சுல்தான்கள்
October 17, 2025 2025-11-14 6:35சுல்தான்கள்
மைசூர் சுல்தான்களின் எதிர்ப்பு
ஹைதர் அலியின் எழுச்சி
மைசூர், விஜயநகரப் பேரரசின் கீழ் நிலமானிய முறையில் இயங்கிய ஒரு சிறு அரசாக இருந்தது. 1565இல் விஜயநகரப் பேரரசு வீழ்ந்ததற்குப் பிறகு உடையார் வம்சத்தினர் சுதந்திரமான ஆட்சியாளர் ஆயினர்.
ராஜா உடையார் 1578இல் அரியணை ஏறினார். 1610இல் தலைநகரம் மைசூரிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணத்திற்கு மாற்றப்பட்டது. அப்போதிருந்து உடையார் வம்சத்தினரின் ஆட்சி 1760 வரை தொடர்ந்தது. ஹைதர் அலி அதிகாரத்தைக் கைப்பற்றும்வரை உடையார்களின் ஆட்சி நீடித்தது. ஹைதர் அலியின் தந்தை ஃபதே முகம்மது கோலார் பகுதியின் கோட்டைக் காவற்படைத் தளபதியாக (பௌஜ்தார்) இருந்தார்.
அவரது இறப்புக்குப் பின் ஹைதர் அலி தன் தலைமைப்பண்புகள் மூலம் படையின் உயர்பதவிகளை விரைவாக அடைந்தார். 1755க்குள் அவர் 100 குதிரைப்படை வீரர்களையும் 2000 காலாட்படை வீரர்களையும் நிர்வகிக்கும் அளவுக்கு அதிகாரம் படைத்த பொறுப்பைப் பெற்றிருந்தார்.
மைசூரில் இராணுவத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியை ஒடுக்கினார். மராத்தியர் ஆக்கிரமித்த மைசூர் அரசின் சில பகுதிகளை ஹைதர் மீட்டெடுத்தார். இதற்காக அவர் ‘ஃபதே ஹைதர் பகதூர் (வீரமும் வெற்றியும் கொண்ட சிங்கம்) என்ற பட்டம் பெற்றார்.
1760இல் ஹைதர் ஆங்கிலேயருக்கு எதிராக புதுச்சேரியில் இருந்த பிரெஞ்சுக்காரர்களுடன் கூட்டு சேர்ந்தார். ஆனால் அவர் தனது சொந்த மண்ணில் மராத்தியரால் உருவாக்கப்பட்ட சதித்திட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனினும் ஹைதர் அதை வெற்றிகரமாக முறியடித்தார். அதற்குப் பிறகு அவரே நடைமுறையில் மைசூரின் தளவாயாக இருந்து உண்மையான ஆட்சியாளர் ஆனார்.
1770இல் மைசூர் அரசர் நஞ்சராஜா நஞ்சூட்டிக் கொல்லப்பட்டார். அதில் ஹைதருக்குத் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் கிளம்பியது. இந்த நிகழ்வுக்குப் பிறகு உடையார் வம்ச அரசர்கள் பெயரளவிலான ஆட்சியாளர்களாக ஆயினர். ஹைதரே உண்மையான அரச அதிகாரத்துக்கு உரியவர் ஆனார்.
முதலாம் மைசூர் போர் 1767-69
மூன்றாம் கர்நாடகப் போரில் வங்காளத்திலிருந்து படைகளை வழிநடத்திய கர்னல் ஃபோர்டே 1759இல் மசூலிப்பட்டிணத்தைக் கைப்பற்றினார். இது ஜாலாபத் ஜங் உடனான உடன்படிக்கைக்கு வழிவகுத்தது. அவர் ‘வட சர்க்கார்கள்’ என அறியப்படும் கஞ்சம், விசாகப்பட்டினம், கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் ஆகிய மாவட்டங்களை ஆங்கிலேயருக்கு விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது.
வட சர்க்கார்கள் ஆங்கிலேயர் வசம் ஆனதை முகலாயப் பேரரசர் 1765இல் அலகாபாத் உடன்படிக்கை மூலம் அங்கீகரித்தார். ஆனால் 1766இல் ஆங்கிலேயர் இப்பகுதியைக் கையகப்படுத்தியபோது பிரச்சனை தோன்றியது.
இந்தப் பகுதிகளை ஆங்கிலேயர் கையகப்படுத்த நிஜாம் அலி எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க வேண்டும் என்றும் அதற்குப் பதிலாக அவருக்கு எதிரிகளிடமிருந்து ஆபத்து வரும்போது ஆங்கிலேயர் உதவிக்கு வருவார்கள் என்றும் ஓர் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த வாக்குறுதி மூலம் ஹைதர் அலிக்கு எதிராக நிஜாம் அலிக்கு உதவத் தாங்கள் தயாராக இருப்பதை உணர்த்தினார்கள். ஆங்கிலேயர் பின்னாட்களில் பின்பற்றிய துணைப்படைத்திட்டத்துக்கு இந்நடைமுறை காரணியாக அமைந்தது. நிஜாம் அலி ஆங்கிலேயருடன் உடன்படிக்கை செய்துகொண்டாலும், 1767இல் அவருக்கும் ஹைதர் அலிக்கும் இடையே ஓர் புரிந்துணர்வு உடன்பாடு ஏற்பட்டது. எனவே ஆங்கிலேயர் ஹைதருக்கு எதிராக போரை அறிவித்தார்கள். இது முதலாம் ஆங்கிலேய மைசூர் போர் அல்லது முதலாம் மைசூர் போர் என அறியப்படுகிறது.
பம்பாயிலிருந்து வந்த ஆங்கிலேயரின் ஒரு படை மேற்குக்கடற்கரையின் மங்களூரையும் அதைச் சுற்றியிருந்த பிற பகுதிகளையும் கைப்பற்றியது. ஆனால் ஹைதர் இவற்றை மீட்டெடுத்தார். பெங்களூரைக் கைப்பற்ற நினைத்த ஆங்கிலேயரின் முயற்சி வெற்றி பெறவில்லை.
1768இல் ஹைதர் பாராமஹால் (சேலம் மாவட்டம்) மீது திடீர் தாக்குதல் தொடுத்து, கேப்டன் நிக்சனைத் தோற்கடித்துக் கரூரையும் ஈரோட்டையும் கைப்பற்றினார். இதற்கிடையே ஹைதரின் தளபதி ஃபசலுல்லா கான் மதுரையிலும் திருநெல்வேலியிலும் படையை எந்த எதிர்ப்புமின்றி வழிநடத்திச் சென்றார். ஹைதர் தஞ்சாவூருக்கும் அங்கிருந்து கடலூருக்கும் முன்னேறிச் சென்றார்.
ஆங்கிலேயர் மீதான தாக்குதலை நிறுத்த ஹைதர் விரும்பாவிட்டாலும், மராத்தியர் படையெடுத்து வரக்கூடும் என்ற அச்சுறுத்தல் அவரை ஆங்கிலேயருடன் அமைதி உடன்படிக்கை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளியது.
சென்னை உடன்படிக்கையில் இருந்த நிபந்தனைகள் வருமாறு:
இரு தரப்பும் கைப்பற்றிய பகுதிகளை அவரவரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். கரூர் மட்டும் ஹைதரின் வசம் இருக்கும். தங்களைத் தற்காத்துக்கொள்ள நடைபெறும் போர்களில் இரு தரப்பும் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும். இது மராத்தியருக்கு எதிராக ஆங்கிலேயர் உதவுவதற்கு கடமைப்பட்டவர்கள் என்பதையே குறித்தது.
ஆனால் ஹைதருக்கும் மராத்தியருக்கும் எதிரான சண்டையின்போது தேவையான நேரத்தில் ஆங்கிலேயரின் உதவி கிடைக்காததால் ஹைதர் ஆங்கிலேயருக்கு எதிராகத் திரும்பினார்.
இரண்டாம் மைசூர் போரும் ஹதரும் 1780-84
பிரெஞ்சுப்படையின் ஆதரவுடன் நிஜாம் அலியும் மராத்தியரும் கைகோத்துச் செயல்பட்ட போக்கு ஆங்கிலேயருக்கு நெருக்கடியை அதிகப்படுத்தியது.
ஹைதர் அலி இந்தச் சூழலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள கர்நாடகத்திற்குப் படையெடுத்தார்.
ஹெக்டர் மன்றோ தலைமையிலான படையுடன் சேர்ந்து செயல்பட வேண்டிய கர்னல் பெய்லி ஹைதரின் திடீர்த்தாக்குதலில் கடுமையாகக் காயமுற்றார். இது மன்றோவை சென்னை நோக்கிச் செல்ல வைத்தது. ஹைதர் ஆற்காட்டைக் கைப்பற்றினார் (1780).
இந்நிலையில் சென்னை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வந்தவாசிப் போரில் வெற்றிபெற்ற அயர்கூட் மதராஸைக் கடல்வழியே முற்றுகையிட வங்காளத்திலிருந்து அனுப்பப்பட்டார். ஹைதருக்கு எதிராக வெற்றியை ஈட்டிய கூட் புதுச்சேரியை நோக்கி நகர்ந்தார்.
இதற்கிடையே ஹைதர் தஞ்சாவூர் அரசைத் தன் பிடிக்குள் கொண்டுவந்தார். கூட் பரங்கிப்பேட்டையை (Porto Novo) அடைந்து, ஹைதருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் வெற்றி பெற்றார். ஹைதர் அங்கு நடைபெற்ற மோதலில் ஆங்கிலேயரிடம் பிடிபடுவதிலிருந்து நூலிழையில்
தப்பினார்.
ஹைதரின் மகன் திப்பு சுல்தான் கர்னல் ப்ரெய்த்வெயிட்டை கும்பகோணம் அருகே தோற்கடித்துச் சிறைப்பிடித்தார். மைசூர் சுல்தானின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக ஜெனரல் மேத்யூஸ் மங்களூரை நோக்கி ஒரு படையெடுப்பை மேற்கொண்டார். இந்த நடவடிக்கை ஆங்கிலேயர் எதிர்பார்த்தபடி திப்பு சுல்தானைக் கர்நாடகத்தை விட்டு மேற்குக்கடற்கரையை நோக்கி நகர வைத்தது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஹைதரின் மரணம் (1782), கர்னல் லேங் கரூரையும் திண்டுக்கல்லையும் கைப்பற்றினார். கர்னல் ஃபுல்லர்ட்டன் பாலக்காட்டையும் கோயம்புத்தூரையும் கைப்பற்றினார். அடுத்ததாக ஸ்ரீரங்கப்பட்டணத்தைக் கைப்பற்றும் நோக்கத்துடன் அவர் முன்னேறி வந்தபோது திப்பு சுல்தான் சமாதானத்துக்கு விருப்பம் தெரிவித்து, முற்றுகையைத் தவிர்த்தார்.
1784 மார்ச் மாதத்தில் மங்களூர் உடன்படிக்கை கையெழுத்தானது. அதன்படி, இரு தரப்பினரும் அதுவரை வென்ற பகுதிகளைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் போரில் கைதானவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
மூன்றாம் மைசூர் போர் 1790-92
இடைப்பட்ட காலத்தில் காரன்வாலிஸ் கவர்னர் ஜெனரல் ஆகப் பொறுப்பேற்றார். அவர் திப்பு சுல்தானைப் பழிவாங்கும் விதத்தில் நடந்துகொண்டார்.
தெற்கில் இரு மிகப்பெரும் சக்திகளாக விளங்கிய ஹைதராபாத் நிஜாமும் மராத்தியரின் கூட்டமைப்பும் ஆங்கிலேயரின் கூட்டாளிகளாக இதில் செயல்பட்டார்கள். திப்புவுடனான போருக்குத் தேவைப்பட்ட நிதியாதாரங்களையும் கூடவே தன் படைகளையும் ஹைதராபாத் நிஜாம் ஆங்கிலேயருக்கு வழங்கினார்.
1782 முதல் ஆங்கிலேய- மராத்தியப் போருக்குப் பின் ஆங்கிலேயருடன் சால்பை உடன்படிக்கை செய்துகொண்ட மராத்தியர் ஆங்கிலேயரை ஆதரித்தார்கள். ஆங்கிலேயரின் கை ஓங்கியது.
திப்பு கான்ஸ்டாண்டிநோபிளுக்கும் 1787இல் பாரிஸுக்கும் தூதுக்குழுவை அனுப்பினார். ஆங்கிலேயருக்கு எதிராகத் தன்னை வலுப்படுத்திக் கொள்வதற்காகத் திப்பு இந்த இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டார். பிரெஞ்சு அரசர் பதினாறாம் லூயி தூதுக்குழுவை நட்புறவுடன் நடத்தினாலும், திப்பு எதிர்பார்த்த ஆதரவு குறித்து வெற்று வாக்குறுதியையே அளித்தார்.
பிரிட்டனுடன் நட்பு பாராட்டிய திருவிதாங்கூர் மீதான திப்புவின் தாக்குதலும் கொடுங்களூரைக் கைப்பற்றியதும் கம்பெனி அரசுடனான போருக்கான அறிவிப்பாகவே எடுத்துக்கொள்ளப்பட்டன. இவ்வாறு மூன்றாம் ஆங்கிலேய-மைசூர் போர் தொடங்கியது.
கர்னல் ஹார்ட்லி திப்புவின் தளபதி ஹுசைன் அலியைக் கள்ளிக்கோட்டையில் தோற்கடித்தார். இதற்குப் பதிலடியாகத் திப்பு திருவண்ணாமலையைக் கைப்பற்றினார். புதுச்சேரி பிரெஞ்சு ஆளுநரின் ஆதரவைப் பெறுவதற்குத் திப்பு எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை.
காரன்வாலிஸ் தானே வேலூரிலிருந்து படையெடுத்து வந்து, பெங்களூரை அடைந்தார். வழியில் அவர் திப்புவை எதிர்கொள்ள நேர்ந்தது. ஸ்ரீரங்கப்பட்டணம் அருகே திப்பு தோற்கடிக்கப்பட்டார். படையெடுப்பின்போது தேவைப்படும் பொருட்களின் பற்றாக்குறையால் காரன்வாலிஸ் பின்வாங்க வேண்டியிருந்தது. இந்தத் தருணத்தில் மராத்தியர் ஆங்கிலேயருக்குத் தேவையான பொருட்களை வழங்கினார்கள். கூடுதல் வலிமை பெற்ற ஆங்கிலேயப்படை ஸ்ரீரங்கப்பட்டணத்தை முற்றுகையிட்டது. அதன் கடுமையான தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் திப்பு அமைதி உடன்படிக்கைக்கு அழைப்பு விடுத்தார். உடன்படிக்கையில் கார்ன்வாலிஸ் விதித்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டார்.
ஸ்ரீரங்கப்பட்டணம் உடன்படிக்கையின்படி, திப்பு அவருடைய ஆட்சிப்பகுதிகளில் பாதி இடங்களை ஆங்கிலேயருக்குக் கொடுக்க வேண்டும்; போர் இழப்பீடாக மூன்று கோடி ரூபாய் அளிக்க வேண்டும்; அவருடைய மகன்களில் இருவரைப் பிணைக்கைதிகளாக அனுப்பி வைக்க வேண்டும்.
கூட்டணியாளரிடையே திப்புவிடமிருந்து பெறப்பட்ட பகுதிகளும் இழப்பீட்டுத்தொகையும் சமமாகப் பகிர்ந்துகொள்ளப்பட்டன. ஆங்கிலேயர் மலபார், திண்டுக்கல், பாராமஹால் ஆகிய பகுதிகளைப் பெற்றார்கள். திப்பு குடகுப் பகுதியை இழந்தார். அதன் அரசர் ஆங்கிலேயருக்குக் கீழ்ப்படிய வேண்டிய சிற்றரசர் ஆனார். திப்புவின் அதிகாரம் பெருமளவுக்குக் குறைக்கப்பட்டது.
சென்னையில் பிணைக்கைதிகளாகயிருந்த திப்புவின் மகன்கள் அனைத்து நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்ட பிறகு ஸ்ரீரங்கப்பட்டணத்துக்கு 1794 ஆம் ஆண்டு மே 29 அன்று திருப்பியனுப்பி வைக்கப்பட்டார்கள். இந்த உடன்படிக்கை மூலம் ஏற்பட்ட அவமானத்தையும் பொருளாதார இழப்பையும் திப்புவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
மைசூர் அரசர் ஒன்பதாம் சாமராஜ் 1796இல் இறந்தார். அடுத்த அரசரை நியமிக்கும் முறையான வழக்கத்தைத் திப்பு பின்பற்றவில்லை. அவர் இந்தத் தீர்மானத்துக்கு வந்த அதே நேரத்தில், பிரெஞ்சு காலனி ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த மொரீஷியஸின் கவர்னர் மாலரிக் ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.
பிரான்ஸிடமிருந்து உதவி கிடைத்த பிறகு திப்பு ஆங்கிலேயர் மீதான போர் குறித்து அறிவிப்பார் என்பதே மாலரிக்கின் அறிவிப்பாகும். திப்பு 1798 ஜூலையில் பிரான்சு ஆட்சியை நிர்வகித்த இயக்குநரகத்துடனும் அதற்குப் பிறகு அங்கு ஆட்சியைப் பிடித்த நெப்போலியனுடனும் மேற்கொண்ட கடிதத் தொடர்புகள், அவர் வெல்லெஸ்லியுடனான கடிதத்தொடர்பில் காட்டிய நழுவல் ஆகியவை வெல்லெஸ்லியை மீண்டும் திப்புவுக்கு எதிரான போரை அறிவிக்கச் செய்தது.
நான்காம் மைசூர் போர் 1799
திப்பு தனது படையையும் நிதியாதாரங்களையும் வலுப்படுத்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். 1796இல் பாரிஸுக்கு மீண்டும் தூதர்களை அனுப்பினார். 1797இல் வருகை புரிந்த பிரெஞ்சுத் தூதுக்குழுவானது மொரிஷியஸிலிருந்து பிரெஞ்சு ஆதரவு கொடுக்கப்படும் என உறுதியளித்தது.
பிரான்சில் இருப்பதைப் போல ஸ்ரீரங்கப்பட்டணத்திலும் ஜேக்கோபியர் கழகம் தொடங்கப்பட்டது. மைசூர் சுல்தானுக்கும் பிரெஞ்சு அரசுக்குமான நல்லுறவைத் தெரிவிக்கும் விதத்தில் பிரெஞ்சு குடியரசின் கொடி ஏற்றப்பட்டது.
பிரான்சுடன் திப்பு ஏற்படுத்திக்கொண்ட கூட்டணியால் கோபமுற்ற புதிய கவர்னர் ஜெனரலான வெல்லெஸ்லி துணைப்படைத்திட்டத்தின் கீழ் மைசூரில் ஆங்கிலேயப் படை ஒன்றை நிரந்தரமாக வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தினார். திப்பு இதை ஏற்கவில்லை.
ஆங்கிலேயர் நான்காம் ஆங்கிலேய-மைசூர் போரை 1799இல் அறிவித்தனர். ஜெனரல் டேவிட் பெய்ர்டு ஸ்ரீரங்கப்பட்டணத்தின் மீது திடீர் தாக்குதல் தொடுத்துக் கைப்பற்றினார். அமைதி உடன்படிக்கைக்கான திப்புவின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. இறுதி மோதலில் காயமுற்ற திப்பு ஓர் ஐரோப்பியப் படைவீரனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
திப்புவை அகற்றியதும் உடையார் வம்சத்தினரை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியதும் தென்னிந்தியாவில் கம்பெனி ஆட்சியின் உண்மையான தொடக்கமாக
அமைந்தன. திப்புவின் மகன்கள் முதலில் வேலூரில் சிறைவைக்கப்பட்டார்கள். 1806இல் வேலூர் கிளர்ச்சிக்குப் பிறகு கல்கத்தாவுக்கு மாற்றப்பட்டார்கள். இவ்வாறு ஆங்கிலேயருக்கு எதிரான மைசூர் சுல்தான்களின் வீரம் செறிந்த மோதல்கள் முடிவுக்கு வந்தன.
டெல்லி சுல்தானியர்காலப் பண்பாடு
கி.பி.(பொ.ஆ)1206 முதல் கி.பி1526 வரை ஐந்து மரபினர் ஆட்சி செய்தனர். இவர்களுடைய ஆட்சியில் சமயம் சார்ந்த ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது. சமயமும் அரசியலும் இவ்வாட்சி என்ற நாணயத்தின் இருபக்கங்களாகும். சுல்தான் என்பது, முஸ்லீம் ஆட்சியாளர்கள் சூட்டிக் கொண்ட பட்டப்பெயராகும். இவர்கள் பெயரளவுக்குக் கலிபாவிற்குக் கட்டுப்பட்ட அரசர்களாகத் திகழ்ந்தனர்.
சான்றுகள்
அல்பெருனி எழுதிய தாரிக்-உல்.ஹிந்து, ஹாசன் நிசாமி எழுதிய தாஜ் -உல்-மாசீர், மின்ஹஜ் – சிராஜ் – உஸ் எழுதிய தபகத் -இ-நாசீரி, அமீர்குஸ்ரு எழுதிய ‘துக்ளக் நாமா’ போன்ற நூல்கள் அக்கால மன்னர்கள், மக்கள் வாழ்க்கை நிலை, பண்பாடு போன்றவை பற்றி அறிய உதவுகின்றன.
இபின் பதூதாவின் பயணக் குறிப்புகள், டெல்லி மற்றும் மதுரையில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை நிலையினை விளக்குகிறது. அப்துர் ரசாக் தன்னுடைய
பயணக் குறிப்பில் தென்னிந்திய மக்களின் வாழ்க்கை நிலை, அவர்களின் பண்பாட்டு நிலை ஆகியவற்றைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
மேலும் மார்க்கோபோலோ, நிக்கோலோ கோண்டி, பார்போசா, பயஸ் ஆகியோரின் குறிப்புகளும் குறிப்பிடத்தக்கவையாகும்.
ஆட்சிமுறை
மைய அரசு
மைய அரசு அதிகாரக் குவியல் முறையில் அமைக்கப்பட்டதாகும். மைய அரசின் தலைவர் சுல்தான் ஆவார். இவரிடம் சட்டம், நீதித்துறை, ராணுவத் தலைமை போன்ற அதிகாரங்கள் இருந்தன.
ஆட்சிப் பிரிவுகள்
இக்தாஎன்பது ஆட்சியில் முக்கிய பிரிவாக இருந்தது. இக்தா ஷிக்குகளாக(மாவட்டம்) பிரிக்கப்பட்டன. ஷிக்குகளின் தலைவர் ஷிக்தார் ஆவார். ஷிக்குகளுக்கு அடுத்த பிரிவு பர்கானா(வட்டம்) ஆகும். பர்கானாவிற்கு அடுத்த நிலையில் கிராமங்கள் இருந்தன. இராணுவத்துறை அதிகாரி தன் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் சட்டம், ஒழுங்கை நிலை நிறுத்துதல் இவரது கடமையாகும்.
அமைச்சர்கள்
சுல்தான் தன் கடமைகளை நிறைவேற்றுவதற்காகவும், அவருக்குத் தக்க ஆலோசனைகள் வழங்கவும் அமைச்சர்கள்துணைபுரிந்தனர்.
1. நயிப் -சுல்தான் – சுல்தானுக்கு அடுத்தவர். ஆனால், எல்லா உரிமைகளையும் பெற்றவர்
2. வாசீர்- நிதி அமைச்சர்
3. அரிஸ் -இ.மாமலிக் – தலைமைத் தளபதி
4. திவான் இன்ஷா – செய்தி மற்றும் ஆவணக் காப்பகம்
5. திவானி ரிசாலத் -சமயத்துறை
6. தலைமை காஸி – நீதித் துறைத் தலைவர்
7. பாரித்-ஐ-முமலிக் – உளவுத்துறை
இவர்களின்றி வேறுபல அதிகாரிகளும் சுல்தானுக்கு உதவியாக இருந்தனர்.
சமுதாயம்
முகமது கோரியோடு வந்த துருக்கியர் இந்தியாவில் குடியேறினர். அவர்களைத் தொடர்ந்து குத்புதீன் ஐபெக்கின் படையெடுப்பின்போது வந்த துருக்கியர்
குர்தியார், சொராசனர்கள், கில்ஜிகள் போன்றோர் இந்தியாவில் தங்கினர்.மங்கோலிய படையெடுப்பின்போது, பலர் இந்தியாவில் தங்கினர். இஸ்லாமிய மதமாற்றமடைந்த இவர்கள் புதிய முஸ்லீம்கள் என்றும் பார்சியர் என்றும் அழைக்கப்பட்டனர். துருக்கியர். அரேபியர்கள், அபிசீனியர்கள், எகிப்தியர்கள்
ஆகியோர் ஆட்சி வகுப்பினராக இருந்தனர். கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் மூன்று வகையான ஆட்சி வகுப்பைச் சேர்ந்த பிரபுக்கள் இருந்தனர்.
அவர்கள் 1)கான்கள் 2) மாலிக்குகள் 3)அமீர்கள்
பெண்கள் நிலை
அரச குடும்பத்துப் பெண்களும், உயர் வகுப்பினப் பெண்டிரும் கல்விகற்று, சில அரச சலுகைகளுடன் செல்வாக்கு பெற்றிருந்தனர். இஸ்லாமியப் பெண்கள் பர்தா முறையைப் பின்பற்றினர். சமுதாயத்தில் கீழ்நிலை மக்கள் கிராமங்களில் கணவருக்குக் கட்டுப்பட்டும் விவசாயத் தொழில்களுக்கு உதவியாகவும் இருந்தனர். பல பெண்கள் குடிசைத் தொழில்களில் சிறப்புற்றிருந்தனர்.
பொருளாதாரம்
சுல்தான்களின் ஆட்சிக் காலத்தில் நான்கு பிரிவுகளாக நிலம் பிரிக்கப்பட்டது. அவை:
இக்தா (Igta) – இந்நிலங்கள் அதிகாரிகளுக்கு ஊதியத்திற்குப் பதிலாக வழங்கப்பட்டன
காலிசா(Kalisa) – அரச நிலங்கள் (மைய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள நிலங்கள்)
மரபு வழி ஜமீன்தார் நிலங்கள் – சுல்தானுக்குக் கட்டுப்பட்ட நிலங்கள்.
இனாம் – சமய அறக்கட்டளைகளுக்கு வழங்கப்பட்ட நிலங்கள்
அலாவுதீன் கில்ஜியின் அங்காடி சீர்திருத்தம்
அங்காடி விற்பனையாளர்கள், எடை குறைவாக விற்றாலோ, அதிக விலைக்கு விற்றாலோ கடுமையாக தண்டிக்கப்பட்டனர். அனைத்து அங்காடிகளிலும் ஒரே விலையில் கலப்படமற்ற பொருள்கள் நியாயமான முறையில் விற்பனை செய்யப்பட்டன. சகானா-இ-மண்டி அங்காடிகளை நிருவகித்தார்.
அலாவுதின் கில்ஜி நில மேலாண்மை, நில அளவை மற்றும் நிலவரி வசூல் முறையை ஒழுங்குபடுத்தினார். முகமதுபின்துக்ளக் நிலவரியை அதிகமாக உயர்த்தினார். பெரோஸ் துக்ளக் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கி, விவசாய வளர்ச்சிக்கான முயற்சிகளை மேற்கொண்டார்.
தொழில்கள்
வேளாண்மை முக்கிய தொழிலாக கருதப்பட்டாலும் பிற தொழில்களும் வளர்ச்சியடைந்தன. விலையுயர்ந்த கற்கள் உடைய ஆபரணங்கள் செய்தல், நெசவு, சாயம் தோய்த்தல், காலிக்கோ அச்சிடுதல் போன்ற துணி சார்ந்த தொழில்கள், செம்பு, பித்தளை, இரும்பு போன்ற உலோகம் சம்பந்தப்பட்ட தொழில்கள், தோல்தொழில்கள், கப்பல் கட்டும் தொழில் போன்ற தொழில்களும் வளர்ச்சியடைந்தன.
உள்நாட்டு, வெளிநாட்டு வாணிகம்
உள்நாட்டு வர்த்தகம் சந்தைகள் மூலம் நடைபெற்றது. அரிசி, சர்க்கரை, வெண்ணெய் போன்ற பொருட்களைச் சோழ மண்டலத்துக்கு அனுப்பினர். ஆக்ரா முக்கிய வர்த்தக மையமாக விளங்கியது. வெளிநாட்டு வாணிகம் வடமேற்குக் கணவாய்கள் மூலம் நடைபெற்றது. லாகூரும், முல்தானும் வாணிக மையங்களாக திகழ்ந்தன. கடல்வழி வாணிகத்தின் மூலம் ஆக்ராவிலிருந்த பல பொருட்கள் உலகின் பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன. காஷ்மீரிலிருந்து, குங்குமப்பூ, சால்வை, ஆக்ராவிலிருந்து நீலச்சாயம் போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன. அலாவுதீன் கில்ஜி விவசாய, வர்த்தகக்கொள்கை மூலம் விவசாயத்தையும், வர்த்தகத்தையும் நவீனமாக்கிச் சந்தைப் பொருளாதாரத்தை உருவாக்கினார்.
சமயம்
இஸ்லாமிய சமயச் சட்டப்படி இந்துக்கள் மாற்று சமயத்தவர்கள், இந்துக்கள் மீது ஜெசியா என்ற வரி விதிக்கப்பட்டது. (சமயவரி) இதனால் இந்துக்கள் தனிமைப் படுத்தப்பட்டனர். பெரோஸ்துக்ளக் -சிக்கந்தர்லோடி போன்றோர் மதமாற்றத்தை வெகுவாக ஊக்குவித்தனர்.
இலக்கியம்
டெல்லிசுல்தான்கள் தத்துவம்,நாடகம்,மருத்துவம், சோதிடம் பற்றிய நூல்கள் எழுதப்படுவதை ஆதரித்தனர். இந்தி வங்காளம், மராத்தி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகளில் பிராந்திய இலக்கியங்களும் இயற்றப்பட்டன.
அமிர்குஸ்ரு
அபுல் ஹாசன் யாமினித் குஸ்ரு என்ற இயற்பெயர் கொண்ட இவர் மிகச்சிறந்த கவிஞராகவும் இசை வல்லுநராகவும் திகழ்ந்தார். இவர் பாரசீக மொழிக் கவிஞராகத் திகழ்ந்தார். அலாவுதீன் கில்ஜி பற்றி எழுதிய தாரிக்-இ-அலாய் என்னும் நூல் மிகச் சிறந்த நூலாகும். இந்நூல் அலாவுதீனைப் பற்றிய செய்திகள், அங்காடிச் சீர்திருத்தங்கள், நிருவாகத் திறன், மக்களின் வாழ்க்கைநிலை பற்றிக் குறிப்பிடுகின்றது. இவர் எழுதிய பாரசீக மொழி கவிதை ‘கஜல்’ என்ற புதிய இசை தொடங்குவதற்கு வழிகோலியது.
இபின் பதூதா
அபு அப்துல்லா முகமது இபின்பதூதா என்ற இயற்பெயர்கொண்ட இவர், முகமது பின் துக்ளக் காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார். இவருடைய பயணக் குறிப்புகள் ‘ரெகிலா’ என்று அழைக்கப்படுகின்றன. இக்குறிப்புகள் முகமது பின் துக்ளக் கால அரசியல் சமூக, பொருளாதார மற்றும் சமயநிலை பற்றிக் குறிப்பிடுகின்றன. தினமும் சிலர் கைகால்களில் விலங்கிடப்பட்டு அவைக்குக் கொண்டு வரப்படுதல், துன்புறுத்தப்படுதல் போன்றவை நடைபெற்றதாக இவர் குறிப்பிடுகிறார். இந்தியாவில் காணப்பட்ட பல்வேறு பழக்கங்கள், புது வழக்காறுகள் பற்றியும் குறிப்பிடுகிறார். சதி என்னும் உடன் கட்டை ஏறும் பழக்கம் இந்துக்களிடையே காணப்பட்டதை விளக்குகிறார். கடிதங்களை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு சென்ற ஓட்டக்காரர்களைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.
கலை கட்டடக்கலை
இந்திய இஸ்லாமியக் கலையின் டெல்லிசுல்தானிய ஒருங்கிணைப்பே கலை கட்டடக்கலை என்று பெர்கூசன் குறிப்பிடுகின்றார். இந்தியக் கலையில் இஸ்லாமிய கலை கலந்தமைக்குப் பல காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவையாவன:
- துருக்கியர்கள் இந்தியக் கைவினைஞர்களையும் தச்சர்களையும் பயன்படுத்தினர்
- இந்துக்கள் மற்றும் சமணர்களின் கோயில்களை அழித்து அவற்றின் கட்டிடங்களின் மீது பல கட்டடங்களைக் கட்டினர்.
- சில இந்துக்கோயில்களை மசூதிகளாக மாற்றினர். எனவே, சுல்தான்கள் கலைபாணியில் இந்தியக் கலைபாணியைக் காணமுடிகிறது.
குதுப்மினார்
பள்ளிவாயில்களில் தொழுகைக்குக் கூவி அழைப்பவர்களுக்கு மூயாசின் என்று பெயர். இவர்கள் பள்ளிவாயில் அருகில் இருந்த உயர்ந்த கோபுரங்களிலிருந்து கூவி அழைத்தனர். இந்த உயர்ந்த கோபுரங்களை மினார் என்பர். இக்கட்டடத்திற்குக் கலையழகு கூட்ட வாயிலில் இருமருங்கிலும் இருகோபுரங்கள் அமைத்தனர். டெல்லியில் உள்ள குதுப்மினார் குத்புதீன் ஐபக்கால் கட்டத் தொடங்கப்பட்டு இல்துமிஷ் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. இதன் உயரம் 232 அடியாகும். இது சிவந்த மணற்கற்களால் கட்டப்பட்டது. இதில் குரானிலுள்ள இறைவசனங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
யுனஸ்கோவால் கி.பி.(பொ.ஆ.) 1993 -இல் இது உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.
அலாய் தர்வாசா
அலாவுதீன் கில்ஜி காலத்தில் கட்டப்பட்டவையாகும். இது செல்சக் துருக்கியர் கலைபாணியில் கட்டப்பட்டவை யாகும். மிக உயரமான மேடையில் இருந்து
செம்மணற் கற்களாலும், வெள்ளைச் சலவைக் கற்களாலும் உருவாக்கப்பட்ட இக்கட்டடம் அருகில் காணும்போது வண்ணங்களின் கோப்புகளாகக் காணப்படுகின்றது.
முகமது பின் துக்ளக்கிற்குப் பின் வந்த பிரோஸ் துக்ளக் கட்டடப்பிரியர், கட்டடக்கலைவேந்தர். இவர் காலத்தில் 1200 மலர்வனங்களை டில்லியைச் சுற்றி அமைத்தார். இவரை பூங்கா பிரியர், நீர்ப்பாசனத்தின் தந்தை என்றழைப்பர். பிரோஷா துக்ளக் பிரோஷாபாத் என்னும் நகரை அமைத்தார். இந்நகருக்குள் பிரோஸ் ஷா கோட்லா என்னும் அரண்மனைக் கோட்டை உள்ளது.
இந்தியப்பண்பாட்டிற்கு டெல்லி சுல்தானியர்கள் பங்களிப்பு
அமிர்குஸ்ரு கவாலி என்ற இசை பாணியில் சித்தார், காயல் போன்ற இசைக்கருவிகளைக் கண்டறிந்தார் இந்தோ – அரேபிய சங்கீதக் கலைகள் ஒன்றுபட்டு இந்துஸ்தானி என்ற சங்கீதமாகப் புது வடிவம் பெற்றது.
டெல்லி சுல்தான் காலத்தில் கோரா, சானம் போன்ற புதிய ராகங்களையும், இந்து மற்றும் ஈரானிய முறைகளை ஒன்றிணைத்து குவாலிஸ் என்ற புதிய வகை மெல்லிசைகளும் உருவாக்கப்பட்டன.
பிரோஸ் துக்ளக் ஆட்சிக் காலத்தில் ராகதர்பன் என்ற இந்திய இசை நூல் பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டது.
இந்தியாவில் திராவிட கலைபாணி வளர்ச்சி குறைந்து இந்தோ – அராபிக் கலை வளர்ச்சி பெற்றது.
அலாவுத்தின் கில்ஜியின் காலத்தில் சக்கரா(Chahra) என்ற பட்டியல் முறையும், தாக் என்ற குதிரைகளுக்குச் சூடுபோடும் முறை (அரச விலங்குகள் என்பதற்கு அடையாளமாக) அங்காடி சீர்திருத்தமும், தற்கால உணவுத் துறை அதிகாரி பணியிடங்களுக்கு மிகச் சிறந்த கொடையாகும்.
வேளாண்மை முறையை மேம்படுத்த, முகம்மது பின் துக்ளக் ஏற்படுத்திய துறை திவான்-இ-கோஹி ஆகும்.
டெல்லியில் உள்ள பிரோஷ்ஷா கோட்லா மைதானம், ஆக்ரா நகரம் மற்றும் அழகிய பூங்காக்கள் இவர்கள் காலத்திற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
பிரோஷ் துக்ளக் ஆட்சிகாலத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம் உருவாக்கப்பட்டது.
பிரோஷ் துக்ளக் காலத்தில் அனாதை மற்றும் கைம்பெண்களுக்கு நல வாழ்வுத் துறை (திவானி கெய்ரத்) உருவாக்கப்பட்டது.
டெல்லி சுல்தானியர் ஆட்சியில் பெண் அரசாள்வது (ரசியா சுல்தானா) இந்து, இஸ்லாமிய ஆட்சி மரபில் மாற்றத்தை உருவாக்கின.
டெல்லி சுல்தானியர்கள் வெளியிட்ட நாணயங்கள் பிற்காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தன.
