Blog

ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள்‌

Class 82 தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள்

ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள்‌

தென்னகப் பாளையக்காரர்களின் தொடக்ககால எதிர்ப்பு
பாளையங்களின் தோற்றம்

பாளையங்களும் பாளையக்காரர்களும்

பாளையம் என்ற சொல் ஒரு பகுதியையோ, ஒரு இராணுவ முகாமையோ அல்லது ஒரு சிற்றரசையோ குறிப்பதாகும். பாளையக்காரர்கள் (இவர்களை ஆங்கிலேயர்கள் ‘போலிகார்’ (Poligar) என்று குறிப்பிட்டனர்) என்ற தமிழ்ச்சொல் இறையாண்மை கொண்ட ஒரு பேரரசுக்குக் கப்பம்கட்டும் குறுநில அரசைக் குறிக்கிறது.

விஜயநகரப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, 1529இல் அரசப்பிரதிநிதியாக மதுரைக்கு வந்த நாகம நாயக்கரும் அவருடைய மகன் விஸ்வநாத நாயக்கரும் மதுரை, திருநெல்வேலி ஆகியவற்றின் சுதந்திரமான ஆட்சியாளர்களாகத் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டனர், தளவாய் அரியநாத முதலியாரின் திறமையான வழிகாட்டுதலின் கீழ் முன்னாள் பாண்டியப் பேரரசின் அனைத்து சிற்றரசுகளும் வகைப்படுத்தப்பட்டு, 72 பாளையங்களாக மாற்றப்பட்டன. விஸ்வநாத நாயக்கர் மதுரையைச் சுற்றி வலிமை மிகுந்த ஒரு கோட்டையை எழுப்பினார். அதில் 72 அரண்கள் இருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தலைமையின் கீழ் இருந்தன.

பாளையக்காரர் முறை 1530களில் தோன்றியது. வாராங்கலை ஆண்டுவந்த காகதிய அரசில் இந்த முறை பின்பற்றப்பட்டு வந்ததாக கருதப்படுகிறது. அரசருக்குத் தேவையானபோது போரில் வீரர்களுடன் பங்கேற்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒரு பாசறையையும் பெரும் நிலப்பரப்பையும் வைத்திருப்பவரையே பாளையக்காரர் என்ற சொல் குறிக்கிறது. இந்த முறை தோன்றுவதற்கு முன்னால், சேர்வைக்காரர்களும் தலையாரிகளும் காவல் பணிகளுக்காக வரி வசூலித்து வந்தனர். பாளைய முறை அறிமுகமான பிறகு, பாளையக்காரர்கள் சேர்வைக்காரர்கள், தலையாரிகளைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார்கள்.

பாளையக்காரர் அரசருக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகையைக் கப்பமாகச் செலுத்துவதற்கும் தேவையானபோது படைவீரர்களை அனுப்புவதற்கும் பாளையத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கும் கடமைப்பட்டவர். இந்தக் கடமைகளையும் பிற பணிகளையும் செய்வதற்குத் தேவையான நிதியாதாரத்தைப் பெற சில கிராமங்கள் அவருக்கு வழங்கப்பட்டிருந்தன. அக்கிராமங்களில் அவர் வரிவிதித்து நிதி திரட்டினார். இத்துடன் கூடுதலாகப் பல பட்டங்களும் சிறப்புரிமைகளும் பாளையக்காரர்களுக்கு வழங்கப்பட்டன. பாளையத்துக்கு உட்பட்ட பகுதியில் குடிமையியல் பிரச்னைகளிலும் குற்றவியல் பிரச்னைகளிலும் விசாரணை நடத்தி நீதி வழங்கும் அதிகாரமும் அவருக்கு உண்டு.

புவியியல் அடிப்படையில், பரவியிருந்த பாளையங்களை மேற்குப் பாளையங்கள், கிழக்குப் பாளையங்கள் எனப் பிரிக்கலாம்.

மறவர் குறுநில மன்னர்களிடமிருந்த பாளையங்கள் பெரும்பாலும் திருநெல்வேலியின் மேற்குப்பகுதியில் அமைந்திருந்தன. மேற்கில் அமையப்பெற்ற முக்கியமான பாளையங்கள் ஊத்துமலை, தலைவன்கோட்டை, நடுவக்குறிச்சி, சிங்கம்பட்டி, சேத்தூர் ஆகியனவாகும்

கிழக்குப் பகுதியில் உள்ள கரிசல் நிலப்பரப்புகளில் தெலுங்கு பேசுவோர் குடியேறியிருந்தார்கள். கிழக்கில் அமையப்பெற்ற பாளையங்கள் சாத்தூர், நாகலாபுரம், எட்டையபுரம் மற்றும் பாஞ்சாலங்குறிச்சி ஆகியனவும் அவை பாளையக்கார நாயக்கர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன.

பாளையக்காரர்களின் கிளர்ச்சி (1755 – 1801)

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிராமங்களை அடகு வைத்து ஏராளமாகக் கடன் வாங்கியிருந்த ஆற்காடு நவாப் அங்கெல்லாம் நிலவரி வசூல்செய்யும் உரிமையை கம்பெனிக்கு அளித்தார். கான் சாகிப் என்று அழைக்கப்பட்ட யூசுப்கான் கிழக்கிந்திய கம்பெனி படையில் இந்திய வீரர்களுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவருக்குப் படைத் தலைமையுடன் வரி வசூலிக்கும் பொறுப்பும் வழங்கப்பட்டது.

ஆற்காடு நவாபின் வேண்டுகோளின்படி, 1755இல் அவருக்கு உதவி செய்ய 500 ஐரோப்பியரும் 200 சிப்பாய்களும் அடங்கிய படை மதுரை, திருநெல்வேலி பகுதிகளுக்குள் நுழைய உத்தரவிடப்பட்டது.

பாளையக்காரர்களின் அதிகாரத்தில் கம்பெனி நிர்வாகத்தின் குறுக்கீடு கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தியது.

மாபுஸ்கான் (ஆற்காடு நவாபின் மூத்த அண்ணன்) இந்தப் பகுதிகளில் நவாபின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். மாபுஸ்கான் கர்னல் ஹெரானுடன் திருநெல்வேலிக்குப் படையெடுத்துச் சென்றார். அவர்கள் மதுரையை எளிதாகக் கைப்பற்றினர்.

பாஞ்சாலக்குறிச்சி பாளையத்தை ஆட்சி செய்த கட்டபொம்மனின் அதிகாரத்தைக் குறைப்பதற்காகச் சிறப்புக்குழு அனுப்பி வைக்கப்பட்டது.

பூலித்தேவரின் புரட்சி (1755-1767)

பீரங்கி உள்ளிட்டவற்றின் பற்றாக்குறை, படைவீரர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டிய தேவை ஆகிய காரணங்களால் ஹெரானின் தாக்குதல் கைவிடப்பட்டது. கம்பெனி நிர்வாகம் அவரைத் திரும்ப அழைத்ததோடு நிரந்தரப் பணிநீக்கம் செய்தும் உத்தரவிட்டது.

ஹெரான் ஊர் திரும்பும் வழியில் நெற்கட்டும் செவல் கோட்டை மீது திடீர் தாக்குதல் தொடுக்க உத்தரவு வந்தது. அந்தப் பாளையத்தை ஆட்சி செய்த புலித்தேவர் மேற்குப் பாளையக்காரர்களிடையே பெரும் செல்வாக்கு பெற்றிருந்தார்.

நவாப் சந்தா சாகிப்பின் பிரதிநிதிகளான மியானா, முடிமய்யா, நபிகான் கட்டக் ஆகிய பதான் இனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மதுரையையும் திருநெல்வேலியையும் கண்காணித்து வந்தனர். அவர்கள் ஆற்காடு நவாப் முகமது அலிக்கு எதிராகத் தமிழ்ப் பாளையக்காரர்களை ஆதரித்தனர். அவர்களுடன் புலித்தேவருக்கு நெருக்கமான உறவு இருந்தது.

பூலித்தேவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிட பாளையக்காரர்களின் கூட்டமைப்பு ஒன்றையும் ஏற்படுத்தினார். ஊற்றுமலை, சுரண்டை, தலைவன்கோட்டை, நடுவக்குறிச்சி, சிங்கம்பட்டி, ஊர்க்காடு, சேத்தூர், கொல்லம்கொண்டான், வடகரை ஆகிய பாளையங்களின் ஆட்சியாளர்களும் புலித்தேவரின் கூட்டமைப்பில் சேர்ந்தனர்.

சிவகிரிப் பாளையக்காரர் நீங்கலாகப் பிற மறவர் பாளையங்கள் யாவும் அவரை ஆதரித்தன. எட்டையபுரமும் பாஞ்சாலங்குறிச்சியும் கூட இக்கூட்டமைப்பில் இணையவில்லை.

ஆங்கிலேயர்கள் இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மன்னர்களின் ஆதரவைப் பெற்றனர்.

திருவிதாங்கூருக்குக் களக்காடு திரும்பத் தரப்படும் என்ற வாக்குறுதி மூலமாகப் புலித்தேவர் திருவிதாங்கூரின் ஆட்சியாளரையும் தன் கூட்டமைப்பில் சேர்த்திருந்தார்.

பூலித்தேவர் மைசூரின் ஹைதர் அலி மற்றும் பிரெஞ்சுக்காரர்களது ஆதரவினைப் பெற முயன்றார். ஏற்கனவே மராத்தியர்களோடு கடுமையான மோதலில் ஈடுப்பட்டிருந்த ஹைதர் அலியால் பூலித்தேவருக்கு உதவ இயலவில்லை.

களக்காடு போர்

இன்னொரு பக்கம் ஆற்காடு நவாப் மாபுஸ்கானுக்குக் கூடுதல் படைப்பிரிவை அனுப்பினார். நவாபின் வலுப்படுத்தப்பட்ட படை திருநெல்வேலியை நோக்கிப் பயணித்தது. கம்பெனியைச் சேர்ந்த 1000 வீரர்களுடன், நவாப் மூலம் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்ட 600 வீரர்களும் இப்போது மாபுஸ்கானிடம் இருந்தார்கள். கூடவே, கர்நாடகத்திலிருந்து குதிரைப்படையினரும், காலாட்படை வீரர்களும் வந்ததால் மாபுஸ்கானின் படைபலம் அதிகரித்தது.

அவர் தன் படையினரைக் களக்காட்டுக்கு அருகே நிறுத்திவைப்பதற்கு முன்பே திருவிதாங்கூரிலிருந்து வந்த 2000 வீரர்கள் புலித்தேவர் படையுடன் சேர்ந்துகொண்டார்கள். களக்காட்டில் நடைபெற்ற போரில் மாபுஸ்கானின் படை தோற்றது.

யூசுப்கானும், பூலித்தேவரும்

புலித்தேவரும் பிற பாளையக்காரர்களும் கூட்டாக, சிறப்பான திட்டமிடலுடன் காட்டிய எதிர்ப்பு ஆங்கிலேயரைத் திருநெல்வேலி விவகாரங்களில் நேரடியாகத் தலையிட வைத்தது.

1756இலிருந்து 1763 வரைக்கும், திருவிதாங்கூரிலிருந்து கிடைத்த சீரான ஆதரவுடன், புலித்தேவர் தலைமையிலான பாளையக்காரர்கள் ஆற்காடு நவாபுக்கு எதிரான கிளர்ச்சியில் நீடித்து நின்றார்கள்.

கம்பெனியால் அனுப்பப்பட்ட யூசுப் கான் திருச்சிராப்பள்ளியிலிருந்து பீரங்கிகளும் வெடிமருந்துகளும் வந்துசேரும் வரை புலித்தேவரைத் தாக்கத் துணியவில்லை.

பிரெஞ்சுப் படைகளோடு ஒருபுறமும், ஹைதர் அலி மற்றும் மராத்தியரோடு மறுபுறமும் ஆங்கிலேயர் போர்களில் ஈடுபட்டுவந்ததால், 1760 செப்டம்பரில் தான் பீரங்கிகள் வந்துசேர்ந்தன. யூசுப் கான் நெற்கட்டும் செவல் கோட்டையை இடிக்கும் நோக்கத்துடன் தாக்குதலை நடத்தினார். இது ஏறத்தாழ இரு மாதங்கள் நீடித்தது.

1761 மே 16இல் நெற்கட்டும் செவல், வாசுதேவநல்லூர், பனையூர் ஆகிய இடங்களில் இருந்த முக்கியமான கோட்டைகள் யூசுப் கான் வசமாயின. புதுச்சேரியை ஆங்கிலேயர் கைப்பற்றியதால் பிரெஞ்சுக்காரர்களின் தலையீடு இல்லாமல் ஆனது. பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து உதவிகள் வரமுடியாத காரணத்தால், பாளையக்காரர்களின் ஒற்றுமை குலையத் தொடங்கியது.

திருவிதாங்கூர், சேத்தூர், ஊற்றுமலை, சுரண்டை ஆகிய பாளையங்களைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலேய அணிக்கு மாறினர். கம்பெனி நிர்வாகத்துக்குத்
தெரிவிக்காமல் பாளையக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த யூசுப் கான் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, 1764இல் தூக்கிலிடப்பட்டார்.

பூலித்தேவரின் வீழ்ச்சி

கான்சாகிப் காலமானதைத் தொடர்ந்து, நாடிழந்த நிலையில் சுற்றிவந்த பூலித்தேவர் திரும்பிவந்து 1764இல் நெற்கட்டும்செவலை மீண்டும் கைப்பற்றினார். எனினும் 1767இல் கேப்டன் கேம்ப்பெல் என்பவரால் நெற்கட்டும் செவல் கோட்டையை முற்றுகையிடபட்டு தோற்கடிக்கப்பட்டார். தப்பிச்சென்ற அவர் நாடிழந்த நிலையிலேயே காலமானார்.

ஒண்டிவீரன்

ஒண்டிவீரன் பூலித்தேவரின் படைப் பிரிவுகளில் ஒன்றனுக்குத் தலைமையேற்றிருந்தார். பூலித்தேவரோடு இணைந்து போரிட்ட அவர் கம்பெனிப் படைகளுக்கு பெரும் சேதங்களை ஏற்படுத்தினார். செவிவழிச் செய்தியின்படி ஒரு போரில் அவரது கை துண்டிக்கப்பட்டதாகவும், அதனால் பூலித்தேவர் பெரிதும் வருந்தியதாகவும் தெரிகிறது. ஆனால் ஒண்டிவீரன், எதிரியின் கோட்டையில் தான் நுழைந்து பல தலைகளைக் கொய்தமைக்காகத் தமக்கு கிடைத்தப் பரிசு என்று கூறியுள்ளார்.

யூசுப் கானின் இயற்பெயர் மருதநாயகம் அவர் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். புதுச்சேரியில் இருந்தபோது, இசுலாம் சமயத்தைத் தழுவினார். 1752இல் கிளைவ் தலைமையிலான கம்பெனிப் படையில் சேர்ந்த யூசுப் கான் 1752-54இல் நடைபெற்ற திருச்சிராப்பள்ளி முற்றுகையில் பங்கேற்றார். ஆற்காடு நவாபுக்குச் சொந்தமானதாக இருந்தாலும், கம்பெனி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு 1756 முதல் 1761 வரை ஆளுநராகப் பொறுப்பு வகித்தார். யூசுப்கான் ஹைதர் அலியைத் தோற்கடித்து, சோழவந்தானைக் கைப்பற்றினார். லாலியின் மதராஸ் முற்றுகை    (1758-59)யின்போது யூசுப்கானின் பங்களிப்பு சிறப்பானதாக இருந்தது. அவர் நிர்வாகப்பொறுப்பில் இருந்தபோது மதுரையில் நெசவுத்தொழிலை ஊக்குவித்தார். மதுரை கோவில்களில் வழிபாடு நடத்துவதற்குக் குறிப்பிட்ட தொகையை வழங்கினார். மதகுருக்கள் வசமிருந்த கோவில் நிலங்களை மீட்டெடுத்தார். ஆங்கிலேயர் அவரை ஆற்காடு நவாபுக்கு பணிசெய்ய ஆணையிட்டதால், அவர் கிளர்ச்சியில் இறங்கினார்.

வேலு நாச்சியார் (1730 – 1796)
இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களாக இன்று அறியப்படும் பகுதியைச் சேதுபதி மன்னர்கள் ஆட்சி செலுத்தினர். வேலு நாச்சியார் இராமநாதபுரம் அரசரான செல்லமுத்து சேதுபதியின் மகள் ஆவார். தனது 16வது வயதில் வேலுநாச்சியார் சிவகங்கை மன்னரான முத்துவடுகர் பெரியஉடையாரை மணந்து வெள்ளச்சி நாச்சியார் என்ற பெண்மகவையும் பெற்றெடுத்தார்.

1772 ஆற்காட்டு நவாபும் லெப்டினன்ட் கர்னல் பான் ஜோர் தலைமையிலான கம்பெனி படைகளும் இணைந்து காளையார்கோவில் அரண்மனையைத் தாக்கினர். இதனால் மூண்ட போரில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டார். தனது மகளோடு தப்பிச்சென்ற வேலுநாச்சியார் கோபால நாயக்கரின் பாதுகாப்பில் (சில ஆதாரங்களில் ஹைதர் அலியின் பாதுகாப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது) திண்டுக்கல் அருகே உள்ள விருப்பாட்சியில் எட்டு ஆண்டுகள் வாழ்ந்தார்.

இக்காலகட்டத்தில் வேலு நாச்சியார் ஒரு படையைக் கட்டமைத்தார்.   வேலுநாச்சியாரின் சார்பில் ஹைதர் அலிக்கு, தளவாய் (இராணுவத் தலைவர்) தாண்டவராயனார் எழுதிய கடிதத்தில் ஆங்கிலேயரைத் தோற்கடிக்கும் பொருட்டு 5000 காலாட்படைகளும், 5000 குதிரைப் படைகளும் அனுப்பும்படி அவரிடம் கோரினார்.

வேலுநாச்சியார் உருது மொழியில் தனக்கு கிழக்கிந்திய கம்பெனியோடு இருந்த பிணக்குகளை கடிதத்தில் விவரித்திருந்தார். மேலும் தான் ஆங்கிலேயரோடு மோதுவதில் தீவிரமாக இருப்பதைத் தெளிவுபடுத்தினார். அவரது மனவுறுதியைப் பார்த்து வியந்த ஹைதர் அலி தனது திண்டுக்கல் கோட்டை படைத்தலைவரான சையதிடம் அவருக்கு வேண்டிய இராணுவ உதவிகளை வழங்குமாறு ஆணையிட்டார்.

கோபால நாயக்கர் மட்டுமல்லாமல் ஹைதர் அலியோடும் கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டார்.

வேலு நாச்சியார் ஒரு பெண்கள் படையை உருவாக்கியிருந்தார். அவர் ஆங்கிலேயரின் வெடிமருந்துக்கிடங்குகளைக் கண்டுபிடிப்பதற்குத் தன் உளவாளிகளைப் பயன்படுத்தினார். நாச்சியாரின் படையில் இருந்த குயிலி தன் மீது நெருப்பு வைத்துக்கொண்டு, ஆங்கிலேயரின் வெடிமருந்து கிடங்கில் நுழைந்து அதை அழித்தார்.

ஆற்காடு நவாப் வேலு நாச்சியாருடைய படை முன்னேறி வருவதைத் தடுக்கப் பல தடைகளை ஏற்படுத்தினார். எனினும் நாச்சியார் அனைத்துத் தடைகளையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு சிவகங்கைக்குள் நுழைந்தார். ஆற்காடு நவாப் தோற்கடிக்கப்பட்டு, சிறைவைக்கப்பட்டார்.

சிவகங்கையை மீண்டும் 1780இல் கைப்பற்றிய நாச்சியார். மருது சகோதரர்களின் துணையுடன் இராணியாக முடிசூடினார். இந்திய நாட்டில் பிரிட்டிஷ் காலனியாதிக்க அதிகாரத்தை எதிர்த்த முதல் பெண் ஆட்சியாளர் அல்லது அரசி என்ற பெருமை அவருக்கே உரித்தானதாகும்.

சின்ன மருது நாச்சியாரின் ஆலோசகராகவும் பெரிய மருது படைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டனர். 1783இல் ஆங்கிலேயர் சிவகங்கைக்கு மீண்டும் படையெடுத்து வந்தனர். இம்முறை மருது பாண்டியர் சில இராஜதந்திர நடவடிக்கைகளால் சிவகங்கையின் பாதுகாப்பை உறுதிசெய்தனர்.

பிற்காலத்தில் ஆங்கிலேயரின் சமரச உடன்பாட்டின்படி வேங்கண் பெரிய உடைய தேவர் சிவகங்கை அரசர் ஆனார். 1790இல் இவருக்கு மணம் முடித்துவைக்கப்பட்ட வெள்ளச்சி நாச்சியார் சந்தேகத்துக்கிடமான முறையில் இறந்தார். வேலு நாச்சியார் நோயுற்று 1796இல் இறந்தார்.

குயிலி

வேலுநாச்சியாரின் நம்பிக்கைக்குரிய தோழியாகத் திகழ்ந்த குயிலி, உடையாள் என்ற பெண்களின் படைப்பிரிவைத் தலைமையேற்று வழிநடத்தினார். உடையாள் என்பது குயிலி பற்றி உளவு கூறமறுத்ததால் கொல்லப்பட்ட மேய்த்தல் தொழில் புரிந்த பெண்ணின் பெயராகும். குயிலி தனக்குத்தானே நெருப்புவைத்துக்கொண்டு (1780) அப்படியே சென்று பிரிட்டிஷாரின் ஆயுதக்கிடங்கிலிருந்த அனைத்துத் தளவாடங்களையும் அழித்தார்.

விருப்பாட்சியின் பாளையக்காரரான கோபால நாயக்கர்

கோபால நாயக்கரைத் தலைவராகக் கொண்ட கூட்டமைப்பில் (Dindigul League) மணப்பாறையின் லெட்சுமி நாயக்கரும், தேவதானப்பட்டியின் பூஜை நாயக்கரும் இடம் பெற்றிருந்தனர். தனது நட்பை வெளிப்படுத்தும் விதமாக ஒரு நல்லுறவுக் குழுவை அனுப்பிவைத்த திப்பு சுல்தானால் கோபால நாயக்கர் ஈர்க்கப்பட்டார். கோயம்புத்தூரை மையமாகக்கொண்டு பிரிட்டிஷாரை எதிர்த்த அவர், பின்னாட்களில் கட்டபொம்மனின் சகோதரரான ஊமைத்துரையோடு இணைந்தார். அவர் உள்ளூர் விவசாயிகளின் ஆதரவுடன் ஆனைமலையில் கடும் போர் புரிந்தார். ஆயினும் பிரிட்டிஷ் படைகளால் அவர் 1801இல் வெற்றிகொள்ளப்பட்டார்.

விஜயநகரத்தில் அறிமுகமான தங்க நாணயம் பகோடா எனப்பட்டது. ஐரோப்பிய வணிகர்கள் இந்தியாவுக்கு வந்த காலகட்டத்தில் இப்பணம் செல்வாக்கு பெற்று விளங்கியது. திப்புசுல்தான் ஆட்சியில் மைசூரில் ஒரு பகோடா மூன்றரை ரூபாய்க்குச் சமமாகக் கொள்ளப்பட்டது.

வீரபாண்டிய கட்டபொம்மன் (1790 – 1799)

வேலு நாச்சியார் இராமநாதபுரத்திலும் சிவகங்கையிலும் ஆங்கிலேயருக்கு சவாலாக இருந்தபோது, வீரபாண்டிய கட்டபொம்மனின் எதிர்ப்பு வளர்ந்துகொண்டிருந்தது. கட்டபொம்மன் ஓட்டப்பிடாரத்துக்கு அருகில் உள்ள பாஞ்சாலங்குறிச்சியை ஆட்சி செய்த பாளையக்காரர் ஆவார். கட்டபொம்மன் நாயக்கர் என்பது அவரது குடும்பப் பட்டமாகும். கட்டபொம்மனின் தாத்தா ஜெகவீர கட்டபொம்மன் கர்னல் ஹெரான் காலத்தில் குறுநிலமன்னராக இருந்தார். 1760இல் பிறந்த வீரபாண்டிய கட்டபொம்மன் தனது தந்தை ஜெகவீரபாண்டிய கட்டபொம்மனின் இறப்புக்குப் பின் பாஞ்சாலங்குறிச்சி பாளையத்துக்குப் பொறுப்பேற்றார்.

கம்பெனிக்கும் தென்சீமை பாளையத்தாருக்கும் தொடர்ந்து மோதல் இருந்ததால், கம்பெனிக்கு அவர்கள் கப்பம் செலுத்துவது ஒரு பிரச்சனையாகவே நீடித்தது. 1798 செப்டம்பர் மாதத்துக்கான கப்பமும் செலுத்தப்படாததால், கலெக்டர் ஜாக்சன் அவருக்கே உரிய ஆணவத்துடன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்குக் கடிதம் அனுப்பினார்.

நாட்டில் கடுமையான வறட்சி ஏற்பட்டதால், வரி வசூலிப்பது மிகக்கடினமான வேலை ஆனது. கலெக்டர் ஜாக்சன் வீரபாண்டிய கட்டபொம்மனைத் தண்டிக்கும் நோக்குடன் ஒரு படையை அனுப்ப விரும்பினாலும், சென்னை நிர்வாகம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. திருநெல்வேலியிருந்த படை வீரர்களை மைசூரில் திப்பு சுல்தானுக்கு எதிராகப் போரிடுவதற்காகக் கம்பெனி ஏற்கனவே அனுப்பியிருந்தது. இந்த நிலையில் மிகவும் தொலைவிலிருந்த தெற்குப்பகுதியில் போர் செய்வது ஆபத்து எனக் கம்பெனி கருதியது.

பிரச்னையில் தொடர்புடைய பாளையக்காரரை இராமநாதபுரத்துக்கு வரவழைத்து, கலந்தாலோசனை செய்யும்படி கலெக்டருக்கு உத்தரவிட்டது. அதன்படி, 1798 ஆகஸ்ட் 18 அன்று ஜாக்சன் இரு வாரங்களுக்குள் தன்னை இராமநாதபுரத்துக்கு வந்து சந்திக்கும்படி வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உத்தரவு பிறப்பித்துவிட்டு, திருநெல்வேலி சுற்றுப்பயணத்தைத் துவக்கினார்.

பாளையக்காரர்களிடமிருந்து கப்பம் வசூலிப்பதற்காகச் சொக்கம்பட்டி, சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகிய இடங்களில் அவர் தங்கியிருந்தபோது வீரபாண்டியக் கட்டபொம்மன் அவரைச் சந்திக்க முயன்றார். ஆனால் இராமநாதபுரத்தில்தான் கலெக்டரைச் சந்திக்க முடியும் என அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்த அவமதிப்பையும் மீறி, கட்டபொம்மன் 23 நாட்களில் 400 மைல் தூரம் கலெக்டரைச் சளைக்காமல் பின்தொடர்ந்து, செப்டம்பர் 19ஆம்
நாள் இராமநாதபுரத்தை அடைந்தார். கலெக்டரைச் சந்திப்பதற்கான வாய்ப்பு அன்றே தரப்பட்டது.

கட்டபொம்மன் கம்பெனிக்குச் செலுத்த வேண்டிய கப்பத்தொகையில் பெரும்பகுதியைச் செலுத்திவிட்டதையும் 1080 வராகன் மட்டுமே பாக்கி இருப்பதையும் கணக்குகளைச் சரிபார்த்து அவர் அறிந்துகொண்டார். இந்தச் சந்திப்பின்போது ஆணவக்குணம் கொண்ட ஜாக்சன் முன்னால் கட்டபொம்மனும் அவருடைய அமைச்சர் சிவசுப்பிரமணிய பிள்ளையும் நின்றபடி உரையாட வேண்டியிருந்தது. சந்திப்பின் இறுதியில் ஜாக்சன் இருவரையும் இராமநாதபுரம் கோட்டையில் தங்கும்படி கூறினார்.

அங்கு வந்த வீரர்கள் கட்டபொம்மனைக் கைது செய்யவே வந்திருந்தார்கள் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. உடனடியாக ஊமைத்துரை  தனது ஆட்களோடு கோட்டைக்குள் நுழைந்து கட்டபொம்மன் தப்ப உதவினார். கோட்டைவாசலில் நடந்த மோதலில் லெப்டினெண்ட் க்ளார்க் உள்ளிட்ட சிலர் கொல்லப்பட்டார்கள். சிவசுப்பிரமணிய பிள்ளை கைது செய்யப்பட்டார். கட்டபொம்மன் மட்டுமே தப்ப முடிந்தது.

மதராஸ் ஆட்சிக்குழுவின் முன்பாக ஆஜராதல்

பாஞ்சாலங்குறிச்சிக்குத் திரும்பிய கட்டபொம்மன் தன்னிடம் ஜாக்சன் நடந்துகொண்ட முறையே இராமநாதபுரத்தில் நடந்த மோதலுக்குக் காரணம் என்று சென்னை கவுன்சிலுக்குக் கடிதம் அனுப்பினார். இதற்கிடையே ஆளுநர் எட்வர்டு கிளைவ் கம்பெனி நிர்வாகத்திடம் கட்டபொம்மன் சரணடையும்படி அறிவிப்பு வெளியிட்டார். இவ்வாறு கட்டபொம்மன் சரணடைந்தால் நேர்மையான விசாரணை நடைபெறும் என்றும் இதற்கு உடன்படாவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

வில்லியம் ப்ரௌன், வில்லியம் ஓரம், ஜான் காஸாமேஜர் ஆகியோர் அடங்கிய குழுவின் முன்பாக ஆஜராகும்படி கட்டபொம்மனைப் பணித்தது அதன்படி, கட்டபொம்மன் கம்பெனி விசாரணைக்குழுவிடம் நேரில் சென்று விளக்கம் அளித்தார். கலகக் குற்றச்சாட்டுகளிலிருந்து கட்டபொம்மனை விடுவித்த குழு, கலெக்டர் நடந்துகொண்ட விதத்துக்காக அவரைக் கண்டித்தது. லூஷிங்டன் புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டார். இறுதியில் ஜாக்சன் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

கட்டபொம்மனும் பாளையக்காரர்களின் கூட்டமைப்பும் 

எனினும் கட்டபொம்மன் தனது பிரச்சனை இன்னும் தீரவில்லை என்ற கொதிப்புடன்தான் இருந்தார். இந்தச் சூழலில் மருது பாண்டியர்கள் திண்டுக்கல் கோபால நாயக்கருடனும் ஆனைமலை யாதுல் நாயக்கருடனும் இணைந்து ஆங்கிலேயருக்கு எதிரான கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் இருந்தார்கள். இதே விருப்பத்துடன் இருந்த கட்டபொம்மனும் மருது பாண்டியரும் நெருக்கமானார்கள்.

கட்டபொம்மனின் காலத்தில், ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக இருந்தவர்களில் சிவகிரி பாளையக்காரரும் ஒருவர் வீரபாண்டியன் தன் வீரர்களுடனும் கூட்டணியில் இருந்த பிற தலைவர்களுடனும் தளவாய் குமாரசாமி நாயக்கரின் தலைமையில் சிவகிரி நோக்கி அணிவகுத்துச் சென்றார்.

சிவகிரிபாளையம் கம்பெனிக்குக் கட்டுப்பட்டதாக இருந்ததால், வீரபாண்டியனின் இந்நடவடிக்கையை சென்னைக் கம்பெனி அரசு தனக்கு விடுக்கப்பட்ட சவாலாகக் கருதி தாக்குதலுக்கு உத்தரவிட்டது.

நாகலாபுரம், மன்னர்கோட்டை, பாவாலி, கோலார்பட்டி, செந்நல்குடி ஆகிய பாளையங்களின் தலைவர்கள் மருது சகோதரர்களின் முயற்சியால் ஏற்கனவே ஒன்று சேர்ந்திருந்தார்கள். அவர்கள் கம்பெனியின் ஆட்சிப்பகுதிகளிலிருந்த சில குறிப்பிட்ட கிராமங்களில் வரி வசூலிக்கும் உரிமையை உறுதிப்படுத்தியிருந்தார்கள்.

கட்டபொம்மன் தன் செல்வாக்கையும் நிதியாதாரங்களையும் முன்னிறுத்தி, இந்த அணியில் சேர்ந்து அதன் தலைவர் ஆனார். இக்கூட்டமைப்பை ஏற்படுத்த சாப்டூர், ஏழாயிரம்பண்ணை, காடல்குடி, குளத்தூர் ஆகியவற்றின் பாளையக்காரர்களையும் அதில் சேரும்படி வலியுறுத்தினார்.

பாஞ்சாலங்குறிச்சி முற்றுகை 

1799 மே மாதத்தில் வெல்லெஸ்லி பிரபு திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மதுரை ஆகிய இடங்களில் இருந்த படைகளை திருநெல்வேலிக்கு அனுப்ப உத்தரவு பிறப்பித்தார், திருவனந்தபுரம் அரசரின் படையும் ஆங்கிலேயருடன் இணைந்தது. மேஜர் பானர்மேன் அதிக ஆற்றல் கொண்ட போர்த்தளவாடங்களுடன் படைகளை வழிநடத்தினார்.

1799 ஜூன் 1 அன்று கட்டபொம்மன் 500 ஆட்களுடன் சிவகங்கைக்குச் சென்றார்.பழையனாறு என்ற இடத்தில் மருதுவுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, சிவகங்கையிலிருந்து ஆயுதம் தரித்து வந்த 500 பேருடன் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சிக்குத் திரும்பினார்.

1799 செப்டம்பர் 1 அன்று மேஜர் பானர்மேன் தன்னைக் கட்டபொம்மன் பாளையங்கோட்டையில் சந்திக்கும்படி இறுதி எச்சரிக்கை விடுத்தார். கட்டபொம்மன் சந்திப்பைத் தவிர்த்ததால், பானர்மேன் போர் தொடுக்க முடிவெடுத்தார். செப்டம்பர் 5ஆம் நாள் கம்பெனி படை பாஞ்சாலங்குறிச்சியைச் சென்றடைந்தது.

கட்டபொம்மனின் கோட்டை 500 அடி நீளத்திலும் 300 அடி அகலத்திலும் முழுவதும் மண்ணினால் கட்டப்பட்டிருந்தது. ஆங்கிலேயப்படை கோட்டையின் தகவல்தொடர்புக்கான வழிகளைத் துண்டித்தது. கட்டபொம்மனின் வீரர்கள் கம்பீரத்துடனும் வீரத்துடனும் போரிட்டார்கள். அவர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன. கர்னல் வெல்ஷ் என்பார் தனது நினைவுக் குறிப்புகளில், கட்டபொம்மனது படைவீரர்களின் வீரத்தைப் பதிவிட்டுள்ளார்.

கம்பெனிப் படைக்குக் கூடுதல் எண்ணிக்கையில் வீரர்கள் தேவைப்பட்டனர். செப்டம்பர், 16 அன்று ஆங்கிலேயருக்குக் கூடுதல் வலு சேர்ப்பதற்கான உதவிகள் பாளையங்கோட்டையிலிருந்து வந்து சேர்ந்தன. அவர்களின் தொடர்ச்சியான தாக்குதலால் சுவர்கள் உடைந்து கோட்டை பலவீனம் அடைந்ததால், கோட்டைக்கான காவற்படை வெளியேறி காடல்குடியை அடைந்தது.

கோலார்பட்டியில் நடந்த மோதலில் கட்டபொம்மனின் அமைச்சர் சிவசுப்பிரமணிய பிள்ளை பிடித்துவைக்கப்பட்டார். ஆங்கிலேயப்படையைக் கண்டதும், மேற்குப் பாளையத்தாரும் சரணடைந்தனர்.

கட்டபொம்மன் தூக்கிலிடப்படல்

கட்டபொம்மன் புதுக்கோட்டைக்கு தப்பிச் சென்றார். பிரிட்டிஷார் அவரது தலைக்கு ஒரு வெகுமதியை நிர்ணயித்தனர். எட்டையபுரம் மற்றும் புதுக்கோட்டை அரசர்களால் துரோகமிழைக்கப்பட்ட கட்டபொம்மன் இறுதியில் பிடிபட்டார். புதுக்கோட்டை மன்னர் விஜய ரகுநாத தொண்டைமான் களப்பூர் காட்டிலிருந்த கட்டபொம்மனைப் பிடித்து, ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தார்.

சிவசுப்ரமணியனார் நாகலாபுரத்தில் செப்டம்பர் 13 அன்று தூக்கிலிடப்பட்டார்.

1799 அக்டோபர் 16 அன்று பானர்மேன் கட்டபொம்மனைக் கயத்தாறு என்னுமிடத்தில் பாளையக்காரர்கள் கூடியிருந்த அவையில் விசாரணை செய்தார்.  அவர் சிவகிரிக்கு எதிராக ஆயுதந்தரித்த வீரர்களை அனுப்பியதையும் பாஞ்சாலங்குறிச்சிப் போரில் ஆங்கிலேயப்படைகளுக்கு எதிராகப் போரிட்டதையும் ஒத்துக்கொண்டார்.

அக்டோபர் 16ஆம் நாளில் கட்டபொம்மன் கயத்தாறு பழைய கோட்டைக்கு அருகில் தூக்கிலிடப்பட்டார்.

 

மருது சகோதரர்களும் 1801 தென்னிந்தியக் கிளர்ச்சியும்

ஆற்காடு நவாப் 1772ஆம் ஆண்டு உடன்படிக்கை மூலம் ஸ்தலக்காவல், தேசக்காவல் ஆகியவற்றுக்கான உரிமைகளை கம்பெனிக்குக் கொடுத்திருந்தார்.

அதிருப்தியடைந்த காவல்காரர்களும் அவர்களின் தலைவர்களும் நவாபுக்கும் கம்பெனிக்கும் எதிராகப் பாளையக்காரர்களுடன் சேர்ந்தார்கள்.

பெரிய மருது என்ற வெள்ள மருது (1748-1801) மற்றும் அவரது தம்பியான சின்ன மருது (1753-1801) ஆகிய இருவரும் சிவகங்கையின் முத்துவடுகநாதரின் திறமையான படைத்தளபதிகளாவர்.

சிவகங்கை பெரிய உடைய தேவர், நவாப் படைக்கு எதிரான சண்டையில் உயிரிழந்ததால் நிர்வாகப் பொறுப்பை எடுத்துக்கொண்ட சின்ன மருதுவும் பெரிய மருதுவும் நவாப் படையை வெளியேற்றினார்கள்.

வெள்ளச்சி நாச்சியார் கி.பி 1790 முதல் 1793 வரை சிவகங்கை ஆண்ட இரண்டாவது அரசி ஆவார். இவர் வேலு நாச்சியார் முத்துவடுகர் பெரியஉடையார் அவர்களுக்கு 1770-ல் மகளாக பிறந்தார். வெள்ளச்சி நாச்சியார் வயிற்றில் இருக்கும் போது அவரது தந்தை ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு காளையார்கோவில் கோட்டையில் வீீர மரணம் அடைந்தார். 8 ஆண்டுகளுக்குப் பிறகு இவரது தாயார் வேலு நாச்சியார் ஆங்கிலேய அரசிடமிருந்து மீட்ட சிவகங்கைப் பகுதியை ஆண்டு வந்தார்.

1790-ஆம் ஆண்டு வேலுநாச்சியார் தனது மகள் வெள்ளச்சி நாச்சியாரை ராணியாக முடி சூட்டினார். அந்த ஆண்டே (1790) சிவகங்கைச் சீமையின் நிலக்கிழார்களில் ஒருவரான சக்கந்தி தேவரது மகன் வேங்கன் பெரியஉடையார் அவர்களுக்கு திருமணம் நடந்தது. 1791-ஆம் ஆண்டு வெள்ளச்சி நாச்சியார் அவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது. 1793-ஆம் ஆண்டு வெள்ளச்சி நாச்சியார் மற்றும் அவரது குழந்தை மர்மமாக இறந்தனர்

அன்றைய சிவகங்கைக் காட்டின் நடுவில் இருந்த காளையார்கோவில், கிளர்ச்சியாளர்கள் கூடுமிடமாகவும் அவர்களது அடையாளமாகவும் இருந்தது. வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதும், அவருடைய சகோதரர் ஊமைத்துரை கமுதியைச் சென்றடைந்தார். அங்கிருந்து அவரைச் சின்ன மருது சிவகங்கையின் தலைநகரான சிறுவயலுக்கு அழைத்துச் சென்றார்.

மருது சகோதரர்களின் கலகம் (1800-1801)

கட்டபொம்மனின் கலகம் 1799இல் ஒடுக்கப்பட்டபோதும், 1800இல் மீண்டும் கலகம் வெடித்தது. பிரிட்டிஷாரின் குறிப்புகளில் இது இரண்டாவது பாளையக்காரர் போர் என்று குறிப்பிடப்படுகிறது. இப்போரானது சிவகங்கையின் மருது பாண்டியர், திண்டுக்கல்லின் கோபால நாயக்கர், மலபாரின் கேரள வர்மா, மைசூரின் கிருஷ்ணப்பா மற்றும் தூண்டாஜி ஆகியோர் அடங்கிய கூட்டமைப்பால் வழிநடத்தப்பட்டது.

விருப்பாட்சியில் ஏப்ரல் 1800இல் சந்தித்த அவர்கள் கம்பெனியாருக்கு எதிராகக் கிளர்ந்தெழ முடிவெடுத்தார்கள். கோயம்புத்தூரில் ஜூன் 1800இல் ஏற்பட்ட எழுச்சி அதிவேகமாக இராமநாதபுரத்திற்கும், மதுரைக்கும் பரவியது.  நிலைமையைப் புரிந்துகொண்ட கம்பெனியார் மைசூரின் கிருஷ்ணப்பா மீதும், மலபாரின் கேரளவர்மா மீதும் இன்ன பிறர் மீதும் போர் தொடுக்கப்போவதாக அறிவித்தார்கள். கோயம்புத்தூர், சத்தியமங்கலம் மற்றும் தாராபுரம் ஆகிய பகுதிகளின் பாளையக்காரர்கள் பிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்கள்.

கட்டபொம்மனின் சகோதரர்களான ஊமைத்துரையும், செவத்தையாவும் பிப்ரவரி 1801இல் பாளையங்கோட்டைச் சிறையிலிருந்து தப்பி கமுதியில் பதுங்கியிருப்பதை அறிந்த சின்ன மருது அவர்களைத் தமது தலைமையிடமான சிறுவயலுக்கு அழைத்துச் சென்றார். பாஞ்சாலங்குறிச்சி கோட்டை மிக குறைந்த காலத்தில் மீண்டும் கட்டி முடிக்கப்பட்டது.

காலின் மெக்காலே தலைமையிலான பிரிட்டிஷ் படைகள் ஏப்ரலில் மீண்டும் கோட்டையை அவர்கள் முற்றுகையிட்டதால் மருது சகோதரர்களிடம் சிவகங்கையில் அடைக்கலம் கோரினர். தப்பியோடியவர்களை (ஊமைத்துரையும், செவத்தையாவும்) ஒப்படைக்கும்படி மருது சகோதரர்கள் வலியுறுத்தப்பட்டனர். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டார்கள். இதையடுத்து கர்னல் அக்னியூவும், கர்னல் இன்னஸும் சிவகங்கையை நோக்கி படை நடத்திச் சென்றனர்.

மருது சகோதரர்கள் ஜூன் 1801இல் நாட்டின் விடுதலையை முன்னிறுத்திய ஒரு பிரகடனத்தை வெளியிட்டனர் இதுவேதிருச்சிராப்பள்ளி பேரறிக்கைஎன்றழைக்கப்படுகிறது.

1801ஆம் ஆண்டு பேரறிக்கை (திருச்சிராப்பள்ளி பேரறிக்கை)

பிரிட்டிஷாருக்கு எதிராக மண்டல, சாதி, சமய, இனவேறுபாடுகளைக் கடந்து நிற்பதற்காக முதலில் விடுக்கப்பட்ட அறைகூவலே 1801ஆம் ஆண்டின் பேரறிக்கை ஆகும். இப்பேரறிக்கை திருச்சியில் அமையப்பெற்ற நவாபின் கோட்டையின் முன்சுவரிலும், ஸ்ரீரங்கம் கோவிலின் சுற்றுச் சுவரிலும் ஒட்டப்பட்டது.

ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்பட விழைந்த தமிழகப்  பாளையக்காரர்கள் பலரும் ஒன்று திரண்டனர். சின்ன மருது ஏறத்தாழ 20,000 ஆட்களை ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் திரட்டினார். வங்காளம், சிலோன், மலேயா ஆகிய இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் படைகள் விரைந்து வந்தன. புதுக்கோட்டை, எட்டையபுரம் மற்றும் தஞ்சாவூரின் அரசர்கள் பிரிட்டிஷாருடன் கைகோர்த்தார்கள். ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கை என்ற உத்தி விரைவில் பாளையக்காரர்களின் படைகளில் பிரிவினையை ஏற்படுத்தியது.

இராமநாதபுரம் சேதுபதி

இருபது ஆண்டுகளுக்கு மேலாகக் கப்பத் தொகையினை யாருக்கும் கட்டாமல் தன்னிச்சையாக இயங்கி வந்த இராமநாதபுரம் சேதுபதியை ஆயுத வலிமை கொண்டு அடக்கிட நவாப் விரும்பினார். 1772-இல் நவாப் முகமது அலியின் மகனான உம் தத்துல் உம்ரா, கம்பெனித் தளபதி ஜோசப் ஸ்மித் ஆகியோர் தலைமையில் பெரும்படை ஒன்று இராமநாதபுர கோட்டையைக் கைப்பற்றினர். அங்கிருந்த ராணி, அவரது இரு பெண்குழந்தைகள் இளவல் முத்துராமலிங்க சேதுபதி ஆகியோர் கைது செய்யப்பட்டுத் திருச்சிக் கோட்டையில் அடைக்கப்பட்டனர். இதனால் ஏற்பட்ட கிளர்ச்சி காரணமாக 1781-இல் நவாப் சிறையிலிருந்த இளம் சேதுபதி மன்னருடன் ஓர் உடன்பாடு செய்துகொண்டு இராமநாதபுரத்தில் சேதுபதி மன்னர் தமது ஆட்சியைத் தொடர வழி கோலினார். சேதுபதி திருவிதாங்கூர் மன்னர் மற்றும் திருநெல்வேலிப் பாளையக்காரர்களுடன் நட்புக் கொண்டார். மேலும் நவாபுக்கும் கிழக்கிந்திய நிறுவனத்துக்கும் எதிராக டச்சுக்காரர்களுடனும் உடன்பாடு செய்து கொண்டார்.

நவாப் முகமது அலி முத்துராமலிங்கத் தேவரைச் சிறையிலிருந்து விடுவித்து, அவரை இராமநாதபுரத்தின் சேதுபதியாக முடிசூட்டினார். ஆனால் கிளர்ச்சியாளர்கள் முத்துக்கருப்பத் தேவரைத் தங்கள் ஆட்சியாளராக அறிவித்தனர். மேலும் அரசின் தெற்குப் பகுதியையும் வடக்குப் பகுதியையும் ஆக்கிரமித்தனர். கிளர்ச்சியாளர்களின் வீரர்கள் மதுரைக்குள்ளும் நுழைந்தனர். ஜூலையில் ஊமைத்துரை தன் ஆதரவாளர்களுடன் மதுரையில் உள்ள பழையநாடு என்னும் பகுதியைக் கைப்பற்றினார்.

1801இல் சின்ன மருதுவின் மகன் செவத்த தம்பியின் தலைமையில் சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய இரு பகுதிகளைச் சேர்ந்த படைகளும் இணைந்து, கடற்கரை வழியாகத் தஞ்சாவூர் நோக்கி அணிவகுத்துச் சென்றன. தஞ்சாவூரில் இருந்த பாதிக்கப்பட்ட விவசாயிகளும் செவத்த தம்பியின் படையில் சேர்ந்தனர். தஞ்சாவூர் ஸ்தானிகர் ஆக இருந்த கேப்டன் வில்லியம் ப்ளாக்பர்ன் படைகளைத் திரட்டி, மாங்குடி அருகே செவத்த தம்பியை வென்றார். தஞ்சாவூர் ராஜா சரபோஜி ஆங்கிலேயருக்குத் துணையாக நின்றார். இருப்பினும் வீரர்கள் ஆங்கிலேயர் படை பின் தொடர்தலிலிருந்து தப்பித்து, கடந்து சென்ற பகுதிகளை எல்லாம் அழித்து நாசமாக்கி சென்றனர்.

தென்னிந்தியக் கிளர்ச்சி (1801)

திப்புவையும் கட்டபொம்மனையும் வென்ற பின்னர், ஆங்கிலேய படைகள் பல்வேறு முனைகளிலிருந்து திரும்பி இராமநாதபுரத்திலும் சிவகங்கையிலும் கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்ள முடிந்தது. புதுக்கோட்டை தொண்டைமான் கிழக்கிந்திய கம்பெனியில் ஏற்கனவே இணைந்திருந்தார். மேலும் சிவகங்கையின் முன்னாள் ஆட்சியாளரின் வழித்தோன்றல் படமாத்தூர் ஒய்யாத்தேவரின் ஆதரவையும் கிழக்கிந்தியக் கம்பெனி பெற முடிந்தது. அவர் சிவகங்கையின் ஆட்சியாளராகக் கம்பெனியால் அங்கீகரிக்கப்பட்டார். இந்தப் பிரித்தாளும் தந்திரம் அரசரின் ஆதரவாளர்களிடையே பிளவை ஏற்படுத்தி, இறுதியில் கிளர்ச்சியாளர்களை மனந்தளர வைத்தது.

சிவகங்கையின் வீழ்ச்சி

ஆங்கிலேயர்கள் மே 1801இல் தஞ்சாவூரிலும் திருச்சியிலும் இருந்த கலகக்காரர்களை அக்னியு தலைமையிலான ஒரு படைப்பிரிவு தாக்கினார்கள். இப்படை மானாமதுரை, பார்த்திபனூர் வழியாகப் பயணித்து, கிளர்ச்சியாளர்கள்  வசமிருந்த பரமக்குடி அரண்களை ஆக்கிரமித்தது.

மோதலின்போது இரு தரப்பிலும் பெரும் சேதம் ஏற்பட்டது. ஆனால் கிளர்ச்சியாளர்களின் அடங்காத எதிர்ப்பும் மருது சகோதரர்களின் வீரம் செறிந்த சண்டைகளும் ஆங்கிலேயரின் நடவடிக்கையை மிகவும் கடினமாக்கியது. முடிவில், ஆங்கிலேயரின் படை வலிமையும் தளபதிகளின் திறமையுமே வெற்றி பெற்றன.  கலகக்காரர்கள் பிரான்மலையிலும், காளையார் கோவிலிலும் தஞ்சம் புகுந்தனர்கலகம் தோற்றதால் 1801இல் சிவகங்கை இணைக்கப்பட்டது.

ஆங்கிலேயர் ஊமைத்துரையைக் கைது செய்ததைத் தொடர்ந்து, மருது பாண்டியரைச் சிங்கம்புணரி குன்றுகளிலும் செவத்தையாவை வத்தலகுண்டு பகுதியிலும் வெள்ளை மருதின் மகன் துரைசாமியை மதுரைக்கு அருகிலும் கைது செய்தனர்.

சின்ன மருதுவும் அவருடைய சகோதரர் வெள்ளை மருதுவும் 1801 அக்டோபர் 24இல் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர்.  ஊமைத்துரையும், செவத்தையாவும் பிடிக்கப்பட்டு 1801 நவம்பர் 16இல் பாஞ்சாலங்குறிச்சியில் தலை துண்டிக்கப்பட்டனர்.

கலகக்காரர்களில் 73 பேர் பிடிக்கப்பட்டு மலேயாவின் பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டார்கள். இதனால் மருது சகோதரர்களின் கலகம் ‘தென்னிந்தியப் புரட்சி என்று அழைக்கப்படுவதோடு தமிழக வரலாற்றில் தனித்துவம் பெற்றதாகவும் கருதப்படுகிறது.

கர்நாடக உடன்படிக்கை, 1801

1799 மற்றும் 1800-1801ஆம் ஆண்டு பாளையக்காரர்களின் கலகம் அடக்கப்பட்டதன் விளைவு தமிழகத்திலிருந்த அனைத்து உள்ளூர் குடித்தலைமையினரின் எண்ணங்களையும் நீர்த்துப்போகச்செய்தது. 1801 ஜூலை 31இல் ஏற்பட்ட கர்நாடக உடன்படிக்கையின் விதிகளின்படிபிரிட்டிஷார் நேரடியாக தமிழகத்தின்மீது தங்கள் கட்டுப்பாட்டை ஏற்படுத்தியதோடு பாளையக்காரர் முறையும் முடிவுக்கு வந்ததுடன் அனைத்துக் கோட்டைகளும் இடிக்கப்பட்டு படைகளும் கலைக்கப்பட்டன

தீரன் சின்னமலை (1756-1805)
சேலம், கோயம்புத்தூர், கரூர், திண்டுக்கல் ஆகியவை அடங்கிய கொங்குநாடு, மதுரை நாயக்கர் அரசின் ஒரு பகுதியாக இருந்தது. அதை மைசூர் உடையார்கள் கைப்பற்றித் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். உடையார்களின் வீழ்ச்சிக்குப் பிறகு மைசூருடன் இந்த ஆட்சிப்பகுதிகள் மைசூர் சுல்தான்களால் கட்டுப்படுத்தப்பட்டன. மூன்றாம், நான்காம் மைசூர் போர்களின் விளைவாகக் கொங்குப் பகுதி முழுதும் ஆங்கிலேயர் வசமாயின. தீரன் சின்னமலை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்த்துப் போரிட்ட கொங்குநாட்டுப் பாளையக்காரர் ஆவார்.

தீர்த்தகிரி என்று அழைக்கப்பட்ட தீரன் 1756இல் பிறந்தார்சிலம்புவில்வித்தை, குதிரையேற்றம் மட்டுமல்லாமல் நவீன போர் முறைகளையும் கற்றுத் தேர்ந்தார். இவர் பிரெஞ்சுக்காரர்களாலும் திப்புவாலும் பயிற்சியளிக்கப்பட்ட பாளையக்காரர்களில் ஒருவர்.  கொங்குப்பகுதியில் குடும்பம் மற்றும் நிலப்பிரச்சனைகளுக்குத் தீர்வு வழங்குதல் போன்ற செயல்களில் ஈடுபட்டுவந்தார்.

அப்பகுதி மைசூர் சுல்தானின் கட்டுப்பாட்டில் இருந்ததுதிப்புவின் திவான் முகம்மது அலி என்பவரால் ‘சின்னமலையே‘ வரி வசூலிக்கப்பட்டது.

ஒரு முறை திவான் வசூலிக்கப்பட்ட வரிப்பணத்தோடு மைசூருக்குத் திரும்பிக்கொண்டிருந்த போது, தீர்த்தகிரி அவரை வழிமறித்து வரிப்பணம் முழுவதையும் பறித்துக்கொண்டார்.

முகம்மது அலியிடம் சிவமலைக்கும், சென்னிமலைக்கு  இடையே இருந்த சின்னமலையே‘ வரிப்பணத்தைப் பிடுங்கிக்கொண்டதாக சுல்தானுக்குப் போய்ச் சொல் என்று அறிவுறுத்தினார். அதன் பிறகேதீரன் சின்னமலை’ என்று அவர் அழைக்கப்படலானார்.

அவமதிப்புக்குள்ளான திவான் சின்னமலையைத் தாக்க படை அனுப்பினார். இருபடைகளும் நொய்யல் ஆற்றங்கரையில் மோதிக்கொண்டனஅதில் சின்னமலையே வெற்றிபெற்றார்.

திப்புவின் இறப்பிற்குப் பிறகு ஒரு கோட்டையை எழுப்பிய தீரன சின்னமலை அவ்விடத்தைவிட்டு வெளியேறாமல் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடினார். எனவே அவ்விடம்ஓடாநிலை’ என்றழைக்கப்படுகிறது.

சின்னமலை கோயம்புத்தூரில் இருந்த ஆங்கிலேயரின் கோட்டை மீது தாக்குதல் நடத்தும் முயற்சியில் (1800) இருந்தபோது, மருது பாண்டியரின் உதவியைப் பெற முயன்றார். கம்பெனியுடன் போரிடுவதற்காக விருபாட்சி கோபால நாயக்கர், பரமத்திவேலூர் அப்பச்சிக் கவுண்டர், சேலம் ஆத்தூர் ஜோனி ஜான் கஹன், பெருந்துறை குமராள் வெள்ளை, ஈரோடு வாரணவாசி ஆகியோருடன் கூட்டணி சேர்ந்தார்.

தனது படையை வலுவூட்டுவதற்குத் தேவையான உதவிகளை மருது சகோதரர்களிடமிருந்து பெறுவதைக் கம்பெனி தடுத்துவிட்டதால் சின்னமலையின் திட்டங்கள் பலிக்கவில்லை. அவரும் தன் திட்டத்தை மாற்றிக்கொண்டு, திட்டமிட்டதற்கு ஒரு நாள் முன்னதாகவே கோட்டையைத் தாக்கினார்.

அவர் பிடிபடாமலிருப்பதற்காக கொரில்லாப் போர் முறைகளைக் கையாண்டார். இறுதியாக அவரையும் அவர் சகோதரர்களையும் கைது செய்த ஆங்கிலேயர்கள் அவர்களை சங்ககிரியில் சிறைவைத்தனர். ஆங்கிலேய ஆட்சியை ஏற்க வற்புறுத்தப்பட்டபோது அவர்கள் அதற்கு இணங்க மறுத்தனர். அதனால் 1805 ஜூலை 31 அன்று சங்ககிரி கோட்டையின் உச்சியில் அவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.

கம்பெனிப் படை 49 பேரைத் தூக்கிலிட்டனர்.

1800இலிருந்து அவர் தூக்கிலிடப்பட்ட 1805 ஜூலை 31 வரை கம்பெனிக்கு எதிராகப் போராடிக்கொண்டே இருந்தார். சின்னமலையின் போர்களில் முக்கியமானவை மூன்று:

காவிரிக்கரையில் நடைபெற்ற 1801 போர்.

1802ஆம் ஆண்டு ஓடாநிலையில் நடந்த போர்;

1804இல் நடந்த அரச்சலூர் போர் ஆகும்.

அவரது இறுதிப் போர் 1805இல் நடைபெற்றதாகும். இப்போரில் சின்னமலை அவருடைய சமையல்காரரால் துரோகம் இழைக்கப்பட்டார். தீரன் சின்னமலை சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.

 

 

வேலூர் புரட்சி 1806

தென்தமிழகத்தின் பாளையக்காரர்கள் அனைவரையும் ஒடுக்குவதற்கு முன்பாகவே கிழக்கிந்திய கம்பெனி 1792இல் திப்புவோடு ஏற்பட்ட போரின் முடிவில் சேலம் மற்றும் திண்டுக்கல் வருவாய் மாவட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

1799இல் நடந்த ஆங்கிலேயமைசூர் போரின் முடிவில் கோயம்புத்தூர் இணைக்கப்பட்டது. 1798ஆம் ஆண்டு தஞ்சாவூரின் அரசர் அப்பகுதியின் இறையாண்மை உரிமையை ஆங்கிலேயருக்கு விட்டுக்கொடுத்து அதே ஆண்டு கப்பம்கட்டும் நிலைக்கும் தள்ளப்பட்டார்.

கட்டபொம்மன் எதிர்ப்பு (1799), மருது சகோதரர்களின் எதிர்ப்பு (1801) ஆகியவற்றை ஒடுக்கியப் பின்பு, பிரிட்டிஷார் ஆற்காட்டு நவாபை விசுவாசமற்றவர் என்று குற்றம்சுமத்தி அவர்மீது கட்டாயப்படுத்தி ஒரு ஒப்பந்தத்தைத் திணித்தனர். 1801இல் ஏற்பட்ட இவ்வொப்பந்தத்தின்படி, ஆற்காட்டு நவாப் வட ஆற்காடு, தென் ஆற்காடு, திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களை அவற்றை நிர்வகிக்கும் அதிகாரத்தோடு ஒப்படைத்துவிட வேண்டும் என்றானது.

அரியணையை இழந்த அரசர்கள், குறுநில மன்னர்கள் ஆகியோரின் சந்ததியினர் ஆங்கிலேய ஆட்சி சுமத்திய அடிமைத்தளையைத் தகர்க்கத் தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டனர். அவற்றின் மொத்த விளைவுதான் 1806ஆம் ஆண்டில் ஏற்பட்ட வேலூர் புரட்சி ஆகும். மருது சகோதரர்களின் கிளர்ச்சி ஒடுக்கப்பட்ட பின்னர், அவர்கள் வேலூரை மையமாகக் கொண்டு செயல்பட்டனர்.

எண்ணிக்கையில் 3000க்குக் குறையாத திப்பு சுல்தானின் விசுவாசிகள் வேலூரிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் குடியேறியிருந்ததால், ஆங்கிலேய எதிர்ப்புக்கூட்டமைப்பின் அமைப்பாளர்கள் அங்கு தங்கள் இரகசிய நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

ஆங்கிலேயரால் பதவியோ, சொத்தோ பறிக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கியிருந்னர். இதுபோல் பாதிக்கப்பட்ட பலரை வேலூர் கோட்டையின் படைமுகாம் உள்ளடக்கியிருந்தது. இவ்வாறு வேலூர் கோட்டை தென்னிந்தியாவின் புரட்சியாளர்கள் சந்தித்துக்கொள்ளுமிடமாக ஆனது. சிப்பாய்களும் வேலூருக்கு இடம்பெயர்ந்தவர்களும் கோட்டையில் அடிக்கடி கூடித் தீவிரமாகக் கலந்தாலோசித்தனர். அவற்றில் திப்பு மகன்களின் பிரதிநிதிகளும் பங்கேற்று வந்தனர்.

உடனடிக் காரணம்+—

வெளியேற்றப்பட்ட சிற்றரசர்களும், நிலச்சுவான்தார்களும் கம்பெனி அரசுக்கு எதிராக எதிர்காலத் திட்டம் குறித்து நிதானமாக சிந்தித்துக்கொண்டே இருந்தார்கள். இதன் விளைவாக வெளிப்பட்டதே 1806ஆம் ஆண்டு வேலூர் புரட்சியாகும். புரட்சியின் இறுதி நிகழ்வு அந்நிய ஆட்சியை தூக்கி எறிவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

பிரிட்டிஷாரின் இராணுவத்தில் சிப்பாயாகப் பணியாற்றியவர்களுக்கு குறைவான ஊதியமே வழங்கப்பட்டது. பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் குறைவாகவே இருப்பது ஆகியவற்றை நினைத்து கடுமையான கோபத்துடனே பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.

தங்களின் சமூக மற்றும் சமய நம்பிக்கைகளுக்கு ஆங்கிலேய அதிகாரிகள் குறைவான மதிப்பளித்ததும், மேலும் அவர்களின் கோபத்தை வலுப்படுத்தியது. விவசாயப் பின்னணிகொண்ட வீரர்களின் வேளாண் சிக்கலும் அவர்களை மேலும் சிரமப்படுத்தியது.

சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தபட்ட நிலக்குத்தகை முறையில் ஒரு நிலையற்றதன்மைக் காணப்பட்டதாலும் 1805இல் பஞ்சம் ஏற்பட்டதாலும் பல சிப்பாய்களின் குடும்பங்கள் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தன.

திப்புவின் மகன்களும் அவர்தம் குடும்பத்தினரும் வேலூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்ட வேளையில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் அந்த வாய்ப்பு கூடிவந்தது. புரட்சி ஏற்படுவதற்கான இயக்க சக்தியாக தலைமைத் தளபதி (Commander-in- Chief) சர் ஜான் கிரடாக் வெளியிட்ட புதிய இராணுவ விதிமுறை அமைந்தது.

புதிய விதிமுறைகளின்படி, சிப்பாய்கள் சாதி அல்லது மதத்தின் அடையாளமாகத் தங்களது நெற்றியில் அணிந்த அனைத்து விதமான குறியீடுகளும் தடை செய்யப்பட்டன. சாதி அடையாளங்களையோ, காதணிகளையோ அணியக்கூடாது என்று கேட்டுக்கொள்ளப்பட்டனர்அவர்கள் தாடையை முழுமையாகச்சவரம் செய்யவும் மீசையை ஒரே பாணியில் வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டார்கள்.

துணை ஜெனரல் அக்னியு சிப்பாய்களுக்கான ஒரு புதிய தலைப்பாகையை வடிவமைத்து, தனது நேரடிக் கண்காணிப்பில் அதனை அறிமுகம் செய்தார்.

இந்தியர்களின் பார்வையில், இந்தத் தலைப்பாகையில் இடம்பெற்றிருந்த அருவருக்கத்தக்க அம்சம், அதன் மீதிருந்த ரிப்பன் மற்றும் குஞ்சம் ஆகும். இது மிருகத் தோலில் செய்யப்பட்டிருந்தது. பன்றித்தோல் முஸ்லீம்களுக்கு வெறுப்பூட்டும் பொருள் ஆகும். இந்துக்கள் பசுத்தோலில் செய்யப்பட்ட எந்தப் பொருளையும் விலக்க வேண்டியதாகக் கருதினர். இந்த மாற்றங்களுக்கான எதிர்ப்பை இந்தியர்களிடையே இன்னும் அதிகரிக்கச் செய்யும் வகையில், சிப்பாய்கள் அணியும் சீருடையின் முன்பக்கம் சிலுவை பொறிக்கப்பட்டிருந்தது.

புதிய தலைப்பாகையை அணிவதில் தங்களுக்கு உடன்பாடில்லை என்று இந்திய சிப்பாய்கள் போதுமான முன்னெச்சரிக்கை விடுத்தனர். ஆனால் கம்பெனி நிர்வாகம் அதனை கவனத்தில் கொள்ளவில்லை.

முதல் எதிர்ப்பு 1806 மே மாதத்தில் நிகழ்ந்தது. வேலூரிலிருந்த 4ஆம் ரெஜிமெண்ட்டின் 2ஆம் படைப்பிரிவு வீரர்கள் புதிய தலைப்பாகையை அணிய மறுத்தனர். இந்தப் பிரச்னை படைமுகாமின் தளபதியான கவர்னர் ஃபேன்கோர்ட்டுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் கிளர்ச்சியாளர்களை உடனிருந்து கண்காணிக்கும்படி 19ஆம் குதிரைப்படைப்பிரிவுக்கு உத்தரவிட்டார். இவர்கள் மீதான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

4ஆம் ரெஜிமெண்ட்டின் 2ஆம் படைப்பிரிவுக்குப் பதிலாக வாலாஜாபாத்திலிருந்த 23ஆம் ரெஜிமெண்ட்டின் 2ஆம் படைப்பிரிவு பொறுப்பை ஏற்றது.

தலைமையின் உத்தரவை எதிர்த்தமைக்காகப் படையின் கீழ்நிலைப் பொறுப்பிலிருந்த 21 வீரர்கள் இராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார்கள். அவர்களில் 10 முஸ்லீம்களும் 11 இந்துக்களும் இருந்தார்கள். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும்பொருட்டு இரு வீரர் (ஒரு முஸ்லீம், ஒரு இந்து)களுக்குத் தலா 900 கசையடிகள் கொடுக்கப்பட்டு, அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள்.

புதிய தலைப்பாகையை அணிவதற்கு விருப்பமில்லாத உணர்வு வீரர்களிடையே மிக பலவீனமாக இருப்பதாகவே கவர்னர் வில்லியம் பெண்டிங்க் நம்பினார்.

வேலூர் கோட்டையில் 1806 ஜூலை 9ஆம் நாள் இரவின்போது பணியிலிருந்த இராணுவ அதிகாரிகள் வழக்கத்துக்கு மாறாக எதையும் கவனிக்கவில்லை என முதலில் கூறப்பட்டது. எனினும், அன்றைக்குப் பொறுப்பிலிருந்த ஆங்கிலேய அதிகாரி பார்வையிடும் தனது வேலையை அன்று செய்யவில்லை என்றும் தனக்குப் பதிலாக ஜமேதார் ஷேக் காசிம் என்ற இந்திய அதிகாரியை அனுப்பினார் என்றும் பின்னர் தெரிய வந்தது.

வேலூர் புரட்சிக்குப் பிறகு, அவர் முதன்மைக் குற்றவாளிகளில் ஒருவராக அடையாளம் காணப்பட்டார். ஜூலை 10 அதிகாலையில் பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டிய படைப்பிரிவின் தலைவர்கள் ஜூலை 9 ஆம் நாள் இரவே கோட்டையில் தூங்குவதற்கு அதைச் சாக்காகப் பயன்படுத்தினர். இந்தத் துணை இராணுவ அதிகாரி கோட்டைக்குள் பாதுகாவலர்களாகத் தன்னால் இயன்றவரை தன்னுடைய ஆதரவாளர்களையே நியமித்தார்.

வேலூர் புரட்சியில் முக்கியப் பங்கு வகித்ததாகக் கருதப்படுபவர் ஜமாலுதீன் ஆவார். இவர் திப்புக் குடும்பத்தின் 12 இளவரசர்களில் ஒருவர். அவர் இந்திய அதிகாரிகளிடமும் வீரர்களிடமும் இரகசியப் பேச்சுவார்த்தைகளின்போது, அவர்கள் வேலூர் கோட்டையை எட்டு நாட்களுக்குத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்படியும் அதற்குள் 10 ஆயிரம் ஆதரவாளர்கள் உதவிக்கு வந்து விடுவார்கள் என்றும் கூறி வந்தார்.

உரிமை பறிக்கப்பட்ட பாளையக்காரர்களின் உதவியைக் கேட்டு அவர்களுக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளதையும் அவர் தெரிவித்தார். திப்பு சுல்தானிடம் பணிபுரிந்த ஏராளமான அதிகாரிகள் திப்புவின் முன்னாள் அமைச்சரான பூர்ணையாவுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர்கள் தக்க நேரத்தில் கைகொடுப்பார்கள் என்றும் ஜமாலுதீன் கூறினார்.

புரட்சி வெடித்தல்

1806 ஜூலை 10 அன்று அதிகாலையிலே 2 மணிக்கு முதல் மற்றும் இருபத்தி மூன்றாம் படைப்பிரிவுகளின் இந்திய சிப்பாய்கள் துப்பாக்கிகளின் முழக்கத்தோடு புரட்சியில் இறங்கினர். கோட்டைக் காவற்படையின் உயர் பொறுப்புவகித்த கர்னல் பேன்கோர்ட் என்பவர்தான் முதல் பலியானார். அடுத்ததாக இருபத்தி மூன்றாம் படைப்பிரிவைச் சேர்ந்த கர்னல் மீக்காரஸ் கொல்லப்பட்டார்.

முதன்மை பாதுகாப்புத்தளத்திலிருந்த காவலாளியிடமிருந்து கார்ப்பரல் பியர்சிக்கு ஒரு செய்தி தெரிவிக்கப்பட்டது. படைவீரர் குடியிருப்புக்கு அருகில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது என்பதே அச்செய்தி, பியர்சி பதில் நடவடிக்கையில் இறங்கும் முன்னரே, சிப்பாய்கள் ஆங்கிலேயப் பாதுகாவலர்கள் மீதும், படைவீரர் குடியிருப்பு, அதிகாரிகள் குடியிருப்பு ஆகியவற்றின் மீதும் ஏறக்குறைய ஒரே நேரத்தில் தாக்குதல் தொடுத்தனர். பியர்சியும் கடுமையான காயங்களுக்கு உள்ளானார்.ஏறத்தாழ பனிரெண்டுக்கும் அதிகமான அதிகாரிகள் அடுத்த ஒரு மணிநேரத்துக்குள் கொல்லப்பட்டார்கள்

ஐரோப்பியக் குடியிருப்புகளில் கோடை வெக்கையைச் சமாளிக்கக் கதவுகள் இரவிலும் திறந்து வைக்கப்பட்டிருந்தன. கிளர்ச்சியாளர்கள் படுக்கைகளில் பாதுகாப்பின்றி உறங்கிக்கொண்டிருந்த ஐரோப்பியரைச் சன்னல் வழியாக எளிதில் சுட முடிந்தது. ஐரோப்பியக் குடியிருப்புக்குத் தீ வைக்கப்பட்டது. ஐரோப்பிய அதிகாரிகளின் குடியிருப்புகளைக் கண்காணித்து, வெளியே வரும் எவரையும் சுடுவதற்குத் தனிப்படைப்பிரிவு நியமிக்கப்பட்டது.

வெடிமருந்துகளும் துப்பாக்கி ரவைகளும் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கை முதலாம் ரெஜிமெண்ட்டின் ஒரு பிரிவு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. அதே ரெஜிமெண்ட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரு குழு குடியிருப்புகளில் உள்ள ஐரோப்பியரைக் கொல்வதற்குத் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்தது. ஏராளமான ஐரோப்பிய ஒழுங்குமுறை நடத்துனர்களுடன், 13 அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

இராணுவக்குடியிருப்பில் 82 கீழ்நிலை இராணுவ வீரர்கள் இறந்தார்கள். 91 பேர் காயமடைந்தனர். உள்ளூர் வீரர்கள் அடங்கிய 16ஆம் காலாட்படையைச் சேர்ந்த மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங் துப்பாக்கிச் சத்தம் கேட்டபோது கோட்டைக்கு வெளியே பல்லக்கில் சென்று கொண்டிருந்தார். அவர் பல்லக்கிலிருந்து இறங்கி, கோட்டையின் சரிவான பகுதிக்குச் சென்று விசாரித்தார்.

சரமாரியாகப் பொழிந்த குண்டுமழை உடனடியாக அவரது உயிரைப் பறித்தது. கோட்டைக்கு வெளியே பணியிலிருந்த மேஜர் கோட்ஸ் கிளர்ச்சியைப் பற்றிக் கேள்விப்பட்டு கோட்டைக்குள் நுழைய முயன்றார். அவரால் உள்ளே செல்ல முடியாததால், ஆற்காட்டில் குதிரைப்படை முகாமுக்குப் பொறுப்பு வகித்த
கில்லஸ்பிக்குக் கடிதம் எழுதி, அதைக் கேப்டன் ஸ்டீவன்சன் என்பவரிடம் கொடுத்தனுப்பினார். அந்தக் கடிதம் வேலூரிலிருந்து 25 கி.மீ தொலைவில் இருந்த ஆற்காட்டுக்குக் காலை 6 மணி அளவில் சென்றடைந்தது.

கர்னல் கில்லஸ்பி உடனே வேலூருக்குப் புறப்பட்டார், தன்னுடன் கேப்டன் யங் தலைமையில் 19ஆம் குதிரைப்படையைச் சேர்ந்த ஒரு பிரிவையும் லெப்டினெண்ட் உட் ஹவுஸ் தலைமையில் அதற்குத் துணைநிற்கும் 7ஆம் குதிரைப்படையிலிருந்து ஒரு வலுவான பிரிவையும் அழைத்துச் சென்றார்.

வேலூர் கோட்டைக்குக் காலை 9 மணிக்கு வந்தடைந்த கில்லஸ்பி தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்துகொண்டிருந்ததால், பீரங்கிகள் தங்கள் பாதுகாப்புக்கு வந்துசேரும்வரை காத்திருக்க முடிவு செய்தார். விரைவிலேயே ஆற்காட்டிலிருந்து பின்தொடர்ந்து வந்த கென்னடி தலைமையிலான குதிரைப்படை 10 மணி அளவில் வந்துசேர்ந்தது. லெப்டினெண்ட் ப்ளாகிஸ்டன் தலைமையில் 19ஆம் குதிரைப்படையின் பீரங்கியால் கோட்டையின் வெளிவாசல் கதவு தகர்க்கப்பட்டது. கர்னல் கில்லஸ்பி வேலூர் கோட்டையை 15 நிமிடங்களுக்குள் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகக் கூறப்படுகிறது.

கேப்டன் ஸ்கெல்ட்டன் தலைமையிலான குதிரைப்படையின் ஒரு பிரிவு கோட்டைக்குள் நுழைந்தது. கில்லஸ்பியின் வீரர்கள் கடுமையான
துப்பாக்கிச்சூட்டை எதிர்கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற தாக்குதலில் கர்னல் கில்லஸ்பியும் காயங்களுக்கு உள்ளானார்.

கிளர்ச்சியில் ஈடுபட்ட சிப்பாய்கள் பின்வாங்கினார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் கோட்டையின் சுவர்கள் மீது ஏறித் தப்பித்தனர் அல்லது ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு கருணைக்காகக் கெஞ்சினர். குதிரைப்படைப்பிரிவுகள் அனைத்தும் அணிவகுப்பு மைதானத்தில் ஒன்றுகூடின. கோட்டையின் திட்டிவாசல் மூலம் கிடைத்த குறுகலான பாதை வழியே தப்பியோடிய சிப்பாய்களைப் பின்தொடர்ந்து சென்று பிடிக்க முடிவெடுக்கப்பட்டது. தப்பியோடிய சிப்பாய்களை வழிமறித்துப் பிடிக்கச் சில உள்ளூர் குதிரைக்காரர்களுடன் ஒரு குதிரைப்படைப்பிரிவு கிளம்பியது. கோட்டையின் அனைத்துக் கட்டிடங்களிலும் தேடுதல் வேட்டை நடந்தது. அங்கு ஒளிந்திருந்த கிளர்ச்சியாளர்கள் இரக்கமின்றிக் கொல்லப்பட்டார்கள்.

கர்னல் ஹர்கோர்ட் (வாலஜாபாத் படைக்குப் பொறுப்பு வகித்தவர்) ஜூலை 11இல் வேலூர் படையின் தற்காலிகப் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஜூலை 13இல் ஹர்கோர்ட் படைமுகாமின் பொறுப்பாளராகப் பதவியேற்று, இராணுவச் சட்ட ஆட்சியை அமல்படுத்தினார்.

கர்னல் கில்லஸ்பியின் விரைவான, சிறந்த திட்டமிடலுடன் கூடிய நடவடிக்கையே, கோட்டையைச் சில நாட்களுக்குள் கைப்பற்றி, அடுத்ததாக மைசூரிலிருந்து வரவிருந்த 50 ஆயிரம் வீரர்களின் ஆதரவைப் பெறுவதற்குத் திட்டமிட்ட கிளர்ச்சியாளர்களின் கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்ததாகக் கருதப்படுகிறது.

புரட்சியின் பின்விளைவுகள்

நீதிமன்ற விசாரணைக்குப்பின் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்ட ஆறு நபர்கள் பீரங்கியில் கட்டியநிலையில் சுடப்பட்டும், ஐந்து நபர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டும், எட்டு நபர்கள் தூக்கிலிடப்பட்டும் கொல்லப்பட்டார்கள்.

படைவீரர்கள் எதிர்ப்பு தெரிவித்த அருவருப்பான மாற்றங்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டன. விசாரணைக் குழுவின் கூற்றுப்படி, மைசூர் இளவரசர்கள்
கிளர்ச்சிக்கு உடந்தையாக இருந்தார்கள் என்பது நிறுவப்படாததால், அவர்களைக் கல்கத்தாவுக்கு அனுப்பிவைக்கும்படி உத்தரவிடப்பட்டது.

கில்லஸ்பியின் ஆட்கள் கிளர்ச்சிக்குத் திட்டம் தீட்டிய திப்புவின் மகன்களைப் பழிவாங்க விரும்பினார்கள். ஆனால் லெப்டினெண்ட் கர்னல் மர்ரியாட் இதை எதிர்த்தார்.

கலவரத்தை அடக்குவதில் ஈடுபட்ட அதிகாரிகளுக்குப் பரிசுத்தொகையும் பதவிஉயர்வும் வழங்கப்பட்டது. கர்னல் கில்லஸ்பிக்கு 7,000 பகோடாக்கள் வெகுமதியாக அளிக்கப்பட்டது. எனினும் தலைமைத் தளபதி ஜான் கிரடாக்கும், உதவித் தளபதி (Adjutant General) அக்னியூவும், ஆளுநர் வில்லியம் பெண்டிங்கும் புரட்சி நடக்கக் காரணமானவர்கள் என்று கருதப்பட்டு அவர்களைப் பணிநீக்கம் செய்ததோடு, அவர்கள் இங்கிலாந்துக்கு திருப்பியழைத்துக் கொள்ளப்பட்டார்கள். புதிய இராணுவ விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டது.

கில்லஸ்பியின் வன்கொடுமைகளை நேரில் பார்த்த ஜே. பிளாக்கிஸ்டன், 800க்கும் மேற்பட்ட உடல்கள் கோட்டையிலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்டதாக கூறுகிறார்.

டபிள்யூ. ஜே. வில்சனின் மதிப்பீட்டின்படி கிளர்ச்சியில் பங்கேற்றதற்காக 378 பேர் சிறை வைக்கப்பட்டனர். 516 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டாலும் சிறைத் தண்டனை விதிக்கப்படவில்லை. விசாரணைக்குழுவிடம் அளிக்கப்பட்ட வாக்குமூலங்களின்படி, இராணுவ நீதிமன்றம் சில தனிப்பட்ட நபர்களுக்கு மரண தண்டனை விதித்தது. சிலரை நாடு கடத்தியது. இத்தண்டனைகள் வேலூர் பொறுப்பதிகாரியால் 1806 செப்டம்பர் 23 அன்று நிறைவேற்றப்பட்டது.

புரட்சியைப் பற்றிய மதிப்பீடு

வெளியிலிருந்து உடனடியாக எந்தவொரு உதவியும் கிடைக்காத காரணத்தினாலேயே வேலூர் புரட்சி தோல்வியுற்றது. சமீபகால ஆய்வுகளின் வழியாக நாம் அறிந்துகொள்வது யாதெனில் புரட்சிக்கான ஏற்பாடுகளை 23ஆம் படைப்பிரிவின் 2ஆவது பட்டாளத்தைச் சேர்ந்த சுபேதார்களான ஷேக் ஆடமும், ஷேக் ஹமீதும்ஜமேதாரான ஷேக் ஹுஸைனும், 1ஆம் படைப்பிரிவின் 1ஆம் பட்டாளத்தைச் சேர்ந்த இரு சுபேதார்களும், ஜமேதார் ஷேக் காஸிமும் சிறப்பாகச் செய்திருந்ததாகத் தெரிகிறது.

1857ஆம் ஆண்டு பெரும்கலகத்திற்கான அனைத்து முன்அறிகுறிகளையும், எச்சரிக்கைகளையும் வேலூர் புரட்சி கொண்டிருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், கலகத்தைத் தொடர்ந்து எந்த உள்நாட்டுக் கிளர்ச்சியும் ஏற்படவில்லை. 1806ஆம் ஆண்டு புரட்சியானது வேலூர் கோட்டையுடன் முடிந்துவிடவில்லை. பெல்லாரி, வாலாஜாபாத், ஹைதராபாத், பெங்களூரு, நந்திதுர்க்கம், சங்கரிதுர்க்கம் ஆகிய இடங்களிலும் எதிரொலித்தது.

 

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories