Blog

பாரதிதாசன்

bharathidasan
Class 49 இலக்கியம்‌ - தமிழ்‌ அறிஞர்களும்‌, தமிழ்த்தொண்டும்

பாரதிதாசன்

ஆசிரியர் குறிப்பு

இயற்பெயர் கனகசுப்புரத்தினம்
பெற்றோர் கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள்
ஊர் பாண்டிச்சேரி (புதுச்சேரியில்)
காலம் 29.04.1891 –  21.04.1964
துணைவியார் பழநி அம்மையார்

நூல்வெளி:

பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார். தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளைப் பாடுபொருளாகப் பாடியுள்ளார். எனவே, இவர் புரட்சிக்கவி என்று போற்றப்படுகிறார். இவர் பாவேந்தர் என்றும் சிறப்பிக்கப்படுகிறார். இப்பாடல், பாரதிதாசன் கவிதைகள் என்ற நூலில் தமிழ் என்னும் தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ளது.

இன்பத்தமிழ்

தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்

பாரதிதாசன் தமிழை அமுதத்தோடு ஒப்பிடுகிறார். அதாவது, அமுதம் எப்படி இனிமையாக இருக்குமோ அதைப்போலத் தமிழ் இனிமையான மொழி என்கிறார். மேலும் தமிழை மனித உயிருக்கு நிகராக ஒப்புமைப் படுத்திக் கூறுகின்றார். சமூகம் சிறப்புற்று வளர்வதற்குத் தமிழ்மொழி நீராகப் பயன்படும் என்றும் தமிழ் நறுமணம் உடையது என்றும் கூறுகின்றார்.

‘உண்டவர்களை மயக்கம் கொள்ளச் செய்யும் மதுவாகத் தமிழை உவமிக்கின்றார். மனிதர்கள் இளமையோடு பொலிவாக இருக்கப் பால் எப்படிப் பயன்படுகிறதோ, அத்தகைய பால் போன்ற சுவையும் வளமும் நிறைந்தது தமிழ். இந்தத் தமிழ் புலவர்களின் புலமையை அறிவிக்கும் கூர்வேலாகும். தமிழ் எங்கள் உயர்வுக்கு வானமாகும். இன்பத் தமிழ் மொழியே எங்கள் அறிவுக்குத் தோளாகும். இன்பத் தமிழ் எங்கள் கவிதையில் கவித்துவத்திற்கு வாளாகும். எங்கள் பிறவியின் தாயாகும். அப்படிப்பட்ட இன்பத் தமிழ் எங்கள் வாழ்க்கையை வளமுடையதாக மாற்றக் கூடிய தீ ஆகும்’.

இப்பாடல் உவமைச் சிறப்பு மிக்கதாகும். தமிழுக்கு அமுதையும், நிலவையும், நறுமணத்தையும் மதுவையும் உவமிக்கின்றார். தமிழின் சுவையைத் தேனின் சுவையோடு ஒப்பிடுகிறார். தமிழை ஓர் அழகிய பூக்காடு என்றும் தன்னை அதில் வட்டமிடும் ஒரு தும்பியாகவும் உருவகித்துக் கூறுகின்றார்.

தமிழே! நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி
(பாரதிதாசன் கவிதைகள்)
தமிழுக்குத் தொண்டு செய்தோன் சாதல் இல்லை
தமிழ்த் தொண்டன் பாரதிதான் செத்ததுண்டா 
?

என்று தமிழ்த் தொண்டர்க்கும், தமிழ் கற்றார்க்கும் நிலைப்பேறு உண்டு என்கிறார். தமிழையும், பாரதியையும் புகழ்ந்துரைக்கின்றார்.

தமிழை என்னுயிர் என்பேன்

என்று தமிழை உயிரோடு இணைத்துப் பாடிய மாபெரும் கவிஞர் பாரதிதாசன்.

 

இன்பத்தமிழ்க் கல்வி

ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந் திட

என்னை எழுதென்று சொன்னது வான்

ஓடையும் தாமரைப் பூக்களும் தங்களின்

ஓவியந் தீட்டுக என்றுரைக்கும்

காடும் கழனியும் கார்முகிலும் வந்து

கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்

ஆடும் மயில் நிகர் பெண்களெல்லாம் உயிர்                                                                           

அன்பினைச் சித்திரம் செய்க என்றார்

சோலைக் குளிர்தரு தென்றல் வரும்பசுந்

தோகை மயில்வரும் அன்னம் வரும்

மாலைப் பொழுதினில் மேற்றிசையில் விழும்

மாணிக்கப் பரிதி காட்சி தரும்

வேலைச் சுமந்திடும் வீரரின் தோள் உயர்

வெற்பென்று சொல்லி வரைக என்னும்

கோலங்கள் யாவும் மலை மலையாய் வந்து

கூவின என்னை – இவற்றிடையே

இன்ன லிலே தமிழ் நாட்டினிலேயுள்ள

என்தமிழ் மக்கள் துயின்றிருந்தார்

அன்னதோர் காட்சி இரக்கமுண்டாக்கியென்

ஆவியில் வந்து கலந்ததுவே

இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர்

என்றுரைக்கும் நிலை எய்தி விட்டால்

துன்பங்கள் நீங்கும் சுகம் வரும் நெஞ்சினில்

தூய்மை உண்டாகிடும் வீரம் வரும் !

சொல்லும் பொருளும்

எத்தனிக்கும் – முயலும்  பரிதி – கதிரவன்  வெற்பு – மலை  அன்னதோர் – அப்படி ஒரு  கழனி – வயல்  கார்முகில் – மழைமேகம்  நிகர் – சமம் துயின்றிருந்தார் – உறங்கியிருந்தார்

கவிதை எழுத ஏடு ஒன்று எடுத்தேன். என்னைக் கவிதையாக எழுதுக என்று வானம் கூறியது. நீரோடையும் தாமரை மலர்களும் “எங்களைக் கவி ஓவியமாகத் தீட்டுக” என்றன. காடும் வயல்களும் கருநிற மேகங்களும் என் கண்களைக் கவர்ந்து, கவிதையில் இடம்பெற முயன்றன. ஆடும் மயில் போன்ற பெண்கள் “அன்பினைக் கவிதையாக எழுதுக” என்றனர்.

சோலையின் குளிர்ந்த தென்றல் வந்தது. பசுமையான தோகையையுடைய மயில் வந்தது. அன்னம் வந்தது. மாணிக்கம் போல் ஒளி வீசி மாலையில் மேற்குத் திசையில் மறைகின்றகதிரவனும் வந்தான். வேல் ஏந்திய வீரர்கள், “மலை போன்ற எங்களது தோள்களின் அழகினை எழுதுங்கள்” என்றனர். இவ்வாறு அழகிய காட்சிகள் எல்லாம் பெருந்திரளாக வந்து தங்களைக் கவிதையாக எழுதுமாறு கூறின.

ஆனால், துன்பத்தில் கிடக்கும் என் தமிழ்நாட்டு மக்கள் அறியாமையில் தூங்கிக் கிடக்கிறார்கள். அந்தக் காட்சி என் மனத்தில் இரக்கத்தை உண்டாக்கி, என் உயிரில் வந்து கலந்து விட்டது. இத்துன்பம் நீங்க அனைவரும் இன்பத்தமிழ்க் கல்வியைக் கற்றவர்கள் என்னும் நிலை ஏற்பட வேண்டும். அந்நிலை ஏற்பட்டால் வாழ்வில் துன்பங்கள் நீங்கிடும். நெஞ்சில் தூய்மை உண்டாகிடும். வீரம் வரும்.

நூல்வெளி

பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம் கவிஞர், இதழாளர், தமிழாசிரியர் என்ற பன்முக ஆற்றல் கொண்டவர் கதை, கவிதை, கட்டுரை, நாடகம் ஆகியவற்றைப் படைப்பதில் வல்லவர் பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இசையமுது, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, கண்ணகி புரட்சிக் காப்பியம் உள்பட பல நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய “பிசிராந்தையார்” என்னும் நாடகநூலக்குச் சாகித்திய அகாடமி விருது அளிக்கப்பட்டது.

 

பொங்கியும் பொலிந்தும் நீண்ட புதுப்பிடர் மயிர்சி லிர்க்கும்

சிங்கமே! வான வீதி திகுதிகு எனஎ ரிக்கும்

மங்காத தணற்பி ழம்பே ! மாணிக்கக் குன்றே ! தீர்ந்த

தங்கத்தின் தட்டே ! வானத் தகளியிற் பெருவி ளக்கே !

கடலிலே கோடி கோடிக் கதிர்க்கைகள் ஊன்று கின்றாய்

நெடுவானில் கோடி கோடி நிறைசுடர்க் கைகள் நீட்டி

இடைப்படு மலையோ காடோ இல்லமோ பொய்கை ஆறோ

அடங்கநின் ஒளிஅ ளாவ அமைந்தனை! பரிதி வாழி!

பாடல்

கல்வி இல்லாத பெண்கள்

களர்நிலம் அந்நி லத்தில்

புல்விளைந் திடலாம் நல்ல

புதல்வர்கள் விளைதல் இல்லை

கல்வியை உடைய பெண்கள்

திருந்திய கழனி அங்கே

நல்லறிவு உடைய மக்கள்

விளைவது நவில வோநான்!

பாடலின் பொருள்

கல்வியறிவு இல்லாத பெண்கள் பண்படாத நிலத்தைப் போன்றவர்கள். அந்நிலத்தில் புல் முதலானவைதான் விளையலாம். நல்ல பயிர் விளையாது. அதுபோல கல்வி அறிவிலாத பெண்கள் வாயிலாக அறிவுடைய மக்கள் உருவாகமாட்டார்கள் . கல்வியைக் கற்ற பெண்கள் பண்பட்ட நன்செய் நிலத்தினைப் போன்றவர்கள். அவர்கள் மூலம் சிறந்த அறிவுடைய மக்கள் உருவாகின்றனர் என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ?

சொல்லும் பொருளும்:

  • களர்நிலம் – பண்படாத நிலம், நவிலல் – சொல்லல்.

பாடல்

வானூர்தி செலுத்தல் வைய

மாக்கடல் முழுது மளத்தல்

ஆனஎச் செயலும் ஆண்பெண்

அனைவர்க்கும் பொதுவே! இன்று

நானிலம் ஆட வர்கள்

ஆணையால் நலிவு அடைந்து

போனதால் பெண்களுக்கு

விடுதலை போனது அன்றோ!

பாடலின் பொருள்

வானூர்தியைச் செலுத்துதல் , உலகையும் கடலையும் அளத்தல் போன்ற எந்தச் செயலும் ஆண், பெண் இருபால ருக்கும் பொதுவானவை. இன்று உலகமானது ஆண்களின் கட்டுப்பாட்டில் நலிந்து போனதால்தான் பெண்களுக்கு விடுதலை பறிபோனது.

சொல்லும் பொருளும்:

  • வையம் – உலகம்; மாக்கடல் – பெரிய கடல்,

பாடல்

இந்நாளில் பெண்கட்கு எல்லாம்

ஏற்பட்ட பணியை நன்கு

பொன்னேபோல் ஒருகை யாலும்

விடுதலை பூணும் செய்கை

இன்னொரு மலர்க்கை யாலும்

இயற்றுக! கல்வி இல்லா

மின்னாளை வாழ்வில் என்றும்

மின்னாள் என்றே உரைப்பேன்!,

பாடலின் பொருள்

இன்று பெண்களுக்கென உள்ள வேலைகளையும் அவர்களின் விடுதலைக்கான செயலையும் பெண்களே செய்தல் வேண்டும். மின்னல்போல் ஒளிரும் இயல்புடையவள் பெண்; ஆனால் கல்வியறிவு இல்லாத பெண் தன் வாழ்வில் என்றும் ஒளிரமாட்டாள் என்றே நான் சொல்வேன்.

சொல்லும் பொருளும்:

இயற்றுக – செய்க; மின்னாளை – மின்னலைப் போன்றவளை; மின்னாள் – ஒளிரமாட்டாள்.

பாடல்

சமைப்பதும் வீட்டு வேலை

சலிப்பின்றிச் செயலும் பெண்கள்

தமக்கே ஆம் என்று கூறல்

சரியில்லை; ஆடவர்கள்

நமக்கும் அப் பணிகள் ஏற்கும்

என்றெண்ணும் நன்னாள் காண்போம் !

சமைப்பது தாழ்வா? இன்பம்

சமைக்கின்றார் சமையல் செய்வார் !

பாடலின் பொருள்

சமைப்பது , வீட்டு வேலைகளைச் சலிப்பில்லாமல் செய்வது போன்றவை பெண்களுக்கே உரியவை என்று கூறுவது பொருத்தமற்றது. அவை நமக்கும் உரியவை என்று ஆண்கள் ஏற்றுக்கொள்ளும் எண்ணம் வரவேண்டும். அந்த நன்னாளைக் காண்போம். சமைப்பது தாழ்வென எண்ணலாமா? சமைப்பவர் உணவை மட்டும் சமைப்பதில்லை. அதற்கும் மேலாக இன்பத்தையும் படைக்கின்றார்.

பாடல்

உணவினை ஆக்கல் மக்கட்கு!

உயிர்ஆக்கல் அன்றோ? வாழ்வு

பணத்தினால் அன்று! வில்வாள்

படையினால் காண்ப தன்று!

தணலினை அடுப்பில் இட்டுத்

தாழியில் சுவையை இட்டே

அணித்திருந் திட்டார் உள்ளத் (து)

அன்பிட்ட உணவால் வாழ்வோம்!

பாடலின் பொருள்

உணவைச் சமைத்துத் தருவது என்பது உயிரை உருவாக்குவது போன்றதாகும் . “வாழ்க்கை “ என்பது பொருட்செல்வத்தாலோ வீரத்தாலோ அமைவதன்று. அடுப்பில் நெருப்பு மூட்டி சமைக்கும் கலத்தில் சுவையை இட்டு, அருகில் இருந்து உள்ளத்து அன்போடு உணவு பரிமாறுதலில்தான் வாழ்வு நலம்பெறுகிறது.

சொல்லும் பொருளும்:

தணல் – நெருப்பு; தாழி – சமைக்கும் கலன்; அணித்து – அருகில்.

பாடல்

சமைப்பது பெண்க ளுக்குத்

தவிர்க்கஒணாக் கடமை என்றும்

சமைத்திடும் தொழிலோ, நல்ல

தாய்மார்க்கே தக்கது என்றும்

தமிழ்த்திரு நாடு தன்னில்

இருக்குமோர் சட்டந் தன்னை

இமைப் போதில் நீக்கவேண்டில்

பெண்கல்வி வேண்டும் யாண்டும்!

பாடலின் பொருள்

சமைக்கும் பணி , பெண்களுக்குத் தவிர்க்க முடியாத கடமை எனவும் அப்பணி நல்ல தாய்மார்களுக்கே உரியது எனவும் தமிழ்த்திரு நாட்டில் இருக்கின்ற வழக்கத்தினைக் கண் இமைக்கும் நேரத்தில் நீக்க வேண்டுமாயின் பெண்களுக்கு எப்போதும் கல்வி வேண்டும்.

சொல்லும் பொருளும்

தவிர்க்கஒணா –தவிர்க்க இயலாத; யாண்டும் – எப்பொழுதும்.

நூல் வெளி
குடும்ப விளக்கு, குடும்ப உறவுகள் அன்பு என்னும் நூலால் பிணைந்துள்ளதை உணர்த்துகிறது; கற்ற பெண்ணின் குடும்பமே பல்கலைக்கழகமாக மிளிரும் என்பதைக் காட்டுகிறது; குடும்பம் தொடங்கி உலகினைப் பேணுதல்வரை தன் பணிகளைச் சிறப்பாகச் செய்யும் பெண்ணுக்குக் கல்வி முதன்மையானதும் இன்றியமையாததும் ஆகும். இந்நூல் ஐந்து பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பகுதியில், விருந்தோம்பல் தலைப்பிலுள்ள தலைவியின் பேச்சில் இடம்பெற்றுள்ள கவிதைகள் பாடப்பகுதியாக உள்ளன. பாரதிதாசனின் இயற்பெயர் கனக.சுப்புரத்தினம். இவர் பாரதியின் கவிதை மீதுகொண்ட ஈர்ப்பினால் பாரதிதாசன் என்று தம்பெயரை மாற்றிக் கொண்டார். பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, தமிழியக்கம் உள்ளிட்டவை இவரது படைப்புகள். இவர் இயற்றிய கவிதைகள் அனைத்தும் ‘பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்’ என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. இவரது பிசிராந்தையார் நாடக நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது.

பாரதிதாசன் எழுதிய புகழ் பெற்ற சில வரிகள்

  • “எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே”
  • “புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
    போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்”
  • “தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்”

இப்பாடலின் ஒரு வரியை குறிப்பிட்டு, ஆஸ்கார் விருதுகள் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் 2022 இல் ழகரத்தை ஆயுதமாக ஏந்திய தமிழணங்கு படம் பதிந்தபோது அதில் இடம்பெற்ற வரிகள் இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர் என்பதாகும்.

  • எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!..

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்

பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார், “புரட்சி கவிஞர்” என்ற பட்டமும், அறிஞர் அண்ணா, ‘புரட்சிக்கவி’ என்ற பட்டமும் வழங்கினர். தமிழ்நாடு மாநில அரசாங்கம், அவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு ‘பாரதிதாசன் விருதினை’ வழங்கி வருகிறது மற்றும் ‘பாரதிதாசன் பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் ​​நிறுவப்பட்டது.

1946 – அவரது ‘அமைதி-ஊமை’ என்ற நாடகத்திற்காக அவர் ‘தங்கக் கிளி பரிசு’ வென்றார்.

1970 – அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது

2001 – அக்டோபர் மாதம் 9ஆம் தேதி, சென்னை தபால் துறை மூலமாக ஒரு நினைவு அஞ்சல்தலை அவரது பெயரில் வெளியிடப்பட்டது.

காலவரிசை

1891: புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.

1919: காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.

1920: பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

1928: ஆம் ஆண்டில் மன்னர்மன்னன் என்ற மகன் பிறந்தான். அதன் பிறகு, சரஸ்வதி, வசந்தா மற்றும் ரமணி என்ற மகள்களும் பிறந்தனர்.

1954: புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1960: சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

1964: ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.

1970: அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது.

பாரதிதாசன் சிறப்புப் பெயர்கள்

  • புரட்சிக்கவி (அறிஞர் அண்ணா)
  • புரட்சிக்கவிஞர் (பெரியார்)
  • பாவேந்தர்
  • புதுவைக்குயில்
  • பகுத்தறிவு கவிஞர்
  • தமிழ்நாட்டு இரசுல் கம்சதேவ்
  • இயற்க்கை கவிஞர்

புனைப் பெயர்கள்

பாரதிதாசன் பல்வேறு புனைப் பெயர்களில் தனது கவிதைகளை எழுதி வெளியிட்டுள்ளார். அவையாவன,

  • கண்டழுதுவோன்
  • கிறுக்கன்
  • கிண்டல்காரன்
  • பாரதிதாசன்

பாரதிதாசன் இயற்றிய நூல்கள்

  • இசை அமுது
  • பாண்டியன் பரிசு
  • எதிர்பாராத முத்தம்
  • சேரதாண்டவம்
  • அழகின் சிரிப்பு
  • புரட்சிக்கவி
  • குடும்ப விளக்கு
  • இருண்ட வீடு
  • குறிஞ்சித்திட்டு
  • கண்ணகி புரட்சிக்காப்பியம்
  • மணிமேகலை வெண்பா
  • காதல் நினைவுகள்
  • கழைக்கூத்தியின் காதல்
  • தமிழச்சியின் கத்தி
  • இளைஞர் இலக்கியம்
  • சுப்பிரமணியர் துதியமுது
  • சுதந்திரம்
  • தமிழியக்கம் (ஒரே இரவில் எழுதியது)

உரைநடை நூல்கள்

  • திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்
  • சஞ்சீவி பர்வதத்தின் சாரல்

பாரதிதாசன் நாடகங்கள்

  • சௌமியன்
  • நல்ல தீர்ப்பு
  • பிசிராந்தையார் (சாகித்ய அகாடமி விருது பெற்றது)
  • சக்திமுற்றப் புலவர்
  • அமைதி ஊமை (தங்கக் கிளி பரிசு)
  • இரணியன் அல்லது இணையற்ற வீரன்
  • சௌமியன்
  • படித்த பெண்கள்
  • இன்பக்கடல்
  • நல்லதீர்ப்பு
  • அம்மைச்சி
  • ரஸ்புடின்
  • அமைதி

பாரதிதாசன் நடத்திய இதழ்கள்

  • குயில்
  • முல்லை (முதலில் தொடங்கிய இதழ்)

அவரது படைப்புகள்

எண்ணற்ற படைப்புகளை அவர் தமிழ்மொழிக்கு வழங்கி இருந்தாலும், சாதி மறுப்பு, கடவுள் எதிர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை மக்களின் மனதிலிருந்து அழிக்கும் விதமாகப் பல்வேறு படைப்புகளை வெளியிட்டார். அவரது மிகச்சிறந்த படைப்புகளில் சில:

 ‘தமிழ் இயக்கம்’, ‘இசையமுது’,   ‘பாரதிதாசன் ஆத்திசூடி’, ‘பெண்கள் விடுதலை’, ‘மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது’, ‘முல்லைக் காடு’, ‘கலை மன்றம்’, ‘விடுதலை வேட்கை’  மற்றும் பல.

பாரதிதாசன் பற்றிய தகவல்

  • பதினாறு வயதில் புதுவை அரசினர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்
  • பாரதியின் மீது கொண்ட பற்றின் காரணமாக தம்மை தாசன் ஆக ஆக்கிக்கொண்டார்
  • அகவல், எண் சீர்விருத்தம், அறுசீர் விருத்தம் ஆகியவை இவருடைய பாடல்களில் மிகுதியாகப் பயன்படுத்தி உள்ளார்
  • பாரதியின் வேண்டுகோளுக்கு இணங்க இவர் பாடிய “எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்ற பாடலைக் கேட்ட அவர், அக்கவிதையைத் தாமே, “ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனகசுப்புரத்தினம் எழுதியது” எனச் சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பினார்
  • பிரபல எழுத்தாளரும், திரைப்படக் கதாசிரியரும், பெரும் கவிஞரான இவர், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக, 1954-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • தந்தை பெரியாரின் விரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாகக் கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்
  • தொடக்க கல்வி கற்றது = திருப்புளி சாமியாரிடம்
  • இவர் தமிழ் பயின்றது = புலவர் பு.அ.பெரியசாமியிடம்
  • இவரின் கவித்திறன் கண்டு “நாவலர் சோமசுந்தர பாரதியார்” தலைமையில் அறிஞர் அண்ணா அவர்கள் இவருக்கு “புரட்சிக்கவி” என்ற பட்டத்தையும் 25000 ரூபாய் நன்கொடையும் அளித்தார்
  • வ.ரா.வின் அழைப்பின் பேரில் “இராமனுஜர்” என்னும் படத்திற்கு  திரைப்படப்பாடல் எழுதினார்
  • நகைச்சுவை உணர்வு மிக்கவர். நன்கு பாடுவார். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துவார். சிலம்பம், குத்துச்சண்டை, குஸ்தி பயின்றார். வீடு என்று இருந்தால் கோழி, புறா, பசு மூன்றும் இருக்க வேண்டும் என்பார். அவற்றை தானும் வளர்த்துவந்தார்.

பாரதிதாசன் சிறப்பு

  • புதுமைபித்தன் = அறிவுக் கோயிலைக் கட்டி அதில் நம்மைக் குடியேற்ற விரும்புகின்ற பேரறிஞன்
  • கு.ப.இராசகோபாலன் = பாரதிக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஓர் உண்மையான கவி
  • சிதம்பரநாத செட்டியார் = அவர் தம் பாடல்களைப் படிக்கின்ற அந்நியனும் தமிழனாகி விடுவான்
  • வி.ஆர்.எம்.செட்டியார் = புரட்சிக்கவி அவர், புதிய கவிதையை சிருஷ்டி செய்கிறார்; இயற்கையாகவே செய்கிறார்; தமிழ் மொழியில் புதியவளைவும், நெளிவும் மெருகும் ஏற்றுகிறார்; அவர் இசை வெறியில் கவிதைக் கனலுடன் பாடும்போது நாம் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் சலிப்பின்றிக் கேட்டு இன்புறலாம். இது உண்மை! மறுக்க  முடியாத உண்மை
  • திரு.வி.க = குயிலின் பாடலும் மயிலின் ஆடலும் வண்டின் யாழும் அருவியின் முழவும் இனிக்கும், பாரதிதாசன் பாட்டும் இனிக்கும்
  • சுரதா = தடையேதும் இல்லை இவர் நடையில், வாழைத் தண்டுக்கோ தடுக்கின்ற கனுக்களுண்டு
  • 1990ஆம் ஆண்டு தமிழக அரசு இவரின் நூல்களை எல்லாம் நாட்டுடைமை ஆக்கியது
  • 2001 – அக்டோபர் மாதம் 9ஆம் தேதி, சென்னை தபால் துறை மூலமாக ஒரு நினைவு அஞ்சல்தலை அவரது பெயரில் வெளியிடப்பட்டது.

பாடல்கள்

  • நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
    நிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை
    கோலம் முழுவதும் காட்டிவிட்டால் காதற்
    கொள்ளையிலே இவ்உலகம் சாமோ?
  • எல்லார்க்கும் எல்லாம்  என்று இருப்பதான
    இடம்நோக்கி நகர்கிறது இந்தவையம்
  • கல்லாரைக் காணுங்கால் கல்விநல்காக்
    கசடர்குத் தூக்குமரம் அங்கே உண்டாம்
  • தமிழுக்கு அமுதென்று பேர் – இன்பத்
    தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
  • தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாதே
  • எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
    மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு
  • நல்ல குடும்பம் பல்கலைக் கழகம்
  • இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே எனப் பாடியவர் பாரதிதாசன்

“இட்டதோர் தாமரைப்பூ
இதழ்விரித் திருத்தல் போலே
வட்டமாய்ப் புறாக்கள்கூடி
இரையுண்ணும்…………”.                       பாரதிதாசனார்

 

 

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories