌ நூறு பாடல்களால்‌ ஆனது.

நூல்‌ பயன்‌ : முதுமொழிக்காஞ்சி கற்போரின்‌ குற்றங்களை நீக்கி, அறம்‌ பொருள்‌ இன்பங்களை அடைவதற்கான வழிமுறைகளை அறவுரைகளாகக்‌ கூறி நல்வழிப்படுத்தும்‌.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories