முத்துலெட்சுமி அம்மையார்
May 22, 2025 2025-05-22 6:41முத்துலெட்சுமி அம்மையார்
முத்துலெட்சுமி அம்மையார்
மகளிர் குலத் திலகம் டாக்டர் முத்துலெட்சுமி
டாக்டர் முத்துலெட்சுமி 1886ஆம் ஆண்டு ஜுலைத் திங்கள் 30ஆம் நாள், புதுக்கோட்டை சிற்றரசில் பிறந்தார். ஆண்கள் மட்டுமே படித்த புதுக்கோட்டை கல்லூரியில் முதன் முதல் இடம்பெற்ற ஒரே மாணவி அவர். சென்னை மருத்துவக் கல்லூரியில் 1912 ஆம் ஆண்டில் மருத்துவராகப் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி. அக்கால ஆங்கிலேய அரசில்
தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர் இடம்பெற்ற, சென்னைச் சட்டமன்றத்தில் நியமிக்கப் பெற்ற முதல் பெண்மணியாகவும், பின்னர் அந்த மன்றத்தின் துணைத் தலைவராகவும் விளங்கிச் சிறப்பாகக் கடமையாற்றினார். ஆடவரைப் போன்றே மகளிருக்கும் வாக்குரிமையும், சொத்துரிமையும் அளிக்க வேண்டும் என்று கேட்டவர்.
அகில இந்திய மகளிர் மன்றத்தின் முதல் தலைவராகவும், சென்னை நகராட்சியின் முதல் அதிகாரியாகவும் அவர் தேர்வு செய்யப்பட்டுப் பலரும் பாராட்டுமாறு பணி செய்தார். விடுதலை இயக்கத் தலைவர்களின் போராட்ட உணர்வை மதித்த அம்மையார் கவி பாரதியையும் அறிந்தவராக இருந்தார்.
பெண்கள் கல்வி கற்கும் உரிமை, பெண்களுக்கு ஆண்களைப் போன்று வாழும் சமத்துவ உரிமை, பெண்களுக்குச் சுதந்தரமான வாழ்வு, பெண் குழந்தைகளைக் காத்தல், பெண்கள்
முன்னேற்றத்திற்கு வழிசெய்தல் எனப் பல்வேறு நோக்கங்களுக்காகவும் பாடுபட்டார்.
கொடிய புற்றுநோயால் துன்புற்று மடியும் மகளிர் வேதனையைத் துடைக்க, லண்டனில் இருந்த ராயல் புற்றுநோய் மருத்துவமனைக்குச் சென்று அங்கு வழங்கும் சிகிச்சை முறையைப் பயின்று வந்து, சென்னை, அடையாறில் ஒரு புற்றுநோய் மருத்துவமனையைத் தொடங்கி, அதன் மூலம் மகளிர் குலத்துக்கு அரும்பணி ஆற்றினார்.
விதவைப் பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட மகளிர் ஆகியோர் நலன் காத்திடுவதற்கென்று, தாம்பரத்தில் அரசு உதவியுடன் மகளிர் புனர்வாழ்வு இல்லம் ஒன்றைத் தொடங்க வழிசெய்தார். நாட்டில் சிறுவயதிலேயே பெண்குழந்தைகட்குத் திருமணம் செய்யும் தீமை பரவலாக நடைபெற்றதால், அதைத் தடுத்திடுவதற்கு வழிசெய்திட அரசுக்கு எடுத்துக்கூறி, சிறு வயதினர் திருமணத் தடைச் சட்டம் கொண்டுவரச் செய்தார். சட்டமன்றத்தில் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் கொண்டுவந்தார்.
பாதுகாப்பற்ற பெண்களைக் காத்திட 1930ஆம் ஆண்டில் அடையாற்றில் ‘ஔவை இல்லம்’ தொடங்கினார்.
பெண்களுக்கு எட்டாம் வகுப்பு வரை இலவசக் கல்வி வழங்க வழிசெய்தார். சமுதாயச் சேவையே மூச்சாகக் கொண்டு வாழ்ந்த மகளிர் குலத்திலகம் டாக்டர் முத்துலெட்சுமி அவர்களுக்கு, நடுவண் அரசு 1956 இல் ‘பத்மபூஷன்‘ விருது வழங்கிப் பெருமைப்படுத்தியது.
அம்மையாரின் பெயரில் தாய், சேய் நலன் காக்கும் நோக்குடன், கருவுற்ற தாய்மார்கட்கு நல்ல சத்துணவு கிடைத்திட வழிசெய்ய மகப்பேறுக்கு முன் மூன்று மாதத்திற்கும், பின் மூன்று மாதத்திற்கும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது.