Blog

தென்‌ இந்திய வரலாறு

Class 58 இந்தியாவின்‌ வரலாறு, பண்பாடு மற்றும்‌ இந்திய தேசிய இயக்கம்‌

தென்‌ இந்திய வரலாறு

தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

தக்காணப் பகுதியில் பொ.ஆ.மு. முதல் நூற்றாண்டில் இன்றைய தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களின் பெரும் பகுதியை உள்ளடக்கிய நிலப்பரப்பில் சாதவாகனர் ஒரு வலுவான அரசை நிறுவினர்.

இதற்கும் தெற்கே தமிழகத்தின் வளமான பகுதிகளை ஆண்டு வந்த, தமிழ் அரச மரபினரான சேர, சோழ பாண்டியர்கள் சாதவாகனரின் சம காலத்தவர் ஆவர். ஆனால் பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகருடைய கல்வெட்டுகளில் மூவேந்தரைப் பற்றியக் குறிப்புகள் இடம் பெற்றுள்ளதின் அடிப்படையில் இரு நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே தமிழக அரசர்கள் தங்கள் அரசுகளை நிறுவி விட்டதை அறிய முடிகிறது. இவ்விரு பகுதிகளைச் சேர்ந்த அரசியல் முறை மற்றும் சமூகங்களிடையே பல பொதுவான அம்சங்கள் இருந்தன. வேறுபாடுகளும் நிலவின.

தொல்பொருள்கள் சான்றுகள்

தொடக்க வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்த பெருங்கற்காலப் புதைவிடங்கள்

அரிக்கமேடு, கொடுமணல், ஆலங்குளம், உறையூர் கட்டட இடிபாட்டுத் தடயங்களைக் கொண்டுள்ளன, துறைமுகங்கள் தலைநகரங்கள் உள்ளிட்ட பழங்கால
இடங்களில் அகழ்வாய்வின் மூலம் பெறப்பட்ட பொருள்கள்.

ஆந்திரா, கர்நாடகப் பகுதிகளில் அமைந்துள்ள ஸ்தூபிகளும் சைத்தியங்களும் கூடிய பௌத்தத்தலங்கள் (அமராவதி, நாகார்ஜுனகொண்டா முதலானவை)

ஸ்தூபிகள்

ஸ்தூபி என்பது புதை மேடுகளின் மேல் களிமண்ணால் கட்டப்பட்டதாகும். இறந்தோரை எரித்த சாம்பல் இங்கு வைக்கப்படும். தொடக்கத்தில் புத்தரின் அஸ்தி எட்டு ஸ்தூபிகளில் வைக்கப்பட்டன. இவ்வாறு பௌத்தத்தின் புனிதக் கட்டடக்கலை தோற்றம் பெற்றது. அரைக்கோள வடிவமுள்ள ஸ்தூபி பேரண்டத்தைக் குறிக்கின்றது. அத்துடன் புத்தர் ஆன்மீக உலகின் பேரரசர் என்பதையும் குறிக்கிறது. ஸ்தூபிகளைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள சுற்றுவட்டப் பாதையில் பக்தர்கள் வலம் வருவர்.

நாணயச் சான்றுகள்

ஆந்திர-கர்நாடகப்பகுதிகளின் சாதவாகனர்கள் மற்றும் அவர்களுக்கு முந்தைய குறுநில மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள்.

சங்க காலச் சேர, சோழ, பாண்டிய அரசர்களும் வேளிரும் வெளியிட்ட நாணயங்கள்

தங்கம், வெள்ளி, தாமிரத்தாலான ரோம நாணயங்கள்

கல்வெட்டுகள்

ஆந்திர-கர்நாடகப் பகுதிகளில் காணப்படும், பிராகிருத மொழியில் பொறிக்கப்பட்ட அசோகர் கல்வெட்டுகள்.

தமிழக, கேரளக் குகைகளில் காணப்படும் தமிழ்-பிராமி கல்வெட்டுகள்: மாங்குளம், ஜம்பை, புகளூர் முதலானவை

ஆந்திரப் பகுதியிலுள்ள சாதவாகனர் கல்வெட்டுகளும் பிற பௌத்த கல்வெட்டுகளும்

தமிழகப் பகுதியில் கிடைத்துள்ள மட்பாண்டங்கள், மோதிரம், கற்கள் ஆகியவற்றில் பொறிக்கப்பட்ட எழுத்துகள்; இந்தியாவிற்கு வெளியே பெரனிக்கே, குவாசிர் அல் காதம் (எகிப்து).

இலக்கியச் சான்றுகள்

சங்கநூல்களும் சங்கம் மருவிய இலக்கியங்களும்

பொருளாதாரம், அரசாட்சிக் கலை ஆகியன குறித்து கௌடில்யர் எழுதிய அர்த்த சாஸ்திரம்

ஆந்திரர்/சாதவாகனர் வம்சாவளி வரலாற்றினைக் குறிப்பிடும் புராணங்கள்

மகாவம்சம் முதலான பௌத்த வரலாற்று நூல்கள்

சாதவாகன அரசர் ஹாலா பிராகிருத மொழியில் எழுதிய காஹாசப்தசதி

வெளிநாட்டவரது குறிப்புகள்

பொ.ஆ. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தொன்மையான கிரேக்க நூலான எரித்திரியக் கடலின் பெரிப்ளஸ்

பொ.ஆ. முதலாம் நூற்றாண்டில் மூத்த பிளினி எழுதிய இயற்கை வரலாறு’ (Natural History)

பொ.ஆ. இரண்டாம் நூற்றாண்டில் தாலமி எழுதிய ஜியோகிரபி (புவியியல்)

ரோமானியரின் நிலவரைபடமான பீயூட்டெஞ்செரியன் அட்டவணை (Peutingerian Table)

மெளரியர் காலத் தென்னிந்தியா

அசோகருடைய கல்வெட்டுகளே (பொ.ஆ.மு. 270-30) தென்னிந்தியாவின் அரசியல் நிலை குறித்த முதல் சித்திரத்தை வழங்குகிறது. அசோகரின் இரண்டாம் பாறைக் கல்வெட்டில் மௌரிய அரசின் எல்லைக்கப்பால் அமைந்த அண்டை அரசுகளானத் தமிழகத்தில் ஆட்சி புரிந்த அரச மரபுகளான சோழர், பாண்டியர், கேரளபுத்திரர், சத்தியபுத்திரர் ஆகியோரைக் குறிப்பிடுகின்றார். அப்பகுதிகளில் அசோகர் மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான இருவகைப்பட்ட மருத்துவ வசதிகள் செய்து கொடுத்தார் எனச் சொல்லப்படுகிறது. அக்காலத்தில் மௌரியப் பேரரசு கர்நாடகா, ஆந்திராவின் வடபகுதிகளையும் கொண்டிருந்தது. தமிழக அரசுகள் சுதந்திரமான அண்டை நாடுகள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளன.

மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னரும், சாதவாகனர் எழுச்சிக்கு முன்னரும் பல சிற்றரசுகள் தோன்றியுள்ளன. அவற்றின் அரசர்களைப் பற்றி போதுமான செய்திகள் கிடைக்கவில்லை. எனினும் அவர்கள் வெளியிட்ட நாணயங்கள், அவர்கள் சிறுபகுதிகளை ஆண்டு வந்த குறுநில மன்னர்கள் என்பதைத் தெரிவிக்கின்றன.

சாதவாகனர்கள் ஆட்சியின் கீழ் தென்னிந்தியா

சாதவாகனர்கள் பொ.ஆ.மு. முதலாம் நூற்றாண்டில் தக்காணப் பகுதியில் தோன்றினர். மகாராஷ்ட்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஒரு சில பகுதிகளை அவர்கள் ஆண்டனர்.

அண்மைக்காலத் தொல்லியல் ஆய்வுகளின்படி தெலங்கானா பகுதிகளில் ஆட்சியைத் தொடங்கிய சாதவாகனர் மகாராஷ்டிரப் பகுதிகளுக்கு நகர்ந்து, கோதாவரி நதித் தீரத்தில் பிரதிஸ்தான் (மகாராஷ்டிராவில் பைத்தன்) என்னும் நகரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். பின்னர் கிழக்கு நோக்கி நகர்ந்து ஆந்திராவின் கடற்கரைப் பகுதிகளைக் கட்டுப்படுத்தினர்.

பிளினியின் நூல் ஆந்திர நாட்டிலிருந்த கோட்டைகளுடன் கூடிய 30 நகரங்கள், ஒரு பெரும்படை, குதிரைப் படை, யானைப் படை ஆகியன குறித்து பேசுகிறது.

சாதவாகன அரசர்களுள் கௌதமபுத்ர சதகர்னி பெரும் அரசராவார். சாக அரசர் நாகபனாவை வென்ற அவர் நாகபனாவின் நாணயங்களைத் தன் அரச முத்திரையோடு மீண்டும் வெளியிட்டார்.

அவருடைய தாயான கௌதம் பாலஸ்ரீ என்பாரின் நாசிக் கல்வெட்டு, சாகர் பகல்வர், யவனர்கள் ஆகியோரை இவர் வெற்றி கொண்டதாகக் கூறுகிறது. பெருமைக்குரிய அஸ்வமேத யாகத்தை இவர் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

கௌதமிபுத்ர சதகர்னிக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற வசிஷ்டபுத்ர புலுமாயி, நாட்டின் எல்லைகளை விரிவடையச் செய்தார்.

சாதவாகன மற்றொரு புகழ்பெற்ற அரசரான யக்னஸ்ரீ சதகர்னி, தனது ஆட்சியின் வெளிநாட்டு வணிகத்தின் முக்கியத்துவத்தைக் சாதவாகன காட்டும் வகையில் கப்பலின் வடிவம் பதிப்பிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்டார்.

சாதவாகன அரசர் ஹாலா 700 காதற் பாடல்களைக் கொண்ட காஹாசப்தசதி என்ற நூலை இயற்றினார். மகாராஷ்டிரப் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட இந்நூலின் கருப்பொருள் சங்க இலக்கியத்தின் அகப்பொருளை ஒத்துள்ளன.

பொ.ஆ. மூன்றாம் நூற்றாண்டையொட்டி சாதவாகனப் பேரரசு வீழ்ச்சியடைந்தது.அவர்களைத் தொடர்ந்து ஆந்திரப் பகுதியில் இக்சவாகுவும் அதனைத் தொடர்ந்து பல்லவர்களும், வட கர்நாடகப் பகுதிகளில் கடம்பர்களும் ஆட்சி புரிந்தனர்.

சாதவாகனர் காலத்தின் முக்கியத்துவம்

நிலமானியம் வழங்குவது சாதவாகனர் காலத்தின் முக்கிய அம்சமாகும். இதன் பயனாளிகள் பெரும்பாலும் பௌத்தர்களும் பிராமணர்களும் ஆவர்.

பௌத்தத் துறவிகளுக்கு வழங்கப்பட்ட  நிலங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டதை நனிகாட் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. இவ்வாறு மதகுருமார்களைக் கொண்ட குழுக்கள் செல்வாக்குப் பெற்று உயரிடத்தை வகிக்கத் தொடங்கியதைக் காணமுடிகிறது.

நிலங்களைக் கொடையாக வழங்கும் இம்முறை நிலங்களில் வேளாண்மை செய்யாமல், நிலங்களுக்கு உரிமையாளர்களாக மாறிய ஒரு பிரிவினரை உருவாக்கியது. இது காலப் போக்கில் நிலத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகப் படிநிலைகளும் பிரிவுகளும் உருவாவதற்கு இட்டுச் சென்றது.

முதன்முதலாகத் தக்காணத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கிய ஒரு பெரிய அரசு நிறுவப்பட்டது.

பௌத்த சங்கங்களுக்கு என்றே பல குடைவரைக் குகைகள் உருவாக்கப்பட்டன. அவை உள்நாட்டுப் பகுதிகளையும் கொங்கணக் கடற்கரைப் பகுதியையும், உள்நாட்டு வணிகப் பாதைகளையும் இணைக்கும் புள்ளிகளாக அமைக்கப்பட்டிருந்தமைக்கான சான்றுகளை இவை கொண்டுள்ளன.

இக்காலத்தில் இந்தியாவிற்கும் ரோம் நாட்டிற்கும் இடையே விறுவிறுப்பான வணிகம் நடைபெற்றது.

சங்க காலம்

பொது ஆண்டுக்கு முந்தைய இறுதி மூன்று நூற்றாண்டுகளிலிருந்து, பொது ஆண்டிற்கு பின்னர் தொடங்கும் முதல் மூன்று நூற்றாண்டுகள் வரையிலான காலம் சங்க காலம் என பெரும்பாலோரால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இக்காலம் பற்றிய செய்திகள் பெருமளவில் சங்க இலக்கியங்களிலிருந்தே பெறப்படுகின்றன.

இலக்கியச் சான்றுகள் தவிரத் தெளிவான கல்வெட்டுச் சான்றுகள், தொல்பொருள் சான்றுகள் கிடைக்கப் பெறுவதால் இக்காலக் கட்டம் ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே தொடங்குகிறது எனக் கூறலாம்.

மூவேந்தர்

பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே தமிழகத்தின் மூன்று அரச மரபுகள் குறித்து அசோகர் அறிந்திருந்தாலும், பொ.ஆ. முதலாம் நூற்றாண்டு மற்றும் அதற்கு பின் வந்த காலத்தைச் சேர்ந்த சங்க இலக்கியத்தின் மூலமே அவ்வரசர்களின் பெயர்களை அறிந்து கொள்ள முடிகிறது. மூவேந்தர் என்றறியப்பட்ட மணிமுடிசூடிய அரசர்களான சேர, சோழ, பாண்டியர் பெரும்பாலான வேளாண் நிலங்களையும், வணிகப் பெருவழிகளையும் நகரங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அசோகர் கல்வெட்டுகளில் மேற்சொல்லப்பட்ட மூவேந்தரோடு இடம் பெற்றுள்ள சத்யபுத்ர (அதியமான்) என்பது சங்கப் பாடல்களில் இடம் பெறும் வேளிரைக் குறிப்பதாக உள்ளது.

சோழர்

சோழர் தமிழகத்தின் மத்திய, வட பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டிருந்தனர். அவர்களது ஆட்சியின் மையமாக இருந்த பகுதி காவிரியாற்றின் கழிமுகப் பகுதியாகும். இதுவே பின்னர் சோழ மண்டலம் என்றழைக்கப்பட்டது. அவர்களின் தலைநகர் உறையூர் ஆகும். (திருச்சிராப்பள்ளி நகரத்திற்கு அருகே அமைந்துள்ளது). மேலும் புகார் அல்லது காவிரிப்பூம்பட்டினமானது முக்கியத் துறைமுகமாகவும் அரச குடும்பத்தின் மாற்று வாழ்விடமாகவும் திகழ்ந்தது. சோழரின் சின்னம் புலி ஆகும். காவிரிப்பூம்பட்டினம் இந்துமா கடலின் பல பகுதிகளைச் சேர்ந்த வணிகர்களைத் தன்பால் ஈர்த்தது. கரிகாலனின் ஆட்சியின் போது இங்கு நடைபெற்ற ஆரவாரமான வணிக நடவடிக்கைகள் குறித்துக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையில் விரிவாக விளக்குகிறார்.

இளஞ்சேட்சென்னியின் மகனான கரிகாலன் சங்ககால சோழ அரசர்களில் தலையாயவராக அறியப்படுகிறார். பட்டினப்பாலை அவருடைய ஆட்சியைப் பற்றி விரிவாகக் கூறுகிறது. கரிகாலனுடைய தலையாய போர் வெற்றி என்பது வெண்ணி போர்க்களத்தில் சேரரையும் பாண்டியரையும் அவர்களுக்கு உதவிய பதினோரு வேளிர் குலத் தலைவர்களையும் வெற்றி கொண்டதாகும்.

காட்டை வெட்டி நாடாக்கியதற்காகவும், குளம் வெட்டி வளம் பெருக்கியதற்காகவும், காவிரியில் அணை கட்டி, வாய்க்கால்கள் வெட்டி நீர்ப்பாசன வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்ததன் மூலம் வேளாண்மையை வளரச் செய்தார் என்பதற்காகவும் இவர் போற்றப்படுகிறார்.

பெருநற்கிள்ளி எனும் பெயருடைய மற்றொரு அரசன் வேத வேள்வியான ராஜசூய யாகத்தை நடத்தியுள்ளார். கரிகாலனின் மறைவைத் தொடர்ந்து உறையூர் மற்றும் புகார் அரச குடும்பத்தினரிடையே வாரிசுரிமை தொடர்பான மோதல் ஏற்பட்டிருக்கிறது.

சேரர்

சேரர் மத்திய, வடக்கு கேரளப் பகுதிகளையும் தமிழ் நாட்டின் கொங்கு பகுதியினையும் ஆட்சி செய்தனர். வஞ்சி அவர்களின் தலைநகராகும். மேலைக் கடற்கரைத் துறைமுகங்களான முசிறியும் தொண்டியும் அவர்களது கட்டுபாட்டில் இருந்தன. வஞ்சி இன்றைய தமிழகத்தின், கரூர் என்று அடையாளம் காணப்படுகிறது. அதேசமயம் சில அறிஞர்கள் கேரளத்திலுள்ள திருவஞ்சைக்களம் என்னும் ஊரே வஞ்சி என்று அடையாளங் காண்கின்றனர்.

சேர அரச குடும்பத்தில் இரு கிளைகள் இருந்ததெனவும், பொறையர் என்னும் கிளையினர் தமிழ்நாட்டின் கரூர் நகரிலிருந்து ஆட்சி புரிந்தனர் எனவும் அறிஞர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

எட்டு சேர அரசர்கள் குறித்தும் அவர்கள் ஆண்ட பகுதிகள், அவர்களது சாதனைகள் குறித்தும் பதிற்றுப்பத்து பேசுகிறது. கரூர் நகருக்கு அருகேயுள்ள புகளூரிலுள்ள கல்வெட்டு, மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த சேர அரசர்களைக் குறிப்பிடுகிறது. அவர்களில் ஒருவரான சேரல் இரும்பொறை தன் பெயரில் நாணயங்கள் வெளியிட்டுள்ளார்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும், செங்குட்டுவனும் முக்கியச் சேர அரசர்கள் ஆவர். பல குறுநில மன்னர்களைச் செங்குட்டுவன் வெற்றி கொண்டுள்ளார். கடற்கொள்ளையர்களை அடக்கியதன் மூலம் முக்கியத் துறைமுகமான முசிறியின் பாதுகாப்பை உறுதிபடுத்தினார் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் செங்குட்டுவனின் மாபெரும் வட இந்தியப் படையெடுப்பு சங்க இலக்கியங்களில் சொல்லப்படவில்லை. இவர் ஐம்பத்தாறு ஆண்டுகள் ஆட்சி செய்ததாகவும் வைதீக, அவைதீக மதங்களை ஆதரித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

செப்பு, ஈய நாணங்களைச் சேர அரசர் வெளியிட்டுள்ளார். தமிழ் பிராமியில் புராணக் குறிப்புகளைக் கொண்டுள்ள அவை, ரோம நாணயத்தைப் போலுள்ளன. எழுத்துக்கள் எவையும் இல்லாமல் சேரர்களின் வில் அம்புச் சின்னங்களைத் தாங்கிய சேர நாணயங்களும் கிடைத்துள்ளன.

பாண்டியர்

பாண்டியர் மதுரையிலிருந்து ஆண்டனர். தாமிரபரணி நதி வங்காளவிரிகுடாக் கடலில் கலக்குமிடத்தில் அமைந்துள்ள கொற்கை அவர்களின் முக்கியத் துறைமுகமாகும். இது முத்துக் குளிப்பிற்கும் சங்குகள் சேகரிப்பிற்கும் பெயர் பெற்றதாகும். கொற்கை பெரிப்ளசின் குறிப்புகளில் கொல்கொய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.பாண்டியரின் சின்னம் மீன்.

அவர்களின் நாணயங்களில் ஒருபுறம் யானையின் வடிவமும் மற்றொரு புறம், புதிய பாணியில் மீனின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன. கேரளத்தின் தெற்குப் பகுதிகளின் மீது போர் தொடுத்து கோட்டயத்துக்கு அருகேயுள்ள நெல்கிண்டா துறைமுகத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்தனர்.

பாண்டியர் தமிழ்ச் சங்கங்களை ஆதரித்து சங்க நூல்களைத் தொகுப்பித்தனர். சங்கப் பாடல்கள் பாண்டிய அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடுகின்றன. ஆனால் அவர்கள் எப்போது அரச பதவி ஏற்றார்கள், அவர்கள் ஆண்ட கால அளவு என்ன, என்பன போன்ற விவரங்கள் தெளிவாக இல்லை.

மாங்குளம் தமிழ் – பிராமி கல்வெட்டு பொ.ஆ.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய அரசன் நெடுஞ்செழியனைக் குறிப்பிடுகின்றது. மதுரைக் காஞ்சி முதுகுடுமிப் பெருவழுதியையும் மற்றொரு நெடுஞ்செழியனான தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனையும், வேறு சில பாண்டிய
மன்னர்களையும் குறிப்பிடுகின்றது.

முதுகுடுமிப் பெருவழுதி எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த வேள்விக்குடிச் செப்பேடுகளில், பிராமணர்களுக்கு நிலங்களைத் தானமாக வழங்கினார் எனக் குறிக்கப்படுகிறார். தான் செய்த வேத வேள்விச் சடங்குகளின் நினைவாகப் பெருவழுதி என்ற பெயரில் புராண கதைப் பொறிப்புகளைக் கொண்ட நாணயங்களை வெளியிட்டுள்ளார்.

நெடுஞ்செழியன், சேரர், சோழர், ஐந்து வேளிர் குல சிற்றரசர்கள் (திதியன், எழினி, எருமையூரான், இருங்கோவேண்மான், பொருநன்) ஆகியோரின்
கூட்டுப்படைகளைத் தலையாலங்கானத்துப் போரில் வெற்றி கொண்டதற்காகப் புகழப்படுகிறார்.

மேலும் சிற்றரசர்களிடமிருந்து (வேளிர்) மிலலை, முத்தூர் (புதுக்கோட்டை மாவட்டம்) என்னும் இடங்களைக் கைப்பற்றிய பெருமை இவரையே சாரும். கொற்கையின் தலைவனென்றும், திருநெல்வேலி கடற்கரைப் பகுதியில் வாழும் மீன் பிடிக்கும், போர்புரியும் திறன் பெற்ற தென்பகுதி பரதவர்களின் தலைவனென்றும் இவர் புகழப்படுகிறார்.

தமிழ் அரசமைப்பு

ஆட்சியாளர்களில் மூன்று வகைப்பட்ட தலைமைத்துவம் கொண்டவர்களைக் காண முடிகிறது. 1) கிழார் 2) வேளிர் 3) வேந்தன்.

கிழார் என்போர் கிராமங்களின் அல்லது ஒரு சிறிய பகுதியின் தலைவராக இருந்து, பின்னர் நாடு என்றறியப்பட்ட நிர்வாகப் பிரிவின் தலைவராவர். இவர்கள் குறிப்பிட்ட இடங்களில் வாழும் பழங்குடிச் சமூகங்களின் தலைவர்களாவர்.

வேந்தர் எனப்பட்டோர் மிகப் பெரும் வளமான நிலப் பகுதியை கட்டுப்படுத்திய அரசர்களாவர்.

எண்ணிக்கையில் அதிகமாக இருந்த வேளிர்கள், பல்வேறு புவியியல் தன்மைகளைக் கொண்ட, குறிப்பாக மூவேந்தர்களின் வளம் நிறைந்த பகுதிகளின் இடையே அமைந்திருந்த மலைப்பாங்கான காட்டுப் பகுதிகளைத் தங்கள் கட்டுபாட்டில் கொண்டிருந்தனர்.

அதியமான், பாரி, ஆய், இருங்கோ போன்ற குறுநில மன்னர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கென இயற்கை வளமிக்க ஒரு பகுதியை ஆண்டனர். அவர்கள் பெருந்தன்மை கொண்ட புரவலர்களாகப் புலவர்களையும் ஆடல் பாடல் கலைஞர்களையும் ஆதரித்தனர். இவர்கள் படை வலிமை பெற்றிருந்தனர். ஆநிரை கவர்தல் காரணமாக இவர்களிடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்றன. பல நேரங்களில் இவர்கள் இணைந்து மூவேந்தர்களில் யாராவது ஒருவரை எதிர்த்தனர்.

சங்க கால சேர, சோழ, பாண்டிய அரசுகளின் அரசியல் அமைப்பைப் பொறுத்த மட்டிலும் அறிஞர்களிடையே பல மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. தொடக்க காலத்தைச் சேர்ந்ததும் பெரும்பான்மையோரால் ஒத்துக்கொள்ளப்பட்ட கருத்தும் யாதெனில் சங்க காலச் சமுதாயமானது நன்கு கட்டமைக்கப்பட்ட அரசைக் கொண்ட ஒரு சமூகம் என்பதாகும். சிலர் இதனை மறுக்கின்றனர். சேர, சோழ, பாண்டியரின் அரசியல் முறையானது, அரசு உருவாக்கத்திற்கு முன்பான குடிமைத் தலைமை முறையைச் சேர்ந்தது என்பது இவர்களின் கருத்தாகும். அவர்கள் தங்கள் கருத்துக்கு ஆதரவாக முன்வைக்கும் வாதங்கள் வருமாறு

1. சமூகப் பிரிவினைகள் வெளிப்படவில்லை.
2. எல்லைகள் தெளிவாக வரையறை செய்யப்படாத நிலையிருந்தது.
3.அரசின் உருவாக்கத்திற்குத் தேவைப்படும் வேளாண் வளர்ச்சியும் வேளாண் உபரியும் நாசம் ஏற்படுத்தும் போர்களால் தடுக்கப்பட்டன.
4. வட இந்திய அரசுகளைப் போல வரி விதிப்பு இருந்ததாகச் சான்றுகள் இல்லை.

மேற்சொல்லப்பட்ட கருத்துகளுக்கு எதிரான நிலைப்பாட்டாளர்கள் கீழ்க்காணும் வாதங்களை முன்வைக்கப்படுகின்றனர்.

  1. சங்க இலக்கியங்களை ஆழ்ந்து வாசித்தோமேயானால் மருத நிலப் பகுதி வாழ் சமூகத்தில் வேற்றுமைகள் தோன்றிவிட்டதை அறியலாம்.
  2. தங்கள் நிலத்தின் மீது மூவேந்தர் கொண்டிருந்த பற்றையும் இவர்கள் பெற்றிருந்த செல்வாக்கையும் முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க-ரோமானிய நூல்கள் துணைச் சான்றுகளாய் உறுதிப்படுத்துகின்றன.
  3. ஆட்சிப்பகுதிகளை விரிவுபடுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட போர்களே புறத்திணை இலக்கியங்களின் முக்கியப் பாடுபொருளாக இருக்கின்றன.
  4. வணிகப் பெருவழிகளிலும், காவிரிப்பூம்பட்டினம் துறைமுகத்திலும் வரி வசூலிக்கப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது. மலையகப் பகுதிகளிலிருந்தும், முசிறி
    துறைமுகத்திலிருந்துமே சேர அரசர் வரி பெற்றனர் என அறிய முடிகின்றது.
  5. பொ.ஆ.மு. முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி, பொ.ஆ. மூன்றாம் நூற்றாண்டு வரை வணிகம் மிகப் பெரும் பங்கை வகித்துள்ளது.

வேந்தரின் அரசியல் எழுச்சி

இரும்புக்காலகட்டத்தில் (பொ.ஆ.மு 1100- 300) தோன்றிய தலைவர்களிலிருந்து தொடக்க வரலாற்று கால வேந்தர்கள் உருவாயினர். தலைவர்களில் ஒரு சிலர் மேய்ச்சல் நிலங்களின் மீதும், வேளாண் நிலங்களின் மீதும் தங்கள் முழுமையான கட்டுப்பாட்டை வைத்ததன் மூலம் உயர்நிலையை (வேந்தர்) அடைந்தனர். மற்றவர்கள் தலைவர்களாகவே (வேளிர்) நீடித்தனர். எடுத்துக்காட்டாக, அசோகர் கல்வெட்டுகளில் சத்யபுத்ரா என்று குறிப்பிட்டுள்ள அதியமான் நாளடைவில் வலிமை குன்றியதால் சேர, சோழ, பாண்டிய வேந்தர்களைப் போல அரசன் என்ற நிலையை அடைய இயலவில்லை.

கிழார்களையும், வேளிர் குலத்தலைவர்களையும் வேந்தர்கள் அடிபணியச் செய்ததோடு தங்களுக்குள்ளும் போரிட்டுக்கொண்டனர். இதன் பொருட்டு தங்களுக்கெனப் படை வீரர்களை அணி திரட்டியதோடு, சில வேளிர்குலத் தலைவர்களின் உதவியையும் பெற்றனர்.

சங்க காலத்தைச் சேர்ந்த வேந்தர்கள் தங்களது வலிமையைப் பறைசாற்றிக் கொள்வதற்காகச் சிறப்புப் பட்டங்களைச் சூடிக் கொண்டனர். கடுங்கோ, இமயவரம்பன், வானவரம்பன், பெருவழுதி போன்ற பட்டப் பெயர்களைச் சூட்டிக் கொண்டதன் மூலம் தங்களை ஏனைய மக்களிடமிருந்தும் வேளிர்குலத் தலைவர்களிடமிருந்தும் வேறுபடுத்திக் காட்டிக் கொண்டனர்.

இவ்வேந்தர்கள் புலவர்களையும், கலைஞர்களையும் ஆதரித்து அவர்களை தங்களது அரசவையில் (அவையம்) அமர வைத்துக் கொண்டது ஒரு வகையில் தங்களையும், தங்கள் நாட்டையும் புகழ்ந்து பாடுவதற்காக இருக்கலாம். எடுத்துக்காட்டாக சோழ அரசன் கரிகாலன் பட்டினப்பாலையை இயற்றிய கடியலூர் உருத்திரங்கண்ணனார்க்குப் பெருமளவில் பொன் நாணயங்களைப் பரிசாக அளித்துள்ளார்.

சமூகமும் பொருளாதாரமும்

சங்ககாலத்தில் வேந்தர்கள் மேற்கொண்ட போர்கள் எதிரிகளின் பகுதிகளைக் கைப்பற்றி அதன் மூலம் தங்களது ஆட்சி எல்லைப் பரப்பினை விரிவாக்குவதற்காக அமைந்தன. சடங்குகள் நடைபெற்ற இடங்களில் போர்க் கைதிகள் பணியாற்றியதற்கான பதிவுகள் காணப்படுகின்றன. அடிமைகள் பற்றிய சில குறிப்புகளும் காணப்படுகின்றன. பொருளாதார உற்பத்தியில் பெண்களும், பங்கெடுத்துள்ளனர். சங்க காலத்தில் பல பெண்பாற் புலவர்களும் இருந்துள்ளனர்.

கைவினைத் தொழில்களான உலோகப் பாண்டம் செய்தல், மணி மற்றும் தங்க அணிகலன் செய்தல், சங்கு வளையல் அணிகலன் செய்தல் கண்ணாடி, இரும்பு வேலை, மட்பாண்டம் செய்தல் போன்ற உற்பத்தி நடவடிக்கைகள் குறித்து சான்றுகள் உள்ளன.

நகர மையங்களான அரிக்கமேடு, காஞ்சிபுரம், உறையூர், கொற்கை, காவிரிப்பூம்பட்டினம், மதுரை, கேரளத்தில் பட்டணம் ஆகிய இடங்களில் இது போன்ற கைவினைப் பொருள் உற்பத்தி வளமையாக நடந்துள்ளன.

மதுரைக்காஞ்சி பகல் மற்றும் இரவு நேரக் கடைவீதிகளையும் (நாளங்காடி, அல்லங்காடி) அங்கு விற்பனையாகும் பலகைப்பட்ட கைவினைப் பொருள்கள் பற்றியும் பேசுகிறது.

பல்வேறு வகைப்பட்ட பொருள்களை உற்பத்தி செய்வதற்கான மூலப் பொருள்கள் அனைத்து இடங்களிலும் கிடைக்கவில்லை. சிலர் விலையுயர்ந்த ஆபரணக் கற்களையும், ஓரளவு மதிப்புள்ள ஆபரணக் கற்களையும் பண்டமாற்றாகக் கொடுத்து மூலப் பொருள்களைப் பெற்றனர்.

மகதக் கைவினைஞர்கள், மாளவ உலோகப் பணியாளர்கள், மராத்திய எந்திரப் பொறியாளர்கள் போன்றோர் தமிழகக் கைவினைஞர்களோடு கூட்டுறவு முறையில் இணைந்து பணியாற்றியதாக மணிமேகலை குறிப்பிடுகின்றது.

தமிழ்-பிராமி கல்வெட்டுகளில் வணிகத்தோடு தொடர்புடைய வணிகன், சாத்தன், நிகம போன்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன.

உப்பு வணிகர்கள் உமணர் என்றழைக்கப்பட்டனர். அவர்கள் மாடுகள் பூட்டிய வண்டிகளில் குடும்பத்தோடு வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சாத்து என்னும் சொல் இடம் விட்டு இடம் சென்று வணிகம் செய்பவர்களைக் குறிப்பதாகும். வணிகத்தில் நாணயங்கள் பயன்படுத்தப்பட்டாலும் பண்டமாற்று முறையே அதிக அளவில் பழக்கத்திலிருந்தது. ரோம தங்க வெள்ளி நாணயங்களும் பரிமாற்றத்திற்காகப் பயன்படுத்தப்பட்டன. ரோமப் பேரசு தென்கிழக்கு ஆசிய நாடுகள் போன்ற தொலைதூரத்தில் அமைந்துள்ள நாடுகளோடும் வணிகத் தொடர்புகள் மேற்கொண்டதைத் தொல்பொருள் ஆய்வுச் சான்றுகள் உறுதி செய்கின்றன.

இந்தியாவின் தென் பகுதியில் கடற்கரைகளை எளிதாகச் சென்றடைய முடியும் என்ற சூழல் இருந்ததாலும், கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் கடல் வழிப் பாதையில் அமைந்திருந்த காரணத்தினாலும் கடல் கடந்த தொடர்புகளில் முக்கியப் பங்கு வகித்தது. தொடக்க வரலாற்றுக்கால துறைமுகங்கள் பலவற்றில் கிடைத்துள்ள அம்போரா என்னும் ரோம நாட்டு ஜாடிகள், கண்ணாடிப் பொருள்கள், கடல் கடந்த வணிக நடவடிக்கைகளைச் சுட்டுகின்றன. ரோமானியர்களால் கொண்டுவரப்பட்ட செல்வம் அயல்நாட்டு வணிகர்களின் வருகை ஆகியவை குறித்து தொல்பொருள் சான்றுகளும் இலக்கியச் சான்றுகளும் உள்ளன. ரோமானியத் தங்க, வெள்ளி நாணயக் குவியல்கள் கோயம்புத்தூர் பகுதியிலும் தென்னிந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் கண்டறியப்பட்டுள்ளன.

கருத்தியலும் மதமும்

முறைபடுத்தப்பட்ட மத நடவடிக்கைகளின் தோற்றம் அசோகர் காலத்திலிருந்து தென்படத் தொடங்குகிறது. இக்காலகட்டத்தில்தான் பௌத்த மதம் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் பரவியிருந்தது. அசோகரின் மகள் போதிமரத்தை இலங்கைக்குக் கொண்டு சென்றதாகக் கருதப்படுகின்றது. அசோகருக்கு முன்னதாக சந்திரகுப்த மௌரியர் கர்நாடகத்திற்கு வருகை தந்ததாகவும் பழங்கதை ஒன்று உள்ளது. சாதவாகனர்களும், சங்க காலத்து அரசர்களும், இக்சவாகுக்களும் வேத வேள்விகளை ஆதரித்தனர். பிராமணருடைய வருகை குறித்தும் வேதச் சடங்குகள் நடைபெற்றமைக்கும் சங்க இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன. ஆனால் இக்காலகட்டத்தில் ‘வர்ணாசிரமம்’ என்னும் கருத்தியல் தமிழ்ப்பகுதிகளில் வேரூன்றவில்லை.

பௌத்த மதம் தொடர்பான சான்றுகள் தமிழகத்தில் பரவலாகக் காணப்படுகின்றன. ஆந்திராவில் கிருஷ்ணா, கோதாவரி நதிகளின் கழிமுகப் பகுதிகள் பல பௌத்த மையங்களைக் கொண்டுள்ளன. பௌத்த மதம் எந்த அளவிற்கு ஆழமாக வேறூன்றியிருந்தது என்பதை அமராவதி, நாகர்ஜுனகொண்டா ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் உணர்த்துகின்றன.

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், காவிரிப்பூம்பட்டினம் ஆகிய இடங்களில் பௌத்த ஸ்தூபிகள் இருந்தமைக்கான சான்றுகள் உள்ளன. சமண மதத்தோடு ஒப்பிடுகையில் பௌத்த மதத்திற்கான சான்றுகள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே கிடைக்கின்றன. தமிழகத்தில் காணப்படும் தமிழ்-பிராமி கல்வெட்டுகளுடன் கூடிய எண்ணற்ற குகை உறைவிடங்கள் பௌத்த மதத்தைக் காட்டிலும் சமண மதம் செல்வாக்குடன் விளங்கியதைப் பறைசாற்றுகின்றன.

பொதுமக்களின் மீது இம்மதங்கள் கொண்டிருந்த செல்வாக்கை அறிந்துகொள்ள இயலவில்லை என்றாலும், வணிகர்களும் சாதாரண மக்களும் சமணத் துறவிகளுக்குப் பாறை மறைவுகளில் படுக்கைகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். காணிக்கை செலுத்தினர் என்பதற்கான சான்றுகள் உள்ளன. சங்கம் மருவிய காலத்தில் சமணர்கள் தமிழ் இலக்கியத்திற்கு அளப்பரிய சேவை செய்துள்ளனர்.

களப்பிரர்களின் காலம் – சங்கம் மருவிய காலம்

சங்க காலத்திற்கும், பல்லவர், பாண்டியர் காலத்திற்கும் இடைப்பட்ட (தோராயமாக, பொ.ஆ. 300-600க்கும்) காலமே, தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம் என அறியப்படுகிறது. இவ்விடைவெளியில் போர்க்குணம் மிக்க களப்பிரர்கள் என்போர் தமிழகத்தைக் கைப்பற்றித், தமிழகத்தின் பாரம்பரிய அரசுகளான மூவேந்தர்களையும் தோற்கடித்ததால் இக்காலமானது களப்பிரர்களின் இடைக்கால ஆட்சி என்றும், இருண்ட காலமென்றும் தொடக்க கால வரலாற்று ஆசிரியர்கள் சித்தரித்தனர்.

இக்காலத்தில்தான் உன்னதமான தமிழ் இலக்கியமான திருக்குறளும் அதோடு ஏனைய பதினென் கீழ்க் கணக்கு நூல்களும் இயற்றப்பட்டன. சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய சிறந்த காப்பியங்களும் இக்காலத்தைச் சார்ந்தவையே.

இக்காலத்தில் அவைதீக மதங்களான சமணமும் பௌத்தமும் பெரும் செல்வாக்குப் பெற்றமையால், வைதீக வேதபுராண கருத்துக்களைக் கொண்டிருந்த அறிஞர்கள், ஆட்சி புரிகின்ற களப்பிரர்கள் தீயவர்கள் என்ற கருத்துத் தோற்றத்தை உருவாக்கியிருக்கலாம் எனத் தெரிகிறது.

பொ.ஆ. ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னர் வட தமிழகத்தில் பல்லவரும், தென்தமிழகத்தில் பாண்டியரும் அரசு மற்றும் சமூகத்தை உருவாக்க வழி உருவானது என்று அண்மைக்கால வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர்.

தொடக்கத்தில் இந்நாடுகளின் அரசர்கள் சமண பௌத்த மதங்களையே ஆதரித்தனர். ஆனால் அவர்கள் படிப்படியாக சைவ-வைணவ பக்தி இயக்கத்தால் புத்துயிர் பெற்ற வேத புராண மதங்களின் செல்வாக்கிற்கு உள்ளாயினர்.

சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட ஐந்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டுகளில் ஒன்று சேந்தன், கூற்றன் என்ற இரு அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறது. அவர்களின் குடும்பம் வம்சாவளி ஆகியன குறித்து எக்குறிப்பும் காணப்படாவிட்டாலும் சில அறிஞர்கள் அவர்களைக் களப்பிர அரசர்கள் எனக் கருதுகின்றனர். பொ.ஆ. ஆறாம் நூற்றாண்டின் மூன்றாவது கால்பகுதி காலத்தில் களப்பிரர்கள் ஆட்சி பாண்டியர்களால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாகத் தெரிகிறது.

பொ.ஆ. 6 முதல் 9ஆம் நூற்றாண்டு வரையிலான தென்னிந்திய அரசியல் வரலாற்றில், பாதாமி (வாதாபி) சாளுக்கியருக்கும் (மேலைச் சாளுக்கியர்) காஞ்சி பல்லவருக்கும் இடையிலான மோதல்கள் முதன்மை பெறுகின்றன.

கோவில் சுவர்களிலும் தூண்களிலும் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளும் செப்புப் பட்டயங்களுமே இக்காலகட்ட வரலாற்றுக்கு முக்கியச் சான்றுகளாகும். பிராமணர்களுக்கு இறையிலியாக வழங்கப்பட்ட நிலங்களைப் பதிவு செய்யவும், மத நிறுவனங்களுக்கு அரச குடும்பத்தைச் சார்ந்தவர்களும் பிறரும் கொடுத்த கொடைகளைப் பதிவு செய்யவும், சாளுக்கிய அரசர்கள் கன்னடம், தெலுங்கு, தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் வெளியிட்ட கல்வெட்டுகளும், பல்லவ அரசர்கள் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் வெளியிட்ட கல்வெட்டுகளும் முக்கியச் சான்றுகளாகும்.

கன்னட மொழியில் எழுதப்பட்ட இலக்கண நூலான ‘கவிராஜமார்கம்’, ‘பம்ப – பாரதம்’, ‘விக்கிரமார்ஜுன விஜயம்’, நன்னையாவால் தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட மகாபாரதம் ஆகிய நூல்கள் முக்கிய வரலாற்றுச் செய்திகளை முன்வைக்கின்றன.

சமுத்திர குப்தருடைய அலகாபாத் தூண் கல்வெட்டு, சாளுக்கிய அரசர் இரண்டாம் புலிகேசியின் ஐஹோல் கல்வெட்டு உள்ளிட்ட பல கல்வெட்டுக்கள் பல்லவ சாளுக்கிய மோதல்கள் குறித்த விவரங்களை வழங்குகின்றன.

சாளுக்கியர்

இரண்டு சாளுக்கிய அரச குடும்பங்கள் உள்ளன. ஒன்று வாதாபி சாளுக்கியர்; மற்றொன்று கல்யாணி சாளுக்கியர்.

வாதாபி சாளுக்கிய அரசவம்சத்தை உருவாக்கிய முதலாம் புலிகேசி (சுமார் கி.பி. (பொ.ஆ) 543-566) வாதாபிக்கு அருகேயுள்ள ஒரு குன்றினைச் சுற்றி கோட்டையைக் கட்டியதோடு வலுவான சக்தியாக உதயமானது. கடம்பரின் மேலாதிக்கத்தின் கீழிருந்த அவர், தன்னை சுதந்திர அரசராக பிரகடனப்படுத்திக்கொண்டார். அவர் அஸ்வமேத யாகம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. தலைநகர் வாதாபி கீர்த்திவர்மனால் (566-597) நிறுவப்பட்டது.

முதலாம் புலிகேசியின் பேரன் இரண்டாம் புலிகேசி (609-642) அரசர் மங்களேசனைத் தோற்கடித்த பின்னர் தன்னை அரசராகப் பிரகடனப்படுத்திக் கொண்டார். இந்நிகழ்வை இரண்டாம் புலிகேசியினுடைய அவைக்களப் புலவரான ரவிகீர்த்தி என்பவர் சமஸ்கிருதத்தில் எழுதிய ஐஹோல் கல்வெட்டில் விவரிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் புலிகேசியின் போர் வெற்றிகளில் குறிப்பிடத்தக்கது நர்மதை நதிக்கரையில் ஹர்ஷரை வென்றதாகும். மாளவம், கலிங்கம் மற்றும் தக்காணத்தின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த அரசர்கள் இவரின் அரசியல் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டனர். பனவாசியின் கடம்பர்களையும் தலக்காடு (மைசூர்) கங்கர்களையும் இவர் வெற்றி கொண்டார்.

இவர் காஞ்சிபுரத்தின் மீது மேற்கொண்ட தாக்குதலைப் பல்லவ அரசன் முதலாம் மகேந்திரவர்மன் முறியடித்தார். இது சாளுக்கியருக்கும் பல்லவருக்கும் இடையே ஒரு நீண்ட காலப் போருக்கு இட்டுச்சென்றது.

பல்லவ அரசன் முதலாம் நரசிம்மவர்மன் (630-668) வாதாபியைத் தாக்கிக் கைப்பற்றினார். இப்போரில் இரண்டாம் புலிகேசி உயிர்துறந்தார். இதனைத் தொடர்ந்து வாதாபி சாளுக்கியப் பேரரசின் கிழக்குப் பகுதிகளின் மீதான பல்லவர்களின் கட்டுப்பாடு பல ஆண்டுகள் நீடித்தது. எட்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் வாதாபி சாளுக்கியர்கள் ராஷ்டிரகூடர்களால் வெற்றிகொள்ளப்பட்டனர்.

சாளுக்கியரின் நிர்வாகம்

அரசரே நிர்வாகத்தின் தலைவர். ஒரு அரசருக்குப் பிறகு, அவருடைய மூத்த மகனே அரசராக வேண்டும் என்ற மரபு முழுமையாகப் பின்பற்றப்படவில்லை. தொடக்ககாலத்தில் சாளுக்கிய அரசர்கள் மகாராஜன், சத்யசிரயன், ஸ்ரீபிருத்திவிவல்லபன் எனும் பட்டங்களைச் சூடிக் கொண்டனர்.

ஹர்சவர்தனரை வென்ற பின்னர் இரண்டாம் புலிகேசி பரமேஸ்வரன் எனும் பட்டத்தைச் சூட்டிக்கொண்டார்.

விரைவில் பத்ரகாரன்மகாராஜாதிராஜன் எனும் பட்டங்களும் பிரபலமாயின

பல்லவ அரசில், அரசர்கள், தர்ம மகாராஜாதி ராஜா, மகாராஜாதி ராஜா, தர்ம மகாராஜா, மகாராஜா எனும் உயர்வாக ஒலிக்கும் பட்டங்களைச் சூட்டிக்கொண்டனர். ஹிரகடஹள்ளி செப்புப்பட்டயத்தில், அக்னிஸ்தோம, வாஜ்பேய, அஸ்வமேத வேள்விகளை நடத்தியவர் என்று அரசர் அறிமுகம் செய்யபடுகிறார்.

காட்டுப் பன்றியின் உருவமே சாளுக்கியரின் அரசமுத்திரையாகும். இது விஷ்ணுவின் வராக அவதாரத்தைக் குறிப்பதாகும். சிவபெருமானின் வாகனமான காளை (நந்தி) பல்லவர்களின் அரச முத்திரையாகும்.

அரசகுல மகளிர்

முதலாம் ஜெயசிம்மனின் வழிவந்த சாளுக்கிய வம்சாவளியினர் அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை மாநில ஆளுநர்களாக நியமித்தனர். விஜயபத்திரிகா என்னும் பெயரைக் கொண்ட சாளுக்கிய இளவரசி கல்வெட்டாணைகளைப் பிறப்பித்துள்ளார்.

பல்லவ அரசிகள் அரசு நிர்வாகத்தில் நேரடியாகப் பங்கேற்கவில்லை. ஆனால் அவர்கள் பல கோவில்களை எழுப்பினர். பல கடவுள்களின் உருவங்களை அங்கே நிறுவினர். கோவில்களுக்குக் கொடை வழங்கினர். ராஜசிம்மனின் அரசி ரங்கபதாகாவின் உருவம், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலிலுள்ள கல்வெட்டில் காணப்படுகிறது.

இரண்டாம் புலிகேசியின் ஐஹோல் கல்வெட்டு :

ஐஹோல் (கர்நாடகா) மேகுடி கோவில் ஒரு குன்றின் மேலுள்ளது. இச்சமணக் கோவிலின் கிழக்குச் சுவரில் 19 வரிகளைக் கொண்ட சமஸ்கிருதக் கல்வெட்டு ஒன்று உள்ளது. (சக வருடம் 556: கி.பி. 634-635 காலத்தைச் சார்ந்தது). இக்கல்வெட்டுச் செய்திகளை எழுதியவர் ரவிகீர்த்தி என்ற கவிஞர். இக்கல்வெட்டு சாளுக்கிய அரசர்களைக் குறிக்கும் மெய்கீர்த்தியாகும். குறிப்பாக அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த இரண்டாம் புலிகேசி ‘சத்யஸ்ராய’ (உண்மையின் உறைவிடம்) என்று குறிப்பிடப்பட்டுள்ளான். இக்கல்வெட்டு சாளுக்கியரின் அரசவம்ச வரலாற்றை, இரண்டாம் புலிகேசி தன் பகைவர்கள் அனைவரையும் குறிப்பாக ஹர்சவர்தனரைத் தோற்கடித்ததைக் கோடிட்டுக் காட்டுகிறது.

அரசரும் அமைச்சர்களும்

சாளுக்கிய அரசில் அதிகாரங்கள் அனைத்தும் அரசரின் கரங்களில் வழங்கப்பட்டிருந்தன. அமைச்சரவை பற்றிக் கல்வெட்டுகளில் குறிப்பாக எதுவும் சொல்லப்படவில்லை. ஆனால் அவை மகா சந்தி விக்கிரகிக என்னும் அதிகாரியை குறிப்பிடுகின்றன. நான்கு அமைச்சர்களைக் குறித்து கல்வெட்டுகள் பேசுகின்றன. அவர்கள் பிரதான (முதலமைச்சர்), மகாசந்தி-விக்கிரகிக (வெளிவிவகாரத்துறை அமைச்சர்), அமத்யா (வருவாய்த்துறை அமைச்சர்), சமகர்த்தா (அரசு கருவூல அமைச்சர்) ஆகியோராவர்.

நிர்வாக வசதிக்காகச் சாளுக்கியர்கள் நாட்டைப் பல பிரிவுகளாகப் பிரித்திருந்தனர். அவை விஷ்யம், ராஷ்ட்ரம், நாடு, கிராமம் என்பவனவாகும். கல்வெட்டுகள் விசயாபதி, சமந்தா, கிராமபோகி, மபத்ரா என்னும் அதிகாரிகள் குறித்துப் பேசுகின்றன. விசயாபதி அரசரின் கட்டளைப்படி அதிகாரங்களைக் கையாண்டார். சமந்தா என்போர் நிலப்பிரபுக்களாவர். இவர்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டனர். கிராம்போகி, கிராமகூடர் ஆகியோர் கிராம அளவிலான அதிகாரிகள், மகாத்ரா என்போர் கிராமத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களாவர்.

மாகாண மற்றும் மாவட்ட நிர்வாகம்
பொதுவாக அரசர்கள் தங்களின் மகன்களை மாகாண ஆளுநர்களாக அமர்த்தினர். மாகாண ஆளுநர்கள் தங்களை ராஜமார்க்க ராஜன் என்றும், ராஜாதித்ய ராஜ பரமேஸ்வரன் என்றும் அழைத்துக் கொண்டனர். இவர்களில் சிலர் மகா சமந்தா என்னும் பட்டத்தைப் பெற்றிருந்தனர். இவர்கள் படைகளை வைத்துப் பராமரித்தனர். விஷ்யாவின் தலைவர் விசாயபதியாவார். இவ்விஷயாக்கள் மீண்டும் புக்திகளாகப் பிரிக்கப்பட்டன. புக்தியின் தலைவர் போகபதி ஆவார்.

கிராம நிர்வாகம்
கிராமங்களில் பாரம்பரியமாக வருவாய் அலுவலர்களாகப் பணியாற்றிவர் நல-கவுண்ட என்றழைக்கப்பட்டனர். அரசரால் நியமிக்கப்பட்ட கமுண்டர் அல்லது போகிகன், கிராம நிர்வாகத்தின் மையப் புள்ளியாக இருந்தார். கிராமக் கணக்கர் கரணா ஆவார். இவர்கிராமணி எனவும் அழைக்கப்பட்டனர். கிராம அளவில் கிராம மக்களைக் கொண்ட ‘மகாஜனம்’ என்னும் குழுவின் கைகளில் சட்டம் ஒழுங்கு நிர்வாகம் இருந்தது. மகாபுருஷ் என்னும் சிறப்பு அதிகாரி கிராமத்தில் அமைதியைப் பாதுகாக்கும் பணியை மேற்கொண்டார். நகரபதி, புறபதி ஆகியோர் சிறுநகரங்களின் அதிகாரிகளாவர்.

மதம்
சைவம் வைணவம் ஆகிய இரு மதங்களையும் சாளுக்கியர் ஆதரித்தனர். சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் கோவில்களை எழுப்பினர். இக்கோவில்களில் முறையான வழிபாடுகளும் சடங்குகளும் விழாக்களும் நடத்தப்படுவதற்காக கங்கைப் பகுதிகளிலிருந்து பிராமணர்கள் அழைத்துவரப்பட்டு குடியமர்த்தப்பட்டனர்.

சாளுக்கிய அரசர்களில் குறிப்பிடத்தகுந்த அரசர்களான முதலாம் கீர்த்திவர்மன், மங்களேசன் (597-609), இரண்டாம் புலிகேசி (609-642) ஆகியோர் வேள்விகளை நடத்தினர். அவர்கள் பரம-வைஷ்யண, பரம-மஹேஸ்வர என்னும் பட்டங்களையும் தரித்துக்கொண்டனர். போர்க் கடவுளான கார்த்திகேயனுக்கு முக்கியத்துவம் அளித்தனர்.

சைவ மடங்கள் சைவத்தைப் பரப்பும் மையங்களாயின. சாளுக்கியர் ஆசீவக மதப்பிரிவுகளையும் ஆதரித்தனர். சமண மத மையங்களுக்கு மிகத் தாராளமாக நிலங்களை வழங்கினர். கவிஞர் என இரண்டாம் புலிகேசியால் புகழ்மாலை சூட்டப்பட்ட ரவிகீர்த்தி ஒரு சமண அறிஞர் ஆவார். இரண்டாம் கீர்த்திவர்மனின் ஆட்சியின்போது சமண மதத்தைச் சேர்ந்த கிராம அதிகாரி ஒருவர் அனெகெரி என்ற இடத்தில் ஒரு சமணக் கோவிலைக் கட்டினார். இளவரசர் கிருஷ்ணா குணபத்ரா என்ற சமணத் துறவியை தனது ஆசிரியராகக் கொண்டிருந்தார். சீனப் பயணி யுவான் சுவாங் சாளுக்கியப் பகுதிகளில் பல பௌத்த மையங்கள் இருந்ததாகவும் அவற்றில் மகாயான, ஹீனயான பிரிவுகளைப் பின்பற்றும் 5000 பௌத்தர்கள் வாழ்ந்ததாகவும் கூறுகிறார்.

இலக்கியமும் கல்வியும்
ஐஹோல், மகாகூடம் தூண் கல்வெட்டுக்களைச் சாளுக்கியர் சமஸ்கிருதத்தில் பொறித்துள்ளனர். வாதாபியிலுள்ள ஒரு சாளுக்கிய அரசனின் ஏழாம் நூற்றாண்டுக் கல்வெட்டு கன்னட மொழியை உள்ளூர் பிராகிருதம் அதாவது மக்களின் மொழியென்றும், சமஸ்கிருதத்தைப் பண்பாட்டின் மொழி என்றும் குறிக்கின்றது. இரண்டாம் புலிகேசியின் தளபதி ஒருவன் ‘சப்தாவதாரம்’ எனும் இலக்கண நூலை சமஸ்கிருத மொழியில் எழுதினார்.

பல்லவர்

தொடக்ககால அறிஞர்கள் சிலர் பார்த்தியர் எனும் அரச மரபின் மற்றொரு பெயரான பஹல்வ என்ற சொல்லின் திரிபே ‘பல்லவ’ ஆகும் என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். பொ.ஆ. இரண்டாம் நூற்றாண்டில் சாகர், சாதவாகனர்க்கிடையே போர்கள் நடைபெறுகையில் மேற்கிந்தியாவிலிருந்து தீபகற்பத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளுக்குப் பார்த்தியர் குடி பெயர்ந்தனர். ஆனால் இன்றைய அறிஞர் பலர் பார்த்தியரைத் தென்னிந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் அல்லது வட இந்தியரோடு ரத்தக்கலப்பு கொண்டவர்கள் என்றும் கருதுகின்றனர்.

பல்லவர்கள் வடபெண்ணை ஆற்றுக்கும், வட வெள்ளாற்றுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பான தொண்டை மண்டலத்தோடு தொடர்புடையவராவர். சிம்மவர்மனின் மகனான சிம்மவிஷ்ணு காவேரி வரை முன்னேறி சோழர்களுக்குச் சொந்தமான பகுதிகளைக் கைப்பற்றி, தன் தந்தை தொடங்கிய பல்லவ வம்ச ஆட்சியை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்டார். களப்பிரர்களை முற்றிலும் அழித்தொழித்து காவேரி வரை முன்னேறி அவர்களின் பகுதிகளைக் கைப்பற்றியபோது பாண்டியர்களோடு மோத வேண்டியதாயிற்று.

சிம்மவிஷ்ணுவைத் தொடர்ந்து அவரது மகன் முதலாம் மகேந்திரவர்மன் (பொ.ஆ. 590-630) அரியணை ஏறினார். சமண மதத்தைப் பின்பற்றிய இவரை அப்பர் சைவராக மாற்றினார். கலைகளை ஆதரித்த மகேந்திரவர்மன் கவிஞனும் இசை வித்தகனுமாவார்.

மகேந்திரவர்மனின் ஆட்சிக்காலத்தில் இரண்டாம் புலிகேசி, பல்லவ அரசினுடைய வடபகுதிகளைக் கைப்பற்றித் தலைநகர் காஞ்சிபுரம் வரை முன்னேறினார். இதனைத் தொடர்ந்து முதலாம் நரசிம்மவர்மனின் ஆட்சிக்காலத்தில் (630- 668) பதிலடி கொடுக்கும் விதத்தில் பல்லவர்கள் சாளுக்கியர்களுக்கு எதிராகப் பல வெற்றிகளை ஈட்டினர். இப்போர்களில் பல்லவர்களுக்கு மானவர்மன் எனும் இலங்கை இளவரசர் உதவினர். இவ்விளவரசரே பின்னர் இலங்கையின் அரசராகப் பதவியேற்றார். இப்போர்களின் உச்சகட்டமாக நரசிம்மவர்மன் சாளுக்கிய அரசின் தலைநகரான வாதாபியைக் கைப்பற்றினார். இரண்டாம் புலிகேசி இப்போரில் கொல்லப்பட்டார்.

நரசிம்மவர்மன் சேர சோழர்களையும் களப்பிரர்களையும் வெற்றி கொண்டதாகக் கூறுகிறார். இலங்கை அரசன் மானவர்மனுக்கு ஆதரவாக இருமுறை அனுப்பப்பட்ட கப்பற்படைகள் வெற்றி பெற்றன. இருந்தபோதிலும் இலங்கை அரசர் தனது பதவியினை இழந்தார். பல்லவ சாளுக்கியப்பகைமையும் மோதல்களும் தொடர்ந்தன. இடையிடையே அமைதியும் நிலவியது.

பல்லவ அரசன் முதலாம் பரமேஸ்வரவர்மனின் ஆட்சியின்போது (670-695) சாளுக்கிய அரசர் விக்கிரமாதித்யன் பல்லவ நாட்டின் மீது படையெடுத்தார். முதலாம் பரமேஸ்வரவர்மன் கங்கர், பாண்டியர் ஆகியோரின் உதவியோடு விக்கரமாதித்தனை எதிர்த்துப் போரிட்டார். இதன் விளைவாகப் பின்னர் தெற்கில் பல்லவருக்கும் பாண்டியருக்குமிடையே மோதல்கள் ஏற்பட்டன. ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில், தண்டிவர்ம பல்லவனின் ஆட்சியின்போது காஞ்சிபுரம் ராஷ்ட்டிரகூட அரசர் மூன்றாம் கோவிந்தனின் தாக்குதலுக்கு உள்ளானது.

தண்டிவர்மனின் மகன் மூன்றாம் நந்திவர்மன், மேலைக் கங்கர், சோழர் ஆகியோரின் ஆதரவோடு பாண்டியரை திருப்புறம்பியம் போரில் தோற்கடித்தான்.

மூன்றாம் நந்திவர்மனின் பேரனான அபராஜிதன் தொண்டை மண்டலப்பகுதியின் மீது படையெடுத்து வந்த முதலாம் ஆதித்த சோழனோடு போர்புரிந்து மடிந்தான். இத்துடன் பல்லவரின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இதன் பின்னர் தொண்டை மண்டலம் சோழர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

சேரர்-குறிப்பு : பொ.ஆ. ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை கேரளா, சேர பெருமாள் அரசர்களால் ஆளப்பட்டிருந்தாலும் ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை அவர்களது வரலாறு குறித்து ஓரளவே தெரியவந்துள்ளது.

பல்லவ நிர்வாகம்
பல்லவர் காலத்தில் அரச பதவியானது தெய்வீக உரிமையென்றும், அவ்வுரிமையானது வம்சாவளியாகத் தொடர்வது என்றும் கருதப்பட்டது. பல்லவ அரசர்கள் பெரும் பட்டங்களைச் சூட்டிக்கொண்டனர். அவற்றுள் ‘மகாராஜாதிராஜா’ என்பன போன்ற சில வடஇந்திய மரபிலிருந்து பெறப்பட்டவை. அமைச்சர் குழுவொன்று அரசருக்கு உதவியது. பிற்காலப் பல்லவர் காலத்தில் இவ்வமைச்சர் குழுவானது அரசின் கொள்கை முடிவுகளில் முக்கியப் பங்காற்றியது. ஒருசில அமைச்சர்கள் ஓரளவுக்கு உயர்ந்த பட்டங்களைச் சூட்டிக் கொண்டனர். இவ்வமைச்சர்களில் பலர் நிலவுடைமையாளர்களிலிருந்து நியமிக்கப்பட்டனர்.

அமத்யா என்பவருக்கும் ‘மந்திரி’ என்பவருக்குமிடையே சில வேறுபாடுகளிருந்தன. மந்திரி என்றால் பொதுவாக ராஜதந்திரி எனப் புரிந்துகொள்ளப்படுகிறது. அமத்யா என்பவர் ஆலோசகராவார். ‘மந்திரி மண்டல’ என்பது அமைச்சர் குழுவாகும். ரகஸ்யதிகிரதா என்பவர் அரசரின் அந்தரங்கச் செயலாளர்.

மாணிக்கப் பண்டாரம் காப்பான் என்னும் அதிகாரி கருவூலத்தைக் காப்பவராவார். (மாணிக்க-விலைமதிப்பில்லா; பண்டாரம்-கருவூலம்; காப்பான்-காவல் புரிபவர்). கொடுக்காப்பிள்ளை  என்பவர் நன்கொடைகளுக்கான அதிகாரிகளாவார். கோச-அதீயட்சா என்பவர் மாணிக்கப் பண்டாரம் காப்பாளர்களை மேற்பார்வை செய்பவர். நீதிமன்றங்கள் அதிகர்ண மண்டபம் என்றும், நீதிபதிகள் தர்மாதிகாரி என்றும் அழைக்கப்பட்டனர்.

நந்திவர்ம பல்லவனின் காசக்குடி செப்பேடுகளில் அபராதங்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. மேல்நிலை நீதிமன்றங்களில் விதிக்கப்படும் அபராதங்கள் கர்ணதண்டம் ஆகும். கீழ்நிலை நீதிமன்றங்களில் விதிக்கப்படும் அபராதங்கள் அதிகர்ண தண்டமாகும்.

மாநில ஆளுநர்களுக்கு மாவட்ட அளவிலான அதிகாரிகள் ஆலோசனை வழங்கி உதவிகள் செய்தனர். இவ்வதிகாரிகள் உள்ளூர் அளவிலான தன்னாட்சி பெற்ற அமைப்புகளோடு ஆலோசகர்கள் என்ற நிலையில் இணைந்து செயல்பட்டனர். இவ்வமைப்புகள் உள்ளூர் அளவிலான சாதி, கைவினைஞர், தொழில் குழுக்கள் (நெசவாளர், எண்ணெய் ஆட்டுவோர் போன்றோர்), சேவை செய்வோர், மாணவர், அர்ச்சகர்கள், துறவிகள் ஆகியோர்களின் உறவுகளின் அடிப்படையில் கட்டப்பட்டவையாகும். கிராமங்களில் மக்கள் பங்குபெறும் மன்றங்கள் இருந்தன. மாவட்டப் பிரதிநிதிகளும் இருந்தனர். இவ்வமைப்புகளின் பொதுக்குழுக் கூட்டங்கள் ஆண்டிற்கு ஒருமுறை கூட்டப்பட்டது. அளவில் சிறியதான குழுக்களின் கூட்டங்கள் அடிக்கடி நடத்தப்பட்டன. கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது இச்சிறிய அமைப்புகளின் பொறுப்பாகும்.

நிலமானியங்கள்

நிலவுடைமை உரிமை அனைத்தும் அரசரிடமே இருந்தது. அவர் அதிகாரிகளுக்கு வருவாய் மானியங்களையும் பிராமணர்களுக்கு நில மானியங்களையும் வழங்கினார் அல்லது நிலப்பிரபுக்கள், சிறு விவசாயிகள் மூலம் நிலத்தை சாகுபடி செய்ய வைத்தார். இரண்டாவதாகச் சொல்லப்பட்டதே பெரும்பாலும் பின்பற்றப்பட்ட முறையாகும்.

அரசருக்குச் சொந்தமான நிலங்கள் குடியானவர்களுக்குக் குத்தகைக்கு விடப்பட்டன. குத்தகைக்கான கால அளவைப் பொறுத்து கிராமங்களின் தகுதி நிலைகள் மாறுபடும். பல்வேறு சாதிகளைச் சேர்ந்த மக்களைக் கொண்ட கிராமங்கள் நிலவரி செலுத்தின.

பிரம்மதேய கிராமங்கள் ஒரு பிராமணருக்கோ அல்லது சில பிராமணர்களைக் கொண்ட ஒரு குழுவுக்கோ கொடையாக வழங்கப்பட்டன. வரி செலுத்த வேண்டியதில்லை என்பதால் இக்கிராமங்கள் ஏனைய கிராமங்களைக் காட்டிலும் செழிப்பாக இருந்தன.

கோவில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட கிராமங்கள் தேவதான கிராமங்களாகும். இவற்றின் வருவாயை கோவில் நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனரேயன்றி அரசு பெறவில்லை. கோவில் பணிகளில் வேலைவாய்ப்பு வழங்கி, கோவில்கள் கிராமங்களுக்கு உதவின. பின்வந்த காலங்களில் கோவில்கள் கிராமம் சார்ந்த வாழ்க்கையின் மையமாக மாறியபோது தேவதான கிராமங்கள் தனி முக்கியத்துவம் பெற்றன.

பல்லவர் ஆட்சியில் முதலாவதாக குறிப்பிடப்பட்டுள்ள இருவகை கிராமங்களே (தேவதான கிராமங்கள் தவிர) பெரும்பான்மையாய் இருந்தன.

1879இல் புதுச்சேரிக்கு அருகே உருக்காட்டுக்கோட்டம் என்னுமிடத்தில் இருபுறமும் இணைக்கப்பட்டு லிங்கம், நந்தி ஆகியன (பல்லவர்களின் முத்திரை) பொறிக்கப்பட்ட செப்பு வளையத்தில் கோர்க்கப்பட்ட பதினொரு செப்புப்பட்டயங்கள் கண்டறியப்பட்டன. அரசன் நந்திவர்மனின் (பொ.ஆ 753) இருபத்திரண்டாவது ஆட்சியாண்டில், மானியமாகத் தரப்பட்ட ஒரு கிராமம் குறித்த செய்திகள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் உள்ளடக்கம் அரசரைப் பற்றிய சமஸ்கிருத மொழியில் புகழ்வதில் தொடங்கி மானியத்தைப் பற்றிய விவரங்களைத் தமிழில் கூறி இறுதியில் சமஸ்கிருத செய்யுளோடு முடிவடைகிறது.

கிராம வாழ்க்கை
கிராம அளவில் அடிப்படையான அமைப்பு ‘சபை’ ஆகும். அறக்கட்டளைகள், நிலம், நீர்ப்பாசனம், வேளாண்மை, குற்றங்களுக்கான தண்டனை, மக்கள் தொகை உள்ளிட்ட தேவைப்படும் ஏனைய ஆவணங்களைப் பாதுகாத்தல் ஆகியன போன்ற கிராமத்தோடு தொடர்புடைய அனைத்து செயல்பாடுகளிலும் சபை அக்கறை செலுத்தியது.

கிராம நீதிமன்றங்கள் சிறிய குற்றவியல் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்புகள் வழங்கின. சிறுநகரங்களிலும் நகரங்களிலும் அரசரை மேலான நடுவராகக் கொண்டு அதிகாரிகளின் தலைமையில் நீதிமன்றங்கள் செயல்பட்டன. சபை என்பது நிர்வாகமுறையைச் சேர்ந்த அமைப்பாகும்.

கிராமத்தவர் அனைவரும் பங்கேற்கும் நிர்வாக முறை சாராதமக்கள் மன்றமான ‘ஊரார்’ என்ற அமைப்போடு இது இணைந்து செயல்பட்டது. இதற்கு மேலான மாவட்ட குழு ‘நாடு’ அல்லது மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து செயல்பட்டது. பிராமணர்கள் மட்டுமே வாழ்ந்த அல்லது பிராமணர்கள் அதிகமாக வாழ்ந்த கிராமங்கள் இவ்வமைப்புகளின் செயல்பாடுகள் தொடர்பான ஆவணங்களைப் பாதுகாத்தன. கிராம அளவிலான இவ்வமைப்புகளுக்கும் அரசு நிர்வாகத்திற்குமிடையே பாலமாக செயல்பட்டவர் கிராமத்தலைவர் ஆவார்.

ஏரி நீர்ப்பாசனம்
ஏரிப்பட்டி அல்லது ஏரிநிலம் எனும் சிறப்பு வகை நிலத்தை தென்னிந்தியாவில் மட்டுமே அறிகிறோம். தனிப்பட்ட மனிதர்கள் கொடையாகக் கொடுத்த இந்நிலங்களிலிருந்து பெறப்படும் வரி கிராமத்து ஏரிகளைப் பராமரிப்பதற்காகத் தனியாக ஒதுக்கி வைக்கப்படும், இந்த ஏரிகளில் மழைநீர் சேகரிக்கப்படும். அந்நீரைக் கொண்டு வருடம் முழுவதும் வேளாண்மை செய்ய முடிந்தது. வறட்சியான கால நிலையிலும் வேளாண்மை செய்யலாம். ஏரிகள் அனைத்தும் கிராம மக்களின் கூட்டுழைப்பில் கற்களாலும் செங்கற்களாலும் கட்டப்பட்டன. ஏரி நீரை அனைத்து விவசாயிகளும் பகிர்ந்துகொண்டனர். ஏரிகளைப் பராமரிப்பது கிராமத்தின் பொறுப்பாகும்.

கிராமம் தொடர்பான செய்திகளைப் பேசுகிற பல்லவர் காலக் கல்வெட்டுகள் அனைத்தும் ஏரிப் பராமரிப்பைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. ஏரிகளுக்கு அடுத்த நிலையில் கிணறுகள் முக்கியமானவை. வாய்க்கால்கள் வழியாக நீர் விநியோகிக்கப்பட்டது. நீர் பகிர்வினை முறைப்படுத்தவும், அளவுக்கு அதிகமாகச் சேர்ந்த நீரை வெளியேற்றவும் மதகுகள் அமைக்கப்பட்டிருந்தன. கிராமத்தாரால் நியமிக்கப்பட்ட ஏரிக்குழு எனும் அமைப்பு நீர் பகிர்வை மேற்பார்வையிட்டது. ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமான நீரைப் பயன்படுத்தி வேளாண்மை செய்வோர்மீது வரி விதிக்கப்பட்டது.

வருவாயும் வரிவிதிப்பும்

செப்புப்பட்டயங்களில் பதிவு செய்யப்பட்ட நிலமானியங்களே முக்கியமாக நில வருவாய், வரிவிதிப்பு ஆகியன குறித்தும் விரிவான தகவல்களை முன்வைக்கின்றன. வருவாயானது முதன்மையாக கிராம ஆதாரங்களிலிருந்தும், வணிக மற்றும் நகரங்களைச் சேர்ந்த நிறுவனங்களிடமிருந்தும் பெறப்பட்டது.

கிராமங்களின் மீது இருவகைப்பட்ட வரிகள் விதிக்கப்பட்டன. வேளாண் மக்கள் விளைச்சலில் ஆறில் ஒரு பங்கில் தொடங்கி பத்தில் ஒரு பங்கு வரை வரியாக அரசுக்குச் செலுத்தினர். இவ்வரியை கிராமமே வசூல் செய்து அரசின் வசூல் அதிகாரியிடம் கட்டியது. இரண்டாவது வகைப்பட்ட வரிகள் உள்ளூர் அளவில் வசூலிக்கப்பட்ட வரிகளாகும். ஆனால் இவ்வரிகள் அந்தக் கிராமத்தின் சேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. இவ்வரிப் பணம் நீர்ப்பாசன அமைப்புகளைப் பழுதுபார்த்தல், கோவில்களுக்கு விளக்கேற்றுதல் போன்றவற்றிற்கே செலவிடப்பட்டன.

நிலவரியின் மூலமாகப் பெறப்படும் வருவாய் போதுமானதாக இல்லையெனில் அரசு கால்நடை வளர்ப்போர், கள் இறக்குவோர், திருமண வீட்டார், மட்பாண்டம் செய்வோர், தங்க வேலை செய்வோர், சலவை செய்வோர், துணி நெய்வோர், கடிதங்கள் சுமந்து செல்வோர், நெய் தயாரிப்போர், இடைத் தரகர்கள் ஆகியோரிடம் வரிவசூலித்து பற்றாக்குறையைச் சரிசெய்து கொள்ளும்.

போர்களின் போது சூறையாடப்பட்ட பொருள்களும் படைவீரர்களால் கைப்பற்றப்பட்ட செல்வமும் அரசு வருவாயோடு சேர்க்கப்பட்டன. பல்லவ அரசர்கள் போர்களை மிக முக்கியமானதாகக் கருதினார்கள். காஞ்சிபுரம் வைகுண்டப் பெருமாள் கோவிலில் நந்திவர்மன் காலத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகள், குறிப்பாகப் பல்லவப் படைகள் ஒரு கோட்டையைத் தாக்குவது போன்ற போர்க்களக் காட்சிகள், தொடர் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. அக்கோட்டை உயரமான மதிற் சுவர்களை கொண்டதாயும், வீரர்கள் அதைத் தாக்குவது போலவும் அருகில் யானைகள் நிற்பது போலவும் அக்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

பல்லவப் படைகள்
அரசர் நிலையான படையொன்றைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டிருந்தார். அரசு வருவாயில் பெரும்பகுதி படைகளைப் பராமரிப்பதற்கே செலவானது. படைகள் காலாட்படை, குதிரைப்படை, சிறய அளவிலான யானைப்படை ஆகியவற்றைக் கொண்டிருந்தன. இக்காலத்தில் தேர்ப்படைகள் பெரும்பாலும் பயன்பாட்டிலில்லை. பெரும்பாலுமான போர்கள் குன்றுகள் நிறைந்த நிலப்பரப்புகளில் நடைபெற்றதால் தேர்ப்படைகளால் பயனுள்ள வகையில் செயல்பட இயலவில்லை. குதிரைப் படைகள் வெற்றிகரமான விளைவுகளை ஏற்படுத்த முடியுமென்றாலும் குதிரைகளை இறக்குமதி செய்ய வேண்டிய திருந்ததால் பெருஞ்செலவு பிடிப்பதாக அமைந்தது. பல்லவர்களிடம் கப்பல்படையும் இருந்தது. அவர்கள் மாமல்லபுரத்திலும் நாகப்பட்டினத்திலும் கப்பல் தளங்களைக் கட்டினர். இருந்தபோதிலும் பின்வந்த சோழர்களின் கப்பற்படை வலிமையோடு ஒப்பிட்டால் பல்லவர்களின் கப்பற்படை சிறியதேயாகும்.

வணிகம்
பல்லவர் காலத்தில் காஞ்சிபுரம் முக்கியமான வணிக மையாக இருந்தது. வணிகர்கள் தங்கள் பொருள்களைச் சந்தைப்படுத்துவதற்கு அரசிடம் உரிமம் பெற வேண்டும். பொதுவாகப் பண்டமாற்று முறையே நடைமுறையில் இருந்தது. ஆனால் பின்னர் பல்லவர்கள் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை வெளியிட்டனர். வணிகர்கள் தங்களுக்கென ‘மணிக்கிராமம்’ போன்ற அமைப்புகளைக் கொண்டிருந்தனர்.

வெளிநாட்டு வணிகத்தில் நறுமணப் பொருள்கள், பருத்தி ஆடைகள், விலையுயர்ந்த கற்கள், மூலிகைகள் ஆகியவை ஜாவா, சுமத்ரா, கம்போடியா, இலங்கை, சீனா, பர்மா (மியான்மர்) ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. மாமல்லபுரம் ஒரு முக்கியத் துறைமுகமாக விளங்கியது. வணிகர்கள் தங்களுக்கெனத் தனிக்குழுக்களை (guild) சுதேசி, நானாதேசிகர், ஐநூற்றுவர் என்ற பெயர்களில் அமைத்துக் கொண்டனர். அவர்களின் முக்கிய அமைப்பு ஐஹோல் நகரினை மையமாகக் கொண்டு செயல்பட்டது.

வெளிநாடுகளோடு வணிகம் மேற்கொண்ட வணிகர்களின் குழு நானாதேசி ஆகும். இவ்வமைப்பு மையப்பகுதியில் காளையின் வடிவத்தைக் கொண்ட தனிக் கொடியைக் கொண்டிருந்தது. வீர சாசனம் என்ற பிரகடனங்களை வெளியிடும் உரிமையையும் பெற்றிருந்தது. நானாதேசியின் செயல்பாடுகள் தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் விரிந்து பரந்திருந்தது. இதன் தலைவர் பட்டன்சாமி, பட்டணக்கிழார், தண்டநாயகன் என்ற பெயர்களில் கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதன் உறுப்பினர்கள் ஐஹோல் பரமேஸ்வரியார் என்றழைக்கப்பட்டனர்.

கடல்வழி வாணிபம்

வேளாண்மை செய்வதற்கேற்ற விரிந்து பரந்த நிலப்பரப்பைக் கொண்டிருந்த கங்கைச் சமவெளியைப் போலல்லாமல் பல்லவர்,சாளுக்கியர் ஆகியோர் குறைந்த அளவிலான வேளாண்மை நிலத்தையே கொண்டிருந்ததால் நிலத்தின் மூலம் அரசு பெற்ற வருவாயும் குறைவாகவே இருந்தது. நாட்டின் பொருளாதாரத்திற்கு அதிக வருவாயைத் தேடித்தரும் வகையில் வணிகப் பொருளாதாரமும் வளர்ந்திருக்கவில்லை.

தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு கடல் கடந்த வணிகத்தில் பல்லவர் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் இக்காலத்தில் காம்போஜா (கம்போடியா), சம்பா (ஆனம்), ஸ்ரீவிஜயா (தெற்கு மலேசிய தீபகற்பமும் சுமத்ராவும்) மூன்று முக்கிய அரசுகள் இருந்தன. மேற்குக் கடற்கரையில் மேலை நாடுகளுடனான வணிகத் தொடர்பில் இந்திய வணிகரைக் காட்டிலும் வெளிநாடுகளைச் சேர்ந்த வணிகர்களே, குறிப்பாக அராபிய வணிகர்களே முன்னிலை வகித்தனர். அயல் நாடுகளுக்குச் சரக்குகளைச் சுமந்து சென்ற இந்திய வணிகர்கள் நாளடைவில் ஏனைய வெளிநாட்டு வணிகர்களுக்குச் சரக்குகளை வழங்குபவர்களாக மாறினர். மேலை நாடுகளுடனான செய்தித் தொடர்பு நேரடியாக இல்லாமல் அராபியாவின் வழியாக அமைந்தது. அத்தொடர்புகளும் வணிகத்தோடு மட்டுமே நின்றுவிட்டன.

சமூகம்
இலக்கியம், வானியல், சட்டம் முதலான துறைகளில் கற்றறிந்த அறிஞர்களாய் இருந்ததால் பிராமணர்கள் அரசின் ஆலோசகர்களாகச் செயல்பட்டனர். ஆசிரியப் பணி மட்டுமல்லாமல் வேளாண்மை, வணிகம், போரிடுதல் ஆகிய பணிகளையும் அவர்கள் மேற்கொண்டனர். வரி கொடுப்பதிலிருந்தும், மரண தண்டனையிலிருந்தும் அவர்களுக்கு விலக்கு வழங்கப்பட்டிருந்தது.

அடுத்த முக்கியத்துவம் வாய்ந்த சமூகப்பிரிவினர் நாட்டையாண்ட சத்-சத்திரியர்களாவர். அனைத்துச் சத்திரியர்களும் போர் செய்பவர்களாக இல்லை. அவர்களில் சிலர் வணிகத்திலும் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் வேதங்களைப்படிப்பதற்கான உரிமையைப் பெற்றிருந்தார்கள். அவ்வுரிமை சமூகத்தின் அடித்தளத்திலிருந்த மக்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது. வணிகர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வீரர்களைப் பராமரித்தனர். வணிகக் குழுக்களையும் உருவாக்கிக் கொண்டனர்.

சமூகத்தின் கீழ்மட்டத்தில் இருந்தவர்கள் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, கைவினைப் பொருள் உற்பத்தி போன்ற தொழில்களை மேற்கொண்டனர். தூய்மைப் பணி, மீன்பிடி தொழில், சலவைத் தொழில், மூங்கில் பொருள்கள் செய்தல், தோல் பொருள் செய்தல் ஆகிய தொழில்களில் ஈடுபட்ட மக்கள் வர்ண அமைப்புக்கு வெளியே நிறுத்தப்பட்டனர்.

பல்லவர் காலத்தில் ஆரியமயமாதலும் வடஇந்திய கருத்துப் போக்குகளின் செல்வாக்கும் தென்னிந்தியாவில் மிகுந்தது என்று பெரும்பாலான அறிஞர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். நிலக்கொடை வழங்கியபோது அரசர்கள் வெளியிட்ட ஆணைகளே அதற்குச் சான்றாகும். சாதியமைப்பு வலுவாக நிறுவப்பட்டது. சமஸ்கிருதம் பெரும் முக்கியத்துவம் பெற்றது.

காஞ்சிபுரம் முக்கியம் வாய்ந்த கல்வி மையமாயிற்று. வேத மதங்களைப் பின்பற்றுவோர் சிவனை வழிபட்டனர். மகேந்திரவர்மனே முதன்முதலாக தனது ஆட்சிக் காலத்தின் இடைப்பகுதியில் சமண மதத்திலிருந்து விலகி சைவத்தைத் தழுவினார். சமணத்தின் மீது சகிப்புத்தன்மை அற்றவராய் அவர் சில சமண மடாலயங்களை அழித்தார். பௌத்தமும் சமணமும் தங்கள் செல்வாக்கை இழந்தன. யுவான் சுவாங் காஞ்சிபுரத்தில் நூறு பௌத்த மடாலயங்களையும் மகாயான பௌத்தத்தைச் சேர்ந்த 10,000 குருமார்களையும் தான் கண்டதாகப் பதிவு செய்துள்ளார். மதிப்புமிக்க கவிஞர்களாயிருந்த அடியார்களான நாயன்மார்களும் ஆழ்வார்களும் இக்காலத்தில் வாழ்ந்தனர்.

பிராமணியத்தின் வளர்ந்து வந்த செல்வாக்கு

தென்னிந்தியப் பகுதிகளில் ஆரியப் பண்பாடு செல்வாக்குப் பெற்றுவிட்டதைத் தெளிவாகக் காட்டும் அடையாளம் பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒப்புயர்வற்ற இடமாகும். அளவில் அதிகமான நிலங்களைக் கொடையாகப் பெற்றதால் அவர்கள் செல்வச் செழிப்படைந்தனர்.

பல்லவ நாட்டில் கல்வி நிலையங்களின் தோற்றமும் ஆரியமயமாகிவிட்டதின் ஓர் அடையாளமாகும். இக்காலகட்டத்தின் தொடக்கத்தில் கல்வி பௌத்தர்கள் மற்றும் சமணர்களின் கட்டுப்பாட்டின் கீழிருந்தது. ஆனால் படிப்படியாக பிராமணர்கள் அவர்களைப் புறந்தள்ளி விட்டு அவ்விடத்தை கைப்பற்றிக் கொண்டனர்.

சமஸ்கிருத, பிராகிருத மொழிகளில் எழுதப்பட்ட மத நூல்களைக் கொண்டு வந்த சமணர்கள் நாளடைவில் தமிழைப் பயன்படுத்தத் தொடங்கினர். சமணமதம் பெரிய அளவில் பிரபலமான மதமாக இருந்தது. ஆனால் பின்னர் வந்த நூற்றாண்டுகளில் சைவ, வைணவ மதங்களின் போட்டியினால் சமண மதத்தை ஆதரிப்போரின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது. இதோடு மகேந்திரவர்மனும் சமண மதத்தின் மீது கொண்டிருந்த பற்றை இழந்து சைவ மதத்தைப் பின்பற்றத் தொடங்கினார். அதனால் சமணர்கள் அரச ஆதரவை இழந்தனர். காஞ்சியிலும் மதுரையிலும் சமணர்கள் சில கல்வி நிலையங்களையும் கர்நாடகாவிலுள்ள சரவணபெலகொலாவில் உள்ளதைப் போன்று சமணமத மையங்களையும் நிறுவினர். ஆனால் சமணத் துறவிகளில் பெரும்பாலோர் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு காடுகளிலும் குன்றுகளிலும் உள்ள குகைகளில் வாழவே விருப்பம் கொண்டனர்.

மடங்களும் மடாலயங்களும்

காஞ்சிப் பகுதியிலும் கிருஷ்ணா கோதாவரி நதிகளுக்கிடைப்பட்ட பகுதிகளிலும் பௌத்தத் துறவி மடாலயங்கள் அமைந்திருந்தன. இவையே பௌத்தக் கல்வி முறையின் மையமாக இருந்தன. இக்காலகட்டத்தில் வேத வைதீகப் பிரிவினருக்கும், அவைதிக பிரிவுகளுக்குமிடையே தீவிர மோதல்கள் நடந்து கொண்டிருந்ததால் பௌத்த மையங்கள் பௌத்த மதத்தைக் கற்பதில் அக்கரைக்காட்டின. வேதமதங்களுக்கு கிடைத்த அரச ஆதரவு, பௌத்த மதத்திற்கு இல்லாத நிலை, வேத மதங்களின் வளர்ச்சிக்கு உத்வேகம் கொடுத்தது.

நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு இணையான புகழைப் பெற்றிருந்த காஞ்சி பல்கலைக்கழகத்தைத் தவிர வேறு சில சமஸ்கிருதக் கல்லூரிகளும் செயல்பட்டு வந்தன. சமஸ்கிருதம் அங்கீகரிக்கப்பட்ட ஊடக மொழியாகவும், அரசசபையின் அலுவலக மொழியாகவும் இருந்ததால் இலக்கிய வட்டாரங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எட்டாம் நூற்றாண்டில் மடங்கள் பிரபலமாயின. மடங்கள் ஓய்வில்லங்களாவும், உணவுச் சாலைகளாகவும், கல்வி கற்பதற்கான இடமாகவும் ஒரே நேரத்தில் செயல்பட்டன. இவ்வியல்பு இம்மடங்களோடு தொடர்புடைய பிரிவினருக்கு மறைமுகமாக விளம்பரத்தைத் தேடித்தருவதாயும் அமைந்தது.

சமஸ்கிருத மொழி பிரபலமாதல்

இக்காலத்தில் சமஸ்கிருத மொழிக்குப் பெரும் அரச ஆதரவு இருந்தது. முதலாம் மகேந்திரவர்மன் மத்தவிலாச பிரகசனம் என்ற நூலை சமஸ்கிருதத்தில் எழுதினார். தென்னிந்தியாவில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வியக்கத்தக்க இரு நூல்கள் சமஸ்கிருத இலக்கியத்திற்கான தர அளவுகளை உருவாக்கின. அவை பாரவியின் கிரதார்ஜூன்யம், தண்டியின் தசகுமாரசரிதம் ஆகிய நூல்களாகும். மிகச் சிறந்த அணி இலக்கணமாகிய காவிய தர்சா என்னும் நூலை இயற்றிய தண்டி பல்லவ அரசவையை சில ஆண்டுகள் அலங்கரித்ததாகத் தெரிகிறது.

பல்லவரின் குடைவரைக் கோவில்கள்

பல்லவர் பகுதிகளில் குடைவரைக் கோவில்களை அறிமுகம் செய்த பெருமை முதலாம் மகேந்திரவர்மனைச் சேரும்.

பிரம்மா, ஈஸ்வரா, விஷ்ணு ஆகியோர்க்கு, தான் கட்டிய கோவில்கள், கோவில் கட்டுவதற்குப் பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் செங்கல், மரம், உலோகம், சாந்து ஆகியன கொண்டு கட்டப்படவில்லை என முதலாம் மகேந்திரவர்மன் தனது மண்டகப்பட்டுக் கல்வெட்டில் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

மகேந்திரவர்மனின் குடைவரைக் கோவில்கள் வழக்கமாக மண்டப பாணியில் தூண்களைக் கொண்ட ஒரு மண்டபத்தைக் கொண்டிருக்கும்; அல்லது முதலில் ஒரு மண்டபத்தையும் அதற்குப்பின்புறமோ, பக்கவாட்டிலோ ஒரு கருவறையைக் கொண்டிருக்கும்.

எல்லோரா
எல்லோராவிலுள்ள குடைவரைக் கோவில்களில் 34 குகைகள் சரணத்ரி மலையில் அமைந்துள்ளன. இக்குகைத் தொகுப்புகளை உருவாக்கியோர் சாளுக்கியரும் ராஷ்டிரகூடரும் ஆவர். புதிய பாணியில் கோவில்களைக் கட்டுவதை முதலில் மேற்கொண்டவர்கள் அவைதீக மதத்தவர்களே. பின்னர்தான் வைதீக மரபைச் சார்ந்தவர்களும் தங்கள் மதம் சார்ந்த சித்தாத்தங்களைப் பரப்புவதற்கு இந்த ஊடகத்தைக் கைக்கொண்டனர். இவ்வாறு ஆசீவகமும் சமணமும் பௌத்தமும் பிராமணீயமும் இக்கோவில்களை எழுப்பின.

எல்லோராவில் ஐந்து குகைகளில் சுவரோவியங்கள் காணப்படுகின்றன. ஆனால் கைலாசநாதர் கோவிலில் உள்ளவை மட்டும் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளன. சமணர் கோவில்களில் உள்ள சில சுவரோவியங்களும் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளன. விலங்குகள், பறவைகள், மரங்கள், பூக்கள் ஆகியவை நேர்த்தியாக எழிலோடு தீட்டப்பட்டுள்ளதோடு ஆசை, அன்பு, பரிவு ஆகிய மனித இயல்புகளின் வெளிப்பாடும் தொழில் வல்லமையுடன் தீட்டப்பட்டுள்ளன.

எல்லோரா குகைகளை 1983இல் உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

எல்லோரோவில் மொத்தம் 12 பௌத்தக் குகைகள் உள்ளன. பௌத்தத் துறவிகள் தங்கியிருந்து சீடர்களுக்கு மத நூல்களில் பயிற்சி வழங்கும் மையமாகச் செயல்படும் விதத்தில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. மத்தியிலுள்ள பெரிய அறையும் பக்கவாட்டில் அமைந்துள்ள சிறிய அறைகளும் துறவிகள் கல்வி வழங்குவதற்காகவும் போதனைகள் செய்வதற்கும் பயன்பட்டுள்ளன. ஆறாவது குகையில் ஒரு மேசையின் மீதுள்ள கையெழுத்துப் பிரதியை ஒரு
மனிதன் வாசிப்பதைப் போன்று செதுக்கப்பட்டுள்ள சிற்பம் இதை உறுதி செய்கின்றது.

புத்தரின் மூன்று வகைத் தோற்றங்களே; 1. தியான புத்தர் (தியான முத்ரா) 2. போதனை செய்யும் புத்தர் (வியாக்கியான முத்ரா) 3. வலது கை ஆள்காட்டி விரலால் பூமியைத் தொடும் புத்தர் (பூமி ஸ்பர்ஸ முத்ரா).

பெண் கடவுள்கள்
பௌத்த குகைகளில் தாரா, கதிரவாணிதாரா, சுந்தா, வஜ்ரத்தீஸ்வரி, மகாமயூரி, சுஜாதா, பன்தாரா, பிரிகுட்டி ஆகிய பெண் தெய்வங்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. குகை எண் 12இல் பெரிய உருவம் கொண்ட பெண்மணி, இடையில் ஒட்டியாணத்துடன், நாகப்பாம்பினால் ஆன தலைப்பாகையுடன் காட்சியளிக்கும் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. அதே குகையில் காதிரிவாணி-தாரா என்னும் பெண் தெய்வம் கையில் ஒரு நாகப்பாம்பைப் பிடித்தபடி நிற்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது.

அவைதீக மதக் கோவில்கள் / சமணக் குகைகள்
எல்லோரோவில் சில சமணக் குகைகளும் காணப்படுகின்றன. இவை மற்றவற்றிலிருந்து வேறுபட்டு தனித்தன்மையுடன் காணப்படுகின்றன. ஆனால் அவை முற்றுப்பெறாத நிலையில் உள்ளன. பணியாட்கள் சூழ யக்ச-மாதாங்கா, மகாவீரர், பார்சவநாதர், கோமதீஸ்வரர் ஆகியோரின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

வேதமதக் குகைகள்
இங்குள்ள குகைகளில் காலத்தால் முந்தியவை ஓரளவு சிறிதாகவும் எளிமையாகவும் உள்ளன. கைலாசநாதர் குகையைத் தவிர மற்றவை அனைத்தும் சதுர வடிவம் கொண்டவை. கைலாசநாதர் குகை (16) மட்டும் மிகப் பெரிய ஒற்றைக் கல்லிலான வடிவமாகும். இது உறுதியான ஒரே பாறையிலிருந்து செதுக்கப்பட்டதாகும். இக்கோவில் இரண்டு அடுக்குகளைக் கொண்டது. இது சிவபெருமானின் இருப்பிடமான கைலாயத்தைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. அவற்றின் மேலுள்ளது கைலாசநாதர் கோவிலாகும். கீழ் அடுக்கில் யானை வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

அஜந்தா
மகாராஷ்டிர மாநிலம் ஔரங்காபாத் நகரத்திற்கு வடக்கே 100 கிலோமீட்டர் தொலைவில் அஜந்தா குகைகள் அமைந்துள்ளன. எரிமலைப் பாறைகளிலிருந்து மொத்தம் 30 குகைகள் குடைந்தெடுக்கப்பட்டுள்ளன. இவை சுவரோவியங்களுக்குப் பெயர்பெற்றனவாக இருந்தாலும் இங்குச் சிற்பங்களும் உள்ளன. ஹீனயான பௌத்த மதப் பிரினைச் சேர்ந்தவர்களே முதன்முதலில் அஜந்தா குகைகளை அமைக்கத் துவங்கினர். பொ.ஆ.மு. 200 பொ.ஆ. 200 வரையில் தக்காண பீடபூமிப் பகுதிகளை ஆண்ட அரசர்கள் இம்முயற்சிகளுக்கு ஆதரவளித்தனர். அரசர்களில் துவங்கி வணிகர்கள் வரை ஆதரவு வழங்கியோரைப் பற்றிக் கல்வெட்டுகள் பேசுகின்றன. முதற் கட்டக் குகைகள் பொ.ஆ.மு.200 – பொ.ஆ. 200 காலகட்டத்தைச் சேர்தவையாகும். இரண்டாவது கட்டக் குகைகள் சுமார் பொ.ஆ.200- பொ.ஆ.400 காலப்பகுதியைச் சேர்ந்தனவாகும்.

ஓவியம்
முதல் கட்ட ஓவியங்கள் பெரும்பாலானவை குகை எண் ஒன்பதிலும் பத்திலும் காணப்படுகின்றன. இவை சாதவாகனர் காலத்தைச் சேர்ந்தனவாகும். அஜந்தா குகையோவியங்களைத் தீட்டியவர்கள் அறிவுநுட்பத்துடன் திட்டமிட்ட தொழில்நுட்பங்களைப் பின்பற்றியுள்ளனர். முதலில் பாறைச் சுவரின் மீது தாவரங்களின் நார், நெல் உமி, மணல் மற்றும் கல்பொடி கலந்து செய்த மென்சாந்தைப் பூசினார்கள். இதன் மீது சுண்ணாம்பு ஒரு மெல்லியப் பூச்சாகப் பூசப்பட்டுள்ளது. இப்பூச்சு வண்ணங்களை உள்வாங்கும் தன்மை உடையது. வண்ணங்களைப் பூசுவதற்காக இப்பரப்பின் மீது துணி விரித்து ஒட்டப்பட்டுள்ளதும் அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.

வண்ணங்கள் இயற்கைப் பொருள்களிலிருந்தும் தாதுக்களிலிருந்தும் எடுக்கப்பட்டன. ஓவியங்களில் அழகியல் கூறுகள், மாலைகள், காது வளையங்கள், தலைப்பாகைகள், கழுத்தணிகள், மனிதக் கைகளின் மிகச் சரியான அசைவுகள் ஆகியவன வெளிப்படுகின்றன.

ஜாதகக் கதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில காட்சிகள் புத்தரின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சில முக்கியப் பகுதிகள் ஆகியனவே ஓவியங்களின் மையக் கருவாக உள்ளன.

கட்டடக் கலையும் சிற்பமும்
கட்டடக்கலை நோக்கில் அஜந்தா குகைகளை இரு குழுக்களாகப் பார்க்கலாம். ஒன்று சைத்தியங்கள்;மற்றொன்று விகாரங்கள். சைத்தியா பல வளைவுகள் ஒருங்கிணையும் முகடுகளையும் நீண்ட அறைகளையும் கொண்டுள்ளது. அறையின் ஒரு கோடியில் புத்தருடைய சிலை மரபார்ந்த பாணியில் உள்ளது.புத்தருடைய சிற்பங்கள் அன்பின், ஆதரவின் ஒட்டுமொத்த உருவாக உள்ளன. பெரிய தோற்றமும் அதிக எடையும் சிற்பங்களின் பொது இயல்பாக உள்ளது. குழந்தைகளோடு காணப்படும் யக்சிகள், ஹரிதி ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை. போதிசத்துவர் தனியாகச் செதுக்கப்பட்டுள்ளதும் மற்றொரு சிறப்பம்சமாகும். போதிசத்துவர் ஓவியங்களிலும் அவலோகிதேஸ்வரர் சிற்பங்களிலும் சித்தரிக்கப்பட்டுள்ளார்.

மாமல்லபுரம்
பல்லவர்களின் அடையாளமாகக் கருதப்படும் மாமல்லபுரம் (மகாபலிபுரம்) கடற்கரைக் கோவில் ராஜசிம்மனின் (பொ.ஆ. 700-728) ஆட்சிக் காலத்தில் எழுப்பியதாகும். இக்கோவில் மூன்று கருவறைகளைக் கொண்டுள்ளது. அவற்றில் முக்கியமானவை சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் படைத்தளிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் வெளிப்புறச் சுவர் விஷ்ணுவிற்குப் படைத்தளிக்கப்பட்டுள்ளது. எல்லைச் சுவற்றின் உட்பக்கம் விரிவான செதுக்கு வேலைப்பாடுகளையும் சிற்பங்களையும் கொண்டுள்ளது. தென்னிந்தியாவில் கட்டுமானக் கோவில்களில் இது முதன்மையானதாகும். இப்பகுதியிலுள்ள ஏனைய கோவில் கட்டடங்களைப் போலின்றி இக்கடற்கரைக் கோவில் பாறையில் செதுக்கப்பட்ட ஐந்து அடுக்குகளைக் கொண்ட கோவிலாகும். ஒரே கல்லில் செதுக்கப்பட்ட விமானங்கள் மாமல்லபுர பல்லவர் கோவில்களின் சிறப்புப் பண்பாகும்.

இங்குள்ள ஒற்றைக்கல்தேர்கள் பஞ்சபாண்டவர் ரதம் என அறியப்படுகின்றன. அர்ச்சுன ரதத்தில் கலை நுணுக்கத்தோடு செதுக்கப்பட்ட சிவன், விஷ்ணு, மிதுனா, துவாரபாலக சிலைகள் உள்ளன.
மிக நேர்த்தியானது தர்மராஜ ரதமாகும். இது சதுர வடிவிலான அடித்தளத்தையும் மூன்றடுக்கு விமானத்தையும் கொண்டுள்ளது. பீம ரதம் செவ்வக வடிவ அடித்தளத்தையும் அழகான ஹரிஹரர், பிரம்மா, விஷ்ணு, ஸ்கந்தர், சிவன், அர்த்தநாரிஸ்வரர், கங்காதரர் ஆகியோரின் சிற்பங்களையும் கொண்டுள்ளது.

மாமல்லபுரத்தில் செதுக்கப்பட்டுள்ள கலை வெளிப்பாட்டில் மிக முக்கியமானது கங்கை நதி ஆகாயத்திலிருந்து இறங்கிவரும் ஆகாய கங்கை காட்சியாகும். (இது பாகீரதன் தவம், அர்ஜுனன் தவம் என்றும் அறியப்படுகிறது.) புராண உருவங்களை பிரபலமான உள்ளூர் கதைகளோடு இணைத்து சிற்பங்களாகக் காட்சிப்படுத்துவது மனித மற்றும் விலங்குகளின் வாழ்க்கைக் கூறுகளை சீராகக் கலக்கும் கலைஞனின் திறமையைப் பறைசாற்றுகின்றன.

கிருஷ்ண மண்டபச் சுவர்களில் மிக அழகாகவும் கலை நுணுக்கத்தோடும் செதுக்கப்பட்டுள்ள பசுக்கள், பசுக் கூட்டங்கள் போன்ற கிராமத்து காட்சிகள் ரசிப்பதற்கான மற்றுமொரு கலை அதிசயமாகும்.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories