இந்திய தேசிய காங்கிரஸ்
June 5, 2025 2025-07-15 7:26இந்திய தேசிய காங்கிரஸ்
இந்திய தேசிய காங்கிரஸ்
இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவப்படுதல் (1870–1885)
தேசியத்தின் எழுச்சி 19ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் ஆங்கிலக் கல்வி பெற்ற இந்தியர்களின் புதிய சமூக வகுப்பினர் மத்தியில் தேசிய அரசியல் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது. பல்வேறு பிரச்சாரங்கள் மூலமாக தேசம், தேசியம் மற்றும் பல்வேறு மக்களாட்சியின் உயர்ந்த இலட்சியங்கள் பற்றிய கருத்துக்களை அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முக்கிய பணியை இந்திய அறிவாளர்கள் மேற்கொண்டனர். வட்டார மொழி மற்றும் ஆங்கில அச்சு ஊடகங்களின் வளர்ச்சி இது போன்ற கருத்துகளைப் பரப்புவதில் முக்கியப் பங்காற்றியது. எண்ணிக்கையில் அவர்கள் குறைவாக இருந்தாலும் தேசிய அளவிலான வீச்சைக் கொண்டு அகில இந்தியா முழுதும் தொடர்புகளை உருவாக்கும் திறன் பெற்றிருந்தனர். அவர்கள் வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அல்லது மருத்துவர்களாக பணியாற்றினார்கள். சென்னைவாசிகள் சங்கம் (1852), கிழக்கிந்திய அமைப்பு (1866), சென்னை மகாஜன சபை (1884), பூனா சர்வஜனிக் சபை (1870), பம்பாய் மாகாண சங்கம் (1885) மற்றும் பல அரசியல் அமைப்புகளைத் தொடங்குவதில் அவர்கள் முனைப்பு காட்டினார்கள்.
காலனி ஆட்சிபற்றிய பொருளாதார விமர்சனம்
காலனி ஆட்சி பற்றிய பொருளாதார விமர்சனத்தை உருவாக்குவதே தொடக்ககால இந்திய தேசியவாதிகளின் பங்களிப்புகளில் முக்கியமான ஒன்றாக இருந்தது. தாதாபாய் நௌரோஜி, நீதிபதி ரானடே மற்றும் ரொமேஷ் சந்திர தத் ஆகியோர் காலனி ஆட்சியின் பொருளாதாரம் பற்றிய இந்த விமர்சனத்தைச்செய்வதில் முக்கியப் பங்காற்றினார்கள். இந்தியாவை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக அடக்கி ஆள்வதுதான் பிரிட்டிஷாரின் வளத்துக்கு அடிப்படையானது என்பதை அவர்கள் தெளிவாக உணர்ந்தனர். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு காலனி ஆதிக்கமே முக்கியத் தடையாக உள்ளதென்று அவர்கள் முடிவு செய்தனர்.
குறிக்கோள்கள் மற்றும் வழிமுறைகள்
ஒரு அகில இந்திய அமைப்பை உருவாக்க முனைந்ததன் விளைவாக 1885ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸ் உருவானது. பம்பாய், மதராஸ், கல்கத்தா ஆகிய மூன்று மாகாணங்களிலும் அரசியல் ரீதியாக தீவிரம் காட்டிய கல்வி அறிவு பெற்ற இந்தியர்களின் குழுக்கள் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பை உருவாக்க A.O. ஹியூம் தமது சேவைகளை வழங்கினார். இந்திய தேசிய காங்கிரசின் முதல் (1885) தலைவராக உமேஷ் சந்திர பானர்ஜி இருந்தார். 1885 டிசம்பர் 28இல் இந்திய தேசிய காங்கிரசின் முதல் அமர்வு (கூட்டம்) நடைபெற்றது. தேசிய ஒற்றுமை குறித்த உணர்வுகளை ஒருங்கிணைப்பதே காங்கிரஸின் ஆரம்பகால முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாக இருந்தாலும் பிரிட்டனுக்கு விசுவாசமாக நடந்துகொள்ளவும் உறுதி மேற்கொண்டது. பிரிட்டனிடம் மேல்முறையீடுகள் செய்வது, மனுக்களைக் கொடுப்பது, அதிகாரப் பகிர்வு, ஆகியவற்றை ஆங்கிலேய அரசு உருவாக்கிய அரசியல்சாசன கட்டமைப்பிற்குள் செய்வது உள்ளிட்ட வழிமுறைகளை காங்கிரஸ் பின்பற்றியது. கீழ்க்கண்டவை சில முக்கிய கோரிக்கைகள் ஆகும்:
- மாகாண மற்றும் மத்தியஅளவில் சட்டமேலவைகளை உருவாக்குவது.
- சட்டமேலவைகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது.
- நிர்வாகத்துறையிலிருந்து நீதித்துறையைப் பிரிப்பது.
- இராணுவச்செலவுகளைக் குறைப்பது.
- உள்நாட்டு வரிகளைக் குறைப்பது.
- நீதிபதி மூலமாக விசாரணையை விரிவுசெய்வது.
- ஒரே நேரத்தில் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் ஆட்சிப்பணித் தேர்வுகளை நடத்துவது.
- காவல்துறை சீர்திருத்தங்கள்.
- வனச்சட்டத்தை மறுபரிசீலனை செய்தல்.
- இந்தியத் தொழிற்சாலைகளின் மேம்பாடு மற்றும் முறையற்ற கட்டணங்கள் மற்றும் கலால் வரிகளை முடிவுக்குக் கொண்டுவருவது.
தீவிர தேசியவாதம்
தொடக்ககால இந்திய தேசியவாதிகளின் மிதவாத கோரிக்கைகள் தொடர்பான ஆங்கிலேயர்களின் அணுகுமுறை குறிப்பிடத்தக்க அளவில் மாறவில்லை என்பதால் மித தேசியவாத தலைவர்களின் திட்டங்கள் தோல்விகண்டன. “தீவிர தேசியவாதிகள்” என்று அழைக்கப்பட்ட தலைவர்களின் விமர்சிக்கப்பட்டனர். குழுவால் மனுக்கள் இவர்கள் மற்றும் கோரிக்கைகள் கொடுப்பதை விட, சுய உதவியில் அதிக கவனம் செலுத்தினர்.
வங்கப் பிரிவினை
1905ஆம் ஆண்டின் வங்கப் பிரிவினை மிகவும் அதிருப்தியை ஏற்படுத்திய நிகழ்வாகும். இந்தியா முழுவதும் விரிவான போராட்டங்கள் பரவ இந்தப் பிரிவினை வழிவகுத்ததன் மூலம் இந்திய தேசிய இயக்கத்துக்கு புதிய அத்தியாயத்தை உருவாக்கியது.
இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே பிளவை உருவாக்கி வங்காளத்தில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடந்த அரசியல் அடக்க நடவடிக்கைகளை வங்கப்பிரிவினை வகுக்கப்பட்டது.
இந்து-முஸ்லிம் பிரிவினை
வங்காளிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி இயக்கத்தை தேசியவாத வலுவிழக்கச் செய்வதே வங்கப் பிரிவினைக்கான நோக்கம் என்று வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டது. வங்காளத்தைப் இரண்டு நிர்வாகப் பிரிவுகளின் கீழ் பிரித்து வைத்ததன் மூலம் வங்காள மொழி பேசும் மக்களை ஒரு மொழிசிறுபான்மையினர் என்ற தகுதிக்கு கர்சன் பிரபு குறைத்துவிட்டார். முகலாயர்களின் ஆட்சிக்காலங்களில் கூட அனுபவிக்காத ஒற்றுமையை முஸ்லிம்கள் கிழக்கு வங்காளம் என்ற புதிய மாகாணத்தில் அனுபவிப்பார்கள் என்று கர்சன் உறுதியளித்தார். மத அடிப்படையில் வங்காள மக்களைப் பிரிக்க நினைத்த பிரிவினைச்செயலானது அவர்களைப் பிரிப்பதற்குப் பதிலாக ஒன்றிணைத்தது. வங்காள அடையாளத்தை உணர்வுப் பெருமையுடன் உருவாக்க வட்டார மொழிப் பத்திரிகைகளின் வளர்ச்சி பெரும் பங்காற்றியது.
பிரிவினைக்கு எதிரான இயக்கம்
1905 அக்டோபர் 16இல் வங்காளம் அதிகாரபூர்வமாகப் பிரிவினையானபோது அந்தநாள் துக்கநாளாக அறிவிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானவர்கள் கங்கை நதியில் புனித நீராடியதோடு வந்தே மாதரம் பாடலை பாடியபடி கல்கத்தாவின் சாலைகளில் அணிவகுத்துச் சென்றார்கள்.
வங்காளத்தில் புறக்கணிப்பும் சுதேசி இயக்கமும் (1905–1911)
புறக்கணிப்பும் சுதேசி இயக்கமும் இந்தியாவைத் தற்சார்பு அடையச் செய்யும் விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக எப்போதும் ஒன்றுடன் ஒன்று இணைந்தே இருந்தன. வங்காளத்தில் சுதேசி இயக்கத்தின் போது நான்கு முக்கியப் போக்குகள் காணப்பட்டன:
- மிதவாதப் போக்கு
- ஆக்கபூர்வ சுதேசி
- தீவிர தேசியவாதம்
- புரட்சிகர தேசியவாதம்
தீவிர தேசியவாதம் பஞ்சாபின் லாலா லஜபதி ராய், மகாராஷ்டிராவின் பால கங்காதர திலகர், வங்காளத்தின் பிபின் சந்திர பால், ஆகிய மூன்று முக்கிய தலைவர்களும் சுதேசி காலத்தில் எப்போதும் லால்-பால்-பால் (Lal-Bal-Pal) மூவர் என்று குறிக்கப்பட்டனர். சுதேசி இயக்கத்தின்போது தீவிர தேசியவாதத்தின் இயங்கு தளமாக பஞ்சாப், மகாராஷ்டிரா, வங்காளம் ஆகியன உருவெடுத்தன. தென்னிந்தியாவில் வ.உ. சிதம்பரனார் சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கியதை அடுத்து தூத்துக்குடி சுதேசி இயக்கத்தின் மிகமுக்கியத் தளமாக விளங்கியது.
தன்னாட்சி (ஹோம் ரூல்) இயக்கம் (1916–18)
லோகமான்ய பாலகங்காதர திலகர், அன்னிபெசன்ட் அம்மையார் ஆகியோர் தலைமையிலான தன்னாட்சி (1916-1918) இயக்கத்தின் போது இந்திய தேசிய இயக்கம் புத்துயிரூட்டப்பட்டு தீவிரப்படுத்தப்பட்டது. முதல் உலகப் போரும், இந்தியா அந்தப் போரில் பங்கேற்றதும் தான் தன்னாட்சி இயக்கத்துக்கானபின்னணியாகும். 1914ஆம் ஆண்டில் ஜெர்மனிக்கு எதிராக பிரிட்டன் போர் அறிவித்த நிலையில் மித தேசியவாத மற்றும் தாராளமய தலைமை பிரிட்டிஷாருக்காக ஆதரவைத் தந்தது. அதற்குப் பதில் பிரிட்டிஷ் அரசு போருக்குப் பிறகு தன்னாட்சியை இந்தியாவிற்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. உலகப் போரின் பல அரங்குகளுக்கு இந்தியத் துருப்புகள் அனுப்பப்பட்டன. ஆனால் இந்தக் குறிக்கோள்கள் குறித்து பிரிட்டிஷ் அரசுக்கு எந்தவித உறுதிப்பாடும் இல்லை. இந்தியாவின் தன்னாட்சிக்கு வழிவகுக்கும் காரணத்துக்கு உதவாமல் ஆங்கிலேய அரசு ஏமாற்றியதால் ஆங்கிலேய அரசுக்கு நெருக்கடி தரும் புதிய மக்கள் இயக்கத்துக்கான அழைப்பாக இது உருவெடுத்தது.
தன்னாட்சி இயக்கத்தின் குறிக்கோள்கள்
அரசியலமைப்பு வழிகளைப் பயன்படுத்தி பிரிட்டிஷ் பேரரசிற்குள் தன்னாட்சியை அடைவது. தன்னாட்சிப் பகுதி (டொமினியன்) என்ற தகுதியை அடைவது. ஆஸ்திரேலியா, கனடா, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகியவற்றுக்குப் பின்னர் இந்த அரசாட்சி சாராத நிலை வழங்கப்பட்டது. அவர்களின் இலக்குகளை அடைய வன்முறையல்லாத அரசியல்சாசன வழிமுறைகளைக் கையாள்வது.
லக்னோ ஒப்பந்தம் (1916)
தன்னாட்சி இயக்கமும் அதனையடுத்து மித தேசியவாதிகள் மற்றும் தீவிர தேசியவாதிகளின் மறு இணைப்பு காரணமாக முஸ்லிம்களுடன் புதிய பேச்சுகளுக்கான சாத்தியக்கூறு லக்னோ ஒப்பந்தத்தின்போது ஏற்பட்டது. லக்னோ ஒப்பந்தத்தின் (1916) போது காங்கிரஸ் கட்சியும் முஸ்லிம் லீக்கும் இந்தியாவில் விரைவில் தன்னாட்சி வேண்டுமென்பதை ஏற்றுக்கொண்டது. இதற்கு பதிலாக முஸ்லிம்களுக்கு தனித் தொகுதிகளை வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் தலைமை ஏற்றது.
பிரிட்டிஷாரின் பதில் நடவடிக்கை
சுயராஜ்ஜியத்துக்கான கோரிக்கையை திலகரும் அன்னிபெசன்ட் அம்மையாரும் எழுப்பியது பிரபலமானதைத் தொடர்ந்து தலைவர்களை தனிமைப்படுத்தி அவர்களின் செயல்பாடுகளை முடக்கும் அதே பழைய திட்டத்தை ஆங்கிலேய அரசு பயன்படுத்தியது. 1919இல் மாண்டேகு-செம்ஸ்ஃபோர்ட் சீர்திருத்தங்களை ஆங்கிலேய அரசு அறிவித்தது. இதன் மூலம் இந்தியா தன்னாட்சி நோக்கி படிப்படியாக முன்னேற உறுதி கூறப்பட்டது. இந்திய தேசியவாதிகள் இடையே இது மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் ஒரு பேரிடியாக, தன்னிச்சையான கைது மற்றும் கடும் தண்டனைகளுடன் கூடிய ரௌலட் சட்டத்தை அரசு இயற்றியது.
1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் கீழ் அமைந்த முதல் காங்கிரஸ் அமைச்சரவைகள்
சட்டமறுப்பு இயக்கத்தின் ஆக்கப்பூர்வ வெளிப்பாடுகளில் 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டமும் ஒன்றாகும். மாகாணங்களுக்கு தன்னாட்சி அதிகாரம், மத்தியில் இரட்டையாட்சி ஆகியன இந்தச்சட்டத்தின் முக்கிய அம்சங்களாகும். அகில இந்திய கூட்டமைப்பு ஏற்பட வேண்டும் என்று இந்த சட்டம் வலியுறுத்துகிறது.
காங்கிரஸ் அமைச்சரவைகளும் அவற்றின் பணியும்
1937ஆம் ஆண்டு தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதுடன் 1935ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. சட்டமறுப்பு இயக்கத்தால் காங்கிரஸ் பெரிதும் பலன்பெற்றது. சட்டப்பேரவை புறக்கணிப்பைக் கைவிட்ட காங்கிரஸ் தேர்தல்களில் போட்டியிட்டது. பதினோரு மாகாணங்களில் போட்டியிட்டு ஏழு மாகாணங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. மதராஸ், பம்பாய், மத்திய மாகாணங்கள், ஒடிசா, பீகார், ஐக்கிய மாகாணங்கள், வடமேற்கு எல்லை மாகாணம், சர் முஹம்மது சாதுல்லா தலைமையிலான அசாம் பள்ளத்தாக்கு முஸ்லீம் கட்சியுடன் இணைந்து கூட்டணி அரசு உட்பட எட்டு மாகாணங்களில் அது ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் அரசுகள் பிரபலமான அரசுகளாக செயல்பட்டன. கோயில் நுழைவுச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. கல்வி மற்றும் பொது சுகாதாரத்துக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது.
காங்கிரஸ் அமைச்சரவையின் பதவி விலகல்
1939இல் இரண்டாம் உலகபோர் மூண்டது. காங்கிரஸ் அமைச்சரவைகளை ஆலோசிக்காமல் கூட்டணிப் படைகள் சார்பாக இந்த போரில் இந்தியாவின் காலனி ஆதிக்க அரசு நுழைந்தது. எனவே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் அமைச்சரவைகள் பதவி விலகின. ஜின்னா 1940ஆம் ஆண்டு வாக்கில் முஸ்லீம்களுக்கு தனிநாடு வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இரண்டாம் உலக போரின் போது தேசிய இயக்கம், 1939-45
காந்தியடிகளின் வேட்பாளரான பட்டாபி சீதாராமய்யாவை வீழ்த்தி 1939இல் சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைவரானார். காந்தியடிகள் ஒத்துழைக்க மறுத்ததை அடுத்து, சுபாஷ் சந்திர போஸ் அப்பதவியிலிருந்து விலகி பார்வர்டு பிளாக் கட்சியைத் தொடங்கினார்.