தவத்திரு குன்றக்குடி அடிகளார்
March 21, 2025 2025-03-22 9:07தவத்திரு குன்றக்குடி அடிகளார்
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
ஒருவர் எல்லாருக்காகவும், எல்லாரும் ஒருவருக்காகவும் என்னும் பொதுவுடைமை நெறியே திருவள்ளுவரின் வாழும் நெறி.
பாவேந்தர் பாரதிதாசனும் உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய் என்றார். செல்வத்துப் பயன் ஒப்புரவு வாழ்க்கை.
பொருளீட்டும் வாழ்க்கையேகூடச் சமூக வாழ்க்கைதான். மற்றவர்களுக்கு வழங்கி, மகிழ்வித்து மகிழ, வாழ்வித்து வாழப் பொருள் தேவை என்பதே பொருளீட்டலுக்கு உரிய கரு. இரப்பார்க்கு இல்லென்று இயைவது கரத்தல் அறிவியல் அன்று; அறமும் அன்று.
வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை மருந்து என்றும் கூறுவது தமிழ் மரபு.
பொருளை மற்றவர்களுக்குக் கொடுத்து மகிழ்ச்சி பெறலாம். செல்வத்தைத் தனியே அனுபவித்தல் இழத்தலுக்குச் சமம்.
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே (புறம் 189; 7-8) என்கிறது புறநானூறு.
ஊருணி நீர்நிறைந்து அற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. (215)
உலகினர் விரும்புமாறு உதவி செய்து வாழ்பவரது செல்வமானது ஊருணியில் நிரம்பிய நீர்போலப் பலருக்கும் பயன்படும்.
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்துஅற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின். (216)
நற்பண்பு உடையவரிடம் செல்வம் சேர்வது ஊருக்குள் பயன் தரும் மரத்தில் பழங்கள் பழுத்திருப்பதைப் போன்றது.
நூல் வெளி
மக்கள் பணியையே இறைப் பணியாக எண்ணித் தம் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார். குன்றக்குடி திருமடத்தின் தலைவராக விளங்கிய இவர் தமது பேச்சாலும் எழுத்தாலும் இறைத்தொண்டும் சமூகத் தொண்டும் இலக்கியத் தொண்டும் ஆற்றியவர். திருக்குறள் நெறியைப் பரப்புவதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டவர். நாயன்மார் அடிச்சுவட்டில், குறட்செல்வம், ஆலயங்கள் சமுதாய மையங்கள் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். அருளோசை, அறிக அறிவியல் உள்ளிட்ட சில இதழ்களையும் நடத்தியுள்ளார். ஒப்புரவு நெறி என்னும் தலைப்பில் அடிகளார் கூறியுள்ள கருத்துகள் நம் பாடப் பகுதியில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.