Blog

இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள்

Class 73 இந்திய பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்

இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள்

இந்தியப் பொருளாதாரம்

இலக்க முறை (Digital) பொருளாதாரத்தில் இந்தியா ஒரு உலகளாவிய போட்டியாளராகும். -சுந்தர் பிச்சை, CEO கூகுல்

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது பொதுவாக அந்நாட்டின் வருமானத்தால் அளவிடப்பட்டாலும், அது மொத்த உள்நாட்டு உற்பத்தியாலேயே
(GDP – Gross Domestic Product) குறிப்பிடப்படுகிறது.

ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில், அதாவது ஒரு ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள், பணிகளின் மொத்த பண மதிப்பைக் குறிக்கும்.

ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் என்பது பொதுவாக அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியால் மட்டும் குறிப்பிடப்படுவதன்றி,அந்நாட்டு மக்களின் உயர்ந்த மக்களின் வாழ்க்கைத்தரம் அல்லது நலவாழ்வையும் உள்ளடக்கியதாகும்.

ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தின் அளவீடுகள் என்பது மனிதவள மேம்பாட்டுக் குறியீடு (HDI – Human Development Index)

வாழ்க்கைத் தரக்குறியீடு (PQLI – Physical Quality of Life Index) மொத்த நாட்டு மகிழ்ச்சிக் குறியீடு (GNHI – Gross National Happiness Index) ஆகியவற்றைப் பொருத்தது.

மொத்த நாட்டு மகிழ்ச்சிக் குறியீடு (GNHI – Gross National Happiness Index)

“மொத்த நாட்டு மகிழ்ச்சி” என்ற தொடர் 1972 ஆம் ஆண்டு பூடான் நாட்டின் நான்காவது மன்னரான ஜிக்மே சிங்யே-வாங்கக் என்பவரால் உருவாக்கப்பட்டது. இது நிலைத்த முன்னேற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கலாச்சார மேம்பாடு, சிறந்த நிருவாகம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே உலக நாடுகள் வளர்ந்த நாடுகளையும், வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகள் எனவும் வகைப்படுத்தப்படுகின்றன. வளர்ந்த பொருளாதார நாடுகள் என்பவை தொழில்மயமான, வளங்களை முழுமையாகப் பயன்படுத்தும் நாடுகளைக் குறிக்கும். (எ.கா.) அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான்.

நிலம், சுரங்கங்கள், உழைப்பாளர்கள் ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத்தாத நாடுகளை அதாவது குறைந்த தலாவருமானம் கொண்ட நாடுகளை வளர்ந்து கொண்டிருக்கிற நாடுகள் என்று அழைக்கிறோம். (எ.கா.) ஆப்பிரிக்கா, பங்களாதேஷ், மியான்மர், பாகிஸ்தான், இந்தோனேசியா.

உலகின் வலிமையான, பெரிய பொருளாதாரங்களின் வரிசையில்  இந்தியா 7-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. தொழில்மயமாதல், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் முன்னேறிக் கொண்டிருக்கும் நாடுகளில் 7 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியுடன் ஒரு வலுவான இடத்தை அடைந்திருக்கிறது.

G-20 இல் உள்ள உலக நாடுகள்

  1. அர்ஜென்டினா
  2. ஆஸ்திரேலியா
  3. இத்தாலி
  4. பிரேசில்
  5. ஜப்பான்
  6. சவூதி அரேபியா
  7. சீனா
  8. தெற்கு ஆப்பிரிக்கா
  9. ஐரோப்பிய ஒன்றியம்
  10. கொரியா
  11. பிரான்சு
  12. ரஷ்யா
  13. ஜெர்மனி
  14. ஸ்பெயின்
  15. இந்தியா
  16. துருக்கி
  17. இந்தோனேசியா
  18. இங்கிலாந்து
  19. அமெரிக்கா
  20. கனடா

இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் – வலிமையும், வலிமையின்மையும்

இந்தியப்பொருளாதாரத்தின் வலிமை

இந்தியா ஒரு கலப்புப் பொருளாதாரம்: தனியார் துறையும் பொதுத்துறையும் இணைந்து சீரியமுறையில் செயல்படுகின்றது.

வேளாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது: இந்தியாவில் 60% மக்கள் தங்கள் வாழ்க்கை ஆதாரமாக வேளாண்மை, வேளாண்மை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இந்தியாவில் 17% மொத்த உள்நாட்டு உற்பத்தி வேளாண் துறையிலிருந்தே கிடைக்கிறது.

வளர்ந்து வரும் சந்தை: நிலைத்த உள்நாட்டு உற்பத்தியைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருப்பதால், பிற நாடுகள் வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI -Foreign Direct Investment) வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர் (FII – Foreign Institutional Investor ) வழியாக முதலீடு செய்ய பெரும் ஆர்வம் காட்டி வருகின்றன. 

வளர்ந்து வரும் பொருளாதாரம்:
உலகப் பொருளாதாரத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ஏழாவது இடத்தையும், வாங்கும் சக்தியில் (PPP -Public Private Partnership) மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது. விரைவான பொருளாதார வளர்ச்சியின் விளைவாக இந்தியப் பொருளாதாரம் G20 நாடுகளில் இடம் பெற்றுள்ளது.

வேகமாக வளரும் பொருளாதாரம்:
இந்தியப் பொருளாதாரம் அதிக நிலையான வளர்ச்சியினைக் கொண்டது. 2016-17இல் சீன நாட்டிற்கு அடுத்தபடியாக மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.1% பெற்றதன் வாயிலாக உலகின் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளுக்கிடையே, இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்பதைக் காட்டுகிறது.

வேகமாக வளரும் பணிகள் துறை:
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பங்கு பணிகள் துறையின் பங்களிப்பாகும். தகவல் தொழில்நுட்பம், BPO போன்ற தொழில்நுட்ப சேவைகள் பேரளவு வளர்ச்சி பெற்றுள்ளன.

பேரளவு உள்நாட்டு நுகர்ச்சி: நமது நாட்டின் வேகமான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதால், உள்நாட்டு நுகர்வுப் பொருட்களை வாங்குவது பெருமளவு அதிகரித்து இருக்கிறது. வாழ்க்கைத்தரம் உயர்ந்ததால் மக்களின் வாழ்க்கை முறை மாறி உள்ளது.

நகரப்பகுதிகளின் விரைவான வளர்ச்சி: பொருளாதார வளர்ச்சிக்கான நகரமயமாதல் முக்கிய அறிகுறியாகும். மேம்பட்ட போக்குவரத்து, தொடர்புகள், கல்வி, சுகாதார வசதிகள் நகரமயமாதலை மேலும் விரைவுபடுத்துகின்றன.

நிலையான பேரளவுப் பொருளாதாரம்: நடப்பாண்டின் பொருளாதார ஆய்வறிக்கை இந்தியப் பொருளாதாரத்தை “நிலைத்த, உறுதிவாய்ந்த, சிறந்த எதிர்காலம் கொண்ட பேரியல் பொருளாதாரத்திற்கான சொர்க்கம்” என்று குறிப்பிடுகிறது. பொருளாதார ஆய்வறிக்கையின் படி, 2014-2015 ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் 8% ஆக இருக்கும் என நிர்ணயித்து இருந்த போதிலும் உண்மையான வளர்ச்சி அதைவிட சற்றுக் குறைவாக 7.6% ஆக இருந்தது. இதன்மூலம் இந்தியா ஒரு நிலையான பேரளவுப் பொருளாதார வளர்ச்சியுடையது என நிரூபித்து வருகிறது.

மக்கள் தொகைப் -பகுப்பு : இந்திய மனித வளம் இளைஞர்களால் நிரம்பியுள்ளது. இதன் பொருள் இந்தியா, அதிக அளவு இளைஞர்கள் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. இளைஞர்களே வளர்ச்சியின் அடிப்படை. இந்திய இளைஞர்களின் திறமை, அவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி ஆகியவை காரணமாக பொருளாதார வளர்ச்சி உச்சத்தை எட்டியுள்ளது.

இந்தியப் பொருளாதாரத்தின் வலிமையின்மை

அதிக மக்கள் தொகை:  மக்கள்தொகை வளர்ச்சி வீதம் இந்தியாவில் அதிகமாக இருப்பதால் அது இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் தடையாக உள்ளது. மக்கள் தொகை அதிகரிப்பு ஒவ்வொரு 1000 பேருக்கும் 1.7 என்ற வீதத்தில் அதிகரிக்கிறது. ஆண்டு தோறும் ஏற்படும் மக்கள் தொகைப் பெருக்கம்
ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள் தொகைக்குச் சமமாக உள்ளது.

ஏற்றத்தாழ்வும், வறுமையும்: அதிக அளவில் வருமானமும், சொத்துக்களைப் பெற்றிருக்கும் 10% இந்தியர்களின் சொத்துக்களும் மேலும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இது சமுதாயத்தில் மீதமுள்ள அதிக அளவு மக்களின் வறுமை நிலை அதிகரிப்பதற்கும், வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அதிகரிப்பதற்கும் காரணமாக அமைகிறது. பணக்காரர்கள் தொடர்ந்து பணக்காரர்களாகவும், ஏழைகள் தொடர்ந்து ஏழைகளாகவும் நீடிக்கின்றனர்.

அத்தியாவசியப் பண்டங்களின் விலை உயர்வு: தொடர் விலை ஏற்றத்தால் வாங்கும் சக்தி குறைவதோடு மட்டுமல்லாமல் இது நிரந்தர வருமானம் இல்லாத ஏழை மக்களை பாதிக்கிறது.

உள்கட்டமைப்பு பலவீனம்: கடந்த பத்து இருபது ஆண்டுகளில் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் படிப்படியான முன்னேற்றம் காணப்பட்டாலும் மின் ஆற்றல், போக்குவரத்து, பண்டங்கள் பாதுகாப்பு பெட்டகம் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இன்றளவும் பற்றாக்குறையாக உள்ளது

வேலைவாய்ப்பை உருவாக்க திறனற்ற நிலை: அதிகரித்து வரும் இளைஞர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேலை வாய்ப்பு வசதியை அதிகரிப்பது அவசியமாகிறது. உற்பத்தியில் ஏற்படும் வளர்ச்சி வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை. எனவே, இந்தியப் பொருளாதாரம் “வேலை வாய்ப்பற்ற வளர்ச்சி” என்ற பண்பைக் கொண்டுள்ளது.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories