Blog

விடுதலைப் போராட்டத்தில் மகளிரின் பங்கு

Class 82 தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள்

விடுதலைப் போராட்டத்தில் மகளிரின் பங்கு

கடலூர்‌ அஞ்சலையம்மாள்‌

இவர்‌ 1890ஆம்‌ ஆண்டு கடலூரில்‌ உள்ள முதுநகரில்‌ எளிமையான குடும்பத்தில்‌ பிறந்து வளர்ந்தார்‌. 1921ஆம்‌ ஆண்டு காந்தியடிகள்‌ ஒத்துழையாமை இயக்கத்தைத்‌ தொடங்கிய போதே, அஞ்சலையம்மாளும்‌ தமது பொதுவாழ்க்கையைத்‌ தொடங்கினார்‌.

அஞ்சலையம்மாள்‌, நீலன்‌ சிலையை அகற்றும்‌ போராட்டம்‌, உப்புக்‌ காய்ச்சும்‌ போராட்டம்‌, மறியல்‌ போராட்டம்‌, தனியாள்‌ அறப்போராட்டம்‌, வெள்ளையனே வெளியேறு இயக்கம்‌ ஆகிய அனைத்துப்‌ போராட்டங்‌ களிலும்‌ கலந்துகொண்டு பல ஆண்டு சிறையில்‌ வாடினார்‌. மேலும்‌ அவர்‌ கடலூர்‌, திருச்சி, வேலூர்‌, பெல்லாரி ஆகிய சிறைகளில்‌ இருந்துள்ளார்‌. வேலூர்ச்‌ சிறையில்‌ இருந்தபோது, கருவுற்றநிலையில்‌ இருந்த அவரை ஆங்கிலேய அரசு வெளியில்‌ அனுப்பிவிட்டு, மகப்பேற்றிற்குப்‌ பின்‌ மீண்டும்‌ சிறையில்‌ அடைத்தது.

குடும்பச்‌ சொத்துகளையும்‌, குடியிருந்த வீட்டையும்‌ விற்று, விடுதலைப்‌ போராட்டத்திற்காகச்‌ செலவு செய்தார்‌. நீலன்‌ சிலையை அகற்றும்‌ போராட்டத்தில்‌ தம்முடைய ஒன்பது வயது மகளையும்‌ ஈடுபடுத்தினார்‌. இவருடன்‌ இவர்‌ மகளும்‌ சிறைத்தண்டனை பெற்றார்‌. காந்தியடிகள்‌ சிறையில்‌ இருப்பவர்களைப்‌ பார்க்க வந்தபோது, ஒன்பது வயதேயான அம்மாக்கண்ணு, அஞ்சலையம்மாளின்‌ மகள்‌ என்பதனை அறிந்து, மிகவும்‌ மகிழ்வுற்று, அச்சிறுமியைத்‌ தன்னுடன்‌ வார்தாவில்‌ உள்ள ஆசிரமத்துக்கு அழைத்துச்சென்று லீலாவதி எனப்‌ பெயரிட்டுப்‌ படிக்கவும்‌ வைத்தார்‌.

காந்தியடிகள்‌ கடலூருக்கு வந்தபோது, அவரைச்‌ சந்திப்பதற்கு அஞ்சலையம்மாளுக்கு ஆங்கில அரசு தடை விதித்தது. ஆனால்‌, அஞ்சலையம்மாள்‌ பர்தா வேடமணிந்து, குதிரைவண்டியில்‌ காந்தியடிகளை ஏற்றிச்சென்றார்‌. அதனால்‌, காந்தியடிகள்‌ அஞ்சலையம்மாளைத்‌ தென்னாட்டின்‌ ஜான்சிராணி என்றழைத்தார்‌.

அம்புஜத்தம்மாள்‌

வசதியான குடும்பத்தில்‌ 1899ஆம்‌ ஆண்டு பிறந்தார்‌. வீட்டிலேயே தமிழ்‌, ஆங்கிலம்‌, இந்தி, சமற்கிருதம்‌ எனப்‌ பலமொழிகளையும்‌ திறம்படப்‌ பயின்றார்‌. அன்னை கஸ்தூரிபாயின்‌ எளிமையான தோற்றத்தினால்‌ ஈர்க்கப்பட்டு, எளிமையாக வாழ்ந்தார்‌. பட்டு, பகட்டு, ஆங்கிலமோகம்‌ அனைத்தையும்‌ துறந்தார்‌. பல்வேறு கட்டுப்பாடுகள்‌ மிகுந்த குடும்பத்திலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு நாட்டு விடுதலைக்காகப்‌ பாடுபட்டார்‌ .

வை.மு.கோதைநாயகி அம்மாள்‌, ருக்குமணி லட்சுமிபதி முதலியவர்களோடு நட்புக்கொண்டு பெண்ணடிமைக்கு எதிராகக்‌ குரல்‌ கொடுத்தார்‌. மகாகவி பாரதியாரின்‌ பாடல்களைப்‌ பாடி விடுதலையுணர்வை ஊட்டினார்‌. ஆங்கிலேய அரசுக்கு எதிராகச்‌ செயல்பட்டார்‌. அந்நியத்‌ துணிகள்‌ விற்கும்‌ கடைக்கு முன்பாக மறியல்‌ போராட்டம்‌ நிகழ்த்தியதனால்‌ வேலூர்ச்சிறையில்‌ அடைக்கப்பட்டார்‌. சிறையில்‌ இருந்தபோதும்‌, மனம்‌ தளராது தான்‌ கற்றுக்கொண்ட மொழிகளைப்‌ பிறருக்குக்‌ கற்றுக்கொடுத்தார்‌.

காந்தியடிகளால்‌ தத்தெடுக்கப்பட்ட மகள்‌ என்று செல்லமாக அம்புஜத்தம்மாள்‌ அழைக்கப்பட்டார்‌. தன்‌ செல்வாக்கையோ தந்தையின்‌ செல்வாக்கையோ பயன்படுத்த விரும்பாமல்‌ நேர்மையான பெண்மணியாக வாழ்ந்துகாட்டினார்‌. தந்தையின்‌ பெயரோடு, காந்தியடிகளின்‌ பெயரையும்‌ இணைத்துச்‌ சீனிவாச காந்தி நிலையம்‌ என்னும்‌ தொண்டு நிறுவனத்தை அமைத்தார்‌.

தம்‌ எழுபதாண்டு நினைவாக, நான்‌ கண்ட பாரதம்‌ என்னும்‌ அரிய நூலை எழுதியுள்ளார்‌. 1964ஆம்‌ ஆண்டு தாமரைத்திரு (பத்மஸ்ரீ) விருது பெற்றுள்ளார்‌.

 

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories