Blog

ஔவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள்

44
Class 45 இலக்கியம்‌ - தமிழ்‌ அறிஞர்களும்‌, தமிழ்த்தொண்டும்

ஔவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள்

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனின் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத்

தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்

சென்ற இடமெல்லாம் சிறப்பு.                                     – ஔவையார்

மூதுரையின் ஆசிரியர் ஒளவையார்.

இவர் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.

மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள்.

சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல் மூதுரை எனப் பெயர் பெற்றது.

இந்நூலில் முப்பத்தொரு பாடல்கள் உள்ளன.

 

எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில் இவரது பாடல்கள் 59 உள்ளன.

அவற்றில் புறத்திணைப் பாடல்கள் 33. ஏனைய 26 அகத்திணைப் பாடல்கள்.

அதிக பாடல்களைப் பாடிய புலவர் வரிசையில் இவர் 9 ஆம் நிலையில் உள்ளார்.

இவருக்கு அடுத்த நிலையில் உள்ள நல்லந்துவனார் 40 பாடல் பாடியவராகக் காணப்படுகிறார்.

ஐங்குறுநூறு தொகுப்பில் 100 பாடல்கள் பாடிய புலவர்களை விட்டுவிட்டுப் பார்த்தால், சங்கநூல்களில் அதிக பாடல்கள் பாடிய புலவர்கள் வரிசையில் இவர் கபிலர், பரணர் ஆகியோருக்கு அடுத்த நிலையில் உள்ளார்.

ஔவையாரால் பாடப்பட்ட அரசர்கள்
சேரமான் மாரி வெண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி ஆகிய மூவரும் நண்பர்களாகக் கூடி மகிழ்ந்திருக்கக் கண்டு, வானத்து மீன்கள் போலவும், மழையின் திவலைகள் போலவும் உயர்ந்தோங்கிப் பொலிக என வாழ்த்தினார்.
வள்ளல்கள்
அதியமான் நெடுமான் அஞ்சி, அதியமான் அஞ்சி மகன் பொகுட்டெழினி ஆகிரோரை ஔவை பல பாடல்களில் போற்றியுள்ளார்.

மூவேந்தர் பறம்புமலையை முற்றியிருந்தபோது அவன் வளர்த்த குருவிப் பறந்து சென்று நெற்கதிர்களைக் கொண்டுவந்து தந்து பாரிக்கு உணவளித்தனவாம்.

விறலியர் சமைத்த கீரையோடு சேர்த்துச் சமைத்து உண்பதற்கு ஔவையார் நாஞ்சில் வள்ளுவனிடம் அரிசி கேட்டாராம். இந்த வள்ளுவன் தன் தகுதிக்கு அரிசி தருவது இழிவு எனக் கருதி போர்க்களிறு ஒன்றைப் பரிசாகத் தந்தானாம். இதனைத் தேற்றா ஈகை எனக் குறிப்பிட்டு ஔவை வருந்துகிறார்.

ஔவையார்

“சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,

ஆதல் நின்னகத்து அடக்கிச்,

சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே.” – ஒளவையார்‌

 

பாடியவர்: அவ்வையார்.

பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.

திணை : தும்பை.

துறை: வாழ்த்தியல்.

‘சிறியிலை நெல்லி’ப் பழம் ஒன்றை, உண்டால் சாகாமல் நீண்டநாள் வாழக்கூடிய அதன் தன்மையை உன் மனத்திலேயே வைத்துப் பூட்டிக்கொண்டு, நான் சாகாமல் நீண்டநாள் வாழவேண்டும் என்று எண்ணி என்னை உண்ணச் செய்தாயே. (அதனால் நீ சிவபெருமானைப் போல வாழ்க).

 

“இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டிக்

கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய் அணிந்து,

கடியுடை வியன்நக ரவ்வே : அவ்வே,

பகைவர்க் குத்திக், கோடுநுதி சிதைந்து,

கொல்துறைக் குற்றில மாதோ ; என்றும்

உண் டாயின் பதம் கொடுத்து,

இல் லாயின் உடன் உண்ணும்,

இல்லோர் ஒக்கல் தலைவன்,

அண்ணல்எம் கோமான், வைந் நுதி வேலே.” – ஒளவையார்

 

பாடியவர்: ஒளவையார்.

பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.

திணை : பாடாண்.

துறை: வாண் மங்கலம்,

இங்கு உன் போர்ப்படைக் கருவிகள் பாதுகாப்பாகப் படைக்கொட்டிலில் மயில்பீலி அணிவித்து, மாலை சூட்டப்பெற்று, கூர்முனை திருத்தம் செய்யப்பட்டு, அதில் துருப் பிடிக்காமல் இருக்க நெய் பூசப்பட்டு அழகாக வைக்கப்பட்டுள்ளன. அங்கு, என் தலைவன் பயன்படுத்திய வேல்கள் பகைவரைக் குத்தி, நுனி ஒடிந்தும் மழுங்கியும் சிதைந்து, செப்பம் செய்வதற்காகக் கொல்லன் உலைக்களத்தில் கிடக்கின்றன. (உன்னிடம் படை இருக்கிறது. வீரர்களின் பயிற்சி இல்லை) (என் தலைவனிடம் பயிற்சி பெற்ற வீரர்கள் வீரர்கள் மிகுதி) என் தலைவன் பொருள் இல்லாதவர்களுக்கு உறவுக்காரன். தன்னிடம் பொருள் இருக்கும்போது அதன் பயனைப் பிறருக்குக் கொடுத்துவிடுவான். தன்னிடம் இல்லாதபோது அவர்களோடு பங்கிட்டுக்கொண்டு உண்பான்.

 

கல்வி அறிவில் சிறந்த அறவோரையும் நல்லொழுக்கம் மிக்க மக்களையும் கொண்டது நம் தமிழ்நாடு. இவர்களைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது மன்னர்களின் கடமையாகக் கருதப்பட்டது.

அறிவிற் சிறந்த புலவர்கள் மன்னர்களுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கி நாட்டைப் பாதுகாக்க உதவினர்.

அதியமான், தொண்டைமான் இருவருக்கும் இடையே நடைபெற இருந்த போரை தடுத்து நிறுத்தியவர் ஔவையார்.

தமிழ்நாட்டிற்கு கரும்பைக் கொண்டு வந்தவர்கள் அதியமானின் முன்னோர்கள்.

அதியமான் அதிசய நெல்லிக்கனி ஒன்றைப் பறித்து வந்தார். ஒளவையாரை உண்ணச் செய்தார்.

 

நாடாகு ஒன்றோ; காடாகு ஒன்றோ;

அவலாகு ஒன்றோ; மிசையாகு ஒன்றோ;

எவ்வழி நல்லவர் ஆடவர்

அவ்வழி நல்லை; வாழிய நிலனே!

பொருள்‌

நிலமே! நீ நாடாக இருந்தால்‌ என்ன? காடாக இருந்தால்‌ என்ன? பள்ளமாக இருந்தால்‌ என்ன? மேடாக இருந்தால்‌ என்ன? எங்கே ஆண்கள்‌ நல்லவர்களாக இருக்கிறார்களோ அங்கு நீயும்‌ நல்லதாக இருக்கிறாய்‌, நிலமே, நீ வாழ்க!

சொல்பொருள்‌

ஒன்றோ – தொடரும்‌ சொல்‌; நாடாகு ஒன்றோ – நாடாக இருந்தால்‌ என்ன;  அவல்‌ – பள்ளம்‌; மிசை – மேடு; ஆடவர்‌ – ஆண்கள்‌; நல்லை – நல்லதாக இருக்கிறாய்‌.

நூல்‌ குறிப்பு

புறநானூறு – புறம்‌ + நான்கு + நூறு. எட்டுத்தொகை நூல்களுள்‌ ஒன்று புறநானூறு. இந்நூல்‌, புலவர்‌ பலர்‌ இயற்றிய பாடல்களின்‌ தொகுப்பு. எட்டுத்தொகையும்‌ பத்துப்பாட்டும்‌ சங்க நூல்களாம்‌. சங்க இலக்கியம்‌ ஈராயிரம்‌ ஆண்டுகள்‌ பழைமை உடையது. தமிழர்களின்‌ வரலாறு, பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும்‌ நூலாகப்‌ புறநானூறு திகழ்கிறது.

ஆசிரியர்‌ குறிப்பு

ஒளவையார்‌ சங்கப்‌ புலவர்‌; அதியமானின்‌ நண்பர்‌. அரிய நெல்லிக்கனியை அதியமானிடம்‌ பெற்றவர்‌. சங்க காலத்தில்‌ பெண்‌ கவிஞர்‌ பலர்‌ இருந்தனர்‌. அவர்களுள்‌ மிகுதியான பாடல்கள்‌ பாடியவர்‌ ஒளவையார்‌. சங்கப்பாடல்‌ பாடிய ஒளவையாரும்‌, ஆத்திசூடி பாடிய ஒளவையாரும்‌ ஒருவர்‌ அல்லர்‌; வேறு வேறானவர்‌.

கற்றதுகைம் மண்ணளவு கல்லா(து) உலகளவென்(று)
உத்தர கலைமடந்தை ஓதுகிறாள் – மெத்த
வெறும்பந் தயம்கூற வேண்டாம் புலவீர்
எறும்புந்தன் கையால்எண் சாண்          – ஒளவையார்‌

பொருள்‌ : புலவர்களே! இதுவரை நாம்‌ படித்தது கைம்மண்ணளவே. இன்னும்‌ படிக்க வேண்டியவை உலகளவு என நினைத்து கலைமகளே இன்றளவும்‌ படித்துக்கொண்டே இருக்கிறாள்‌. ஆதலால்‌, மிகுதியாகப்‌ படித்துவிட்டோம்‌ என்னும்‌ செருக்குடன்‌ வீண்‌ வல்லமை பேசுதல்‌ வேண்டா. சிறு எறும்பும்‌ அதன்‌ கையினால்‌ எண்‌ சாண்‌ உடையதே.

சொற்பொருள்‌ : கைம்மண்ணளவு – ஒரு சாண்‌ எனவும்‌ பொருள்‌ கொள்வர்‌; மெத்த – மிகுதியாக; பந்தயம்‌ – போட்டி; புலவீர்‌ – புலவர்களே; கலைமடந்தை – கலைமகள்‌.

ஆசிரியர்‌ குறிப்பு : இங்குக்‌ குறிக்கப்படும்‌ ஒளவையார்‌, சங்க கால ஒளவையாருக்கு மிகவும்‌ பிற்பட்டவர்‌. கம்பர்‌, ஒட்டக்கூத்தர்‌, புகழேந்திப்புலவர்‌ முதலிய புலவர்கள்‌ இவர்‌ காலத்தில்‌ வாழ்ந்ததாகக்‌ கூறுவர்‌.

நூல்‌ குறிப்பு : புலவர்‌ பலர்‌, பல்வேறு சூழ்நிலைக்கு ஏற்ப அவ்வப்போது பாடிய பாடல்களின்‌ தொகுப்பே தனிப்பாடல்‌ திரட்டு. இதனை, இராமநாதபுரம்‌ மன்னர்‌ பொன்னுசாமி வேண்டுதலுக்கிணங்க, சந்திரசேகர கவிராசப்‌ பண்டிதர்‌ தமிழகம்‌ முழுவதும்‌ சென்று தேடித்‌ தொகுத்தார்‌.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories