நட்பு
September 25, 2023 2025-01-11 13:57நட்பு
நட்பு
- செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
பொருள் : நட்பைப்போலச் செய்துகொள்வதற்கு அரிய உறவுகள் எவையும் இல்லை. அந்த நட்பைப்போலச் செய்கின்ற செயலுக்குச் சிறந்த பாதுகாப்பு வேறு
எவையும் இல்லை.
சொற்பொருள் : வினை – செயல்; காப்பு – காவல்.
- நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு. *
பொருள் : அறிவுடையவர்களின் நட்பு வளர்பிறைபோல நாளும் வளரும்; அறிவிலார் நட்பு தேய்பிறைபோல நாளும் தேயும்.
சொற்பொருள் : நீரவர் – அறிவுடையார்; கேண்மை – நட்பு ; பேதையார் – அறிவிலார்.
- நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு. *
பொருள் : நல்ல நூல்களின், பொருள் கற்கக் கற்க . இன்பந்தரும். அதுபோல, பண்புடையாரின் நட்பானது பழகப்பழக இன்பம் தரும்.
சொற்பொருள் : நவில்தொறும் – கற்கக்கற்க; நயம் – இன்பம்.
- நகுதல் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு.
பொருள் : நட்பு என்பது, சிரித்துப் பேசி மகிழ்வதற்கு மட்டுமன்று; நண்பரிடத்துத் தவறு காணும்போது, அவரைக் கடிந்துரைத்துத் திருத்தி நல்வழிப்படுத்துதலும் ஆகும்.
சொற்பொருள் : நகுதல் – சிரித்தல்; நட்டல் – நட்புக்கொள்ளுதல்; இடித்தல் – கடிந்துரைத்தல்.
- புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும். *
பொருள் : இருவர் சேர்ந்திருத்தலும் நெருங்கிப் பழகுதலும் நட்பாகாது. இருவர்தம் ஒத்த மனவுணர்வே நட்புரிமையைக் கொடுக்கும்.
சொற்பொருள்: கிழமை – உரிமை.
- முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு, *
பொருள் : முகம் மட்டும் மலரும்படி நட்புக்கொள்வது நட்பாகாது; உள்ளம் மகிழும்படி அன்பாக நட்புக்கொள்வதே நல்ல நட்பு.
சொற்பொருள் : முகநக – முகம் மலர; அகம் – உள்ளம்.
- அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.
பொருள் : அழிவைத்தரும் துன்பங்களிலிருந்து நண்பனை விலக்கி, அவனை நல்வழியில் செலுத்துதல் வேண்டும். அவனுக்கு அழிவுநேரும்போது உடனிருந்து தானும் அதில் பங்கேற்று, அழிவிலிருந்து மீட்டல் வேண்டும்.
சொற்பொருள் : ஆறு – நல்வழி; உய்த்து – செலுத்தி; அல்லல் – துன்பம்.
- உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு. *
பொருள் : உடுத்திய ஆடை நழுவும்போது தன்னையறியாமல் கையானது, தானே சென்று காக்கும்; அதுபோல, நண்பன் துன்புறும்போது விரைந்து சென்று அவனை அத்துன்பத்திலிருந்து காப்பதே நட்பு.
சொற்பொருள் : உடுக்கை – ஆடை; இடுக்கண் – துன்பம், களைவது – நீக்குவது.
- நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
பொருள் : நட்புக்குச் சிறந்த நிலை எதுவென்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், இயலும்பொழுது எல்லாம் உதவி செய்து தாங்குதல்.
சொற்பொருள் : கொட்பின்றி – வேறுபாடு இல்லாமல்; ஊன்றும் – தாங்கும்.
- இனையர் இவர்எமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.
பொருள் : இவர் எமக்கு இத்தகைய அன்பினர்; யாம் இவர்க்கு இத்துணைச் சிறப்புடையவர் எனப் புகழ்ந்து கூறினும் அது கீழான நட்பாகும்.
சொற்பொருள் : புனைதல் – புகழ்தல்; புல் – கீழான