ஜி.யு.போப்
November 26, 2024 2025-01-17 14:44ஜி.யு.போப்
பிறப்பும் இளமையும்
ஜி. யு. போப் என்றழைக்கப்படும் ஜியார்ஜ் யுக்ளோ போப், கி.பி 1820ஆம் ஆண்டு ஏப்பிரல் 24ஆம் நாள், பிரான்சு நாட்டின் எட்வர்டு தீவில் ஜான் போப்புக்கும், கெதரின் யுளாபுக்கும் மகனாகப் பிறந்தார். போப்பின் பெற்றோர் சிறந்த கல்வியாளர்களாகவும் சமயப்பற்று மிக்கவர்களாகவும் விளங்கினர்.
தொண்டுள்ளம்
போப்பின் தமையனார் ஹென்றி என்பவர், தமிழகத்தில் கிறித்தவச் சமயத்தைப் பரப்பும் சமய குருவாகப் பனரியாற்றிவந்தார். அவரைப்போன்று தாமும் சமயப்பணி ஆற்றவேண்டும் என்று போப் விரும்பினார்.
போப், தம்முடைய பத்தொன்பதாம் அகவையில் தமிழகத்தில் சமயப் பணியாற்றத் தேர்ந்தெடுக்கப் பட்டார். அவர் பாய்மரக் கப்பலில் சென்னை வந்துசேர எட்டுத்திங்களாயின. அந்த எட்டுத்திங்களையும் வீணே கழிக்காமல், தமிழ் நூல்களையும் வடமொழி நூல்களையும் படித்தார். தமிழகம் வந்ததும் தமிழர் முன்னிலையில் சொற்பொழிவு ஆற்றும் அளவுக்குத் தம் திறமையை மேம்படுத்திக்கொண்டார்.
தமிழ்நாட்டில் சமயப்பணி
தமிழ்நாட்டில் சென்னைச் சாந்தோம் பகுதியில் சமயப்பணி ஆற்றிய போப், பின்னர்த் திருநெல்வேலி மாவட்டத்துக்குச் சென்று, சாயர்புரத்தில் தங்கிச் சமயப்பணி ஆற்றத் தொடங்கினார். அவர், அங்குப் பள்ளிகளை நிறுவினார்; கல்விப்பணியையும் சமயப் பணியையும் ஒருங்கே ஆற்றினார்; சமயக்கல்லூரியில் தமிழ் இலக்கியங்கள், ஆங்கில இலக்கியங்கள் முதலியவற்றையும் கிரேக்கம், இலத்தீன், எபிரேயம் முதலிய மொழிகளையும் கற்றுத்தர ஏற்பாடு செய்தார். கணிதம், அறிவாய்வு (தருக்கம்), மெய்யறிவு (தத்துவம்) ஆகியவற்றைக் கற்பிக்கும் கல்லூரி ஆசிரியராகவும் பணியாற்றினார்.
திருமணம்
திருநெல்வேலி மாவட்டம் சாயர்புரத்தில் 1842முதல் 1849ஆம் ஆண்டுவரை கல்விப்பணியும் சமயப் பணியும் ஆற்றிய போப், இங்கிலாந்துக்குச் சென்றார்; 1850ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். தம் மனைவியுடன் மீண்டும் தமிழகம் வந்து, தஞ்சாவூரில் சமயப்பணியாற்றத் தொடங்கினார்.
தமிழ் இலக்கிய ஆர்வம்
தஞ்சையில் பணியாற்றிய எட்டாண்டுக் காலத்தில், புறநானூறு முதலான சங்க நூல்களையும் நன்னூல் முதலான இலக்கணங்களையும் பயின்றார். திருக்குறள், திருவாசகம், நாலடியார் முதலிய நூல்களைப் பலமுறை படித்து, அவற்றின் நயங்களை உணர்ந்தார். அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டால், மேலை நாட்டவர் அறிந்து பயனுறுவர் என்னும் உயர்ந்த எண்ணத்தோடு அம்முயற்சியில் ஈடுபட்டார். இந்தியன் சஞ்சிகை, இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு முதலான ஏடுகளில், தமிழ்மொழிபற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதினார். அக்கட்டுரைகளில் புறநானூற்றுப் பாடல்களும், புறப்பொருள் வெண்பாமாலைத் திணை விளக்கங்களும், தமிழ்ப்புலவர் வரலாறும் இடம்பெற்றிருந்தன.
போப், உயர்ந்த பண்பாட்டுக்குரிய பொறுமை, சினமின்மை, நட்பு முதலானவற்றை விளக்கும் அறுநூறு செய்யுள்களை, அறநூல்களிலிருந்து ஆய்ந்தெடுத்துத் “தமிழ்ச் செய்யுட்கலம்பகம்” என்னும் நூலாகத் தொகுத்ததோடு, அந்தப் பாக்களுக்கு விளக்கமும் தந்துள்ளார்.
பாடநூலின் முன்னோடி
போப், தமிழைக் கற்கும் காலத்திலேயே நூலாசிரியராகவும் விளங்கினார். பள்ளியில் படிக்கும் குழந்தைகள் இலக்கணத்தை நன்கு அறிந்துகொள்ளும்வகையில் வினாவிடை முறையில் அமைந்த இரு இலக்கண நூல்களை அவர் எழுதினார்; பெரியவர்கள் கற்கும் வகையில் இலக்கண நூலொன்றனையும் படைத்தார்.
மேலைநாட்டார் தமிழை எளிதில் கற்றுக்கொள்ளும்வகையில் தமிழ் – ஆங்கில அகராதி ஒன்றனையும், ஆங்கிலம் – தமிழ் அகராதி ஒன்றனையும் போப் வெளியிட்டார்; தமிழில் வரலாற்று நூல்களையும் எழுதினார்; பழைய தமிழ் இலக்கியங்களிலிருந்து சில செய்யுள்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டார் அதனைப் பாடநூலாக வைக்க ஏற்பாடு செய்தார். 1858ஆம் ஆண்டில் உதகமண்டலம் சென்ற அவர், பள்ளி ஒன்றனைத் தொடங்கி, அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
தமிழ்த்தொண்டு
தாயகத்துக்குச் சென்ற போப், 1885முதல் 1908ஆம் ஆண்டுவரை இருபத்து மூன்றாண்டுகளாக இங்கிலாந்துப் பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராகப் பணிபுரிந்தார். திருக்குறளை நாற்பதாண்டுகள் படித்துச் சுவைத்த போப் அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1886ஆம் ஆண்டில் வெளியிட்டார். தமது எண்பதாம் அகவையில், 1900ஆம் ஆண்டு திருவாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பினை வெளியிட்டார். தம் இறுதிக்காலத்தில் புறப்பொருள் வெண்பாமாலை, புறநானூறு, திருவருட்பயன் முதலிய நூல்களையும் பதிப்பித்தார்.
தமிழின் பெருமையைத் தரணி முழுவதும் பரப்பிய போப், 1908ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் பதினொன்றாம் நாள் தம் இன்னுயிரை நீத்தார். அவர், தம் கல்லறையில், இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்” என எழுதவேண்டுமென்று தமது இறுதிமுறியில் (உயில்) எழுதிவைத்தார்.