அன்புடைமை
September 14, 2023 2025-01-18 13:43அன்புடைமை
1.அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.***
விளக்கம்:
அன்பை அடைத்து வைக்க தாழ்ப்பாள் இல்லை; அன்புக்கு உரியவரின் துன்பத்தைப் பார்த்ததுமே அன்பு, கண்ணீராக வெளிப்பட்டு நிற்கும்.
(ஆர்வலர்: – அன்புடையவர்; புன்கணீர் – துன்பம் கண்டு பெருகும் கண்ணீர்; பூசல் தரும் – வெளிப்பட்டு நிற்கும்.)
- அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. ***
விளக்கம்: அன்பில்லாதவர் எல்லாப் பொருளும் தமக்கு மட்டும் உரியது என்று எண்ணுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்.
(என்பு – எலும்பு. இங்கு உடல், பொருள், ஆவியைக் குறிக்கிறது)
- அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
விளக்கம்: உடம்போடு உயிர் இணைந்து இருப்பதனைப்போல, வாழ்க்கை நெறியோடு அன்பு இணைந்து இருக்கிறது.
(வழக்கு – வாழ்க்கைநெறி; ஆருயிர் – அருமையான உயிர்; என்பு – எலும்பு)
- அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு. ***
விளக்கம்: அன்பு விருப்பத்தைத் தரும். விருப்பம் அனைவரிடமும் நட்புக்கொள்ளும் பெருஞ்சிறப்பைத் தரும்.
(ஈனும் – தரும்; ஆர்வம் – விருப்பம்; வெறுப்பை நீக்கி விருப்பத்தை உண்டாக்கும் என்பது பொருள். நண்பு – நட்பு)
- அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
விளக்கம்:அன்போடு பொருந்திய வாழ்க்கை நெறியைக் கடைப்பிடித்தவர் உலகத்தில் மகிழ்ச்சி உடையவர் ஆவர்.
(வையகம் – உலகம்; என்ப – என்பார்கள்;)
- அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
விளக்கம்: அன்பு அறத்தை மட்டும் சார்ந்தது என்று கூறுவோர் அறியாதவர்; வீரத்திற்கும் அன்புதான் துணை.
(மறம் – வீரம்; கருணை, வீரம் இரண்டிற்குமே அன்புதான் அடிப்படை என்பது பொருள்)
- என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம். ***
விளக்கம்: எலும்பு இல்லாத உயிர்களை வெயில் வருத்தி அழிப்பதுபோல, அன்பில்லாத உயிர்களை அறம் வருத்தி அழிக்கும்.
(என்பிலது – எலும்பு இல்லாதது (புழு); அன்பிலது – அன்பில்லாத உயிர்கள்.)
- அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம்தளிர்த் தற்று.
விளக்கம்: பாலை நிலத்தில் உள்ள வாடிப்போன மரம் தளிர்க்காது. அதுபோல, நெஞ்சில் அன்பு இல்லாத மனிதர் வாழ்க்கை தளிர்க்காது.
(அன்பகத்து இல்லா – அன்பு + அகத்து + இல்லா – அன்பு உள்ளத்தில் இல்லாத; வன்பாற்கண் – வன்பால் + கண் – பாலை நிலத்தில். தளிர்த்தற்று – தளிர்த்து + அற்று – தளிர்த்ததுபோல; வற்றல்மரம் – வாடிய மரம்)
- புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
விளக்கம்: நெஞ்சில் அன்பு இல்லாதவர்க்குக் கை, கால் முதலிய உடல் உறுப்புகளால் என்ன பயன் ?
(புறத்துறுப்பு – உடல் உறுப்புகள்; எவன் செய்யும் – என்ன பயன் ?; அகத்துறுப்பு – மனத்தின் உறுப்பு, அன்பு)
- அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு. ***
விளக்கம்: அன்பு செய்வதுதான் உடம்பில் உயிர் இருப்பதற்கு அடையாளம். அன்பில்லாதவர்
உடம்பு வெறும் தோலால் மூடப்பட்ட எலும்புதான். அங்கு உயிர் இல்லை.