கடியலூர் உருத்திரங் கண்ணனார்
July 19, 2024 2025-03-14 9:41கடியலூர் உருத்திரங் கண்ணனார்
கடியலூர் உருத்திரங் கண்ணனார்
கலங்கரை விளக்கம்
வானம் ஊன்றிய மதலை போல
ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி
விண்பொர நிவந்த வேயா மாடத்து
இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி
உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும்
துறை……. – கடியலூர் உருத்திரங் கண்ணனார்
கலங்கரை விளக்கம் பற்றிப் பெரும்பாணாற்றுப்படை கூறும் கருத்து
கலங்கரை விளக்கமானது வானம் கீழே விழாமல் தாங்கிக்கொண்டு இருக்கும் தூண்போலத் தோற்றம் அளிக்கும்
அது ஏணி கொண்டு ஏற முடியாத அளவுக்கு உயரத்தை கொண்டு இருக்கின்றது.
வைக்கோல் ஆகியவற்றால் வேயப்படாமல் வலிமையான சாந்து (சுண்ணாம்பு) பூசப்பட்ட வானத்தை முட்டும் மாடத்தை உடையது
அம்மாடத்தில் இரவில் ஏற்றப்பட்ட எரியும் விளக்கு, கடலில் துறை (எல்லை) அறியாமல் கலங்கும் மரங்கலங்களைத் தன் துறை (எல்லை) நோக்கி அழைப்பது.
சொல்லும் பொருளும்
மதலை – தூண்; சென்னி – உச்சி; ஞெகிழி – தீச்சுடர்; உரவுநீர் – பெருநீர்பரப்பு; அழுவம் – கடல்; கரையும் – அழைக்கும்;
வேயா மாடம் – வைக்கோல் போன்றவற்றால் வேயப்படாது, திண்மையாகச் சாந்து பூசப்பட்ட மாடம்.
நூல்வெளி
கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்ககாலப் புலவர். இவர் கடியலூர் என்ற ஊரில் வாழ்ந்தவர். இவர் பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் தொண்டைமான் இளந்திரையன். இந்நூலின் 346 முதல் 351 வரை உள்ள அடிகள் நமக்கு தரப்பட்டுள்ளன. வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது ஆற்றுப்படை இலக்கியம் ஆகும்.