பெயரெச்சம் வகை அறிதல்
December 7, 2023 2025-01-29 6:29பெயரெச்சம் வகை அறிதல்
எச்சம்
படித்த, படித்து ஆகிய சொற்களில் பொருள் முற்றுப்பெறவில்லை. இவ்வாறு பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும். எச்சம் இருவகைப்படும்
-
பெயரெச்சம்,
-
வினையெச்சம்
பெயரெச்சம்
படித்த என்னும் சொல் மாணவன், மாணவி, பள்ளி, புத்தகம், ஆண்டு போன்ற பெயர்ச்சொற்களுள் ஒன்றைக் கொண்டு முடியும்.
(எ.கா.) படித்த மாணவன்.
படித்த பள்ளி.
இவ்வாறு பெயரைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் ஆகும். பெயரெச்சம் மூன்று காலத்திலும் வரும்.
(எ.கா.) பாடிய பாடல் – இறந்தகாலப் பெயரெச்சம்
பாடுகின்ற பாடல் – நிகழ்காலப் பெயரெச்சம்
பாடும் பாடல் – எதிர்காலப் பெயரெச்சம்
தெரிநிலை, குறிப்புப் பெயரச்சங்கள்
எழுதிய கடிதம் – இத்தொடரில் உள்ள எழுதிய என்னும் சொல் எழுதுதல் என்னும் செயலையும் இறந்தகாலத்தையும் தெளிவாகக் காட்டுகிறது. இவ்வாறு செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் தெரிநிலைப் பெயரெச்சம் எனப்படும்.
சிறிய கடிதம் – இத்தொடரில் உள்ள சிறிய என்னும் சொல்லின் செயலையோ, காலத்தையோ அறிய முடியவில்லை. பண்பினை மட்டும் குறிப்பாக அறியமுடிகிறது. இவ்வாறு செயலையோ, காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.
வினையெச்சம்
படித்து என்னும் சொல் முடித்தான், வியந்தாள், மகிழ்ந்தார் போன்ற வினைச் சொற்களுள் ஒன்றைக் கொண்டு முடியும்.
(எ.கா.) படித்து முடித்தான்.
படித்து வியந்தான்.
இவ்வாறு வினையைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம் எனப்படும்.
தெரிநிலை, குறிப்பு வினையெச்சங்கள்
எழுதி வந்தான் – இத்தொடரில் உள்ள எழுதி என்னும் சொல் எழுதுதல் என்னும் செயலையும் இறந்த காலத்தையும் தெளிவாகக் காட்டுகிறது. இவ்வாறு செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.
மெல்ல வந்தான் – இத்தொடரில் உள்ள மெல்ல என்னும் சொல் காலத்தை வெளிப்படையாகக் காட்டவில்லை. மெதுவாக என்னும் பண்பை மட்டும் உணர்த்துகிறது. இவ்வாறு காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்திவரும் வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் எனப்படும்.
பெயரெச்சம் |
வினையெச்சம் |
நல்ல |
படுத்து |
எறிந்த |
பாய்ந்து |
வீழ்ந்த |
கடந்து |
மாட்டிய |
பிடித்து |
அழைத்த |
பார்த்து |
முற்றறச்சம்
வள்ளி படித்தனள்
இத்தொடரில் படித்தனள் என்னும் சொல் படித்தாள் என்னும் வினைமுற்றுப் பொருளைத் தருகிறது.
வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள்.
இத்தொடரில் படித்தனள் என்னும் சொல் படித்து என்னும் வினையெச்சப் பொருளைத் தருகிறது. இவ்வாறு ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம் எனப்படும்.
நடந்து |
வினையெச்சம் |
பேசிய |
பெயரெச்சம் |
எடுத்தனன் உண்டான் |
முற்றெச்சம் |
பெரிய |
குறிப்புப் பெயரெச்சம் |
‘அழகிய மரம்’ – இத்தொடரில் உள்ள அழகிய என்னும் சொல்லின் செயலையோ காலத்தையோ அறிய முடியவில்லை. பண்பினை மட்டும் குறிப்பாக அறியமுடிகிறது. இவ்வாறு செயலையோ காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.