கண்ணதாசன்
August 14, 2023 2025-05-14 10:37கண்ணதாசன்
கண்ணதாசன்
ஆசிரியர் குறிப்பு
இயற்பெயர் | முத்தையா |
பெற்றோர் | சாத்தப்ப செட்டியார், விசாலாட்சி ஆச்சி |
ஊர் | காரைக்குடி அருகே சிறுகூடல்பட்டி |
காலம் | 24.06.1927 – 17.10.1981 |
துணைவியார் | பொன்னம்மாள், பார்வதியம்மாள்,
வள்ளியம்மை |
இவர் கவியரசு என்னும் சிறப்புப் பெயராலும் அழைக்கப்படுகிறார். காவியங்கள், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள், புதினங்கள் போன்ற இலக்கிய வடிவங்களில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். ஏராளமான திரைப்படப் பாடல்களையும் எழுதியுள்ளார். இவர் தமிழக அரசவைக் கவிஞராகவும் இருந்துள்ளார்.
விருதுகள்
-
சாகித்ய அகாதமி விருது (சேரமான் காதலிபடைப்பிற்காக)
பாடல்
சாந்தம் உடையோர் பேறுபெற்றோர் எனத்
தத்துவமும் சொன்னார் – இந்தத்
தாரணி முழுவதும் அவர்களுக்கு உரியது
தலைவர்கள் அவர்என்றார்!
மாந்தரின் வாழ்வில் தேவைப் படுவது
சாந்தம் தான்என்றார் – அது
மண்ணையும் ஆளும் விண்ணையும் ஆளும்
மகத்துவம் பார்என்றார்!
சாதிகளாலும் பேதங்களாலும்
தள்ளாடும் உலகம் – அது
தர்மம் ஒன்றை நம்பிய பிறகே
அடங்கிவிடும் கலகம்!
ஓதும் பொருளாதாரம் தனிலும்
உன்னத அறம்வேண்டும் – புவி
உயர்வும் தாழ்வும் இல்லா தான
வாழ்வினைப் பெறவேண்டும்.
இரக்கம் உடையோர் பேறுபெற்றோர் என
இயேசுபிரான் சொன்னார் – அவர்
இரக்கம் காட்டி இரக்கத்தைப் பெறுவர்
இதுதான் பரிசுஎன்றார்
*வாயும் வயிறும் ஆசை யில் விழுந்தால்
வாழ்க்கை பாலைவனம் – அவர்
தூய மனத்தில் வாழ நினைத்தால்
எல்லாம் சோலைவனம்!
தமையும் வாட்டிப் பிறரையும் வாட்டும்
சண்டை சச்சரவு – தினம்
தன்னாடு என்றும் பிறர்நாடு என்றும்
பேசும் பொய்யுறவு!
இமைக்கும் போதில் ஆயிரம் போட்டி
எத்தனை வீண்கனவு – தினம்
இவை இல்லாது அமைதிகள் செய்தால்
இதயம் மலையளவு !*
பாடலின் பொருள்
(தம் சீடர்களுக்கு அறிவுரை கூற எண்ணிய இயேசுநாதர் ஒரு குன்றின் மீது ஏறி நின்று பேசத் தொடங்கினார்.)
சாந்தம் என்னும் அமைதியான பண்பு கொண்டவர்கள் பேறு பெற்றவர்கள். இந்த உலகம் முழுவதும் அவர்களுக்கே உரியது. அவர்களே தலைவர்கள் ஆவர் என்ற உண்மையை இயேசுநாதர் கூறினார். மனித வாழ்க்கையில் தேவைப்படுவது பொறுமை. அது மண்ணையும் விண்ணையும் ஆட்சி செய்யும் பெருமையுடையது என்றார்.
இவ்வுலகம் சாதிகளாலும் கருத்து வேறுபாடுகளாலும் நிலைதடுமாறுகிறது. அறம் என்கிற ஒன்றனை நம்பியபிறகு சண்டைகள் நீங்கி உலகம் அமைதியாகி விடும். பொருள் ஈட்டுவதிலும் அறவழியைப் பின்பற்ற வேண்டும். இவ்வுலகம் ஏற்றத்தாழ்வு இல்லா வாழ்வைப் பெற வேண்டும்.
இரக்கம் உடையோரே பேறுபெற்றவர் ஆவர். அவர்கள் பிற உயிர்களின் மீது இரக்கம் காட்டி இறைவனின் இரக்கத்தைப் பெறுவர். இதுதான் அவர்களுக்கான பரிசு. மனிதன் ஆசையில் விழுந்துவிட்டால் அவனது வாழ்வு பாலைவனம்போல் பயனற்றதாகிவிடும். அவன் நல்ல உள்ளத்தோடு வாழ்ந்தால் அவன் வாழ்க்கை மலர்ச்சோலையாக மாறிவிடும்.
மனிதர்கள் சண்டை சச்சரவுகளால் தாமும் துன்புற்றுப் பிறரையும் துன்புறுத்துகின்றனர். மேலும் அவர்கள் தன்னாடு என்றும், பிறர்நாடு என்றும் பேசி உண்மையில்லா உறவுகளாக வாழ்கின்றனர்.
கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நடக்கும் ஆயிரம் போட்டிகளால் பயனற்ற கனவுகள்தாம் தோன்றுகின்றன. இவை இல்லாமல் அமைதியாக வாழ்ந்தால் இதயம் மலையளவு உயர்ந்ததாக மாறும்.
நூல்வெளி
கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. இவர் கவியரசு என்னும் சிறப்புப் பெயராலும் அழைக்கப்படுகிறார். காவியங்கள், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள், புதினங்கள் போன்ற இலக்கிய வடிவங்களில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். ஏராளமான திரைப்படப் பாடல்களையும் எழுதியுள்ளார். இவர் தமிழக அரசவைக் கவிஞராகவும் இருந்துள்ளார். இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது அறிவுரைகளையும் கூறும் நூல் இயேசுகாவியம் ஆகும். இந்நூலில் உள்ள “மலைப்பொழிவு” என்னும் பகுதியிலிருந்து சில பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.
இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது அறிவுரைகளையும் கூறும் நூல் இயேசுகாவியம் ஆகும். இந்நூலில் உள்ள மலைப்பொழிவு என்னும் பகுதியிலிருந்து சில பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.
கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!
இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!
ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை ; அறிக!
செல்வர்தங் கையில் சிறைப்பட மாட்டேன்;
பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்!
பாசம் மிகுத்தேன்; பற்றுதல் மிகுத்தேன்!
ஆசை தருவன அனைத்தும் பற்றுவேன்!
உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்;
இல்லா யின்எமர் இல்லம் தட்டுவேன்
வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன்
வாய்ப்புறத் தேனை ஊர்ப்புறந் தருவேன்!
பண்டோர் கம்பன், பாரதி, தாசன்
சொல்லா தனசில சொல்லிட முனைவேன்!
புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது
இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது!
வளமார் கவிகள் வாக்குமூ லங்கள்
இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு!
கல்லாய் மரமாய்க் காடுமே டாக
மாறா திருக்கயான் வனவிலங் கல்லன்!
*மாற்றம் எனது மானிடத் தத்துவம்;
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்து ஏகுமென் சாலை!
தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!
கொள்வோர் கொள்க ; குரைப்போர் குரைக்க !
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;
நானே தொடக்கம்; நானே முடிவு;
நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்! *
பாடலின் பொருள்
-
கவிஞன் நான் ஓர் காலக்கணிதம் கருவாகிய பொருளை உருப்பட வைப்பேன். பூமியில் புகழுக்கு உரிய தெய்வம் நான்.
-
பொன்னைவிட உயர்ந்தது என் செல்வம். ஒரு செயல் சரி என்றால் எடுத்துச் சொல்வேன்; தவறு என்றால் எதிர்ப்பேன். அதுதான் என் வேலை.
-
முத்தொழில் நானும் அவனும் மட்டுமே அறிந்தது. செல்வர் வாளில் சிறைப்பட மாட்டேன். பதவி வாளுக்குப் பயப்பட மாட்டேன். அன்பும், விருப்பமும் மிகுந்து ஆசை தருவதை விரும்புவேன்.
-
என்னிடம் உண்டு என்றால், பிறர் உண்ணத் தருவேன். இல்லை என்றால் பிறர் இல்லம் தட்டுவேன். வண்டு போல மாறி மலரில் அமர்ந்து, குடித்த தேனை ஊர்ப்புறம் தருவேன்.
-
கம்பன், பாரதி, பாரதிதாசன் ஆகியோர் சொல்லாத கருத்துகளைச் சொல்லிட முயற்சிப்பேன். என்னுடல் புகழ்ந்தால் புல்லரிக்காது. இகழ்ந்தால் என் மனம் இறந்து விடாது.
-
என் கவிதை வாக்குமூலம் அதை வைத்து இறந்த பிறகு தீர்ப்பை எழுதுங்கள். கல், மரம், விலங்காக மாற நான் காட்டு விலங்கு கிடையாது.
-
மாற்றம் எனது மானிடத் தத்துவம். மாறும் உலகின் மகத்துவம் அறிவேன். நன்மை, தீமை அறிந்து ஏற்கும் என் சாலை.
-
தலைவர் மாறுவார்கள், தர்பார் மாறும், தத்துவம் மட்டும் குறையாத அட்சயப் பாத்திரம் ஏற்றுக்கொள்வோர் ஏற்றுக்கொள்ளட்டும். குரைப்போர் குரைக்கட்டும்.
-
வாய்ச்சொற்கள் உடம்பினைத் தொடாது. நானே தொடக்கம் நானே முடிவு. நான் சொல்வதுதான் நாட்டின் சட்டம்.
‘காலக்கணிதம்‘ என்னும் இப்பாடப்பகுதி கண்ணதாசன் கவிதைத் தொகுப்பில்
இடம்பெற்றுள்ளது. 1949ஆம் ஆண்டு “கலங்காதிரு மனமே ’’ என்ற பாடலை எழுதி, திரைப்படப் பாடலாசிரியரானார். திரையுலகிலும் இலக்கிய உலகிலும் சிறந்து விளங்கியவர் கண்ணதாசன். இவர் சிறந்த கவியரங்கக் கவிஞராகவும் பேச்சாளராகவும் திகழ்ந்தவர். தன் திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில் மெய்யியலை மக்களிடையே கொண்டு சேர்த்தவர். சேரமான் காதலி
என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர். இவர் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் சிறப்பிக்கப்பட்டிருந்தார்.
நதிவெள்ளம் காய்ந்து விட்டால்
நதிசெய்த குற்றம் இல்லை
விதிசெய்த குற்றம் இன்றி
வேறு – யாரம்மா !
நதியின் பிழையன்று நறும்புனலின்மை அன்றே பதியின் பிழையன்று பயந்த நம்மைப் புரந்தான் மதியின் பிழையன்று மகன் பிழையன்று மைந்த விதியின் பிழை நீ இதற்கென்னை வெகுண்டதென்றன் – கம்பன்
நதியின் பிழையன்று:
-
இராமன் கானகம் செல்ல வேண்டும் என்றவுடன் இலக்குவன் சினம் கொண்டான்.
-
அண்ணனைக் கானகம் போகச் சொல்லிவிட்டார்களே, விதிக்கு விதி காரணம் என் வில்லினால் அனைவரையும் அழிப்பேன் என்று ஆவேசப்பட்ட இலக்குவனைத் தடுத்து நிறுத்தி இராமன் கூறியது இது.
-
நதியின் பிழை எதுவும் அல்ல நல்ல தண்ணீர் இல்லாதது.
-
நறும்புனல் இன்மை என்பது, நதியில் நீர் இருக்கிறது. ஆனால் நல்லதாக இல்லை . அதுபோல நான் கானகம் செல்வது தசரதன் பிழையும் அன்று. அன்போடு நம்மை வளர்த்த கைகேயின் மதியின் பிழையும் அன்று.
-
பரதன் பிழையும் இதில் இல்லை . விதியின் பிழை. நீ ஏன் இதற்காகக் கோபப்படுகிறாய். “சினமும் வேகமும் தவிர்”
-
இதைப் போலவே கண்ணதாசனின் பாடலான “நதிவெள்ளம் காய்ந்து விட்டால்” பாடல் உணர்த்துவதும் விதியைத் தான்.
-
தவறு செய்யாத நாயகன் மீது பழி சுமத்தப்படும் சூழலில் நதியின் நீர்மையைப் போல மானுடர் உள்ளங்களில் இருக்கும் நற்பண்புகள், மனசாட்சி உண்மை , பொய் அறிதல் வற்றிவிடுகிறது.
-
நதி வற்றிவிட்டால் அது நதியின் குற்றம் அல்ல. விதியின் குற்றமே.
-
அதைப்போலவே மானுடர் பண்புகள் மாற்றம் பெற்று நாயகன் மீது சுமத்தப்பட்ட பழி பாவங்களும் விதி செய்த பிழையேயன்றி வேறு யாருமில்லை என்பதை கண்ணதாசன் கூறியுள்ளார்.
- இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது – காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்.