Blog

சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கியம்

Class 79 தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள்

சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கியம்

தமிழ் செவ்வியல் இலக்கியம்

தமிழ் செவ்வியல் இலக்கியத் தொகுப்பானது தொல்காப்பியம், எட்டுத் தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

தமிழின் மிகப் பழமையான இலக்கண நூலான தொல்காப்பியம் கவிதையியலைப் பற்றி மட்டும் பேசவில்லை. அக்காலத்து சமூகப் பண்பாட்டையும் பேசுகிறது. சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் ஐம்பெரும் காப்பியங்களும் (பொ.ஆ. நான்காம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை) இதற்கடுத்த காலச் சமூகப் பண்பாட்டுச் சூழலைச் சார்ந்தவையாகும்.

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஏறத்தாழ 2400 பாடல்கள் கொண்ட இலக்கியக் கருவூலமாகும். மூன்று முதல் எண்ணூறு அடி அளவு கொண்ட இப்பாடல்கள் பாணர்களாலும் புலவர்களாலும் இயற்றப்பட்டவை.

எட்டுத்தொகையாவன: 1. நற்றிணை 2. குறுந்தொகை 3. ஐங்குறுநூறு 4. பதிற்றுப்பத்து 5. பரிபாடல் 6. கலித்தொகை 7. அகநானூறு 8. புறநானூறு

பத்துப்பாட்டாவது: 1. திருமுருகாற்றுப்படை 2. பொருநராற்றுப்படை 3. சிறுபாணாற்றுப்படை 4. பெரும்பாணாற்றுப்படை 5. முல்லைப்பாட்டு 6. மதுரைக் காஞ்சி 7. நெடுநல்வாடை 8. குறிஞ்சிப்பாட்டு 9. பட்டினப்பாலை 10. மலைபடுகடாம்.

சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பெரும்பாலும் நீதி பற்றியும் ஒழுக்க நெறிமுறைகளைப் பற்றியும் பேசுவனவாகும். திருக்குறளும் நாலடியாரும் இதில் முதன்மையானவை. முதன்மையான காப்பியங்களான சிலப்பதிகாரமும் மணிமேகலையும் பண்பாடு மற்றும் மத வரலாற்றுக்கு சிறந்த சான்றுகளாகப் பயன்படுபவை.

சங்க காலப் பெண்பாற் புலவர்

சங்கப் பாடல்களின் தொகுப்பிற்கு பங்களித்த 450க்கும் மேற்பட்ட புலவர்களில் முப்பது பெண்பாற் புலவரும் அடங்குவர். அவர்கள் 150க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளனர். அவர்களுள் ஒளவையார், அல்லூர் நன்முல்லையார், காக்கைப்பாடினியார், காவற்பெண்டு, நல்வெளியார். ஒக்கூர் மாசாத்தியார், பாரிமகளிர் ஆகியோர் மிகமுக்கியப் பெண்பாற் புலவர்களாவர்.

தமிழ் திணைப் பகுதிகளில் சமூக உருவாக்கம்

குறிஞ்சி மலையும் மலை சார்ந்த பகுதியுமாகும். இங்கு வேட்டையாடுதலும், உணவு சேகரித்தலும் வழக்கமாக இருந்தது.

முல்லை காடும் காடு சார்ந்த இடமுமான இங்கு, கால்நடை மேய்ப்பதும், அத்துடன் மாற்றிட வேளாண்மை செய்வதும் தொழிலாக இருந்தது.

மருதம் வயலும் வயல் சாந்த இடமுமான இங்கு நீர்பாசனத்தின் மூலம் கலப்பைகளைப் பயன்படுத்தி வேளாண்மை செய்வது தொழிலாகும்.

நெய்தல் கடலும் கடல் சார்ந்த இடமுமான இங்கு மீன்பிடித்தலும் உப்பு உற்பத்தியுமே முக்கியத் தொழில்களாகும்.

பாலை மணலும் மணல் சார்ந்த வறண்ட நிலப்பகுதியான இங்கு வேளாண்மை சாத்தியமில்லை என்பதால் மக்கள் கால்நடைத் கொள்ளையடிப்பதையும்                           திருட்டையும் தொழிலாகக் கொண்டனர்.

தமிழ்நாட்டில் தோன்றிய பக்திஇயக்கத்தின் வெளிப்பாடுகள் ஆழ்வார்களும் நாயன்மார்களும் இயற்றிய பாடல்களில் மிளிர்ந்தன. வைணவ ஆழ்வார்களின் பாடல்கள் தொகுக்கப்பட்டு நாலாயிர திவ்வியப்பிரபந்தம் எனப் போற்றப்பட்டது. சைவ இலக்கியங்கள் பன்னிரு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன.

அப்பர் (திருநாவுக்கரசர்), சம்பந்தர் (திருஞானசம்பந்தர்), சுந்தரர் ஆகியோர் இயற்றிய தேவாரம், மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம் ஆகியவைமுக்கிய நூல்களாகும். அவை இன்றுவரை புனிதமான இலக்கியங்களாகப் போற்றப்படுகின்றன. பிற்காலத்தில் சேக்கிழாரால் எழுதப்பட்ட பெரியபுராணமும் பல வரலாற்றுச் செய்திகளை முன்வைக்கின்றது. முதலாம் மகேந்திரவர்மன் எழுதிய மத்தவிலாச பிரகாசனம் பல்லவர்கால வரலாற்றிற்கு ஒரு முக்கியச் சான்றாகும்.

தமிழ் பக்தி இயக்கமும் இலக்கியமும்

தேவாரம், நாலாயிரத்திவ்வியபிரபந்தம், திருத்தொண்டர்தொகை, மாணிக்கவாசகரின் திருவாசகம், பெரியபுராணம் முதலான பக்தி இயக்கப் பாடல்களே பக்தி இயக்க வரலாற்றிற்கான முக்கியச் சான்றுகளாகும். கோவில்களும் கோவில் கல்வெட்டுகளும் சுற்றுப்பிரகாரங்களிலுள்ள சிறிய சிற்பங்கள், ஓவியங்கள் ஆகியவையும் சான்றுகளாகப் பயன்படுகின்றன.

ஆழ்வார்கள், நாயன்மார்கள்
ஆழ்வார்கள்
ஆழ்வார்கள் வைணவப் பாடல்களை இயற்றினர். ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இப்பாடல்கள் அனைத்தையும் (நான்காயிரம்) நாலாயிர திவ்விய பிரபந்தமாக நாதமுனி தொகுத்தார். நாதமுனி திருவரங்கம் ரங்கநாதர் கோவிலில் அர்ச்சகராகப் பணியாற்றியவர்.

ஒன்பதாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபனின் ஆட்சிக் காலத்தில் திருவில்லிபுத்தூரில் வாழ்ந்தவர் பெரியாழ்வார். கண்ணனின் குழந்தைப் பருவமே அவருடைய பாடல்களின் கருவாயிருந்தது. ஆண்டாள் பாடல்களின் பாட்டுடைத் தலைவனும் கண்ணனே. ஆண்டாளின் பாடல்கள் அவர் கண்ணனின் மீது கொண்டிருந்த காதலை வெளிப்படுத்துகின்றன.

நம்மாழ்வார் ஆழ்வார்களில் தலைசிறந்தவராகக் கருதப்படுகிறார். அவர் இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குருகூரைச் (ஆழ்வார்திருநகரி) சேர்ந்தவர். திருவாய்மொழி உட்பட நான்கு நூல்களை அவர் எழுதியுள்ளார். அவருடைய பாடல்கள் நான்கு வேதங்களின் சாரத்தை வடித்தெடுத்து எழுதப்பட்டதென்பது வைணவ நம்பிக்கை. பன்னிரண்டாம் நூற்றாண்டு முதலாக வைணவப் பாடல்களுக்கு விரிவான புலமையுடன் கூடிய விளக்கவுரைகள் எழுதப்பட்டன.

நாயன்மார்கள்
சைவக் கவிஞர்களில் முக்கியமானவர்கள் திருநாவுக்கரசர் (அப்பர்), திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆவர். பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் நம்பியாண்டார்நம்பி இவர்களின் பாடல்களைத் திருமுறைகளாகத் தொகுத்தார்.

தேவாரம் என்றறியப்படும் முதல் ஏழு நூல்களில் உள்ள பாடல்கள் சம்பந்தர் (1-3) அப்பர் (4-6) சுந்தரர் (7) ஆகியோரால் இயற்றப்பட்டனவாகும். எட்டாம் திருமுறை மாணிக்கவாசகரின் பாடல்களைக் கொண்டதாகும். சேக்கிழாரின் பெரியபுராணத்தோடு சேர்த்து பன்னிரண்டு நூல்கள் உள்ளதாலும் இவை பன்னிரு திருமுறை என்று போற்றப்படுகின்றன.

பெரியபுராணம் சோழர் காலத்தில் இயற்றப்பட்டதாகும். இது அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைச் சொல்லுவதோடல்லாமல் அவர்தம் வாழ்வில் நடந்த அதிசய சம்பவங்கள் குறித்தும் பெரியபுராணம் கூறுகிறது.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories