Blog

புவி அமைவிடம்‌

Class 54 புவியியல்

புவி அமைவிடம்‌

தொலைநோக்கி போன்ற கருவிகள் இல்லாமல், வெறும் கண்களால் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கோள்களை மட்டுமே பார்க்க முடியும்.

புதன், வெள்ளி ஆகிய கோள்கள் சூரிய உதயத்திற்குச் சற்று முன்பும் மாலையில் மறைந்தபின்பும் புலப்படும்.

சூரியக் குடும்பத்தில் மொத்தம் எட்டுக் கோள்கள். எல்லாக் கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. பூமியும் ஒரு கோள்தான். பூமியின் வளிமண்டலத்தில் உயிர்வளி (ஆக்ஸிஜன்) இருப்பதால், பற்பல உயிர்களும், நாமும் வாழ முடிகிறது.

சூரியக் குடும்பத்தின் எட்டுக்கோள்களையும் திடக்கோள்கள், வாயுக்கோள்கள் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகிய நான்கும் திடக்கோள்கள்.

வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய நான்கும் வாயுக்கோள்கள் எனப்படுகின்றன. பிற கோள்களின் வளிமண்டலங்களில் உயிர்வளி தவிரப் பிற வாயுக்கள் உள்ளன. எனவே, அவற்றில் உயிர்கள் வாழ இயலாத நிலை உள்ளது.

23 மணி 56 நிமிடத்திற்கு ஒருமுறை பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது. அதையே பூமியின் தற்சுழற்சி என்கிறோம்.

லீப் ஆண்டு (ஒரு நாள் மிகும் ஆண்டு)
சூரியனைச் சுற்றி வரும் பூமி மிகச் சரியாக 365 நாள்களில் சுற்றி வந்து விடாது. சரியாக 365.24 நாள்கள் ஆகும். நமது வசதிக்காக 365 நாள்கள் என அமைத்துக் கொண்டிருக்கிறோம். மீதமுள்ள சுமார் 1/4 நாளை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருநாளை கூடுதலாகச் சேர்த்து லீப் ஆண்டு என்கிறோம்.

பிப்ரவரி மாதத்தில் 29 என்ற தேதியைக் கூடுதலாகச் சேர்த்துக் கொள்கிறோம். அதாவது குறிப்பிட்ட ஆண்டை மீதியின்றி நான்கால் வகுக்க முடியுமானால் அது லீப் ஆண்டு என்கிறோம். உதாரணமாக, கி. பி. 2000 நான்கால் வகுத்தால்மீதி கிடைப்பதில்லை. எனவே கி.பி.2000 லீப் ஆண்டாகும்.

கண்டங்களில்

கடல்கள் இன்றித் தொடர்ச்சியான அகண்ட நிலப்பரப்புகள் கண்டங்கள் எனப்படுகின்றன. ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா என மொத்தம் ஏழு கண்டங்கள் உலகில் உள்ளன.

1. ஆசியா:

ஏழு கண்டங்களில் மிகப் பெரியது ஆசியா. இது பூமியின் வட அரைக் கோளத்தில் உள்ளது. நாம் வாழும் இந்தியா ஆசியாக் கண்டத்தில் உள்ளது. கோபி குளிர்ப்பாலைவனம், உயரமான இமயமலைத்தொடர் முதலியவை இக்கண்டத்தில் உள்ளன.

2. ஆப்பிரிக்கா:

பரப்பளவில் இது இரண்டாவது பெரிய கண்டம் ஆகும். இந்தக் கண்டம் வட அரைக் கோளத்திலும், தென் அரைக்கோளத்திலும் பரவியுள்ளது. நிலநடுக்கோடு இந்தக் கண்டத்தை இரண்டாகப் பிரிக்கிறது. உலகில் மிக நீளமான நைல் நதி (6695கி.மீ.) இக்கண்டத்தில் பாய்கிறது. மிகப் பெரிய பாலைவனமான சகாராவும் இக்கண்டத்தில் தான் உள்ளது. அடர்ந்த காடுகள் மற்றும் கனிம வளங்களின் செறிவுமிக்கது இக்கண்டம்.

3. வடஅமெரிக்கா :

அட்லாண்டிக், பசிபிக் மற்றும் ஆர்டிக் பெருங்கடல்களால் சூழப்பட்ட கண்டம் இது. இதன் மேற்குப் பகுதியிலுள்ள ராக்கி மலைத்தொடர் மிகநீண்ட மலைத்தொடர்.

4. தென்அமெரிக்கா:

இக்கண்டம் பெரும்அளவு தென்அரைக்கோளத்தில் அமைந்துள்ளது. உலகின் நீளமான ஆண்டிஸ் மலைத்தொடர், இந்தக் கண்டத்தில்தான் உள்ளது. உலகின் மிக பெரிய அமேசான் ஆறு (6586கி.மீ. நீளம்) இக்கண்டத்தில் உள்ளது.

5. ஐரோப்பா:

ஆசியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கண்டம் இது. ஆல்ப்ஸ் மலைத்தொடர் ஐரோப்பாவில் உள்ளது.

6. ஆஸ்திரேலியா:

நான்கு பக்கமும் கடல்களால் சூழப்பட்ட ஆஸ்திரேலியா தீவு கண்டம்(Island Continent). இக்கண்டம் நியூசிலாந்து, பிஜி போன்ற பல தீவுகளைக் கொண்டது. பிஜித் தீவுகள், பாப்புவா, நியூகினியா முதலிய தீவுகள் பொதுவாக ஒசியானியத் தீவுகள் என அழைக்கப்படுகின்றன. கிரேட் பாரியர் ரீப் எனப்படும் உலகின் மிகப்பெரிய பவளப் பாறை ஆஸ்திரேலியக் கடற்கரையில் உள்ளது.

7. அண்டார்டிகா :

தென்துருவப் பகுதியில் உள்ள இக்கண்டம் முழுவதும் பனி படர்ந்துள்ளது. இது மிகக் குளிர்ந்த பகுதி. பென்குயின் பறவை, சீல் போன்ற உயிரினங்களின் வாழ்விடம் இது.
இங்கு ஆய்வுகள் மேற்கொள்வதற்காக ‘தட்சிண் கங்கோத்ரி’ தற்போது பயன்பாட்டில் இல்லை. மற்றும் ‘மைத்ரேயி’ எனும் ஆய்வுக் குடியிருப்புகளை நம் நாடு நிறுவியுள்ளது.
ஆண்டு முழுவதும் இந்திய விஞ்ஞானிகள் பலர் இங்கு ஆய்வு செய்து வருகின்றனர். பாரதி என்னும் புதிய ஆய்வு குடியிருப்பை நம்நாடு சமீபத்தில் நிறுவியுள்ளது.

பெருங்கடல்கள்

உலகில் ஐந்து பெருங்கடல்கள் உள்ளன. அவை பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல் மற்றும் தென்பெருங்கடல் (அண்டார்டிக் பெருங்கடல்).

1. பசிபிக் பெருங்கடல் :
உலகின் ஆழமான பெருங்கடல் பசிபிக் பெருங்கடல்தான். இங்குத் தொடர்ச்சியான தீவுக் கூட்டங்கள் அமைந்துள்ளன. பெரும்பான்மையான தீவுகளில் செயல்படும் எரிமலைகள் நெருப்புக் குழம்பைக் கக்குவதால் இப்பகுதி பசிபிக் நெருப்பு வளையம் (Pacific Ring of Fire) என்று அழைக்கப்படுகிறது. உலகின் மிக ஆழமான மரியானா அகழி (Mariana Trench) எனும் கடல்பகுதி இப்பெருங்கடலில்தான் உள்ளது. இந்த ‘மரியானா அகழி’ எனும் பள்ளத்திற்குள் இமயமலையின் எவரெஸ்டு சிகரம்கூட அமிழ்ந்துவிடும்.
2. அட்லாண்டிக் பெருங்கடல்: இது உலகின் இரண்டாவது பெருங்கடல். மிக வலிமை கொண்ட சூறாவளிகள் இப் பெருங்கடலில்தான் அதிகமாகத் தோன்றுகின்றன.
3. இந்தியப் பெருங்கடல்: இது உலகின் மூன்றாவது பெரிய பெருங்கடல். இப்பெருங்கடலில் உருவாகும் பருவக் காற்று, மழையினால்தான் இந்தியா வளம் பெறுகிறது.
4. அண்டார்டிக் பெருங்கடல்: தென்துருவப் பகுதியில் உள்ள அண்டார்டிகா கண்டத்தைச் சுற்றிப் பரந்துள்ள கடல் தென் பெருங்கடல் எனப்படுகிறது. இதனை அண்டார்டிக் பெருங்கடல் என்றும் அழைப்பர்.
5. ஆர்டிக் பெருங்கடல்: வடதுருவப் பகுதியில் அமைந்துள்ள மிகச் சிறிய பெருங்கடல் ஆர்டிக் பெருங்கடல் ஆகும். இங்குப் பனிப்பாறைகள் மிகுந்துள்ளன.

தீபகற்பம்(Peninsula).

மூன்று பக்கங்கள் நீராலும், ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்ட பகுதிக்குத் தீபகற்பம் என்று பெயர். நம் இந்தியா ஒரு தீபகற்பம்

விரிகுடா (Bay)

மூன்று பக்கங்களும் நிலமாகவும், ஒரு பக்கம் கடலாகவும் அமைந்த நீர்ப் பரப்புக்கு விரிகுடா (Bay) என்று பெயர். வங்காள விரிகுடா இதற்கு ஓர் உதாரணம். அளவில் சற்றே சிறியதாக இருந்தால் இதனை வளைகுடா (Gulf) எனவும் அழைப்பர்.

நீர்ச்சந்தி (Strait)

இரண்டு நிலப் பரப்புகளை பிரிக்கும் குறுகிய நீர்ப்பகுதிக்கு நீர்ச்சந்தி என்று பெயர். இந்தியா, இலங்கை இரண்டுக்கும் இடையில் உள்ளது பாக் நீர்ச்சந்தி (Palk Strait).

நிலச்சந்தி (Isthmus)

விரிந்த இரண்டு நீர்ப்பரப்புகளைப் பிரிக்கும் மிகக் குறுகிய நிலப்பரப்பை நிலச்சந்தி  என அழைப்பர். தென்அமெரிக்கா மற்றும் வடஅமெரிக்காவை இணைப்பது பனாமா நிலச்சந்தி ஆகும்.

  • இந்தியா 5 இயற்கைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை வடக்கு மலைகள், வடபெரும் சமவெளிகள், தீபகற்ப பீடபூமிகள், பாலைவனம், கடற்கரை சமவெளிகள் மற்றும் தீவுகள்
  • வடக்கு மலைகள் மூன்று பிரிவுகளை உள்ளடக்கியது. அவை டிரான்ஸ் இமயமலை, இமயமலை, பூர்வாஞ்சல் அல்லது கிழக்கு இமயமலைகள்
  • வடபெரும் சமவெளிகள், இராஜஸ்தான் சமவெளி, பஞ்சாப் – ஹரியானா சமவெளி, கங்கை சமவெளி, பிரம்மபுத்திரா சமவெளி என நான்கு பிரிவுகளாக உள்ளன
  • தீபகற்ப பீடபூமி இரு பிரிவுகளை உள்ளடக்கியது.1) மத்திய உயர்நிலம் 2) தக்காண பீடபூமி
  • அந்தமான் நிக்கோபர் தீவுகள் மற்றும் இலட்சத் தீவுகள் இந்தியாவிலுள்ள இரண்டு பெரிய தீவுக் கூட்டங்கள்
  • இந்தியாவின் வடிகாலமைப்பு வடஇந்திய ஆறுகள் (இமயமலை ஆறுகள்) மற்றும் தீபகற்ப ஆறுகள் என இரு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன.
  • நர்மதை, தபதி, மாஹி மற்றும் சபர்மதி ஆறுகள் அரபிக்கடலில் கலக்கின்றன.
  • மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா மற்றும் காவிரி ஆறுகள் கிழக்கு நோக்கி பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கின்றன.

இந்தியாவின் நிலம் மற்றும் நீர் எல்லைகள்

இந்தியா 15,200 கி.மீ நில எல்லைகளைக் கொண்டுள்ளது. வடமேற்கில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுடனும், வடக்கில் சீனா, நேபாளம், பூடானுடனும், கிழக்கில் வங்காளதேசம் மற்றும் மியான்மர் நாடுகளுடனும் நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது.

இந்தியா அதிகபட்சமாக வங்காள தேசத்துடன் 4,156 கி.மீ நீளமுள்ள நில எல்லையையும், குறுகிய எல்லையாக ஆப்கானிஸ்தானுடன் 106 கி.மீ நில எல்லையையும் கொண்டுள்ளது.

இந்தியா, தெற்கில் இந்தியப் பெருங்கடலாலும், கிழக்கில் வங்காள விரிகுடாவாலும், மேற்கே அரபிக் கடலாலும் சூழப்பட்டு சுமார் 6,100 கி.மீ நீளமுள்ள நீண்ட கடற்கரைப் பகுதியை மூன்று பக்கங்களில் கொண்டுள்ளது. இந்தியாவின் கடற்கரையின் மொத்த நீளம் மற்றும் தீவுக் கூட்டங்களையும் சேர்த்து 7,516.6 கி.மீ. ஆகும். இந்தியாவையும் இலங்கையையும் பிரிக்கும் குறுகிய ஆழமற்ற கடல் பகுதி பாக்நீர்சந்தி ஆகும்.

இந்தியா – துணைக்கண்டம்

பாகிஸ்தான், மியான்மர், வங்காளதேசம், நேபாளம், பூடான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுடன் இணைந்து இந்தியா துணைக்கண்டம் என அழைக்கப்படுகிறது.

அமைவிடமும் பரப்பளவும்

இந்தியா 8°4′ வட அட்சம் முதல் 37°6′ வட அட்சம் வரையிலும் 68°7′ கிழக்கு தீர்க்கம் முதல் 97°25′ கிழக்கு தீர்க்கம் வரையிலும் பரவியுள்ளது. அட்ச தீர்க்க பரவல்படி இந்தியா முழுமையும் வடக்கு மற்றும் கிழக்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ளது.

இந்தியாவின் தென்கோடி பகுதியான முன்பு பிக்மெலியன் என்று அழைக்கப்பட்ட இந்திரா முனை 6° 45′ வட அட்சத்தில் அந்தமான் நிக்கோபர் தீவுக் கூட்டத்தில் அமைந்துள்ளது. இந்திய நிலப்பகுதியின் தென்கோடி குமரி முனையாகும். வடமுனை இந்திரா கோல் எனவும் அழைக்கப்படுகிறது.

லடாக்கிலுள்ள இந்தியா, வடக்கே இந்திராகோல் முதல் தெற்கே கன்னியாகுமரி வரை 3214 கி.மீ நீளத்தையும், மேற்கே குஜாரத்திலுள்ள ரான் ஆப் கட்ச் முதல் கிழக்கே அருணாச்சல பிரதேசம் வரை 2933 கி.மீ நீளத்தையும் கொண்டுள்ளது. 23°30′ வட அட்சமான கடகரேகை இந்தியாவின் மையமாக அமைந்து தென்பகுதி வெப்ப மண்டலமாகவும், வடபகுதி மித வெப்ப மண்டலமாகவும், இரு பெரும் பகுதிகளாக பிரிக்கிறது.

இந்தியா 28 மாநிலங்களாகவும் 8 யூனியன் பிரதேசங்களாகவும் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டுள்ளது.

இந்திய திட்ட நேரம்

மேற்கில் உள்ள குஜராத் முதல் கிழக்கில் உள்ள அருணாச்சல பிரதேசதம் வரை இந்தியா ஏறத்தாழ 30 தீர்க்க கோடுகளைக் கொண்டுள்ளது. இந்தியாவின் கிழக்கிலுள்ள அருணாச்சல பிரதேசத்தில் மேற்கிலுள்ள குஜராத்தைக் காட்டிலும் இரண்டு மணி நேரம் முன்னதாகவே சூரியன் உதயமாகிறது.

இந்த நேர வேறுபாட்டை தவிர்ப்பதற்காக, இந்தியாவின் மத்திய தீர்க்கரேகையான 82°30′ கிழக்கு தீர்க்கரேகையின் தலநேரம், இந்திய திட்டநேரமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இத்தீர்க்கரேகை மிர்சாபூர் (அலகாபாத்) வழியாக செல்கிறது. இந்திய திட்ட நேரமானது கீரீன்வீச் திட்ட நேரத்தை விட 5 மணி 30 நிமிடம் முன்னதாக உள்ளது.

 

தமிழ்நாடும் அமைவிடம் மற்றும் பரப்பளவு

இந்தியாவின் 28 மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இது இந்தியாவின் தென்பகுதியில் அமைந்துள்ளது. இதன் நிலப்பரப்பு 8°4′ வட அட்சம் முதல் 13°35′ வட அட்சம் வரையிலும், 76°18 ‘ கிழக்கு தீர்க்கம் முதல் 80°20’ கிழக்கு தீர்க்கம் வரையிலும் பரவியுள்ளது.

தமிழ்நாட்டின் கடைக்கோடிப் பகுதிகளாக

1.கிழக்கில் கோடியக்கரையும்
2.மேற்கில் ஆனைமலையும்
3.வடக்கில் பழவேற்காடு ஏரியும்
4.தெற்கில் குமரிமுனையும் அமைந்துள்ளன.

தமிழகத்தின் பரப்பளவு 1,30,058 சதுர கிலோமீட்டர்களாகும். இது இந்தியாவின் பதினோராவது பெரிய மாநிலமாகும். இந்தியப் பரப்பில் சுமார் 4 சதவிகிதத்தினைக் கொண்டுள்ளது.

எல்லைகளும் அதன் அண்டை மாநிலங்களும்

கிழக்கே வங்காள விரிகுடாவும், மேற்கே கேரளாவும்,வடக்கே ஆந்திரப்பிரதேசமும், வடமேற்கே கர்நாடகாவும், தெற்கே இந்தியப் பெருங்கடலும் தமிழ்நாட்டின் எல்லைகளாக அமைந்துள்ளன. மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீர்ச்சந்தி தமிழ்நாட்டையும் இந்தியாவின் தென்கிழக்கில் உள்ள இலங்கையையும் பிரிக்கின்றன. குஜராத் மற்றும் ஆந்திரப் பிரதேசத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு 906.9 கிலோ மீட்டர் நீளமுடன் இந்தியாவின்
மூன்றாவது நீளமான கடற்கரையைக் கொண்டுள்ளது.

தமிழ்நாடு உருவான காலகட்டத்தில் 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்தது.

தீபகற்ப பீடபூமி எனப்படும் தக்காண பீடபூமியில் தமிழ்நாடு அமைந்துள்ளது. இப்பகுதி கிரெட்டேசியஸ் காலத்தில் 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற கோண்ட்வானா நிலப்பகுதியிலிருந்து உருவான ஒரு பகுதியாகும். தமிழ்நாடானது நிலத்தோற்றத்தின் அடிப்படையில் மேற்கு தொடர்ச்சி மலை, கிழக்கு தொடர்ச்சி மலை, பீடபூமிகள், கடற்கரைச் சமவெளிகள் மற்றும் உள்நாட்டு சமவெளிகள் என ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.

 

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories