பருவமழை, மழைப்பொழிவு, வானிலை மற்றும் காலநிலை
June 17, 2025 2025-06-27 6:03பருவமழை, மழைப்பொழிவு, வானிலை மற்றும் காலநிலை
இந்தியா – காலநிலை
வானிலை என்பது குறிப்பிட்ட இடத்தில் உள்ள வளிமண்டலத்தின் தன்மையைக் குறிப்பதாகும்.
காலநிலை என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியின் சுமார் 30-35 ஆண்டு சராசரி வானிலையைக் குறிப்பதாகும்.
அட்சங்கள்
இந்தியா 8°4′ வட அட்சம் முதல் 37°6′ வட அட்சம் வரை அமைந்துள்ளது. 23°30′ வட அட்சமான கடகரேகை நாட்டை இரு சமபாகங்களாக பிரிக்கிறது. கடகரேகைக்கு தெற்கே அமைந்துள்ள பகுதிகளில் ஆண்டு முழுவதும் அதிகவெப்பமும் மிக குளிரற்ற சூழலும் நிலவுகிறது. கடகரேகைக்கு வடக்கே உள்ள பகுதிகள் மித வெப்ப காலநிலையைக் கொண்டுள்ளது.
உயரம்
புவிப்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல வளிமண்டலத்தில் ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கும் 6.5°C என்ற அளவில் வெப்பநிலை குறைகிறது. இதற்கு “வெப்ப குறைவு விகிதம்” என்று பெயர். எனவே சமவெளிப் பகுதிகளைக் காட்டிலும் மலைப்பகுதிகள் குளிராக இருக்கும். உதகை தென்னிந்தியாவின் இதர மலை வாழிடங்கள் மற்றும் இமயமலையில் அமைந்துள்ள முசௌரி, சிம்லா போன்ற பகுதிகள் சமவெளிகளைவிட மிகவும் குளிராக உள்ளது.
பருவக்காலங்கள்
வானிலை நிபுணர்கள் இந்திய காலநிலையில் நான்கு பருவங்களை அடையாளம் கண்டுள்ளனர். அவை.
- குளிர்காலம்: ஜனவரி முதல் பிப்ரவரி வரை
- கோடைக்காலம்: மார்ச் முதல் மே வரை
- தென்மேற்கு பருவக்காற்று காலம் அல்லது மழைக்காலம்: ஜூன் முதல் செப்டம்பர் வரை
- வடகிழக்கு பருவக்காற்று காலம்: அக்டோபர் முதல் டிசம்பர் வரை
குளிர்காலம் – இக்காலத்தில் சூரியனின் செங்குத்து கதிர்கள் இந்தியாவிலிருந்து வெகுதொலைவிலுள்ள மகரரேகையின் மீது செங்குத்தாக விழுகிறது. இதனால் இந்தியப் பகுதி சாய்வான சூரியக்கதிர்களைப் பெறுகிறது. இதுவே குறைந்த வெப்பத்திற்கு காரணமாக உள்ளது.
கோடைக்காலம்
இப்பருவத்தில் சூரியனின் செங்குத்துக் கதிர்கள் இந்திய தீபகற்பத்தின் மீது விழுகிறது. எனவே வெப்பநிலை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அதிகரிக்கிறது. கோடைக்காலத்தின் முற்பகுதியில் நாடு முழுவதும் வெப்பமான வறண்ட வானிலை நிலவுகிறது. கோடைக்காலத்தின் மத்தியிலும், இறுதியிலும் நிலப்பகுதியில் இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழையின் ஆதிக்கத்திற்கு உட்படுகிறது. இப்பருவத்தில் இந்தியா முழுவதும் வெப்பம் அதிகரிக்கின்றது. ஏப்ரல் மாதத்தில் தென் இந்திய உட்பகுதிகளில் தின சராசரி வெப்பநிலை 30°C – 35°C ஆக பதிவாகிறது. மத்திய இந்திய நிலப்பகுதியின் பல பகுதிகளில் பகல் நேர உச்ச வெப்பநிலை 40°C ஆக உள்ளது. “மாஞ்சாரல்” (Mango shower) என்ற இடியுடன் கூடிய மழையானது கேரளா மற்றும் கர்நாடக கடற்கரை பகுதிகளில் விளையும் “மாங்காய்கள்” விரைவில் முதிர்வதற்கு உதவுகிறது.
தென்மேற்கு பருவக்காற்று காலம் (மழைக்காலம்)
உலகளாவிய காலநிலை நிகழ்வான “எல்நினோ” தென்மேற்கு பருவக்காற்றுக் காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தென்மேற்கு பருவக்காற்று தொடங்குவதற்கு முன் வட இந்தியாவின் வெப்பநிலையானது 46°C வரை உயருகிறது. இப்பருவக்காற்றின் இடி மற்றும் மின்னலுடன் கூடிய துவக்கம் (தென் இந்தியாவில்)’பருவமழை வெடிப்பு’ எனப்படுகிறது. இக்காற்று இந்தியாவின் தென் முனையை அடையும்பொழுது இரண்டு கிளைகளாகப் பிரிக்கிறது. இதன் ஒரு கிளை அரபிக்கடல் வழியாகவும் மற்றொரு கிளை வங்காள விரிகுடா வழியாகவும் வீசுகிறது. தென்மேற்கு பருவக்காற்றின் அரபிக்கடல் கிளை மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவுகளில் மோதி பலத்த மழைப் பொழிவை தருகிறது. இக்கிளையானது வடக்கு நோக்கி நகர்ந்து இமயமலையால் தடுக்கப்பட்டு வட இந்தியா முழுவதும் கனமழையைத் தோற்றுவிக்கிறது. ஆரவல்லி மலைத் தொடர் இக்காற்று வீசும் திசைக்கு இணையாக அமைந்துள்ளதால் இராஜஸ்தான் மற்றும் வட இந்தியாவின் மேற்கு பகுதிக்கு மழைப்பொழிவை தருவதில்லை.
வங்காள விரிகுடா கிளை, வடகிழக்கு இந்தியா மற்றும் மியான்மரை நோக்கி வீசுகிறது. இது காசி, காரோ, ஜெயந்தியா குன்றுகளால் தடுக்கப்பட்டு மேகாலயாவில் உள்ள மௌசின்ராமில் (mawsynram) மிக கனமழையைத் தருகிறது. பிறகு இக்காற்று கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகரும்போது மழைப் பொழிவின் அளவு குறைந்து கொண்டே செல்கிறது.
இந்தியாவின் ஒட்டு மொத்த மழைப்பொழிவில் 75 சதவீத மழைப் பொழிவானது இப்பருவக்காற்று காலத்தில் கிடைக்கிறது.
வடகிழக்கு பருவக்காற்று காலம்
இப்பருவகாற்றின் மூலம் கேரளா, ஆந்திரா தமிழ்நாடு மற்றும் தென் கர்நாடகாவின் உட்பகுதிகள் நல்ல மழைப்பொழிவைப் பெறுகின்றன. இப்பகுதிகள் மொத்த மழைப்பொழிவில் சுமார் 35 சதவீதத்தைப் பெறுகின்றன. வங்கக்கடலில் உருவாகும் புயலால் தமிழ்நாட்டின் பல பகுதிகளும் ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளும் மழையைப் பெறுகின்றன.
தமிழ்நாட்டின் காலநிலை
கடகரேகை இந்தியாவை இரு சமபாகங்களாகப் பிரிப்பதையும், தமிழ்நாடு கடகரேகைக்கு தெற்கேயும் பூமத்தியரேகைக்கு அருகாமையிலும் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டின் பருவக்காலங்கள்
பருவக்காலம் காலம்
குளிர்காலம் ஜனவரி – பிப்ரவரி
கோடைக் காலம் மார்ச் – மே
தென்மேற்கு பருவக்காற்று காலம் ஜூன் – செப்டம்பர்
வடகிழக்கு பருவக்காற்று காலம் அக்டோபர் – டிசம்பர்
குளிர்காலம்
ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சூரியனின் செங்குத்துக்கதிர்கள் பூமத்திய ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடையே விழுகிறது. இக்காலத்தில் தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் சாய்வான சூரியக்கதிர்களைப் பெறுகின்றன. ஆதலால் இம்மாதங்களில் காலநிலை சற்று குளிராகக் காணப்படுகிறது. தமிழகத்தில் குளிர்கால வெப்பநிலையானது 15°C முதல் 25°C வரை மாறுபடுகிறது. இருந்தபோதிலும் மலைவாழிடங்களில் குளிர்கால வெப்பநிலையானது சில நேரங்களில் 5°C க்கும் குறைவாக உள்ளது. நீலகிரியில் சில பள்ளத்தாக்குகளில் வெப்பம் O°C ஆகவும் பதிவாகிறது. இக்குறைந்த வெப்பநிலை அடர் மூடுபனி மற்றும் மூடுபனி உருவாகக் காரணமாகிறது. இப்பருவத்தில் வறண்ட வானிலையே நிலவுகிறது.
கோடைக்காலம்
சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிகழ்வதால் சூரியனின் செங்குத்துக் கதிரானது தென்னிந்தியாவில் விழுகிறது. ஆகையால் பூமத்திய ரேகையிலிருந்து வெப்பநிலையானது படிப்படியாக அதிகரிக்கிறது. கடகரேகைக்கு தென்பகுதியில் அமைந்திருப்பதால் அதிக வெப்பநிலையைப் பெறுகின்றது. பொதுவாக வெப்பநிலையானது 30°C லிருந்து 40°C வரை வேறுபடுகிறது. இப்பருவத்தில் குறிப்பாக மே மாதத்தில் தமிழகத்தின் தென்பகுதி முன் பருவமழை (மாஞ்சாரல்) மூலமும், வெப்பச்சலனம் மூலமும் மழையைப் பெறுகிறது.
தென்மேற்கு பருவக்காற்று காலம்
மார்ச் முதல் மே மாதம் வரை சூரியனின் செங்குத்து கதிர்களால் வட இந்திய நிலப்பரப்பு அதிக வெப்பத்தைப் பெறுகிறது. இதனால் வட இந்திய பகுதிகளில் குறைந்த அழுத்தம் உருவாகுகிறது. இச்சமயத்தில் காற்றானது அதிக காற்றழுத்தம் உள்ள இந்தியப் பெருங்கடலிலிருந்து வடக்கு நோக்கி வீசுகிறது. இது தென்மேற்கு பருவக்காற்று\ உருவாக காரணமாகிறது.
அரபிக் கடலிலிருந்து வீசும் தென்மேற்கு பருவக்காற்றின் மழைமறைவுப் பிரதேசத்தில் தமிழ்நாடு அமைந்துள்ளதால் மிகக் குறைவான மழைப்பொழிவையேப் பெறுகிறது. இப்பருவத்தின் மழைப் பதிவு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி குறைகிறது. கோயம்புத்தூர் பீடபூமி சராசரியாக 50 செ.மீ மழையைப் பெறுகிறது. எனினும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் நீலகிரி மாவட்டங்கள் 50 முதல் 100 செ.மீ வரை மழையைப் பெறுகின்றன. மாநிலத்தின் கிழக்குப் பகுதிகள் மிகக் குறைவான மழைஅளவைப் பெறுகின்றன.
வடகிழக்கு பருவக்காற்று காலம்
வடகிழக்கு பருவக்காற்று அக்டோபர் முதல் டிசம்பர் மாதத்தின் முதல் பாதி வரை நீடிக்கிறது. மத்திய ஆசியா மற்றும் வட இந்திய பகுதிகளில் உருவாகும் அதிக அழுத்தம், வடகிழக்கு பருவக்காற்று உருவாக காரணமாகிறது.
இப்பருவத்தில் சூரியன் கடகரேகையிலிருந்து மகர ரேகைக்குச் செல்வதால் வெப்பநிலை மற்றும் காற்றழுத்தத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் வட இந்தியாவிலிருந்து வங்கக் கடலை நோக்கி காற்று வீசுகிறது. இக்காற்று கொரியாலிஸ் விசை காரணமாக (பூமியின் சுழற்சியால் ஏற்படும் விசை) திசை விலக்கப்பட்டு வடகிழக்கு திசையிலிருந்து வீசுகிறது. ஆகையால் இக்காற்று வடகிழக்கு பருவக் காற்று என்று அழைக்கப்படுகிறது. வடகிழக்கு பருவக் காற்றானது திரும்பிவரும் தென் மேற்கு பருவக் காற்றின் ஒரு பகுதியாதலால் இக்காற்றைப் ‘பின்னடையும் பருவக்காற்று’ என்றும் அழைப்பர். இப்பருவம் தமிழ்நாட்டின் மழைக்காலமாகும். தமிழ்நாட்டின் வருடாந்திர மழையளவில் 48% இப்பருவத்தில் கிடைக்கிறது. இப்பருவத்தில் கடற்கரை மாவட்டங்கள் 60 சதவீதமும் உள்மாவட்டங்கள் 40 முதல் 50 சதவீதம் வரையிலான வருடாந்திர மழையையும் பெறுகின்றன.