ஓவியம்
October 6, 2023 2025-01-11 13:56ஓவியம்
ஓவியம்
ஓவியம் வரையப் பயன்படும் துணியை எழினி, திரைச்சீலை, கிழி, படாம் எனப் பல பெயர்களில் அழைப்பர்.
கலம்காரி ஓவியங்கள் என்னும் பெயரில் தமிழகத்திலும் ஆந்திராவிலும் ஓவியர்கள் வரைந்து வருகின்றனர். பாரசீக மொழியில் கலம் என்றால் பேனா என்று பொருள். காரி என்பது கலைவடிவம் என்று பொருள்படும். கலம்காரி என்பது பேனாவால் செய்யப்படும் வேலைப்பாடு ஆகும்.
புனையா ஓவியங்கள் பற்றி நம் இலக்கியங்கள் கூறும் செய்திகள்
“புனையா ஓவியம் கடுப்பப் புனைவில் “- நெடுநல்வாடை
“புனையா ஓவியம் புறம் போந்தன்ன” – மணிமேகலை.
ஓவிய மண்டபத்தில் பல வகை ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. ஓவியங்கள் குறித்து அறிந்தோர் அறியாதவர்களுக்கு விளக்கிக் கூறினர் என்ற செய்தி பரிபாடலில் இடம் பெற்றுள்ளது.
“இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம்
துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும்” -பரிபாடல்
கருத்துப்பட ஓவியம் இந்தியா இதழில் பாரதியார்தான் முதன்முதலில் தமிழில் அறிமுகப்படுத்தினார். இப்போது பெரும்பாலான இதழ்களில் பார்க்க முடியும் கருத்துப்பட ஓவியம் மற்றொரு வடிவமே கேலிச்சித்திரம் ஆகும். மனித உருவங்களை விந்தையான தோற்றங்களில் நகைச்சுவை தோன்றும்படி வரைவதையே கேலிச்சித்திரம் என்பர்.
ஓவியம் வேறுபெயர்கள் : ஓவு, ஓவியம், ஓவம், சித்திரம், படம், படாம், வட்டிகைச்செய்தி
ஓவியம் வரைபவர் வேறுபெயர்கள்: கண்ணுள் வினைஞர், ஓவியப் புலவர், ஓவமாக்கள், கிளவி வல்லோன், சித்திரக்காரர், வித்தகர், ஒவியர், வித்தத வினைஞன்,
ஓவியக் கூடம் வேறுபெயர்கள்: எழுதெழில் அம்பலம், எழுத்துநிலை மண்டபம், சித்திர அம்பலம், சித்திரக்கூடம், சித்திரமாடம், சித்திரமண்டபம், சித்திர சபை.
வரைகருவிகள்: வண்ணந்தீட்டும் கோல் தூரிகை, துகிலிகை, வட்டிகை எனப்பட்டது. வண்ணங்கள் குழப்பும் பலகைக்கு வட்டிகைப் பலகை எனப் பெயரிட்டிருந்தனர்.
ஐரோப்பியக் கலை நுணுக்கத்துடன் இந்தியக் கதை மரபுகளை இணைத்து ஓவியங்களில் புதுமைகளைப் புகுத்தியவர் இராஜா இரவிவர்மா. இவரது ஓவிய முறைகள் பிற்காலத்தில் நாட்காட்டிகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டன. நாட்காட்டி ஓவியம் வரையும் முறையின் முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர் கொண்டையராஜு. நாட்காட்டி ஓவியங்களைப் பசார் பெயிண்டிங் என்றும் அழைப்பர்.
ஓவியங்களை முதலில் கண்ணெழுத்து என்றே வழங்கியுள்ளனர்.
ஓவியம் வரைதற்கு நேர்கோடு, கோணக்கோடு, வளைகோடு முதலியன அடிப்படையாகும். இவ்வாறு வரையப்படுபவை கோட்டோவியங்கள் எனப்படும்.
தொல்காப்பியம் நடுகல் வணக்கம் பற்றிக் கூறுகிறது. நடுகல்லில் போரில் வீரமரணம் எய்திய வீரனது உருவம், பெயர், பெருமைக்குரிய செயல் முதலியனவற்றைப் பொறிக்கும் பழக்கம் இருந்தது. சிற்பி, தான் செதுக்கவிருக்கும் உருவத்தை முதலில் வரைந்து பார்த்த பின்னரே, அவ்வோவியத்தைக்கொண்டு கல்லில் உருவம் அமைத்தல் மரபு. இதன்படி ஆராய்ந்து நோக்கினால் செதுக்குவதற்கு ஓவியம் துணை புரிந்ததனையும், ஒவியம் முன்னரே வளர்ந்திருந்ததனையும் உணர முடிகின்றது.
நச்சினார்க்கினியர் தம் உரையில் ஓவியருக்கு, “நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர்” ஒவிய நூலின் நுணுக்கத்தை நன்கு கற்றுப் புலமைபெற்ற ஆசிரியர் ஒவியப்புலவன் எனப் போற்றப்பட்டார்.
ஒவியக் கலைஞர் குழுவை ஒவிய மாக்கள் என்றழைத்தனர். ஆண் ஓவியர் சித்திராங்கதன் எனவும், பெண் ஒவியர் சித்திரசேனா எனவும் பெயர் பெற்றிருந்தனர்.
ஆடல் மகள் மாதவி, “ஒவியச் செந்நூல் உரை நூற்கிடக்கையும் கற்றுத்துறை போகப் பொற்றொடி மடந்தையாக இருந்தனள்’ எனச் சிலம்பு பகர்கிறது. இதிலிருந்து ஓவியக் கலைக்கெனத் தனி இலக்கண நூல்கள் இருந்தன என்பதனைத் தெரிந்துகொள்ளலாம்.
புறநானூற்றில், “ஒவத்தனைய இடனுடை வனப்பு” என வீட்டின் அழகை ஓவியத்திற்கு ஒப்ப வைத்துக் கவிஞர் போற்றுகிறார்.
வண்ணங்கலவாமல் கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவதனைப் புனையா ஒவியம் என்றழைத்தனர்.
ஆடு முதலான பன்னிரண்டு இராசிகளையும், விண்மீன்களையும் வரைந்த செய்தி, நெடுநல்வாடை என்னும் சங்க நூல் தரும் அரிய முடிகின்றது.
ஒவியக்கலைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டியவர்கள் பல்லவப் பேரரசர்களாவர்.
கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் சித்திரக்காரப்புலி எனப் புகழ்கின்றனர் இம்மன்னனே சிறந்த ஒவியனாகப் புகழ்பெற்றிருந்தான். தட்சிணசித்திரம் என்னும் ஒவிய நூலுக்கு இம்மன்னன் உரை எழுதியுள்ளான்.
புதுக்கோட்டைக்கு அருகே சித்தன்னவாசல் என்னும் குகைக்கோவில் ஒவியங்கள், ஒவியக் கருவூலங்களாக வைத்துப் போற்றத்தகுந்தன. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் அவனிப சேகர ஸ்ரீவல்லபன் என்ற பாண்டிய மன்னன் காலத்தில், மதுரை ஆசிரியர் இளம்கெளதமன் இவ்வோவியங்களை வரைந்தார் எனக் கல்வெட்டுச் செய்தி அறிவிக்கின்றது.