பழமொழி நானூறு
October 3, 2023 2025-03-19 9:43பழமொழி நானூறு
பழமொழி நானூறு
பழமொழி நானூறு
-
பாடல் எண்ணிக்கை : 400
-
இயற்றப்பட்ட காலம் : கி. பி. நான்காம் நூற்றாண்டு எனக் கருதப்படுகின்றது
-
ஆசிரியர் : முன்றுரை அரையனார்
-
பாவகை : வெண்பா
-
இந்நூலை பதிப்பித்தவர் = செல்வசேகர முதலியார்
பெயர்க்காரணம்
ஒரு கதையோ, வரலாற்று நிகழ்வோ கட்டி உரைக்கப்பட்டு பாடலின் இறுதியில் பழமொழி நீதி சுட்டப்படுவதாலும்,நானூறு பாடல்களை உடையதாலும் பழமொழி நானூறு எனப் பெயர்பெற்றது.
வேறு பெயர்கள்
பழமொழி
உலக வசனம்
மேற்கோள்கள்
“அணியெல்லாம் ஆடையின் பின்”
“கடன் கொண்டும் செய்வார் கடன்”
“கற்றலின் கேட்டலே நன்று”
“குன்றின்மேல் இட்ட விளக்கு”
“தனிமரம் காடாதல் இல்”
“திங்களை நாய்க் குரைத் தற்று”
“நுணலும் தன் வாயால் கெடும்”
“ஆற்றுணா வேண்டுவ தில்.”
“ஒன்றுறா முன்றிலோ இல்”
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் உள்ள முப்பெரும் அறநூல்கள் திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு.
தொல்காப்பியர் பழமொழியை “முதுமொழி” என்கிறார்.
பழமொழி என்ற சொல் முதன் முதலில் அகநானூறில் வருகிறது.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் மிகுதியாக வரலாற்று குறிப்புகளை கூறும் நூல் இதுவே.
ஆற்றவும் கற்றார்அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை – அந்நாடு
வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவ தில்.
பாடல்பொருள்
கற்க வேண்டியநூல்களை நிறைவாகக் கற்றவர் அறிவுடையவர் ஆவார். அவருடைய புகழ் நான்கு திசைகளிலும் பரவும். அவருடைய புகழ் பரவாத நாடு இல்லை. அந்த நாடுகள் எல்லாம் வேற்று நாடுகள் இல்லை; தம்முடைய நாடுகளே. எனவே, அந்நாடுகளுக்குச் செல்லும்போது வழிநடை உணவை, அவர் எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இல்லை.
சொல்பொருள்
ஆற்றவும் – நிறைவாக; நாற்றிசை – நான்கு + திசை; தமவேயாம் – தம்முடைய நாடுகளே; ஆற்றுணா -ஆறு + உணா; ஆறு – வழி; உணா – உணவு. வழிநடை உணவு. இதனைக் “கட்டுச்சோறு என இக்காலத்தில் கூறுவர். எந்நாட்டிற்குச் சென்றாலும், அந்நாட்டில் கற்றோரை வரவேற்று உணவு அளிப்பர் என்பது பாடல் உணர்த்தும் கருத்து.
ஆசிரியர் குறிப்பு
இந்நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார். முன்றுறை என்பது ஊர்ப்பெயர். அரையன் என்னும் சொல், அரசனைக் குறிக்கும். இவர் முன்றுறை என்ற ஊரை ஆண்ட அரசராக இருக்கலாம்; அல்லது, அரையன் என்பது புலவரின் குடிப்பெயராகவும் இருக்கலாம்.
நூல் குறிப்பு
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று பழமொழி நானூறு. நானூறு பாடல்களைக் கொண்ட நூல் இது. இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி இடம்பெற்றுள்ளது. இப்பாடலில் வரும் பழமொழி, “ஆற்றுணா வேண்டுவது இல்”என்பது. இதற்குக் “கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா” என்பது பொருள்.
மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும்
பாரி மடமகள் பாண்மகற்கு – நீர்உலையுள்
பொன்திறந்து கொண்டு புகாவாக நல்கினாள்
ஒன்றுறா முன்றிலோ இல்
சொல்பொருள்
மாரி – மழை; வறந்திருந்த – வறண்டிருந்த; புகாவா – உணவாக; மடமகள் – இளமகள்; நல்கினாள் – கொடுத்தாள்; முன்றில் – வீட்டின் முன் இடம் (திண்ணை)
பாடல்பொருள்
மழையின்றி வறட்சி நிலவிய காலத்தில், பாரி மகளிரான அங்கவை, சங்கவை ஆகியோரிடம் பாணர்கள் இரந்து நின்றனர். பாரிமகளிர் உலைநீரில் பொன் இட்டு அவர்களுக்குத் தந்தனர்.அதனால் பொருள் ஏதும் இல்லாத வீடு எதுவும் இல்லை என்பதை அறியலாம்
ஒன்றுறா முன்றிலோ இல் – ஒன்றுமில்லாத வீடு எதுவுமில்லை என்பதே ஒன்றாகு முன்றிலோ இல் என்னும் பழமொழியின் பொருள் ஆகும்.